தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 8,957 
 
 

ஜப்பானில் ஓர் இளவரசன் ஆட்சிப் பொறுப்பை ஏற்றான். அவன், வயதான முதியவர்கள் வீட்டில் இருப்பது வீண்; நாட்டுக்குச் சுமை என்று கருதினான். அதனால் ஒரு சட்டம் போட்டான். “ஒருவருக்கு எழுபது வயாதாகிவிட்டால் உறவினர்கள் அவரை, ஊருக்கு வெளியே உள்ள ஒரு மலையில் கொண்டுபோய் விட்டுவிட வேண்டும்’ என்பதுதான் அந்தச் சட்டம். அவனுடைய ஆணைக்குப் பயந்து எழுபது வயதானவர்களைக் கொண்டுபோய் மக்கள் அந்த இடத்தில் விட்டுவிட்டு வந்தனர். அந்த மலையை அனைவரும் “அநாதை மலை’ என்றே அழைத்தனர்.

அனுபவம் பெரிசுஅந்நாட்டில் இரண்டு சகோதரர்கள் இருந்தனர். ஒருவன் பெயர் இசிரோ, மற்றவன் பெயர் சிரோ. அவர்களுக்கு வயதான ஒரு தாய் இருந்தாள். அவள்தான் அவர்களுக்கு உணவு சமைத்துக் கொடுத்து வந்தாள். இருவரும் தாயை மிகவும் நேசித்தனர். தாயின் பெயர் சுமி. அவளுக்கு விரைவில் எழுபது வயதாகப் போகிறது.

மகன்கள் இருவரும் மிகுந்த கவலை அடைந்தனர். மன்னன் ஆணைப்படி தாயை மலையில் விடவேண்டுமே என்று எண்ணி அதிர்ச்சியடைந்தனர்.

தாய் தனது மகன்களுக்கு ஆறுதல் கூறினாள். அவள், அவர்களிடம், “எனக்கு வயதாகிவிட்டதால் நீங்கள் அரசனின் ஆணைப்படி நடந்துதானே ஆகவேண்டும்… அதற்கு நீங்கள் என்ன செய்ய முடியும்?’ என்று கூறினாள்.

தாயை மலையில் கொண்டு போய் விடவேண்டிய நாளும் வந்தது. இருவரும் மிகுந்த மன வேதனையுடன் தாயை அநாதை மலைக்கு அழைத்துச் சென்றனர். இனி மலையில் ஏற வேண்டும்.

ஏறும்போது தாய் சுமி, அவர்கள் நடந்து செல்லும் பாதையில் உள்ள செடிகளை எல்லாம் ஒடித்துப் போட்டுக் கொண்டே வந்தாள். அவர்கள் மலை உச்சியை அடைந்ததும் தாயை விட்டுவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது இருள் சூழ்ந்துவிட்டது. இருளில் இருவரும் வழிதவறி விட்டனர். கீழே இறங்க வழி தெரியாமல் திண்டாடினர். இந்த மாதிரி ஒரு இடத்தில் தாயை விட்டுவிட்டு வந்தோமே என்று பயந்தனர். இனி தாங்களும் தாயுடன் இருந்துவிட வேண்டியதுதான் என்று முடிவு செய்தனர். அவர்கள் மீண்டும் தாய் இருக்குமிடம் சென்றனர்.

தன் பிள்ளைகளைக் கண்ட தாய், தன் மேல் அவர்கள் கொண்ட பாசம் அவர்களை வழிதவற வைத்துவிட்டது என்பதைப் புரிந்து கொண்டாள். அவள் அவர்களுக்கு ஆறுதல் கூறினாள். அவர்களின் முடிவு தவறானது என்று எடுத்துக் கூறினாள். பின்னர் அவள், அவர்களைப் பத்திரமாக மலையடிவாரத்துக்குக் கொண்டுபோய் சேர்க்க தன்னால் முடியும் என்று கூறினாள்.

சற்றும் தங்குதடையின்றி அவர்களைத் தாய் மலையடிவாரத்துக்குக் கொண்டு வந்து சேர்த்தாள். நெகிழ்ந்துபோன அவர்கள், “அம்மா, எங்களைப் போல நீயும் முதன்முதலாக இங்கு வந்தாய். உனக்கு மட்டும் எப்படி வழி தெரிந்தது?’ என்று கேட்டனர்.

அதற்கு அந்தத் தாய், “என் அருமை மக்களே! ஒவ்வொரு மனிதனும் இந்த உலகில் வாழ வேண்டிய நிலை ஏற்படும்போது, எதிலும் கூரிய கவனமும் எச்சரிக்கை உணர்வும் வேண்டும். நடமாடும் பாதையில் கவனம் இருக்க வேண்டும். பிரச்னை இருந்தாலும் தொலைநோக்குப் பார்வை வேண்டும். நான் வரும்போது செடிகளை ஒடித்துப் போட்டுக் கொண்டே வந்தது ஏன் தெரியுமா? நான் திரும்பி வரப்போவதில்லை என்பது தெரியும். ஒருவேளை திரும்பி வர நேரிட்டால், வழி தெரிய வேண்டுமல்லவா? இந்தச் செடிகள் அடையாளம் காட்டும் என்பதற்காகத்தான் அவ்வாறு செய்தேன். அதுதான் இப்போது நமக்கு உதவியது’ என்று கூறினாள்.

இருவரும் தங்கள் தாயின் புத்திசாலித்தனத்தை எண்ணிப் பிரமித்தனர். அவர்கள், “அம்மா, இனி நீங்கள் இந்த அநாதை மலையில் இருக்கக் கூடாது. வாருங்கள், வீட்டுக்குப் போகலாம்’ என்று கூறி அவளைத் தங்களுடன் வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். தங்கள் வீட்டிலுள்ள ஒரு ரகசிய அறையில் யாருக்கும் தெரியாதபடி அவளைத் தங்க வைத்தனர்.

அரசனின் சுபாவத்தை அறிந்து கொள்வதற்காக இரு சகோதரர்களும் அரசாங்க வேலையில் சேர முடிவு செய்தனர். தங்கள் விருப்பத்தைத் தாயிடம் கூறினர். இருவரில் யாராவது ஒருவர் போய் அரசாங்க வேலையில் சேரும்படி தாய் யோசனை கூறினாள்.

மூத்தவன் அரசாங்க வேலையில் சேர்ந்தான்.

ஒருநாள் அரசவையில் அரசன் திடீரென்று,”எனக்கு உடனடியாகச் சாம்பலில் தயாரிக்கப்பட்ட முறுக்கேறிய கயிறு தேவைப்படுகிறது. இன்னும் இரண்டே நாட்களில் தயாரித்துக் கொண்டு வரவில்லையென்றால் உங்கள் அத்தனை பேரையும் தண்டிப்பேன்’ என்றான்.

அவையினர் அதிர்ச்சி அடைந்தனர். சாம்பலால் எப்படிக் கயிறு திரிப்பது என்று ஒருவருக்கொருவர் கேட்டுக் கொண்டனர். முட்டாள் அரசன் என்று எண்ணினர்.

இசிரோ கவலையில் ஆழ்ந்தான். அதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தான். தாய் சுமி அவனிடம், “ஏன் வாட்டமாக இருக்கிறாய்?’ என்று கேட்டாள். இசிரோ அரசவையில் நடந்ததைக் கூறினான்.

அதைக் கேட்ட தாய், “இதற்கா கவலைப்படுகிறாய்? ஒரு முறுக்கேறிய தடிப்பான கயிற்றை உப்புத் தண்ணீரில் நன்றாக ஊற வை. பின்னர், ஒரு பித்தளைத் தகட்டில் அதை வைத்து மண்ணெண்ணெயைத் தெளித்துப் பற்றவைத்து விடு. அந்தக் கயிற்றில் சாம்பல் கலையாமல் அப்படியே இருக்கும். சாம்பல் கயிறு தயார்!’ என்றாள்.

இசிரோ அன்று முழுவதும் பிரயாசைப்பட்டுத் தன் அன்னை கூறியதுபோல தயார் செய்தான். மறுநாள் காலையில் அதனைக் கொண்டு சென்று அரசனிடம் காட்டியபோது அவன் மிகவும் வியந்து போனான்.

சில நாட்கள் சென்றன…

மீண்டும் அரசன் அவையில் உள்ளோருக்கு ஒரு கட்டளையிட்டான். “யாரும் அடிக்காமலேயே ஒலி எழுப்பும் மத்தளம் ஒன்றைத் தயார் செய்து கொண்டு வரவேண்டும்’ என்றான்.

இதைக் கேட்டு எல்லோரும் இசிரோ பக்கம் திரும்பினர். அவன் கொஞ்சம்கூடக் கவலைப்படவில்லை! தன் தாயிடம் அரசனின் ஆணையைத் தெரிவித்தான்.

உடனே தாய், “மத்தளத்தின் ஒரு பக்கத்தைத் திறந்து அதனுள் சில தேனீக்களை விட்டுவிடு. பின் அந்தப் பக்கத்தை அடைத்து விடு. அதைக் கொண்டு போய் அரசனிடம் கொடு’ என்றாள்.

இசிரோவும் அவ்வாறே செய்தான். அதனை அரசனிடம் ஒப்படைத்தான். அரசன் அதைக் கூர்ந்து கவனித்தான். யாரும் அடிக்காமலேயே மத்தளத்திலிருந்து ஒலி உண்டானது! உள்ளே இருந்த தேனீக்கள் மத்தளத்தின் பக்கங்களைத் தாக்கத் தாக்க அதிலிருந்து ஒலி வந்து கொண்டே இருந்தது!

அரசன் ஆச்சரியமும் அளவற்ற மகிழ்ச்சியும் அடைந்தான். இசிரோவைக் கட்டித் தழுவினான்.

“நீ, மிகப் பெரிய புத்திசாலி! உனக்கு வேண்டிய பரிசு எதுவானாலும் கேள். தருகிறேன்!’

என்று அரசன் வாக்குறுதி அளித்தான்.

அப்போது இசிரோ, அரசனிடம், “மன்னர் பெருமானே! வயதானவர்களை அநாதை மலையில் விட்டுவிட வேண்டும் என்று ஆணையிட்டீர்களே, அதைத் தாங்கள் திரும்பப் பெற வேண்டும். வயதானவர்கள் அனுபவத்தால் புத்திசாலிகள். அத்தகைய அனுபவ அறிவாளியான என் அன்னையின் யோசனையால்தான் தாங்கள் இன்று என்னைப் பாராட்டும் வாய்ப்பைப் பெற்றேன். சட்டத்தை நீங்கள் திரும்பப் பெற மனமில்லாவிட்டால், நாட்டை விட்டு வெளியேறுவதற்கு எங்களை அனுமதிக்க வேண்டும்…’ என்று மன்றாடிக் கேட்டுக் கொண்டான்.

இதனைக் கேட்ட அரசனின் கண்கள் கலங்கின.

“நான் போட்ட சட்டம் மனிதாபிமானமற்ற மோசமான சட்டம் என்பதை உணர்கிறேன். உன் வேண்டுகோளை ஏற்கிறேன். நீங்கள் இருவரும் எங்கும் போக வேண்டாம். உங்கள் தாயை உங்களுடனே வைத்துக்கொண்டு நிம்மதியாக வாழுங்கள்..’ என்று கூறி அந்தச் சட்டத்தைத் திரும்பப் பெற்றான்.

அத்துடன் வயதான அனுபவசாலிகளையும் தனது ஆலோசகர்களாக நியமித்துக் கொண்டான்.

– தமிழில்: ஆச்சா (டிசம்பர் 2011)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *