வெள்ளைச் சேவலும் தங்கப் புதையலும்

2
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: December 9, 2012
பார்வையிட்டோர்: 44,324 
 
 

ஒரு பணக்காரருக்குக் கலயம் நிறைய தங்கக் காசுப் புதையல் கிடைத்தது. அந்த ஊர்க்காட்டின் தரை அப்படி. பூர்வீகத்தில் அந்த மண்ணில் அரண்மனைகள் இருந்ததாகவும், வசதியான ராஜ குடும்பங்கள் வாழ்ந்ததாகவும், மக்களி டம் கதைகள் உண்டு.

வீடு கட்ட வானக்கால் தோண்டும்போதோ, கலப்பை கட்டி முங்க உழும்போதோ, இப்படி பூமி புதையலோடு சிரிக்கும். சுற்றுமுற்றும் பார்ப்பார்கள், யாராவது பார்க்கிறார்களா என்று. யாரும் இல்லாவிட்டால் உழுவதை நிறுத்திவிட்டு, முங்க உழும்போது கட்டும் கல்லை அவிழ்த்து, அந்த இடத்தில் அதையே ஒரு அடையாளமாக வைத்துவிட்டு, வேறு இடத்தில் உழ ஆரம்பிப்பார்கள்!

உழவுதான் ஓடுமே தவிர, மனசு தவித்துக்கொண்டு இருக்கும். குறிப்பிட்ட நேரத்தை ஒப்பேத்திவிட்டு ஏரை மட்டும் நிலத்தில் விட்டுவிட்டு, கேட்கிறவர்களுக்கு ஏதேனும் பொருத்தமான ஒரு சாக்கைச் சொல்லி விட்டு, மாடுகளைப் பத்திக்கொண்டுவந்து தொழுவத்தில் கட்டிவிட்டு வீட்டுக்குள் வந்தால், “என்னெ, மாட்டுக்குக் கூளம்கூடப் போடாம வர்றீங்க?” என்று மனைவி கேட்பாள். “என்னெ சீக்கிரமா வந்திட்டீக… உடம்புக்குச் சரியில்லையா?” என்றும் கேட்பாள். அவர் மனைவியைப் பார்த்துச் சிரிப்பார். ‘என்ன சிரிப்புமானம்?’ என்பதுபோலப் பார்ப்பாள். ‘இந்த மூதியிட்ட சொல்லலாமா வேண்டாமா. முதக் காரியம் ஊரெல்லாம் கிடுகட்டி அடிச்சிருவாளே. சரியான ஓட்டை வாய் ஆச்சே… என்ன செய்ய?’ என்று மனசுக்குள் மருகுவார். சமயம் ஏற்படும்போது சொல்லலாம் என்று பல்லைக் கடித்துக்கொண்டு, மனசை இறுக்கிக்கொள்ளுவார். படுவேகமாகக் கொஞ்ச தூரம் ஓடிவிட்டு வந்தால்தான் சரியாகும்போல!

பானையடிக்குப் போய்த் தலை வழியா மளமள என்று ஒரு பத்துப் பதினைந்து போகிணி பச்சைத் தண்ணீரை மொண்டு மொண்டு ஊற்றிக்கொண்டார். ‘பக்கத்து ஊருக்கு ஏதாவது சோலி இருக்காம இந்நேரம் குளிக்க மாட்டாரெ’ என்று மனைவிக்கு யோசனை. ‘சரீ… சரீ; கிளை மேலே ஆடினாலும் துட்டு வாங்க தரைக்கு வந்துதானெ ஆகணும்’ என்று நிதானப்படுத்திக்கொண்டாள் வீட்டுக்காரி.

தலையைத் துவட்டி, வேட்டியை மாற்றிக்கொண்டவர், அடுப்பங் கூடத்துக் குள் வராமல், வீட்டுக்குப் பின்னால் மேயும் கோழிகளைப் போய்ப் பார்த்துக்கொண்டு இருந்தார். ‘சனிக்கிழமை சனிக்கிழமைதானெ கோழியடிக்கிறது; இன்னெக்கி புதங்கிழமைதான. அதுக்குள்ளெ கோழிக் கறி ஆசை வந்துட்டதா?’ என்று நினைத்துக்கொண்டு, “என்னெ, அங்கே போயி மேயிற கோழிகளெப் பார்த்துக்கிட்டு..?” என்று கேட்டுக்கொண்டே அவர் பக்கம் போகிறாள்.

“வெள்ளைச் சேவல் எங்கே?” என்று கேட்க வும், “என்னத்துக்கு இப்பொ வெள்ளைச் சேவல்; பொதையல் கிதையல் தட்டுப்பட்டு இருக்கா?” என்று கேட்கவும், இவர் பளிச் சென்று திடுக்கிட்ட மாதிரி அவள் முகத் தைப் பார்க்கவும், இவர் சிரிக்க… அவள் சிரிக்க… “அட! ஒண்ணுமில்லெ… ஒரு வேளை புதையல் கிடைச்சிட்டதூனு வச்சிக்க, அந்நேரத்துக்கு வெள்ளெச் சேவலைப் போயித் தேடணுமெ. இப்பவே தயார் பண்ணிவச்சிக்கிட்டா நல்லது இல்லையா?” என்று கேட்கிறார். இவள், “பொதையல்தானெ, நமக்குக் கட்டாயம் கிடைக்கும்” என்று இளக்காரமாகச் சொல்ல, “அட கோட்டிக்காரீ… அப்பிடியா நெனைக்கெ. பாத்துக்கிட்டே இரு” என்று சொல்லீட்டு, வெள்ளெச் சேவல் கண்ணுக்குத் தட்டுப்பட்டதும், போயி நார்க் கட்டிலில் படுத்துக்கொண்டு, பகல் கனவு காண ஆரம்பித்துவிட்டார்.

தீபம் பொருத்தியதும் எழுந்திருந்து அடுப்படிக்கும் பட்டாசாலைக்கும் கையைப் பின் பக்கம் கட்டிக்கொண்டு லாத்தலாக நடந்துகொண்டே இருந்தார்.

வட்டிலையும் செம்பில் தண்ணீரையும் கொண்டுவந்து வைத்ததும், “ம்… என்ன சாப்பாடு இன்னிக்கி?” என்று சொல்லிக்கொண்டே உட்கார்ந்தார். வெதுவெதுப்பான குதிரைவாலிப் பருக்கை பொலுபொலுஎன்று வட்டிலில் விழுந்தது. மனசுக்குள் இவர் ‘எதையெல்லாமோ சர்க்காரிலெ தடை பண்ணுதாம்; இந்தக் குதிரைவாலிச் சோத்துக்கு ஒரு தடை போட மாட்டெங்கானே?’ என்று நினைத்துக்கொண்டார். பருப்புக் கறி ஊற்றி சொட்டு நல்லெண்ணெயை விட்டாள்.

“ரசத்தைக் கொண்டா” என்றார் பல்லைக் கடித்துக்கொண்டு. ரசத்தைத் தாராளமாக விட்டதும், பிசைந்து, பிழிந்து பிழிந்து, ஒரு உருண்டைக்கு ஒரு சுண்டைக்காய் வத்தலை (எண்ணெயில் பொருட்டியது) வாயில் போட்டு மென்று சாப்பிட்டு, வட்டிலோடு ரசத்தை எடுத்துக் குடித்தார். மறு சோறு வாங்கிக்கொள்ளவில்லை. போதும் என்று எழுந்துகொண்டார்.

‘பொட்டியாருக்கு இன்னைக்குச் சோறு செல்லலை. இருக்கட்டும், என்னதாம்னு பாப்பொம்’ என்று பொண்டாட்டி சொல்லிக்கொண்டாள்.

சோறு மாத்திரமா செல்லலை; தூக்கமும் பிடிக்கலை அவருக்கு.

சுருக்கிவைத்த தீபம் ஒரு புள்ளிபோல எரிந்துகொண்டு இருந்தது. நேரம் நகர்ந்துகொண்டு இருந்தது. யார் முதலில் கண் அசந்தார்கள் என்று தெரியவில்லை. குறிப்பிட்ட நேரத்தில் பொட்டியார்தான் பசக்கென்று முழித்து எழுந்தார். வெளியில் வந்து வானத்தில் வெள்ளிகளைச் சரி பார்த்தார்.

ஒண்ணுக்கு இருந்தார். பானையடிக்குப் போனார். மேல் துண்டைத் தண்ணீரில் நனைத்து அளவு தெரிந்து பிழிந்தார். படல் மேல் உட்காந்து தூங்கிக்கொண்டு இருந்த வெள்ளைச் சேவல் மேலே பக்குவமாகப் போட்டதும், அதுக்கு இயல்பான கூக்குரல் எழுப்புவதை மறந்து அமைதி காத்தது. அப்படியே சுருட்டிக்கொண்டு, கொட்டு மண்வெட்டியை எடுத்துத் தோளில் சாத்திக்கொண்டு, சத்தம் இல்லாமல் நாதாங்கியை நீக்கிக் கதவைப் பொன்னம் போலத் திறந்து அதே படிக்குச் சாத்தி விட்டுப் படியிறங்கினார்.

‘பெத்தநாச்சியா’ என்று மனசுக்குள் சொல்லிக் கும்பிட்டுக்கொண்டார்.

பார்வதி அம்மன், காளியம்மன், பிள்ளையார் என்று கோயில்களைக் கடக்கும்போது, மனசுக்குள் நினைத்துக் கும்பிட்டுக்கொண்டார். வர வர இருட்டுக் குக் கண் பழகிக்கொண்டது. சுவர்க் கோழிகளின் சத்தத்தை எல்லாம் கடந்து, வெள்ளிகள் தந்த வெளிச்சத்தில் வேகமாக நடந்தார்.

காட்டுக்கு வந்ததும், ஒரே அருக்கு, யாராவது பெறத்தாலெ வருகிறார்களா என்று திரும்பிப் பார்த்தபோது, வர்ற மாதிரிதான் தெரிந்தது. அப்பப்போ நின்று கவனித்தார்.

‘ஏ பாதகத்தி இவள்ளில்லா!’ சிரித்துக்கொண்டார். அவளும் சிரித்துக்கொண்டே வந்தாள்.

“ஏ பாவி மனுசா! எங்கிட்டெ ஒரு வார்த்தெ சொல்லப்பிடாதா, நானும் சேர்ந்தே வந்திருக்கலாம்லா?” என்றாள் வீட்டுக்காரி.

“இது என்னதுரீ; வாச்சாத்தா! யோசனைக்காரிதாம். கொட்டு மம்பட்டியவிட வாச்சாத்து தாம் தோண்ட வழி!”

“தனீயா வர்றமில்லா; பேயிக்கும் ஆச்சி, ஆளுக்கும் ஆச்சி.”

பேயை ஜெயிக்க மட்டும் இல்லை; ஆளை ஜெயிக்கவும் இரும்பு வேணும்தான்!

ரெண்டு பேரும் சேர்ந்து தோண்டினார்கள். ஒரு சர்வப் பானை கிடைத்தது. அதனுள் தங்கக் காசுகளும் நகைகளும் இருந்தன.

“சேவலை எடும்; பத்திரம்.” அவள் பிடித்துக் கொள்ள… இவர் சேவலின் தலையைத் துண்டித்து, ரத்தப் பலி காண்பித்து, புதையல் இருந்த பள்ளத்தில் சேவலைப் போட்டு மூடினார்கள்.

புதையல் வீடு வந்து சேர்ந்தது.

அதுக்குப் பிறகுதான் அந்த மாற்றங்கள் எல்லாம் நிகழ்ந்தன. எந்த வீட்டுக்குளெல்லாம் ‘லட்சுமி தேவி’ நுழைந்தாளோ, அந்த விநாடி யில் இருந்து அந்த வீட்டார்களின் முகம் காண்பித்துக் கொடுத்துவிடும். தொங்கப் போட்டுக்கொண்டு நடந்த தலைகள் நிமிர்ந்துவிடும். யாரையும் எதிர் கண் பார்ப்பார்கள். கும்பிடு போட்டால் தலை மட்டும் அசைப்பார்கள். லட்சத்தில் சிலர்தான்- ‘தகர வீட்டு தொரசாமி நாயக் கர்’போல – விதிவிலக்காக இருப்பார் கள்.

புதையல் கிடைத்த நாளில் இருந்து வீட்டுக்காரியின் நச்சரிப்புத் தாள முடியலை. இனி, எத்தனை நாளைக்குத்தாம் இப்படி வெறுங் கழுத்தோடயே இருப்பேன். வெறுங்கழுத்தோட என்று அழுத்திச் சொல்லுவாள். “அடியே கோட்டிக்காரி, நகை செய்யத் துட்டு எங்கெயிருந்து வந்ததுன்னு யாரும் கேட்டா, என்ன பதில் சொல்லுவெ?”

“பிறகு எப்பதாம் நகை செஞ்சிப் போட்டுக்கிறது; செத்ததுக்குப் பிறகா?”

“பொறூ பொறூ, ஒனக்கில்லாத நகையா” என்று செல்லங் கொஞ்சுவார்.

வீட்டில் எல்லாரும் அசந்து தூங்கிய பிறகு, இவர்கள் இருவர் மாத்திரம் விளக்கை எடுத்துக்கொண்டு அரங்கு வீட்டுக்குள் வருவார்கள். அங்கே நாலு முக்குகளிலும் ஆள் உசரத்துக்கு வரீசையாக அடுக்குப் பானைகள் ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கியிருக்கும். முத்தாத்தா காலத்துப் பானைகள். தூரப் போட மனசு வராமல், அப்படி அடுக்கிவைத்துஇருப்பார்கள். பெரும்பாலான பானைகளில் ஒன்றும் இருக்காது! பெட்டி வகைகள் புழக்கத்துக்கு வராத காலம். எப்பவாவது நல்லதுகளுக்கு உடுத்திக்கொள்ள என்று வைத்திருக்கும் சேலை துணிமணிகள் எல்லாம் அந்த அடுக்குப் பானைகளுக்குள்தான் வைத்துக்கொள்கிறது.

ஒவ்வொரு முக்கிலும் (மூலை) உள்ள பானை அடுக்குகளுக்கும் கீழாக ‘கீழ்ப்பான’ என்று உண்டு. பூமியைத் தோண்டி ஒரு பானையைப் பதித்துவைத்து இருப்பார்கள். அதற்கு மூடியாக ஒரு சச் சதுரக்கல் அல்லது பலகையைப் பதித்து அதன் மேல் பிரிமணை, அதுக்கு மேல் அடுக்குப் பானையின் முதல் பானை. புதைக்கப்பட்ட பானைதான் அந்தக் காலத்துப் பாதுகாப்புப் பெட்டகம். இவற்றில் யாருக்கும் தெரியாமல் வைக்கப் படும் பூசணங்கள் புசணம் பத்திப் போவதும், காலவசத்தால் அப்படியே புதுந்துபோய், யாருக்கோ புதையலாகக் கிடைப்பதும் உண்டு.

பொட்டியாரும் மனைவியும் கொண்டுவந்த தங்க நாணயங்களையும் நகைகளையும் அந்தப் புதை பானையில் கொண்டுவந்துதான் ராவோடு ராவாக வைத்தார்கள்.

சமயம் வாய்க்கும்போது எல்லாம் யாருக்கும் தெரியாமல் எடுத்துப் பார்ப் பதும், தடவிப்பார்ப்பதும், அதேபடிக்கு வைத்துவிடுவதும் நடந்துகொண்டு வந்தது.

பழுத்த மாம்பழத்தை எவ்வள நேரம்தான் முகர்ந்து பார்ப்பதும், மோவாயில் வைத்துத் தடவியும் பார்த்துக்கொண்டு இருப்பது.

ஒருநாள், அந்த அம்மாவுக்குக் கழுத் தில் ‘பொன்னுக்கு வீங்கி’ என்ற நோய் (வீக்கம்) வந்துவிட்டது. வழக்கமாக அது குழந்தைகளுக்குத்தான் வருமாம்.அதைப் பார்த்தவர்கள் சொன்னது; “யாரிட்டெ யாவது ஒரு வாரம் பத்து நாள்னு ஒரு தங்கச் சங்கிலி வாங்கிப் போட்டுக்கொ, சரியாப் போயிரும்.”

“அடுக்குப் பானைக்குள்ள மலைபோல தங்கம் கிடக்கும்போது, ஊராரிட்டெப் போய் என்னத்துக்கு தங்கச் சங்கிலிக்குத் தொண்ணாந்துக்கிட்டு இருக்கணும்” என்று பொட்டியாரிடம் பல்லைக் கடித்துக்கொண்டு கிசு கிசுத்தாள்.

ஞாயம்தான் ஞாயம்தான்; அதென்ன நினைச்சவுடன் திட்டிக்கிற காரியமா.

அன்றைக்கு அதில் இருந்த ஒரு அய்ந்தாறு தங்க நாணயங்களை எடுத்து முந்தித் தலைப் பில் முடிந்துகொண்டாள். எதுக்கு என்று கேட்டதுக்கு தலைக்கடியில் வச்சிப் படுத்துக் கிடத்தாம் என்று அவரை முழங்கையால் செல்லமாக ஒரு இடிவைத்துச் சிரித்தாள்.

நகை செய்யும் ஆசாரியாரிடம் தந்து, ‘அவசரமாக ஒரு எட்டுப் பிடி அளவில் நாலு வடம் சங்கிலி வேணும்’ என்று தந்தார்கள். அந்தக் காலத்தில் இருந்தே பூர்வீகமாக வீட்டில் இருந்த காசுகள் என்றார்கள்.

பழியாகப் பக்கத்திலேயே இருந்து வாங்கிக் கொண்டு வந்தார்கள்.

இந்தப் பக்கம் வந்ததும், “இப்பவே கழுத்தில் போட்டுக்கிடவா?” என்று கேட்டதும், “தங்கமாப் போட்டுக்கிடலாம்” என்றார் பொட்டியார். “தங்க ஊசியும் தங்க நூலும் இருந்தால், இந்த வாயை இறுக்கித் தச்சிரலாம்” என்றார். “வாயைத் திறக்க மாட்டேம்; பயப்படாதீங்க” என்றாள்.

தங்கக் காப்பு செய்து போட்டுக்கொண்ட வன் கதை எல்லாருக்கும் தெரிந்ததுதான். புதையல் கிடைத்த அன்று பணியார மழை பெய்தது போன்ற கதைகள் எல்லாம் சும்மா உண்டாவது இல்லையே!

போதாக்குறைக்கு உதிட்டிரனுடைய (தருமன்) சாபம் வேற இருக்கே. ரகசியம் ராத்தங்குமா இவர்களிடம். எப்படியும் வெளி வந்துவிட்டது. அரசாங்கத்தில் இருந்து அதிகாரிகள், காவலர்கள் என்று வந்து பாத்திரத்தோடு புதையலும் நகைகளும் போயேபோச்சி.

ஆனால், முதலில் – ஆரம்பத்தில் சொன்ன பணக்காரருக்குக் கிடைத்த புதையல் கதை வேற மாதிரி. அதைச் சொல்ல வந்தபோதுதான், இந்தக் கதை குறுக்கே வந்துவிட்டது. அதனால் குற்றமில்லை.

இந்தப் பணக்காரருக்கு ஊருக்குள்ளே மகா கஞ்சன் என்று பேர். ஒரு பேச்சுப் பேசி னால்கூட, வார்த்தை செலவாகுமே என்று நினைத்துப் பேசவே துட்டுக் கேட்கக்கூடியவர்.

இப்பேர்ப்பட்ட ஒருவருக்குத்தான் அந்தப் புதையல் கிடைத்தது. புலங்களில் இருந்து, எல்லாரும் வேலை முடிந்து சாயந்திரம் வீடு திரும்பிக்கொண்டு இருப்பார்கள். அப்பப் பார்த்துத்தான் இவர் தனது புலங்களைப் பார்க்க ஒரு சிறிய வாச்சாத்தை எடுத்து தோளில் போட்டுக்கொண்டு, அதன் மேலே மேல் துண்டைப் போட்டுக்கொண்டு புறப் படுவார்.

எந்தெந்தப் பாதை வழியாக மக்கள் வீட்டுக்குத் திரும்பி வருவார்கள் என்று தெரியும். அதுகளைத் தவிர்த்துவிட்டு, இவர் குறுக்குப் பாதைகள் வழியாகத்தான் போகிறது. வழக்கமான பாதை வழியாகப் போனால், தெரிந்தவர்கள் யாராவது வந்தால், பேச்சுக் கொடுப்பார்கள். பேச்சு வைத்துக்கொண்டால், பொழுது வீணாகிவிடும் என்று.

தன்னுடைய புலத்தில் கால்வைத்ததும், அவருடைய சுடுமூஞ்சி தன்நிலைக்கு வந்துவிட்டது; பெத்த குழந்தையைத் தொட்டவுடன் எந்த அப்பனுக்கும் முகம் மலர்ச்சி அடையுமெ, அதுபோல.

அந்தப் புலத்தைப் பெற அவர்பட்ட பாட்டைச் சொல்ல இது நேரம் இல்லை. நேராக வன்னி மரத்தெப் பார்த்துப் போனார். அது மரம் மட்டும் இல்லை; மரப்புதர். பஞ்ச பாண்டவர்கள்அக்ஞாத வாசம் போவதற்கு முன்னால் அவர்களுடைய ஆயுதங்களை இப்படியாப்பட்ட ஒரு வன்னிப் புதருக்குள்தான் ஒளித்துவைத்துவிட்டுப் போயிருக்க வேண்டும்.

பாரதம் வாசிக்கும் ரசிகனுக்கு வேண்டு மானால், இந்த வன்னிப் புதர் புனிதமாகத் தெரியலாம். கரிசல் காட்டுச் சம்சாரிக்கு இது, களையிலும் களை. மகா பெரிய களை.

தன்னுடைய புலத்தினுள் விட்டிருக்கும் ஒரு கனமான வேரை வெட்டும்போதுதான் அப்படி ஒரு வித்தியாசமான சத்தம் கேட்டது.

கவிஞர்கள் என்றால், அது லட்சுமி தேவியின் சிரிப்பொலி என்றுவிடுவார்கள். இவர் பாவம், என்னத்தைக் கண்டார். சந்தேகம் வந்து விரலைவிட்டு நோண்டிப் பார்த்தார். “ஆத்தா, நீ இங்கதாம் இருக் கியா?” என்று சொல்லிக்கொண்டார். எல்லாரும் செய்வதுபோல சுற்றுமுற்றும் பார்த்தார். பொழுது மலை வாயிக்குள் இறங்கிவிட்டு இருந்தது.

வாச்சாத்தால் அந்த வேரைப் பதமாக வெட்டினார். பிறந்து விழுந்த பிள்ளையை எடுப்பதுபோல இதமாக எடுத்தார். அந்த உலோகக் கலயத்துக்குள் கையைவிட்டு எடுத்துப்பார்த்தார். ஆண்டுகள் எத்தனை ஆனாலும் பொன்னின் கண்களின் பிரகாசம் மினுமினுப்பு அப்படியே இருந்தது.

துணையாக யாரும் இல்லாதது நல்லதாய்ப்போச்சி. ‘கல்விக்குத்தான் இருவர், களவுக்கு ஒருவர்’ என்று தெரியாமலா சொன்னான்.

ரத்தப் பலி கொடுக்கிறது எல்லாம் செலவுதானெ என்று நினைத்தார். போனாப் போகுது என்று ஒரு வன்னி மரத்து முள்ளில் இடது கைப் பெருவிரலை அழுத்தி, சொட்டு ரத்தத்தை அந்த வன்னி மர வேரில்வைத்துக் கும்பிட்டுவிட்டுக் குழியை மூடிவிட்டு, வந்த அதே குறுக்குப் பாதை வழியாக இருட்டோடு இருட்டாக வீடு வந்து சேர்ந்தார்.

அவருடைய பொண்டாட்டி கண்ணை மூடியதில் இருந்து, மூணு வேளையும் கம்மங் கஞ்சிதான். பிள்ளை குட்டி என்ற அல்லல் இல்லை. ராத்திரி ஒரு வேளைக்கு பக்கத்து வீட்டு வரிசைச் சொக்காரர்களின் வீடுகளில் இருந்து ஏதாவது ஒரு தொடு கறி வரும். அதெத் தொட்டு ராத்திரிப் பொழுது கழிந்துவிடும்.

சொக்காரர்களில் – தாயாதிகள் – இவர் நடுவுள்ளவர். ஒருத்தருக்குள் ஒருவர் யாரோடு யாரும் பேசிக்கொள்வது இல்லை. (பேசினால் சண்டைதான் வரும் என்ப தால், பேசிக்கொள்வது இல்லை!)

சொக்காரர்கள் வீட்டுப் பெண்பிள்ளை கள் மாத்திரம் வந்து இவரோடு பேசுவார் கள்; வீட்டைத் தூத்து சுத்தம் பண்ணு வார்கள்; தலைவாசலைச் சேர்த்தே சாணி தெளிப்பார்கள். நாளைக்கு இவர் செத்துப் போனால், இவர்களுக்கு சொத்தில் பங்கு வருமெ; அதனாலுங்கூட. “எதாவது வேணும்னாக் கேளுங்க சித்தப்பா” அல்லது பெரியப்பா என்று அந்தப் பெண் பிள்ளைகள் கேட்டால், இவர் எங்கேயோ ஒரு திசையில் பார்த்துக் கொண்டு கழுத்து வலிக்காரன் போலத் தலை அசைப்பார்.

புதையல் வீட்டுக்கு வந்ததும் தலைகீழ் மாற்றம் நிகழ்ந்தது!

அரங்கு வீட்டு அடுக்குப் பானை மிடா ஒன்றில் ஒளித்துவைத்துக்கொண்டு, அதில் இருந்து மடி நிறையக் கட்டிக்கொண்டுபோனார். திரும்ப வந்தபோது ‘ஏழுமலை வெங்கடேசப் பெருமான்போல ‘நகைக்காச்சி மரம்போல’ ‘உச்சியில் இருந்து உள்ளங்கால் வரை’ நகைகளாகப் பூட்டிக்கொண்டு வந்து நின்றார்.

கனமாக ரெண்டு வடத்தில் அரைஞாண் கயிறு, பத்து விரல்களுக்கும் மோதிரங்கள், முறுக்குவடத்தில் மைனர் செயின். புலி நகம் சேர்த்த செயின், நரிப் பல்கொண்ட செயின், கனமான வலக் காப்புகள் இவையெல்லாம் போக, வாய் திறந்தால் பற்கள் எல்லாம் தங்கம்!

வரிசை வீடுகளில் உள்ள தாயாதிகள் எல்லாம் அரண்டுபோய்விட்டார்கள்!

பேச்சுவார்த்தை இல்லாதவர்கள் எல்லாம் பேசிக்கொண்டால் என்ன என்று தோன்றிவிட்டது.

அவர்கள் வீட்டுப் பெண் பிள்ளைகள் எல்லாம் வந்து ‘பெரியப்பா… சித்தப்பா; சித்தப்பா… பெரியப்பா’ என்று கொண்டாடினார்கள். சமையல் செய்துவைத்தார்கள். சமையல் செய்து கொண்டுவந்தார்கள். எப்பப் பார்த்தாலும் வீடு கலகலப்பாகி விட்டது.

“லேய், அந்த முடிவானுக்கு வந்த வாழ்வைப் பாத்தியா” என்று ஒரு கிழவர் கேட்க, இன்னொரு கிழவர் “அவனுக்கு என்னப்பா, தங்கத்திலேயே அதெக்கூட செய்து மாட்டிக்கிடுவான்!” என்று சொல்லிச் சிரித்தார்கள்.

ஒரு நல்லது நடந்தா இன்னொரு அல்லதும் நடக்கும் என்பார்கள். அப்படியேதான் நடந்தது. ஒருநாள் ராத்திரி படுத்தவர், எழுந்திருக்கவே இல்லை!

“அடடா, எப்பேர்ப்பட்ட சாவு!” என்று தாயாதிகள் எல்லோரும் வந்து இளவு கொண்டாடினார்கள்.

அவருக்கு, மேலே விழுந்து அழுவதற்குப் பெத்த தாயோ, பெண்டாட்டியோ, மகள் களோ கிடையாது. பிடாங்கு வேட்டுப் போட்டு, சிங்காரித்த தேரின் முன்னே சிலம்பாட்டங்களுடன் கொட்டு முழங்க அட்டகாசமாக ‘காட்டுக்கு’க் கொண்டுபோக ஏற்பாடுகள் நடந்துகொண்டு இருந்தன.

பளபளக்கும் தங்கக் காசே நெற்றியில் மினுங்கியது. இப்பேர்ப்பட்ட ‘கப்பலுக்கு’ வெறும் பச்சரிசியை மஞ்சள் தேய்த்து வாய்க்கரிசியாகப் போட்டால் எப்படி, தங்கத்தினாலேயே வாய்க்கரிசி செய்து கொண்டுவர ஏற்பாடாகிவிட்டது.

பேசாத தாயாதி – சொக்காரர்கள் – எல்லாம் பேசி மகிழ்ந்தார்கள். அவருடைய அரங்கு வீட்டுக்கு ஒன்றுபோல் புகுந்து தேடியதில் வேண்டிய அளவு தங்கம் கிடைத்தது.

எல்லாரும் வாய்க்கரிசி போடணும், எல்லாரும் கொள்ளி வைக்கணும் என்றார்கள். கொள்ளிவைத்தவர்களுக்குத்தான் அவருடைய சொத்தில் பங்கு கிடைக்கும் என்பது நியதி.

சாவு ஊர்வலம் காட்டை நெருங்கிக்கொண்டு இருந்தது. சூழ்நிலை, மனப்புழுக்கங் களையும்விட இறுக்கமாக இருந்தது.

மேகம் இருட்டிக்கொண்டு வந்தது. சுடுகாட்டுக்குப் பக்கத்தில் இருந்த ஆல மரத் துக்குக்கிட்டே வந்ததும் தேரை மூன்று சுற்று சுற்றுவார்கள். அப்படிச் சுற்றி முடிக்கும் இடத்தில் இருந்து சுடுகாடு கிட்டதான். அந்த சுடுகாட்டுப் புளிய மரத்தடிக்கு குறுக்குப் பாதை வழியாகப் பெண்டுபிள்ளைகளின் கூட்டம் வந்து சேர்ந்து இருந்தது. கடைசி சாத்திரங்களை வேடிக்கை பார்க்கத் தயாராக.

அந்தச் சமயத்தில்தான், அந்தப் பாவி கல் மழை சரமாரியாக வானத்தில் இருந்து சோ என்ற இரைச்சலுடன், விசிறி அடித்தது. அந்த இடத்தில் வைத்துதான் இறந்தவர்களுக்கு அணிவிக்கப்பட்ட நகைகளைக் கழற்றுவார் கள். கழற்றிக்கொண்டு இருக்கும்போதுதான் கல் மழை வந்தது.

இந்தக் கல் மழையின் அடிகளில் இருந்து எப்படித் தப்பிப்பது, எங்கே பதுங்குவது என்று தெரியாமல், தேரின் கீழே பதுங்கியவர்களும் ஓடி ஒளிந்தவர்களுமாகக், கந்து கந்தாகச் சிதறினார்கள். அப்படி ஓடியவர்களில் பலர் ஆல மரத்தடிக்கும் புளிய மரத்தடிக்கும் தஞ்சம் புகுந்தார்கள்.

மழை வெறித்ததும் வந்து பார்த்தால், எந்த நகையையும் காணோம்!

நாம் போடணும்… நீ போடணும் என்று போட்டி போட்டுக்கொண்டு, தங்க வாய்க்கரிசிகளை வாங்கியவர்களையும் காணோம்.

திரும்பவும் மழை இருட்டிக்கொண்டு வந்தது.

“என்ன செய்ய முதலாளீ?” என்று குடிமகன், அம்பலக்காரரிடம் கேட்டான்.

“இடுப்புல சூரிக்கத்தி வச்சிருக்கயில்லா; பக்கத்து வாழைத் தோப்புக்குள்ளெ போயி பத்து தலைவாழை இலைகளெ அறுத்துட்டு வா” என்றார்.

“கல்லு மழை இலைகளைக் கந்து கந்தாக்கி இருக்குமே சாமி” என்றான்.

“அப்பிடி இருந்தாலுமே ஒண்ணுக்கு மேலெ ஒண்ணு போட்டு மூட்டத்தெப் பூசி கொள்ளி வச்சிரலாம்.”

“ஒத்த ஈக்குஞ்செக் காணலையே; யாரு கொள்ளிவைக்கது?”

“நீதான்டா வைக்கணும்; ‘குடிமகன்’னு உனக்கு உலகத்துல அதுக்குத்தானெ பேரு வச்சிருக்கு. தைரியமாக் கொள்ளி வையி; அவரோட (போக்காளி) சொத்துல உனக்கும் பங்கு நா வாங்கித் தருவேம்; ஊரு கூடி ஒனக்கு இதெச் செய்யும்” என்று உறுதி தந்தார்.

எல்லாமே நடந்து முடிந்தன.

காடுவிட்டு வீடு வந்து சேர்ந்த ஊர் மக்கள் அவர்களுக்குள் பேசிக்கொண்டார்கள்.

“ஆமா, அந்த நகைகள் எல்லாம் என்னவா ஆயிருக்கும்?”

‘மையோட்டம்’ போட்டுப் பார்த்தாத்தாம் தெரியும் என்று சொல்லிச் சத்தம் இல்லாமல் சிரித்துக்கொண்டார்கள்.

‘பதினாறு’ கழியட்டும் என்று காத்து இருந்தார்கள்.

போக்காளியின் நெருங்கிய சொக்காரர்கள் மட்டும் தங்களுக்குள் இப்படிச் சொல்லிக்கொண்டார்கள்.

“எப்படி வந்ததோ அப்படியே போயிருச்சி… கடவுள்னு ஒருத்தர்பாத்துக் கிட்டெதானெ இருக்காரு!”

– ஆகஸ்ட் 2011

கி. ரா என்று சுருக்கமாக அழைக்கப்படும் கி. ராஜநாராயணன், கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று கருதப்படுபவர். கோவில்பட்டியின் அருகில் உள்ள இடைசெவல் கிராமத்தைச் சேர்ந்தவர். கி.ரா என்கிற கி.ராஜநாராயணனின் முழுப்பெயர், ராயங்குல ஸ்ரீ கிருஷ்ண ராஜ நாராயணப் பெருமாள் ராமானுஜ நாயக்கர். 1923-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16-ம் தேதி பிறந்தார். ஸ்ரீகிருஷ்ண ராமானுஜம், லட்சுமி அம்மாள் தம்பதியரின் ஐந்தாவது பிள்ளை கி.ரா.[1] 1958இல் சரஸ்வதி இதழில் இவரது முதல்…மேலும் படிக்க...

2 thoughts on “வெள்ளைச் சேவலும் தங்கப் புதையலும்

  1. ஊரிலேயே பெரிய கஞ்சப் பிரபு.. அவருக்கு புதையல் கிடைக்கிறது.. யாருமில்லாத தனிக் கட்டை..
    இறந்ததும் அவருக்கு கிடைக்கும் மரியாதையை எத்தனை நகைச்சுவையுடன் விவரிக்கிறார் கி.ரா.

    ‘பளபளக்கும் தங்கக் காசே நெற்றியில் மினுங்கியது. இப்பேர்ப்பட்ட ‘கப்பலுக்கு’ வெறும் பச்சரிசியை மஞ்சள் தேய்த்து வாய்க்கரிசியாகப் போட்டால் எப்படி, தங்கத்தினாலேயே வாய்க்கரிசி செய்து கொண்டுவர ஏற்பாடாகிவிட்டது.’

    அவசியம் படிக்க வேண்டிய கதை…

  2. ஐயா கி.ரா’வின் ஒவ்வொரு கதைகளும் கரிசல் மண்ணின் கலாச்சாரம் பேசும். அந்த வரிசையில், அழகான கலாச்சாரப் பதிவு இந்தக் கதை,அவர் பாணியில்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *