ஒழுக்கமுடைமை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: October 12, 2022
பார்வையிட்டோர்: 344 
 

(1949ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

திருக்குறள் கதைகள்

அவரவர்களுக்கு ஏற்பட்ட ஒழுக்கங்களை உடையராதல்

ஒரு செல்வனிடம் இரண்டு வேலைக்காரர்கள் இருந்தார்கள். இச்செல்வன் குழந்தை விளையாடிக் கொண்டிருக்கும் போது கையில் உள்ள பொன் வளையல் கழன்று கீழே விழுந்தது. அதைச் சின்ன வேலைக்காரன் பார்த்துக்கொண்டிருக்கும் போது பெரிய வேலைக்காரன் எடுத்து மறைத்துவைத்தான். சிலநாள் சென்று குழந்தை கையில் வளையல் காணா ததை அறிந்து செல்வன் பெரிய வேலைக்காரனை அழைத்துக் கேட்டான். அவன் தான் கண்டதே இல்லை என்று சொன்னான். அப்போது அச்செல் வன் சின்ன வேலைக்காரனைக் கூப்பிட்டுக் கேட்கச் சின்னவன் பெரிய வேலைக்காரனைப் பார்த்து “அண்ணா! நல்லொழுக்கமாக நடந்துகொண்டால் மேலும் இன்பமாக இங்கேயே வாழலாம்; வீணாகப் பொய் சொல்லி மறைப்போமானால் இங்கும் வாழ முடியாது ; எங்கே சென்றாலும் பழிச்சொல் கூறு வார்கள்; இவ்வித நீங்காத துன்பத்தை அனுபவிப் பதைவிட எடுத்து மறைத்துவைத்ததைக் கொடுத்து விடுதல் நல்லது” என்றான். இதைக் கேட்டுப் பெரிய வேலைக்காரன் மறைத்து வைத்திருந்த வளையலை எடுத்துவந்து கொடுத்துத் தான் பொய் சொன்னதற்கு மன்னிக்கும்படி வேண்டினான். செல்வனும் பிழையை மன்னித்து வேலைக்கு வைத் துக்கொண்டான். அது முதல் அவன் தீய ஒழுக்கச் செயல் துன்பம் தருவதால் அவற்றை வெறுத்து இன்பம் தரும் நல்லொழுக்கமாக நடந்துவந்தான். பின் வரும் குறளிலும் இக்கருத்து அறிவிக்கப்பட்டுள்ளது.

நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
என்றும் இடும்பைத் தரும்.

நல்லொழுக்கம் = (ஒருவனுக்கு) நன்னடத்தை
நன்றிக்கு = (தான் அடையும்) இன்பத்திற்கு
வித்து ஆகும் = காரணம் ஆகும்
தீ ஒழுக்கம் = கெட்ட நடத்தை
என்றும் = எப்பொழுதும்
இடும்பை தரும் = துன்பத்தையே உண்டாக்கும்.

கருத்து: நல்லொழுக்கம் இன்பத்தையும், தீயொழுக் கம் துன்பத்தையும் உண்டாக்கும்.

கேள்வி: மக்களுக்கு இன்பத்தையும், துன்பத்தையும் தருவன எவை ?

விளக்கம்: வித்து = விதை, இங்கே காரணம் என்ற பொருளில் வந்தது.

– திருக்குறள் கதைகள் – 28-1-1949 – நான்காம் உயர்வகுப்புக்குரியது (IV Form) – அரசியலார் வகுத்த புதிய பாடத்திட்டப்படி எழுதியது – இந்நூல் திருக்கயிலாய பரம்பரைத் தருமபுர ஆதீனம் இருபத்தைந்தாவது மகா சந்நிதானம் ஸ்ரீ-ல-ஸ்ரீ சுப்பிரமணிய தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் திருவுள்ளப்பாங்கின்படி சிதம்பரம், வித்துவான் திரு.ச.சேதுசுப்பிரமணிய பிள்ளை அவர்களால் எழுதப்பெற்றது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)