‘நான் எழுதலாமா?’ ஒரு கடிதம் – ஜெயமோகன்

 

ஒரு நண்பரின் கடிதம்

…….எனது எழுத்துத் திறனை விட, எனக்குப் படிக்கும் ஆசை அதிகம். எனது வேலை, பல சமயங்களில், என்னை உயிருடன் தின்கிறது. எழுதுவதால் இளைப்பாறுதல் கிடைக்குமா என்று யோசிக்கிறேன். உங்கள் கருத்தை அறிந்து கொண்டு, மேலே செல்ல ஆசை….

அன்புள்ள நண்பருக்கு,

உங்கள் கடிதம்.

நீங்கள் நினைப்பது சரிதான். நீங்கள் எழுதலாம்

ஏதாவது ஒருதுறையில் சற்றே படைப்பூக்கத்துடன் செயல்படுவதை ‘ஹாபி’ ஆக வைத்திருப்பது பல மேலைநாட்டினரின் வழக்கம். வழக்கமான தொழிலில் உள்ள சலிப்பையும் சோர்வையும் மன அழுத்தத்தையும் அது வெகுவாகக் குறைக்கிறது. நாம் மட்டுமே இருக்கும் ஓர் இடத்தை நமக்கு உருவாக்கியளிக்கிறது. ஒருவேளை நமக்கு அதில் உண்மையான சாதனைகள் சாத்தியமாக இல்லாமலிருக்கலாம், நமது சவால்கள் நம் தொழிலிலேயே இருக்கலாம். ஆயினும் அப்படி ஒரு தனி ஈடுபாட்டுத்தளம் இருப்பது நமக்கு நிறைவையும் ஆனந்தத்தையும் அளிப்பதுதான். ஒருபோதும் அது நமக்கு எதிர்மறை விளைவை உருவாக்காது.

இதுசார்ந்த சில பொதுவான முன்முடிவுகளைப் பற்றி என் கருத்தைச் சொல்ல விரும்புகிறேன்.

 1. இம்மாதிரி ஒரு உபரி ஆர்வம் இருப்பதனால் தொழில்,வேலைத் துறைகளில் நம் கவனம் சிதையும் என்று சொல்லப்படுவதுண்டு. அது முற்றிலும் பொய்யே. நான் தனிப்பட்ட முறையில் அறிந்த ஏராளமான உதாரணங்களைச் சொல்ல முடியும். மனிதமனம் தன் செயல்பாட்டுத்தளங்களை பலவாக பிரித்துக் கொண்டு தனித்தனியான உத்வேகங்களுடன் ஒன்றுடன் ஒன்று தொடர்பே இல்லாமல் செயல்படக்கூடியது. பெரும்பாலும் அனைவருமே அப்படித்தான் செயல்பட்டு வருகிறார்கள். சொல்லப்போனால் நம்முடைய தனியான படைப்புத்தளம் மூலம் நாம் அந்தரங்கமாக மகிழ்ச்சியானவர்களாக ஆவதனால் நமது செயல்திறன் எல்லா தளத்திலும் அதிகரிக்கும் என்பதே உண்மை.
 2. இம்மாதிரியான படைப்புச்செயல்பாடுகளுக்கு நேரம் போதாது என்று சொல்லப்படுவதுண்டு. ஆராய்ந்து நோக்கினால் அதுவும் பொய்யே. நாம் நம் நேரத்தில் மிகப்பெரும்பகுதியை தொலைகாட்சி, இணையம் போன்ற பொழுதுபோக்கு ஊடகங்களில் வீணாக செலவிட்டு வருகிறோம். அவற்றை குறைத்தால் ஏராளமான நேரம் மிச்சமாகும். நம் நேரம் ‘தானாகவே’ செலவாகக் கூடாது. நாம்தான் செலவிட வேண்டும்
 3. ஓய்வுநேரத்தை இலகுவாகக் கழிக்காமல் தீவிரமான செயல்பாடுகளில் கழிப்பது நல்லதல்ல என்பவர்கள் உண்டு. என் அனுபவத்தில் சலிப்புடன் எதையாவது செய்து கொண்டிருப்பதைவிட தீவிரமாகவும் உற்சாகமாகவும் ஒன்றைச்செய்வது போல ஓய்வும் விடுதலையும் அளிப்பது வேறு ஒன்று இல்லை.
 4. ஒரு தளத்திலேயே தீவிரமாக இருப்பது மட்டுமே அதில் வெற்றி அளிக்கும். உண்மை. ஆனால் நடைமுறையில் ஒரு தளத்தில் இருந்து சற்றே விலகி இன்னொரு தளத்தில் ஆழமாக ஈடுபடும்போது அவ்விலகல் காரணமாகவே முந்தைய தளம் சார்ந்த பல ஆழமான தெளிவுகள் நமக்கு உருவாகின்றன.

எழுதுவதைப்பற்றி பலருக்கும் பல தயக்கங்களும் உள்ளன. பலருக்கும் பல சந்தர்ப்பங்களில் நான் எழுதியவற்றையே மீண்டும் தொகுத்துச் சொல்கிறேன்

 1. முக்கியமான எழுத்தாளர்கள் தீவிரமாக எழுதும்போது நாமும் ஏன் எழுதவேண்டும் என்ற தயக்கம் பலருக்கும் உள்ளது. இது இலக்கியத்தில் அர்த்தமற்றது. ஒருவர் எழுதுவதை இன்னொருவர் எழுத முடியாது. இதில் உள்ளடக்க ஒப்பீட்டுக்கே இடமில்லை. தரநிர்ணயம் என்பது விமரிசகனின் வேலை. பல கோணங்களில் பலரும் எழுதும் மொழிகளிலேயே உண்மையான இலக்கியவேகம் இருக்க முடியும். பலவகையான எழுத்துக்கள் வந்து குவிய வேண்டிய தேவை இன்று உள்ளது. தமிழ் இலக்கியத்தில் பல வாழ்க்கைத்தளங்கள் இன்னும் எழுதப்படவேயில்லை. உதாரணமாக ஒரு பிபிஓ ஊழியரின் வாழ்க்கையை இலக்கியத்தில் இன்று நாம் காணமுடியாது.
 2. இலக்கியம் மட்டுமே எழுதப்படவேண்டும் என்று இல்லை. பலவகையான எழுத்துக்கள் வரும் மொழியிலேயே தீவிர எழுத்துக்கள் அடுத்த படியாக உருவாக முடியும். பயண இலக்கியம், அனுபவப் பதிவுகள்,சுயசரிதைகள், வாழ்க்கை வரலாறுகள் போன்ற எழுத்துக்கள் நல்ல இலக்கியத்திற்கான கச்சாப் பொருட்கள். ஏன் நம் குடும்பவரலாறு கூட அப்படித்தான். மேலைநாடுகளில் குடும்ப பைபிள் போன்றவை பிரசுரமாவதன் இலக்கிய பங்களிப்பு மிகப்பெரிது. தமிழில் எத்தனையோ விஷயங்களைப் பற்றி நூல்கள் இல்லை. ஊர்களைப்பற்றி,சாதிகளைப்பற்றி, கோயில்களைப் பற்றி, பல்வேறு தொழில்துறைகளைப் பற்றி, பொழுதுபோக்குகளைப் பற்றி பதிவுகள் இங்கே மிக மிகக் குறைவு. அவற்றைப் பற்றியெல்லாம் எழுதலாம்
 3. நல்ல தரமான படைப்பை எழுத முடியுமா என்ற ஐயம் உள்ளது பலரிடம். இலக்கிய வடிவங்களில் ஒரு அடிப்படைப் பயிற்சியைப் பெறுவது மிக எளிது. சிறுகதை போன்றவற்றின் வடிவம் சற்று கவனித்தாலே கூட பிடிகிடைக்கும். அனுபவங்களை நேர்மையாகச் சொல்ல முயன்றால் தரமான சிறுகதைகளை கண்டிப்பாக எழுத முடியும். புதிதாக எழுதுவது, புதிய பாதைகளைத் திறப்பது என்பதெல்லாம் அடுத்த படிகளே.
 4. கலைக்கான படைப்புத்திறன் நம்மிடம் உண்டா என்ற ஐயம் எழுவதுண்டு. இலக்கியத்தைப் பொறுத்தவரை சிறந்த கலைத்திறன் வெளிப்படாத, அதேசமயம் நேர்மையாகவும் நேர்த்தியாகவும் எழுதப்பட்ட, வாழ்க்கைச் சித்திரங்களுக்கும் அவற்றுக்கான மதிப்பு என்றும் உண்டு. அதில் தாழ்வுணர்ச்சி கொள்ள வேண்டிய அவசியமே இல்லை.

ஆனால் இப்படி நமது நிறைவுக்காக நாம் எழுதும்போது செய்யக்கூடாதன சில உண்டு. அவற்றையும் சொல்லித்தான் ஆகவேண்டும்.

 1. ஒருபோதும் இதை ஒரு போட்டியாக ஆக்கிக் கொள்ளலாகாது. இன்னொருவருடன் ஒப்பிட்டுக் கொள்ளுதல், முந்தமுயலுதல், விவாதித்தல் போன்றவை பெரும் மனச்சள்¨ளையினைக் கொடுத்து ஏன்தான் இதற்கு வந்தோமோ என்று நொந்துகொள்ள வைக்கும்.
 2. அங்கீகாரத்துக்கான விழைவோ ஏக்கமோ இல்லாத வரைக்கும்தான் எழுதுவது இன்பமானது.
 3. உங்களைப் பற்றிய விமரிசனங்களைப் படிக்கவே படிக்காதீர்கள். எந்நிலையிலும். விமரிசனம் மூலம் எந்த எழுத்தாளனும் வளர்வதில்லை, மாறுவதும் இல்லை. விமரிசனம் என்பது வாசகர்கள் படைப்பை புரிந்துகொள்ள உதவக்கூடியது மட்டுமே. பொதுவாக நம் சூழலில் விமரிசனங்கள் எப்போதும் மனச்சோர்வையே அளிக்கின்றன. விமர்சினம் கண்டு எழுத்தை மாற்றிக் கொள்வதாக இருந்தால் ஓணானாக மாறவேண்டும், கலைடாஸ்கோப்புக்குள் புகுந்த ஓணானாக.
 4. உங்கள் மேல் உண்மையான நல்லெண்ணம் இல்லாதவர்களிடம் உங்கள் எழுத்தைப்பற்றி விவாதிக்காதீர்கள்.

அதேசமயம் செய்யக்கூடுவன என்ன என்றும் சொல்லி விடுகிறேன்

 1. எழுதும் எல்லாமே எக்காலத்துக்கும் நிலைத்திருக்கக் கூடியவை என்ற உணர்வுடன் தீவிரமாகவே எழுதுங்கள். இணைய எழுத்துக்களில் கணிசமானவை அந்த வகையான தீவிரமில்லாமல் போகிற போக்கில் எழுதித்தள்ளப்படுகின்றன. அவற்றில் உள்ள வளர்த்தலும் வெட்டிப்பேச்சும் இதன் விளைவே. அங்கே போய் மாட்டிக் கொள்ளலாகாது. விளையாட்டுத்தனம் என்பதுகூட கூர்ந்த பிரக்ஞையுடன் ஒரு புனைவுத்தேவையாகவே உருவாக்கப்படவேண்டும். எழுத்தில் விளையாடக்கூடாது. காரணம் எழுத்து ஒரு விளையாட்டு அல்ல.
 2. எழுதியவற்றை மீண்டும் படித்து தொடர்ச்சியாக அதை மேம்படுத்த முடியுமா என்று பாருங்கள். சுருக்கம் அதேசமயம் எல்லாவற்றையும் சொல்லி விடுதல், ஆழம் அதே சமயம் சுவாரசியம் ஆகியவை நல்ல எழுத்தின் இயல்புகள். நூறு தடவை திருப்பித் திருப்பி எழுதி மேம்படுத்திய ஓர் ஆக்கம்கூட நூற்றி ஒன்றாம் தடவையும் மேம்படுத்த எதையாவது கொண்டிருக்கும் என்பார் சுந்தர ராமசாமி.
 3. உங்கள் வாசகர்களை முகம்தெரியாத ஒரு அறிவார்ந்த வட்டம் என்று உருவகித்துக் கொள்ளுங்கள். இணையத்தில் எழுதினீர்கள் என்றால் தயவுசெய்து பின்னூட்டம் தேவையில்லை. பின்னூட்டத்துடன் விவாதிக்காதீர்கள். பின்னூட்டம் மூலம் நமக்கு செயற்கையான, மிகச்சிறிய ஒரு வாசகர்வட்டம் இருக்கும் பிம்பம்தான் ஏற்படும். அவர்களின் குறுகிய நோக்கங்களுக்காக நாம் எழுத ஆரம்பித்து விடுவோம். அவர்களின் வம்புகளால் மனம் பாதிக்கவும் படுவோம். உங்கள் எழுத்தில் ஆர்வமுள்ளவர்கள் நேரடியாகவே தொடர்பு கொள்ளலாமே.

சுந்தர ராமசாமியின் வரியைச் சொல்லி முடிக்கிறேன்

‘எழுது,அதுவே அதன் ரகசியம்’

– ஜெயமோகன் (மார்ச் 30, 2008)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *