அறிவுமதியின் திட்டம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: January 19, 2012
பார்வையிட்டோர்: 7,045 
 
 

ஓர் ஊரில் துணி வெளுக்கும் தொழிலைச் செய்து வந்தாள் ஒருத்தி. அவளுக்கு மூன்று மகள்கள், வான்மதி, மதுமதி, அறிவுமதி இருந்தனர். அனைவருமே அழகிகளாக விளங்கினார்கள்.

எவ்வளவு உழைத்தும் அவர்களால் வயிறார உண்ண முடியவில்லை. வறுமையில் வாடினார்கள். ஒருநாள், அவர்கள் வீட்டிற்கு அழகான இளைஞன் ஒருவன் வந்தான்.

அம்மா! நான் பக்கத்து ஊரைச் சேர்ந்தவன். செல்வனாக இருக்கிறேன். என் வீட்டு வேலைகளைச் செய்ய ஒரு பெண் தேவை. உங்கள் மகள்களில் ஒருத்தியை அனுப்பி வையுங்கள். நான் அவளை அரசி போல வைத்துக் கொள்கிறேன், என்று இனிமையாகப் பேசினான்.

இதைக் கேட்ட மூத்த மகள் வான்மதி, அம்மா! இங்கு நாம் வறுமையில் வாடுகிறோம், நான் இவருடன் செல்கிறேன், என்றாள்.

அவர் சொல்கின்ற வேலைகளைச் செய்து நல்ல பெயர் வாங்கு, என்று அவளை அனுப்பி வைத்தாள் தாய்.

அவளை அழைத்துக்கொண்டு நடந்தான் இளைஞன். நீண்ட தூரம் சென்ற பிறகு அவர்கள் ஒரு மாளிகையை அடைந்தார்கள்.

இதுதான் என் மாளிகை. இங்கு நீ உன் விருப்பம் போல இருக்கலாம் எந்த அறையை வேண்டுமானாலும் திறந்து பார்க்கலாம். ஆனால் அந்தக் கடைசி அறையை மட்டும் நீ திறந்து பார்க்கக் கூடாது. என் கட்டளையை நீ மீறினால் நான் பொல்லாதவனாகி விடுவேன். எல்லா அறைகளின் சாவியும் இங்கே உள்ளது, என்றான் அவன்.

நான் ஏன் உங்கள் கட்டளையை மீறப் போகிறேன். அந்த அறையைத் திறந்து பார்க்க மாட்டேன், என்றாள் வான்மதி.

தோட்டத்தில் இருந்த ஒரு சிவப்பு ரோசாப் பூவைப் பறித்து வந்தான் அவன். அதை அவள் தலையில் சூடினான்.

http://www.martindriscoll.com/Images…sher-Woman.jpg

நான் வெளியே செல்கிறேன். எப்பொழுது வருவேன் என்று எனக்குத் தெரியாது. அந்த அறையை மட்டும் திறக்காதே, என்று சொல்லிவிட்டுச் சென்றான்.

ஒவ்வொரு அறையாகப் பார்த்துக் கொண்டே வந்தாள் வான்மதி. ஒவ்வொரு அறையிலும் விலை உயர்ந்த பொருள்கள் இருந்தன. ஒரு அறையில் நவரத்தினங்களும் பொற்காசுகளும் கொட்டிக் கிடந்தன.

எவ்வளவு நல்ல வாழ்க்கை கிடைத்து இருக்கிறது? நாம் இங்கேயே மகிழ்ச்சியாக இருக்கலாம், என்று நினைத்தாள் அவள்.

பூட்டி இருந்த கடைசி அறை அவள் கண்ணில் பட்டது. அவளால் ஆர்வத்தை அடக்க முடியவில்லை.

அந்த அறைக்குள் அப்படி என்னதான் இருக்கும்? ஏன் நம்மைப் பார்க்க வேண்டாம் என்று தடுக்கிறார்? மெல்லத் திறந்து பார்த்துவிட்டு உடனே மூடி விடுவோம். கண்டிப்பாக அவருக்குத் தெரிய வாய்ப்பு இல்லை என்று நினைத்தாள் வான்மதி.

சாவியைப் போட்டு மெதுவாக அந்தக் கதவைத் திறந்தாள். உள்ளிருந்து அழுகுரலும் ஓலமும் கேட்டன. உள்ளே நுழைந்தாள்.

அங்கே கொடிய தீயில் பல உயிர்கள் வெந்து கொண்டிருந்தன. காப்பாற்றுங்கள்! காப்பாற்றுங்கள்! என்று அவை கெஞ்சின.

தன்னை அழைத்து வந்திருப்பது பிசாசு என்ற உண்மை அவளுக்குப் புரிந்தது. அவசரமாக அந்தக் கதவை மூடிப் பூட்டுப் போட்டாள்.

எதுவுமே நடவாதது போலத் தன் அறைக்குள் வந்து அமர்ந்தாள் அவள். அந்தத் தீயின் வெப்பத்தால் அவள் தலையில் இருந்த பூ வாடி விட்டது. இதை அவள் கவனிக்கவில்லை.

மீண்டும் அங்கு வந்த இளைஞன் அவளை மேலும் கீழும் பார்த்தான்.

என் கட்டளையை மீறி விட்டாய். அந்த அறையைத் திறந்து பார்த்து இருக்கிறாய். உனக்கு என்ன தண்டனை தெரியுமா? என்று கோபத்துடன் கத்தினான் அவன்.

நான் திறக்கவில்லை, என்று நடுங்கிக் கொண்டே சொன்னாள் வான்மதி.

உன் தலையில் உள்ள ரோசாப் பூ எப்படி வாடியது? என்னிடமா பொய் சொல்கிறாய்? நீயும் அந்தத் தீயில் கிடந்து புலம்ப வேண்டியதுதான், என்று அவளை இழுத்துக் கொண்டு சென்றான் அவன்.

என்னை மன்னித்து விடுங்கள், இனி மேல் நான் இப்படிச் செய்ய மாட்டேன், என்று கதறினாள் வான்மதி.

அவளை அந்தத் தீயில் தள்ளிவிட்டு அறையைப் பூட்டினான் அவன்.

துணி வெளுப்பவளின் வீட்டிற்கு மீண்டும் வந்தான் அவன், அம்மா! உங்கள் பெண் எங்கள் வீட்டில் நன்றாக இருக்கிறாள். அங்கே அவளுக்கு வேலை அதிகமாக இருக்கிறது. தங்கையையும் அழைத்து வரச்சொன்னாள். அதனால்தான் வந்தேன், என்றான்.

மதுமதியும் அவனுடன் புறப்பட்டான்.

இருவரும் மாளிகையை அடைந்தார்கள். வழக்கம் போல அவளுக்கும் சிவப்பு ரோசாப் பூவை சூடினான் அவன்.

எந்தக் காரணத்தை முன்னிட்டும் கடைசி அறையை மட்டும் திறக்காதே, என்று சொல்லிவிட்டுச் சென்றான் அவன். ஆர்வத்தை அடக்க முடியாத அவளும் அந்த அறையைத் திறந்தாள். திரும்பிவந்த அவன் மதுமதியையும் தீக்குள் தள்ளினான்.

துணிவெளுப்பவளின் வீட்டிற்கு மூன்றாம் முறையாக வந்தான் அவன், உங்கள் இரு மகள்களும் என் மாளிகையில் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள், அவளுக்கு அங்கே வேலை அதிகமாக இருக்கிறதாம். கடைசித் தங்கை அறிவுமதியையும் அழைத்து வரச் சொன்னார்கள். அதற்காகத்தான் வந்தேன், என்றான் அவன்.

என் மகள்கள் மகிழ்ச்சியாக இருந்தால் அதுவே எனக்குப் போதும் இவளையும் அழைத்துச் செல், என்றாள் தாய்.

கடைசி மகளை அறிவுமதியையும் அழைத்து கொண்டு அவன் புறப்பட்டான், இருவரும் மாளிகையை அடைந்தனர்.

வழக்கம் போல அவள் தலையிலும் ரோசாப் பூவை அணிவித்தான் அவன். என் அக்கா ரெண்டு பேரும் எங்கே? என்று கேட்டாள் அறிவுமதி.

வேறு வேலையாக வெளியே சென்று இருக்கிறார்கள். வர ஒரு வாரம் ஆகும். நீ இந்த மாளிகையில் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். ஆனால் கடைசி அறையை மட்டும் திறக்கக் கூடாது மீறினால் உனக்குக் கடுந்தண்டனை கிடைக்கும். நான் வெளியே செல்கிறேன். திரும்பி வர நேரம் ஆகும், என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டான் அவன்.

அக்கா இருவரையும் காணவில்லை, வந்தவுடன் தலையில் ரோசாப் பூவைச் சூடுகிறான். ஒரு அறைக்கு மட்டும் செல்ல வேண்டாம் என்கிறான். ஏதோ சூழ்ச்சி நடக்கிறது, என்பது அவளுக்குப் புரிந்தது.

அறிவுக்கூர்மை, உடைய அவள் சிந்தனையில் ஆழ்ந்தாள். திறக்கக் கூடாது என்று தடுத்த அறைக்கும் ரோசாப் பூவிற்கும் ஏதோ தொடர்பு உள்ளது, என்று அவளுக்குத் தோன்றியது.

தலையில் இருந்த ரோசாப் பூவை எடுத்தாள். அருகில் இருந்த கிண்ணத்தில் அதை வைத்து மூடினாள்.

மெதுவாக நடந்து அந்த அறைக் கதவைத் திறந்தாள். உள்ளே தீயில் பலர் துடித்துக் கொண்டிருப்பது தெரிந்தது. அவர்களில் தன் இரண்டு அக்காவும் இருப்பதைக் கண்டு திகைத்தாள்.

எங்களால் இந்த வேதனையைத் தாங்க முடியவில்லை. தங்கையே! நீதான் எப்படியாவது எங்களைக் காப்பாற்ற வேண்டும். புத்திசாலியாகிய நீ ரோசாப் பூவை சூடாமலேயே வந்து இருக்கிறாய். நீ வந்திருப்பது அந்தப் பிசாசிற்குத் தெரிய வாய்ப்பே இல்லை, என்றாள் வான்மதி.

கவலைப் படாதீர்கள் நான் உங்களை எப்படியும் காப்பாற்றுகிறேன், என்று வெளியே சென்றாள் அவள். பழையபடி அந்த அறையைப் பூட்டினாள். ரோசாப் பூவை எடுத்துத் தலையில் மீண்டும் அணிந்து கொண்டாள்.

http://images.easyart.com/i/prints/r…lis-306917.jpg

இரவு நேரம், அவன் வந்தான். ரோசாப் பூ வாடாததைக் கண்டான். அவள் அந்த அறைக்குள் நுழைந்திருக்க மாட்டாள் என்று நினைத்தாள்.

நாள்தோறும் அவள் தலையில் புதிய ரோசாப் பூவை சூடிவிட்டுச் சென்றான் அவன். தன் இரண்டு அக்காவையும் எப்படித் தப்பிக்க வைப்பது என்று சிந்தனையில் ஆழ்ந்தாள் அவள். நான்கு நாட்கள் சென்றன.

இளைஞனைப் பார்த்து அறிவுமதி, இங்கே எனக்கு ஏராளமான வேலை இருக்கிறது. துணி துவைக்க நேரமே இல்லை. அழுக்குத் துணிகளை எல்லாம் பெரிய மூட்டையாகக் கட்டி வைத்து இருக்கிறேன். என் அம்மாவின் வீட்டில் தந்துவிட்டு வாருங்கள், என்றாள்.

நாளை மாலை அந்த மூட்டையைத் தூக்கிச் செல்கிறேன், என்றான் அவன்.
பொழுது விடிந்தது. அவன் வழக்கம் போல வெளியே சென்றான். அறைக்குள் சென்ற அவள் மூத்த அக்கா வான்மதியை வெளியே கொண்டு வந்தாள்.

நீ நம் வீட்டிற்குச் செல்ல ஏற்பாடு செய்துள்ளேன். நான் சொல்கின்றபடி நடந்து கொள். எல்லோரும் தப்பிக்கலாம் என்றாள் அறிவுமதி.

பெரிய சாக்கிற்குள் அக்காவை நுழைத்தாள் அவள். சுற்றிலும் அழுக்குத் துணிகளை வைத்தாள். சாக்கை இறுகக் கட்டினாள்.

இளைஞன் வந்தான். அவனிடம் அவள், அழுக்குத் துணி மூட்டை தயாராக உள்ளது. அதைத் தூக்கிச் செல்லுங்கள். வழியில் எங்கும் மூட்டையை வைக்கக் கூடாது. வைத்தால் எனக்குத் தெரிந்து விடும். என்னை ஏமாற்ற முடியாது. மூட்டையைக் கீழே வைத்தால் வைக்காதே என்று குரல் கொடுப்பேன்.

இருட்டுவதற்குள் இந்த மூட்டையை என் அம்மாவிடம் சேர்த்து விடுங்கள். அவரிடம் அடுத்த வாரம் வேறு அழுக்கு மூட்டை கொண்டு வருகிறேன். இதைத் துவைத்து வையுங்கள். அப்பொழுது எடுத்துச் செல்கிறேன் என்று சொல்லுங்கள். அங்கே அதிக நேரம் தங்காதீர்கள் உடனே புறப்பட்டு விடுங்கள் என்றாள் அறிவுமதி.

சூழ்ச்சியை அறியாத அவன் மூட்டையை தூக்கிக் கொண்டு புறப்பட்டான். மூட்டை மிகவும் கனமாக இருந்தது. அழுக்கு மூட்டையா இவ்வளவு கனம்? கீழே வைத்து விட்டு இளைப்பாறலாம் என்று நினைத்தான் அவன்.
தோளில் இருந்து மூட்டையைக் கீழே இறக்க முயற்சி செய்தான்.

அதற்குள் இருந்தவள், நான் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறேன். மூட்டையைக் கீழே வைக்காதே, என்று குரல் கொடுத்தாள். மாளிகைக்குள் இருக்கும் பெண்தான் பேசுகிறாள். எவ்வளவு தொலைவில் நடப்பதும் அவள் கண்களுக்குத் தெரிகிறதே? இறக்கி வைத்தால் நம்மைப் பற்றித் தப்பாக நினைப்பாளே, என்று நினைத்தான் அவன். மூட்டையைத் தூக்கிக் கொண்டே நடந்தான்.

ஒரு வழியாக வீட்டை அடைந்தான் அவன். கதவைத் தட்டி, அம்மா! உங்கள் பெண் அழுக்குத் துணி மூட்டையை அனுப்பி இருக்கிறாள். நன்கு துவைத்து வையுங்கள். அடுத்த வாரம் வேறு துணி மூட்டையுடன் வருகிறேன். அப்பொழுது இதை எடுத்துச் செல்கிறேன். எனக்குத் தங்க நேரம் இல்லை. உடனே வீடு திரும்ப வேண்டும், என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டான் அவன்.

அடுத்த வாரம், தன் இரண்டாவது அக்கா மதுமதியை மூட்டைக்குள் வைத்துக் கட்டினாள் அவள்.

வழக்கம் போல அவளையும் தூக்கிச் சென்றான் அவன். வழியில் மூட்டையை வைக்க அவன் முயற்சி செய்தான். மூட்டையைக் கீழே வைக்காதே நான் பார்த்துக் கொண்டு இருக்கிறேன், என்ற குரல் கேட்டது. எப்படியோ ஒரு வழியாக அவள் வீட்டை அடைந்தான். வீட்டு வாசலிலேயே அவனுக்காகத் துணி வெளுப்பவள் காத்திருந்தாள்.

அவளைப் பார்த்து அவன், அம்மா! உன் மகள் அழுக்குத் துணி அனுப்பி இருக்கிறாள். ஒரு வாரத்திற்குள் எப்படித்தான் இவ்வளவு துணி சேர்கின்றதோ தெரியவில்லை. இதையும் வெளுத்து வையுங்கள். அடுத்த முறை வரும்போது இரண்டு மூட்டை துணிகளையும் எடுத்துச் செல்கிறேன். இப்பொழுது மிகவும் களைப்பாக இருக்கிறேன். நான் வருகிறேன், என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டான் அவன்.

தன் இரண்டாவது மகளும் வந்து சேர்ந்ததை எண்ணி மகிழ்ந்தாள் அவள். களைப்புடன் மாளிகைக்கு வந்து சேர்ந்தான் அவன். என் வீட்டில் துணி மூட்டையைச் சேர்த்து விட்டீர்களா? என்று கேட்டாள் அவள்.

துணி மூட்டையா அது? என்ன கனம்? என்னால் தூக்கிக் கொண்டு நடக்கவே முடியவில்லை. நான் கீழே வைக்க முயன்றால் போதும். எப்படித்தான் உனக்குத் தெரியுமோ? உடனே நீ கீழே வைக்காதே, என்று குரல் கொடுக்கிறாய். அதைத் தூக்கிச் செல்ல நான் படும் துன்பம் எனக்குத்தான் தெரியும். இனிமேல் அழுக்குத் துணி மூட்டையை நான் எடுத்துச் செல்ல மாட்டேன், என்றான் அவன்.

இன்னும் ஒரே ஒருமுறை மட்டும் எடுத்துச் செல்லுங்கள். அதன் பிறகு நானே இங்கு துவைத்துக் கொள்கிறேன். துணியைக்கூட நீங்கள் அங்கிருந்து கொண்டு வர வேண்டாம். இந்த முறை மூட்டை அதிக கனமாக இருக்கும், என்றாள் அவள்.

இதுதான் கடைசி முறை, இனிமேல் முட்டையைத் தூக்கிச் செல்ல மாட்டேன், என்றான் அவன். பிறகு வெளியே சென்று விட்டான். அந்த மானிகைக்குள் இருந்த விலை உயர்ந்த பொருள்களை எல்லாம் திரட்டினாள் அவள். அவற்றை எல்லாம் சாக்கு மூட்டைக்குள் போட்டாள்.

புறப்படும் நாள் வந்தது. இளைஞனிடம் அவள், எனக்கு உடல் நலம் சரியில்லை. நான் அறைக்குள் படுத்திருப்பேன். என்னை எழுப்ப வேண்டாம். இன்று மட்டும் இருட்டியதும் அந்த மூட்டையை எடுத்துச் செல்லுங்கள். வழியில் எங்கும் கீழே வைக்காதீர்கள். என்னை ஏமாற்ற முயற்சிக்க வேண்டாம். இங்கிருந்தபடியே எங்கும் நடப்பதை என்னால் சொல்ல முடியும், என்றாள் அறிவுமதி.

நீ மூட்டை கட்டி வை. நான் திரும்பி வந்ததும் எடுத்துச் செல்கிறேன், என்று வழக்கம் போல வெளியே புறப்பட்டான் அவன்.

உடனே அவள் தன் படுக்கையில் தலையணைகளை வைத்தாள். மேலே போர்வையைப் போட்டு மூடினாள். சிறிது தூரத்தில் இருந்து படுக்கையைப் பார்த்தாள். யாரோ படுத்திருப்பதைப் போன்று தோன்றியது.

சாக்கு மூட்டைக்குள் நுழைந்தாள் அவள். தன்னைச் சுற்றிப் பல பொருள்களை வைத்தாள். வெளியே ஒரு கையை மட்டும் நீட்டி சாக்கைக் கட்டினாள். பிறகு கையை உள்ளே இழுத்துக் கொண்டாள்.

சிறிது நேரத்தில் இளைஞன் உள்ளே வந்தான். படுக்கையில் அவள்தான் படுத்து இருக்கிறாள் என்று நினைத்தான்.

சாக்கு மூட்டையைத் தூக்கிக் கொண்டு புறப்பட்டான். மூட்டை மிகவும் கனமாக இருந்தது. தள்ளாடிக் கொண்டே நடந்தான் அவன். பாதி தூரம் கூடக் கடக்கவில்லையே, மூட்டையைக் கீழே வைத்து விட்டு இளைப்பாறுவோம் என்று நினைத்தான் அவன், தோளில் இருந்து கீழே இறக்க முயற்சி செய்தான்.

உடனே அறிவுமதி, நான் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். கீழே வைக்காதே, என்று குரல் கொடுத்தாள். அவனும் பலமுறை கீழே வைக்கலாம் என்று நினைத்தான், ஒவ்வொரு முறையும் அவள் குரல் கொடுத்துக் கொண்டே வந்தாள்.

எப்படியோ முயன்று அவர்கள் வீட்டை அடைந்தான் அவன். கடைசி மகளின் வருகைக்காகத் தாய் வெளியேயே காத்திருந்தாள். பெரிய மூட்டையுடன் அவனைப் பார்த்ததும் துணி வெளுப்பவளுக்கு மகிழ்ச்சிதாங்கவில்லை.

மூட்டையை இறக்கி வைத்தான் அவன். அப்பாடா! தொல்லை ஒழிந்தது. இனி மூட்டை தூக்கி வரும் வேலை எனக்கு இல்லை, என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டான் அவன்.

சாக்கை அவிழ்த்தாள் அவள். விலை உயர்ந்த பொருள்களுடன் அறிவுமதி வெளியே வந்தாள்.

மகளைக் கட்டித் தழுவிக் கொண்ட அவள், உள் அறிவுக் கூர்மையால் எல்லோரும் அந்தப் பிசாசிடம் இருந்து தப்பி விட்டோம். நிறைய பொருளும் கொண்டு வந்தாய். இனி நமக்கு வறுமையே இல்லை, என்றாள்.

அம்மா! என் திறமையை அந்தப் பிசாசு இந்நேரம் அறிந்து கொண்டிருக்கும். இனி அது நம் வழிக்கே வராது. கவலை இல்லாமல் நாம் இருக்கலாம், என்றாள் மகள்.

மிகுந்த களைப்புடன் தன் மாளிகையை அடைந்தான் அவன். நீ சொன்னபடியே மூட்டையைச் சேர்த்து விட்டேன். மூட்டையா அது? என்ன கனம்? என்று படுக்கையைப் பார்த்துப் பேசினான்.

படுக்கையில் எந்த அசைவும் இல்லை. போர்வையை நீக்கிப் பார்த்தான். தலையணைதான் இருந்தது. பரபரப்புடன் சென்று கடைசி அறையைத் திறந்தான். அந்தப் பெண்கள் இருவரையும் காணவில்லை.

மூவரும் எப்படித் தப்பித்து இருப்பார்கள் என்று குழம்பினான் அவன். மெல்ல மெல்ல அவனுக்கு உண்மை விளங்கியது.

நானே ஒவ்வொருவராகச் சுமந்து சென்று அவர்கள் வீட்டில் விட்டு வந்திருக்கிறேன். நன்றாக ஏமாந்து விட்டேன், என்று வருந்தினான் அவன். நம் உண்மை உருவத்தை அவர்கள் புரிந்து கொண்டார்கள். இனி அவர்களை ஏமாற்ற முடியாது, அங்கே சென்றால் ஊர்மக்கள் தன்னை சிறையில் அடைக்கலாம் என்று நினைத்தான் அவன், அவர்கள் வீட்டிற்குச் செல்லும் எண்ணத்தையே விட்டு விட்டான்.

புத்திசாலி அறிவுமதியால், செல்வ செழிப்போடு வாழ்ந்தார்கள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *