கதையாசிரியர்:
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை  
கதைப்பதிவு: January 27, 2018
பார்வையிட்டோர்: 53,879 
 
 

தெலுங்கு எழுத்தாளர் திருமதி ஒல்காவின் “விமுக்தா”விற்காக அவருக்கு சாகித்ய அகாடமி விருது (2015) கிடைத்துள்ளது

பதினான்கு வருட வனவாசத்தை, பல விதமான இன்னல்களை, மாபெரும் சாகரத்தைத் தாண்டி அயோத்தியாவுக்குத் திரும்பி வரும் சீதை, ராம, இலக்குமணர்களை வரவேற்பதற்கு அந்தப்புரம் முழுவதும் திரண்டு வந்திருந்தது..

ஊர்மிளா ஒருத்தியைத் தவிர!

ஆர்வத்துடன் நாலாப்பக்கமும் தேடிய சீதையின் கண்களுக்கு ஊர்மிளா எங்கேயுமே தென்படவில்லை. மாமியார்களின் அரவணைப்புகள், குசல விசாரிப்புகள், மாண்டவி, ஸ்ருதகீர்த்தியின் நட்பு கலந்த பேச்சுக்கள், உபசரிப்புகள்…இவை எதுவும் சீதையின் மனதில் பதியவில்லை.

“ஊர்மிளா எங்கே? உடல்நலம் சரியாக இல்லையா?” பரபரப்பு கொஞ்சம் அடங்கிய பிறகு தங்கை ஸ்ருதகீர்த்தியை அருகில் இழுத்துக் கொண்டே மெதுவான குரலில் கேட்டாள் சீதை.

“ஊர்மிளா எங்கே?”

ஸ்ருதகீர்த்தியின் முகம் நிறம் மாறியது. அவள் முகத்தைப் பார்த்ததும் சீதைக்கு பயம் ஏற்பட்டது.

“ஊர்மிளாவுக்கு என்னவாயிற்று? நலம்தானே?”

சீதையின் பதற்றம் புரிந்தாலும் என்ன சொல்வது என்று தெரியவில்லை ஸ்ருதகீர்த்திக்கு.

அவள் ஊர்மிளாவைப் பார்த்து பதினான்கு வருடங்கள் ஆகிவிட்டன.

“பதில் பேசாமல் அப்படி பார்க்கிறாயே? ஊர்மிளா எங்கே? எப்படி இருக்கிறாள்?” சீதை கவலையுடன் கேட்டாள்.

“ஊர்மிளா எப்படி இருக்கிறாள் என்று எனக்குத் தெரியாது. அக்காவை நீங்கள் போன நாள் முதல் பார்க்கவில்லை.”

சீதைக்கு ஒன்றும் புரியவில்லை. தன் காதில்தான் தவறாக விழுந்திருக்கக் கூடும் என்று நினைத்தாள். குரலை உயர்த்தி “ஸ்ருதகீர்த்தி! நான் ஊர்மிளாவைப் பற்றிக் கேட்கிறேன்” என்றாள்.

“நானும் ஊர்மிளாவைப் பற்றித்தான் சொல்லிக் கொண்டிருக்கிறேன். நீங்கள் போன பிறகு ஊர்மிளா யார் கண்ணிலும் படவில்லை. தன்னுடைய மாளிகையிலிருந்து வெளியில் வரவில்லை. யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை.”

திகைத்துப் போனாள் சீதை.

“யாரையுமேவா? மாமியார்களைக் கூடவா?”

“யாரையுமே வர விடவில்லை. சேடிகள் மட்டும் போய் வந்து கொண்டிருந்தார்கள். அவளுடைய அறையில் நுழைவதற்கு சாருமதி ஒருத்திக்கு மட்டும்தான் அனுமதி இருந்தது. அவள் ஊர்மிளாவின் யோகக்ஷேமத்தை எங்களிடம் சொல்லுவாள்.”

சீதைக்கு மூச்சு முட்டுவது போல் இருந்தது.

பதினான்கு வருடங்கள் மனிதர்களுடன் பேசாமல், தன் வீட்டாரைப் பார்க்காமல் எப்படி இருந்தாள்? அப்படி இருக்க வேண்டும் என்று முடிவு செய்வதற்கு அவள் மனம் எந்த அளவுக்குக் காயமடைந்து இருக்கவேண்டும்? பதினான்கு வருடங்கள்! அவள் ராம இலக்குமணர்களையும், தன்னையும் மன்னிப்பாளா?

“இன்று நாங்கள் வருகிறோம் என்ற செய்தி ஊர்மிளாவுக்கு தெரியுமா?”

சுருதகீர்த்தி தலையைக் குனிந்து கொண்டாள்.

சீதை உடனே ராமனிடம் செல்ல வேண்டும் என்று நினைத்தாள்.. ஆனால் அமைச்சர்கள், தம்பிகள், நகர பிரமுகர்கள் சூழ்ந்திருக்கும் அந்த நேரத்தில் ராம, இலக்குமணர்களை நெருங்குவது சாத்தியம் இல்லை என்று தோன்றியது.

அதற்குள் ஸ்ருதகீர்த்தி ஒரு பெண்மணியை அழைத்து வந்தாள்.

“இவள்தான் சாருமதி.”

சீதை இனிமேலும் தாமதம் செய்ய விரும்பவில்லை. “வா அம்மா. ஊர்மிளாவிடம் செல்வோம்.”

“அவள் யாரையும் பார்க்கமாட்டாள்” என்றாள் சாருமதி சுருக்கமாக.

“யார் காரணமாக அவள் எல்லோருக்கும் தொலைவாக வாழ்ந்து கொண்டிருக்கிறாளோ அவர்களே வந்திருக்கிறார்கள் என்று தெரிந்தால் அவள் கட்டாயம் அவர்களை பார்ப்பாள். வழி நட”

சீதை கண்களாலேயே சாருமதிக்கு ஆணையிட்டாள். ஊர்மிளாவின் மாளிகை நூறு யோஜனை தொலைவில் இருப்பது போல் தோன்றியது. எவ்வளவு தூரம் நடந்தாலும் வரவில்லையே, ஏன்?

oOo

கானகத்தில் இருந்தபோதெல்லாம் இலக்குமணனுடன் ஊர்மிளாவும் தம்முடன் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று சீதைக்கு தோன்றிக்கொண்டே இருந்தது. ராம இலக்குமணர்கள் தம்முடைய பணியில் கானகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்தபோது தானும், ஊர்மிளாவும் சேர்ந்து கானகத்தின் நறுமணத்தை நுகர்ந்திருப்பார்கள் இல்லையா என்று நினைத்துக் கொள்வாள்.

ஏன் இலக்குமணன் ஊர்மிளாவை அழைத்துக் கொண்டு வரவில்லை? அந்த விஷயத்தை எப்பொழுது பிரஸ்தாபித்தாலும் மௌனம் கடைபிடிப்பானே தவிர இதழ் பிரியமாட்டான் இலக்குமணன்.

தாம் காட்டுக்குக் கிளம்பி வரும்போது எங்கும் களேபரம் மற்றும் குழப்பம்தான்.

தசரதரின் உடல் நலக் குறைவு, கௌசல்யாவின் துக்கம். அந்தப்புரம் முழுவதும் அல்லகல்லோகமாய் இருந்தது. தான் ராமனுடன் கூட போவதற்கு எல்லோரையும் சம்மதிக்க வைப்பதே பெரும்பாடாக இருந்தது. இறுதியில் சரயூ நதியைத் தாண்டும்போது மனம் சிறிது அமைதி அடைந்ததும் ஊர்மிளா தம்முடன் வரவில்லை என்ற விஷயம் மனதைத் தாக்கியது. இந்த ரகளையில் ஊர்மிளா தலையிடவே இல்லை என்றும், தங்களுக்கு விடை கொடுக்கவும் வரவில்லை என்றும் உணர்ந்த பிறகு சீதையின் கவலை அதிகரித்தது.

அத்துடன் ராமனை அடிக்கடி கேட்டுக் கொண்டிருந்தாள்.

“ஊர்மிளா தானும் வருவேன் என்று சொல்லவில்லையா? இலக்குமணன் தனியாக போகும் போது அவள் எவ்வளவு துக்கம் அடைந்திருப்பாள்? ஆரண்ய வாசம் கடினமாக இருக்குமென்று நினைத்து விட்டாளா? அப்படி இருக்கும் பட்சத்தில் இலக்குமணனும் அயோத்தியில் தங்கியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். நமக்காக ஊர்மிளாவை தனியளாக்கிவிட்டு வருவது உகந்த செயலாகுமா?”

இப்படி சீதை பேசும்போது ராமன் சமயத்திற்கு ஏற்றவாறு பதில் சொல்லி சமாதானப் படுத்துவான். அயோத்தியில் மாமியார்களுக்கு பணிவிடை புரிய ஊர்மிளா இருந்தாக வேண்டும். கௌசல்யாவை யார் பார்த்துக் கொள்வார்கள்? கணவனை இழந்து, மகனை விட்டுப் பிரிந்திருக்கும் மாமியாருக்குத் துணையாக இல்லாமல் சீதை ஆரண்ய வாசத்திற்கு புறப்பட்டு வந்து விட்டாள். அவளுக்கு ஊர்மிளாவைத் தவிர வேறு யார் இருக்கிறார்கள்? மூன்று மாமியார்களுக்கு மூன்று மருமகள்கள் இருக்க வேண்டாமா? முக்கியமாக தாய் கௌசல்யாவை ஒவ்வொரு நிமிடமும் கவனமாக பாதுகாக்க வேண்டும் இல்லையா?

ராமன் இன்னும் பல விஷயங்களை சொல்லி வந்தான். அந்தப்புரத்தில் நிறைவேற்ற வேண்டிய பொறுப்புகள் எத்தனையோ இருக்கும். மகாராணியாக கௌசல்யா அந்த பொறுப்புகளை சாமர்த்தியமாக நிறைவேற்றி வந்தாள். இப்போ அவளுக்கு சக்தி போதாது. கொஞ்சமும் ஆர்வம் இருக்க வாய்ப்பில்லை. அந்த பொறுப்புகளைக் கடை பிடிக்கும் பாரத்தை ஊர்மிளாவைத் தவிர யாரால் ஏற்றுக் கொள்ள முடியும்?

“சீதா! நீயே சொல். அந்த விஷயத்தில் உன்னை விட ஊர்மிளாவுக்கு சாமர்த்தியம் அதிகம் இல்லையா? நாம் அயோத்தியில் இருந்த போது அம்மா உன்னை விட ஊர்மிளாவிடம்தானே அதிகமாகப் பொறுப்புகளை ஒப்படைத்து வந்தாள்?”

“ஆமாம்” என்றபடி சீதை யோசனையில் ஆழ்ந்து விடுவாள். ஊர்மிளாவுக்கு லௌகீக விவகாரங்களில் சாமர்த்தியம் அதிகம். கண்பார்வையாலேயே ஆணையிடுவாள். அந்தப்புரத்தில் நிறைவேற்றப் படவேண்டிய எல்லா முறைகளும் அவளுக்குத் தெரியும். தந்தை கூட அந்த விஷயத்தில் தங்கையைத்தான் பாராட்டுவார்.

“உனக்கு வில்வித்தையில், செடிகொடிகளை ரசிப்பதில் இருக்கும் ஆர்வம் மற்ற விஷயங்களில் இல்லை கண்ணம்மா” என்று சொல்லுவார்.

உண்மைதான். அந்தப்புர விதிகளில், அவற்றைக் கடைப்பிடிப்பதில் சீதைக்குக் கொஞ்சமும் ஆர்வம் இருக்கவில்லை. பூங்காவனத்தில் விளையாடுவது, வில் வித்தையைப் பயிலுவது, இயற்கையின் மடியில் இளைப்பாறுவது … இவை போதும் சீதைக்கு. அயோத்திக்கு வந்த பிறகும் மாமியாரிடமிருந்து பொறுப்புகளை ஏற்றுகொள்ள ஆர்வம் காட்டவில்லை. ஊர்மிளா மட்டும் கௌசல்யாவின் பின்னாலேயே இருந்து வந்தாள்.

சீதைக்கு அந்தப்புரத்தை விட ஆரண்யம் நிம்மதியாக இருந்தது. இங்கே நட்பு ஏற்படுத்திக் கொள்வதற்கும், மதிப்புடன் நடத்துவதற்கும் மனிதர்கள் இருப்பார்களே தவிர அதிகாரம் காட்டுவதற்கு அல்ல. இந்த சகவாசம் சீதைக்கு ரொம்ப பிரியமாக இருந்தது.

“உனக்கு பிரியமானது ஊர்மிளாவுக்கும் பிரியமானதாக இருந்தாக வேண்டும் என்று கட்டாயம் இல்லையே? நீ பூமியின் மகள். இயற்கையை நேசிப்பவள். ஊர்மிளாவுக்கு நகர வாழ்க்கை, அந்தப்புரத்தின் பொறுப்புகள் பிரியமாக இருக்கலாம் இல்லையா?’

ராமன் எவ்வளவுதான் சமாதானப் படுத்தினாலும் சீதை ஊர்மிளாவிற்காகக் கவலைப் படுவாள்.

கணவனின் பிரிவை சகித்துக் கொள்வது எல்லாவற்றையும் விட பெரிய கஷ்டம் இல்லையா?

அது எவ்வளவு பெரிய கஷ்டம் என்று ராவணனின் சிறையில் இருந்தபோது சீதைக்கு நன்றாகப் புரிந்தது.

சீதை இயற்கையை நேசிப்பவள் என்று தெரிந்ததால் ராவணன் அவளை அசோகவனத்தில் தங்க வைத்தான். அந்த வனத்தின் சௌந்தர்யம் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது. மிதிலையில், அயோத்தியில் எங்கேயும் காண முடியாத வைபவம். ராவணன் பைத்தியம் போல் பிதற்றுவானே தவிர சீதையை ஏறெடுத்துப் பார்க்கும் துணிச்சல் அவனுக்கு இல்லை. சீதைக்கு அவன் துரும்பிற்கு சமம்.

இருந்தாலும் கடத்தலுக்கு இலக்காகி, தன்னைக் காபாற்றுவதற்காக கணவன் வருவான் என்று காத்திருப்பது சீதைக்கு நரகத்திற்குச் சமமாக இருந்தது.

ராமன் வருவான். ராவணனைக் கொல்லுவான். இதில் சீதைக்கு எந்த சந்தேகமும் இருக்கவில்லை. தன்னைத்தான் காப்பாற்றிக் கொள்ளக் கூடிய சக்தியைக் கட்டுப்படுத்திக்கொண்டு, எந்த முயற்சியும் செய்யாமல் உட்கார்ந்திருப்பது தான் பொறுமையை சோதித்தது

ராமனின் மனம் சீதைக்கு தெரியும். ராவணனை தான்தான் சம்ஹரிக்க வேண்டும் என்ற ராமனின் சங்கல்பத்திற்கு முன்னால் சீதையின் பிரதாபம் பின் வாங்க வேண்டியதாகி விட்டது.

“நமக்கிடையே இருக்கும் பந்தத்தில் உங்களுக்கு மிகவும் விருப்பமானது என்ன?” சீதை ராமனிடம் கேட்டாள் ஒருநாள்.

“உன்னை கண்ணின் இமை போல் காப்பது. உன் காலில் சிறிய முள் குத்தினாலும் நான்தான் எடுக்கவேண்டும். உன்னை நெருங்கும் கொடிய மிருகங்களை நான் கொல்லவேண்டும். உன்னைக் காப்பாற்றி வருகிறேன் என்ற எண்ணம் எனக்கு அயோத்தியைக்கு சக்கரவர்த்தியாய் இருப்பதை விட அதிகம் பெருமையை, சந்தோஷத்தைக் கொடுக்கும்” என்றான் ராமன்.

“என்னை நான் காப்பாற்றிக் கொள்ள முடியும். வில் வித்தையில் நான் உங்களுக்குக் குறைந்தவள் இல்லை” என்றாள் சீதை முறுவலுடன்.

ராமனின் முகம் சுண்டிவிட்டது. “நான் உயிருடன் இருக்கும்போது உன்னை நீ காப்பாற்றிக் கொள்ள வேண்டிய அவசியமே வராது. வரவும் கூடாது. நீ எனக்காகக் காத்திருக்க வேண்டும். என் வலிமையான கரங்களின் பாதுக்காப்பிற்காக எதிர்பார்க்க வேண்டும். அப்படி அல்லாமல் உன்னை நீயே காப்பாற்றிக் கொண்டுவிட்டால் இனி நான் எதற்கு? அதுபோல் ஒருநாளும் செய்யமாட்டேன் என்று எனக்கு சத்தியம் செய்து கொடு.”

சீதை ராமனின் கையில் கையை வைத்தாள்.

கடத்தப்பட்ட பிறகு, அசோகவனத்தில் காத்திருப்பதைத் தவிர சீதைக்கு வேறு வழி இல்லாமல் போய் விட்டது. அப்பொழுது பதியைப் பிரிந்த வேதனையில் இருந்தவளுக்கு ஊர்மிளாவின் நினைவு ஒவ்வொரு நொடியும் வந்து கொண்டிருந்தது.

’அந்த அந்தப்புரத்தின் மீது உனக்கு இவ்வளவு ஈர்ப்பு ஏனம்மா?’ என்று தன்னுடைய வேதனையில் ஊர்மிளாவையும் சேர்த்துக் கொள்வாள்.

இறுதியில் ராவண சம்ஹாரம் நடந்தது. அக்னிப்பரீட்சை முடிந்தது.

“அயோத்தி சீதை ராமர்களின் வருகைக்காக காத்திருக்கிறது” என்று ராமன் பெருமையுடன் சொன்ன போதும் சீதைக்கு ஊர்மிளாவைப் பார்க்க வேண்டும் என்ற தவிப்புதான்.

‘ஊர்மிளா எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறாளோ? தன்னுடைய மாளிகையை எவ்வளவு அழகாக ஜோடனை செய்திருப்பாளோ? இலக்குமணனின் முன்னிலையில் தான் தோன்றப் போகும் அந்த தருணத்திற்காக தன்னை எப்படியெல்லாம் அலங்காரம் செய்து கொண்டிருப்பாளோ?’

அந்தப்புரத்திற்குப் போய்ச்சேர்ந்ததும் மாமியார்களை வணங்கிவிட்டு இலக்குமணனுடன் சேர்ந்து ஊர்மிளாவிடம் போக வேண்டும். இலக்குமணனை ஊர்மிளாவிடம் ஒப்படைத்து விட்டு, அவர்கள் பொங்கி பூரிப்படைவதைக் கண்ணாரக் காணவேண்டும், சில நிமிடங்கள் அவர்களின் தனிமைக்கு இடைஞ்சலாக இருந்தாலும் சரி, முதலில் ஊர்மிளாவின் மாளிகைக்குச் சென்ற பிறகே தன்னுடைய மாளிகைக்கு செல்லவேண்டும்.

அந்தக் காட்சியை அடிக்கடி ஊகித்துக் கொண்டு சந்தோஷமடைந்து கொண்டிருந்த சீதையைப் பார்த்துவிட்டு..

“மகிழ்ச்சியால் ஒளி வீசிக் கொண்டிருக்கும் உன் வதனம் மிகவும் அழகாக இருக்கிறது சீதா” என்றான் ராமன்.

“ஊர்மிளாவின் சந்தோஷத்தை ஊகித்துப் பார்க்கும்போதே என் மனதிற்கு இதமாக இருக்கிறது” என்றாள் சீதை மதுரமாக சிரித்துக் கொண்டே.

ராமனும் சீதையுடன் சந்தோஷத்தைப் பகிர்ந்து கொண்டான். இருவரும் பொருள் பொதிய இலக்குமணனைப் பார்த்து முறுவலித்தார்கள்.

தனக்காக பதினான்கு ஆண்டுகள் மனைவியின் பிரிவை சகித்துக் கொண்ட தம்பியைப் பார்த்து ராமனின் இதயம் பெருமையால் பூரித்துப் போயிற்று.

இலக்குமணனை அருகில் இழுத்துக் கொண்டு நெஞ்சாரத் தழுவிக் கொண்டான்.

எதிர்பாராமல் கிட்டிய அண்ணனின் அணைப்பிற்கு இலக்குமணன் புளகாங்கிதமடைந்தான். நகரத்தை நெருங்க நெருங்க மூவரின் மனங்களும் பௌர்ணமி இரவில் பொங்கி எழும் சாகரத்தைப் போல் இருந்தன

எத்தனையோ எண்ணங்கள், நினைவுகள், வித்தியாசமான உணர்வுகள்! உத்வேகத்துடன் வந்தால், மார்போடு .அணைத்துக் கொள்வதற்கு ஊர்மிளா எதிர்ப்படவில்லை.

இதயத்தைக் கிழிப்பதுபோல் ஊர்மிளா தனக்குத்தானே விதித்துக் கொண்ட பதினான்கு வருட அஞ்ஞாதவாச செய்தி!

ஊர்மிளாவின் மாளிகை வெளிப்புறம் முழுவதும் அலங்கரித்து இருந்தார்கள். அவள் அறையின் கதவுகள் மட்டும் திறந்து கொள்ள வில்லை.

சாருமதி மென்மையாக கதவைத் தட்டிவிட்டு ‘அம்மா! உங்கள் சகோதரி ஜானகி தேவி உங்களைப் பார்க்க வேண்டும் என்று வந்திருக்கிறாள்” என்றாள்.

சீதையின் மனம் ஒரு நிலையில் இருக்கவில்லை.

‘ஊர்மிளா எப்படி இருப்பாள்? என்ன கேள்வி கேட்பாள்? தான் என்ன பதில் சொல்ல வேண்டும்?’

கதவுகள் திறக்கப்படவில்லை.

சீதை தானே அழைத்தாள். “ஊர்மிளா! நான்தான் உன் சகோதரி வந்திருக்கிறேன். எல்லாம் விவரமாக சொல்கிறேன். எங்களை மன்னித்துவிட்டு கதவைத் திற.”

ஊர்மிளாவின் அறைக் கதவுகள் திறந்துகொண்டன.

எதிரே ஊர்மிளா! சீதை ஒரு வினாடி திக்பிரமை அடைந்துவிட்டாள். சீதைக்கு தெரிந்த ஊர்மிளா இல்லை இவள். முன்பு அந்தக் கண்களில் கொஞ்சம் அப்பாவித்தனம் இருந்தது. மேலும் கொஞ்சம் அரச குலத்து கம்பீரம் இருந்தது. உடல்கூறும் மிகவும் மிடுக்காக ராணியைப் போல் இருந்தது.

இப்போது அந்த இரண்டு கண்களிலும் என்ன ஜொலிப்பு அது? அவள் தோற்றத்தில் ஏதோ தெரியாத ஸ்திதபிரஞ்ஞை! காம்பீர்யம்! முகத்தில் அந்த தேஜஸ் என்ன? சீதை திகைப்பிலிருந்து மீண்டுகொண்டிருந்த போது ஊர்மிளா வந்து தமக்கையின் கால்களில் விழுந்து வணங்கி விட்டு ஆசனத்தில் அமரச் செய்தாள்.

“ஊர்மிளா! பதினான்கு வருடங்களாக உன்னைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தேன். மிகவும் வேதனைப்பட்டேன்.” சீதையின் கண்களிலிருந்து இனியும் தாங்க முடியாது என்பதுபோல் கண்ணீர் வெளியில் பொங்கியது.

“எங்கள் மீது உனக்குக் கோபம் இருக்கலாம்.”

ஊர்மிளா கம்பீரமாக அன்பு கலந்த முறுவலை உதிர்த்தாள்.

“எனக்கு யார் மீதும் கோபம் இல்லை.”

“பின்னே ஏன் எல்லோருக்கும் தொலைவாக …… கோபம் இல்லாவிட்டால் இப்படி ஒரு அறையில் சிறைபட்டிருப்பாயா? உன் கோபத்தை வெளிப்படுத்து. சண்டை போடு. ஆனால் இப்படி யாருக்குமே இல்லாமல் போய் விடாதே. ஏன் இப்படிச் செய்கிறாய் என்று மட்டும் சொல்.”

ஊர்மிளா சிரித்தாள்.

“சொல்கிறேன் அக்கா! உன்னிடம் அல்லாமல் வேறு யாரிடம் சொல்லப் போகிறேன்? உன்னைத் தவிர யாராலும் புரிந்து கொள்ள முடியாது. அதுதான் மௌனமாக இருந்து விட்டேன்”

சீதை ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள்.

“அக்கா! நான் முதலில் கோபம் கொண்டுதான் இந்த அறையின் கதவுகளைச் சாத்தினேன். என் கணவர் என்னிடம் ஒரு வார்த்தைகூட சொல்லாமல், நான் என்று ஒருத்தி இருக்கிறேன் என்ற யோசனையே இல்லாமல், அண்ணன் மட்டுமே உலகம் என்று போய்விட்டார். அன்று கோபத்தால் தகித்துப் போய்விட்டேன். இந்த அந்தப்புரத்தை என் எதிர்ப்பால் தலைகீழாக்கி விட வேண்டும் நினைத்தேன். எல்லோரும் உங்களுக்காக வருத்தப்பட்டுக் கொண்டு இருந்தார்கள். என் பக்கம் திரும்பிப் பார்ப்பவர்களே இருக்கவில்லை. இயலாமை கலந்த கோபம். நானும் யாரையும் ஏறெடுத்துப் பார்ப்பதாக இல்லை. அறப்போராட்டத்தைத் தொடங்கினேன்.”

சீதையின் மனம் அன்றைய ஊர்மிளாவைக் கண்டுகொள்ள முயற்சி செய்து கொண்டிருந்தது.

“தொடங்கியபோது அது கோபமாகத்தான் இருந்தது. ஆனால் நாளடைவில் அது சத்தியத்திற்காக, என்னுள் நான், என்னுடன் நான் புரியும் தேடுதலாக மாறியது. எனக்கு ஏன் இவ்வளவு கோபம்? என்னை நானே தகித்துக் கொள்ளும் ஆத்திரம். எதிர்ப்பட்டவர்களை எல்லாம் தகித்து விட வேண்டும் என்ற அளவுக்குக் கோபம். எனக்கு ஏன் இந்த துக்கம்? காரணம் தெரியும். ஆனால் அந்த காரணத்தை ஊடுருவிப் பார்க்க வேண்டும் என்ற தவிப்பு என்னை அறியாமலேயே என்னுள் பிறந்தது. கோபம் என்றால் என்ன? எதற்காக இந்த துக்கம்? சந்தோஷம் எதற்கு? என் உடலுக்கும், என்னுள் ஏற்படும் இந்த ஆவேசத்திற்கும், உத்வேகத்திற்கும் நடுவில் இருக்கும் சம்பந்தம் என்ன? இப்படி எத்தனையோ கேள்விகள்.. அவை தமக்குள் என்னை இணைத்துக் கொண்டன. என் உடலை கூர்ந்து கவனிக்கத் தொடங்கினேன். என் யோசனைகளை, அவை என்னுள் ஏற்படுத்தும் ஆவேசத்தை கவனிக்கத் தொடங்கினேன். அந்த கவனத்திற்கு சிறிய இடைஞ்சல் ஏற்பட்டாலும் எனக்கு அமைதி இல்லாமல் போயிற்று. அதனால்தான் நான் தனிமையை விரும்பினேன். தனியாக இருப்பதை அல்ல. தனிமையை! என்னுள் நான், என்னோடு நான் உரையாடும் தனிமையை!

“அந்த உரையாடல் என்னையும், என்னைச் சேர்ந்த மனிதர்களையும் எதிரெதிரே நிற்க வைக்கும். எங்கள் உறவுகளைப் பிளந்துப் பார்க்கும். ஒவ்வொரு உறவையும்… நம் தந்தை, நீ, இலக்குமணன், ராமன், கௌசல்யா… இப்படி எல்லோருடனும் என் உறவின் இறுதி அம்சம் என்னவென்று அடுக்கடுக்காகப் பிரித்துப் பார்தேன்.

“சகோதரியாக உன்னை நேசித்தபோது, என்னை விட்டுவிட்டு உன் கணவருடன் நீ போய்விட்டபோது, நம் இருவருக்கும் நடுவில் இருந்த உறவில் நிகழ்ந்த மாற்றம் எப்படிப்பட்டது? ஏன் அப்படி நடந்தது? அன்பைக் கோபமாக மாற்றும் வேதியல் செயல் பாட்டின் மூலப் பொருள் என்ன?

“அசூயை, துவேஷம், அன்பு, மதிப்பு, கௌரவம்… இவற்றுக்கு நடுவில் வேறுபாடு என்ன? உண்மையிலேயே வேறுபாடுகள் இருக்கின்றனவா? அல்லது ஒரே நிறத்தின் நிழல் வேற்றுமைகளா? ஒரு நிழலில் இன்னொரு வெளிச்சம், ஒரு வெளிச்சத்தில் இன்னொரு நிழல் எப்படி புகுந்து கொள்ளும்? எது வெளிச்சம்? எது நிழல்?

“ஒவ்வொரு கேள்வியும் பிறக்கப் பிறக்க என்னுள் போர்புரிவதற்கு முன்னால் ஏற்படுவதுபோன்ற உற்சாகம் கிளர்த்து எழும்பியது. நம்முடைய கணவர்மார்கள் இந்த பதினான்கு வருடங்களும் ராக்ஷஸ சம்ஹாரத்திற்காக போர் புரிந்ததாக கேள்விப் பட்டேன். அதனால் அமைதி நிலவியதோ, நிலவப் போகிறதோ எனக்குத் தெரியவில்லை. ஆனால் இந்தக் கேள்விகளுடன் நான் புரிந்த யுத்தத்திலிருந்து பெரியதோர் அளவில் அமைதியும், சந்தோஷமும் பெற்றேன்.”

ஊர்மிளாவின் முகத்தில் அந்த அமைதி வெளிப்படையாக தென்பட்டுக் கொண்டிருந்தது. சீதை ஊர்மிளாவை வியப்புடன் பார்த்துக் கொண்டே அவளுடைய பேச்சை கேட்டுக்கொண்டே, அவள் செய்ததாகச் சொன்ன யுத்தத்தை ஊகித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுக்குள் இலக்குமணனை பற்றிய தவிப்பு தொடங்கியது.

“இலக்குமணனுக்கு உன் மீது அன்பு இருக்கிறது ஊர்மிளா. அவரிடம்…”

சீதையின் பேச்சுக்கு குறுக்கிட்டாள் ஊர்மிளா .

“பதினான்கு வருடங்களுக்குப் பிறகு சந்திக்கப் போகிறோம், நாங்கள் இருவரும். நான் மட்டும் நிறைய மாறி விட்டேன். மாறுதல் வாழ்க்கைக்கு குறியீடு. அதற்கு அவர் கொடுக்கும் மதிப்பை பொறுத்துதான் எங்கள் இருவரின் வாழ்க்கைப் பயணம் தொடரும்.

“நான் துவேஷமில்லாமல் நியாயத்தைப்பற்றி கேள்வி கேட்கக்கூடிய ஞானத்தை சம்பாதித்துக் கொண்டேன். இலக்குமணனுடன் என் உறவு ‘அவர் என் ஞானத்தை எப்படி புரிந்து கொள்வார், எந்த அளவுக்கு மதிப்பு தருவார்?’ என்பதை பொறுத்து முடிவு செய்யப்படும்.

“அவர் மற்ற அதிகாரங்களை கைவிடாமல், அவற்றுக்கு அடிபணிந்து கொண்டே, என்மீது மட்டும் தன் அதிகாரத்தை விட்டுக் கொடுப்பாரா? இப்போது என்னால் சொல்ல முடியவில்லை. எது எப்படி நடந்தாலும் என்னுடைய அமைதி மட்டும் குலையாது. அந்த அமைதி அடுத்த நபருக்கும் வேண்டுமா வேண்டாமா என்பதுதான் கேள்வி.”

சீதையின் முகத்தில் தென்பட்ட பதற்றம் ஊர்மிளாவுக்குப் புரிந்தது.

மேலும் விவரமாக எடுத்துச் சொன்னால் சீதையின் கவலை குறையுமோ? முயற்சித்துப் பார்க்க நினைத்தாள். ”என்னைச் சுற்றிலும் இருப்பவர்களுடன் என் உறவுகளில் இருந்த எனது அதிகாரத்தை உணர்ந்த போது, எனக்கு எல்லாமே புரிந்துவிட்டாற்போல் உணர்வு ஏற்பட்டது. எல்லா துக்கங்களுக்கும் மூல காரணம் அதிகாரம்தான் அக்கா! இன்னொரு வேடிக்கை தெரியுமா? இந்த அதிகாரத்தை நாம் அடைய வேண்டும். அதை விட்டுக்கொடுக்க வேண்டும். நான் யாருடைய அதிகாரத்திற்கும் அடிபணிய மாட்டேன். என்னுடைய அதிகாரத்தால் யாரையும் கட்டுப்படுத்த மாட்டேன். அப்போது சுயவிடுதலை அடைந்துவிட்ட உணர்வு எனக்கு. இனி என்னுள் எஞ்சியிருப்பது ஆனந்தம், பேரமைதி, எல்லையில்லா அன்பு, எல்லோர் மீதும் இரக்கம்.

“பாவம்! இந்த அதிகாரச் சுழலில் சிக்கி மனிதர்கள் எப்படி நலிந்து கொண்டிருக்கிறார்கள்? விடுதலை பெறும் வழி தெரியாமல் அமைதியற்று, துக்கத்தில், துவேஷத்தில் அழுகிப் போய்க் கொண்டிருக்கிறார்கள் இல்லையா?

“எல்லோருக்கும் இந்த அமைதியின் ரகசியத்தைச் சொல்வோமா என்று நினைத்தேன்.

“ஆனால் யாருக்குப் புரியும்?

“பதினான்கு வருடங்கள் சத்தியத்தை சோதிப்பதில் நான் புரிந்த தவத்தை தூக்கம் என்று நினைப்பவர்களுக்கு என் பேச்சு புரியுமா?

“தூங்கி விட்டேனாம் நான். தூக்கத்திற்கும், விழிப்புக்கும் அர்த்தம் தெரியுமா இவர்களுக்கு?

“என்றாவது நிம்மதியாக தூங்கியிருக்கிறார்களா? அல்லது விழித்துக்கொண்டிருக்கும்போது முழு உணர்வோடுதான் இருந்தார்களா?

“என்னுடையது தூக்கம் என்கிறார்கள். என் பேச்சைக் கேட்டால் பைத்தியம் என்பார்கள்.”

“இல்லை ஊர்மிளா! உன் பேச்சு மிகவும் நன்றாக இருக்கிறது. உண்மையிலேயே நீ பெரும் தவம் செய்திருக்கிறாய்.”

“உனக்குப் புரியும் என்று எனக்குத் தெரியும் அக்கா. அதனால்தான் இன்று வாயைத் திறந்தேன். ஆனால் அக்கா… உன் வாழ்க்கையில் எனக்கு வந்ததுபோல் பரீட்சை நேரம் வந்தால், அப்போது அந்தப் பரீட்சை உன்னை சாதாரணத்தன்மைக்கு, அழுக்குக் குட்டையில் தள்ளிவிடாமல் துவேஷத்தாலோ, கோபத்தாலோ உன்னை தகித்துக் கொள்ளாமல் உன்னை நீ காப்பாற்றிக் கொள். உன் மீது அதிகாரத்தை நீயே எடுத்துக்கொள். மற்றவர் மீது உன் அதிகாரத்தை விட்டுவிடு. அப்போது உனக்கு நீ சொந்தமாவாய். உனக்கு நீ எஞ்சியிருப்பாய். நமக்கு நாம் எஞ்சியிருப்பது என்றால் சாதாரணம் இல்லை அக்கா. என் பேச்சை நம்பு.”

ஊர்மிளா பேசப்பேச சீதைக்குள் ஒரு அமைதி பரவியது. ஒரே நாளில் இத்தனை வருட ஊர்மிளாவின் வாழ்க்கையைப் புரிந்துகொள்ள முடியாது என்று நினைத்தாள் சீதை. ராமனிடம் ஊர்மிளா பேசியதைச் சொன்னாள்.

“இந்த அதிகாரம் என் தம்பியைப் பாதிக்காது இல்லையா?” என்றான் ராமன்.

“ஊர்மிளாவைப் பார்த்தாலே வேதனை எல்லாம் தீர்ந்துவிடும் போல் இருக்கிறது” என்றாள் சீதை. ஊர்மிளாவை அவ்வப்போது பார்த்துக் கொண்டு, அவளுடைய பேச்சு, அவள் சிரிப்பு, அவள் அமைதி, அவள் தேஜஸ் எல்லாவற்றையும் நுகர்ந்துக் கொண்டிருந்தாள் சீதை.

oOo

இலக்குமணன் கானகத்தில் விட்டுவிட்டுப் போன பிறகு, நட்டநடுக் கடலில் மூழ்கியிருப்பது போல் தோன்றியபோது சீதையின் கண் முன்னால் ஊர்மிளா நிழலாடினாள்.

வாழ்க்கையில் பிரிவும், அபவாதங்களும்தானா கிடைத்தன என்று கேள்வி கேட்டுக்கொண்டு திக்கற்று தவிக்கும்போது சீதைக்கு ஊர்மிளாவின் வார்த்தைகள் நினைவுக்கு வந்தன.

ஊர்மிளாவிடம் சொல்லிக் கொள்ளாமல் இலக்குமணன் ராமனுடன் ஆரண்ய வாசத்திற்குச் சென்றான்.

தன்னிடம் சொல்லாமல் ராமன் தன்னை கானகத்தில் விட்டுவிட்டு வரச் சொல்லி இலக்குமணனை ஆணையிட்டான்.

ஊர்மிளா சத்தியாகிரகமோ, தவமோ ஏதோ ஒன்று செய்து தன்னைத் தான் காப்பாற்றிக் கொண்டாள்.

“அதிகாரத்தை எடுத்துக் கொள். அதிகாரத்தைத் துறந்துவிடு. அப்போது நீ உனக்குச் சொந்தமாவாய். உனக்கு நீ எஞ்சியிருப்பாய். நமக்கு நாம் எஞ்சியிருப்பது முக்கியம்.” எத்தனையோ முறை, எத்தனையோ விதமாக ஊர்மிளா இதே வார்த்தைகளை திரும்பத் திரும்பச் சொன்னாள். அவை ஊர்மிளாவிடம் தனக்கு இருந்த கவலையை குறைத்தன. அவ்வளவுதான்.

இப்பொழுது தான் சத்தியாகிரகம் தொடங்க வேண்டுமா? கோபம் குறைவது எப்போது? சத்தியத்தை உணருவது எப்போது? எப்படி?

ராமனிடம் தனக்கு எல்லை இல்லாத அன்பு… காதல். அந்த ராமனிடமிருந்து விமுக்தி எப்படிக் கிடைக்கும்?

எப்படிப்பட்ட பரீட்சை இது? அக்னிப்பரீட்சை இதற்கு முன்னால் எந்த மூலை? தனக்கு போரில் புரியும் வித்தைகள் எல்லாமே தெரியும். ஒருநாளும் யார்மீதும் போர் தொடுத்ததில்லை. இப்பொழுது தன்னுடன் தானே போர் புரிய வேண்டும்.

போர் தொடங்கி விட்டது. எத்தனை வருடங்கள் நீடிக்குமோ?

oOo

“அம்மா! ராமச்சந்திரன் அஸ்வமேத யாகம் செய்யப் போகிறான். அழைப்பிதழை அனுப்பியுள்ளான். நான் போய் வருகிறேன்” என்று சொன்னார் வால்மீகி மகரிஷி.

மகரிஷி சற்று நேரம் சீதையின் பதிலுக்காகக் காத்திருந்துவிட்டு கடைசியில் கிளம்பிப்போனது சீதைக்குத் தெரியாது. அவள் எதையும் கவனிக்கும் நிலையில் இல்லை.

அஸ்வமேத யாகம் ராமன் எப்படிச் செய்வான்? தான் பக்கத்தில் இல்லாமல் எப்படி சாத்தியம்?

தன்னுடைய இடத்தில் யார் அமர்ந்து கொள்வார்கள்?

சீதையின் மனதில் ஜுவாலை எழும்பியது.

“யார் உட்கார்ந்தால் என்ன? உனக்கு என்ன சம்பந்தம்?”

சீதையின் மனதைப் படித்துவிட்டவள் போல் கேட்டுக்கொண்டே முறுவலுடன் வந்தாள் ஊர்மிளா.

“ஊர்மிளா! நீ இங்கே?” சீதையின் வியப்பிற்கு எல்லையில்லை.

‘நானாகத்தான் வந்தேன். நீ இங்கே இருப்பதாக இலக்குமணன் சொன்னார். அஸ்வமேத யாகத்தைப் பற்றிய செய்தி உன் வரையிலும் எட்டும் என்று தெரியும். உன் மனதில் அது எப்படிப்பட்ட பூகம்பத்தை விளைவிக்கும் என்பதைக்கூட ஊகித்து விட்டேன். அந்த நேரத்தில் நீ நீயாக எஞ்சியிருக்கச் செய்ய வேண்டும் என்று வந்தேன்.”

சீதை ஊர்மிளாவை அணைத்துக் கொண்டு அருகில் உட்கார வைத்துக் கொண்டாள். வெகு நேரம் நிசப்தம். அந்த மௌனத்திலேயே பல வார்த்தைகள் பரிமாறிக் கொண்ட பிறகு ..

“யாகத்தை ஸ்ரீராமச்சந்திரனே செய்கிறாரா?” கேட்டாள் சீதை.

“பின்னே வேறு யார் செய்வார்கள்? சக்ரவர்த்திகள் தானே செய்யவேண்டும்?”

“நான் இல்லாமல் எப்படி?”

“அந்தக் கேள்வி உனக்கு ஏன் வர வேண்டும்? வந்தால் ராமனுக்குத்தான் வர வேண்டும். யாகத்தை செய்து வைப்பவர்களுக்கு வர வேண்டும். தேவையற்ற கேள்விகளுடன் அமைதியை இழப்பது விவேகமற்ற செயல் இல்லையா?” சீதையை விட மூத்தவள் போல் மொழிந்தாள் ஊர்மிளா.

“உனக்குத் தெரியும். சொல் ஊர்மிளா. ராமன் பக்கத்தில் அமரப் போவது யார்?”

“நான் உனக்கு பதிலை சொல்லி உன் அக்னியை தற்காலிகமாக குளிரவைப்பதற்காகவோ, மேலும் தூண்டி விடுவதற்காகவோ வரவில்லை. .அனாவசியமான கேள்விகளுடன் உன்னை நீ துன்புறுத்திக் கொள்ளாதே என்று சொல்லத்தான் வந்தேன்.”

“ஆனால் என்னால் இதை விழுங்கிக் கொள்ள முடியவில்லை.”

“விழுங்காதே. அது உன் மனதில் நுழையவே வேண்டாம். நீ ராமனிடமிருந்து விமுக்தி ஆக வேண்டும்.”

“ஊர்மிளா…” சீதை விசும்பி விசும்பி அழுதாள். “எத்தனை பரீட்சைகள் ஊர்மிளா.”

“ஒவ்வொரு பரீட்சையும் உன்னை ராமனிடமிருந்து விமுக்தி செய்வதற்காகத்தான். நீயே உனக்கு மிஞ்சியிருப்பதற்காக தான். யுத்தம் செய். தவம் செய். ஊடுருவிப் பார். நீ என்ற யதார்த்தம் புலப்படும் வரையில் பார்த்துக் கொண்டே இரு.”

“மிகவும் கஷ்டமாக இருக்கிறதம்மா.” சீதையின் குரல்வளையத்திலிருந்து வார்த்தைகள் மிகப் பிரயாசையுடன் வெளிவந்தன.

“மிகவும் நிம்மதியாகக்கூட இருக்கும் அக்கா. முயற்சி செய்து பார். இனி நான் கிளம்புகிறேன்.” ஊர்மிளா எழுந்து கொண்டாள்.

“இப்போதேவா? என் குழந்தைகளைப் பற்றிக் கேட்க மாட்டாயா? அவர்களை பார்க்க வேண்டாமா?”

“அவர்கள் என்னிடம் வந்தால், என்னைப் பார்க்க வேண்டும் என்று வந்தால் கட்டாயம் பார்க்கிறேன்.”

ஊர்மிளா எவ்வளவு திடீரென்று வந்தாளோ அதைப்போலவே திடீரென்று போய் விட்டாள். சீதை மனதில் இருக்கும் ஜுவாலை மட்டும் அவ்வளவு சீக்கிரமாக அணையவில்லை.

எங்கெங்கோ மறுமூலையில் மறைந்திருக்கும் நெருப்புத் துண்டுகள், எந்த நாளிலிருந்தோ நீர் பூத்திருந்த நெருப்பு கண கணவென்று கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. அந்த நெருப்பில் சுகத்தை அனுபவிப்பதற்கு பழகிக் கொண்டிருந்த நேரத்தில் சீதைக்கு அவற்றை அணைக்க வேண்டுமென்றும் தெரிந்தது.

ராமனைக் காதலிப்பது சுகமா, ராமனிடம் கோபம் கொள்வது சுகமா என்ற இரு வேறுபட்ட கருத்துகளுடன் மனம் தத்தளித்துக் கொண்டிருப்பது சீதை அறியாத நிலையில் நடந்தது.

கோபத்தை உண்டு பண்ணுவதில், ஜுவாலையை பெரிதாக்குவதில் வேதனையாகத் தோன்றும் சுகத்தை உணருவது அவ்வளவு எளிது இல்லை.

ராமன் மீது காதல் தரும் சுகத்தின் வேதனையைத் தாங்கிக் கொள்வது அவ்வளவு சுலபம் இல்லை. இந்த இரண்டையும் தாண்டி ராமனிடமிருந்து விமுக்தையாகும் முயற்சி சீதைக்கு வேதனை நிரம்பியதாக இருந்தது.

இருந்தாலும் சீதை தவம் செய்தாள்.

கொந்தளிக்கும் கடல் அமைதி சாகரமாக மாறும் வரையில் கடைந்து கொண்டே இருந்தாள்.

மெல்ல மெல்ல அந்த அமைதி சீதையை முழுவதுமாகத் தழுவியது. வால்மீகி மகரிஷி அஸ்வமேத யாகத்தில் பங்கெடுத்துக் கொண்டு திரும்பிவரும் நாளுக்குள் சீதையின் மனம் முழுவதுமாக தெளிந்து விட்டிருந்தது.

ராமன் பக்கத்தில் யாகத்திற்காக உடகார்ந்தது யார் என்று வால்மீகியிடம் கேட்டுத் தெரிந்துக் கொள்ள முடியும் என்று அவரைப் பார்த்த பிறகும் சீதைக்குத் தோன்றவில்லை.

வால்மீகி மகரிஷி சில நாட்களுக்குப் பிறகு சீதையிடம் ஒரு விஷயம் சொல்வதற்காக வந்தார்.

“ராமன் லவ குசர்களை சுவீகரித்து விட்டான். சீதையையும் ஏற்றுக்கொள்ளத் தயாராக உள்ளான். ஆனால் சீதை நேரில் வந்து நிறைந்த சபையில் குற்றமற்றவள் என்று அறிவிக்க வேண்டும்.”

இந்த வார்த்தைகளை சீதை அமைதியுடன் கேட்டுக் கொண்டாள். முறுவல் மாறாமல் கேட்டுக் கொண்டாள்.

“அவ்வளவு தேவை எனக்கு இருக்கிறது என்று நினைக்கிறீர்களா?” என்று மட்டும் சொன்னாள்.

அமைதி ததும்பும் வதனத்துடன் குழந்தைகளிடமிருந்தும் விமுக்தையாகி, தான் எங்கிருந்து வந்தாளோ அந்த இடத்திற்குப் பயணமானாள் சீதை.

– தெலுங்கு எழுத்தாளர் திருமதி ஒல்காவின் “விமுக்தா”விற்காக அவருக்கு சாகித்ய அகாடமி விருது (2015) கிடைத்துள்ளது

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *