கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: December 14, 2012
பார்வையிட்டோர்: 12,461 
 
 

முன்னொரு காலத்தில், அரபு நாட்டில் மிகப் பெரிய செல்வந்தர் ஒருவர் இருந்தார். அவருக்கு மூன்று மகன்கள் இருந்தனர். மூவருமே அவருக்கு வணிகத்தில் உதவி செய்தனர். ஆனால், அவரோ தன் நம்பிக்கைக்கு உரிய அடிமை சொல்வதைக் கேட்டு நடந்தார். அந்த அடிமையின் அறிவுரைப்படி நடந்ததால்தான் தன் செல்வம் மேலும் மேலும் பெருகியது என்று நினைத்தார்.

தன் மகன்களைவிட அந்த அடிமைக்கு அதிக மதிப்புக் கொடுத்து வந்தார்.
கடும் நோய்வாய்ப்பட்ட செல்வந்தர் படுத்த படுக்கையாகக் கிடந்தார். வஞ்சகனான அந்த அடிமை தன் விருப்பம் போல அவரை உயில் எழுதச் செய்தான். சில நாட்களில் செல்வந்தரும் இறந்துவிட்டார்.

OreyPorulஅவருடைய உயிலைப் படித்தனர். அதில், “இந்தச் செல்வம் முழுவதும் நானே ஈட்டியது. என் விருப்பம் போலச் செலவு செய்யும் உரிமை எனக்கு உள்ளது. என் மூன்று மகன்களும் என் செல்வத்தில் இருந்து அவர்கள் விரும்பும் ஒரு பொருளை எடுத்துக் கொள்ளலாம். மீதி உள்ள என் செல்வங்கள் அனைத்தும் என் நம்பிக்கைக்கு உரிய அடிமைக்குச் சேர வேண்டும்’ என்று எழுதியிருந்தது.

“இந்த செல்வந்தர் தன் மகன்களை இப்படி ஏமாற்றி விட்டாரே!’ என்று எல்லாரும் வருந்தினர்.

மூத்த மகன், “”விலை உயர்ந்த மாளிகையை நான் எடுத்துக் கொள்கிறேன்…” என்றான்.

அவன் பெயருக்கு அந்த மாளிகை எழுதப்பட்டது.

இரண்டாவது மகன், செல்வந்தருக்கு சொந்தமான வியாபாரத்தைக் கேட்டு வாங்கிக் கொண்டான்.

நடப்பதை எல்லாம் மகிழ்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தான் அந்த அடிமை. அவனுக்குக் கிடைக்க இருக்கும் பெருஞ்செல்வத்தை எண்ணி எல்லாரும் பொறாமை கொண்டனர்.

கடைசி மகனைப் பார்த்து, “”உன்னுடைய விருப்பம் என்ன? எந்தப் பொருள் வேண்டும்?” என்று கேட்டனர் பெரியவர்கள்.

“இவன் எந்தப் பொருளைக் கேட்டாலும் மீதி உள்ள பொருட்கள் அனைத்தும் எனக்கே சொந்தம். இனி இந்த நாட்டில் நானே பெருஞ்செல்வந்தன்!’ என்ற மகிழ்ச்சியுடன் நின்றிருந்தான் அந்த அடிமை.

அறிவுக்கூர்மை உடைய அந்த மகன், “”என் தந்தைக்கு அடிமையாக இருந்த நீ எனக்கும் அடிமையாக இருக்க வேண்டும். இவரே நான் தேர்ந்து எடுக்கும் ஒரே பொருள்…” என்றான்.

அந்த அடிமை, அவனுக்கு அடிமையானதால் எல்லாச் செல்வமும் இளைய மகனுக்கே உரியது ஆயிற்று. தன்னுடைய கெட்ட புத்திக்கு கிடைத்த பரிசை எண்ணி நொந்துபோனான் அடிமை.

– ஆகஸ்ட் 27,2010

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *