லிட்மஸ் நிறம் காட்டினால்….

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: January 8, 2014
பார்வையிட்டோர்: 13,760 
 
 

“லிட்மஸ் தெரியுமா? அமிலத்தில் ஒரு நிறம் காட்டும். அதுவே அல்கலினா வேற நிறம் காட்டும். அது மாதிரி மனுசாளோட நிறத்தையும் காட்ட ஏதாவதொரு நிறக்காட்டி ஒண்ணு வேணும்”

ராகவன் சார் இப்படிதான் அடிக்கடி ஏதையாவது பிலாசபிக்கலாய் சொல்லி வைப்பார். ஆனால் கல்யாண் அதை வழக்கமாய் பொருட்படுத்துவது இல்லை. ஆனால் இன்று தலைக் கலைந்து, முகம் சோர்ந்து, பார்ப்பதற்கு ரொம்ப பரிதாபமாய் சார் தோற்றம் அளித்தார்.

“ராகவன் சார், மனசைப் போட்டு அலட்டிக்காதீங்க.. அமைதியாய் இருங்க.. எல்லாம் நாளா வட்டத்தில் தன்னால் சரியாயிடும்,” என்று கல்யாண் ஆறுதல் சொன்னான்.

விவாகரத்து ஒன்றும் மனித இனத்திற்குப் புதுசான விசயமில்லை. மனதுகள் ஒத்துழைக்க மறுக்கும் போது, வெறும் யாந்திரீகமான உறவில் என்ன பயன்? பிரிந்து விட வேண்டியதுதான். ஆனால் ராகவன் சார், அதற்காக எடுத்துக் கொண்ட கால அவகாசம்தான் அதிகம். மூன்று வருசம் மனைவியைச் சகித்துக் கொண்ட ராகவனுக்கு, நான்காம் வருசம் சகித்துக் கொள்ள இயலவில்லை.

விவாகரத்துக்கான காரணத்தை ராகவன் எப்போதும் சொன்னதில்லை. கல்யாணும் வலியுறுத்தி கேட்டதில்லை. அவர் மாஜி மனைவிதான் ஒருமுறை நாசுக்காகச் சொன்னாள். “ராகவன் ரொம்ப கட்டுப்பெட்டியாய், கர்நாடகமாய் நடந்துக்கிறார். எனக்கு அவரைப் பொறுத்துக் கொள்ள இயலவில்லை. கூடிய சீக்கிரம் அவராலும், என்னைப் பொறுத்துக் கொள்ள முடியாது”

உப்புப் பெறாத காரணத்திற்காக ராகவன்தான் விவாகரத்து நோட்டிஸ் அனுப்பினார். அவளும் வேகமாய், அவர் மனது மாறுவதற்குள் ‘நமஸ்தே’ போட்டு போய் விட்டாள். முடிவாக நம்ப ராகவன் சார் ‘விவாகரத்துப் பெற்ற ஆசாமி’யாகி விட்டார்.

‘விவகாரத்தானவர்’ என்ற பிராண்ட் பெயர்தான் பேய் மாதிரி சுற்றிக் கொண்டு அவருக்கு வர வேண்டிய நல்ல வரன்களையும் தட்டிக் கழிக்கிறது என்று அவருக்காக தமிழ்நாட்டில் இருந்து மறுவரன் தேடிக் கொண்டிருந்த அவரது பெற்றோர்கள் சொல்லி ரொம்ப வருத்தப் பட்டார்கள்.

ஆனால் ராகவன் இதை நம்பவில்லை. நம்பும் அளவுக்கு அவர் மூடரும் இல்லை. அவர் கல்யாணிடம் சொன்னார். “கல்யாண், என் தங்கச்சி இருக்கா இல்லையா, அவ பச்சப் பூ மாதிரிடா! உண்மையில் அவளை நா என் தங்கச்சியாவே நினைக்கலை. என் சொந்த மகளா பாவிக்கிறேன். ஆனால் எங்க வூட்டு கெழடுகள், என் அப்பாவும் ஆத்தாளும் இருக்காங்கிலே.. அவங்களுக்குப் பயம்! எங்கே நான் கல்யாணம் பண்ணிட்டா, என் தங்கைக் கல்யாணத்தில் அக்கறை காட்டாம இருந்திடுவேனோனு அவங்க ரெண்டு பேருக்கும் ரொம்ப பயம்.. அதான் இப்படி புரூடா வூட்டுட்டு அலையறாங்க.. எனக்குப் பெண் பாக்கிறதா அவங்க கணக்குச் சொன்னாலும், அவங்க அப்படிப்பட்ட எந்த முயற்சியையும் சின்சியரா பண்ணலை. பண்ணியிருந்தால், இத்தனை நேரத்துக்குள் நான் வேறொரு கல்ணாயம் பண்ணி, புள்ளையும் பெத்திருப்பேன்..”

“ராகவன் சார், அனாவசியமா உங்க அம்மா அப்பா மேல் பழி போடாதீங்க! நீங்க சொல்றது உண்மையா இருந்தா, உங்க மொத கல்யாணத்தின் போதே, தங்கை கல்யாணம் முடஞ்சப்பதானு அவங்க முட்டுக்கட்டைப் போட்டிருக்கலாம்லே?”

“என் கல்யாணத்தின் போது, என் தங்கைப் பத்து வயசு குழந்தையடா.. அவ அப்ப வயசுக்கே வரலை.”

ராகவன் சார் சொல்றதும் சரிதான். ‘விவாகரத்தானவன்’ என்றாலும் மறுகல்யாணத்தைக் காலா காலத்தில் முடிக்கணும். இல்லா விட்டால், ஊர் பேச ஆரம்பித்த விடும். ஊர் பேச ஆரம்பித்து விட்டால், எவ்வளவு பெரிய கட்டையை வைத்து அடைத்தாலும், நிற்காமல் பேசிக் கொண்டே இருக்கும்.

ஒருநாள் ராகவன் சார் வாய்விட்டு அழுவதைப் பார்த்து, கல்யாண் நிலைக்குலைந்து போய் விட்டான். “கல்யாண், நான் கையாலாகதவனாம். அதான் மூணுவருசம் அவளுடன் வாழ்ந்தும், எனக்குக் குழந்தைப் பாக்கியம் இல்லையாம். ஆனா அவ எவனோ கம்னாட்டியைக் கல்யாணம் பண்ணிட்டு, புள்ளைப் பெத்தெடுத்துட்டாள்; அவனவன் நாக்கில் நரம்பில்லாமல் பேசறாண்டா.”

எப்படித் தீப்பிழம்பான வார்த்தைகளை இந்த ஜனங்களால், சிறிது கூட அசூயை இல்லாமல் கொட்ட முடிகிறது? இவர்கள் நிறத்தை அளக்க லிட்மஸ் எல்லாம் போதாது..

###

எழுபது வயதில், ‘செனைல்’தான் வரும். ஆனால் மணிஜிக்கு ‘லாயர்’ ஆகணும் என்ற ஆசை வந்தது. பம்பாய் பல்கலைகழகத்தில், அதிக வயதில் சட்டம் படித்து வழக்கறிஞர் ஆனவர் அனேகமாய் இவராய்தான் இருப்பார். ஆனால் மணிஜி அதனாலொன்றும் பெருமைப்பட்டுக் கொள்ளவில்லை. “நான் அடிப்படையில் செகரெட்டரியட்டில் டைபிஸ்ட். ஒரு வாக்கீல்கிட்டே பகுதிநேர ஸ்டெனோவா 25 வருசம் வேலைப் பாத்திருக்கிறேன். அதனால் சட்ட சம்பந்தமான அத்தனை விஷயமும் எனக்கு அத்துப்படி. அதான் சட்டப்படிப்பை ஊதித் தள்ளிட்டேன்,” என்பார் பெருமையாய்.

அப்படிப்பட்ட மணிஜிக்கே ஊதித்தள்ள முடியாத விஷயம் என்று ஒன்று இருக்கிறது என்றால், அது அவரது மகன் ‘கௌசிக் மணி’யின் திருமணம்தான்.

கொசிக் ஒரு கணணி நிறுவனத்தில் ‘சிஸ்டம் அனலிஸ்ட்’. கூடப் பணிபுரியும் மாதூரி பாட்டில் என்ற மராட்டியப் பெண்ணைக் காதலித்தான். அம்மா மூலம் அப்பாவிடம் கல்யாணத்திற்கு விண்ணபித்தான். மணிஜி அவசரமாய் பம்பாயில் உள்ள ஒரு திருநெல்வேலி பெண்ணாகப் பார்த்து, மகனுக்கு மணம் முடித்து வைத்தார். ‘என்னதான் இருந்தாலும், நாம் பொழைப்புக்குதானே இங்கே வந்தோம்? அதனால் முழுசாய், இங்கேயே மூழ்கிட முடியுமா? மராட்டிப் பொம்பளை சுத்தப்பத்தம் பற்றி நமக்கு என்ன தெரியும்?’ என்பது மணிஜியின் எண்ணம்.

திருநெல்வேலி பெண்ணிற்கு இந்த லாஜிக் எல்லாம் புரியவ்லலை. கல்யாணமான ரெண்டாம் மாதமே, ‘நான்கு மாதமான’ தன் வயத்தைத் தள்ளிக் கொண்டு நின்றாள். கௌசிக் உடைந்து போனான். மணிஜி அவசர அவசரமாய் தன் சீனியரை கலந்தாலோசித்து, தன் தொழில் திறமையை எல்லாம் காட்டி, ஒரு ‘டைவர்ஸ் நோட்டிஸ்’ தயாரித்து, அவளிடம் கொடுத்து அனுப்பி விட்டார்.

மனம் மாறிய மணிஜி, மாதூரியைப் பார்த்து, “நீயே எங்க கௌசிக்கை கல்யாணம் செஞ்சுக்கோ,” என்று கெஞ்சப் போனார்.

அவளோ, அவளின் கல்யாணப் பத்திரிக்கையை நீட்டினாள். “அவசியம் வரணும்,” என்று மணிஜி அங்கிளை வேண்டி கொண்டாள்.

கண் இமைக்கும் நேரத்தில், கண்ணில் கோர்த்த நீரை லாகவமாய் துடைத்துக் கொண்டாள்.

கௌசிக் ‘இப்போது திருப்திதானா, கிழவா?’ என்பது போல அவரைப் பார்த்தான்.

“இனி கல்யாணம் என்ற ஒன்றே எனக்கு வேண்டாம்,” என அறிவித்து, மணிஜி ‘கிங் சர்கிளில்’ ஒரு பிளாட்டில் இருக்க, அவன் ‘அம்பர்நாத்’ பக்கம் சொந்த பிளாட் வாங்கிக் கொண்டு ஓடிவிட்டான். அவர் முகத்தில் விழித்தாலே பாவம் என்பது போல் ஓடினான்.

மணிஜியின் மனைவி பர்வதம்மாள், அம்பர்நாத் வரை போய், “உன்னால்தான் நம்ப வம்சம் விருத்தியாகணும்” என்று குய்யோ முறையோ என்று கூப்பாடு இட்டாள்.

“நான் என்ன உன் வம்சம் வளர்க்கும் மெசினா?” என்று கௌசிக் குதர்க்கமாய் கேட்டான்.

ஏழுவருசம் இப்படியே போய் விட்டது.

மணிஜிக்கு எல்லாம் வெறுமையாகத் தெரிந்தது.

‘எழுபது வயசிலே எங்க தாத்தா லாயராகி பிராக்டிஸ் பண்ணினார்,’ என்று பெருமைப்பட போகிற பேரன்மார்களை அவர் இனிமேல் பார்க்கப் போவதே இல்லை.

அப்போதுதான் வீட்டுக்கதவு தட்டப்படும் ஓசை கேட்டது. திறந்தால், மாதூரிதான் நின்று கொண்டிருந்தாள்.

ஏழு வருசத்திற்கு முன் பார்த்த மாதூரிக்கு ஏழு வயது கூடியிருப்பது நன்றாகத் தெரிந்தது. அவள் நேரடியாக, “கௌசிக் கல்யாணம் பண்ணிக்க ஒத்துக்கிட்டார். அவருக்குப் பொருத்தமான நல்ல பெண்ணைப் பாருங்க” என்று ரொம்ப நாகரிகமாய் சொன்னாள்.

மணிஜி திக்குமுக்காடிப் போனார். இப்படிப்பட்ட உத்தமியை தான் மருமகளாய் அடையாமல், உதாசீனப் படுத்தி விட்டோமே என்று மனம் குமைந்து, அவளை நெஞ்சார அணைந்துக் கொண்டார். தன் வாழ்க்கையில் முதன் முறையாகக் கண்ணீர் உகுத்தார்.

‘கௌசிக்கிற்குப் பெண் பார்த்து பெண்ணுடன் வந்தால் போதும்,’ என்று தன் மனைவியை மதுரைக்குத் தன் தமைக்கை வீட்டிற்கு அனுப்பினார். போனவள் ஆறு மாதமாய் வரவில்லை. அவள் கடிதம்தான் முகாரி பாடிக் கொண்டு வந்தது.

சிறிது காலமாய் மணிஜிக்கு ஒரு ஞானோதயம். ‘கொளசிக்கை நேரடியா பார்த்தால், யாருக்கும் பிடிக்கும்,’ என்று சித்தர்களைப் போல் நம்பினார். ஆனால் பம்பாய் வரை வந்து மாப்பிள்ளை பார்க்க வசதியுள்ளவர்கள், கௌசிக்கைப் பார்க்கவே விரும்பவில்லை என்பதுதான் பரிதாபம்.

மணிஜி ‘மணமகள் தேவை’ என்று மும்பை, சென்னை மற்றும் மதுரையில் இருந்து வரும் அத்தனைச் செய்திதாள்களிலும் விளம்பரம் கொடுத்தார். தனக்குத் தெரிந்த உறவினர்கள் நண்பர்கள் மற்றும் சாதி சங்கத்தின் மூலம் கிடைத்த விலாசங்கள் அனைத்திலும், கௌசிக்கிற்கு பெண் இருக்கிறதா என விசாரித்து போஸ்ட் கார்டு எழுதித் தள்ளினார். கல்யாண விஷயம் எல்லாம் போஸ்ட் கார்டில் விசாரிக்கலாமா என்ற துளிச்சந்தேகம் அவருக்கு வரவேயில்லை. மேலும் அவர் அளவுக்கு அதிகமாய் பணிவாய் பெண் வீட்டாரிடம் பேசுவது, அவர்களுக்கு பன்மடங்கு சந்தேகத்தைக் கிளப்பியது. நாளாவட்டத்தில் ஒன்று மட்டும் தெளிவாகவும் உறுதியாகவும் தெரிய ஆரம்பித்தது. கௌசிக்கிற்கு மணிஜி தொடர்ந்து பெண் தேடினால், அவனுக்கு இந்த ஜென்மத்தில் கல்யாணம் நடக்கப் போவதில்லை.

ஒருநாள் மணிஜி இரவு வீடு திரும்பியபோது, யாரோ ஒருவர், தன் சகோதரிக்கு வரன் பார்க்க வந்திருந்ததாகவும், வந்தவர் பெயர் ராகவன் என்றும், அவர் தம்மைத் தனது அலுவலகத்தில் தொடர்பு கொள்ளுமாறு சொல்லி அலுவலக விலாசத்தைக் கொடுத்து சென்றிருப்பதாகவும் சொல்லி, பக்கத்து வீட்டுக்காரர் ஒரு கடிதத்தைக் கொடுத்தார்.

###

மணிஜி கூச்சநாச்சமில்லாமல் பேசும் சுபாவம் உள்ளவர். அவர் ராகவனைச் சந்தித்த கணத்தில் இருந்து, தொடர்ந்து ஒருமணி நேரமாய் மூச்சு விடாமல், பம்பாயின் இயந்திரத் தனமான வாழ்க்கையைப் பற்றியும், பம்பாயில் சொந்தமான வீடு வைத்திருக்கும் தன் மகனது சாமர்த்தியத்தைப் பற்றியும், பெருமையாய் பேசிக் கொண்டே இருந்தார். ராகவன் சார் தன்னையும் மீறி கொப்புளித்த கொட்டாவியை அடக்கிக் கொண்டே காது கொடுத்துக் கேட்டார்.

இந்த பொறுமைதான் மணிஜியைக் கவர்ந்து விட்டது. ‘ராகவன் சார் போன்றவர்களிடம் அனுமன் மாதிரி மனதை திறந்து காட்டிவிட வேண்டும்’ என்ற பேராசை அவருக்குள் விளைந்தது.

கௌசிக்-மாதூரி காதலில் இருந்து, மருமகளின் முசல்மான் தொடர்பு வரை அனைத்தையும் புட்டு புட்டு வைத்தார். இதைக் கேட்ட ராகவனின் முகம் அஷ்டக்கோணலாய் ஆனதை பேச்சு உற்சாகத்தில் இருந்த மணிஜி கவனிக்க தவறி விட்டார். மறுபடியும் பேச்சு, ‘பம்பாயின் பணம் பண்ணும் இயந்திரம்’ என்ற விஷச்சூழலுக்குள் சிக்கித் தடுமாறிக் கொண்டிருந்தது.

“சரி, மிஸ்டர் மணி.. நான் அப்படின்னா எங்க அப்பாம்மாவிடம் கேட்டு உங்களுக்கு சொல்றேனே?” என்று எழுந்தார் ராகவன் சார்.

“இருந்தாலும் மாப்பிள்ளையை ஒருதரம் நீங்க பாத்துக்க வேண்டாமா?” என்று பதட்டத்துடன் விசாரித்தார் மணிஜி.

“எதுக்குப் பாக்கணும்? நீங்கதான் எல்லாத்தையும் விபரமா சொல்லிட்டீங்களே?” மணிஜிக்கு இவ்வளவு திறந்த மனதோடு பேசியிருக்க கூடாதோ என்று உறைத்தது. அணை கடந்த பின்பு, நீரைத் தேக்குவது குறித்து யோசித்து என்ன செய்ய?

மிகவும் சன்னமான குரலில், ராகவன் கையைப் பிடித்துக் கொண்டு தளதளத்தார் மணிஜி. “சார், எனக்குப் பொய் பேசுவது பிடிக்காது, தெரியாது! உங்களுக்குப் பிடித்தால், பையனைப் பாருங்கோ.”

“ராகவன் சார், உங்கள் தங்கை வரன் சம்பந்தமாய் ஒருத்தர் ஆபிசுக்குக் கூட வந்திருந்தாரே?” என்று கல்யாண் விசாரித்தான்.

“அது டைவர்ஸ் கேசுப்பா,” ராகவன் சார் ரொம்ப இழிவான தொனியில் சொன்னார்.

அதிர்ச்சி அடைந்தான் கல்யாண்.

“என்ன பதறுறே? ரெண்டாம் கல்யாணம் பண்ற அளவுக்கு வக்கத்தவனுக்கு என் தங்கை தங்கையா பொறக்கலை.”

“ராகவன் சார், நீங்களா இப்படி பேசறீங்க?”

“கல்யாண், நீ சின்னப்பையன்! உனக்கு இதெல்லாம் புரியாது. வந்தவர் மகனுக்கு மாதூரின்னு ஒரு பொண்ணோட கள்ளத்தொடர்பு. பொண்டாட்டி வேற ஒருத்தனோட ஓடிப் போயிட்டாளாம். இவனோட திருப்தியான வாழ்க்கைனா காதலி, ஏன் கைவிடறா? பொண்டாட்டி ஏன் வேற ஒருத்தனோட ஓடறா?”

“சார், நீங்க ரொம்ப கர்நாடகமா பேசறீங்க..”

“சரி, அப்படியே வச்சுக்கோ.. ஆனா நான் அப்படியும் யோசிப்பதில் என்ன தப்பு இருக்குனு சொல்லு பாப்போம்..”

“தப்பே இல்லை சார்.. ஆனா ஒண்ணு மட்டும் உறுதியா தெரியுது, சார்.. லிட்மஸ் சரியாதான் நிறம் காட்டுது..”

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *