கதையாசிரியர்:
தின/வார இதழ்: தி இந்து
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: August 27, 2018
பார்வையிட்டோர்: 17,955 
 
 

நத்தை ஊர்ந்து கொண்டிருந்தது.

“நத்தையே, என்ன இவ்வளவு மெதுவா போறே? கொஞ்சம் வேகமாகப் போ” என்றது வரிசையில் வந்துகொண்டிருந்த எறும்புகளில் ஒன்று.

“கிண்டலா? என்னால் எப்படி வேகமாகப் போகமுடியும்?” என்றது நத்தை.

“நத்தையே, உன்னோட நல்லதுக்குத்தான் சொல்றேன். இன்னும் கொஞ்ச நேரத்துல மழை அதிகமா பெய்யப் போகுது. அந்த மழை வெள்ளத்துல மாட்டிக்காம, பாதுகாப்பான இடத்துக்குப் போயிடு” என்று எச்சரிக்கை செய்தது எறும்பு.

“அப்படியா! ரொம்ப நன்றி. நான் அந்த மரமல்லி மரத்துக்குக் கீழேதான் இருக்கேன்” என்றது நத்தை.

“அடடா! நீ நடக்கிற நடையைப் பார்த்தால் அந்த மரத்துக்குப் போக, அரைநாள் ஆயிடும் போலிருக்கே! யாரிடமாவது உதவி கேட்டு, வேகமாகப் போய்விடு” என்று சொல்லிவிட்டு, வரிசையில் சேர்ந்துகொண்டது எறும்பு.

“எறும்பு சொன்னா சரியாகத்தான் இருக்கும். எதுக்கும் வேகமா நடப்போம்” என்று தனக்குத்தானே சொல்லி கொண்டு, நடையில் கொஞ்சம் வேகத்தைக் கூட்டியது நத்தை.

அந்தப் பக்கமாக வந்த பொன்வண்டு, “நத்தையே, என்ன இவ்வளவு வேகமாகப் போறே?” என்று கேட்டது.

“பொன்வண்டே, சற்று நேரத்தில் பெரும் மழை வரப் போகுது என்று எச்சரித்தது எறும்பு. அதனால்தான் வேகமாகப் போறேன். ஆனால் இந்த வேகம் போதாது. எனக்கு உதவி செய்ய முடியுமா?”

“நத்தையே, உன் எச்சரிக்கை செய்தியைக் கேட்டதும் என் குடும்பம் நினைவுக்கு வருது. நான் உடனே சென்று அவர்களைப் பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துப் போகணும். என்னை மன்னிச்சுடு” என்று சொல்லிவிட்டு வேகமாகப் பறந்தது பொன்வண்டு.

இப்படி வழியில் பார்த்த நண்பர்கள், நத்தையின் எச்சரிக்கை செய்தியைக் கேட்டு, தங்கள் குடும்பத்தாரைக் காப்பாற்றச் சென்றன. உதவி செய்ய யாருமில்லை.

அப்போது ஒரு பெரிய மரவட்டை அசைந்து அசைந்து நத்தைக்கு அருகில் வந்தது.

“என்ன நத்தையே! ஏன் இவ்வளவு சோர்ந்து போயிருக்கிறாய்?”

மரவட்டையைப் பார்த்ததும், தனக்கு மழையால் வரப்போகும் ஆபத்து பற்றிச் சொன்னது நத்தை.

“அப்படியா! நான் உனக்கு உதவி செய்கிறேன். நீ நடந்து கொண்டே இரு. இதோ வருகிறேன்” என்று சொல்லிவிட்டுச் சென்றது.

சில நிமிடங்களில் மரவட்டை வந்தது. கூடவே இன்னொரு மரவட்டையையும் அழைத்து வந்திருந்தது.

“நத்தையே, நாங்கள் இருவரும் சேர்ந்துதான் உன்னை ஆபத்திலிருந்து காப்பாற்றப் போகிறோம்” என்றது.

“நன்றி நண்பர்களே!”

“இந்த நத்தையை எப்படி வேகமாக அழைத்துச் செல்வது?” என்று கேட்டது இன்னொரு மரவட்டை.

அப்போது உணவுத் தேடிவந்த வெட்டுக்கிளியைக் கண்டன. உடனே, “வெட்டுக்கிளியே, நாங்கள் நத்தையைப் பாதுகாப்பாக அழைத்துச் செல்வதாக வாக்கு அளித்திருக்கிறோம். நீயும் உதவி செய்ய வேண்டும்.” என்றது மரவட்டை.

“என் உதவியா? நான் என்ன செய்ய வேண்டும்?” என்றது வெட்டுக்கிளி.

“அதோ! அந்தச் செடியின் பெரிய இலையைக் கத்தரித்து தந்தால் போதும்” என்றது மரவட்டை.

வெட்டுக்கிளி ஒரே தாவலில் செடியின் உச்சிக்குச் சென்று, பெரிய இலையைக் கத்தரித்துப் போட்டது.

“நத்தையே, நீ இந்த இலைமீது ஏறிக்கொள். நாங்கள் இருவரும் சேர்ந்து இதனை வேகமாக இழுத்துக்கொண்டு, பத்திரமாக உன் வசிப்பிடத்தில் சேர்க்கிறோம்” என்றது மரவட்டை.

வெட்டுக்கிளிக்கு நன்றி சொல்லியவாறே, இலை மீது ஊர்ந்தது நத்தை.

இரண்டு மரவட்டைகளும் ஆளுக்கு ஒரு பக்கமாகப் பிடித்து வேகமாக இழுத்துச் சென்றன.

மரமல்லி மரத்துக்கு அருகில் வந்ததும் பாதுகாப்பாக இறங்கியது நத்தை.

“நீங்களும் உள்ளே வாங்க… மழை நின்றதும் உங்கள் வீட்டுக்குப் போகலாம்” என்றது நத்தை.

உடனே லேசான தூறலுடன் ஆரம்பித்த மழை, மெதுவாக வேகத்தைக் கூட்டி, பொழிய ஆரம்பித்தது.

நத்தையின் வீட்டுக்குள் பாதுகாப்பாக அமர்ந்தபடி, மழையை ரசித்துக்கொண்டிருந்தன மரவட்டைகள்!

நன்றி: தி இந்து 10.01.2018

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *