சீரும், சிறப்பும், வளமும் நிறைந்த ஒர் ஊர் உண்டு. ஊரின் வட எல்லையிலே பெரிய சிவன் கோயில் ஒன்று. இருக்கின்றது. அந்தக் கோயிலை ஒட்டி கோயிலின் ஒர் அங்கம் போல மடம் ஒன்று அமைந்திருக்கின்றது. அந்த மடத்தைத் தனது இருப்பிடமாகக் கொண்டு பூடகர்ணன் என்ற ஒரு சன்யாசி வாழ்ந்து வந்தான்.
அந்த மடத்திலே ஒரு பக்கமாக இருந்த பெரிய வளையிலே இரண்யகன் என்ற சுண்டெலி தனது பரிவாரங்களுடன் வசித்து வந்தது.
பூடகர்ணன் அன்றாடம் உணவு நேரத்தில் தனது பிச்சைப் பாத்திரத்தைக் கையில் ஏந்தியவாறு பிச்சைக்குப் புறப்படுவான்.
அந்த ஊர் மக்கள் தெய்வ பக்தியுள்ளவர்களாகவும், தரும சிந்தனை மிக்கவர்களாகவும் இருக்கும் காரணத்தால் பூடகர்ணனுக்கு நல்ல சுவையான உணவு வகைகளையும், மற்றும் இனிய கனிவகைகளையும் மனமுவந்து அளிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.
பூடகர்ணன் மடத்திற்குத் திரும்பிய பிறகு தான் பிச்சை மேற்கொண்டு வந்த உணவையும் பிற பண்டங்களையும் வயிறார உண்பான். எஞ்சியிருக்கும் உணவையும் பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் பத்திரப்படுத்தி சுவரின் உயரத்தில் இருந்த ஒரு ஆணியில் அந்தப் பாத்திரத்தை மாட்டி வைப்பான்.
இரவில் சன்யாசி உறங்கிய பிறகு இரண்யகன் என்ற சுண்டெலி அதன் குழுவினரும் வளையை விட்டு வெளிப்பட்டு சுவர் வழியாக மேலேறி பூடகர்ணன் தொங்கவிட்டிருக்கும் பாத்திரத்தில் உள்ள உணவையும், பிற தின்பண்டங்களையும் உண்டு மகிழ்ந்து பசியாற்றி பிறகு இருப்பிடம் திரும்பி வந்துவிடும்.
இவ்வாறு தொடர்ந்து நடந்து வந்தது.
மிச்சப்படுத்தி வைக்கும் உணவுப் பண்டங்கள் காணாமல் போய் விடுவதை பூடகர்ணன் கவனித்தான். அதற்கு இரண்யகன் என்ற சுண்டெலி அதன் பரிவாரத்தினருமே காரணம் என்பதையும் விளங்கிக் கொண்டான்.
அதனால் எங்களை அந்தப் பக்கம் வரவொட்டாமலும், உணவுப் பண்டங்களைத் தின்னாமலும் இருக்கச் செய்வதற்காக என்னென்னவோ முயற்சிகளையெல்லாம் செய்து பார்த்தான்.
பூடகர்ணன் எவ்வளவு சாமர்த்தியமான நடவடிக்கைகளை மேற்கொண்டாலும்; அவற்றை முறியடித்து அவன் மிச்சம் வைக்கும் உணவைத் தின்று நிம்மதியாகக் காலம் கழித்து வந்தது சுண்டெலிகள்.
ஒரு நாள் தவச் சிறப்பு மிக்க முனிவரான பிருகஸ்பதி, தல யாத்திரை செல்லும் வழியில் பூடகர்ணன் மடத்துக்கு வருகை தந்தார்.
பெருந்தவ முனிவரான பிருகஸ்பதி தனது மடத்துக்கு வருகை தந்ததை பெரும் பாக்கியமாகக் கருதிய பூடகர்ணன் அவரைப் பேரானந்தத்துடன் வரவேற்று உபசரித்து சில நாட்கள் அங்கே தங்கி களைப்பாறிச் செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டான்.
பிருகஸ்பதியும் அவன் வேண்டுகோளை ஏற்று தங்க விருப்பம் கொண்டார்.
இருவரும் அன்று இரவு உணவை முடித்துக் கொண்டனர்.