உண்மையான நண்பன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: December 15, 2020
பார்வையிட்டோர்: 2,222 
 

ஒரு செல்வந்தர் வீட்டில் தெண்டன் என்பவன் காவலாளியாக வேலை பார்த்து வந்தான்.

தினமும் அவன் வீட்டுக்குத் திரும்பும் போது, மது அருந்தி வயிறு நிறையச் சாப்பிட்டு வருவான்.

அவன் மனைவி, ”தினமும் இப்படிக் குடித்துவிட்டு, தின்னுவிட்டு வருகிறாயே? உன்னுடைய சம்பளம் இதற்கே போய் விட்டால், குடும்பத்தை எப்படி நடத்துவது?” என்று கடிந்து கொண்டான்.

அதற்கு தெண்டன், “நான் வேலை செய்யும் வீட்டில், சிங்கன், வீரன் என இருவர் தோட்ட வேலை பார்க்கின்றனர். அவர்கள் இருவரும் என்னிடம் மிகுந்த பிரியம் உடையவர்கள். சிங்கன் எனக்கு மதுவும், உணவும் அளிப்பான். வீரனோ தன் உயிரையே கொடுக்கக் கூடியவன்.” என்று கூறினான்.

சில நாட்களுக்குப் பிறகு, தெண்டனும் அவன் மனைவியும் சிங்கன் வீட்டுக்குச் சென்றனர். அவர்களை அவன் அன்போடு வரவேற்று, உபசரித்து, விருந்து அளித்து, அனுப்பி வைத்தான்.

அதன் பிறகு, வீரன் வீட்டுக்குச் சென்றனர். அப்போது வீரனும் அவன் மனைவியும் சூதாட்டத்தில் கவனமாக இருந்தனர். என்றாலும், சிறிது நேரம் அன்போடு பேசி, உணவு அளிக்காமல், அனுப்பி வைத்தனர். தெண்டன் மனைவிக்கு அவர்கள் உணவு அளிக்காதது வருத்தம் தந்தது.

“வீரன் உயிரையே கொடுக்கக் கூடியவன் என்று புகழ்ந்தாயே! என்று ஆத்திரப்பட்டாள் மனைவி. தெண்டன் அவளை சமாதானப்படுத்தினான்.

சில மாதங்களுக்குப் பின், தெண்டனும் மனைவியும் ஆலோசித்து நட்பைச் சோதிக்கத் தீர்மானித்தனர்.

தெண்டன் மனைவி மட்டும் சிங்கன் வீட்டுக்குச் சென்று, கவலை தோய்ந்த முகத்தோடு , “கணவனை, செல்வந்தர் வேலையிலிருந்து நீக்கி விட்டார்” என்று கூறினாள்.
”பணக்காரனை நாம் என்ன கேட்க முடியும்? என் விலக்கினீர்கள் என்று கேட்க நமக்கு என்ன உரிமை இருக்கிறது? பணக்கார வர்க்கத்தாரிடம் வேலை செய்வது தலைக்குமேல் கத்தி தொங்குவது போன்றது. வேறு வேலை தேடிக் கொள்ளச் சொல்லு” என்று அவளிடம் கூறி, அவளை அனுப்பி வைத்தான் சிங்கன்.

அடுத்து, வீரன் வீட்டுக்குச் சென்று தன் கணவனை வேலையிலிருந்து நீக்கி விட்டதாக சொன்னாள் தெண்டன் மனைவி.

வீரன் மிகவும் கவலைப்பட்டு, “முதலாளி மற்றும் அவர் மனைவியிடம் மிகவும் பணிவோடு வேண்டி அவனுக்கு வேலை மீண்டும் கிடைக்க முயற்சி எடுக்கிறேன், தைரியமாகப் போ , கவலை வேண்டாம்” என்று ஆறுதல் கூறி அனுப்பினான்.

அப்பொழுது தான் வீரனின் நட்பின் உயர்வை அறிந்து மகிழ்ந்தாள் தெண்டனின் மனைவி.

உண்மையான நண்பன், ஆறுதல் கூறி, ஆதரவு காட்டுவான்.

– மாணவர் மாணவியருக்கு நீதிக் கதைகள் – முதற்பதிப்பு: ஜூன் 1998 – முல்லை பதிப்பகம்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *