சேப்டர் 3
ஆவென திறந்து கிடந்தது அந்த அரசினர் உயர் நிலை பள்ளி.
நான் தயங்கி தயங்கி உள்ளே சென்றேன். என் கால்களில் புதிதாக இரு திசை பிறந்திருப்பதாக நம்பிய நேரத்தில் அலைபேசியை எடுத்து மணி பார்த்தேன். பகல் 11. காணும் கண்கள் முழுக்க கட்டடங்கள் நிறைந்திருக்க இடையிடையே மரங்கள் வளர்ந்திருந்தன. இதுவரை சாலையில் வீசிய அனல்காற்று இப்போது இல்லை. பெருங்காற்றின் குளுமையை உணர்ந்தேன். எங்கிருந்தோ என்னை நோக்கி வந்த என் கண்களை என்னால் நேருக்கு நேர் காண முடியவில்லை. உறைந்து உறைந்து நிறைந்த நான் உள்ளே நுழைந்ததும் வலது பக்கம் இருந்த வகுப்பறையின் முன்னால் சென்று நின்றேன்.
ஹோவென இரைந்து கொட்டும் சத்தங்கள் ஒரே கணத்தில் மழை நிற்க நிறக்கும் தவளை தவளை போல நின்றது. மெலிதான தேகத்தில் கண்ணாடி வழியாக என்னை ஊடுருவிய ஓர் ஆசிரியை என்னை வினோதமாக பார்த்துக் கொண்டே வாசலுக்கு வந்தார். உள்ளே நிரம்பி குவிந்திருந்த மாணவர்களின் மொத்த கண்களும் என்னையே மேய்ந்தன.
“மிர்தாத்- ன்னு இங்க யாருமே இல்லையே… நல்லா தெரியுமா……..? சிஸ்த் சி தானா….! நீங்க வேணா சிஸ்த் எ ல கேட்டுப் பாருங்க…..” என்று சொல்லிக் கொண்டே சிஸ்த் எ இருக்கும் திசையை நோக்கி கையை நீட்டினார் ஆசிரியை.
நான் பதில் ஏதும் கூறாமல் நடந்தேன். மீண்டும் ஹோவென அதே குழும இரைச்சல்…. வகுப்புக்கு வகுப்பு வித்தியாசப் படுகிறது இந்த இரைச்சல். இத்தனை வயத்துக்குப் பின் பள்ளியில் நடை போடுவது தனித்த வரமென்று நம்பியது மனம். நான் சுற்றும் முற்றும் ஒரு வேங்கையைப் போல பார்த்துக் கொண்டே நடந்தேன். என் மனம் முழுக்க நிறைந்திருந்த சூனியத்தில்… ஒரு வெளிச்சம் சுழன்று கொண்டே இருந்தது. அது இது அப்படி இப்படி என்று எல்லாமே நேர்கோட்டு சிந்தனைக்குள் வந்து வந்து போவதும்.. மரங்களின் வளர்ச்சி சற்று கூட குறைய இருப்பதும்… கட்டடங்களின் நிறத்தில் ஏற்பட்ட மாற்றங்கள்…. குறித்து பேச எதுவுமில்லை என்றாலும்… நினைக்க ஆயிரம் இருப்பது போன்ற பிரமையை தட்டி கழிக்கவும் முடியாமல்… நான் ஒரு கோவில் யானையைப் போன்ற பெருத்த சோகத்தோடு நடை போட்டேன்.
7வது பி… அதே பெயர். அதே பதில். எனக்கு குழப்பமே இல்லை. நான் சரியாகத்தான் கேட்டுக் கொண்டிருக்கிறேன் என்று நம்பியது என் இதயம். கண்களுக்குள் நொடி நேரத்தில் வண்டுகள் இரண்டு வந்து அமர்ந்து கொண்டு சத்தமிடாமல் பார்த்துக் கொண்டிருந்ததை நான் சற்று தலையை குலுக்கி கலைத்து விட்டேன்.
“இல்லையே…. இந்த பேர்ல இங்க யாருமே இல்லையே….” என்றார்கள் 8வது எ விலும்.
இப்பொது தூரத்தில் யாரோ இருவர் என்னை கை காட்டி காட்டி பார்ப்பதும் பேசுவதும் என் உள்ளுணர்வுக்கு புரிந்தது. ஆனாலும் வேகமாக நடை போட்டு நான் நின்ற வாசல் 9வது எ.
“என்ன பேர்…..”
“மிர்தாத்,……”
ஒருமுறை சொல்லிப் பார்த்துக் கொண்ட ஆசிரியர்……கணம் ஒன்றில் திகைத்து உள்ளே கண்களை வேகமாய் நோட்டமிட்டார். மனதுக்குள் வருகைப் பதிவேடு ஒரு முறை வந்து போனது.
“இல்லையே சார்.. நீங்க வேற கிளாஸ்ல…” என்று சொல்ல வந்தவர்……”எனக்கு தெரிஞ்சு 9வது ல இந்த பேர்ல யாரும் இருக்கறதா தெரியல..” என்றார். பின் அவரே தொடர்ந்தார்.
“நல்லா தெரியுமா….? இதே ஸ்கூல் தானா…”?
10 எ வில் கிடைத்த பதிலும் அதுவே என்கையில்……. 11 வது காமர்ஸ் பிரிவு வாசலில் நின்று…கேட்டு கடந்து, 12வது காமர்ஸ் பிரிவு வாசலில் நின்று அதே பேரை சொல்லி கேட்கையில் என்னை சுற்றி ஆசிரியர்கள் நால்வர் கூட்டமும் சில பெரிய பையன்கள் கூட்டமும் வட்டமிட்டிருந்தன.
“சார் யார் நீங்க. யார் தான் வேணும்……..நாங்களும் ஒரு மணி நேரமா பாக்கறோம். ஒரே பேரை சொல்லிட்டு எல்லா கிளாஸ்லயும் கேக்கறீங்களே…. ஒன்னும் புரியலையே…. நிஜமா யார்தான் வேணும்.. எங்க இருந்து வறீங்க…”
அவர்களுக்கு குதிரை வாலாகிவிட்டிருந்த என் நீண்ட கூந்தல்…….மார்பு வரை நீண்டிருந்த தாடி……..கண்களுக்குள் பதுங்கிக் கிடந்த வண்டுகள்…..சட்டை பையில் நிரம்பியிருந்த 5க்கும் மேற்பட்ட பேனாக்கள் சற்று பயமுறுத்தி இருக்க வேண்டும்.
தோளில் போட்டிருந்த பையில் இருந்து எப்போது வேண்டுமானாலும் துப்பாக்கியை நான் வெளியே நீட்டலாம் என்பது போல தான் பார்த்தார்கள். நீட்டினாலும் நீட்டுவேன். எல்லாவற்றுக்கும் காரணம் வேண்டுமா என்ன…?
“பேர் மிர்தாத்… 6வது சி…. 7வது பி…….8வது எ…… 9வது எ…….10வது எ……. 11, 12 காமெர்ஸ் குரூப்… இங்கதான் படிச்சான்…. அவனைத்தான் தேடறேன்… “என்றேன்.
என்னை ஒரு பையித்தியக்காரனை பார்ப்பது போல பார்த்தார்கள். இன்னும் பலமாக ஒரு வட்டம் என்னை சுற்றி போடப்பட்டிருந்தது. பள்ளி மாணவர்களுக்கென்றே ஒரு வாசம் இருக்கிறது. அது இப்போது என் மீது சுழல ஆரம்பித்திருந்தது.
சேப்டர் 1
அப்பப்பா எத்தனை வேகம். பைத்தியக்காரர்களைப் போல வண்டியிலும்… பேருந்துகளிலும்… ஆட்டோக்களிலும்… கார்களிலும்… நடந்தும்…. இந்த மனிதர்கள் போய்க் கொண்டேயிருக்கிறார்கள். எங்கு போகிறார்கள் என்று தான் தெரிவதில்லை. கேட்டால் நேரமில்லை என்கிறார்கள். நான் ஆசுவாசமாக கால் நீட்டி அமர்ந்திருந்தேன். நேரத்தின் கழுத்தை பிடித்து இழுத்து வந்து நாய் மாதிரி என் காலுக்கடியில் கட்டி போட்டிருந்தேன்.
காலை வெயில்…. காலம் முழுக்க அடித்தாலும்… காலத்தின் அப்பால் நின்று இந்த வெயிலைக் காணுகையில்…. ஒரு கனவு வருமென்று நம்பத் தொடங்குகிறது யாவும் . இப்போது வந்தது எனக்கு. வருவதெல்லாம் கனவாக இருக்க வேண்டுமா என்ன…..? வந்த பிறகு கனவாக இருந்தாலும் தகும்தானே…..! என்று ஒரு சிறு யோசனை.
ஏதோ சிந்தித்துக் கொண்டே சென்ற ஒருவன் எங்கோ பார்த்து விட்டு எதேட்சையாக என்னையும் பார்த்தான். கண்கள் ஒரு கணத்தில் பல கணம் சுழலுகிறது. புத்தி பேதலித்தவனாக இருப்பான்.. படக் படக்கென்று கண்களை சிமிட்டிக் கொண்டு என்னை கடந்து விட்டிருந்தான்.
“துரோகி” என்று திட்டினேன்.
யாருக்கும் யாரையுமே தெரிவதில்லையா…. இவர்கள் எல்லாரும் அமானுஷ்யர்களா… எதை நோக்கி இப்படி ஓடுகிறார்கள். ஜடங்கள் என்று முனங்கிய போது இன்னொருவன் என்னை கொஞ்சம் உற்றுப் பார்த்து விட்டு எதையோ யோசித்த படியே சென்று விட்டான். வெயில் சுருக்கென்று பட்டு என் உடல் சற்று வியர்த்திருந்தது. இன்னொருவன் வந்தான். என்னை அவனும் உற்றுப் பார்த்தான். பிறகு எங்கோ பார்த்தான். வானம் தேடினான். பூமி நோண்டினான். காற்றில் கண்கள் வரைந்தான். பிறகு மீண்டும் முனங்கி கொண்டே சென்று விட்டான்.
ஒருவனாவது கிட்ட வருவானா என்று பார்க்கிறேன். ம்ஹும்..
ஒருவன் கையில் வடை ஒன்றை தின்று கொண்டே நடந்து கொண்டிருந்தான். வயிறு சபிக்கும் சாலை பசிக்கு செத்தே போங்கடா என்று சத்தமிட்டு கூற வேண்டும். பிறகு கூறுவோம் என்று முடிவெடுத்த போது ஒருவன் நின்றிருந்தான். அவன் வண்டியை விட்டு கீழே இறங்கியிருந்தான். என்னை கூர்ந்து கூர்ந்து கவனித்தான். சரி இவன் கண்டுபிடித்து விட்டான் என்று எனக்குள் சிறு பதட்டம் அப்பியது. என் நீண்ட தாடியாக இருக்கலாம்……அவனின் அடுத்த கட்ட செயலுக்கு காரணம். சட்டை பையில் இருந்து பத்து ரூபாய் எடுத்து என் அருகே வைத்து விட்டு நகர்ந்து விட்டான். அட பாவிப்பயலே.. ஒரு எழுத்தாளன் தாடி வைக்க கூடாதா……சற்று நீளமான கூந்தல் வளர்க்க கூடாதா…. வெறுமனே வெய்யிலில்… ஆசுவாசமாக கால்கள் நீட்டி அமர்ந்திக்க கூடாதா… பிச்சை கேட்பவனையும் பிச்சை போடுபவனையும் ஒரு நாள் மாற்றி வைக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.
அடுத்தவன் நீண்ட நேரமாக பார்த்துக் கொண்டே இருந்தான். கண்டிப்பாக சொலல் முடியும். அவன் ஒரு வெட்டிப் பயல்தான். கிட்டத்தட்ட அரை மணி நேரம் பார்த்துக் கொண்டேயிருந்தான். சற்று முன்னால் நடப்பதும்……. பின்னால் தவிப்பதும்……என்னை நோக்கி நெருங்குவதும்.. பின் அப்படியே யோசித்து நிற்பதும்…..ஒரு கட்டத்தில் அவன் கண்டே பிடித்து விட்டான். நான் பிணமில்லை என்பதை அவனுக்கு புரிய வைக்க நான் கால்களை கொஞ்சம் குறுக்கி நகர்த்திக் காட்டினேன். குழப்பத்தின் உச்சியில் என்னருகே வந்துவிட்டவனை நான் ஒரு பேய்யைப் போல பார்த்தேன். அவனும் அப்படித்தான் பார்த்தான்.
சேப்டர் 4
எனக்கு நன்றாக தெரியுமா என்று தெரியாது. ஆனால் இதே வீதி தான். இதே ஊர் தான். நான் பிச்சை எடுக்க ஆரம்பித்தேன். பிச்சை போட்டு பழக்கம் இருக்கிறது. பிச்சை எடுத்து பழக்கம் இல்லை. அதுவும் அனார்கலி வாழும் ஊரில் அன்று வந்த நிலவு வாழும் வீதியில் பிச்சை எடுப்பது மஹா மோட்சம் எனக்கு. பெரிதாக என் தோற்றத்தை ஒன்றும் நான் மாற்றவில்லை. கிட்டத்தட்ட பிச்சைக்காரனை போலொரு நெருக்கத்தின் காட்சியை நான் எப்போதோ கொண்டாயிற்று. இப்போது வந்தாயிற்று. அவ்வளவே.
முதல் வீட்டில் பிச்சை கேட்டேன்.
“இல்லை” என்று குரல் வந்தது.
“ஏன் இல்லை…!” என்று மறு குரல் விட்டேன்.
மதில் உடைத்த சிற்பம் போலொரு குண்டு பெண் முகத்தை மட்டும் முதலில் விட்டு பிறகு உடலோடு வந்தாள்.
“பிச்சை தானே எடுக்கற.. என்ன குரல்ல அத்தனை உசரம்?” என்றாள்.
“பிச்சை தானே போடற…… உனக்கென்ன எல்லாமே அத்தனை உசரம்…?” என்றேன்.
கண்கள் விரிய பேச்சடைத்து நின்றாள். பாக்கெட்டாய் இருந்த கடைசி பத்து ரூபாயை எடுத்து அவள் முன்னால் வீசி விட்டு அடுத்த வீட்டில் வாசலாய் நின்றேன்.
ஒரு மாதிரி உற்சாகமாக இருந்தது.
“கொஞ்சம் சோறு தாறீங்களா….? யாதும் ஊரே யாவரும் கேளீர்னு சொன்னது எங்க தாத்தாவோட தாத்தா தான். இப்போ அவர் உயிரோட இல்ல. அதனால தான் நான் வந்து இருக்கேன். கொழம்பு கூட வேண்டாம். ரசம் இருந்தா போதும். நான் வேணும்னா வெயிட் பண்றேன்……என்று சொல்லி வாசலில் சம்மணமிட்டு அமர்ந்தேன். ஒரு பையித்தியத்தை பார்ப்பது போல பார்த்தார்கள். முனகவும் செய்தார்கள். பட்டென்று கதவடைக்கும் காட்சி…மானுடத்தின் பிண்டத்தை ஏதோ செய்தது. நான் எழுந்து அடுத்த வீட்டுக்கு சென்று விட்டேன். ஊருக்குள் வெள்ளம் வந்தால் தான் சோறு போடுவார்கள் போல. எனக்கு தலை கிறுகிறுத்தது. அடுத்த வீட்டில் எதுவும் பேசவில்லை. ஒருவேளை அனார்கலி வீடாக இருக்குமோ என்று யோசிக்க யோசிக்க ஒரு பெண் வந்தாள். நீல நிற ஜுவாலை அவளை சுற்றி வட்டமிட்டிருக்கலாம். எனக்கு பசி மயக்கம் கண்கள் இட்டன.
சுற்றும் முற்றும் பார்த்து விட்டு ஓடோடி வந்து என்னை பற்றி என் முகத்தை தூக்கி…..”என்னாச்சு…..ஏன் இப்டி ஆகிட்ட… அயோ…. இதெல்லாம் பாக்கவா நான் உயிரோட இருக்கேன்” என்று அழுது துடித்தாள். உள்ளே சென்று ஓடோடி சோறு எடுத்து வந்து பிசைந்து பிசைந்து கையில் கொடுத்தாள். ஊட்டி விட என் தாடி இடம் கொடுக்கவில்லை. நான் கையில் வாங்கி வாங்கி தின்றேன். சில போது கையையே தின்றேன்.
“என்ன தான் நடந்துச்சு…. என்னாச்சுடா…. ரெம்ப பெரிய ஆளா வருவான்னு தானே நினைச்சேன்… இப்படி…..அதுவும்.. பிச்சை எடுக்க….அயோ……” தலை தலையாய் அடித்துக் கொண்டு அழுதாள்.
பசியாறியது.
சிரித்துக் கொண்டே நகர்ந்து விட்டேன். திரும்பிக் கூட பார்க்க வில்லை. நீண்ட நேரத்துக்கு அவளின் கேவல் எனக்குள் ஒளித்துக் கொண்டேயிருந்தது. கதவில் முட்டிக் கொண்டு ஒரு மதம் பிடித்த யானையைப் போல உள்ளுக்குள் அடக்கிய அவளின் அழுகையை நான் கையிலேந்தி வந்திருந்தேன்.
சேப்டர் 2
யானை பெரும் கனவு. அதே யானையை கோவில் வாசலில் கண்டதிலிருந்து பெரும் சோகம் எனக்கு. நான் முடிவெடுத்து விட்டேன். பசிக்கும்….தாகத்துக்கு….வாழ்வுக்கும்…. அச்சப்பட்டு அச்சப்பட்டு வழி மாறி திசை மாறி ஒரு யுக டி என் ஏ வை மாற்றி விட்ட மானுடத்தை நான் வெறுக்கிறேன். தேடல் ஒரு வகை என்றால் தொலைதல் அதன் தொகை.
தோகை விரிக்க சிறகு வேண்டுமா என்ன…..? யானைக்கு மண் வாரி போட்டுக் கொண்டால் போதாதா….!
யாத்திரை நிறைவடைய நேரம் வந்து விட்டது என்று தான் நம்பினேன். நம்பினோர் கைவிடப்படார். நானே என்னை கை விடும் காலத்தின் கொடுமையை எங்கேயாவது கட்டி வைக்க வேண்டும். என் பாட்டனை தலையில் அடித்த யானைக்கு காது கேட்டருக்காது. கேட்டிருந்தால் அவன் பாடிய பின்னும் அடித்திருக்காது. ஆனால் பெரும்பாட்டன் சொன்னது போல யார் நாணவும் மன்னிக்கலாம். நான் நாணவும் மன்னிக்கலாம். நான் கிளம்பி விட்டேன். இரவு நேர கோவிலில் செய்வதறியாது விழித்துக் கிடக்கும் கடவுளுக்கும் செய்வதறிந்தும் விழித்துக் கிடக்கும் யானைக்கும் இடையே நீண்ட, நடையில்… உருண்டு புரளலாம் எறும்புக்கு கூட்டம். இசைந்து வழியலாம் பகலின் பெருத்த கூட்டம்.
நான் நுழைந்து விட்டேன். மானுடன் நுழையத்தான் பேரச்சம் வேண்டும். ஒரு கதை சொல்லி நுழைய நூலிச்சை போதும்.
நான் யானையை உற்றுப் பார்த்தேன். அதுவும் அப்படித்தான் பார்த்தது.
“உன் பாட்டன் என் பாட்டனுக்கு செய்தது மிகப்பெரிய தவறு” என்றேன்.
தலை குனிந்தது. ஆனால் முனகியது.
“என் பாட்டனாவது தலையில் தான் அடித்தான். உங்கள் குலம் அவனை வயிற்றில் அடித்ததே…” கோபமாக கேட்டது.
நியாயம் பேச நேரமில்லை. இப்போது தான் அசந்து கிடக்கும் கடவுள் விழித்துக் கொண்டால் ஒரே தொந்தரவாக இருக்கும். யானையை சுமந்து விடலாம். கடவுளை சுமக்க முடியாது.
“வா வா சீக்கிரம் என் முதுகில் ஏறு” என்றேன்.
ஏறிக் கொண்டது.
மெல்ல முதுகில் நின்று… ஆடாமல் அசையாமல் முன்னங்கால்களை சுவற்றுக்கு வெளியே வைத்து உடலை தூக்க, அதற்குள் நானும் அதன் பின்னங்கால்களை முழுக்க தூக்கி கொடுத்து சுவற்றுக்கு வெளியே தள்ளி விட்டேன். மறு பிரசவம் போல வெளியே போய் விழுந்தது.
டாடா காட்டினேன்.
காலையில அந்த பாகனை என் பேர் சொல்லி ஒரு அறை விடு என்று சொல்லி காட்டுக்குள் வேகமாய் ஓடி மறைந்தது.
கடைசி சேப்டர்
“எல்லா வகுப்பிலயும் ஒரே பேரை சொல்லி கேட்பது ஒன்றும் புரியவில்லையே” என்றார்கள்.
“இதில் புரிய என்ன இருக்கிறது… மிர்தாத் 6 வதிலிருந்து 12 வது வரை இந்த பள்ளியில்தான் படித்தான். அவனைத்தான் தேடுகிறேன்….” என்றேன்.
குழம்பிய கூட்டம், “உங்க பேர் என்ன…? எங்கிருந்து வறீங்க…? நீங்க ஏதோ குழப்பத்துல இருக்கற மாதிரி இருக்கு….”என்றது ஒரு மாதிரி தடுமாறி
“என் பேர் மிர்தாத்… நான்….. இங்க தான்……” அதன் பிறகு நான் பேசியது அவர்கள் காதில் விழவேயில்லை. அவர்கள் பேசியதும் எனக்கு கேட்கவேயில்லை.
மிர்தாத்கள் மீண்டும் மீண்டும் வருவார்கள்.
*
ஏதோ தள்ளியது. ஏனோ தள்ளியது. அனார்கலியைத் தேடி சென்றேன். அதற்குள் நான் பிச்சைக்காரனாய் ஆகி இருந்தேன். தேசிய விருது வாங்கியவன் அந்த விருதையா சுட்டுத் தின்பான். ஒரு மயிரும் பதிய வேண்டாம். பிச்சை எடுத்தல் வயிற்றின் கோரம். வயிற்றுய் பசி. பிண்ட பசி. சேர்ந்து தேடுகையில்…. பசியாறியது. ரகசியம் என்னவெனில்…..வந்து அமுது படைத்தவள் என் அனார்கலி அல்ல. அவள் எதிர்பார்த்திருந்த பிச்சைக்காரன் நானும் அல்ல.
*
நான் சிரித்துக் கொண்டே திரும்பி வந்தேன். சங்கிலியை எடுத்து என் கால்களோடு கட்டிக் கொண்டு ஒரு யானையை போல காதாட்டிக் கொண்டும், உடலை அசைத்துக் கொண்டும் கோவில் வாசலின் உட்புறம் நின்று கொண்டேன்.
வழக்கம் போல விடிந்தது. வழக்கம் போல… வந்த கூட்டம்… போய்க் கொண்டுமிருந்தது. பாகனை அறைய மனமில்லை. அவனுக்கும்… யானை பசி தான் போல. நான் தலையாட்டிக் கொண்டே நின்றேன். கண் கெட்ட கூட்டமோ கண்டும் காணாமல் பிச்சை இட்டு போய்க் கொண்டிருந்தது.
*
குழப்பத்தின் உச்சியில் என்னருகே வந்துவிட்டவனை நான் ஒரு பேய்யைப் போல பார்த்தேன். அவனும் அப்படித்தான் பார்த்தான். என் கண்ணீர் அஞ்சலி சுவரொட்டிக் கீழே அமர்ந்திருந்த என்னை அவன் அப்படி பார்த்ததில் வியப்பென்ன.
நீங்கள் பார்க்கவும் நான் அமர்ந்திருக்கிறேன்….. சற்று நேரத்துக்கு…!