தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: October 9, 2013
பார்வையிட்டோர்: 11,292 
 
 

சித்திரை மாத வெயில். எங்கும் வறட்சியாகக் காணப்பட்டது. காட்டில் உள்ள மிருகங்கள் நீர் நிலையைத் தேடி புறப்பட்டன. ஆனால் ஓடைக்காட்டில் மட்டும் வறட்சி இல்லாமல் இருந்தது. அதற்குக் காரணம் அந்த காட்டில் இருக்கும் ஆறுதான். அந்த ஆற்றில் மட்டும் எவ்வளவு வெயில் அடித்தாலும் நீர் சலசலவென்று போய்க் கொண்டிருக்கும்.

வெயில் காலத்திலும் தண்ணீர் வற்றாது; ஓடையாக போய்க் கொண்டிருக்கும். எனவே அக்காடு ஓடைக்காடு என்று பெயர் பெற்றது. அந்த ஆற்று நீர் மற்ற ஆற்று நீரைக் காட்டிலும் இனிமையாக இருந்தது. அங்குள்ள மிருகங்கள் காட்டின் பழங்களையும், புல், புதர்களையும் தின்று அந்த நீரைப் பருகிக் கொண்டு அங்கேயே மகிழ்ச்சியாக காலத்தைக் கழித்து வந்தன. அங்கு விளையும் பழங்களைப் பற்றி சொல்லவே வேண்டாம். அந்த நீரின் மகிமையால் அவ்வளவு தித்திப்பாக இருந்தன. அந்த ஆற்றின் அருகில் ஒரு பெரிய மாமரம் இருந்தது. அதன் கொப்புகளும் கிளைகளும் பரந்த நிழலை ஏற்படுத்திக்கொண்டு ஏராளமான இலைகளோடு மலையைப்போல படர்ந்து நின்றது. அந்த மாமரத்தின் பழங்கள் தேவாமிர்தத்தைப் போல மணமும் சுவையும் நிறைந்து இருந்தது.

அந்த மரத்தின் அடியில் நம் கதையின் ஹீரோக்கள் அரட்டை அடித்துக் கொண்டிருப்பார்கள். “அவர்கள் யார்?’ என்று நீங்கள் கேட்பது எனக்குக் கேட்கிறது.

அந்த காட்டில் அசூலிக்ஸ் என்ற அணில் பிள்ளையும், முகுந்து என்ற முயல் குட்டியும், தாசு என்கிற தம்பழம் பூச்சி (ஒரு வகையான வண்டு) மங்கா என்கிற மான் குட்டியும், குஜிலி என்கிற குரங்கு குட்டியும், மாணிக்கா என்கிற மரங்கொத்தியும் நண்பர்களாக இருந்தனர்.
வாரத்தின் ஏழு நாட்களைப் போல அவர்கள் ஏழு பேரும் தினமும் அம்மரத்தடியில் உட்கார்ந்து கொண்டு நாட்டு நடப்புகளைப் பற்றிப் பேசி அரட்டை அடித்துக் கொண்டிருப்பார்கள்.

அவர்கள் ஏழு பேரும் ஒருவருக்கொருவர் உதவி புரிந்துகொண்டு சந்தோஷமாக வாழ்ந்தனர். அப்படி அந்தக் காட்டில் மிருகங்கள் சந்தோஷமாக இருக்கும்போது பக்கத்து காட்டில் இருந்த ஆற்றில் வாழ்ந்து வந்த முதலை ஒன்று வழி தவறி ஓடைக்காடு ஆற்றிற்கு வந்தது. அது தண்ணீர் குடிக்க வரும் மான், முயல், குரங்கு மற்றும் சின்னச் சின்ன விலங்குகளை அடித்துச் சாப்பிட்டுக் கொண்டே இருந்தது. இதனால் தண்ணீர் தாகம் எடுத்தால் ஆற்றிற்குச் சென்று தண்ணீர் குடிக்க மிருகங்கள் பயந்தன.

யானைகள் மட்டும் தும்பிக்கையால் தண்ணீரை உறிஞ்சிக் குடிக்கும். சில சமயம் மற்ற மிருகங்களுக்கும் தும்பிக்கையால் தண்ணீரை உறிஞ்சி கொடுத்து வந்தது. எத்தனை தடவைதான் யானைகளை நம்பி இருப்பது? எனவே ஆற்று நீரை குடிப்பதற்கு ஏதாவது ஒரு வழி செய்ய வேண்டும் என்று தீர்மானித்தன.

எனவே நம் ஹீரோக்கள் ஏழு பேரும் சேர்ந்து திட்டம் போட்டார்கள். இதற்குத் தலைமையாக குஜிலி குரங்கு யோசனை சொன்னது.

“”நாமும் கும்பா யானை துதிக்கையைப் போல ஒரு ஸ்ட்ரா செய்யலாம்” என்றது. அதற்கு முகுந்து முயல்குட்டி,””இந்த காட்டில் வளரும் மூங்கில் மரத்தை ஸ்ட்ராவாக செய்யலாம்”என்றது.
மங்கா மான்குட்டியோ, “”இந்தக் காட்டில் மூங்கில் மரம் வளரும் இடம் எனக்குத் தெரியும். ஆனால் என்னால் அதை இங்கே கொண்டு வர முடியாது” என்றது. அதற்கு கும்பா யானை,””அதற்குத்தான் நான் இருக்கிறேனே. வாருங்கள் என்னோடு!”

என்று கூறி அந்த இடத்திற்கு மற்ற விலங்குகளை அழைத்துச் சென்றது யானை.

அந்தக் காட்டுப் பகுதியின் மேற்குப் புரத்தில் மூங்கில் காடு இருந்தது. அங்கு நன்றாக விளைந்திருந்த ஒரு மூங்கில் மரத்தை தன் தும்பிக்கையால் கொண்டு வந்து சேர்த்தது கும்பா யானை.

“”அந்த மூங்கில் மரத்தின் நடுநடுவே கணு இருக்குமே. ஓட்டை இருந்தால்தானே தண்ணீரை உறிஞ்ச முடியும்” என்றது குஜிலி குரங்கு.

“”நான் ஏன் இருக்கிறேன்? என்னுடைய வாயால் அந்த அடைப்பை நீக்கி குடைந்து ஓட்டைபோட்டுத் தருகிறேன். அதை மரத்தில் கட்டுவதற்கு நார் வேண்டுமே” என்றது தாசு தம்பழம்பூச்சி.
அசூலிக்ஸ் அணிலோ “”நான் ஏன் இருக்கிறேன்? இங்கு விளைந்திருக்கும் வாழை

மரத்தின் நார்களை உரித்துக் கொடுக்கிறேன்” என்றது.
அசூலிக்ஸ் அணில் தன் வாயால் வாழை நாரை உரித்துக் கொடுக்க, முகுந்து முயலும், மங்கா மானும் அதனை இழுத்துக்கொண்டு ஆற்றின் கரைக்கு வந்து சேர்ந்தன.

எல்லோரும் சேர்ந்து அந்த ஆற்றங்கரையில் நன்கு செழிப்பாக வளர்ந்திருந்த ஒரு சாய்வான மரக்கிளைகள் கொண்ட மாமரத்தை தேர்ந்தெடுத்தனர்.

ஒருநாள் மாலை முதலை இல்லாத சமயம் பார்த்து அந்த மூங்கில் மரத்தை ஓடை ஆற்று நீரில் சிறிது மூழ்கும்படி செய்தன. கும்பா யானை பிடித்துக் கொண்டு நிற்க, குஜிலி குரங்கு வாழை நாரைக் கொண்டு கிளைகளோடு சேர்த்து மூங்கிலை நான்கைந்து இடங்களில் கட்டியது. எல்லோரும் கை தட்டினார்கள்.

ஆனால் மங்கா மான் மட்டும் சோகமாக இருந்தது. அதன் கண்ணில் இருந்து கண்ணீர் வந்தது. “”மங்கா மானே! ஏன் கயல்விழி போன்ற உன் கண்ணில் இருந்து கண்ணீர் வருகிறது” என்று கேட்டது கும்பா யானை.

“”உங்களுக்கு தாகம் எடுத்தால் தும்பிக்கையால் குடித்து விடுவீர்கள். மற்றவர்கள் மரத்தின் மேலே சென்று மூங்கில் ஸ்ட்ராவால் தண்ணீரை உறிஞ்சிவிடுவார்கள். ஆனால் என்னால் மட்டும் மரம் ஏற முடியாதே! நான் எப்படி தண்ணீர் குடிப்பது. அதுதான் எனக்கு வருத்தமாக இருக்கிறது” என்றது.

இதைக் கேட்டுக்கொண்டிருந்த மாணிக்கா மரங்கொத்தி, “”என்னை எல்லாரும் மறந்துவிட்டீர்களே! யானைக்கு தும்பிக்கை என்றால் எங்களுக்கு நம்பிக்கை. அந்த சாய்வான மரத்திற்கு நான் என் மூக்கால் படிகளை அமைத்துத் தருகிறேன்”என்றது.

“”ஹே!” என்று எல்லோரும் மகிழ்ச்சியாக ஆர்ப்பரித்தனர்.
மரங்கொத்தி கிளைகளுக்கு படிகளைப்போட்டு தந்தது. மங்கா மான்குட்டிக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை. ஆயிற்று எல்லாரும் சேர்ந்து மூங்கில் ஸ்ட்ரா அமைத்தாயிற்று.

வெயில்காலம். எல்லோரும் அங்குள்ள பழங்களையும், புதர்களையும் சாப்பிட்டுவிட்டு மரத்தின் மீது ஏறி மூங்கில் ஸ்ட்ராவால் தண்ணீரைக் குடித்து மகிழ்ந்தனர். முதலைக்கு மட்டும் ஏன் யாரும் கரைக்கு வருவது இல்லை என்பது இன்றுவரை புரியவேயில்லை.

இந்தக் கதை எழுதின எனக்கே தாகம் எடுக்கிறது. இதை படித்துக்கொண்டிருக்கும் சிறுவர்மணி குழந்தைகளே! உங்களுக்கும் தாகம் எடுத்துக்கொண்டிருக்கும். வாருங்கள்! நாமும் அந்த ஓடைக்காட்டிற்குச் சென்று மூங்கில் ஸ்ட்ராவால் அந்த அருமையான அமிர்தத்தை பருகிவிட்டு வரலாம்!

– எம்.ஜி.விஜயலக்ஷ்மி கங்காதரன் (ஜூன் 2013)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *