அற்புதச் செடிகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: October 21, 2021
பார்வையிட்டோர்: 9,773 
 

முன்னொரு காலத்தில் ஓர் ஏழைக் கிழவன் இருந்தான். அவனுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உண்டு. மூன்று பேரு மாகச் சேர்ந்து காலையிலிருந்து மாலைவரை மூங்கிலைக் கிழித்து ஒழுங்கு செய்து, கூடை, முறம் முடைவார்கள். அவற்றை விற்றுக் கிடைக்கும் பணத்தைக்கொண்டு அரிசி பருப்பு முதலியவை வாங்குவார்கள். உணவு சமைப்பார்கள். ஆனால் அந்த உணவு மூன்றுபேருக்கும் போதுமான அளவு இருக்காது. அதனால் அவர்கள் இரவிலும், நீண்டநேரம் கூடை, முறம் முடைந்து இன்னும் கொஞ்சம் அதிகமாகப் பணம் சம்பாதிக்க வேண்டிய தாயிற்று.

அந்தக் காலத்திலே விளக்கே கிடையாது. எண்ணெய் தரும் வித்துக்களும் உலகத்தில் இல்லை. அதனால் அவர்கள் விறகுக்கட்டைகளை எரியவிடுவதால் உண்டாகும் வெளிச்சத்தில் தான் வேலை செய்ய வேண்டியிருந்தது. அவ்வாறு ஒவ்வொரு இரவிலும் வேலை செய்வதால் கண் ஒளி மங்கி அவர்கள் கஷ்டப்படவேண்டியிருந்தது. அவர்களைப் போலவே மற்ற ஏழைமக்களும் துன்பப்பட்டனர்.

மேலும் அந்தக் காலத்திலே பருத்திச்செடியே உலகத்தில் இல்லை. அதனால் நூலால் நெய்த துணியும் இல்லை. மக்களெல்லோரும் விலங்குகளின் தோலை இடுப்பில் கட்டிக்கொண்டிருந் தார்கள். அதனால் இரவில் வேலை செய்யும்போது குளிரால் உடம்பு நடுங்கிற்று.

ஒரு நாள் கிழவனும் அவன மக்களும் வழக்கம்போல் இரவில் நெடுநேரம் வேலை செய்து கொண்டிருந்தனர். மங்கிய வெளிச்சத்தில் உற்றுற்றுப் பார்த்து அவர்களுடைய கண்கள் வீங்கிப்போயின; பார்வையும் மங்கிற்று.

“இரவிலே நிலாவும் சூரியனைப்போல நன்றாகப் பிரகாசிக்கக் கூடாதா? அப்படிப் பிரகாசித்தால் நமக்கு நல்ல வெளிச்சமும் கிடைக்கும். குளிரின் தொல்லையும் இருக்காது” என்று மகள் கூறினாள்.

“நிலா எல்லா இரவுகளிலும் ஒரேமாதிரியாக முழுவெளிச் சத்தோடு பிரகாசிக்கக் கூடாதா? அதுவும் இல்லையே! நிலாவிடம் சொல்லி நன்றாகப் பிரகாசிக்கும்படி செய்யவேண்டுமென்று எனக்கு ஆசையாக இருக்கிறது” என்றான் மகன்.

“வெகுதூரத்திலே மேகத்தை முட்டி அதற்கு மேலேயும் உயர்ந்து நிற்கும்படியான ஒரு மலை இருக்கிறதாம். அந்த மலையின் உச்சியிலே வெண்பனிச் சிகரத்திலே ஒரு மகான் இருக்கிறாராம். அவர் நிலா வரும் போதெல்லாம் அதற்குள்ளே புகுந்து விளையாடிவிட்டுத் திரும்புவாராம். அவரைக் கண்டு கேட்டுக்கொண்டால் ஒரு வேளை அவர் நிலாவை நன்றாகப் பிரகாசிக்கும்படி செய்யலாம்” என்று கிழவன் சொன்னான்.

உடனே மகன், “அப்பா, அப்படியானால் நான் இன்றே புறப்பட்டு அவரைச் சந்திக்கப்போகிறேன்” என்று உற்சாகத் தோடு சொல்லிக் கொண்டு எழுந்தான். “மகனே, அந்த வெள்ளிப் பனிமலை வெகுதூரத்தில் இருக்கிறது. அதன் அடி வாரத்திற்குப்போய்ச் சேருவதே மிகவும் கஷ்டம். அதன் உச்சிக்குப் போய்ச் சேருவது என்றால் வழியிலே எத்தனையோ ஆபத்துக்கள் ஏற்படும். அது சுலபமான காரியம் அல்ல” என்று தந்தை எச்சரிக்கை செய்தார்.

“உலகத்திலே மக்களெல்லாம் இரவில் நல்ல வெளிச்ச மில்லாமல் துன்பப்படுகிறார்கள். அவர்களுடைய துன்பத்தைப் போக்குவதற்கு நான். எவ்விதமான கஷ்டத்தையும் அனுபவிக் கத் தயார். இந்த முயற்சியிலே என் உயிர் போவதானாலும் கவலைப்படமாட்டேன். நான் இப்பொழுதே புறப்படுகிறேன். அப்பா, மகிழ்ச்சியோடு என்னை ஆசீர்வாதம் செய்து அனுப்புங்கள்” என்று மகன் ஆர் வத்தோடு சொன்னான், அவனுடைய உற்சாகத்தைக் கண்டு தந்தையும் அவனை ஆசீர்வாதம் செய்து அனுப்பினார்.

மகன் உடனே புறப்பட்டான். எத்தனையோ ஆறுகளை நீந்தி நீந்திக் கடந்தான். வனங்களுக் குள்ளெல்லாம் துணிச்சலோடு புகுந்து சென்றான். வழியிலே எத்தனையோ உயரமான மலைகள் இருந்தன. அவற்றின் மீதெல்லாம் ஏறி இறங்கி வடக்குத் திசையை நோக்கிப் போய்க் கொண்டேயிருந்தான். கடைசியில் வெள்ளிப்பனிமலை தோன்றிற்று. அதன்மேலே ஏறினான். அவன் கால்கள் தேய்ந்துபோயின. பாதங்களில் ரத்தம் பீறிட்டு ஒழுகிற்று. பிறகு அவனால் கால்களை உபயோ கித்து நடக்கவே முடியவில்லை. அவன் கைகளையும் முழங்கால் களையும் தரையில் ஊன்றித் தவழ்ந்து தவழ்ந்து செல்லலானான். கைகளிலும், முழங்கால்களிலும் தோல் உரிந்து ரத்தம் பெருக் கெடுத்தது. அவன் தன் அரையில் கட்டியிருந்த தோலைக் கிழித்துக் கைகளிலும், முழங்கால்களிலும் கட்டிக்கொண்டு மேலும் தவழ்ந்து செல்லத் தொடங்கினான். மேலே ஏறஏற மரஞ்செடிகளே தென்படவில்லை. ஒரே வெளுப்பாகப் பனியே மலையாக நின்றது. அதன் மேலும் அவன் அச்சமில்லாமல் தவழ்ந்து சென்றான். கடுங்குளிர் உடம்பை நடுக்கிற்று. அவன் மனம் தளரவே இல்லை.

இப்படி அவன் விடாமுயற்சியோடு சென்றதன் பயனாகக் கடைசியில் மலை உச்சியிலிருக்கும் மகானைத் தரிசிக்க முடிந்தது. அவருடைய கண்கள் ஏதோ ஒருவித ஒளியோடு ஜொலித்தன. சிறுவன் அவரை அணுகி வணங்கினான்.

“ஐயா, உலகத்திலே மக்களெல்லாம் இரவு நேரங்களிலே வெளிச்சமில்லாமல் துன்பப்படுகிறார்கள். சூரியனைப்போலவே நிலாவும் இரவில் நன்றாகப் பிரகாசித்தால் அத்துன்பமெல்லாம் நீங்கிவிடும். நிலா அப்படிப் பிரகாசிக்கும்படி நீங்கள் தான் செய்ய வேண்டும். உங்களைக் கேட்டுக்கொள்வதற்காகவே நான் மிகுந்த சிரமப்பட்டு இங்கு வந்திருக்கிறேன்” என்றான் பையன்.

பையனுடைய உடம்பெல்லாம் காயம் இருப்பதையும் அவன் மிகவும் இளைத்து மெலிந்திருப்பதையும் அந்த மகான் கூர்ந்து கவனித்தார். பையனுடைய ஆர்வம் அவருக்கு நன் றாகத் தெரிந்தது. ”பையா! உன்னுடைய முயற்சி மிகவும் நல்லதுதான். நான் உனக்காக நிலாவைக் கேட்டுப் பார்க்கிறேன்” என்று சொல்லிவிட்டு நிலா மேலே வருகின்ற சமயம் பார்த்து அதற்குள்ளே புகுந்து மறைந்தார்.

கொஞ்ச நேரத்திலே அவர் மலையுச்சிக்குத் திரும்பி வந்தார். “பையா, நீ விரும்புகிறதைப்போல் நிலாவால் பிரகாசிக்க முடியா தாம். அதற்குச் சூரியனைப்போல அவ்வளவு சக்தி இல்லையாம். எல்லா இரவிலுங்கூட ஒரேமாதிரியாகப் பிரகாசிக்க முடியாதாம். சில இரவுகளில் சமுத்திரத்திற்குப்போய் முகத்தை நன்றாகக் கழுவி, சுத்தம் செய்துகொள்ள வேண்டுமாம். இல்லாவிட்டால் அழுக்குப்படிந்து இப்பொழுதுள்ள ஒளியும் மங்கிப்போகுமாம்” என்று அவர் சொன்னார்.

பையனுடைய முகத்திலே விசனம் படர்ந்தது. “ஐயா, நீங்கள் தான் உலகத்து மக்களுடைய துன்பத்தைப்போக்க ஒரு வழி சொல்லவேண்டும். இரவிலே அவர்களுக்கு நல்ல வெளிச் சம் கிடைக்கவேண்டும்” என்று கெஞ்சிக்கெஞ்சிக் கேட்டான். மகான் சற்று நேரம் யோசனை செய்துவிட்டு, “மக்களுக்கு இரவில் ஒளி கிடைக்கவேண்டுமானால் அதற்கு எண்ணெய் தரும் செடியைப் புதிதாக உலகத்திலே உண்டாக்கவேண்டும். யாராவது ஒரு மனிதன் அவ்விதச் செடியாக மாறுவதற்குத் தயாராக இருந்தால் அந்தச் செடியை உண்டாக்க முடியும். தன்னையே தியாகம் செய்துகொள்ளும் மனிதன் எவனாவது இருக்கிறானா?” என்றார் அந்த மகான்.

உடனே, “நானே தயாராக இருக்கிறேன். என் வாழ்வு பெரிதல்ல. மக்களுடைய துன்பம் நீங்கினால் போதும்” என்று ஆர்வத்தோடு பையன் பதில் சொன்னான். பையனுடைய ஆர்வத்தைக் கண்டு மகிழ்ச்சியடைந்த மகான் அவனிடம் ஒரு முத்தைக் கொடுத்தார். “இந்த முத்தை வாயில் போட்டு விழுங் கினால் நீ எண்ணெய்வித்துச் செடியாக மாறிவிடுவாய்” என்றார் மகான். பையன் கொஞ்சமும் தயக்கமின்றி அந்த முத்தை வாயில் போட்டு விழுங்கினான்.

உடனே அவன் ஆமணக்குச் செடியாக மாறிப் பூத்துக் காய்த்துக் குலுங்கினான்.

வீட்டை விட்டு இப்பையன் புறப்பட்டுவந்து பத்து மாதங் களாயின. அதனால் கிழவனும் அவன் மகளும், “என்ன ஆயிற்றே?” என்று கவலையில் மூழ்கினார்கள். ஒரு நாள் மகள் தன் தந்தையைப் பார்த்து, “அப்பா! நான் அந்த வெள்ளிப் பனிமலைக்குப் போய்ப் பார்த்து வருகிறேன். அந்த மகானைப் பார்த்து உதவிசெய்யும்படி கேட்டுக்கொண்டு முடியுமானால் அண்ணனையும் அழைத்து வருகிறேன்” என்றாள்.

இவ்வாறு கூறித் தந்தையின் அனுமதி பெற்றுக்கொண்டு அவளும் புறப்பட்டாள். அண்ணனைப்போலவே அவளும் மிகுந்த சிரமப்பட்டுக் கடைசியில் வெள்ளிப் பனிமலையின் உச் சிக்குச் சென்று மகானைக் கண்டாள். “ஐயா! இரவிலே நல்ல வெளிச்சமில்லாமல் மக்களெல்லாம் துன்பப்படுகிறார்கள். தயவு செய்து சூரியனைப் போலவே நிலாவை நன்றாகப் பிரகாசிக்கச் சொல்லுங்கள். நீங்கள் சொன்னால் அது நடக்கும்” என்று அவள் பணிவோடு கேட்டுக்கொண்டாள்.

“மகளே, உன்னைப்போலத்தான் முன்பு ஒரு சிறுவன் இங்கே வந்து இதே வரத்தைக் கேட்டான். நானும் நிலாவிடம் வேண்டினேன். ஆனால் நிலாவால் அது முடியாது என்று தெரிந்தது” என்ஜர் அவர்.

“பிறகு என்ன செய்யலாம்? எப்படியாவது எனக்கொரு வழி சொல்லுங்கள்” என்று கண்ணீர் சிந்திக்கொண்டே அந்தப் பெண் கேட்டாள்.

“அதோ பார், அங்கே இருக்கும் ஆமணக்குச் செடியின் விதையிலே எண்ணெய் இருக்கிறது. அதைக்கொண்டு விளக்கு ஏற்ற முடியும். முன்னால் இங்கு வந்த பையன் தான் மக்களின் துன்பத்தைப் போக்க இப்படி ஆமணக்குச் செடியாக மாறியிருக்கிறான்” என்று மகான் தெரிவித்தார். அந்தப் பெண் அந்தச் செடியிடம் சென்று அதைக் கட்டியணைத்துக்கொண்டு, “அண்ணா! நீ நல்ல காரியம் செய்தாய்” என்று கூறி மகிழ்த் தாள். பிறகு மகாளைப் பார்த்துத் தானும் இப்படி ஏதாவது நல்ல காரியம் செய்ய ஆசைப்படுவதாகச் சொன்னாள்,

“நீ பருத்திச் செடியாக மாறத் தயாரா?” என்று கேட்டார் மகான். “தயார்” என்று உடனே பதில் சொன்னாள் அவள். அவளுடைய உற்சாகத்தைக் கண்டு மகிழ்ந்த மகான் அவளிடமும் ஒரு முத்தைத் தந்தார். அதை விழுங்கும்படி அப்பெண் ணிடம் கூறினார். அவளும் உடனே முத்தை விழுங்கினாள்.

அடுத்த வினாடியில் அவள் பருத்திச்செடியாக மாறிப் பூத்துக் காய்த்து விளங்கினாள்.

மகள் புறப்பட்டுச் சென்று பத்து மாதம் ஆகியதைக் கிழவன் அறிந்து அவனும் வெள்ளிப் பனிமலையை நோக்கி நடந்தான். அவனும் பல துன்பங்களை அனுபவித்தாலும் மனம் தளராமல் மலையின் உச்சியை அடைந்தான். மகானைக் கண்டு வணங்கினான். தன் மகனும் மகளும் அங்கு வந்து மகானை வேண்டியதையும், பிறகு அவர்கள் ஆமணக்குச்செடியாகவும், பருத்திச்செடியாகவும் மகிழ்ச்சியோடு மாறியதையும் மகா னிடமிருந்து தெரிந்துகொண்டான்.

“ஐயா, நானும் உலகத்துக்காக ஏதாவது நல்லது செய்ய ஆசைப்படுகிறேன். எனக்கும் ஒரு முத்துக் கொடுங்கள்” என்று கேட்டுக் கொண்டான். அவனைப் பார்த்து, “என்னிடம் இனி முத்து ஒன்றும் இல்லை. அது அவசியமும் இல்லை. நீ வேறு வகையில் உலகத்துக்கு நல்ல காரியம் செய்யலாம். இந்த ஆமணக்கு விதைகளையும், பருத்தி விதைகளையும் எடுத்துச் சென்று உலகத்திலேயே பல இடங்களில் முளைக்க வை. அவற்றின் உதவியால் மக்களுக்கு விளக்கும், நல்ல ஆடையும் கிடைக்கும்” என்று மகான் மொழிந்தார்.

அவர் கூறியவாறே விதைகளையெடுத்துக் கொண்டு அவரை வணங்கி விட்டுத் திரும்பினான் கிழவன். பல இடங்களிலே விதைகளைப் போட்டுச் செடிகளை வளர்க்க ஏற்பாடுசெய்தான்.

அன்று முதல் மக்களுக்கு இரவிலே எண்ணெய் விளக்கின் உதவியால் நல்ல வெளிச்சமும் உடம்பைக் குளிரிலிருந்து காப்பாற்றிக்கொள்ளப் பருத்தியின் உதவியால் வெது வெதுப்பான ஆடைகளும் கிடைத்தன.

– தம்பியின் திறமை (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: 14-11-63, பழனியப்பா பழனியப்பா பிரதர்ஸ், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *