கதையாசிரியர்:
தின/வார இதழ்: வீரகேசரி
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: May 22, 2014
பார்வையிட்டோர்: 21,162 
 
 

வேணு தன் இனிய தங்கை பத்மாவுக்கு, மிகவும் சந்தோஷம் தரக்கூடிய ஒரு நிறைவான திருமண வாழ்வை ஏற்படுத்திக் கொடுக்கும் பொருட்டு, அப்பாவையும் கூட்டிக் கொண்டு சிவானந்தம் வீட்டிற்கு வந்திருந்தான். அவர்கள் புறப்படும் போது அதிகளவு எதிர்பார்ப்புடன் அவர்களை வழியனுப்புவதற்காக அம்மா மங்களகரமாக வாசலில் வந்து நின்றிருந்தாள்.

அதற்கப்பால் அறையை ஒட்டினாற் போலிருக்கும் திறந்து கிடந்த ஜன்னல் கம்பிகள் நடுவே கண்களும் முகமும் திருமணக் களையேறிச் சிவந்து கிடக்கப் பத்மா தன்னை மறந்து கனவு காணும் பிரமையோடு, உயிர் கொண்டு நிலைத்து நின்று கொண்டிருப்பது சிறிதும் , குறையற்ற பூரண ஒளிக்காட்சியாய் அவன் கண்களில் களை கொண்டு மின்னிற்று

நிஜத்தையே பொய்யாக்கி விட்டுப் போகி\ற நம்பகத்தன்மையற்றதும், போலியானதுமான அன்றைய சமூக தனி மனிதர் இருப்புகளிடையே, அவள் எதை உத்தரவாதமாகக் கொண்டு மிகவும் இதமளித்து உயிரை வருடி விட்டுப் போகிற திருமணக் கனவுகளில் தன்னையே மறந்து ஒளித் தேர் விட்டு மகிழ்கிறாளென்று அவனுக்குப் புரியவில்லை

அதற்காக அந்தக் கனவுகளை மறந்து விடு என்று மனம் திறந்து அவனால் சொல்லவும் முடியவில்லை. பாவம் அவள். வயது இருபத்தெட்டு முடியப் போகிறது. இன்னும் இரண்டொரு வருடங்களில் முப்பது வயதை எட்டிப் பிடித்து விடுவாள். அதுவும் இன்றைய தலை முறை கடந்த அன்றைய கால கட்டத்தில் தமிழ்ப் பெண்கள் திருமணம் மூலமே விடுதலையாக முடியுமென்ற பிற்போக்கான நிலைமையில் உண்மையில் அவளை நினைக்கப் பாவமாகத்தான் இருந்தது.

அந்தக் காலத்தில் அநேகமான பெண்களுக்கு இருபது வயதாகிற போதே கழுத்தில் தாலி ஏறி விடும். பத்மாவைப் பொறுத்த வரை அது நிகழவில்லை..அவனும் தான் என்ன செய்வான். அவளை விட இன்னும் இரு தங்கைகள் வேறு, திருமணத்திற்காகக் காத்துக் கொண்டிருந்தார்கள்./ இவர்களையெல்லாம் உரிய வயதில் கரை ஏற்றி வாழ வைக்க வேண்டிய பெரும் பொறுப்பு அவனுக்கு. அவன் ஒரு கலைப் பட்டதாரி ஆசிரியன். முரண்பாடுகளும், இடறிச் சரித்து விட்டுப் போகிற தூய்மையற்ற உறவுகளுமே கொண்ட இந்தச் சமூகத்தில், அவன் நேர்மையாக இருந்து தன் கடமைகளை நிறைவேற்றுவதிலும் கூட எதிர்பாராத பல சவால்கKளுக்கு முகம் கொடுத்தே அவன் வெகுவாக , மனம் புண்பட்டுப் போயிருந்தான்.

அப்பாவுக்கு இதைப் பற்றியெல்லாம் கவலையில்லை. அவர் சங்கக் கடை மனேஜராக இருந்து ஓய்வு பெற்றவர்.வருகிற பென்ஷனும் குறைவு. குடும்ப உறவுகளோடு ஒட்டாத ஒரு மூன்றாம் மனிதராகவே என்றும் இருந்து வருபவர்.. வேணுவால் அப்படியிருக்க முடியவில்லை .பத்மாவின் கல்யாணம் ,அவன் விரும்பியபடி, அவ்வளவு எளிதில் கை கூடுகிற மாதிரித் தெரியவில்லை அவளுக்குச் சீதனமாகக் கொடுப்பதற்கு அவனிடம் அதிகளவு பணம் இல்லாவிட்டாலும் அம்மாவின் சீதனக் காணிகள் நிறைய இருப்பதால். அவற்றை விற்றாவது பத்மாவைக் கரை சேர்த்துவிடலாமென்று அவன் நம்பிக் கொண்டிருந்தான் /அதிலும் சிவானந்தத்தின் மைத்துனனான குமரன் கொழும்பில் ஒரு பட்டயக் கணக்காளனாகப், பெரும் பதவியிலிருப்பவன்.. சிவானந்தத்தின் மனைவி தாயம்மாவின் ஒரே ஒரு தம்பி அவன்/ பத்மாவுக்கும் அவனுக்கும் விசேடமான சாதகப் பொருத்தம்/ அதனால் தான் இதை விட மனம் வராமல் அவன் தொடர்ந்து பேசி வருகிறான்.. குமரன் அவர்களுக்குத் தூரத்து உறவும் கூட.

பத்மா சிறு வயதிலிருந்தே குமரனை அறிவாள். அவனிடம் படிப்பு மட்டுமல்ல. மனதைக் கொள்ளை கொள்ளும் வசீகரமான அவனது கம்பீர ஆணழகில் மயங்கித் தான் பத்மா அவனைத் தனது கனவு நாயகனாக, மனசளவில் வரித்துக் கொண்டிருக்கிறாள்.. நனவுப் பிரக்ஞையாக அது ஈடேற வேண்டுமே
.
ஊருக்குள்ளே வெள்ளை வேட்டி கட்டிக் கொண்டு, மிகவும் கம்பீரமாக உச்ச நடை போட்டுக் கொண்டு , உலாவித் திரிகிற அப்பேர்ப்பட்ட சிவானந்தம் வீட்டில் சம்பந்தம் செய்து கொள்வதென்றால், அது சாதாரண விடயமா? அதிலும் சீதனம் எவ்வளவு கேட்பாரோ தெரியவில்லை.

அவனிடம் அப்படி வாரிக் கொடுப்பதற்கு ரொக்கமாக நிறையவே பணம் இல்லாவிட்டாலும் அம்மாவின் சீதனக் காணிகளாகப் பெறுமதி மிக்க சொத்துக்கள் கை வசம் இருப்பதை நம்பித்தான் அவன் இப்படியொரு திருமணப் பேச்சுக்கு முகம் கொடுக்க முன் வந்து சிவானந்தம் வீட்டிற்கு வந்து களமிறங்கியிருக்கிறான். அவன் அங்கு வருவது இதுதான் முதல் தடவை.

நவீன வசதிகள் கொண்ட பெரிய வீடு அவர்களுடையது.. பளிங்கு போல் பளிச்சென்று மின்னும், சாணம் மெழுகிய முற்றத்தில் .பெரிய அளவில் புள்ளிக் கோலம், மங்களகரமாக இருந்தது. அவர்கள் உள்ளே வந்து கால் வைக்கும் போது, நீண்ட சோபாவில் சிவானந்தம் கால் நீட்டிப் படுத்துப் பாதி கண் மூடி உறங்கிக் கொண்டிருந்தார் அவரின் கால் மாட்டில் நின்றபடி தாயம்மா அவருக்கு விசிறிக் கொண்டிருந்தாள். களை இழந்து அழுது வடியும் முகம் அவளுக்கு இயல்பானது. சமூகத்தில் எவருக்கும் முகம் கொடுக்க விரும்பாத பெரும் ஆளுமை நினைப்பு அவளுக்கு அவர்களைக் கண்டதும் மேலும் முகம் கடுப்பாகிக் கீழே குனிந்து சிவானந்தத்தின் கா.தருகே, அவள் இரகசியக் குரலில் ஏதோ முணுமுணுப்பது கேட்டது. அதைக் கேட்டதும் அவர் திடுமென, விழித்து வேட்டியைச் சரி செய்து கொண்டு எழுந்து உட்கார்ந்தபடியே கூறினார்.

“இருங்கோ!”

வேணு எதிர் சோபாவில் தயங்கியபடி அமரும் போது ஒரு கனத்த மெளனம் நிலவியது. யார் முதலில் பேசுவது என்று புரியாமல் விழி அசையாமல் அவன் அவரையே பார்த்துக் கொண்டிருந்தான்.,. நீண்ட யோசனைக்குப் பிறகு குரலை உயர்த்தி அவர் கேட்டார்.

“உன்ரை தங்கைச்சிக்குச் சமைக்கத் தெரியுமோ? வீட்டு வேலையெல்லாம் ஒழுங்காகச் செய்யத் தெரியுமோ? அது மட்டுமல்ல. என்ரை மச்சானோடு, கொழும்பிலே போய் வாழ்வதற்கு முக்கியமாக இன்னுமொரு தகுதி வேணும் கொஞ்சம் படிச்சிருப்பதோடை நாகரீகமாயும் இருக்க வேணும். என்ன சொல்கிறாய்?”

அவர் கேட்ட அவ்வளவு பெரிய விடயங்களும் ஒரு பெண்ணை வாழ்விக்கப் போதுமா? சமைக்கவும் சாஸ்திர நெறிகளுக்குட்பட்டு ஓர் ஆணுக்கு அடிமையாகிப் பிள்ளை குட்டிகள் பெற்றுப் போடவும் தானா ஒரு பெண்ணுக்கு இந்தத் திருமண விலங்கு? இதிலே எத்தனை கேள்விகள்? எவ்வளவு சூறையாடல்கள் பொய் வாழ்வியல் நியாயங்கள்! இந்தப் பொய்க்கு எடுபட்டு இழுபட்டு வதைபட்டு மனம் நொந்து போய்ச் சாக வேண்டியதுதானா., கடைசி விதி பெண்ணுக்கு?

இது விதியல்ல. விடுபட்டு விலகிப் போக முடியாத ஒரு பரிதாபகரமான நெஞ்சை நொறுக்கும் வாழ்வியல் சாபம். என்ன கேள்வி கேட்டு விட்டார் இவர்.? பத்மாவின் தோலுரித்துப் போட்ட மாதிரி ,இதென்ன குரூரமான வக்கிரக் கேள்விகள்? பத்மா சமைக்க மாட்டாள் என்று யார் சொன்னது? அவன் பெரிதும் மனம் உடைந்து போய் நினைவு கூர முன்றான்.

யார் சொன்னது இந்த வேதம்? பொய் பேசியே, புரையோடிக் கிடக்கிற இவர் சார்ந்த இந்தப் போலிச் சமூகத்தின் வாயில் இடறுவது வேதமல்ல. எரிக்கும் பொய் நெருப்புத் தான். அந்த நெருப்பில் குளித்துத் தான் மேலும் புடம் கொண்டு ஒளி பெற்றுத் திகழவே, இப்படியான பொய்க்குத் தான் முகம் கொடுக்க நேர்ந்திருப்பதாய் அவன் நம்பினான். இப் பொய்யை மறுத்துச் சான்று பூர்வமாகப் பத்மாவைப் பற்றிய உண்மைகளை நிரூபித்துக் காட்டுவது கூட வீண் என்று பட்டது.

வீண் வாதப் பிரதிவாதங்களால் வெறும் மன உளைச்சல் தான் மிஞ்சும். அப்படித் தான் இவர்களிடம் பொய் விட்டு உண்மையே ஜெயிக்க நேர்ந்தாலும் பத்மா இங்கு வாழ்க்கைப் பட்டுச் சுகப்படுவாளா? இந்த மிகக் கேவலமான பொய்யின் கறை பூசிக் கொண்டு அவள் உயிரும் மனமும் செத்து, எரிந்து போய் விடுவாளே. இதை விட அவள் கன்னியாகவே இருந்து விட்டுப் போகட்டும். அவன் மேலும் அந்தப் பொய்யோடு முட்டிச் சாக விரும்பாமல் , அங்கிருந்து சொல்லிக் கொள்ளாமலே வெளியேறினான்.

உண்மையில் சிவானந்தம் கூறியது போல் பத்மா ஒன்றும் வாழ்வின் பாடங்கள் அறியாத அசடல்ல. அவள் மிகவும் நன்றாகவே சமைப்பாள். வீட்டு வேலை முழுவதும் பொறுப்பாகச் செய்யக் கூடிய செயல் திறன் மிக்கவள். மற்ற இரு தங்கைகளும் இதற்கு ஈடாகவே ஒளி கொண்டு நிற்பதை அவன் கண் கூடாகவே காண நேர்ந்திருக்கிறது.

அப்படியானால் ஏன் இந்தப் பழிச்சொல் வந்தது? இதற்குக் காரணம் மிகவும் அப்பாவியாக வாயில்லாப் பூச்சியாக இருந்து வரும் அம்மாவால் வந்த வினைதான் எல்லாம்.. அவளைக் காலடியில் போட்டுப் பழித்துப் பழித்துக் கொன்று போடவென்றே கண் கொத்திப் பாம்புகளாய் அவளைச் சுற்றி வேரறுத்து ஊடுருவி உயிர் தின்றுவிட்டுப் போகும் நெருங்கிய உறவு மனிதர்களிற் சிலரே இப்பொய்க்கு வித்திட்டுப் பெருமை தேடிக் கொண்டு புண்ணியவான்களாய் கால் கொண்டு உலாவித் திரிவதை அவன் ஒன்றும் அறியாதவனல்ல. எனினும் இந்தப் பாவத்திற்குப் பிராயச்சித்தமாய் தானே தீக்குளிக்க நேர்ந்திருப்பதாய் இப்போது அவன் நம்பினான்.

இனி எந்த முகத்தோடு அவன் பத்மாவை எதிர் கொள்ளப் போகிறான்? “ஒரு பொய் உன்னை எரித்து விடும்” என்று சொன்னால் அவள் நம்புவாளா? அவளின் கனவுக் கோட்டையே இடிந்து சாம்பலாகிப் போன பின் மீண்டும் அவள் உயிருடன் திரும்பி வருவாளா? தேறுவாளா? அவளை அப்படி எதிர் கொள்ள நேர்வதே பெரும் சவால் தான் .அவன் என்ன செய்யப் போகிறான்?

வரும் போது அப்பா இதைப் பற்றி ஒன்றுமே கூறாதது அவனுக்குப் பெரிய மன வருத்தமாக இருந்தது/ அவர் என்றுமே இப்படித் தான். குடும்பம் பிள்ளைகள் குறித்து அவர்களை நல்லபடி வாழ்விப்பதே தனது மேலான தார்மீகக் கடமை என்பதை அறிவு தெளிந்து என்றைக்குமே அவர் சிந்தித்துப் பார்த்ததாகத் தெரியவில்லை தன்னிடம் மனம் விட்டுப் பேசுமளவுக்கு உறவு சார்ந்த நெருக்கத்தை அவர் கொண்டிருக்கவில்லை என்பதே அவனுக்குப் பெரும் ஏமாற்றத்தை அளித்தது.

இந்த ஏமாற்றத்துடனேயே அவன் முகம் இருண்டு போய் வீடு திரும்பும் போது, வாசலில் அம்மா அவர்களுக்காகக் காத்துக் கொண்டிருந்தாள் சிவானந்தம் வீட்டில் நடந்தேறிய கசப்பான உண்மைச் சம்பவத்தை வாய் திறந்து அவனால் சொல்ல முடிந்தாலும், இதை ஜீரணிக்க முடியாமல் அவள் வெகுவாக மனம் உடைந்து போனால் என்ன செய்வதென்று புரியாமல் அவனுக்குப் பெரும் குழப்பமாகவும் வேதனையாகவும் இருந்தது. அவள் நிலைமையே அப்படியானால் .பத்மாவின் கதி என்னவாகும்?

வாழ்க்கை எங்கள் கையில் இல்லை என்பதை அவளிடம் எப்படி நிரூபிக்க முடியும்?பரந்த அளவில் அன்பு செய்து உயிர்களை நேசிக்கத் தெரியாத, பகுத்தறிவற்ற சிவானந்தம் போன்ற காட்டு மனிதர்களோடு, வாழ்வின் எங்கள் நிலை குறித்த எங்கள் சத்தியத்திற்காகப் போராடி ஜெயி[ப்பதென்பது, அப்படியொன்றும் சுலபமான காரியமில்லையென்பதை, இப்போதைய மனோநிலையில் அவள் புரிந்து கொள்வாளா என்பதே சந்தேகமாக இருந்தது. இந்நிலையில் இப்போதைக்குப் பேச்சற்ற. மெளனமே சிறந்ததாக அவனுக்குப் பட்டது.. அம்மாவிடம் கூட ஒன்றும் சொல்லிக் கொள்ள விரும்பாமல் அவன் அவசரமாக வாசலைக் கடக்க முற்படுகையில் அவனின் கையைப் பிடித்து இழுத்து அம்மா கொஞ்சம் பதறிப் போய்க் கேட்டாள்.

“என்ன தம்பி பேசாமல் போறாய்? அவையள் ஒன்றும் சொல்லேலையே?”

“எல்லாம் வடிவாய்ச் சொன்னவை.. நீங்கள் பொம்பிளைப் பிள்ளையளைப் பெத்து வைச்சிருக்கிறியளே. இதுகள் பால் குடிப் பிள்ளைகளாம் உண்மையைச் சொல்லுங்கோவம்மா, பத்மா சமைக்க மாட்டாளோ? நாகரீகம் தெரியாதோ? சொல்லுங்கோ”

“ஆர் சொன்னது”

”ஆரோ. இதுக்கு முத்திரை குத்திக் குற்றவாளிகளைக் கொண்டு வந்து நிறுத்துகிற நிலைமையே இருக்கு? உறவாடிக் கருவறுத்து விட்டுப் போகிற மனசராய்க் கூட இருக்கலாம். அம்மா அப்பாவுக்கு வேறு வேலையில்லை ஒவ்வொரு வருடமும் அவரின் ஆச்சி அப்புவுக்குத் திவசம் செய்யும் போது நெருங்கிய உறவுகளைக் கூப்பிட்டுப் படையல் உண்டு மகிழ்வாரே அந்தப் பெரிய விருந்துச் சமையலைத் திவசச் சாப்பாட்டை ஆர் செய்து போட்டது. ஊரே வந்து செய்து விட்டுப் போனது?”

“அப்ப பத்மாவுக்கு இந்தக் கல்யாணமும் சரி வராதே?”

“எப்படிச் சரி வரும்? பொய் சகதி குளித்து நிற்கிற அந்த வீட்டில் பத்மா வாழ்க்கைப் பட்டுச் சுகப்படுவாளா? அவள் கனவுகள் வாழுமா? இவளை உயிருடனே தோலுரித்துப் போட இந்தப் பொய்யே போதும்”

அவன் ஆவேசமாக உணர்ச்சி முட்டிப், பேசித் தீர்த்து விட்டு, உள்ளே போகும் போது, பத்மா இதையெல்லாம் உள்ளிருந்து கேட்டு ஜீரணிக்க முடியாத நிலையில் பெருங்குரலெடுத்துக் கதறியழுகிற சத்தம் காற்றைக் கிழித்துக் கொண்டு கனதியாகக் கேட்டது. அதை மிகவும் மனவருத்தத்துடன் செவிமடுத்தவாறே, அவன் அவசரமாக அறைக்குள் வந்து படுக்கையில் புரண்டு அழுது புலம்பிக் கொண்டிருக்கும் அவளைத் தூக்கி நிறுத்தி அவளின் முகம் பார்த்து அன்பு வசப்பட்டுச் சொன்னான்.

“பத்மா! ப்ளீஸ்! அழுகையை நிறுத்து, ,நான் சொல்லுறதைத் தயவு செய்து கேள்”

“வேண்டாம். எனக்கு எதுவும் தெரிய வேண்டாம். இனிக் கதைக்க என்ன இருக்கு? எல்லாம் முடிஞ்சு போச்சு. இனி ஆர் என்னைக் கல்யாணம் செய்ய வரப் போகினம்? என்னை விட்டிடுங்கோ. நான் இப்படியே இருந்து அழிஞ்சு போறன்”

“நல்லாயிருக்கு நீ சொல்லுறது. கேவலம் ஒரு பொய்யை வாழ வைக்கிற மாதிரியல்லோ இது இருக்கு. உன்ரை முடிவு இதுதானென்றால் பொய் வென்ற மாதிரியல்லோ ஆகி விடும். சிவானந்தம் வாய் கூசாமல் பொய், பேசின பிறகு அவரின் மூச்சுப் பட்டாலே நாங்கள் எரிஞ்சு போடுவோமென்றல்லோ எனக்கு யோசனையாக இருக்கு. அந்த வீட்டிலே போய் நீ வாழப் போறதுமில்லை. நான் சொல்லுறதைக் கேள். சத்தியம் எப்பவும் சாகக் கூடாது நீ இந்த சமூகத்தின் முன் இப்படியான சவால்களை எதிர்கொண்டு வாழ்ந்து காட்ட வேணும். தலை நிமிர்ந்து நிற்க வேணும்”

“என் கனவுகளைத் தொலைச்சிட்டு, நீங்கள் சொல்லுற மாதிரி எப்படியண்ணா என்னால் வாழ முடியும்?”

“வாழ்ந்து காட்ட வேணும். உனக்கு எப்படி எடுத்துச் சொல்லுறதென்று எனக்கு விளங்கேலை, சிவானந்தம் மாதிரி எல்லோரும் இருக்கப் போறதில்லை. எங்கடை உண்மையை வாழ வைக்க எங்கேயோ இருந்து ஒரு தேவ புருஷன் உனக்காக வரத்தான் போகிறான்.
அன்பு மேலீட்டினால் உணர்ச்சிவசப்பட்டு அவன் கூறிய சமாதான வார்த்தைகளைச் செவிமடுக்க மறந்தவளாய், புத்தி பேதலித்து அழுகை குமுறியபடியே நொறுங்கி உடைந்து போன குரலில் அவள் தன்னை மறந்து பேசத் தொடங்கிய போது, அவன் கனவில் கேட்பது போல் மிகவும் கவலையோடு அதைக் கேட்டுக் கொண்டிருந்தான்.

அண்ணா! இதையெல்லாம் நான் நம்ப வேணுமே? எல்லாமே அழிஞ்சு போச்சு. இனி ஆர் என்னை மணக்க வரப் போகினம்? எனக்கு மாப்பிள்ளை தேடி நீங்களும் களைச்சுப் போனியள். வேண்டாமண்ணா இனிமேல் எனக்குக் கல்யாணமே வேண்டாம் நான் இப்படியே கிடந்து அழிஞ்சு போறன்.”

“உன்ரை முடிவு இதுதானென்றால் ஒரு பொய் வென்ற மாதிரி ஆகி விடாதா? சொல்லு பத்மா. நீ எல்லோருக்கும் முன்னாலை வாழ்ந்து காட்ட வேணும்”

“அதெப்படியண்ணா முடியும்? இந்தப் பொய் இனிப் பூதமாய்க் கிளம்பாதென்று நீங்கள் நினைக்கிறியளே? ஒரு நாளும் நடக்காது.”

இதைக் கூறிவிட்டுத் தானக்காக மானம் மரியாதையெல்லாம் இழந்து தீக்குளித்து, மனம் நொந்து போய் நிற்கும் அவனை நினைத்துத் தன் துயரங்களையெல்லாம் மறந்து மீண்டும் அவள் ஓவென்று கதறியழத் தொடங்கிய போது அப்பிரளயத்தால் வீடே இரண்டு பட்டுக் களை இழந்து போனது.

அவன் மேலும் அந்தக் காட்சி வெறுமையைக் காணப் பிடிக்காமல் , உயிர் வதைக்கும் ஒற்றை நிழலில் , தடம் புரண்டு மறைந்து போன வாழ்வுத் தரிசனமான உண்மைகளுடன் இடறுகின்ற இருளைக் கடந்து, அறையை விட்டு வெளியே வரும் போது அம்மா உயிர் விட்டுப் போன தனிமையில் பிரமை கொண்டு நின்றிருந்தாள். பாவம் இந்த அம்மா. உலகமே அறியாத அப்பாவி அவள். அப்படி இருக்க நேர்ந்ததால்தான் இச்சமூகத்தின் உயர் மட்ட அதி மேதாவித்தனம் கொண்ட பெரிய மனிதர்களின் தோள் குலுக்கிப் பேசி விட்டுப் போகிற வக்கணைப் பேச்சுகளுக்கும் கேலிக்குமாளாகிக் கரை ஒதுக்கப்பட்டுக் கழுத்தறுந்து கிடக்கும் வெறும் நிழற் பொம்மை போல அவள் ஆகி விட்டிருந்தாள். அவளின் காலம் முடிந்து வருவதால், சமூகத்தில் எடுபடாமல் போன அவளின் உண்மை நிலை குறித்து வருந்துவது அவசியமில்லை என்று தோன்றினாலும், அவளைப் பற்றி இச் சமூகம் கொண்டிருக்கிற தப்புக் கணக்கின், மகா மோசமான ஒரு பின் விளைவாக அவளோடு கூடவே பத்மாவும் தோலுரிக்கப்பட்டுக் குற்றுயிராய்க் கிடக்கிறாளே

தன் எதிர்காலத் திருமண வாழ்க்கை, குறித்து எள்ளளவு கூட நம்பிக்கை கொள்ள வழியின்றி அவளை இப்படிக் குப்புற வீழ்த்தி முதுகில் குத்திக் காயப்படுத்தி விட்டுப் போன பொய்யான மனிதர்களின், இவ்வாறான தவறுகளை, வெறும் வாய் வார்த்தைகளால் கூடத் தட்டிக் கேட்க ஆளின்றிப் பொய்யின் சகதி குளித்து வெறிச்சோடிக் களை இழந்து நிற்கும் தன் சமூகத்தைத் தலை நிமிர்ந்து பார்க்கக்கூட மனமின்றி, அவன் அப்படியே உறைந்து போய்க் கிடந்தான்.

எல்லா வழிகளிலும் அன்பு வரண்டு போன இச்சமூகத்தின் ,உன்னதமான கெளரவப் பிரஜைகள் போன்று வேடம் கட்டி ஆடும் பொய்யான இப் பெரிய மனிதர்களின் பாவங்கள் போகத் தானே கங்கை குளித்துப் புனிதம் பெற வேண்டுமென அவன் ஆவேசம் கொண்டான் அப்பாவிகளை வாழ விடாத இச் சமூகத்தில் இருந்து கொண்டு இப்படிப் புனிதம் பெறுவது கூடச் சாத்தியமற்ற, ஒன்றாய் அவன் மனம் வருந்தினான் அதற்காக அவனால் செய்ய முடிந்தது ஒன்றே ஒன்றுதான்.

பொய்யின் சகதி குளித்தே தடம் புரண்டு கிடக்கும் வாழ்க்கையை விட்டு, மறு கரையில் கண்ணுக்கு எட்டாத மறு துருவத்தில் வானமே வசப்பட்டதாய், கறையற்ற உயிர் உன்னதமான அந்த ஏகாந்த தனிமையில் இவ்வுலகின் ஒட்டுமொத்தப் பாவங்களின் பொருட்டுத் தானே கண்களை மூடி மானஸீகச் சூரிய நமஸ்காரம் செய்வது போல உணர்ந்தான்.

அப்படிச் செய்வதே துன்பங்களிருந்து விடுபட தன்னைச் சாந்தப்படுத்துமென்று அவன் நம்பினான்.

– வீரகேசரி (பெப்ரவரி 2008)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *