கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: July 6, 2014
பார்வையிட்டோர்: 14,567 
 
 

தகவல் கிடைத்த மூன்றாவது நிமிஷம் ராகவன் வீட்டின் முன்
இருந்தான் “இருப்பா என்று ஆட்டோவை நிறுத்தி விட்டு உள்ளே
பாய்ந்தான். கூட்டம் கசகசவென்று நிற்க நடுவில் வாணி மனகிக் கொண்டு உட்கார்ந்திருந்தாள் “ஒன்னுமில்லையம்மா ஒன்னுமில்லை பயப்படாதே இது சாதாரண வலிதான்.” என்று அர்த்தமில்லாத ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்க, வாணி வலிமயக்கத்தில் முடிவெடுக்க முடியாமல் இருந்தாள்.

ராகவன் ஆத்திரத்துடன் எல்லோரையும் பார்த்தான். அங்கிருந்த எல்லோர் மேலேயும் கோபம் வந்தது. ஒரு எழவுக்கும் பிரயோஜனமில்லாத ஜனங்கள் எல்லாம் பிள்ளைப் பெற்றதுகள். ஒருத்திக்கு கூடவா புத்தி இல்லை. இந்த நிமிஷத்தில் என்ன செய்ய வேண்டுமென்று யாருக்குமே புரியாதா என்ன…

“தம்பி…. கொஞ்சம் வித்தியாசமாப் படுது… நீ ஆட்டோவில் வச்சி
ஆஸ்பத்திரிக்குப் பொறப்படறது உத்தமம்….”

“நானும் அதத்தான் நெனச்சேன்…”

“இல்லே” என்று ஆரம்பித்த மாமியாரை எரித்து வாணியை மௌளக் கைகொடுத்து “நீ எந்திரி என்று தூக்க இரண்டு பெண்கள் அவள்
இடுப்பைபற்றி கைத்தாங்கலாக ஆட்டோவுக்கு நடத்தினர். தலைக்கு ஓர்
உத்தரவு…. அல்லது உபசரிப்பு… துண்டு துணி எடுத்துக் கோங்க அந்த
கஷாயத்தை ஒரு வாய் குடி.. பாத்தும்மா… பழய துணி எடுத்துக்கங்க…
பிளாஸ்க்க மறக்காதீங்க… நீங்க ஒரு கை கொடுங்க குலுங்காமப் போப்பா
நேரா டாக்டர் அனந்த லட்சுமி நர்சிங்ஓம் ஓட்டுப்பா..”

ஆட்டோக்காரன் மெதுவாக ஓட்டினான் பள்ளம் தவிர்த்தான்.
மேட்டில் லாவகமாக இறக்கி கிளச்சை விசுக்கென்று விடாமல் எழவு சாவு கிறாக்கி என்ற வார்த்தைகள் பேசாமல் நல்ல மனதோடு ஓட்டினான். நர்ஸிங்ஓம் முன் இறங்கி காசு தர வந்த ராகவனிடம் “நன்றிங்க நான் பிரசவ கேஸ்களுக்கு காசு வாங்கறதில்லை…”

“நாளைக்கு வரேன்” என்று ஆட்டோகாரன் சொன்னபோது வாணிக்கு ஒரு கணம் வலி மறந்தது கை கூப்பினாள்.

இவன் சரியான ஆண் மகன் பெண்ணை மதிப்பவன் பிரசவ கஷ்டம்
புரிந்தவன். அறைக்குள் பெண்ணின் அவலமும் வேதனையும், துடிப்பும்
புரிந்துகொள்ள முடிந்தவன் இவன் இவனை மாதிரி ஆட்களால் எந்தப்
பொண்ணையும் மிக நல்லபடி நடத்தமுடியும். ஆனால், ஆட்டோகாரன்
என்று யாரேனும் பெண் தாரகூட மறுத்திருக்கலாம்..

இவன் குணம் எத்தனை படித்தவர்களுக்கு இருக்கும்…

மறுபடி மனதுக்குள்ளே அவனை கும்பிட்டு நர்சிங்ஓம் படி ஏறினாள் வாணி…

ரூமுக்குள் வந்து அனந்தலட்சுமி முன் அமர்ந்தாள்.

அனந்தலட்சுமி ஒரு கால்மணி நேரம் போல் பரிசோதனைக்கு எடுத்துக்
கொண்டாள்… வெளியே வந்தாள்..

“மிஸ்டர் ராகவன் நீங்க பத்ருன்னிஷா லதாகிட்ட போங்க நான் லட்டர்
தறேன்… கொஞ்சம் சிக்கல்.. இங்கே வசதியில்லை…”

ராகவன் மரம் மாதிரி நிற்க, அனந்தலட்சுமி லட்டர் எழுத உள்ளே
போனாள்….

இதை சொல்ல கால்மணி நேரமா என சூடு பிறந்தது ராகவனுக்கு..

மாமியார் கலவரத்துடன் வெளியே அழுதபடி வந்தபோது மரியாதை,
வயசு பார்க்காமல் தலை முடியைப் பிடித்து இழுத்து அறைய வேண்டும்
என்ற கோபம் வந்தது..

எட்டு மாதமாய் இவளிடம்தான் வைத்தியம் செய்தது… இவ்வளவு
நாள் என்னத்ததான் செய்து கொண்டிருந்தாள்…

எதற்கு இவளுக்கு ஒரு சன்னத்து…

திரும்பி ஆட்டோவில் வரவர சாரங்கன் எரிந்தான்….

“இவளெல்லாம் ஒரு டாக்டருன்னு பிடிச்சிங்க… புத்தி வேனாம்….

“தலைப்பிரசவம்…. ஒரு நல்ல டாக்டர் கெடைக்கலையா உங்களுக்கு…
முடியாதுன்னு முன்னையே சொல்லியிருந்தால் நானே பார்த்திருப்பேன்…”

ஆத்திரத்தில் “அம்மா, அம்மா என்று முணகிக் கொண்டாள் வாணி.
அது வலிக்காக அல்ல ஆற்றாமையில் புருஷன் பேச்சில் ஏற்பட்ட
ஆத்திரம்.. கேவலம் நூறு ரூபாய் காசுக்கு பயந்து பெண் ஜாதியை ஊர்விட்டு ஊர்வந்து பார்க்காத புருஷன்….

“வரும்போது ஒரு ஆர்லிக்ஸ் வாங்கி வராத… பிடித்த ஸ்வீட் எதுன்னு தெரிந்தும் வாங்கி வராத புருஷன்…. மாமியார் மாமனார் செலவு செய்ய முடியாது போய் மாப்பிள்ளையை பிரசவம் பார்த்துக்கொள் என்றால் என்ன சொல்லி இருப்பான். மாமனாரைப் பார்த்து உனக்கெல்லாம் எதுக்கு பெண் குழந்தை என்பானா.. அல்லது விவஸ்தையோடு ஆண் பிள்ளை பெற்று கொள்ள துப்பில்லாத ஜென்மங்கள் என்று சொல்லுவானா… எதுவும் சொல்லலாம்… அது புருஷன் உரிமை அது எல்லா ஆணிற்கும் உள்ள உரிமை போல… அகங்காரத்தோடு பேசுவதுதான் நியதி என்று ஆகிவிட்டிருக்கிறது என்று தோன்றுகிறது ஆஸ்பத்திரி எந்து வீல் சேரில் உட்கார வைத்து டாக்டரிடம் கொண்டு போனார்கள்.

கடுதாசியை பார்க்காமல் வாணியில் முகத்தை பார்த்த உடனேயே டாக்டர் பிரசவ அறைக்குள் அனுப்பினார்… ஒன்றும் பேசவில்லை முகத்தில் கோபம் மாதிரி ஒரு உணர்வு தெரிந்தது… “இப்பவாவது வந்தீங்களே என்கின்ற அவசரத்தோடு வாணியை உள்ளே அனுப்பிய கையோடு பிரசவ அறைக்குள் நுழைந்தாள்.

பிரசவ டேபிளின் மேல் படுத்திருந்த வாணி பக்கவாட்டில் பார்த்தாள்
இன்னொரு பெண் அவளை மாதிரியே அரை முண்டமாய் படுத்துக்
கொண்டிருந்தாள்.

“அழகு… ஆனால், இப்போது அது யாருக்கும் தோன்றாது… இங்கே
இவள் படுகிற வேதனையை பார்த்தால் எவனும் அப்புறம் அழகுபற்றி
பேசமாட்டான்கள். என்று நினைக்கலாம். ஆனால், அது உறுதியுமில்லை.
சட்டென்று ஒரு வலி உடல் முழுக்க பரவி மின்னல் ஓடியது. வுhணி
ஒருமுறை முகம் சுழித்து அம்மாவில் நிதானித்தபோது பத்ருன்னிஷா அருகில் வந்து நின்று கனிவுடன் பார்த்தாள். பேனுக்குச் சரியாக நல்ல உயரத்தில், சரியாக தங்க நிறத்தில் டாக்டர் பார்த்த்வுடன் கைக்கூப்பினாள் வாணி.

“பயப்படாதே… நான் இருக்கேன் எல்லாம் நல்லபடி ஆகும்…விடியறதுக்குள்ளே ஆயிடும்… தைரியமா இரு… நான் உன் அம்மா மாதிரி…”

“விடியறதுக்குள்ளேயே…”

“ஆமாம் கொஞ்சம் நீ சிரமப்படனும்…. லேட்டா உண்டாயிருக்கே
அதான் காரணம்… சரியான நேரத்திலேலே அதது நடக்கனும்மா…”

“யாரும் வரல்லியே… நான் யாரை வேண்டாம்னு சொன்னேன்…
நொண்டி, விகாரம் கூட காசுகேட்டுதான் வந்தான்….”

“கெடக்காரன்கள் என்ன கெட்டுப்போச்சு… உனக்கு ஒன்னும்
ஆகாது… உன்னை மாதிரி ஆயிரம் பிரசவம் பார்த்திருக்கேன்.. அதிலே
பத்துக்கு ஒன்று ஆப்ரேஷன்… உன் உடம்பு நல்லா இருக்கு… பயப்படாதே
நான் ஆபரேசன்… செலவு இல்லாம கொழந்தை எடுத்துடறேன்…”

மந்திரம் மாதிரி பத்ருன்னிஷாவின் முணுமுணுப்பில் யானை பலம்
வந்தது.. அவள் பார்வையின் கனிவில் பலம் வந்தது.. கை பக்குவத்திலும்
பேச்சின் சாதுரியத்திலும் அன்பு செய்தலிலும் பலம் வந்தது.. மறுபடி
கையெடுத்த போது ஒரு தாய் மாதிரி நிறுத்தினாள். “நான் வீட்டுலே
இருக்கேன் தங்கம்மா பார்த்துக்குவா… கூப்பிட்டற தூரம் வந்துடுவேன்…
மாடிமேலதான் வீடு.. தூரம் இல்லை.. ஒரு நிமிஷத்துல வந்துடுவேன்…தைரியமாய் இரு… என்ன”

“தங்கம் சார்ஜ் எடுத்து கொள்ளலாம்”

“விடியலுக்கு சற்று முன்புதான் சரியான வலி ஆரம்பித்தது.. பத்துருன்னிஷா வாக்களித்த மாதிரி தூக்கம் இன்றி கண் இமைகள் சோர்ந்து விழுந்து கிடக்க ஆனால் புன்னகையுடன் வந்தாள்…

அவளை பார்த்ததும் தெம்பாக இருந்தது வாணிக்கு… களைத்து
வெளிறி அலங்கோலமாக கிடந்த வாணியை அருகில் வந்து கவனித்த
பத்ருன்னிஷாவிற்கு வாணியின் சக்தி முழுவதும் விரயமாகிப் போயிருக்க வேண்டும் என்று அனுமானிக்க முடிந்தது. சிசுவின் முட்டுதலும், தாயின் உந்துதலும் ஒன்றாக சேர்ந்து பிள்ளை வெளியே வரும் அளவிற்கு முயற்சிச் செய்ய அவளால் முடியாது. அல்லது அதை மீறி வெளியே வராத அளவுக்கு உடல் நிலை இருக்கிறது. அதற்கு காரணம் என்னவாக இருக்கும் என்ற சிந்தனையுடன் இரண்டாவது முறையாக கூர்ந்து கவனித்தாள்.

முண்டங்கள் டாக்டரிடம் வயசை மறைத்து சொல்லியிருக்கிறார்கள். இவள் வயது நினைத்ததை விட நிச்சயம் அதிகம்: உடம்பு இறுகி இடுப்பு இளக்கம் கொடுத்திருக்கவில்லை அதற்கு இவளைச் சொல்லி பிரயோஜனமில்லை வரதட்சணை காரணமாக இருக்கலாம் அல்லது நிறம் அல்லது முக பாவம் எல்லாவற்றிற்கும் பெண் தானா காரணம் கருப்பாக இலட்சணமில்லாமல் அல்லது வசதியின்றி ஒருத்தி பிறக்கிறாள் என்றாள் அதற்கு யார் பொறுப்பு இந்த அறையில் அவள்படும் அல்லல் யாருக்கும் புரியும். நேரத்தில் எல்லாம்
நடந்திருந்தால் இப்போது இந்த முயற்சியில் வெகு சுலபமாக பிள்ளை
பெற்றிருப்பாள் ஆனால், நேரம் தவறி கருதரித்ததில் எவ்வளவு சிக்கல்.

“இவளுக்கு டிரிப் வை.. தங்கம் எதுக்கும் ரெடியா இரு..’

“எதுக்கம் என்றால் ஆபரேஷனுக்கு. “தங்கத்துக்கு கருக்கென்று ஒரு
பயம்… வந்தது. பாவம் ராத்திரி பூராவும் வலியில் துடித்திருக்கிறாள். நல்லது நடக்கணும். ஈஸ்வரா என்று பிராத்தித்துக் கொண்டாள் இவள் யார் என்று நேற்று தங்கத்துக்கு தெரியாது.. இன்று தங்கத்தின் பொறுப்பில் இவள்.

“பாவம் என்ன நடக்குமோ நாளைக்கு இவள் ஒரு வேளை இல்லாமல்
கூட” சட்டென்று நிலைக்கு வந்தாள். கேட்ட எண்ணம்… அவளுக்காக
பிரார்த்திக்க வேண்டிய தருணம்.. பாட்டிலைக் கொக்கியில் மாட்டினாள்.
நரம்பு பிடித்து ஊசியைச் சொருகி திரவம் சொட்டு சொட்டாக இறங்குவதைக் கவனித்தாள். வாணிக்கு சொட்டு இறங்க இறங்க உள் வலி சுளிர் சுளிர் என்று ஆரம்பித்தது…

“வலிக்குதும்மா.. உசிரே போகுது…”

“பொருத்துக்கம்மா… பொறந்திடும் பார் நான் பக்கத்திலேயே
இருக்கேன். பயமே வேண்டாம்.. குழந்தை முட்டற போது கடவுளேன்னு
மூச்சைப் பிடித்து அழுத்து கொஞ்சம் வெளியே வந்தா நான்
பார்த்துக்குவேன்… சக்தியை விரயம் பண்ணாதே… சத்தம் போடாதே என்ன.”

“தா… காலைக் குறுக்காதே.. அகட்டி வை… குழந்தைக்கு ஏதாவது
ஆயிடும் சொல்றேனில்லே.. தா சட்.. அகட்டு காலை. அகடடுடி.

“நிதானமா சொல்லுடி அவ வலி அவளுக்கு…”

“குழந்தைக்கு ஏதாவது ஆயிடும்மா….”

“நீ காலை அகட்டிபுடி… எதுக்கு நிக்கற…. தங்கத்தின் மிரட்டலில் தாதி
பணிந்தாள்.”

சலைன் இறங்கின வேகத்தில் வலி சுளீர் என்று பிறந்தது… பத்ருன்னிஷா
கையில் இருக்கியை வாங்கினாள்…. டாக்டர் நெற்றியில் சின்ன சொட்டுகளாய் வியர்வை.

“யா அல்லா’ என்று முணகி கத்தியை வாங்கி புழையில் ரெண்டு இடத்தில் லேசாகக் கோடு மாதிரிக் கீறி புழைத் துவாரத்தை சற்று
பெரிதாக்கினாள். முதல் ஏற்பட்டிருந்த வலியில் கீறின வலி தெரியாது மூச்சு முட்டத் திமிறிக் கொண்டிருந்தாள் வாணி.

“மெல்ல…மெல்ல..ம்..அழுத்தமா…ம். முக்கு…முக்கு..மூச்சைப்
பிடிச்சு அழுத்தமா.. அழுத்து…

வாணிக்கு புரிந்தது… இதோ இது கடைசி நேரம்… இப்போது முயற்சி
செய்யவிட்டால் அப்புறம் கடைசி வழி ஆப்ரேஷன்தான் நிரந்தர கஷ்டம்…

செலவு… பிரச்சனை.. வலி அதிகம் ஆகி…..

சுளீர் என்று பிடித்தது வலியைத் தாங்கி மூச்சை இழுத்தாள். ஒரு
நாளைக்கு சரியாக முக்கவில்லை என்று மாமியார் நிஷ்டூரம் பேசுவாள்…

கொடூரமான மாமியார் ஆபரேஸன் நடந்தால் அதுவும் தன் தப்பு என்பாள் அதறகேற்ற புருஷன்… குழந்தை வந்தாக வேண்டும்… உசிரைப் பிடித்து நிறுத்தினாள்.. தேவையான அளவு நிதானித்து தன் பலத்தைக் கூட்டி அழுத்தினாள்.. எதிரே பத்ருன்னிஷாவும் தங்கமும் பதட்டத்துடன் நிற்க அந்த நேரம் நெருங்கியது…

“முக்கு.. இதோ… வந்துடுச்சு… இன்னுமும் கொஞ்சம் நல்லா… முக்கும்மா… அழுத்தி தள்ளிடனும்… இதோ வந்துடும்… முடிஞ்சிடுச்சி..”

“இதோ அதா என்று சொல்லுவது எளிது பந்தயக்காரன் கூட
ஓடுகிறவர்கள் சத்தம் போடுவார்கள் உற்சாகப்படுத்துகிற தங்கமும்
டாக்டரும் மாறிமாறி சத்தம் போட்டார்கள். இவர்கள் கூட ஓடுகிறவர்கள்.

பந்தயக்காரர்கள் தான் இங்கே ஓட இங்கே வேண்டும். ஸ்தம்பித்த மாதிரி
நடுவில் சிசு நிற்க அதற்கு மேல் தாங்கும் சக்தில்லை என்று உணர்ந்து அம்மா என்று ஓங்கி அலறினாள். வாணி, அந்த அம்மாவுக்கு மேல் பலம் காணாது என்று புரிந்தது. மருத்துவச்சிக்கு, குழந்தையின் உச்சி ரெட்டங்குலம் மாதிரி தெரிந்தது. சட்டென்று இடுக்கியை புழைக்குள் செலுத்தி ஒரு விரலால் குழந்தையின் தலைபிரதேசம் நிதானித்து நடுவிரல் கட்டை விரல் பிரயோகித்து புழை விரிசலில் குழந்தையை இழுத்தாள். உச்சி மாத்திரம் தெரிந்த சிசுவின் தலை வெளியே வர…”இதோ ஆயிருச்சி தலைவந்திடிச்சி கொஞ்சம் முயற்சி செய் இதோ இந்தா…” கடைசி மிச்ச சக்தியில் அம்மா என்று அலறினாள் வாணி.

குழந்தை இழுபடுகிற, வழுக்குகிற அதனால் ஏற்பட்ட வலிமாற்றம்
புரிய டாக்டரின் முயற்சியிலும் மாமியாரின் நிஷ்டூரத்துக்கு பயந்து இல்லாத சக்தியை இழுத்து அம்மா என்று அலறி மூச்சை அழுத்தியபோது சிசு வெளியே வந்தது… நீரும் நிணமும், செத்தையும் இரத்தச் சேறுமாய் வலிகுறைந்த வேகம் கூட தெரியாமல் மயங்க ஆரம்பித்தாள் வாணி…”

“சன்னமான குரல் “பெண் குழந்தை என்றது…”

“ரொம்ப கஷ்டப்பட்டுடீங்க டாக்டர்.. என்றால் நர்ஸ்…”

“அவளை சொல்லு தங்கம்… பாவம் ஆபரேசன் செஞ்சிருந்தால்
எவ்வளவு கஷ்டம்… பாவம்… நல்லபடி ஆயிடுச்சி… சுத்தம் பண்ணு…. தைக்கணும்… ஒரு ரெண்டு மணி நேரம் போல நான் தூங்கணும்….”

தங்கம் ஒரு ரோபோ மாதிரி அசையாமல் இருந்தாள் பத்ருன்னிஷா
சேர்ந்தார்போல் ரெண்டு மணி நேரம் தூங்கி மூன்று நாளாகிறது தங்கத்துக்கு தெரியும் பத்ருன்னிஷா நிச்சயமாக பணத்துக்காக இல்லை. தொழில், பணம், எல்லாம் வெறுத்துவிட்டது. ஆனால், அடியில் மனிதம் இருக்கிறது புருஷன் சிங்கப்பூரில் பெண் கனடாவில் பேரன் பேத்திகள் ஊட்டியில்… அவள் நினைத்தாள் இதை கழுவிவிட்டு நாற்றமில்லாத சாப்பாடு, துணி என்று இருக்கலாம. ஆனால், செய்யமாட்டாள் இந்த ஆஸ்பத்திரி தினப்படி நிணம், நாற்றம். ஆனால், அதில்தான் சந்தோசம் பிள்ளை பிறக்கிறபோது புருஷன் பெண்ஜாதிகள் சந்தோஷத்துக்கு அடுத்த சந்தோஷம் பத்ருன்னிஷாவுக்கு.

ஏடாகூடமாகி குழந்தை சாகிறபோதும் தாய் உயிர் போகிற போதும்
கண்கலங்கி சோர்ந்து தொழிலில் பெண்ணை நிந்தித்தும் உண்டு. ஆனால், அவள் அதை விட்டு போகமாட்டாள்.

குழந்தை சிவப்பாக இருந்தது.. நிறைய தலை முடியோடு நீள
விரல்களோடு… சின்ன உதட்டில் ரத்தம் மாதிரி செம்மை அழகான குழந்தை என்பது வினாடியில் தெரிந்தது….”

“ரொம்ப… அழகான குழந்தைம்மா….”

“பொண்ணுதானே….”

“ச்சீ.. போடி… அரைமணி நேரம் முன்னே நீயே உனக்கு நிச்சயமில்லை
இப்ப சலிச்சிக்கிறே… வேற டாக்டருன்னா ஆப்ரேஸன்தான் தப்பிச்சிட்டே…”

“நீங்க தெய்வம்தான்மா….”

“சரி பேசாத…படு…”

தங்கம் குழந்தையுடன் வெளியே போனாள்….

மூணாவது நாள் குழந்தைக்கு கண் மலர்ந்தது. மொட்டு மொட்டென்று
பார்த்தது. வாணிக்கு மனசு உடல் வலியெல்லாம் ஓடிப்போனது.

வாணியின் அம்மா வந்தாள். சந்தோஷமாக இருந்தாள். “டாக்டரைப்
பார்த்தேன். நாளைக்கு டிஸ்சார்ஜ் வேணா வாங்கிக்க சொன்னார்.. மருந்து எழுதித் தரன்னாங்க… வாரத்துக்கு ரெண்டு தடைவ வந்தாப்
போதுன்னாங்க…”

ராகவன் வெளியே உட்கார்ந்திருந்தான். பக்கத்தில் கொஞ்சம்
பழுப்பேறிய வேஷ்டியோடு ஒரு ஆள் உட்கார்ந்திருந்தான். குளித்திருக்க
வில்லை. முகத்தில் தாடி அப்பி இருந்தது. அவனருகில் பேசினான்.

“நம்ம பொண்ணை அட்மிட் செய்திருக்கேனுங்க… இங்கே
பரவாயில்லைன்னாங்க…”

“பரவாயில்லையா.. பெஸ்ட் அற்பதமான டாக்டர்.. என்ன கவனிப்பு
தெரியுமா எந்த நேரத்திலே என்ன செய்யலாம்னு கணிச்சு செய்வாங்க
ஆப்ரேஸன்னா புடிக்காது. கடைசி முயற்சி முடிஞ்சப்புறம் தான் ஆப்ரேசன்.. அதுலகூட ரொம்ப எக்ஸ்பர்ட்.. நேத்து ராத்திரி ரெண்டு மணிக்கு ஒரு ஆப்ரேசன்.. முப்பத்தியஞ்சு நிமிஷத்துல முடிச்சிட்டாங்க… ஆண் குழந்தை… ராகவன் சொல்லச் சொல்ல பழுப்பு வேஷ்டி சந்தோஷமான திருப்தியோடு ஆமோதித்தான்…”

“வாஸ்தவங்க… அதான் நம்ப பொண்ணை கொண்ணாந்து
விட்டுட்டேன்… எவ்வளவு செலவானாலும் சரின்னு சொல்லிட்டேன்…
ஆனா குழந்தை வேறா, தாய் வேறா ஷேமமா இருந்தால் போதும்னு
டாக்டர்கிட்டே சொல்லிட்டேன்… அப்புறம் கடவுள் இருக்கார்.. நாம
யாருக்கு என்ன பண்ணினோம்…”

“பணம் கட்டிட்டீங்களா….’

“அதெல்லாம் வந்ததும் கட்டிட்டேன்.. ரூபா இன்னம் வேணா
கட்டட்டுமான்னு கேட்டேன் வேண்டாம் போதுன்னாங்க…”

“போதும்….போதும்…இதே ஜாஸ்தி…”

“கெடக்கது விடுங்க… பணமா முக்கியம்.. ஒரு மழை அடிச்சிகடலை
விதைச்சா இது மாதிரி இரண்டு மடங்கு… பொண்ணுக்கு ஏதாவது
ஆச்சின்னா திரும்பிக் கெடக்குமா…. நாம ஆபீஸ்லே இருக்குமுங்களா
கொழந்தை அழகா இருக்குதுங்க… நம்ப பொம்பிள்ளை பாருங்க உங்க
ரூமை விட்டு வரமாட்டேங்குது… குழந்தையையே பார்த்துட்டு
நிக்கறாங்க….”

மறுநாள் ரிசப்பனில் பில் இருந்தது… ராகவனிடம் பில் கொடுத்த போது
எடுத்த விவரமாகப் பார்த்தான். ரூம் வாடகை ஏழு நாளைக்கு பொட்டிருந்தது.

மொத்தமாக மூவாயிரத்து நானூறு…

“ஏம்மா ரூம் வாடகை ஏழு நாளைக்குப் போட்டிருக்கே… ஆறுநாள்
தானே ஆச்சு…”

ரிசப்சன் பெண் அவனை ஒரு மாதிரியாய் பார்த்தாள். இது மாதிரியெல்லாம் யாரும் கேட்டது இல்லை. ராகவனின் கேள்வி அவளுக்கு புதுமையாக இருந்தது.

“இது டாக்டர் தந்த சீட்டை வச்சிப் போட்டது. நாங்களா போடுறது
இல்லை… ஆறு நாள் இன்னிக்கி பன்னண்டு மணியோட முடியுது… இது ஏழாவது நாள்…”

“ரெண்டு மணி நேரம் கூட அதிகமாகல்லியே… ஓட்டல்லே வேணா இப்படி செய்வாங்க… நீங்க ஓட்டல் நடத்தறீங்களா நர்சிங்; ஓம் நடத்திறீங்களா…

“எங்களுக்கு ஓட்டலைப்பத்தி தெரியாது… உங்க சம்சாரத்துக்கு
பிரசவ சார்ஜ் ஆயிரம் தான்னு அம்மா போட்டிருக்காங்க.. சாதாரணமா
மத்தவங்களுக்கு இரண்டாயிரம் போடுவாங்க. ஏன்னு எனக்கு புரியல….
திருப்பிக் கேட்டதுக்கு பரவாயில்லைன்னு சொல்லிட்டாங்க…

“அது சரிம்மா… ஆறுநாள் தங்கினதுக்கு ஏழுநாள் வாடகை போடறது
என்ன நியாயம்… வேணா அரை நாள் வாடகை போட்டுக்கங்க நியாயம்
வேண்டாம்…”

ரிசப்சன் ஒட்டினாற்போல் அறையில் இருந்த வாணிக்கு புருஷனின்
குரல் கேட்டு வியர்த்தது. அப்பாவை அனுப்பி அவனை அழைத்தாள்.

“அங்க என்னங்க சண்டை..’

“ஒன்னுமில்லே… பாரேன் பன்னண்டு மணியோட ஆறு நாள்
முடியுது. ஒரு ரெண்டு மணி நேரத்துக்கு ஒரு நாள் வாடகை கேக்கறாய்க…

“நீங்களா கொடுக்கறீங்க அப்பாதானே கொடுக்கறாங்க.. விடுங்க…’

“உங்க அப்பா கொடுத்தா.. நியாயத்தைக்கூட கேட்கக் கூடாதுங்கறே…. அவர் ஒரு முறைக்குக் கொடுக்கிறார் என்னாலே கொடுக்க முடியாதா என்ன இந்தா பாரு அதிகாரத்தோடு குரல் உயர்த்தினான் ராகவன் சட்டென்று வாணி திரும்பிப் பார்த்தாள். அந்தப் பார்வையில்
மொத்த வெறுப்பும், நெருப்பும் மண்டிக் கிடக்க புது வாணியைப் பார்த்து
ராகவன் கொஞ்சம் நிதானித்தான்… அவன் நின்ற நிலையில் அவனை ஒரு மரம் மாதிரி உணர்ந்தாள் வாணி. ஆனால், மரம் பழம் கொடுக்கும்.. நிழல் கொடுக்கும்… விஷ விருட்சம் கூட விறகாகும்… இவன் எதில் சேர்த்தி ஒரு கணத்தில் பெண்மையின் இயலாத்தனம் புரிபட, மேல் கொண்டு இவனைத் தன்னால் எதிர்க்கிற வலு இல்லை. அது உதவாது என்று உணர்ந்து கைக்கூப்பி குனிந்து காலைத்தொட்டாள். முனசின் அறுவெறுப்பும், நெருப்பும் கண்ணீரில் கனிந்து வழிய “தயவு செய்து எனக்காக விட்டிருங்க… டாக்டர் வர்ற நேரம்” என்று கெஞ்சிக் கொண்டாள்.

Print Friendly, PDF & Email

1 thought on “வலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *