கதை சொல்லியின் புத்தகம்!

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: April 10, 2023
பார்வையிட்டோர்: 3,807 
 
 

நாம் எல்லோருமே கதைகளைப் படிப்பதையும் கேட்பதையும் மிகவும் விரும்புகிறோம், இல்லையா? சிறுவயதில் கதைகளை ஆர்வத்துடன் கேட்டிருப்போம்.

ஆனால், பாதி கேட்டுக் கொண்டிருக்கும்போதே தூங்கி விடுவோம். அது ஏன்? அதை இந்தக் கதையில் தெரிந்து கொள்ளலாம். வாருங்கள்…

முன்னொரு காலத்தில் தூமகேது என்று ஓர் அரசன் இருந்தான். அவனுக்கு நித்திராதேவி என்றொரு மகள் இருந்தாள். அவளுக்குத் தூக்கமே வருவதில்லை.

இரவு பகல் எந்த வேளையிலும் தூக்கமே வராமல் தவித்தாள். இதனால் சோர்வாகவும் மனநிம்மதி இல்லாமலும் வருந்தமாக இருந்தாள். நாளடைவில் எதிலும் விருப்பம் இல்லாமல், ஒருவருடனும் பேசாமல்
எந்நேரமும் எங்கோ வெறித்துப் பார்த்தபடி இருந்தாள்.

அரண்மனை வைத்தியர்கள் பலவகையான மருத்துவம் செய்தும் பயன்இல்லை. என்ன செய்தும் மன்னனின் மகளை ஒருவராலும் தூங்கவைக்க முடியவில்லை.

பிற பெண்களைப் போலத் தன் மகளும் இயல்பாக, சந்தோஷமாக இல்லையே என மன்னர் மிகவும் வருந்தினார். இதனால் அவரும் சரியான தூக்கமின்றி பல நாட்களாகத் தவித்து வந்தார்.

இந்நிலையில் மன்னரும் அவரது தலைமை அமைச்சரும் ஒருநாள் தேரில் பவனி வந்து கொண்டிருந்தனர். அப்பொழுது ஒரு மாந்தோப்பில் வித்தியாசமாக வேடமணிந்த ஒருவன் முன் பல சிறுவர்களும்
சிறுமியர்களும் குழுமி இருந்ததையும் அவர்கள் அந்த மனிதன் சொல்லுவதை ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டிருப்பதையும் கண்டனர்.

அந்தக் குழந்தைகள் அனைவரும் உற்சாகமாகவும் மகிழ்ச்சியுடனும் இருப்பதையும் கவனித்தனர்.

மன்னர் தனது அமைச்சரிடம், “அமைச்சரே, இது என்ன விந்தை! ஓரிடத்தில் அமராமல் விளையாடிக் கொண்டே இருக்கும் இயல்புடைய இந்தக் குழந்தைகள் எப்படி அமைதியாக இந்த மனிதனைச் சுற்றி அமர்ந்து கொண்டிருக்கிறார்கள்?” என்று கேட்டார்.

உடனே அமைச்சர் அந்த மனிதனிடம் சென்று, “”ஐயா, தாங்கள் யார்? இந்தக் குழந்தைகளிடம் என்ன கூறுகிறீர்கள்?” என்று கேட்டார்.

“ஐயா, நான் ஒரு “கதைசொல்லி’. என் பெயர் விசித்திரன். கேட்பவர்களைக் கவரும் வகையில் கதை சொல்லுவேன்” என்று கூறினான் அந்த மனிதன். அவன் தன் கையில் தோலால் ஆன புத்தகம் ஒன்றை வைத்துக் கொண்டிருந்தான்.

“அது என்ன?” என்று அமைச்சர் கேட்டார்.

“இது என்னால் எழுதப்பட்ட புத்தகம். சில நேரங்களில் இதைப் பார்த்தும் கதை சொல்லுவேன்” என்றான்.

“அப்படியானால், அதோ அந்த மரத்தின் நிழலில் இந்நாட்டு மன்னர் நிற்கிறார். அவரது மகளுக்கு ஏற்பட்டுள்ள விநோதமான நோயால் வெகுநாட்களாகத் தூக்கமின்றி உடல்நலக்குறைவு ஏற்பட்டுத் தவிக்கிறார். உங்களால் முடிந்தால் அவருடைய கவலையைப் போக்கும்வண்ணம் சிறிய கதை ஒன்றைக் கூறுங்கள்” என்றார் அமைச்சர்.

உடனே அந்த மனிதன், மன்னர் முன் சென்று அவரை வணங்கிவிட்டுப் பின்னர் தன் இனிமையான குரலால் கதை ஒன்றை சொல்லத் தொடங்கினான். அங்கிருந்த சிறுவர் சிறுமியரும் கூடவே அமர்ந்து விசித்திரனின் கதையைக் கேட்க ஆரம்பித்தனர்.

மாந்தோப்பில் நிலவிய அமைதியும் தென்றல் காற்றும் கதையில் லயித்திருந்த மன்னருக்குக் கொஞ்சம் கொஞ்சமாகத் தூக்கத்தை வரவழைத்தன. அங்கிருந்த குழந்தைகளும் தூங்க ஆரம்பித்தனர்.

இதைக் கண்ட அமைச்சர் பெரும் ஆச்சரியம் அடைந்தார். விசித்திரன் கதை கூறுவதை நிறுத்திவிட்டு மரநிழலில் அமர்ந்து கொண்டான். சரியாக மூன்று மணி நேரம் கழித்து மன்னர் விழித்துக் கொண்டார்.

எழுந்தவுடன் விசித்திரனை ஆரத் தழுவிக் கொண்டு தன் நன்றியைத் தெரிவித்தார்.

“அப்பனே, உனக்கு மிக்க நன்றி. தூங்கிப் பல நாட்கள் ஆன நான் இன்றுதான் நிம்மதியாகத் தூங்கினேன். இதுபோல எனது மகளையும் தூங்கச் செய்தால் நான் மிகுந்த நன்றி உடையவனாக இருப்பேன்” என்று கூறினார்.

விசித்திரனும் ஒப்புக்கொண்டு மறுநாள் காலை அரண்மனைக்குச் சென்றான். நித்திராதேவியைக் கண்ட விசித்திரன் மிகுந்த மனவருத்தம் அடைந்தான். அவளை சீக்கிரம் குணப்படுத்த வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.

மன்னரை நோக்கி நின்றுகொண்டு கதை ஒன்றைக் கூறத் தொடங்கினான். முதலில் ஆர்வம் இல்லாமல் இருந்த நித்திராதேவி கொஞ்சம் கொஞ்சமாகக் கதையைக் கூர்ந்து கவனிக்கத் தொடங்கினாள்.

விசித்திரன் வேண்டுமென்றே கதையைப் பாதியில் நிறுத்தி விட்டு, “”என்னுடன் சாப்பிட வந்தால் மீதியைக் கதையைத் தொடருவேன். இல்லையென்றால் இத்துடன் முடித்து விடுவேன்” என்று அவையோரைப் பார்த்துக் கூறினான்.

நித்திராதேவி, “”ஐயா, நான் உங்களுடன் சாப்பிடுகிறேன். தயவு செய்து மீதிக் கதையையும் கூறுங்கள்” என்றாள்.

இதைக் கேட்ட மன்னர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இதுவரை பேசாமடந்தை போலிருந்த தன் மகள் பேசியதாலும் உணவு உண்ண விருப்பமில்லாத அவள் உணவு உண்ணப் போவதையும் எண்ணி மிகவும் மகிழ்ந்தார்.

அன்று இரவு விசித்திரன் மீண்டு ஒரு கதை கூறத் தொடங்கினான். கதையில் ஆழ்ந்து லயித்திருந்த நித்திராதேவி தன்னை அறியாமலேயே உறங்கிப் போனாள்.

இதனால் பேரானந்தம் அடைந்த மன்னர், “உனக்கு என்ன சன்மானம் வேண்டுமானாலும் கேள். நீ எங்களுடன் அரண்மனையிலேயே தங்கி விடு” என்று விசித்திரனிடம் கூறினார்.

அதற்கு விசித்திரன், “”ஐயா, நான் ஒரு நாடோடி. என்னால் ஓரிடத்தில் நிரந்தரமாகத் தங்க முடியாது. குழந்தைகளை மகிழ்விப்பதே என் வேலை. எனக்கு எவ்வித சன்மானமும் வேண்டாம். உங்கள் மகள்
குணமடைந்த பிறகு, நான் இங்கிருந்து சென்று விடுவேன்…” என்று கூறினான்.

இப்பொழுது நித்திராதேவியின் நடவடிக்கைகளில் பெரிய மாற்றம் ஏற்பட்டது. விசித்திரன் வந்த பிறகு இரவு நேரங்களில் ஆழ்ந்து உறங்கினாள். உற்சாகமாக விளையாடினாள். மன்னர் மிக்க மகிழ்ச்சி அடைந்தார்.

எப்போதும் விசித்திரனுடனேயே நித்திராவும் தங்கி இருந்தாள். விசித்திரனின் கையிலிருந்த புத்தகத்தைப் பிரிந்துப் பார்க்க விரும்பினாள். ஆனால் விசித்திரன் அதைத் தொடக்கூட அனுமதிக்கவில்லை.

விசித்திரன் அந்தப் புத்தகத்தைத் தனது தலைக்கு அடியில் வைத்துக் கொண்டு உறங்குவான். அப்படி உறங்கும்போது ஒருநாள், புத்தகம் தலைக்கு அடியிலிருந்து நழுவி, கீழே விழுந்து விட்டது.

இதுதான் சமயம் என்று நித்திராதேவி அதைக் கையில் எடுத்துப் பிரித்துப் பார்த்தாள். அதில் அழகான கையெழுத்தில் ஒரு பக்கம் படமும் ஒரு பக்கம் கதையும் எழுதப்பட்டு இருந்தது. அதைப் படிக்க முற்படும்பொழுது கண்கள் செருகி மயக்க நிலைக்குப் போனாள்.

சட்டென்று கண்விழித்த பொழுது, பேசும் தாவரங்கள், பறவைகள், விலங்குகள் நிரம்பிய வேறோர் உலகத்தில் தான் இருப்பதை உணர்ந்தாள். தன் இஷ்டம் போல அவைகளுடன் விளையாடினாள். இரவு வரத் தொடங்கியது. தன் தந்தை தன்னைத் தேடுவார் என்பதை உணர்ந்து மீண்டும் அரண்மனைக்குத் திரும்ப நினைத்தாள்.

ஆனால், அங்கிருந்த பேசும் விலங்குகள், “”பெண்ணே, இது ஒரு மாயப் புத்தகம். இதைப் படிக்கும் மனிதர்கள் ஒரு கதாபாத்திரமாக மாறி இப்புத்தகத்துக்குள் மறைந்து விடுவர். அதனால்தான் விசித்திரன் இந்தப் புத்தகத்தை யாரும் தொட அனுமதிப்பதில்லை” என்றன.

“அப்படியென்றால் விசித்திரன் மட்டும் எப்படி இப்புத்தகத்தை எடுத்துப் படிக்க முடியும்?” என்று கேட்டாள் நித்திரா.

உடனே அவ்விலங்குகள், “பெண்ணே, நீ நினைப்பது போல விசித்திரன் மானிடன் அல்லன். அவன் உன்னைப் போன்ற குழந்தைகளை மகிழ்விக்க இறைவனால் அனுப்பப்பட்ட தூதன்” என்றன.

“அப்படியென்றால் நான் எப்படி வெளியே செல்வது?”

“இனி, நீ உன் உலகுக்குச் செல்ல வேண்டுமென்றால் விசித்திரன் உன்னைப் பற்றி ஒரு கதை கூற வேண்டும். அப்பொழுதுதான் நீ மீண்டும் உருவம் பெற முடியும்! அதுவரை அரூபமாக இப்புத்தகத்துக்குள் மறைந்துதான் இருக்க முடியும். நீ இந்தப் புத்தகத்துக்குள் மறைந்திருக்கும் விஷயம் விசித்திரனுக்குத் தெரிந்தவுடன், உன்னை அவன் வெளியே கொண்டு செல்வான். கவலைப்படாதே!” என்று
கூறின.

இதற்கிடையில் ஒருநாள் முழுவதும் தன் மகள் தன் கண்ணிலேயே படவில்லை என்பதை மன்னர் மாலை நேரத்தில்தான் உணர்ந்தார். உடனே காவலாளிகளை அழைத்து தன் மகள் எங்கிருக்கிறாள் என்று பார்த்து வர ஆணையிட்டார்.

அவர்கள் அனைவரும் அரண்மனை முழுவதும் தேடி விட்டு, நித்திரா எங்கும் இல்லை என்றும், விசித்திரன் மட்டும் கட்டிலில் படுத்துத் தூங்கிக் கொண்டிருப்பதாகவும் கூறினர்.

இதனால் கலவரமடைந்த மன்னர், விசித்திரனை எழுப்பி, “எங்கே என் மகள்?” என்று கேட்டார்.

“எனக்குத் தெரியாது” என்று கூறிய விசித்திரன், கீழே விழுந்து கிடந்த தனது புத்தகத்தை எடுக்கக் குனிந்தான்.

விசித்திரன் தன்னை அலட்சியம் செய்துவிட்டுப் புத்தகத்தை எடுக்கக் குனிவதாக எண்ணிய மன்னர் பெரும்கோபம் கொண்டு அப்புத்தகத்தை அவன் கையிலிருந்து பிடுங்கினார். அறையின் ஒரு மூலையில்
குளிருக்காக விறகுகள் எரிக்கப்பட்டுக் கொண்டிருந்தன.

அப்புத்தகத்தை அந்த நெருப்புக்குள் வீசி எறிந்தார். இதனால் புத்தகம் திகு,திகுவென தீப்பிடித்து எரியத் தொடங்கியது!

அதோடு, விசித்திரனின் உருவமும் கொஞ்சம் கொஞ்சமாக மறையத் தொடங்கியது.

“ஐயோ, அப்பா, அவசரப்பட்டு விட்டீர்களே!” என்ற மகளின் குரலைக் கேட்ட மன்னர் அதிர்ச்சி அடைந்தார்.

“விசித்திரா, என்னை மன்னித்து விடு” என்று கூறிக் கதறினார்.

“என் மகளை மீண்டும் நான் காண வழி செய்வாய்” என்று கூறி மண்டியிட்டு அழுதார்.

அரூப நிலையிலிருந்த விசித்திரன் தான் யார் என்பதையும் தனது மாயப் புத்தகம் பற்றியும் மன்னருக்குக் கூறினான்.

“உங்கள் மகள், இப்புத்தகத்தில் மறைந்திருந்த விஷயம் எனக்குத் தெரியாது. இப்புத்தகம் அழியும்பொழுது என் உருவமும் மறையும் என்பது விதி. என்னைப் போலவே உங்கள் மகளும் அரூப நிலையில் மறைந்து விட்டதால், இனி எங்களுக்குப் பிறப்பும் இல்லை! இறப்பம் இல்லை! நான் கதை வடிவில் இந்த உலகத்தைச் சுற்றி வருவேன். உங்கள் மகள் இனி “நித்திரை’ என்று அழைக்கப்பட்டு,
கதை கேட்கும் மனிதர்களையும் குழந்தைகளையும் தூங்கச் செய்வாள்.

அவளுக்கு அழிவே இல்லை! அவள் எல்லோராலும் விரும்பப்படுவாள்” என்று கூறிவிட்டு முழுவதுமாக மறைந்து போனான் விசித்திரன்.

தனது அவசர புத்தியால் நேர்ந்த கொடுமையைக் கண்டு மன்னர் பெரிதும் வருந்தினார். அவர் தனது அடுத்த பிறவியில் கரையானாகப் பிறந்து கதை சொல்லியின் புத்தகத்தை எப்படியாவது கண்டுபிடிக்க விரும்பி புத்தகங்களை அரித்துக் கொண்டிருந்தார்.

ஆம்! அதனால்தான் பல யுகங்கள் கடந்தும் கதைகள் அழியாமல் வாழ்கின்றன. கதை கேட்கும் குழந்தைகள் பாதியிலேயே தூங்கி விடுகின்றனர். கரையான்களும் தொடர்ந்து புத்தகங்களை அரித்துக் கொண்டே இருக்கின்றன.

– சிறுவர் மணி, மே 2016

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *