கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: December 24, 2022
பார்வையிட்டோர்: 3,633 
 
 

(2001ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“என்ன இவனை இன்னுங் காணேலை?”

படலையடியில் படரும் மல்லிகைக் கொடி பத்தாவது தடவையாக பகவதியின் புலம்பலைக் களைப்புடன் உள்வாங்கிற்று.

கையில் அகப்பட்ட மல்லிகைப்பூ ஒன்றினைக் கிள்ளி ஆய்ந்த வாறே பகவதி திரும்பி மீண்டும் ‘போட்டிக்கோவை’ நோக்கி நடந்தாள்.

“அம்மாளாச்சி! இவன் தம்பி நல்ல செய்தி கொணர்ந்தான் எண்டால் உனக்கு மடை வைச்சுப் பொங்குவன்” வடக்கே இரண்டு பனங்காணிகளுக்கு அப்பால் வானோங்கி நிற்கும் கோயில் கோபுரத்தைப் பார்த்து பார்வதி சிரமேல் கைகளை வைத்துக் கூப்ப ஏதுவாக பனை மரங்கள் காவோலைகள் சரசரக்க விலகி இடங் கொடுத்தன.

“என்னடி பிள்ளை உதிலை நிண்டு கும்பிடுறாய்? கோயிலடிக்கு வரேலையே?” அணிந்து வந்த சோடி மாறிய ‘பாட்டா’ செருப்பினைக் கழற்றி படலைக்கு மேலாக மல்லிகைப் பந்தலடியில் எறிந்துவிட்டு பகவதியின் கண்களை உற்றுப் பார்த்தவாறே கோணாத்தை ஆச்சி வினாவினாள்.

“வேட்டைத் திருவிழாவுக்கு அம்மாளாச்சி நாலு மணிக்குத் தானேயணை வெளிக்கிடுவா. நீயென்ன நேரத்தோடை போறாய்? குரலில் உடைவுகளை ஏற்படவிடாது மிக்க அவதானமாக அதே சமயம் அமைதியாகவே பகவதி கேட்டாள்.

“வேட்டையாடிப்போட்டு ஆறு மணிக்கிடையிலை திரும்பி விடவேணுமெண்டு அவங்கள் சட்டம் போட்டிருக்கிறாங்களாம். அது தான் மூண்டு மூண்டரைக்கே அம்மாளாச்சி வேட்டைக்கு வெளிக் கிட்டுடுவா எண்டு நேற்றைக்குக் கோயிலடியிலை பறைஞ்சினம்.” கோடிச் சேலை கமகமக்க கொளுத்தும் வெய்யிலையும் பொருட் படுத்தாது கோயிலடிக்குச் செல்லவென நடுத்தெருவுக்கு இறங்கிய கோணாத்தை ஆச்சி தெருவின் இரு மருங்கும் நோட்டமிட்டாள்.

பின்னால் இரண்டு கவடு தூரத்தில் வேலிப்பூவரசு நிழலில் இலையான்களை விரட்டுவதில் வலு மும்முரம் காட்டியவாறே படுத்திருந்த கட்டாக்காலி மாட்டைத்தவிர ஒரு சீவனுமே கண்ணுக்குத் தென்படவில்லை.

குசுகுசுத்த குரலில் பகவதியை படலையடிக்கு மெதுவாக அழைத்தாள் ஆச்சி.

“பிள்ளை, உன்ர பெடிச்சியைப்பற்றி சங்கதி ஒண்டு கேள்விப்பட்டன் மெய்யே?” கிழவியின் கோடிச்சேலை வாசனை பகவதியின் நாசியில் உரச, கேட்ட கேள்வி உள்ளத்தில் கவ்வி யிருந்த சோகத்தினை முகத்திற்கும் வியாபிக்கச்செய்தது.

வளவின் முன்னே விரிந்து பரந்து கிடக்கும் வயல்வெளி வரம்புகளில் தத்தித் திரிந்த குருவிகள் பெருஞ்சத்தம் எழுப்பியவாறே பறந்து சென்றன.

பகவதி வார்த்தைகளைக் கூட்ட முயல்கிறாள். தொண்டைக்குள் ஊற்றெடுத்த சளி நாக்கின் புரள்விற்கு முட்டுக்கட்டை போட்டது.

“திருவிழாவுக்கெண்டு கப்பலிலை நேற்று வந்த என்ரை நடுவிலான்தான் சொன்னான் பிள்ளை. கொழும்பு முழுக்க உன்ரை பொடிச்சியைப் பற்றித்தான் ஒரே கதையாம். சுவிசிலை உன்ரை மேளும், புரியனும் பேச்சுப்பறைச்சல் இல்லாமல் பிரிஞ்சு இருக்கினமாம்.”

வேட்டைக்கு அம்மனை ஏற்றிச் செல்வதற்கான ‘டிராக்டரை’ ஓட்டியவாறே ‘லைட் எஞ்சின்’ கிட்டிணன் மட்டும் அத்தருணம் அத்தெருவால் சென்றிராவிட்டால், பகவதி எழுப்பிய ஓலம் தெற்கு வீட்டில் மணக்கும் சமையலையும் இடைநிறுத்தி ஜன்னல் ‘கேட்’டின் சேலைகளையும் விலக வைத்திருக்கும்.

“அது தானணை சுவிசுக்கு பொடிச்சியோடையும், மருமகனோ டையும் ‘ரெலிபோனிலை’ கதைச்சு நிலவரமறிய இவன் தம்பி ஒன்பது மணிபோல ‘ரவுண்’ பக்கம் போனான். பொழுது மத்தியானமாப் போச்சு. ஆளை இன்னங் காணேலை. கோயிலடிச் சந்தியில் கிடக்கிற ‘ரெலிபோன்’ நேற்றுப் பெய்த மழையாலை யாக்கும் வேலை செய்யேலையாம். இல்லாட்டி உதிலை நானே போய்க் கதைச்சிருப்பன்.” கையில் இழுபட்ட மூக்குச் சளியை மல்லிகைக்கு உரமாக்கிவிட்டு பகவதி சொன்னாள்.

பகவதியின் வாய் வீசிய துர்நாற்றமும், வெறுங்காலில் சுடு மணல் காட்டிய அகோரமும் மேலும் கேள்விகளைக் கேட்க வைக்காது கிழவியைக் கோயிலுக்கு வழிநடத்திச் சென்றன.

“காலம்பறவிலையிருந்து ஒரு தண்ணிவென்னியும் குடிக்காமல் இருக்கிறாய் போல கிடக்கு. ஒல்லுப்போலை தேத்தண்ணியாவது வைச்சுக் குடி. பொடியன் வந்திடுவன்.” போகும் கிழவி எழுப்பிய குரல் பகவதியின் உள்ளத்திற்கு ஒத்தடங் கொடுத்தது.

படலையைத் திறந்தவாறே பகவதி இப்போது நடுத்தெருவில் வந்து நின்று பார்த்தாள்.

வயலினை மூலைவிட்டமாக ஊடறுத்து வடமேற்கே செல்லும் ‘அவங்களின்ரை பண்ட்’ தெரியும் தூரம் மட்டிலும் நாதனின் தலைக் கறுப்பையே காணவில்லை.

தெருப்பக்கமாக தூரத்தே யாரோ வருவதுபோல் தெரிகிறதே….. சற்று நேரம் நின்று பார்த்தாள். “எட அது ஆரோ இடம்பெயர்ந்து வந்த பிறத்தியில் சனம்!”

படலையைத் திறந்து, போட்டிக்கோ’வுக்கு வந்தவள் தேமா மரத்தின் கீழ் இருந்த குந்தில் அமர்ந்துகொண்டாள்.

‘கலியாணம் கட்டி கூடி வாழத் தொடங்கி ஆறு மாதங்கள் கூட ஆகேல்லை. அதுக்கிடையிலை இதுகளுக்கு என்ன பிரச்சினை வந்தது?’

சுவிசிலையிருந்து வந்த ‘வெடிங் கசட்’ இன்னும் ஊர் முழுக்கவும் ஓடி முடியவில்லை ……

“அன்ரி உங்கட மகளையும், மருமகனையும் பார்க்கைக்குள்ளை சாலினியையும் அஜித்தையும் மாதிரிக் கிடக்கு.” யுத்தத்தினால் இடம் பெயர்ந்து பின் வீட்டில் குடியிருக்கும் குடும்பத்தினர் நேற்று ‘கசெட்’டைக் கையளிக்கும் போது கூறுகையில் பகவதியின் முகத்தில் எவ்வளவு மகிழ்ச்சி பொங்கியது.

அவர்கள் சென்ற கையுடன் வெளித்திருந்த வானம் திடீரென்று கறுத்தது. ஊரே பவர் கட்டில் மூழ்கிய மாதிரி ஆனது. அம்மன் வீதி வலம் வந்து, வசந்த மண்டபத்தை அடையும்போது, பேய் மழை ஒன்று பெய்ய ஆரம்பித்தது. வயல் புழுதி அமர்ந்துபோய், வெள்ள வாய்க்கால் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. திருவிழா விற்கு வந்தவர்கள் எல்லோரும் தெப்பமாய் நனைந்தபடி வீடு திரும்பிக் கொண்டிருந்தார்கள்.

கொட்டும் மழையில் குடையையும் நனைத்து, தானும் நனைந்த வாறே வந்த நாதனே இளைக்க இளைக்க அதைச் சொன்னான்.

“அம்மாளாச்சி! ஆரப்பு சொன்னது உனக்கு?” இடியுடன் போட்டியிட்டது பகவதியின் ஓலம்.

“அக்கை, எதுக்கும் நாளைக்கு காலமை பொடிச்சியோடை ‘ரெலிபோனிலை ‘ கதைச்சு என்ன நடந்ததெண்டு கேட்டுக்கொண்டு வருவம். இப்ப பதறாமல் இருப்பம்.”

மழை ஓயும் மட்டும் நாதன் பகவதிக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டு அங்கேயே இருந்தான்.

பகவதி வீட்டுப் படலைக்கு முன் வேலி ஓரமாகப் படுத்திருந்து தன்மேல் மொய்த்த இலையான்களை விரட்டுவதில் தோல்வி கண்ட மாடு எழுந்து நின்று குடக்கணக்கில் கழித்த சிறுநீர் நிலத்தில் வாய்க்கால் கட்டி வேலி ஓரம் ஓடிற்று.

வாலைக் கிளப்பிய மாடு, தெரு எருப் பொறுக்கி சீவியம் நடாத்தும் தெய்வானை ஆச்சிக்கு வருமானம் தந்துவிட்டு அசை போட்டவாறே இப்போது வயற் பக்கமாக முன்னேறுகிறது.

இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னர் இதே ஆனியில் அம்மன் கோயில் திருவிழாவிற்கென பகவதியின் புருஷன் ஊரிற்கு வந்து நின்றது இன்னும் புத்தம் புதிய திரைப்படப் பிரதியாக பகவதியின் மனத்திரையில் விரிகின்றது.

மூன்று நாலென போட்டிக்குச் சிகரம் கட்டி திருவிழா நடாத்திய காலம் அது. நாலாவது சிகரம் கட்ட முன்வீதியில் இடம் இல்லாது நாலாந் திருவிழா உபயகாரர் கோயில் மடப்பள்ளியைச் சுற்றியும் கட்டி விட்டார்கள்

மூன்று கூட்டு பெரிய மேளம், சின்னமணியின் வில்லுப்பாட்டு, பாட்டு கோஷ்டி என அடுத்த நாள் அதிகாலை ஆறு மணி மட்டும் நிகழ்ச்சிகள் தொடரும். இப்படித்தான் ஒருதடவை பாட்டுக்கோஷ்டி கானமிசைத்து முடிய அடுத்தநாட் காலை ஆறரை மணியாகிவிட்டது.

. பிறகு அம்மன் வீதிவலம் வரும் சகடை தள்ள சனங்கள் இல்லாது சப்பறம் கட்ட வந்தவர்களையும், சிகரம் கட்ட வந்தவர் களையும், ‘லைட் எஞ்சின்’காரரையும் மன்றாடிக் கேட்க வேண்டிய தாயிற்று. அந்தச் சம்பவத்திற்குப் பிறகு காலை நாலரை மணிக் கெல்லாம் நிகழ்ச்சிகளை முடித்துவிடவேண்டும் என்று குருக்கள் கட்டாய நிபந்தனை விதித்திருந்தார்.

மூன்றாம், நாலாம், ஆறாம், ஏழாம், எட்டாம் திருவிழா உபய காரர்களே இரவு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வர். அந்நாட்களில் எல்லாம் வில்லுப்பாட்டு நிச்சயம் இடம்பெறும்.

பொதுவாக சின்னமணியின் வில்லுப்பாட்டு, தட்சணாமூர்த்தியின் தவிலுக்குப் பின்னர் நள்ளிரவில் களை கட்டும். பின்னர் விடிய விடிய பாட்டுக் கோஷ்டி கானமிசைக்கும். சின்னமணி கதை சொல்லி முடித்த கையோடு பகவதிக்கு இமைகள் கனத்து விடும். கொட்டாவி விட்டவாறே கோயிலுக்குத் தெற்கே கொன்றை மரத்தடியில் நின்று பாட்டுக் கோஷ்டியை ரசிக்கும் புருஷனையே புதிதாகப் பார்ப்பது போல வைத்த கண் வாங்காது பார்ப்பாள். தற்செயலாகத் தேர் நோட்டமிடும் அவனுக்கு அவளது பார்வை குறுக்கிட்டு அதன் அர்த்தத்தைப் புரிய வைக்கும்.

அதன் பின்னர் அவன் கோயிலுக்குத் தெற்கே சாமியார் மடங்களை ஊடறுத்துச்சென்று வயல்வெளியூடு விரியும் அத் தெருவில் உள்ள தனது வீட்டுப் பக்கமாகச் செல்வான். பகவதி பின்னால் செல்வாள். திருவிழாச் சாட்டில் கள்ளமாக ‘சென்ரல் தியேட்டரில்’ ‘செக்கண்ட் ஷோ’ படம் பார்த்துவிட்டு எவருக்கும் பிடிபடாது இருப்பதற்காக பூங்கொல்லையைச் சுற்றிச் சாமியார் மடத்தடியில் மிதந்து அப்போதுதான் கோயில் வீதியுள் நுழையும் இளவட்டனுகள் அசடு வழிய இவர்களுக்கு: வழிவிட்டு ஒதுங்கிக் கொள்வர்.

பகவதியும் புருஷனும் வீடு சென்று பச்சைத் தண்ணி குடித்து விட்டு படுக்கை போட்ட பின்பே பாட்டுக் கோஷ்டியினர் பக்திப் பாடல்களைப் பாடி முடித்து, சினிமாப் பாடல்களை இசைக்க ஆரம்பிப்பர். ‘பஞ்சணை வேண்டுமோ, நெஞ்சணை போதுமே!’ என்று நல்லையாவின் ஒலிபெருக்கி உச்சஸ்தாயியில் சத்தம் எழுப்பும். அதன் தாற்பரியம் பகவதியின் புருஷனுக்கு நிதர்சனத்தில் உறைக்கும். அநேகமாக அத்தகைய ஒரு மகோற்சவ நாளில்தான் பகவதிக்கு தங்கியிருக்கவேண்டும்.

அடுத்த ஆண்டு சித்திரை பிறந்து வந்த முதல் திங்கள் இரவு நோக்காடு கண்ட பகவதியை ‘சைக்கிள் கரியரில்’ இருக்க வைத்து லாம்பு வெளிச்சத்தின் உதவியுடன் வயல்வெளிக் குறுக்குப் பாதையால் ‘சைக்கிளைப்’ பத்திரமாக உருட்டிச் சென்று அண்மையில் உள்ள ஆதார வைத்தியசாலையில் சேர்ப்பித்தார்கள். அன்றிரவு மகப்பேற்று அறைக்குப் போனவளை மறுநாள் காலை யில்தான் ‘ஸ்ரெச்சரில்’ தள்ளிக் கொணர்ந்து கட்டிலில் படுத்தினார் கள். கட்டில் கால்மாட்டில் பொருத்தப்பட்டிருந்த தொட்டிலில் கிடத்திய குழந்தையின் ‘ம்மாய்…. ம்மாய்…’ அலறலில்தான் மத்தியானம் போல பகவதி கண் விழித்தாள்.

ரோஜா மலரைப்போல் பெண் குழந்தை.

மகத்தில் பிறந்த மகளுக்கு ‘ம’ வரிசையில் பெயரினை சாத்திரியார் விதந்துரைத்தார். “அந்த அம்மாளாச்சியே எங்களுக்குக் குழந்தையாக வந்து வாச்சிருக்கிறாள், மனோன்மணி எண்டு வைப்பம்” என்றாள் புருஷனிடம் பகவதி.

சித்திரை பத்தின் முன் பிறந்த குழந்தை புத்திரி ஆனதில் பகவதி நிறையவே மகிழ்வுற்றாள்.

கார்காலம் பிறந்தது. ஆவணி ஞாயிறு ஒன்றின் மைமல் பொழுது…….

வயல்வெளிக்குள் கிளித்தட்டு விளையாடிவிட்டு ஊரிலுள்ள பொடிச்சியளுக்கு ‘மாக்ஸ்’ போட்டுக்கொண்டு வரம்படியில் நின்ற அவ்வூர் இளைஞர்களை நோக்கி புழுதி அப்பிய ஒரு ‘சைற் மொடல் கார்’ வந்து நின்றது. “உதைத் திருத்துறதுக்கு இங்கினைக்கை ‘றிப்பயர் கராஜ்’ ஒண்டும் இல்லையே?” என அவ் இளைஞர்களுள் கட்டையாக இருந்த ஒருவன் சொல்லி முடிய முன்னரே, அரையில் நெறி கட்டியவர் போல கால்களை எட்ட வைத்தபடியே வாட்டசாட்டமான ஒருவர் காரிலிருந்து இறங்கி வந்தார்.

வந்தவர் கூட்டத்தில் நெடும் பனையாய் நின்ற ஒரு சிவலைப் பொடியனைப் பார்த்துச் சொன்னார். “தம்பியவை நான் ஹபரணை ‘சேவையர் காம்பிலை’ இருந்து வாறன். பத்திரகாளி அம்மன் கோயிலடியிலை பகவதி எண்டு அவையளின்ரை வளவு எங்கினைக்கை இருக்கு.”

“பங்கார் அதிலை இருக்கு. அலம்பல் வேலி அடைச்ச புதுக் கல்வீடு.”

“இல்லை நான் ஹபரணையிலை சேவையராக’ இருக்கிறன். என்ரை ‘பார்ட்டி’யிலைதான் அவர் வேலை செய்யிறார். அவவுக்கு ஒரு சங்கதி சொல்லவேணும்” என்றபடியே அவர் பகவதி வீட்டுப் பக்கமாக அமர்ந்து கிடந்த தெருப்புழுதியைக் கிளப்பியவாறே சென்று கொண்டிருந்தார்.

அவர் வளவிற்குள் சென்ற முதல் நான்கு நிமிடங்கள் நிசப்தமாகவே கழிந்தன.

ஐந்தாவது நிமிடம் “ஐயோ! என்ரை ராசா என்னை விட்டுட்டுப் போட்டியோ! ஐயோ! நான் இனி என்னத்தைச் செய்வன்!” என்று பகவதி எழுப்பிய ஓலம் ஊரெங்கும் எதிரொலித்தது.

மெள்ள மெள்ள வளவினுள் சனங்கள் கூட ஆரம்பித்தார்கள்.

“எப்பிடியும் சவம் எடுக்க எங்களிலை ஆரும் வரத்தானே வேணும்?” வந்திருந்தவரிடம் ஊரவர்கள் கேட்டார்கள்.

அங்கிருந்த ஒருவரை அழைத்துக்கொண்டு படலைப் பக்கம் விரைந்தவாறே ஹபரணைக்காரர் கூறினார். “காடையன்கள் உடம்பையும் விட்டுவைக்கேல்லை. ‘ரயர்’ போட்டு கொழுத்திப் போட்டான்கள்.”

“ஐயோ! வாற மாதம் பொடிச்சியின்ரை சோறு தீத்துக்கு வாறன் எண்டுட்டுப் போனியே….. என்ரை ராசா” பகவதியை ஆற்றப் பலரும் பாடுபட்டார்கள். முடிவில் ஆற்ற வந்தவர்களும் ஒரு பாட்டம் அழுதுவிட்டுச் சென்றார்கள்.

***

பத்திரகாளி அம்மன் கோயில் மணி இரந்து இரந்து ஒலித்து சனங்களை வேட்டைக்கு அழைக்க ஆரம்பித்துவிட்டது. ஆண்கள் வெள்ளை வேட்டி கட்டி வியர்க்கும் வெறுமேலுடனும், பெண்கள் சீவிச் சிங்காரித்து பூக்கள், பால்பழங்களை ஏந்தியவாறு கற்பூர வாசனையுடனும் கோயிலை நோக்கி இப்போது அணிவகுத்துக் கொண்டிருந்தார்கள்.

அவர்களில் பெரும்பாலோனோர் வன்னிக்கெனவும், கொழும்பு கண்டிக்கெனவும், வெளிநாட்டிற் கெனவும் புலம் பெயர்ந்த அவ்வூராரின் வீடுகளில் தற்போது தஞ்சங்கொண்டிருக்கும் வடமராட்சி கிழக்கு மற்றும் தென்மராட்சியைச் சேர்ந்தவர்கள்.

வயல்வெளியை நோக்கிச்சென்ற கட்டாக்காலி மாடு ‘பண்ட்’டிற்குச் சமாந்தரமாகச் செல்லும் கட்டைப் புளியடித்திடல் பக்கமாக விலகி நின்று மேய்ந்து கொண்டிருந்தது.

பத்தாம் ஆண்டு மட்டும் பகவதி மகளை கூப்பிடு தூரத்தில் உள்ள கிராமத்துப் பாடசாலைக்கே அனுப்பி வைத்தாள். ஆண்டு ஐந்தில் புலமைப் பரிசில் சித்தியெய்திய உடனேயே கடற்கரைக் கல்லூரிக்கு மாற்றும் எண்ணம் அடிமனதில் இருந்தாலும், “கெட்டிக்காரப் பொடியள் எல்லாம் பள்ளிக்கூடத்தை விட்டுட்டுப் போனால் மிச்சப் பிள்ளையளை வைச்சிருந்து நாங்க என்ன பட்டி மேய்க்கிறதே?” என்று அதிபர் அபிப்பிராயப்பட்டதில் அவ்வெண்ணம் கைகூடாது போயிற்று.

பூப்பெய்திப் பெரியவளான பின்பும்கூட நாலு கவடு வைத்து பாடசாலையில் இருந்து ‘இன்ரவலுக்கு’ மகள் வந்து செல்வதற்குப் பகவதி அனுமதிக்கவில்லை. “பொடி பாவம் வெய்யில் சுட்டுப் போடும் ” என்பது பகவதியின் விவாதம்.

பாடசாலைக்குக் கிழக்கே ஒரு சுருட்டுக் கொட்டில். நாலைந்து தார்ப் பீப்பாக்களை வெட்டித் தகரங்களாக்கி கொட்டிலுக்குக் கூரை போட்டிருந்தார்கள். பத்துப் பதினைந்து வருடங்களுக்கு முன்பு ‘மெயின் ரோட்டையும் தாண்டி சுருட்டுச் சுற்ற அங்கு வந்து போனார்கள். கிழமைக்கு ஒரு தடவை குருநாகலில் இருந்துவரும் ‘லொறி’ பெட்டி பெட்டியாக கோடா மணக்க சுருட்டுகளைச் சுமந்து செல்லும். போர் தொடங்க போக்குவரத்து தடைப்பட சுருட்டுக் கொட்டலின் எல்லை முட்கம்பிகளும் ‘சென்ரி’களுக்காக எடுத்துச் செல்லப்பட்டன. கொட்டிலின் பின்புறத்தினை ஆமணக்கம் புதர்கள் ஆக்கிரமித்திருந்தன.

பகல் உணவுடன் செல்லும் பகவதி சுருட்டுக் கொட்டிலுக்கு மகளை அழைத்து சோற்றைக் குழைத்து தானே ஊட்டி அனுப்புவாள். குமரியான பின்பும் மகளுக்கு பகவதி சாப்பாடு ஊட்டிவிடும் சங்கதி கொட்டிலுக்கு செங்கோணத்தில் உள்ள கோயில் தீர்த்த மண்டபத்தில் காட்ஸ்’ விளையாடும் இளவட்டனுகள் ஊடாக கூடப் படிக்கும் பொடியன்களுக்கும் வெளித்துவிட்டது. ஏற்கனவே சூட்டப்பட்ட ‘மணிப்புறா’ என்ற பட்டத்துடன் அன்றிலிருந்து பகவதியின் மகளுக்கு சூட்டி பபா’ என்றொரு மேலதிக விருதும் கொடுக்கப்பட்டது. பாடசாலை ‘டிசிப்பிளின் மாஸ்டரின்’ மகனே அந்த விருது வழங்கலுக்கான பிரேரணையை முதலில் முன் வைத்தவன்.

மனோன்மணி ‘ஓ லெவலில்’ எட்டுப் பாடத்திற்கும் ‘டீ’ எடுத்த தால் பாடசாலைக்கே பெருமை எனக்கூறி ஒரு மாலைப் பொழுதில் அதிபர் பருத்தித்துறை வடைப் பக்கெட்டுடன்’ அவர்களது வீட்டிற்கே வந்து கதைத்தபோதே அதிபருக்கு பற்கள் முப்பத்தியிரண்டும் இன்னமும் உறுதியாக இருக்கும் உண்மையினை மனோன்மணி கண்டு கொண்டாள்.

“இந்தப் பிரின்சிப்பல்’ மோட்டச் சயிக்கிளிலை’ வரக்குள்ளை மீசோலை முடக்கிலை ‘லொறி ‘ அடிச்சு றோட் ‘டிலையே சாகக் கடவான்!” என ஆறாம் வகுப்பில் பள்ளிக்கூடம் மாறவிடாதபோது தான் அம்மன் கோயில் தெற்கு வாசலில் நின்று அழுதழுது சபித்தது எவ்வளவு முட்டாள்தனம் என்பதனையும் கூடவே எண்ணி மனோன்மணி தன்னையே நொந்துகொண்டாள்.

‘ஏ லெவல்’ படிப்பதற்காக இரண்டரைக் கட்டைக்கு அப்பால் இருக்கும் கடற்கரைப் பள்ளிக்கூடத்திற்கு மகளை அனுப்பவேண்டிய அவசியம் பகவதிக்கு ஏற்படவில்லை . யுத்தம் உச்சக்கட்டத்தில் இருந்ததால் கிராமத்திற்கு சற்று அப்பால் உள்ள இந்துமகளிர் கல்லூரி ஒன்றிலேயே கடற்கரைப் பெண்கள் உயர்தரப் பாடசாலை யும் தனது வகுப்புகளைப் பகிர்ந்துகொண்டிருந்தது. காலையில் ‘சைக்கிளில்’ செல்லும் மகள் சாமியார் மடத்தில் திரும்பியவுடன் அம்மாளாச்சி இண்டைக்கு பொம்மர், ஹெலி ஒண்டும் வரக்கூடாது’ என்று படலையில் நின்றவாறே கடவுளைத் தொழுத பின்பே, கோழிகளைக் கூட்டிலிருந்து திறந்து விடுதல், அகண்ட சட்டியில் கருப்பனீரை ஊற்றி அடுப்பில் ஏற்றுதல் என அன்றாட அலுவல்களைச் செய்ய ஆரம்பிப்பாள் பகவதி.

ஆனையிறவிலிருந்தோ, பலாலியிலிருந்தோ ஏவப்படும் ‘ஷெல்’ வல்லையிலோ அல்லது முள்ளியிலோ விழுந்து வெடிக்கும் அதிகாலைவரை மனோன்மணி கண்விழித்துப் படிப்பாள். எத்தனைதரம் சொன்னாலும் படுக்கைக்குப் போகாது மகள் படுக்கும் வரையில் கைவிளக்கு வெளிச்சத்தில் அறைவாசலில் குந்தியிருந்து தூங்கி வழிந்து கொண்டிருப்பாள் பகவதி.

கலைப் பிரிவில் நல்ல பரீட்சை முடிவுடன் மனோன்மணி யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்துக்கு தேர்வானதில் பகவதி உள்ளூர மகிழ்ந்தாலும், மகளைப் பிரிய வேண்டுமே என்பதை எண்ணியபோது நெஞ்சு கனத்தது. ஆனாலும் “ஒவ்வொரு கிழமை முடிவிலையும் வந்து போகலாமணை ” என்று மகள் கூறியபோது கரைவெளிச்சத்தைக் கண்ட கிளாலிப் படகுப் பயணிபோல பகவதியின் உள்ளம் எல்லையில்லாக் களிப்பெய்தியது. தடைகள் இல்லாத பெருவீதியால் யாழ்ப்பாணம் சென்று வந்தவள் காலப் போக்கில் நான்கைந்து இடங்களில் தடை தாண்டிச் சென்று வர வேண்டியதாயிற்று.

இடப்பெயர்வுகள் மற்றும் போர் அனர்த்தங்களால் மூன்று வருடப் படிப்பு நான்கு வருடங்களாக இழுபட்டது.

வெள்ளிக்கிழமைகளில் பகவதி வாசலைப் பார்த்தபடியே நாட்களை ஓட்டினாள்.

இறுதி ஆண்டுப் பரீட்சை எழுதிவிட்டு வந்து மனோன்மணி வீட்டில் இருந்த கடந்த வருடம் ஆவணி பிறந்ததன் பிறகு நிலவு பொழிந்து கொண்டிருந்த ஓர் இரவில்தான் பகவதி முதன் முதலில் மகளுடன் அப் பேச்சை எடுத்தாள்.

தாயை அழைத்து வந்து போட்டிக்கோ’ தேமா மரத்தடியில் இருத்திவிட்டு நிலவைப் பார்த்தபடியே மனோன்மணி கேட்டாள். “அம்மா அதுக்கெல்லாம் இப்ப என்ன அவசரம்?”

“வெளிநாட்டு அதுவும் சுவிசில் மாப்பிள்ளை . வலிய வாற சம்பந்தம். சீதன வாகனம், இனாம் கினாம் எண்டு ஒரு வாகடமு மில்லை. இதை விட்டால் வேறையென்ன பிள்ளை எங்களுக்கு வழி?”

– “வலிய வாற சம்பந்தம் எண்டதற்காகவும், வழி இல்லை எண்டதற்காகவும் திருகுவலியைத் தேடிக் கொள்ளக் கூடாதம்மா. இடம் பெயர்ந்து வந்த சனங்கள்….. ஆறேழு மாதங்களாகத்தான் தாய் தகப்பனையே தெரியும். மகனைப் பற்றி அந்தாளின்ரை கரக்ரரைப் பற்றி எதுவுமே தெரியாத நிலையிலை….. எப்படியம்மா?”

“பொடியன் தங்கப் பவுணாம் பிள்ளை ”

“தறுதலைப் பிள்ளையளையும் தாய் தகப்பன் தங்கப் பவுண் எண்டுதானணை சொல்லுவினம். படிச்சவரா, உழைப்பு எப்படி? இதெல்லாம் விசாரிச்சனியே?”

“அட்வான்ஸ் லெவல் மட்டும் படிச்சவராம். அங்கை தொழிற்சாலை ஒண்டிலை இரவு பகலா வேலை செய்யிறாராம்.”

தாயின் ‘ரெடிமேட்’ பதில்கள் தனது எதிர்காலத்தினை நிச்சயிக்கும் அடுத்த கட்ட நடவடிக்கையில் அவள் உறுதி கொண்டிருப்பதை மனோன்மணிக்கு உணர்த்தவே, நிலவில் பளபள என மின்னிய கண்ணீர்த் திவலை நிரம்பிய தாயின் கண்களை நோக்க முடியாதவளாக மேலும் பேச்சை வளர்க்காது, வீட்டினுள் நுளைந்து, அகப்பட்ட வாங்கிலில் விழுந்து படுத்து அப்படியே நித்திரையாகிப் போனாள்.

கொட்டாவி எடுத்து நெட்டி முறித்தவாறே அன்றைய காலை மிக ஆறுதலாகவே புலர்ந்தது.

“பொடிச்சி என்னவாம் அக்கை?”

அடுக்களைக்குள் பற்றும் அடுப்பினில் வற்றி வருகின்ற பாணியைப் பதம் பார்த்துக் கொண்டிருந்த பகவதி நாதனின் குரல் கேட்டு நிமிர்ந்தாள்.

“அவளுக்கு அவ்வளவு விருப்பமில்லையடா. மாப்பிள்ளைப் பொடியன்ரை பழக்க வழக்கம் தெரியாமல் எப்பிடிச் செய்யிற தெண்டு யோசிக்கிறாள் போல கிடக்கு”

“நாளைக்குப் பின்னேரம் நல்ல நாளாம். மாப்பிள்ளை பகுதி எங்களை வேள்வு கொண்டு வருமெண்டு எதிர்பாக்கினமாம். இப்பத் தான் பூங்கொல்லைக் கிணத்தடியிலை என்னைக் கண்ட இடத்திலை ‘புறோக்கர்’ சொன்னார். நிலமை அப்படியிருக்கைக்குள்ளை நீ என்ன பூராயக் கதை சொல்லுறாய் அக்கை?”

“மாமா…….. நாளைக்கு வேள்வு கொண்டு போறதுக்கான அடுக்கு நிரையளைச் செய்யுங்கோ.” அம்மிக்கு மேல் கவிழ்த்திருந்த ‘பிளாஸ்ரிக்’ வாளியை அள்ளி எடுத்தவாறே நல்ல தண்ணி அள்ளச்

செல்லும் மகளை பகவதி அப்போது தான் கவனித்தாள்.

உச்சி வகிடெடுத்து தலையை வாரிக் கட்டியிருந்தாள். தலையில் பூசியிருந்த எண்ணெயில் காலை வெயில் பட்டுத் தெறித்தது. என்றுமில்லாத நிதானம் அவளது நடையில் தெரிந்தது.

***

வயல் வெளியில் வெள்ள வாய்க்கால் பக்கமாக இப்போது தலைக்கறுப்பொன்று தெரிகின்றது. பகவதி உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள். நாரியை ஒரு பக்கமாக வளைத்து கையை இடுப்பில் வைத்தவாறே…. நாதனே தான்…. வந்து கொண்டிருந்தான்.

“அம்பாள் அடியார்களே! இதோ இன்னும் சில நொடிகளில் வேட்டையாட அம்பாள் எழுந்தருளவுள்ளார். வேட்டைக்கு விரையவுள்ள அம்பாளுடன் அடியார்களும் கலந்துகொண்டு உய்தி அடையுமாறு அன்பாக வேண்டுகின்றோம்.” திடீரென்று வடக்கி லிருந்து ஒலிபெருக்கி உச்சஸ்தாயியில் கத்துகின்றது.

படலையைத் திறந்து விறுவிறுவென உள் நுளைந்த நாதன் தேமா மரத்தைத் தாண்டி ‘போட்டிக்கோ’வில் போட்டிருந்த வாங்கிலில் வந்தமர்ந்தான்.

அவனது உதட்டினையே பகவதி உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

ஓட்டிற்கு மேல் தங்கிப் பிரிந்து செல்லும் தேமாக் கிளையையே வறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் அவன்.

“என்ன அப்பு கதைச்சனியே பொடிச்சியோடை?”

நாதனின் மௌனம் பகவதியின் பதற்றத்துக்கு மேலும் எண்ணெய் ஊற்றியது.

“பிள்ளை என்னவாம் தம்பி?” வாங்கிலடிக்கு வந்து அவன் கண்களை உற்றுப் பார்த்தாள் பகவதி.

“என்னத்தை அக்கை சொல்ல?” “ஏனப்பு என்ன நடந்தது?”

“எல்லாமே முடிஞ்சுது. ரண்டுபேரும் பிரிஞ்சுதான் அக்கை இருக்கினம்.”

“ஐயோ…. அம்மாளாச்சி….. உன்ரை கண்ணுக்கு முன்னாலை இருக்கிற என்னை அந்த நாளையிலை இருந்து ஏன் இப்படிச் சோதிக்கிறாய்? தம்பி …… என்ன பிரச்சினையாம்?”

“எங்கடை பொடிச்சியின்ரை மனப்பாங்கு உனக்குத் தெரியுந் தானே அக்கை? அவளின்ரை சுதந்திரத்திலை போக்கிலை எவருமே தலையிடக் கூடாது. அந்த அவளின்ரை கொள்கைதான் இஞ்சை வினையாய் வந்திருக்கு”

“என்ன சொல்லுறாய்?”

“எனக்கு அந்தாளைப் பிடிக்கையில்லை. எதிர்காலத் திட்டமே இல்லாத, அடிப்படை நாகரீகம் தெரியாத, பெண்களின்ரை உணர்ச்சிகளை, உரிமைகளைப் புரியாத ஜடம்! அந்தாளோடை ஒத்துப் போய் என்னைத் துலைக்க வேண்டிய அவசியம் ஒண்டும் எனக்கில்லை. நான் நானாகவே வாழ விரும்புறன். அதனாலைதான் அந்தாளை விட்டுப் பிரிஞ்சு தனியாக இருக்கிறன் எண்டு சொன்னாள்.”

“நீ ஒண்டும் புத்திமதி சொல்லையில்லையோடா?”

“புருஷனோடை ஒத்துப் போ எண்டு நாங்கள் சொல்லுற எல்லையைக் கடந்து நிக்கிறாள் அக்கை அவள்! ஏதோ ஒரு பிரச்சினையிலை ஒரு நாள் அடிக்கக் கையோங்கியிருக்கிறான் போல கிடக்கு. ‘உந்த ஆதிக்கம், அதட்டல்களை வேறை எங்கையாவது வைச்சுக் கொள்ளும்’ எண்டு சொல்லி தூக்கின கையை மடக்கி விட்டிருக்கிறாள் பொடிச்சி. ‘என்னோடை நீ மல்லுக் கட்டவோ’ எண்டு அவனும் தொடங்கினதிலை கலாதி கிழம்பி அடுத்த ‘அப்பாட்மென்டிலை’ இருக்கிறதுகளும் தலையிடுகிற அளவுக்கு பிரச்சினை முத்திப் போச்சுதாம்.”

“பொடியனோடும் கதைக்கப் போறன் எண்டு போனாய். கதைச்சனியோ?”

“கோல் எடுத்தனான் தான். ஆள் இல்லை. ஆனால் பொடிச்சி யோடை ஒண்டா இருக்கிற ஆரோ மானிப்பாயில் பொடிச்சியாம். அதோடை கதைச்சனான். உந்தக் கொடுமைக்காரனோடை சித்திர வதை பண்ணுறவனோடை ஆர் குடும்பம் நடத்துவாளவை? எண்ட ‘பிளானிலை’ தான் சொல்லிச்சுது. அக்கை, இப்போதையில் பொடிச்சியள் முந்தின பெண்டுகள் மாதிரியில்லை…. கோபங் கண்ட இடத்திலை கொதிச்சு எழுவாளுகள்.”

“மகம் நட்சத்திரக்காரி. இயல்பாகவே றாங்கியானவள். அடி பட்டு, சித்திரவதைப்பட்டு வாழுறதை விரும்பவா போறாள்? கிளிப் பிள்ளையாகப் பொத்திப் பொத்தி வளர்த்து குரங்கின்ரை கையிலை குடுத்திட்டம். கிணத்துப் படி தெரியாமல் வளர்த்து பாண் கிணத்துக்கை தள்ளிப் போட்டம். அந்தக் கண் காணாத தேசத்தில தனியா இருந்து என்ரை பிள்ளை என்ன செய்யப் போறாளோ?”

“அக்கை, பதட்டப்படாதை. நாங்கள் பதறுறமே ஒழிய பொடிச்சி திடமாத்தான் இருக்கிறாள். எழுத்தை விலத்த நோட்டீஸ்’ குடுத்திருக்கிறாளாம். வலு கெதியிலை உன்னையும் அங்கை கூப்பிடப் போறாளாம். இப்ப அவள் உழைக்கத் தொடங்கீட்டாளாம். வாகனம் கூட வாங்கப் போறாளாம்…”

“அம்பாள் அடியார்களே! இதோ… சூழ்ந்த வதைகளை வேட்டையாட அம்பாள் சிங்க வாகனத்தில் எழுந்தருளி விட்டாள். உங்கள் வாசலில் அம்பாளைத் தரிசித்து உய்தி அடைய வேண்டுகின்றோம்.” வடக்கிலிருந்து வந்த காற்று காதுகளை அதிர வைத்தது.

“அக்கை அம்மாளாச்சி வேட்டைக்கு வெளிக்கிட்டுட்டா. வாசலிலை நிறைகுடம் வைக்கேல்லையே?”

“அதுகளுக்கு இப்ப நேரமில்லை. அம்மாளாச்சிக்கு சாத்த பட்டுச் சேலையும் பழம், பாக்கு, வெத்திலையும் வாங்கி தாம்பாளத் திலை முன்னறைக்குள்ளை வைச்சிருக்கிறன்….. போய் எடுத்துக் கொண்டு வா…”

“பத்திரகாளி அம்மனுக்கு அரோகரா….. அம்மாளாச்சிக்கு அரோகரா!” வடக்கிலிருந்து எழுந்த ஒலி கிராமம் முழுவதும் எதிரொலித்தது. பகவதி வீட்டுப் படலையையும் தாண்டி ஊரே திரண்டு செல்கிறது.

வேட்டியும், வெறும் மேலுமாக தாம்பாளத் தட்டை ஏந்திய நாதன் படலையைத் திறந்து வந்து அம்பாளுக்கு முன் கை கட்டி நிற்கும் குருக்களிடம் நீட்டுகின்றான்.

பட்டைச் சாத்தி, பழத்தையும் தீபத்தையும் அம்மனுக்கு காட்டி விட்டு எரியும் தீபத்தை நீட்டுகிறார் குருக்கள்.

“அம்மாளாச்சி… என்ரை பிள்ளைக்குத் துணையா இரு தாயே!” பகவதி அம்மனை நோக்கி கைகளைக் கூப்புகிறாள்.

கொடிய அரக்கனின் கபாலத்தைக் காலில் மிதித்து கைகளில் வாள், சூலத்துடன் நாக்கை வெளியில் நீட்டிய வாறே அக்கினிப் பிளம்புகள் மத்தியில் பத்திரகாளி அம்மன் கொடுஞ்சினத்துடன் தரிசனம் கொடுத்துக் கொண்டிருந்தாள்.

– ஞாயிறு தினக்குரல் 25-11-2001 – கனகசெந்தி கதாவிருது பெற்ற சிறுகதைகள், முதற் பதிப்பு: 21-07-2008, தொகுப்பாசிரியர்: செங்கை ஆழியான், மீரா பதிப்பகம், கொழும்பு.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *