முதலிலே ஒரு விஷயம்: முன்னுரை என்பது ஆளை மறந்துவிட்டு எழுதக்கூடியதல்ல; ஆசிரியரின் யோக்கிய கதைக்கு ‘ஸர்டிபிகேட் கொடுப்பதும் அல்ல. இந்தக் கதைகளின் ஆசிரியரைத் தமிழ்நாடு மிக நன்றாக அறியும். அதற்கு இவரை நான் அறிமுகப்படுத்த எண்ணினால் அது அநாவசியமாகும்; அசட்டுத்தனமும் ஆகும். சென்ற பதினாறு வருஷ காலமாக, தி. ஜ. ரங்கநாதன் என் நண்பர். அவருடைய நம்பிக்கைகளிலும் அதைரியங் களிலும், இன்பங்களிலும் துன்பங்களிலும், சோர்வு நேரங்களிலும் உற்சாக நேரங்களிலும் அவரை நான் அறிந்திருக்கிறேன்; அவரும் என்னை இந்த நிலைமைகளி லெல்லாம் அறிந்திருக்கிறார். என்னுடைய பல ஆங்கிலக் கதைகளை அவர் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்; அவருடைய சில தமிழ்க்கதைகளை நான் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருக்கிறேன். என் புத்தகங்களைப் யற்றிப் பத்திரிகைகளில் அவர் விமர்சனம் செய்திருக் கிறார்; அவைகளில் அவர் ஒரு குறையும் கண்டதில்லை. அவருடைய புத்தகங்களில் நான் ஒரு குறையும் கண்ட தில்லை. ஆகவே, எதிலும் குற்றம் காண்பதையே தொழிலாகக் கொண்டவர்கள், நண்பரின் அபிப் பிராயம் மதிக்கத்தக்க அபிப்பிராயம் அல்ல” என்று சொல்லத்தான் சொல்லுவார்கள். அதைப்பற்றிக் கவலைப்படாமலே என் கருத்துக்களை இங்கே தருகிறேன். இவைகளை, ‘அபிப்பிராயம்’ என்று நான் சொல்லவில்லை; இல்லவே இல்லை. கருத்துக்கள் என்றே சொல்லுகிறேன். தி.ஜ.ர.வின் குணாதியசத்தையும் இலக்கியக் கலைஞர் என்ற முறையில் அவர் இயல்பையும்பற்றி என் சிந்தனை யில் எழுந்த கருத்துக்கள் இவை. அவர் அடக்கம் நிறைந்தவர். தொட்டாற் சுருங்கி. தம் உணர்ச்சிகளை முற்றும் அடக்கியாள்பவர். துன்பத்திலும் சர்விலும் தீரத்துடன் அநுதாபம் காட்டுபவர். ஒரு கணம் மலைத்து நிற்பார்; மறு கணம் வெற்றி காண்பார். ஆண்டவன் உண்டோ என்று சந்தேகம் கொள்வார்; அவனைத் தொழவும் தொழுவார். சாந்தம் நிறைந்தவர்; கண்டிப்பும் காட்டுவார். சுருக்கமாய்ச் சொல்லுவார்; அது விளக்கமாய் இருக்கும். கேலி செய்வார்; அதில் பொருள் நிறைந்திருக்கும். களைத்திருப்பார்; மனம் சலிக்கமாட்டார். சகிப்புத்தன்மை, கச்சிதம், எளிமை, சாமர்த்தியம் இவை பொதிந்திருக்கும் அவர் எழுத்திலே. யாரோடும் சேராமல் ஒதுங்கியிருப்பார்; கூடி வாழ்வதில் வெறுப்பில்லாதவர். அவருடைய இந்தத் தன்மைகள் எல்லாம் இங்கே உள்ள கதைகளில் பிரதிபலிக்கின்றன? அவை பற்பல அம்சங்களாகப் பரவிக் கிடக்கின்றன; அவற்றையெல்லாம், அவருடைய நண்பனாகிய நான், அன்புடன் ஒருமைப்படுத்தி முழுமையாக ஏற்றுக்கொள் கிறேன். குறை சொல்வது நட்பல்ல; நம்பிக்கை ஊட்டுவதுதான் நட்புக்கு அழகு.
2
எந்தக் கலையிலும் விசேஷ ஆராய்ச்சி செய்ய விரும்பாத சாமான்ய மக்களுக்கு ஆனந்த மூட்டி, அதன் மூலம் புத்தகப் படிப்பு ஆசையை அவர்களிடம் தூண்டுபவை கதைகள்தாம். அன்னை இந்தியதேவியின் குழந்தைகள் நாம். நம் நாடே பிரம்மாண்டமான கதைம் பொக்கிஷம். நம் ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்கள், வேத கீதங்கள், உபநிஷத்துக்கள், பஞ்ச தந்திரம், ஹிதோபதேசம் ஆகியவற்றிலிருந்து பெருகிய மகாநதிபோல் எண்ணற்ற கர்ணபரம்பரைக் கதைகள், பிராணிக் கதைகள், உவமைக் கதைகள், யோகினிக் கதைகள், குட்டிக் கதைகள் இவை நாட்டிலே நிறைந் திருக்கின்றன. அந்த மகா நதியிலே பற்பல உபநதிகளு வந்து விழுந்து, அழகிய அருவிகள், கால்வாய்கள், ஏரிகள் மடுக்களையெல்லாம் நிறைத்து, எல்லையற்ற பெருங் கடலாய்ப் கதா ஸரித் ஸாகரமாய் – பெருகிக் கிடக்கின்றன. மூலநதியை அறிந்த பின்பு, இந்த உபநதிகள் அனைத்திலும் நமது மனம் யாத்திரை புரிந்து திக்விஜயம் செய்யலாம். ஒரு கதையைப் படிப்பது நல்லதுதான்: ஆனால், அது போதாது; அதை நன்றாய் அநுபவிக்கா விட்டால் பயன் இல்லை. அநுபவியாமல் படித்த கதை அரைக்கதையே ஆகும். பள்ளிக்கூப் பாடப்புத்தகங்களைப் போல. மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையே எழுப்பிய தடைச்சுவராகக்கூட அது முடியும். நம்மை யெல்லாம் ஒன்று கூட்டி உறவு கொள்ளச்செய்யும் முறையில், தேசத்தின் கதைகளைத் திரும்பத் திரும்பச் சொல்வது மிக அவசியம்; இன்று மிக மிக அவசியம். உலகத்தின் உன்னதமான கதைகள் ஒவ்வொருவர் மனத் திலும் இருக்கவேண்டும். அவைகளை எல்லாரும் அநுப விக்க வேண்டும்; அவைகளுக்கு நம் சிருஷ்டிகர்த்தாக்கள் புதுப்புது உருக் கொடுக்கவேண்டும். பிதுரார்ஜிதமாய் நாம் பெற்ற கலைச்செல்வத்திலேயே விலைமதிக்க வொண்ணாத பொக்கிஷம் அந்தக் கதைகள் தாம்.
மனிதனின் மனோதர்மத்தில் கதை என்பது எவ்வளவு அரிய சொத்து என்பது அநேகருக்குப் புரிவதில்லை. நாட்டிலே உள்ள ஓர் இடத்தை ஒரு கதை, மனோ தர்மத்திலே புனிதப்படுத்துகிறது. அந்த இடம் நமது வீட்டையும்விட மிக உண்மையானதாக நம் மனத்தைப் பற்றிவிடுகிறது. தங்கள் பிரியத்தைக் கொள்ளைகொண்ட இடங்களைக் கவிஞர்கள் இதே விதமாகப் போற்றிவிடு கிறார்கள். அவர்களின் சிந்தனை போற்றிய இடமெல்லாம். விசேஷ அர்த்தமும் விசேஷ ஜீவனும் விசேஷ உணர்ச்சி யும் பெற்றுவிடுகின்றன.
சரித்திர ஆரம்பகாலத்திலிருந்தே, கோயில் பிரா காரங்களிலும் ராணுவ முகாம்களிலும் யாத்திரிகர் சத்திரங்களிலும் சந்தைக்கூடங்களிலும் கதை கேட்க மக்கள் கூடிவிடுவார்கள். கதைசொல்லுவோரில் நகைச் சுவை மிகுந்தவர்கள். விகடம் செய்வதில் தங்கள் மேதையைக் காட்டி, கேட்போரை விழுந்து விழுந்து சிரிக்கச்செய்வார்கள்; அல்லது அவர்களின் உதட்டிலே ஒரு சிறு புன்சிரிப்பை எழுப்புவார்கள். காட்டா போன்ற மனம் படைத்தவர்கள், தங்கள் கதைகளிலே இடியும் மின்னலும் தீரச்செயல்களுமாக நிறைத்து விடுவார்கள்; வீரத்தின் சுடரொளியும் காதலின் மென்மையான வர்ணங்களும் அவைகளிலே மின்னும். ரோஜாவும் சண்பகமும் போல -வர்ணமும் மணமும் நிறைந்த வேறு எந்த மலரையும் போல – உலகத்தோரின் மனத்தை, அழகும் அற்புதமும் நிறைந்த கதைகள் கவர்ந்துவிடுகின்றன.
3
மேல்நாட்டிலே சிறுகதை வளர்ந்த வரலாறு மிகவும் ரசமானது. ஆதிகாலத்துச் சிறுகதை ஆசிரியர்களான கிரேக்க சரித்திராசிரியர் ஹெரோடடஸ், ஞானி ஈசாப் (கி. மு. 570-இல் வாழ்ந்த பைதாகரஸ் என்ற கிரேக்க வேதாந்திக்கு ஸம காலத்தவர்) இந்த இருவரும் தங்கள் கதைகளில் செயலுக்கே முக்கிய ஸ்தானம் அளித்தார்கள்; ஏதாவது ஒரு நீதியை விளக்குவதாக அந்தச் செயல் அமைந்திருக்கும். காட்சி ஸ்தலம் அதாவது ‘சூழ்நிலை பற்றிய வர்ணனை சீக்கிரத்திலேயே வழக்கத்துக்கு வந்து விட்டது. ஆனால், ஜீவனுள்ள கதாபாத்திரங்களைச் சிருஷ்டிக்கும் முறை மெல்ல மெல்லத்தான் தோன்றியது. அவைகள் வேண்டுமென்று, பதினெட்டாம் நூற்றாண்டு வரையில் பொதுவாக வாசகர்கள் கோரவில்லை.
‘கதை’ என்பது, “உண்மையான அல்லது கற்பித மான சம்பவங்கள், கர்ணபரம்பரையாக வழங்கிவரும் நிகழ்ச்சிகள், புராணம், சிறுதுணுக்கு, நாவல், விசித்திர விநோதம் இவைபற்றி வசனநடையிலோ கவிதையிலோ வாயால் சொன்னதாகவோ அச்சிலே பதித்ததாகவோ. இருக்கலாம்; அது எந்த அளவு நீளம் வேண்டுமானாலும் இருக்கலாம்’ என்று சுருக்கமான ஆக்ஸ்போர்டு அகராதி (ஸி.ஓ.டி.) (ஸி. ஓ.டி.) பொருள் தருகிறது. ‘சிறுகதை’ என்பது, பெரும்பாலும் ஒரே நிகழ்ச்சி பற்றியதாக இருக்கும்; ஒரு பத்திரிகையில் கட்டுரையாகவோ, ஒரு தொகுப்பில் ஒன்றாகவோ பிரசுரமாகியிருக்கும்” என்று அது விளக்குகிறது.
அகராதி அர்த்தம் ஒருபுறம் இருக்கட்டும். நறுக்குத் தறித்தாற்போல் கச்சிதமாகச் ‘சிறுகதை’யை வர்ணிக் கும் சில விளக்கங்கள் என் கண்ணில் பட்டன. அவைகளைப் பாருங்கள்:
அது சரேல் என்று எடுத்த போட்டோப் படம்.
அது நூறு கஜ தூரம் தலைதெறிக்க ஓடும் ஓட்டம்:
அது பரிபூர்ணமாய்ப் பக்குவம் செய்த அற்பம்.
அது ஒரு கண நேரத்தின். நிரந்தர ஞாபகச் சின்னம்.
அது நாவலின் இளையதாரக் குழந்தை.
இவையெல்லாம் மிகவும் சாமர்த்தியமான வர்ணனை கள்தாம். ஆனால், தீர்க்கமான விளக்கம் அல்ல. சிறுகதை என்பது என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம்; ஒரு சிறு சம்பவம். சித்திரம், மனோராஜ்யம், நிகழ்ச்சிக் குறிப்பு, பாத்திர வர்ணனை, கோவைப்படுத்திச் சொல்லும் வரலாறு இவைகளில் எதுவும் சிறுகதைதான். அது மனம்போன போக்காகச் சுற்றி அலைந்துகொண் டிருக்கக்கூடாது; எந்த ஓரிடத்திலும் தயங்கித் தாமதிக்கலாகாது, அதில் ஒருபோதும் உபபாத்திரங்களோ, இடை நிகழ்ச்சிகளோ, சம்பந்தமற்ற சிந்தனைகளோ இருக்கக்கூடாது. அது ஒருமுனைப்பட்டதாக இருக்க வேண்டும்; மையப்புள்ளியைச் சுற்றிய வட்டம்போல, தன் முக்கிய விஷயத்தை ஒட்டியே செல்லவேண்டும். இந்த எல்லாவற்றுக்கும் மேலாக, அது சிறியதாக இருக்க வேண்டும். 1,500 முதல் 15,000 வரைக்கும் அதன் வார்த்தைகள் இருக்கலாம். என்றாலும், அது தன் அமைப்புக்கூட்டுக்குள்ளே நெருக்கமாய்ப் பின்னிக் கொண்டு தன்னிலே தானே பூர்த்தியாக இருக்க. வேண்டும்.
பதினெட்டு வருஷகாலமாக நான் சிறுகதைகள் எழுதிவருகிறேன். ஆயினும், சிறுகதை எப்படி எழுதுவது என்று யாராவது என்னைக் கேட்டால், என்னால் விளக்க முடியுமா என்பது எனக்குச் சந்தேகமாகவே இருக்கிறது. ஒவ்வொரு புதிய சிறு கதையை எழுதும் போதும், முதல் முதல் சிறுகதை எழுத ஆரம்பிக்கப் போகிறவனைப்போலவே எனக்குத் தோன்றுகிறது. ஒவ் வொரு சிறுகதையும் மனத்திலே உதிக்கும்போது, அதைச் சொல்ல அதற்கென்றே பிரத்தியேகமான சில முறைகள் தேவைப்படுகின்றன. ஒரு கதையைச் சொல் லப் பயன்பட்ட முறைகளை மற்றொன்றைச் சொல்லும் போது ஒதுக்கித் தள்ளவேண்டியிருக்கிறது. ஆனால், ஒன்றே ஒன்றுமட்டும் மனத்திலே நன்றாய்ப் பதிந்திருக்க வேண்டும்: ‘சிறுகதை’ சிறியதாக இருக்கவேண்டும்.
சிறுகதை என்றால் சிறியதுதானே என்று எண்ணி, பல எழுத்தாளர்கள் அதை எழுதுவது சுலபம் என்று நினைத்துவிடுகிறார்கள். ஆனால், மேலுக்குத் தோன்றுவதுபோல், அது அவ்வளவு சுலபம் அல்ல. கணிசமான மைய நிகழ்ச்சி, அதைத் தெளிவாக விளக்கும் வர்ணனை நெருக்கடியான சிக்கல், அந்தச் சிக்கலை அவிழ்க்கும் முடிவு, திருப்திகரமான சூழ்நிலை, வாசகரின் மனத்தைத் தங்கள் செயல்களில் சிரத்தை கொள்ளச்செய்யும்படி அமைந்த கதா பாத்திரங்கள் இந்த எல்லா அம்சங்களும் சிறுகதைகளின் சில ஆயிரம் வார்த்தைகளுக்குள்ளே பொருந்தி யிருக்கவேண்டும். ஏழு முதல் இருபது நிமிஷங் களுக்குள் படித்துவிடக்கூடிய ஒரு சிறுகதையை எழுத ஒரு வாரமோ அதற்கும் அதிக காலமோ ஆகிவிடும். ஒவ்வொரு கதாசிரியரின் வாழ்க்கையிலும். காலையில் எழுதத் தொடங்கிய ஒரு கதை மாலையிலே பூர்த்தி யாகிவிட்ட பாக்கிய நாட்கள் மிகவும் அபூர்வமாகத்தான் இருக்க முடியும். “நாலே மாதத்தில் பன்னிரண்டு நல்ல சிறு கதைகளை எழுதிவிட்டேன்” என்று பெருமை யாய்ச் சொல்லிக் கொள்ளக்கூடிய ஆசிரியர்கள் யாராவது இருப்பார்களோ என்பது சந்தேகந்தான்.
4
சிறுகதையைப்பற்றி, தி.ஜ.ர. வும் நானும் எண்ணற்ற தடவை சம்பாஷித்திருக்கிறோம்; அதன் கலை உருவத்தையும், ஒவ்வோர் ஆசிரியரும் கைக்கொள் ளும் தனித்தனி முறைகளையும், சிறந்த சிறுகதை நிபுணர் களையும், சிறுகதையின் மூலம், கருத்தரிப்பு, கரு வளர்ச்சி, பிறவி வேதனை, பிறப்பு ஆகியவைகளையும் பற்றிச் சம்பாஷித்திருக்கிறோம். ஒரு சிறுகதையின் கருவளர்ச் சிக்காலம், சிலவேளை ஐந்தாறு வருஷங்கூட நீண்டு போகிறது! நாங்கள் இருவரும் பல சமயம் பல கதை களைப் பரஸ்பரம் சொல்லிக்கொண் டிருக்கிறோம். பஸ் அல்லது டிராமில் போய்க்கொண் டிருப்போம்; ஓட்டலில் சிற்றுண்டி அருந்திக்கொண் டிருப்போம்; ஒரு விசித்திர மான முகத்தைக் காண்போம்; ஒரு சுவரொட்டி விளம்பரம் கண்ணிலே தென்படும்; பாதசாரிகளின் கூட்டத்திலே அகஸ்மாத்தாக எவரோ பேசும் ஒரு வார்த்தை காதிலே விழும். அப்போதெல்லாம். எங்களுக்கே சிறிதும் தெரியாத பின்புலத்துடன் கருத்துக்கள் எங்கள் மனத்தில் உதயமாகும். ஆனால், அந்தக் கருத்துக்களுக்கு உருக்கொடுத்து, பற்பல விதமான உணர்ச்சிகளை ஏற்றி, காகிதத்திலே கதா ரூபத்தில் எழுதி நாங்கள் ஒருவரிடம் ஒருவர் காட்டுவோம். அப்போது, பின்புலம் தானாகவே அமைந்து, உருப்பெற்று, நிகழ்ச்சி நன்றாகச் சித்திரமாகி, பாத்திரம் ஜீவனோடு உருவாகியிருப்பதைக் காண்போம்.
சிறுகதை எழுதும் கலையை, உயர்தர விமர்சனம் என்ற முள் வேலி இன்று சூழ்ந்திருக்கிறது. சிறுகதை எழுத ஆசைப்படுகிறவருக்கு, அது கூடாது”, இது கூடாது என்று நியமம் விதிக்கிறார்கள். ஆரம்பிக்கும் போதே பலவிதத் தடைகளை விதித்து அவரைத் திகைக்கச் செய்கிறார்கள். ‘உங்கள் கதைக்கு எடுத்துக் கொண்ட விஷயத்தை நன்றாக வடிகட்டி, அமிர்த தாரையாகச் செய்யும்வரையில் எழுதத் தாடங்க வேண்டாம்’, ‘உங்கள் நடை துளியும் சதை ஒட்டாத எலும்பாக இருக்கவேண்டும்’, அநாவசிய வர்ணனைச் சொல் ஒன்றே ஒன்றுகூட இருக்கக்கூடாது”, அளவுக்கு மேல் ஒரே ஓர் அசைகூட இருக்கக்கூடாது’ ‘சம்பந்த மில்லாத வெளி விஷயத்தைப் புகுத்துவது மகாமோசம்’, விஷயத்தை விட்டு எங்கெங்கேயோ தாவுவது பெரும் பாவம்’, ‘உங்கள் பாத்திரத்தின்மீது நீங்கள் அநுதாபம் காட்டினால் விபரீதம் விளைந்துவிடும்’ – இப்படி, எத்தனை எத்தனையோ தடைகள்! அநேக வருஷங்களுக்கு முன்னே ஆங்கிலச் சிறுகதை நிபுணர் ஒருவர், “சிறுகதை எழுத ஒன்பது வழியுமுண்டு; தொண்ணூறு வழியும் உண்டு. அத்தனையும் சரியானவைதாம்” என்று சொல்லியிருக்கிறார். சிறுகதை எழுத முதல் முதலாக ஆசைப் படுகிறவருக்கு நான் கூறும் உதாரணம் இதுதான்: ‘அவன் கதை விடறான்.’ இந்தச் சொற்றொடரிலே சம்பூர்ணமான சிறுகதை அடங்கியிருக்கிறது; காட்சி, சூழ்நிலை, பாத்திரம், சம்பவம், முடிவு இந்த எல்லா வற்றையும் மிகச் சுருக்கமாக இதிலே சொல்லி முடித் தாயிற்று. மிகச் சிறந்த சிறுகதை. சகல விதிகளையும் பொத்து நொறுக்கிக்கொண்டு எங்கிருந்தோ வந்து குதிக்கிறது; தனக்குரிய உருவத்தைத் தானே சிருஷ்டித் துக்கொள்கிறது. ஆசிரியர், தம் சொந்த முறையிலே ஒன்றைக் காண்பதும் அதைத் தம் சொந்த முறையிலே சொல்லுவதுந்தான்’ சிறுகதைக்கு மிக முக்கியம். கற்பனையும் கூர்ந்த திருஷ்டியும் அநுபவமும் இல்லாதவர் களுக்கு, எத்தனைதான் கலை நுணுக்கத் தந்திரங்களைச் சொன்னாலும் பயன்படாது. அந்தத் தந்திரங்களே இப்போது உலகெங்கும் ஏராளமாய் மலிந்துவிட்டன. ‘அநுபவம்’ என்பது புறப்புலன்களால் அடைவதல்ல. அக அநுபவந்தான் இங்கே முக்கியம். உணர்ச்சியும் கூர்மையும் உள்ள கண்ணுக்கு, எந்தப் பொருளும் அற்பம் அன்று. மிக அற்பமான மலர் ஒன்று காற்றிலே வீசினால்கூட, கண்ணீர் வெள்ளம் பொங்கும் உணர்ச்சி உண்டாகிவிடலாம்.
5
தி ஜ.ர.வின் எழுத்து, சொந்த விருப்பு வெறுப்பு என்ற களங்கம் சிறிதும் இல்லாதது. இன்று தமிழில் மிகச் சிறந்த அசல் சிறு கதைகளை எழுதும் ஆசிரியர் களுக்குள் ஒருவர் அவர். சர்வசாதாரணமான தந்திரங்களை அவர் கையாள்வதில்லை; விஷத்தைப்போல் அவைகளை அவர் ஒதுக்கிவிடுகிறார். இலக்கிய ஜால வேடிக்கை என்ற படுகுழியில் விழாமல் ஒதுங்கிச் செல்பவர். தமக்கு நிதமும் ஏற்படும் அநுபவங்களை மழுப்பிச் சொல்லுவதோ அவைகளை ஒதுக்கித் தள்ளுவதோ அவரிடம் கிடையாது. கதை என்பது, அவர் தம்முடைய அநுபவம் என்ற ஆரத்தைக் கொண்டு எட்டி வரையும் வட்டமாகும். ஆழ்ந்த தத்துவங்களைச் சொல்வதாக, அவர் ஒரு போதும் பாசாங்கு செய்வ தில்லை. உணர்ச்சி மோஸ்தர் ஒன்றை அவர் அமைத்துக் கொடுப்பார். மனித இருதயத்திலும் மனத்திலும் உண்டாகும் குழப்பங்களை யெல்லாங்கூட அதிலே பொருத்தக்கூடிய விதமாக அது நயமும் ஒழுங்கும் பெற்று விளங்கும். சமூக ழ்வைப்பற்றிய கூர்மை யான பிரக்ஞையோடு, சமூகக் காட்சிகளைப் பகுத்துக் கூறிட்டு, அந்தக் கூறுகளை ஒரு புதிய ஒழுங்குடன் இசைப்பவர் அவர். சதுரங்கக் கட்டத்தில் காய்களை நகர்த்துவதுபோல், தம் கதாபாத்திரங்களை இயக்கு கிறார். அவர் கலை நுணுக்கம் மிகுந்தவர். இதுவே சில சமயம் அவர் கதைகளைப் பலவீனப்படுத்துகிறது; அவை களுக்குத் தனிச் சிறப்பும் தருகிறது. இதற்குக் காரணம் உண்டு. வாழ்க்கையின் அடிப்படை உணர்ச்சிகளெல் லாம் கரடு முரடாகத்தான் இருக்கும்; அவரோ கதை யின் அமைப்பு ஒத்தாற்போல் இருக்கவேண்டும் என்பதற்காக, அவைகளையெல்லாம் இழைத்து நகாசு செய்துவிடுகிறார்.
இந்தக் கதைகள் அவருடைய இரண்டாவது தொகுப்பு. முதல் தொகுப்பான ‘சந்தனக் காவடி 1938-ஆம் வருஷம் பிரசுரமாகி, நான்கு பதிப்பு விற்றிருக்கிறது. கதை சொல்வதில் அவருக்குள்ள திறமைகள் எல்லாம் அதிலேயே வெளியாயின. அவைகள் இந்தத் தொகுப்பிலே மதுரமாய்க் கனிந்திருக்கின்றன. தலைப்புக் கதையான ‘நொண்டிக் கிளி’யில் அவருடைய முழுத் திறமையும் வெளியாகியிருக்கிறது; அவருடைய அநுதாபம் எவ்வளவு பரந்தது, சக்தி மிகுந்தது, சம்பூர்ணமானது என்பதை இது காட்டுகிறது. ஹத்து மீறாமல் எழுதவேண்டும்’ என்ற கட்சியைச் சேர்ந்த அவர், இதிலே துணிச்சல் கொண்டுவிட்டார். இது முதல் முதலில் வெளியானதும், இதை நான் ஆங்கிலத்து தில் மொழிபெயர்த்தேன். அப்போது இதைப்பற்றி இந்தக் குறிப்பை எழுதினேன்: “இந்தக் கதாபாத்திரத் தின் குணசித்திரம் அநேக அம்சங்களில் துர்கனேவ் என்ற ஆசிரியரின் ஆன் தி ஈவ் என்ற கதையில் வரும் எலீனா என்ற பாத்திரத்தை ஞாபகப்படுத்துகிறது. அதிலும் இப்படியே ஒரு வாலிபப் பெண் தன் வாழ்க்கையின் ஒரு முக்கியமான கட்டத்தில், கொஞ்சமும் மனங்கூசாமல் தீரமாய்த் தன் உள்ளத்தின் சிந்தனைகளையும் உணர்ச்சி களையும் அலசி ஆராய்கிறாள்.’
இந்தத் தொகுப்பில் உள்ள சகலமுமே, சிறு கதைக்குச் சிறந்த உதாரணங்களாக விளங்குகின்றன. இதிலே பற்பல வி தமான கதைகள் இருக்கின்றன. இந்தத் தொகுப்பிலே எனக்கு அலாதியான ஒரு பிரியம். அதற்குக் காரணம், ஆசிரியரின் நாகரத்தினம்’ என்ற கதையின் தொடர்ச்சியாக நான் எழுதிய ‘நாகத்தின் பிராயச்சித்தம்’ என்ற கதை இதில் இடம் பெற்றிருப் பதுதான். தி.ஜ.ர. தமது கதையை எழுதியதும், “மாணிக்கத்தை நீங்கள் கொன்றிருக்கக்கூடாது. அவன் அன்பு செய்யப் பிறந்தவன்; கிராமவாசிகளின் ஆண்மைக்கும் பால் போன்ற உள்ளத்துக்கும் உதாரண மகன். இதை நான் நாகத்திடம் சொன்னேன். ஆம் என்று அது ஒப்புக்கொண்டது; பிராயச்சித்தமும் செய்துவிட்டது. எனவே இந்தத் கதை” என்று அவருக்கு எழுதினேன். அசல் கதை, அதைத் தொடர்ந்த என் கதை இரண்டையும் பற்றி, சிறப்பு வாய்ந்த பிரிட்டிஷ் ஆசிரியரும் இலக்கிய விமர்சகருமான என் நண்பர் ஜான் ஹாம்ஸன் என் கதைத் தொகுப்பு ஒன்றுக்கு எழுதிய முன்னுரையில் கூறியிருப்பது இது: ‘கவிதா நயத்துடனும் கற்பனையுடனும் சொல்லியுள்ள சோகக் கதை அது. நண்பர் ஈச்வரன் அதன் கீத இனிமையில் மனம் திளைத்தவராய், அநுதாபத்தால் எழுந்த துணிவுடன், கதாநாயகிக்கு மங்களமான முடிவு கொடுக்கு ம் ஒரு கதையை அதற்குத் தொடர்ச்சியாக எழுதியிருக்கிறார். நாட்டுப்புறக் கதைகளை இது ஞாப கப்படுத்துகிறது. நம் மனத்தைக் கொள்ளை கொள்ளும் ஜீவனான உளுந்தாயியின் உடைந்த மனத்துக்கு மீண்டும் உயிரளிக்கும் மாறுதலை, ஈச்வரனின் மந்திரசக்தியால் நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.’
மற்றக் கதைகளுக்குள், அந்தக் குஷியான போக்கிரி பீ தாம்பர ஐயர். சூட்சுமமான கேலி நிறைந்த ‘நவீன கதாசிரியன், அன்பும் உருக்கமும் ததும்பும் ‘பொம்மை யானை’ நம்பிக்கையும் கருணையோடு கூடிய சிலேடையும் பொதிந்த மரத்தடிக் கடவுள்’ ஆகியவை எனக்கு விசேஷ இன்பம் கொடுத்தன.
தி. ஜ. ர: வின் நடையைப்பற்றி நான் சொல்லத் தேவையில்லை. பொருத்தமான பதப் பிரயோகம், கவிதையின் ஜீவ ஒளி, அசல் வார்த்தைகளின் மீது மின்னலைப் போல் ஒளி வீசி அவைகளை தெளிவுற்ற ரத்தினங்களாகச் செய்யும் அடைமொழிகளை உபயோகிக்கும் லாகவம் இவையெல்லாம் அவரிடம் விசேஷமாக அமைந் திருக்கின்றன. சாமான்ய மக்களிடம் தமக்குள்ள தீவிர அன்பினால், அவர்களை அவர் அசடர்களாகவோ வீரர்களாகவோ செய்துவிடுகிறார். கதை சொல்வதில் அவருக்குள்ள திறமைகள் அனைத்திலும் தலைசிறந்து நிற்பது அவரிடம் இயற்கையாய் அமைந்திருக்கும் சுலபமான நடை. அவருடைய ஒரு கதையைப் படித்தால், தெளிந்த ஊற்று நீரில் ஒரு குவளை குடித்தது போல் இருக்கும்; இன்னும் சிறப்பாகச் சொன்னால், வழுக்கைத் தேங்காயின் இனிப்பான இளநீரைக் குடித்தது போல் இருக்கும்.
மேல் நாடுகளைப் போலவே இங்கேயும் சமீப வருஷங்க களில், சிறுகதை ‘மதம்’ ஒன்று தோன்றியிருக்கிறது; இலக்கிய டாம்பிகம் என்ற மர்மத்திரை ஒன்றும் அதை வந்து சூழ்ந்துகொண் டிருக்கிறது அதன் பக்தர்கள். அந்த மதக் கோஷ்டியின் தாந்திரிகச் சடங்குகளில் ஈடு பட்டுத் தீட்சை பெற்று இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஞானம் மிகுந்த ஆந்தையைப் போல், சிலர் பயபக்தியோடு நடக்கிறார்கள்; அங்கியும் பாவாடையும் அணிந்து மினுக்கும் பள்ளிக்கூடப் பெண்களைப் போல், மற்றும் சிலர் ஆடம்பரம் பண்ணுகிறார்கள். இத்தகைய ‘மதங்’களைப் பரப்பும் பல பத்திரிகைகளைத் தாம் பதிப்பித்திருந்தும், தி. ஜ. ர. நல்ல வேளையாக இந்த மாதிரி ‘மதம்’ ஒன்றிலும் சாரவில்லை.
சிறுகதை என்பது, அரைத் தூக்க நிலையில் இருப் பவர்களால் அநுபவித்துப் பாராட்டக் கூடியது அல்ல ஒரு சிறுகதையின் ஆசிரியர், ‘அகல் விளக்கு ஒன்றை ஏற்றுகிறார்; தமக்குக் கிடைத்த சிறிது நேரத்துக்குள் அ த ஜாக்கிரதையாகப் பாதுகாத்துத் தூண்டி விடுகிறார். ஆனால் அந்தச் சொற்ப நேரத்துக்குள்ளே அதன்மீது அவருடைய மூச்சுப்பட்டால் அது அணைந்து போகும். அதற்குள்ளே சட்டென்று அதை அவர் வாசகரிடம் வழங்கிவிடுகிறார். அந்த அகல் விளக்கின் எண்ணய் தூயதாக இருக்குமானால், அது வாசகரின் மனத்திலே இருளையெல்லாம் ஓட்டும் உன்னதமான பெருஞ் ஜோதியாக எழுந்து, அற்பமும் காம்பீர்யமும், இரக்கமும் இன்பமும், வாழ்க்கையின் பயங்கரமும் துலங்கும்படி ஒளி செய்யும். தி.ஜ.ர. தமக்கு இயன்ற முறையில், பணிவோடு, அந்த அகல் விளக்கை ஏற்றி, வாசகரிடம் அளித்து விட்டார். அது தூய சுடர்; வாழ்க்கையின் ஜீவசக்தி ஏறியது; ஒளியைப் பரப்பிக் கிரகிப்பது – கிரகித்துப் பரப்புவது.
– நொண்டிக் கிளி, முதற் பதிப்பு: செப்டம்பர் 1949, கலைமகள் காரியாலயம், சென்னை.