கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: June 26, 2023
பார்வையிட்டோர்: 3,096 
 
 

(1957ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மாலை நேரம். மணி ஐந்து. பள்ளிக்கூடம் விடப்பட்டுவிட்டது என்பதற்கு அறிகுறியாக பையன்கள் சாரை சாரையாகச் சென்று கொண் டிருந்தனர்.

அந்தத் தெருவின் கோடியிலே ஒரு வீடு. நடந்து கொண்டிருந்த பையன்கள் அந்த வீட்டின் முன்னால் வந்ததும் நின்று விட்டார்கள். தோளிலே புத்தகப் பை தொங்க ஒரு பையன் அந்த வீட்டிற்குள் ஓடினான். போன வேகத்தோடு திரும்பியும் வந்தான்..

“டேய், இன்னும் ‘சார்’ வரவில்லையடா!” என்றான்.

“அப்படியா? இன்னும் வரவில்லையா? அப்படி யானால் நாளைக்கு வந்து பார்த்துக்கொள்ளலாம்!” என்று அந்த மற்ற பையன்கள் சொல்லவில்லை. வீட்டிலே காத்திருக்கும் ‘காபி’யையும், பலகாரத்தையும் எண்ணி ஓடிவிடவில்லை. அவர்களில் ஒருவன் கூட அந்த இடத்தைவிட்டு நகரவில்லை. காத்துக் கொண்டே நின்றார்கள்.

“டேய் , அதோ சார் வந்துவிட்டாரடா,” என்று ஒரு பையன் கத்தினான். மறுகணம் எல்லாப் பையன் களுடைய கண்களும் அந்தத் தெருவின் முனையை ஆவலுடன் நோக்கின. அங்கே வந்து கொண்டிருந் தார் அந்தப் பெயர் தெரியாத சார்’. ஆமாம் ; அவருடைய பெயர் என்னவென்று அந்தப் பையன் களில் அநேகருக்குத் தெரியாது . “சார்” – இதுதான் அவருக்கு அவர்கள் சூட்டிய செல்லப் பெயர்!

சார், வீட்டை நெருங்கிவிட்டார். அவருடைய கையில் இரண்டு புதுப் புத்தகங்கள் இருந்தன. அவர் வீட்டுக்குள் நுழைந்தார். அவருடைய கையைப் பிடித்துத் தொங்கிக்கொண்டே பையன்களும் உள்ளே புகுந்தார்கள்.

அவர் உள்ளே சென்றதும் தன் சட்டைகளைக் கூட கழற்றவில்லை. கழற்றும்படி விட்டால்தானே, அந்தச் ‘சிறுவர் படை’!

“சார், நேற்று நீங்கள் கொடுத்த இந்த இரண்டு புத்தகங்களையும் ஓர் எழுத்து கூட விடாமல் படித்து முடித்துவிட்டேன், சார்!”

“சார், நீங்கள் சொல்லியது போலவே புத்தகங் களைக் கொஞ்சம்கூடக் கசங்காமல் படித்துவிட்டேன், சார்!”

“சார், அந்தக் கதையை என் பாட்டியிடம் கூட படித்துக் காட்டினேன் சார். ‘ரொம்ப ரொம்ப அற்புதம் என்று சொன்னார்கள், சார்!”

“உங்களுக்காக எவ்வளவு நேரமா காத்துக் கொண்டேயிருந்தோம் ; தெரியுமா சார்? ஏன் சார் இவ்வளவு நேரம்?”

இம்மாதிரியான கேள்விகள் கணக்கில்லாமல் கிளம்பி அவருடைய காதுகளில் நுழைந்தன. அவர் எதற்கென்று பதில் சொல்வார்? மலர்ந்த முகத்துடன் அங்கிருந்த அலமாரியைத் திறந்தார். அதிலே ஏராளமான குழந்தைப் புத்தகங்கள் அழகாக – வரிசை வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அவர் அதிலிருந்து சில புத்தகங்களை எடுத்தார். சூழ்ந்து நின்ற பையன்களிடம் கொடுத்தார். அவர்கள் திருப்பிக் கொடுத்த புத்தகங்களை வாங்கி அலமாரியில் வைத்துக் கொண்டார்.

அப்படியானால் அது ஒரு புத்தக சாலையோ? ஆமாம்; புத்தக சாலை தான். குழந்தை புத்தக சாலை’ என்பதுதான் அதன் பெயர். அதில் சேருவதற்கு சந்தா இல்லை ; சட்ட திட்டங்கள் இல்லை. யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் சேரலாம்.

அவர் குழந்தைகளுக்காக வெளிவரும் எல்லா வற்றையும் விலைகொடுத்து வாங்குவார். தன்னுடைய சொந்தப் பணத்திலேயே வாங்குவார். பணம் கொடுத்து புத்தகம் வாங்கிப் படிக்க முடியாத ஏழைப் பிள்ளை களுக்கு மட்டுமல்ல ; ‘தேவை’ என்று வந்த எல்லாப் பிள்ளைகளுக்குமே இலவசமாகக் கொடுப்பார். அவர் கொடுக்கும் ஒவ்வொரு புத்தகத்திலும் குழந்தை புத்தக சாலை’ என்ற எழுத்துக்கள் காணப்படும்.

புத்தகங்களை வாங்கிக்கொண்ட பையன்கள் ஒவ்வொருவராக நகர்ந்தனர். கடைசியாக ஒரே ஒரு பையன் நின்று கொண்டிருந்தான். பயந்து கொண் டிருந்தான், அந்தப் புதுப் பையன்.

அவர் அவனைப் பார்த்தார். ‘என்ன தம்பி ; என்ன வேண்டும்?” என்று அன்பொழுகக் கேட்டார். அவன் பேசவில்லை; நின்றான்.

“என்ன தம்பி வேண்டும்? இதற்கெல்லாமா பயப் படுவது? ஐயோ, தம்பியே! என்ன வேண்டும் என்று தாராளமாகக் கேள்!” என்றார் அவர், மறுபடியும்!

“சார் சார் எனக்குப் புத்தகம் வேணும், சார்!” என்று தயங்கிக் கொண்டே கேட்டான் அச் சிறுவன்.

உடனே அவர் கலகல வெனச் சிரித்தார். “அப்பாடா ! இதற்குத்தானா , புலியைக் கண்டு விட்ட வனைப்போல் இப்படி பயந்து சாகிறாய்?” என்றார். பிறகு தன்னுடைய கையிலிருந்த புதுப் புத்தகங்கள் இரண்டிலும் ‘ குழந்தை புத்தக சாலை’ என்று அழகாக எழுதினார். எழுதிவிட்டு அவனிடம் அவைகளைக் கொடுத்தார். அவன் அவற்றை ஆனந்தத்துடன் பெற்றுக்கொண்டான்.

“தம்பீ , உன் பெயரென்ன?” என்று அவர் கேட்டார்.

“என் பெயர் மணி, சார். எட்டாவது படிக் கிறேன் , சார். நன்றாகப் படிப்பேன், சார். என் மாமா கூட என்னை ‘நல்ல பையன், நல்ல பையன்’ என்று அடிக்கடி சொல்லுவார், சார்!” என்று தன்னைத்தானே அறிமுகப்படுத்திக் கொண்டான் அந்த மணி.

“ஓ, நீ மிகவும் நல்ல பையன் தான் ; உன் மாமா பொய்யா சொல்லப் போகிறார்!” என்று சிரித்துக் கொண்டே சொன்னார் அவர்.

“சரி, சார். நான் போய் வருகிறேன் , சார். இரவிற்குள் இந்த இரண்டையும் படித்து விடுவேன், சார். நாளைக்குத் திருப்பித் தந்து விடுவேன், சார்,” என்று அவரிடம் விடை பெற்றுக்கொண்டான், சிறுவன். பின் நகர்ந்தான்.

அதே நேரத்தில், தளர்ந்த நடை – கலைந்த தலை – கலங்கிய கண்கள் — இந்தக் கோலத்தோடு ஒரு சிறுமி உள்ளே நுழைந்தாள். அழுது அழுது அவள் முகம் வீங்கிப்போயிருந்தது. அவளைக் கண்டதும் அங்கேயே நின்றான் ; கவனித்தான்.

சார் அவளைப் பார்த்தார் , “ஏனம்மா அழுகிறாய்?” என்று மிகப் பரிவுடன் கேட்டார்.

“சார், நேற்று நீங்கள் தந்தீர்களே ‘ நல்ல நண்பர்கள் கதைப் புத்தகம், அதை என் தங்கை எடுத்துக் கிழித்துவிட்டாள், சார்! – அதற்காக என் அப்பா…… என்னை அடித்தார், சார்!” என்றாள் அந்தப் பெண் விம்மிக்கொண்டே.

“அடடா! இதற்காகவா அழுகிறாய்? அழாதேம்மா; நீ வேண்டுமென்றே கிழிக்கவில்லையே! தவறுதலாக நேர்ந்துவிட்டது ; யார் என்ன செய்ய முடியும்? அழாதே ; கண்ணைத் துடை!” என்று ஆறுதல் சொன்னார் அவர்.

“அப்பா என்னை அடித்துவிட்டு , ‘புத்தகத்தைக் கிழிக்கத்தானா அவர் இலவசமாகத் தருகிறார்? அவரிடம் போய் அதன் விலை என்ன என்று கேட்டுவிட்டுவா, பணத்தைக் கொடுத்து விடலாம்,’ என்றார். புத்தகத்தின் விலை என்ன சார்?” என்று கேட்டாள், அச்சிறுமி.

“அதெல்லாம் ஒன்றும் வேண்டாம் என்று அப்பாவிடம் சொல்லி விடு. இதற்காக அழலாமா? இதோ பார், ‘ தங்க நகரம்’ என்று ஒரு புத்தகம்.

அதை நீ கூட நேற்றுக் கேட்டாயல்லவா? இப்போது எடுத்துக்கொண்டு போ!” என்று சொன்னார் அவர். புத்தகத்தை அவளிடம் கொடுத்தார். அதை வாங்கிக் கொண்டு அவள் சென்றுவிட்டாள். நடந்தவை அனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்த மணியும் நகர்ந்தான்.

***

கையிலே புத்தகங்கள் பளபளக்க – முகத்திலே மகிழ்ச்சி தாண்டவமாட வீட்டிற்குள் நுழைந்தான் மணி.

“டேய் , கையிலே ஏதடா புத்தகம் ? புத்தகம் வாங்க ஏதடா பணம்?” என்று கோபத்துடன் கேட்டுக் கொண்டே எதிரில் வந்தார் அப்பா. புத்தகம் கிடைத்த கதையை அழகாகச் சொல்லி — அப்பாவின் கோபத்தைத் தணித்துவிட்டு – சமையல் அறையை நோக்கி ஓடினான் மணி. அம்மா தயாராக வைத்திருந்த ‘காபியை ‘மடக், மடக் கென்று குடித்துத் தீர்த்தான்.

மகனின் கையிலிருக்கும் அழகான, புதிய புத்தகங்களைக் கண்டதும் அம்மா ஆச்சரியப்பட்டாள். அந்தப் புத்தகங்களைப் பற்றியும் அதைக் கொடுத்த சாரைப்பற்றியும் ஒரு ‘குட்டிப் பிரசங்க’மே செய்தான் மணி.

“அடே , இப்படி இலவசமாகக்கூட ஒருவர் கொடுக்கிறாரா? அவர் நல்ல மனது வாழட்டும் மணி. நீ என்ன பண்ணவேண்டும், தெரியுமா? புத்தகத்தைப் பத்திரமாகப் படித்துவிட்டு, பத்திரமாகத் திருப்பிக் கொடுத்துவிடவேண்டும். அதுதான் நீ அவருக்குச் செலுத்துகிற நன்றி!” என்றாள் அம்மா.

“சரி , அம்மா!” என்று சொல்லிவிட்டு அறைக்குள் ஓடினான் , மணி. புத்தகத்தின் அட்டையையே சிறிது நேரம் பார்த்து மகிழ்ந்தான். பிறகு விரித்தான். கசங்காமல் படிக்க ஆரம்பித்தான்.

***

மறு நாள் – மாலை நேரம். மணி, கையிலே அந்த ரு புத்தகங்களையும் எடுத்துக் கொண்டு, சாரின் வீட்டை நோக்கி நடந்து கொண்டிருந்தான். படித்து முடித்து விட்டான் அவைகளை; திருப்பிக் கொடுக்கத் தான் போய்க் கொண்டிருந்தான். எதிரில் அவனது நண்பன் ஒருவன் வந்து கொண்டிருந்தான். அவன் மணியிடமிருந்த புத்தகங்களை ஆவலுடன் பார்த்தான். புத்தகத்தின் அமைப்பையும், அட்டை அழகையும் கண்டு அதிசயப்பட்டான். “அடே மணி! நீ கொடுத்து வைத்தவனடா! எவ்வளவு அருமையான புத்தகங்கள் எல்லாம் உன்னிடம் இருக்கின்றன! நான் இந்த மாதிரிப் புத்தகங்களைத் தொட்டுக் கூடப் பார்த்த தில்லை” என்றான்.

நண்பன் போய்விட்டான். “நீ கொடுத்து வைத்தவனடா” என்று அந்த நண்பன் புகழ்ந்தது மணிக்கு அளவற்ற ஆனந்தத்தை அளித்தது. அந்த ஆனந்தத்தைத் தொடர்ந்து அவன் மூளையிலே ஒரு கெட்ட எண்ணமும் தலை நீட்டியது. “நண்பன் சொன்னதைப் போல நான் கொடுத்து வைத்த வனாகவே ஆகிவிட்டால்…?புத்தகங்களைத் திருப்பிக் கொடுக்காமல் நானே வைத்துக் கொண்டால் என்ன? அவர் தான் நல்லவராயிற்றே! கேட்கவே மாட்டார். அப்படியே கேட்டால் தான் என்ன; தம்பி கிழித்து விட்டான் என்று சொல்லிவிட்டால் போகிறது!… இப்படி எண்ணியது மணியின் சபலப் புத்தி!

“இப்படி எண்ண உன் மனம் எப்படித்தான் துணிந்தது? சொந்த செலவில் உங்களுக்கெல்லாம் புத்தகம் தருகிறாரே; அந்தத் தங்க மனிதருக்குத் அன்பளிப்பு துரோகம் செய்யலாமா?” – இப்படி கேள்வி போட்டது மனச்சாட்சி. |

என்ன பலன்? நீதிக்கும் அநீதிக்கும் நடைபெற்ற போராட்டத்தில், மணியின் உள்ளத்திலே தோன்றி விட்ட அநீதியே வெற்றி பெற்று விட்டது! மறுபடியும் அங்கு ஏன் நிற்கிறான், அவன்? திரும்பினான் ; வீட்டை நோக்கி வேகமாக ஓடினான். வீட்டை அடைந்ததும் முதல் வேலையாக புத்தகங்களின் உள்ளே இருக்கும் முதல் பக்கங்களைக் கிழித்து எறிந்தான். குழந்தை புத்தக சாலை ‘ என்ற எழுத்துக்கள் அந்தப் பக்கங்களில் தானே இருக்கின்றன! யாரும் கண்டு பிடித்துவிடக் கூடாது என்ற எண்ணத்தினால் தான் அவன் அப்படிச் செய்தான். பிறகு, புத்தகங்களைப் பெட்டியின் அடியில் பத்திரமாக வைத்தான்.

அந்த சமயத்தில் அவன் கைகள் நடுங்கத்தான் செய்தன. உடல் வியர்த்துக் கொட்டியது.

நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தன மணி ‘சார்’ வீட்டுப் பக்கம் தலைகாட்டுவதேயில்லை. வீட்டைவிட்டு வெளியில் வருவதற்குக்கூட அவனுக்குப் பயம்தான்!’

திடீரென்று அவனுடைய நண்பர்கள் அவன் வீட்டிற்கு ஓடோடியும் வருவார்கள். “மணி , நீ சார் வீட்டுக்கு வரவில்லையா? புத்தகங்கள் வேண்டாமா? ஏன் பெண் பிள்ளை மாதிரி வீட்டுக்குள்ளேயே அடைபட்டுக் கிடக்கிறாய்?” என்று கேள்விமாரி பொழிவார்கள்.

மணி திண்டாடிப் போவான். ”என் உடம்பு சரியில்லையடா!” , “என் அப்பா வெளியில் கிளம்பினால் காலை முறித்துவிடுவேன் என்கிறார் !” என்றெல்லாம் ஏதேதோ புளுகுவான். அவர்களிடமிருந்து தப்பி விடுவான்.

ஒரு நாள்…

கூண்டுப் பறவைபோல் வீட்டுக்குள்ளேயே இருந்த மணியிடம் ‘திடு திப்’பென்று ஓடி வந்தான் ஒரு நண்பன். “டேய் மணி! உனக்கு சேதி தெரியுமா? நம்ம சார் வீட்டைக் காலி பண்ணிக் கொண்டு போகப்போகிறாராம். அவரை வேறு ஊருக்கு திடீரென்று மாற்றிவிட்டார்கள். வருகிறாயா, அவர் வீட்டுக்குக் கடைசி முறையாகச் சென்று பார்த்து விட்டு வந்து விடலாம்!” என்று சொன்னான். அப்போது அவன் குரலில் மகிழ்ச்சி இல்லை ; துக்கம் தொனித்தது.

அதைக் கேட்ட மணிக்கு உள்ளூற மகிழ்ச்சி! ஆனாலும் வெளியில் காட்டிக்கொள்ளவில்லை. “நான் இப்போதுதான் அவரைப் பார்த்துவிட்டு வருகிறேன்; நீ போய் வா!” என்று புளுகினான்.

நண்பன் சிட்டைப்போல் பறந்து சென்று விட்டான். மணியின் முகம் மலர்ந்தது. ‘ அப்பாடா, சார் போய்விடுவார்! இனி நான் வீட்டுக்குள்ளேயே அடைபட்டுக் கிடக்க வேண்டியதில்லை. புத்தகங்களும் இனி நிரந்தரமாக எனக்குச் சொந்தமாகிவிடும்.” என்று எண்ணி மகிழ்ந்தான். அதே சமயம் அவன் மனதில் மற்றொரு ஆசையும் தோன்றியது.

‘இன்று மாலையே அவர் புறப்படுவதாக நண்பன் சொன்னானே, அவர் வீட்டுப் பக்கமாகப் போய்த்தான் பார்ப்போமே ! எப்படிப் போகிறார் ; யார் யார் வந்திருக் கிறார்கள் என்றாவது தெரிந்து கொள்ளலாமல்லவா?’ என்று நினைத்தான். நினைத்தபடி செய்யவும் துணிந்தான். அவரது வீட்டுக்கு மூன்று, நான்கு வீடுகளுக்கு முன்னால் மணியின் மாமா வீடு இருந்தது. அங்கு சென்று ஒளிந்திருந்து பார்ப்பது என்று முடிவு செய்தான் மணி.

மாலை நான்கு மணி இருக்கும். மணி மெதுவாக யாரும் பார்க்காதபடி மாமாவின் வீட்டுக்குச் சென்று விட்டான். திண்ணையிலேயே பதுங்கிக் கொண்டிருந்தான்.

அங்கே…ஒரு ‘டாக்சி ‘ நின்று கொண்டிருந்தது. அதைச் சுற்றி பையன்களும் பெண்களுமாக அநேகர் நின்று கொண்டிருந்தனர். பையன்களில் சிலர் வீட்டி லிருந்த சாமான்களை ‘டாக்சி ‘யில் கொண்டு வந்து வைத்துக்கொண்டிருந்தனர். ஒருவன் அவருடைய பெட்டியைத் தூக்கிக் கொண்டு வந்தான். ஒருவன் படுக்கையைத் தலையில் சுமந்து கொண்டு ஓடி வந்தான். ஒரு வாண்டுப் பயல் அவருடைய கூஜாவைத் தூக்கிக் கொண்டு ‘குடு , குடு’ வென்று ஓடிவந்தான். இவைகளை எல்லாம் ஒளிந்திருந்து பார்த்துக் கொண்டிருந்த மணியின் மனம் குழம்பியது.’

‘எல்லோரும் அவருக்கு இப்படி உறுதுணையாக இருக்கிறார்களே ! அவர் செய்த உதவிக்கு நன்றி செலுத்துகிறார்களே ! நான் மட்டும் ஏன் இப்படித் தனிப் பையனாக இருக்க வேண்டும்? நான் தனிப் பையன் தான் ; அவர்களுடன் சேரத் தகுதியற்றவன் தான்!’ இப்படி எண்ணலானது அவனுடைய குழம்பிய மனம்.

அப்போது புன்னகை தவழும் முகத்துடன் வெளியே வந்தார் அந்த ‘சார்’. தனக்காகப் பெரிய பெரிய ‘ உதவிகளைச் செய்யும் சிறுவர்களைப் பார்த்தார். அப்போது, அவருடைய கண்களில் கண்ணீர் பெருகியது.

இங்கே….மணியின் கண்களிலும் கண்ணீ ர் பெருகியது. ‘ அடப் பாவி, இந்த உத்தமருக்கா துரோகம் செய்தேன்? இவரிடமா திருடினேன்? அன்று புத்தகத்தைக் கிழித்துவிட்டு வந்து அழுதாளே ஒரு பெண்; கொஞ்சமாவது கோபப்பட்டாரா இவர்? ஆறுதல் அல்லவா சொன்னார்! முன்பின் அறிமுக மில்லாத நான் ‘புத்தகம்’ என்று கேட்டவுடனே, கொஞ்சமாவது தயங்கினாரா? அன்று தான் வாங்கி வந்த அந்தப் புத்தம் புதிய புத்தகங்களை அப்படியே கொடுத்து விட்டாரே ! அவரிடமா நான் புத்தகங்களை அபகரித்தேன்? அன்று அம்மா என்ன சொன்னாள்? ‘புத்தகத்தைப் பத்திரமாகப் படித்து விட்டு, பத்திரமாகத் திருப்பிக் கொடுத்துவிட வேண்டும். அதுதான் நீ அவருக்குக் காட்டும் நன்றி’ என்று சொன்னாளே; இப்போது நான் என்ன காரியம் செய்துவிட்டேன்!…. அப்பப்பா !… அதனால் தான் நான் இப்போது தனியாக நின்று தவிக்கிறேன் ! நானும் நண்பர்களுடன் சேர வேண்டும்! நன்றியுடன் அவரை வழியனுப்ப வேண்டும் ! இதோ, இப்போதே வீடு செல்கிறேன்; புத்தகங்களை எடுத்து வந்து அவரிடம் கொடுத்து மன்னிப்பு கேட்கிறேன்!’ இப்படி எண்ணினான் மணி.

அவன் மனம் திருந்தி விட்டது.

உடனே, திண்ணையிலிருந்து குதித்தான்; வீட்டை நோக்கி ஓடினான் ; அவசர அவசரமாகப் பெட்டியைத் திறந்தான்; புத்தகங்களை எடுத்துக் கொண்டான்; திரும்பி ஓடிவந்தான்.

மணி ‘டாக்சி’யை நெருங்கிவிட்டான். அப்போது தான் உள்ளே ஏறி உட்கார்ந்தார், ‘சார்’.

“சார், சார் ! புத்தகம் சார்…..திருப்பிக்கொண்டு வந்துவிட்டேன் , சார்!…” என்ற குரலைக் கேட்டு திடுக்கிட்டார் ; திரும்பிப் பார்த்தார். மணி நின்று கொண்டிருந்தான். மூச்சு இரைக்க இரைக்க – உடலெல்லாம் வியர்வை கொட்ட நின்றுகொண்டிருந் தான் !

அவன் நீட்டிய புத்தகங்களை அவர் வாங்கவில்லை!

“ஓ, புத்தகங்களா? நீயே வைத்துக் கொள்; என் அன்பளிப்பாக வைத்துக் கொள். புரிகிறதா? நான் உன்னை விட்டுப் பிரிகிறேனல்லவா, அதற்காகத்தான் இந்த அன்பளிப்பு ! மேலும், என்னை நீ எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டுமல்லவா?” என்று அன்பு ததும்பச் சொன்னார், அவர்.

மணி பேச வில்லை; சிலை போல் நின்றான். ‘டாக்சி ‘நகர்ந்தது. சார் சன்னல் வழியாகத் தலையை நீட்டினார். அவர் கண்கள் கலங்கி இருந்தன “தம்பி, தங்கைகளே! என்னை மறந்துவிட மாட்டீர்களே?” என்று கேட்டார். அவர் குரல் தழதழத்திருந்தது.

“மறக்க மாட்டோம் சார்! மறக்க மாட்டோம்!” என்று எல்லோரும் சப்தம் போட்டார்கள். கைகளை உயரத் தூக்கி வழியனுப்பினார்கள்.

மணி மட்டும் அசையாமல் நின்ற இடத்திலேயே நின்றான். கண்களில் வழிந்த கண்ணீர்த் துளிகள் கையிலிருந்த புத்தகங்களில் விழுந்து சிதறியதைக்கூட அவன் கவனிக்கவில்லை. அவன் வாய் மட்டும் “அன்பளிப்பு !….அன்பளிப்பு!” என்று முணு முணுத்துக்கொண்டேயிருந்தது!

– புத்தர் பொம்மை, முதற் பதிப்பு: நவம்பர் 1957, தமிழ் நிலையம், புதுக்கோட்டை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *