(1965ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
ஒரு பூஞ்சோலையில் அன்னப் பறவை ஒன்று இருந்தது. அதே சோலையில் ஒரு காகமும் இருந்தது.
ஒரேய சோலையில் இருந்தபடியால் இரண்டும் அடிக்கடி சந்தித்துக் கொள்ளும். சந்திக்கும்போது தான், தான் கண்டது கேட்டது பற்றி ஒன்றிடம் ஒன்று சொல்லிப் பேசிக் கொள்ளும்.
ஒரு நாள் அன்னம் எங்கோ போய்த் திரும்பி வந்தது. சிறிது நேரத்திற்குப் பின் அது திரும்பவும் புறப்பட்டது.
“அன்னம்மா, எங்கே புறப்பட்டு விட்டாய்?” என்று காகம் கேட்டது.
“காக்கையண்ணா, இந்தச் சோலையை அடுத்தாற்போல் அழகான குளம் ஒன்று இருக்கிறது. அங்கே சிவப்புச் சிவப்பாகவும் வெள்ளை வெள்ளையாகவும் அழகான தாமரைப் பூக்கள் மலர்ந்து விளங்குகின்றன. அவை அந்த குளத்தின் அழகை அதிகப்படுத்துகின்றன. அந்தக் குளத்திலேயே மிதந்து திரிந்து தென்றல் காற்றை அனுபவித்துக் கொண்டிருந்தாலே போதும். அதைக் காட்டிலும் இன்பம் வேறு கிடையாது. அந்தத் தாமரைக்கு குளத்துக்குத்தான் நான் போகிறேன். நீங்களும் வருகிறீர்களா?” என்று கேட்டது அன்னப் பறவை.
“அவ்வளவு அழகான குளமா? அப்படியானால் வருகிறேன்” என்று காகமும் அன்னத்துடன் புறப்பட்டது.
அவை போகும் வழியில் காற்றில் அழுகிய பிணத்தின் நாற்றம் கலந்து வந்தது. காட்டுப் புறத்தில் ஓரிடத்தில் ஒரு கழுதை செத்துக் கிடந்தது. செத்து நான்கைந்து நாளாகிவிட்டபடியால் அது அழுகி நாற்றமெடுத்தது. காற்றில் வந்த அந்த நாற்றத்தை உணர்ந்ததும் காகம் அன்னத்தை நோக்கி, “அன்னம்மா, தாமரைக் குளத்திற்கு நீ போ. நான் வரவில்லை” என்று கூறி விட்டுப் பறந்தது. நேராகக் கழுதை அழுகிக் கிடந்த இடத்திற்குச் சென்றது. அழுகிய பிணத்தைக் கொத்தித் தின்று கொண்டே, “இந்த இன்பம் கிடைக்குமா தாமரைக் குளத்தில்” என்று தன மனத்துக்குள்ளேயே கூறிக் கொண்டது.
கருத்துரை: அன்னம் தாமரைக் குளத்தை நாடுவது போல் கற்றோரைக் கற்றோர் விரும்புவர். காக்கை அழுகிய பிணத்தை விரும்புவது போல், தீயோரைத் தீயோரே விரும்பிச் சேர்வர்.
– நல்வழிச் சிறுகதைகள் – முதல் பாகம், முதற் பதிப்பு: ஜனவரி 1965, வானதி பதிப்பகம், சென்னை.