கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: December 16, 2012
பார்வையிட்டோர்: 17,242 
 
 

அந்த மலைச்சாரலில், ஓர் அத்தி மரம் உண்டு. அது கப்பும், கிளையுமாக அடர்த்தியாயிருந்தது. அந்த மரத்திலிருந்த பொந்து ஒன்றில், நாகம் ஒன்று வசித்து வந்தது. மற்றொரு பொந்தில், கழுகு ஒன்று வாசம் செய்தது.

இரண்டுமே, மிகவும் வயது முதிர்ந்தவை. வெளியே சென்று தீனி தேட முடியாத நிலை. அதனால், அம்மரத்தில் வசித்த மற்ற பறவைகள், தங்களுக்குக் கிடைத்த தீனியில், கொஞ்சம் அவற்றுக்கென்று கொடுத்து வந்தன. அந்தத் தீனியைத் தின்றே அவை வாழ்ந்து வந்தன.

YenVandhaiஒருநாள், பூனை ஒன்று அந்தப் பக்கமாக வந்தது. அப்போது அம்மரத்திலிருந்த பறவைகளின் கூட்டிலிருந்து அப்பறவைக் குஞ்சுகளின், “கீச் கீச்’ என்று சத்தம் கேட்டது. ஆகா! இங்கே நமக்கு நிறைய தீனி கிடைக்கும் போலிருக்கிறதே! என்று எண்ணியது பூனை. அதன் நாக்கிற்குச் சுவை தட்டியது.

உடனே, மெது மெதுவாக மரத்திலேறி அவற்றை நோட்டம் பார்த்தது பூனை. அதைக் கண்ட அக்குஞ்சுகள் பயந்துபோய், என்றுமில்லாமல் பெருங்கூச்சலிட்டன.

“”ஏன் இப்படிக் கூச்சல் போடுகிறீர்கள்?” என்று கேட்டுக்கொண்டே கழுகு, தன் பொந்திலிருந்து எட்டிப் பார்த்தது. சந்தடி செய்யாது பூனை வந்து கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டது.

“”என்னைப் பார்த்து இக்குஞ்சுகள் எல்லாம் இப்படி பயந்து கத்துகின்றனவே! நீங்களாவது தைரியம் சொல்லக் கூடாதா?” என்று கேட்டுக்கொண்டே கழுகின் பக்கம் வந்து, வணக்கம் செய்தது பூனை.

“”நீ யார்?” என்று கேட்டுக் கொண்டே, தன் கண்களை இடுக்கிக் கொண்டு அதைப் பார்த்தது கழுகு.

“”நான் நெடுஞ்செவியன் என்னும் பூனை. உங்களிடமெல்லாம் நட்புகொள்ள வந்தேன்,” என்றது பூனை.

“”ஓடு! ஓடு! இங்கு நிற்காதே! இல்லையேல், உன் உயிருக்கே ஆபத்து நேரும்,” என்று பயமுறுத்தியது கழுகு.

“”என்ன! எடுத்த எடுப்பிலேயே இப்படிச் சொல்கிறீர்களே! என்னைப் பற்றி தெரிந்துகொண்டு பேசுங்கள். ஒருவனை பார்த்த மாத்திரத்திலேயே தீர்மானித்துவிடக் கூடாது. அவைகள் நடத்தையைப் பார்த்தே தீர்மானிக்க வேண்டும்,” என்றது பூனை.

“”நீ ஏன் இங்கு வந்தாய்… நட்புகொள்ள வந்தாயா? உண்மையைச் சொல்?” என்று சற்று அதட்டலாகவே கேட்டது கழுகு.

“”நான், கங்கா நதியில் நாள்தோறும் குளித்து முழுகி விரதம் இருந்து வருகிறேன். நீர் மிகுந்த தர்மவான் என்று மற்ற பறவைகள் பேசிக் கொண்டது என் காதில் விழுந்தது. வயது முதிர்ந்த சான்றோரிடமே தருமம் கேட்க வேண்டும் என்று சாஸ்திரம் சொல்கிறது. அதனால்தான், இப்போது உம்மைத் தேடி வந்தேன்,” என்றது அந்த ருத்திராட்ச பூனை.

“”அப்படியா!” என்று கழுகு யோசித்துக் கொண்டிருந்த வேளையில், விரிவாகப் பேசத் தொடங்கியது.

“”என்ன இப்படி யோசிக்கிறீர்கள்? சத்துருவும் தன் வீட்டுக்கு வந்தால், சாதுக்கள் அவனுக்கு சன்மானம் அளிப்பர். தன்னை வெட்டுகிறவனுக்கே, மரம் நிழல் தரவில்லையா?

“”சாதுக்கள், தம் வீட்டுக்கு யார் வந்தாலும் பூஜிக்கின்றனர்! இது மாதிரி அவமானப்படுத்துவதில்லை. அதிதி யார் வீட்டுக்கு வந்து மனம் வாடி திரும்புகிறானோ, அவன் தன் பாவத்தை அவ்வீட்டு எஜமானனுக்குக் கொடுத்துவிட்டு, அவனுடைய புண்ணியதைக் கைக்கொண்டு போகிறார் தெரியுமா!

“”ஆகையால்தான் மழை பொழிகிறது; சூரியன் எரிகிறது! சண்டாளன் வீட்டில் சூரியன் பிரகாசிப்பதில்லையா?” என்று சமத்காரமாய்ப் பேசியது பூனை.

“”அது சரி! நீ மாமிசப் பிரியனாயிற்றே! அதிலும், கொன்று தின்ன அஞ்சமாட்டாயே!” என்றது கழுகு.

அது கேட்ட பூனை, “”சிவ சிவா!” என்று தன் காதுகளைப் பொத்திக் கொண்டது.
“”நான் தரும சாஸ்திரங்கள் படித்தவன். அதனால் நான் வைராக்கியம் கொண்டவன். அதுமாதிரியான பொல்லாத கருமங்களையெல்லாம் நான் அடியோடு விட்டுவிட்டேன்.

“”எவன் மற்றொருவனைக் கொன்று தனக்குச் சுகத்தைத் தேடிக் கொள்கிறானோ, அவன் நரகத்தை அடைகிறான். அதனால், கொலை செய்வதுபோல் வேறொரு பாதகம் இல்லை என்கிறது தரும சாஸ்திரம்.

“”அதனால், கொலை செய்யாமல் இருப்பதுபோல் வேறொரு தருமம் இல்லை என்று தீர்மானித்து, காட்டிலுள்ள காய், கனி, கிழங்குகளையே சாப்பிட்டு வருகிறேன் நான்!” என்றெல்லாம் பேசி கழுகின் மனதைத் கவர்ந்து பூனை.
உடனே, கழுகுக்கு, அப்பூனையின் மேல் பூரண நம்பிக்கை ஏற்பட்டுவிட்டது.

“”சரி, அப்படியென்றால் நீ இங்கு தங்கிக் கொள்ளலாம்,” என்று அனுமதி கொடுத்துவிட்டது கழுகு.

அதன்பிறகு கேட்க வேண்டுமா? பூனை தன் கைவரிசையைக் காட்டத் தொடங்கிவிட்டது. அதன் உள்நோக்கத்தை நிறைவேற்றிக் கொண்டது. நாளடைவில் அப்பூனை, அங்கிருந்த பறவைக் குஞ்சுகளைச் சந்தடி செய்யாது கொன்று தின்னத் தொடங்கியது.

“”என்ன இது! நாள்தோறும் நம் குஞ்சுகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறதே நம்முடைய கூட்டில்!” என அந்தந்த பறவைகளும் ஆழ்ந்து யோசிக்கத் தொடங்கின.
இதையறிந்த பூனை, சில நாட்களில் அங்கிருந்த கழுகினிடத்தில்கூட சொல்லிக் கொள்ளாமல் ஓடிப்போய்விட்டது.

அதுகண்ட பறவைகள், அப்பூனை தங்கியிருந்த கழுகின் மரப் பொந்தை வந்து பார்த்தன. என்ன கொடுமை! அங்கு தம் குஞ்சுகளின் எலும்புகளும், சிறகுகளும் இருப்பதைக் கண்டன; கடுங்கோபம் கொண்டன.

“”துரோகி! இந்தக் கழுகே அபகரித்து குஞ்சுகளையெல்லாம் தின்றிருக்கிறதே!” என்று பேரிரைச்சல் போட்டு, அப்பறவைகளனைத்தும், அக்கழுகின் மேல் பாய்ந்து கொத்திக் கொன்றன.

ஆகையால், ஒருவனுடைய குணத்தைப்பற்றி ஒன்றும் தெரிந்து கொள்ளாமல், அவனுக்கு இடம் கொடுக்கக்கூடாது செல்லூஸ். ***

– நவம்பர் 26,2010

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *