இறுமாப்புள்ள இளவரசி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: December 30, 2021
பார்வையிட்டோர்: 12,134 
 

(1979ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

நல்லவராகிய ஓர் அரசருக்கு, ஒரு காலத்தில், வடிவழகியாகிய ஒரு பெண் இருந்தாள். அவளுடைய எழிலைப்பற்றி உள் நாட்டிலும் வெளிநாடுகளிலும் கேள்விப்படாதவரே இல்லையெனலாம். ஆனால், அவள் எந்த மன்னனையும் இளவரசனையும் மணந்துகொள்ள மறுத்து வந்தாள். கடைசியாக, அரசர், ஒரு நாள், தமக்குத் தெரிந்தும் தெரியாமலும் இருந்த அரசர்கள், இளவரசர்கள், பிரபுக்கள், சீமான்கள் பலரையும் தமது சபைக்கு வரும்படி ஏற்பாடு செய்து, இளவரசி அவர்கள் அனைவரையும் பார்த்துத் தனக்குகந்தவரைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள விரும்பினார். விருந்தினர் அனைவரும் காலை உணவுண்ட பின்னர், அரண்மனையை ஒட்டியிருந்த புற்றரையில் வரிசை வரிசையாக நின்றனர். இளவரசி அவர்களுக்கு முன்னால் நடந்து சென்றாள். ஒவ்வொருவரையும் அவள் பார்த்துப் பார்த்துக் கழித்துக்கொண்டே வந்தாள். ஒருவர் தடித்திருந்தார்: “இவர் பீப்பாய், வேண்டா !” என்றாள், இளவரசி. மற்றொருவர் மெல்லிய உடலுடன் நெட்டையா யிருந்தார் : “இவர் நெட்டைக் கொக்கு, தேவையில்லை!” என்றாள். வெள்ளை முகத்துடன் இருந்த ஒருவரைக் கவனித்து, “செத்தவன் முகம் போல் வெளிறியிருக்கிறது இவர் முகம்!” என்றாள். சிவந்த கன்னங்களுடன் விளங்கிய ஒருவரை, “இவர் சேவற்கொண்டை! என்று அவள் ஏளனம் செய்தாள். இவ்வாறு பலரையும் பழித்து ஒதுக்கிக் கொண்டே சென்றாள். இறுதியில் அவள் ஓர் இளைஞனைக் கண்டு சற்றே நின்றாள். அவன் நல்ல உடலமைப்பும் அழகும் பெற்றிருந்தான். அவனிடம் என்ன குறை காணலாமென்று இளவரசி யோசித்துக்கொண் டிருந்தாள். அவன் நேர்த்தியான மீசையும் சிறு தாடியும் வைத்திருந்ததைக் கண்டு அவள், “தாடிக்காரர் எனக்கு வேண்டா!” என்றாள்.

ஆகவே, வந்திருந்தவர் அனைவரும் திரும்பிச் சென்று விட்டனர். அரசருக்கு வருத்தம் தாங்க முடியவில்லை. அவர் மகளை அழைத்து, “நாளைக் காலையில், முதலில் எந்தப் பிச்சைக்காரன் அல்லது இராப்பாடி அரண்மனைப்பக்கம் வந்தாலும், அவனுக்கே உன்னைத் திருமணம் செய்து வைக்கப் போகிறேன்!” என்று அறிவித்தார்.

ilavarasiமறுநாள் சூரியன் உதிக்குமுன்பே, வாயிலில் இசைக் குரல் கேட்டது. உடல் முழுதும் கந்தல் துணிகள், பிடரிவரை படர்ந்து தொங்கிக்கொண்டிருந்த தலைமயிர், முகமனைத்தும் சிவப்புத் தாடியும் மீசையும் கொண்டு காட்சியளித்தான் ஒரு பிச்சைக்காரன். அரசர் உடனே அரண்மனைக் கதவுகளைத் திறக்கும்படி உத்தரவிட்டார். பிச்சைக்காரன் உள்ளே முன் மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டான். உடனே பாதிரியாரும் வரவழைக்கப்பட்டார். இளவரசிக்கும் தாடிக்காரனுக்கும் திருமணம் நடந்தேறியது. அவள் கூவினாள், கதறினாள், உறுமிப் பார்த்தாள், ஒன்றும் பலிக்கவில்லை. அரசர் அவளைப் பொருட்படுத்தவே இல்லை. அவர் மணமகனைப் பார்த்து, “இந்தா, இதோ ஐந்து பவுன்கள் இருக்கின்றன. இவைகளை வாங்கிக் கொண்டு, உன் மனைவி என் கண்முன் நில்லாதபடி உடனே அழைத்துப் போ! இனி மறுபடி நீயோ அவளோ என் கண்ணிலே படக்கூடாது!” என்று வாழ்த்தியனுப்பிவிட்டார்.

பிச்சைக்காரன் தன் நாயகியை அழைத்துக்கொண்டு வெளியே நடந்து சென்றான். அவளுடைய துயரமோ சொல்லுந்தரமன்று. ஆனால், அவள் கணவனுடைய பேச்சிலும் செயலிலும் அன்பும் மரியாதையும் காணப் பட்டன. அவர்கள் ஒரு வனத்தின் வழியாகச் செல்லுகையில், “இது யாருடைய வனம்?” என்று அவள் கேட்டாள். “நேற்றுத் தாடிக்காரர் என்று நீ பெயர் வைத்து அழைத்தாயே அந்த அரசருடையது!” என்றான் பிச்சைக் காரன். பல புற்றரைகள், கழனிகள் முதலியவைகளைப்பற்றி அவள் வினவிய பொழுது. “எல்லாம் அதே மன்னனுடை யவை; அருகிலே அதோ தெரியும் பெரிய நகரும் அவருடையது!” என்று பதில் வந்தது, ‘ஆகா, என்ன முட்டாள் தனம் செய்துவிட்டேன் நான் ! அவர் அழகானவராயும் இருந்தார்! அவரையே கணவராக வரித்தேனில்லையே! என்று அவள் தனக்குள்ளே மெல்லச் சொல்லிக்கொண்டாள். கடைசியாக, அவர்கள் ஒரு குடிசையின் பக்கம் வந்து சேர்ந்தனர். “என்னை ஏன் இங்கே அழைத்துக்கொண்டு வருகிறாய்?” என்று இளவரசி கேட்டாள். “இதுவரை இது என் வீடாக இருந்தது, இனி இது உன் வீடு!” என்று கணவன் கூறினான். அவள் அழத் தொடங்கினாள். ஆனால், களைப்பும் பசியும் அதிகமா யிருந்தமையால், அவள் அவனுடன் உள்ளே சென்றாள்.

அந்தோ! அந்தக் குடிசையில் உணவருந்த மேசை எடுத்துப் போடுவாரில்லை; குளிர் காயும் கணப்பை மூட்டுவாரில்லை. எல்லா வேலைகளையும் இளவரசியே செய்ய வேண்டியிருந்தது. கணப்பு மூட்டவும் உணவு சமைக்கவும் வீட்டைச் சுத்தம் செய்யவும் – எல்லாம் அவளுடைய பொறுப்புகளாயின. மறு நாள் அவள் கணவன் பஞ்சு நூலில் செய்திருந்த முரட்டுத் துணிகளை அவளுக்கு ஆடைகளாகக் கொடுத்தான். தலையில் கூந்தலை மறைத்துக் கட்டிக்கொள்ளவும் அவைகளில் ஒரு துண்டை எடுத்தளித்தான். அவள் வீட்டு வேலைகளை முடித்து விட்டுச் சிறிது நேரம் சும்மா அமர்ந்திருக்கையில், அவன் எங்கிருந்தோ பிரம்புக் கொடிகள் அறுத்து வந்து, அவைகளை இருவருமாகக் கிழித்துக் கூடைகள் முடைய வேண்டுமென்று தெரிவித்தான். எந்த வேலையும் செய்தறியாத அவளுடைய மலர் போன்ற கைகள் பிரம்புகளைக் கிழிக்கும் பொழுது அவைகளில் உதிரம் வடிந்தது. பிறகு, அவன் தன் கிழிந்த துணிகளைத் தைத்து வைக்கும்படி கோரினான். ஊசி அவள் கைவிரல்களிலே பல இடங்களில் குத்திவிட்டது. அவனும் அவளிடம் இரக்கம் கொண்டு, அவளை வேறு வேலை செய்யும்படி ஏவினான். ஒரு கூடையில் மண் பாண்டங்களை நிரப்பி, அதைத் தூக்கிக்கொண்டு சந்தையிலே போய் விற்று வரும்படி சொல்லி அவளை அனுப்பினான். அரசர் மகள் இப்படிப் பானை சட்டிகளைத் தூக்கிச் செல்வது அவமானமாய்த் தான் இருந்தது. மாந்தளிர் போன்ற அவள் மேனிக்கும், தலையிலே சும்மாடு கட்டிக் கூடை சுமப்பதற்கும் நேர்மாறாகவே தோன்றிற்று. ஆனால், அவள் இந்த வேலையையும் செய்து தீர வேண்டியிருந்தது.

அதற்கு மறுநாள் அவளை மீண்டும் சட்டி பானைகளுடன் சந்தைக்கு அனுப்பியதில், அங்கே குடிகாரன் ஒருவன் குழப்பம் செய்ததால், அந்தப் பாண்டங்கள் உடைந்து சிதறிப் போய்விட்டன. ஆகவே, மேற்கொண்டு அவளுக்கு வேறொரு வேலை தேட வேண்டு மென்று பிச்சைக்காரன் யோசித்தான். “சரிதான், என்னுடன் வா! அரண்மனையிலே ஒரு சமையற்காரியை எனக்குத் தெரியும். அவள் மூலம் உனக்கும் ஒரு வேலை வாங்கித் தருகிறேன்!” என்று சொல்லி, அவளை அழைத்துக் கொண்டு சென்றான்.

இளவரசி தன் செருக்கை மீண்டும் அடக்கிக்கொள்ள நேர்ந்தது. அரண்மனைச் சமையலறையில் அவளுக்கு இடைவிடாது வேலை இருந்துகொண்டேயிருந்தது. அங்கு வரும் வேலைக்காரர்கள், வண்டிக்காரர்கள் முதலில் அவளிடம் முறை தவறிப் பேசினார்கள். ஆனால், தலைமைச் சமையற்காரி அவர்களை அதட்டி விரட்டினாள். ஒவ்வொரு நாளும் வேலை முடிந்ததும் இரவில் இளவரசி தன் கணவனுடைய குடிசைக்குத் திரும்பிவிடுவாள். அங்கு செல்லும் பொழுது அவனுக்காகச் சில பண்டங்களைத் தன் சட்டைப்பைகளில் அவள் போட்டுக்கொண்டு செல்வது வழக்கம்.

ஒரு வாரம் கழிந்தது. திடீரென்று அரசனுக்குத் திருமணம் ஏற்பாடாகியிருப்பதாகச் சொல்லப்பட்டது. ஆனால், மணப்பெண் யாரென்பது மட்டும் ஒருவருக்கும் தெரியவில்லை. சமையலறையில் வேலை அதிகமாயிற்று. எண்ணற்ற பண்டங்கள் பணியாரங்களெல்லாம் தயாரிக்கப் பெற்றன. இரவில் வேலைகள் முடிந்த பிறகு சமையற்காரி இளவரசியின் சட்டைப்பைகளில் மிஞ்சியிருந்த பண்டங்களைப் பொட்டலங்களாகக் கட்டித் திணித்து வைத்தாள். பிறகு, “அரண்மனை மண்டபத்திலே அலங்காரங்கள் செய்திருக்கிறார்கள். நாம் அங்கே போய் எட்டிப் பார்த்துவிட்டுப் போவோமே!” என்று அவள் அழைத்தாள். இருவரும் மண்டபத்தின் அருகிலே சென்று பார்த்தனர்.

மண்டபத்திலிருந்து வேகமாக ஓர் ஆண்மகன் வெளியேறி அவர்கள் அண்டையில் வந்து நின்றான். அவனே அரசன்! கம்பீரமான தோற்றம், வீரத்திற்கு அறிகுறியான மீசை, சிறிதளவு தாடி, உயர்ந்த ஆடை ஆபரணங்களுடன், அவன் கண்டோரைக் கவரும்வண்ணம் நின்றான். அவனே, முன்னால் இளவரசியால் ‘தாடிக்காரர்’ என்று ஒதுக்கப்பட்ட அரசன்!

அவன் சமையற்காரியைப் பார்த்து, “உனக்கு உதவியாக வந்துள்ள அழகான புது வேலைக்காரி இங்கே எட்டிப் பார்த்த பிழைக்காக என்னுடன் ஒரு முறை நடனமாட வேண்டும்!” என்று சொன்னான். இளவரசி இசைகிறாளோ இல்லையோ என்றுகூடப் பாராமல், அவன் அவள் காங்களைப் பற்றி இழுத்துக்கொண்டு சென்று பண்டபத்தில் நடனமாடத் தொடங்கினான். வாத்தியக் காரர்கள் வாத்தியங்களை வாசிக்க நடனம் பிரமாதமாக நடந்தது ஆரம்பத்திலேயே இளவரசியின் சட்டைப்பைகளி விருந்த பொட்டலங்கள் ஒவ்வொன்றாக வெளியே வந்து விழுந்தன. அவைகளைப் பார்த்து அங்கே கூடியிருந்தவர்கள் அனைவரும் நகைத்தார்கள். அப்பொழுது அரசன் அவளை இழுத்துக்கொண்டு மண்டபத்தின் வெளிப்புறத்தில் ஒரு தனியிடத்தை நாடினான். அங்கே சென்றதும், “என் அன்பே! என்னைத் தெரியவில்லையா உனக்கு? நான்தான் தாடிக்கார அரசன், நான்தான் உன்னை மணந்துகொண்ட பிச்சைக் காரன், நானேதான் சந்தையில் உன் பாண்டங்களை உடைத்த குடிகாரன்! நான் யாரென்று தெரிந்துதான் உன் தந்தை உன்னை எனக்களித்தார். இவையெல்லாம் உன் இறுமாப்பை ஒழிப்பதற்காக நடந்தன!” என்று அவன் தெரிவித்தான். அந்த நேரத்தில் பலவிதமான உணர்ச்சிகள் அவளை ஆட்டிவைத்தன. பயத்தினால் நடுக்கம் ஒரு பக்கம், அவமானம் ஒரு பக்கம், மற்றொரு புறத்திலே ஆனந்தம்! ஆயினும், எல்லாவற்றினும் காதலே மேலோங்கி நின்றதால், அவள் அவன் மார்பிலே தலையைச் சாய்த்துக்கொண்டு ஒரு குழந்தையைப் போல் அழுதாள். உடனே அரண்மனைப் பணிப்பெண்கள் ஓடி வந்து, அவளை அழைத்துச் சென்று பட்டாடைகள் அணிவித்து, நவரத்தினங்களிழைத்த பூண்களையெல்லாம் புனையச்செய்து, மீண்டும் அழைத்துக் கொண்டு வந்தனர். அந்த நேரத்தில் அவளுடைய தந்தையாகிய அரசரும், அவருடைய இராணியும் அங்கே வந்து சேர்ந்தனர். மேளதாளங்களுடன் இளவரசிக்கும் இளைஞனான தாடி அரசனுக்கும் முறைப்படி விவாகம் நடந்தேறியது. எல்லோரும் இன்பவெள்ளத்தில் ஆழ்ந் திருந்தனர். அத்தகைய கோலாகலமான திருமணத்தை நாம் இனி எங்கே பார்க்கப்போகிறோம்!

– இறுமாப்புள்ள இளவரசி (அயர்லாந்து நாட்டுக்கு கதைகள்), முதற் பதிப்பு: 14-11-1979 (குழந்தைகள் தின வெளியீடு), பழனியப்பா பிரதர்ஸ், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *