கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: October 19, 2013
பார்வையிட்டோர்: 25,692 
 
 

இதுவரை பல விலங்குகளின் உயிருக்கு எமனாக இருந்த நரிக்கு இன்று ஒரு சிறிய முள் எமனானது.

இரண்டு நாளைக்கு முன் தன் காலில் குத்திய முள்ளை எடுக்க முடியாமல் நரி வலியால் துடித்துக் கொண்டிருந்தது.

நரியின் குகைக்கு பக்கத்தில் இருக்கும் புதரைதான் முயல்கள் காலம்காலமாக தங்களின் வாழ்விடமாக கொண்டு வாழ்ந்து வருகின்றன.

நரி தினம்தோறும் அந்த முயல் கூட்டத்திலிருந்து ஒவ்வொரு முயலாக கொன்று தின்று தன் பசியை தீர்த்துக் கொண்டு சந்தோஷமாக வாழ்நது வந்தது.

முயல்கள் நரிக்கு பயந்துக் கொண்டு உணவுத் தேட கூட வெளியில் செல்லாமல் புதருக்குள்ளயே அடைந்து கிடந்தன. இதனால் குட்டி முயல்கள் அனைத்தும் பசியால் வாடின. எத்தனை நாள்தான் இப்படி நாமும் நம் பிள்ளைகளும் பசியால் வாடுவது! இன்று எப்படியாவது அந்த நரியின் கண்ணில் மண்ணை தூவிவிட்டு ஏதாவது உணவு சேகரித்து வரலாம் என்று முயல்களின் தலைவன் கூறியது.

நாலைந்து முயல்களை தன்னுடன் அழைத்துக் கொண்டு உணவுத் தேட புறப்பட்டது, தலைவன் முயல்.

நரி என்ன செய்து கொண்டிருப்பதை தெரிந்துக் கொள்ள புதருக்குள் இருந்துக்கொண்டே தலையை மட்டும் வெளியில் நீட்டி நோட்டமிட்டது தலைவன் முயல்.

நரி ஒரு மரத்தடியில் படுத்திப்பதை முயல் கண்டது. தலையை புதருக்குள் இழுத்துவிட்டு, அந்த நரி வயிறு முட்ட சாப்பிட்டுவிட்டு நல்லா தூங்குகிறது. இதுதான் நல்ல சமயம் அந்த நரி விழித்துக் கொள்வதற்குள் நாம் உணவுத் தேடிக் கொண்டு சீக்கிரம் புதருக்குள் திரும்ப வேண்டும். ம்… சீக்கிரம் வாருங்கள்.

தங்களின் உயிருக்கு உத்திரவாதம் இல்லை என்ற பயத்தில் முயல்கள் பதுங்கி பதுங்கியே மெதுவாக சென்றன.

மெதுவா….. மெதுவாக காலை எடுத்து வையுங்கள் அந்த நரி முழித்துக் கொள்ள போகிறது.

அப்போது நரிக்கு காலில் வலி அதிகமானதால் அது ஊளையிட தொடங்கியது.

நரி நம்மை பார்த்துவிட்டு ஊழையிடுகிறது என்று முயல்கள் அனைத்தும் பயத்தில் நடுங்கி சிலையாய் நின்றன.

நரியின் ஊளை சத்தம் இன்னும் அதிகமானது.

நரிக்கு ஏதோ ஆபத்து அது உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறது என்று நினைக்கிறேன் என்றது தலைவன் முயல்.

ஆமாம் எங்களுக்கும் அப்படித்தான் தோன்றுகிறது.

முயல்கள் மெதுவாக நரியை நெருங்கின,

நரியின் காலில் ரத்தம் வழிந்துக் கொண்டிருந்தது. நரி வழியால் துடித்துக் கொண்டிருந்தது. தலைவன் முயல் மற்ற முயல்களை மூலிகை இலையை பறித்து வர சொன்னது.

நாம் ஏன் இந்த நரிக்கு உதவி செய்யணும்? நம் இனத்திலிருந்து எத்தனை முயல்களை கொஞ்சம் கூட இரக்கம் இல்லாமல் இந்த நரி கொன்று தின்று இருக்கிறது. இப்போது கூட இந்த நரிக்கு பயந்து கொண்டு நாமும் நம் பிள்ளைகளும் எத்தனை நாள் பசியால் வாடினோம்? இந்த நரியை இப்படியே விட்டுவிட்டால் நாம் நிம்மதியாகவும் சுதந்திரமாகவும் வாழமுடியும் என்றன மற்ற முயல்கள்.

பேசுறதுக்கு இப்ப நேரம் இல்ல, சீக்கிரம் போய் மூலிகை இலையை கொண்டு வாங்க என்று சற்று கோபத்தோடு கூறியது தலைவன் முயல்.

தலைவனின் பேச்சை மறுக்க முடியாமல் மூலிகை இலையை பறித்து வந்து கொடுத்தன.

மூலிகை இலையை கசக்க சாறுபிழிந்து நரியின் காலில் வைத்து கட்டு போட்டுவிட்டது தலைவன் முயல். இப்போது சற்று வழி குறைந்ததை நரி உணர்ந்தது.

நரியால் இப்பொழுது எழுந்து நிற்கவும் முடிந்தது. ஒருத்தர் உயிருக்கு போராடும் போது நம்மால் முடிந்த உதவியை அவர்களுக்கு செய்ய வேண்டும். அது எதிரியாக இருந்தாலும்.

நாம இப்ப இந்த நரிக்கு செய்தது நம்மை பொறுத்தவரை அது உதவி, ஆனால் இந்த நரியை பொறுத்த வரைக்கும் நாம அந்த நரிக்கு கொடுத்த தண்டனை என்று கூறிய தலைவன் முயல் தன் கூட்டத்தை அழைத்துக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தது.

நரி வெக்கத்தில் தலைகுனிந்து நின்றது. அன்றிலிருந்து நரி முயல் இனத்திருக்கு எந்தவொரு தொந்தரவும் செய்யவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *