கதையாசிரியர்:
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: April 18, 2013
பார்வையிட்டோர்: 17,091 
 
 

டாக்டர் அறையை விட்டு வெளியே வரும்போது சுபாஷ் அவர் புன்னகையை நினைவு படுத்திக்கொண்டான். கவர்ச்சிகரமான சின்னப் புன்னகை. ஒரு சிறிய ஒத்திகை. தமக்காக தாம் மட்டும் பார்த்துக் கொள்ளும் ஒத்திகை. சுலோசனாவிடம் போய் அதே மாதிரி சிரிக்க வேண்டும். நம்பிக்கை ஊட்டுகிற மாதிரி. அவள் நம்புகிற மாதிரி.

சர்ரக்… சர்ரக் என்று நர்சுகளும் பேஷண்டுகளும் நடமாடுகிற ஷூ ஒலி. யாரோ ஒரு நர்ஸ் வார்ட் பாய் ஒருத்தனை மிரட்டுகிற குரல்.
எல்லாவற்றுக்கும் அப்பால் எதிரே வந்த சாமிநாதன். எல்லாமே ஒத்திகையை ஒத்தி வைத்தன. சாமிநாதன் சமீபமாக ஒரு வேதனையை ஏற்படுத்தி விட்டான்.

மீதிஅவர்கள் பரிச்சயம் காலனியில் அடுக்குமாடிப் படிக்கட்டுகளில் ஏறும் போதும் இறங்கும்போதும் ஒரு புன்னகை. ஒரு ஹலோ. ஒரு கை உயர்த்தல். பிறகு கிடுகிடுவென்று வாழ்வின் இரண்டு திசைகளுக்கு இருவரும் திரும்பி விடுவார்கள்.
ஆனால் சமீபத்தில் ஒரு வாரமாக அவனைப் பார்க்கும் போது ஓலமிட்டபடி ஓடும் எலெக்ட்ரிக் ட்ரெய்ன் நினைவுக்கு வந்துவிடுகிறது. கூட்ட நெரிசலில் சாமிநாதனிடம் அழுகிற கைக்குழந்தையைக் கொடுத்துவிட்டு ஹூக்கில் மாட்டிய கைப்பையில் இருந்து பால் பாட்டிலை எடுக்கப்போன அவன் மனைவி சாந்தா நினைவு வருகிறது. மோதித் தள்ளப்பட்டு நிலையிழந்து பிடிப்புவிட்டு ஓடும் ரயிலிலிருந்து அவள் கீழே விழுந்து… கீழே.. கீழே…

எங்கே சார் இங்கே?

சாந்தா இன்சூரன்ஸ் க்ளெய்ம் பண்ண பேப்பர்ஸ் வாங்க வந்தேன். ஆக்ஸிடெண்டுக்கு அப்புறம் இங்க தான் அட்மிட் பண்ணியது.
சுலோசனாவுக்கு சாந்தாவைப் பிடிக்காது. காரணம்?

எத்தனையோ! லேடஸக்ட் காஸ் சிலிண்டர் தீர்ந்து போய் வர ட்யூடேட் மூணு நாள் இருக்கும்போது இவள் போய் அவளைக் கேட்க சாந்தா தர மறுத்துவிட்டது.

நம்பமுடியாதபடி என்னென்னமோ நடந்துவிடுகின்றன. வேகம். அதிவேகம். தலையை அசைத்து விடைபெற்று சாமிநாதன் அவனைக் கடந்தபோது சுபாஷ் செய்த புன்னகை ஒத்திகை மறந்து மறைந்தே போயிற்று.

ரூம் நம்பர் ஆறின் கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்தான். பாண்ட்ஸ் பௌடர் வாசனை, லோஷன் வாசனை படுக்கையிலிருந்து தலை உயர்த்தி அவனைப் பார்க்கிற சுலோசனா.

பிரசவம் அவளை வெளுக்க வைத்திருந்தது. உதடுகளில் மேல்தோல் உரிந்த மாதிரி வெளுப்பு. இமை முடி சரி பாதி கொட்டி விட்டிருந்தது. இந்தக் கண்களின் வெறித்த பார்வை. அதில் குறுகுறுவென்று ஓடும் பாவம். எல்லாம் உன் தப்பு தத்டா என்ற குற்றம் சாட்டின. நேற்று மார்லே பால் கட்டிட்டு ரொம்ப வலிக்குதுங்க.. என்று உதட்டைக் கடித்துக் கொண்டு சொன்னது வேறு உள்ளே வலி ஏற்படுத்தியது.

அவள் பார்வையில் வேறு என்னன்னவோ…

எல்லாம் ஒங்களாலதான்…

என் தப்பு மட்டுமில்லே… நீ தப்பிச்சுக்கலாம்னு பார்க்கிறியா…?
ஆமாம்… அப்போ எனக்கு கோயம்புத்தூர் டிரான்ஸ்பர்.

வயித்தைத் தூக்கிட்டுப் போய் டூட்டியிலே ஜாய்ன் பண்ணிலீவ் கெடைக்கிற வரைக்கும் வயித்திலே புள்ளை உதை வாங்கிக்கிட்டிருக்கணுமேன்னுதான் ரெண்டாவது அபார்ஷனுக்கு ஒத்துக்கிட்டேன்.

அவர்கள் இருவர் கண்களும் மௌனமாகக் குற்றத்தைப் பகிர்ந்து கொண்டது.

நீ ஏண்டி… இவ்வளவு அழகா வந்து மாட்டி இம்சைப் படுத்திறே..?.
போதும்… போதும்… நான் அழகாப் பொறந்ததும் போதும்… ஒங்ககிட்டே மாட்டி இம்சைப் படறதும் போதும்!

குற்ற நிகழ்வுக்கான காரணங்களும் அதே மௌன சம்பாஷணையில்…

டாக்டர் என்ன சொன்னாருங்க?

ஒத்திகை செய்து வைத்திருந்த புன்னகையை அழகாக நடித்துக் காட்டினான்.

முழு நம்பிக்கை தந்தார்.

சுலோசனா அவன் முகத்தை உற்றுப் பார்த்தாள். நம்பவில்லை என்று பளிச்சென்று முகத்தில் மின்னலாய் ஓடியது.

நீ நடிக்கிறாய். நீ நம்ப வைக்கப் பார்க்கிறாய். நானும் நடிக்கிறேன். நம்புகிறமாதிரி.

குழந்தை எப்ப என் பெட்டுக்கு வருமாம்?

இன்னும் நாலு நாள்லே கொண்டு வந்து குடுத்துடுவோம்னார்.
நாலு நாள் ஆவுமா?

அவள் கை மார்பை வலி பொறுக்காமல் தடவித் தடவி விட்டது.
இதுவாவது மெய்யா? அவள் கண்கள் கேட்டன.

அவன் தலையை அசைத்தான். அதில் எப்படியோ வேஷம் கலைந்திருக்கும்.

சுலோசனா திடீரென்று உடைந்தாள்.

ஏங்க இப்படிப் பொய் சொல்றீங்க? என் குழந்தை எங்கிட்டே திரும்பி வராது. அது போயிடுச்சு. போய்டவே போய்டுச்சு. நீங்களும் நானும் பண்ணின தப்புக்கெல்லாம் தண்டனையை அனுபவிச்சுத் தவியுங்கன்னு போகவே போய்டுச்சு.

அடுத்து அது நடந்தது. எப்போதெல்லாம் அவள் ஓர் உச்சத்துக்குப் போவாளோ அப்படி படீர் படீரென்று சுலோசனா தலையில் அடித்துக்கொண்டு எல்லாம் தலையெழுத்து என் தலையெழுத்து என்று ஓவென்ற கத்தத் தொடங்கினாள் ஏனோ போர்வையைக் கடித்துக் கொண்டு வாயைப் பொத்திக் கொண்டு ஓசை வராமல் அழத் தொடங்கினாள். முதுகு குலுங்கிற்று. அவனுள் லேசான அச்சம் பரவிற்று. என்ன செய்வது என்று சுபாஷûக்கு ஒருகணம் தோன்றவில்லை.

வீடாக இருந்தால் அவனது எதிர்வினை வேறுமாதிரி இருக்கும். ஓடிச்சென்று அவளைக் கட்டித் தழுவி மார்பின் மீது அந்த முகத்தைப் புதைத்து முதுகை நீவி நீவி விடுவான். இது பொது இடம். ஆஸ்பத்திரி. எந்த நேரமும் நர்ஸோ டாக்டரோ வரலாம். அவன் தயங்கினான். கட்டிலை நெருங்கி அவள் தலையைத் தொட்டபடி பேசினான்.

சுலோ…. சுலோ… பீ காம்… கண்ட்ரோல் பண்ணிக்க. நீயா ஏதாவது கற்பனை பண்ணிக்கிட்டுக் கத்தாதே.. பீ நார்மல்… இது பொது இடம்…

உச்சம், சுலோவைப் பொறுத்தவரை முதன் முறையல்ல. கத்தியபடியே அவள் மூர்ச்சையானதும் சப்தம் கேட்டு வந்த நர்ஸ் டாக்டரோடு வர அவள் அவனைச் சற்று நேரம் வெளியே இருக்கச் சொன்னார்.

டாக்டர்களுக்கு இது புதிதாய் இருக்கலாம். சுபாஷûக்கு பழையது. பழகியது. கதவுக்கு வெளியே நிற்பது பிடிக்கவில்லை. காற்று வாங்கி வரத் தோன்றியது. தொண்டை வறண்டது. ஒரு காப்பி குடித்தால்?

பில்டர் காப்பி இங்கே நன்றாக இருக்கும். போகலாமா? உள்ளே மருத்துவர் உதவி இருக்கிறது. கவலைப்பட வேண்டியதில்லை.
அவள் இங்கே தவிக்க, ஒரு பில்டர் காப்பி? நூறு சதவிகித சுயநலம்தான்.

அவளுக்காக சுயத்தை அழித்துக் கொண்டதாக அவளிடம் சொன்னதில்லை. சுயம் இருந்தால்தான் பலம். இது அவளே சொன்னது. ஸ்பீடஸ்ட் சிடி என்று ஆறு வாரம் ஒரு மும்பை டிரெய்னிங் போய்த் திரும்பியதிலிருந்து எது எதையோ கழற்றிப் போட அவளால் முடிந்திருந்தது.

இது முடியவில்லை.

காதலிக்க முடிந்திருக்கிறது. பெற்றோரை விட்டு வெளிவர முடிந்திருக்கிறது. தன் பெற்றோரிடமிருந்து தன்னைக் கழற்றிவிட முடிந்திருக்கிறது. ஒரு குழந்தை. ஒரு குழந்தை. அந்த ஏக்கத்தைவிட முடியவில்லை. எல்லாப் பெண்ணும் ஒரு தாயாகி விட வேண்டுமோ?

ஆகாவிட்டால் என்ன குடி முழுகிவிடும்? ஒரு மனித இனப் பிரமை. எதற்கு? ஏன்?

வம்சச் சங்கிலியாம். அறுந்துவிடக் கூடாதாம். உயிரியல் தொடர்ச்சியாம். பத்தாயிரம் தலைமுறையாகப் பாதுகாத்து வைத்திருக்கும் மனிதத் தொடர் அறுந்துவிடக்கூடாதாம். என்னென்னவோ பிரமைகள்! பிரமைகளின் ஒட்டுமொத்தக் கூட்டமைப்புதான் இந்த வாழ்க்கை. நறுக்கென்று தலையில் ஒரு குட்டு குட்டிக் கொள்ளத் தோன்றியது. தத்துவத்துக்கு ஒரு நேரங்காலம் கிடையாதா?

அவன் குட்டிக் கொள்ளவில்லை. பில்டர் காப்பி கேபின் மூலைக்கு நகர்ந்தான்.

டோக்கன் வாங்கி கேபின்காரரிடம் நீட்டும்போது சாமிநாதன் வந்தான். லேசாகச் சிரித்தான். பதிலுக்கு அவனிடம் ஒரு வறண்ட சிரிப்பு.

ஒரு காப்பி? தலையை உலுக்கி விரலால் சுட்டிக்காட்டி சைகையால் கேட்டான்.

சாமிநாதன் மறுத்தபடி தலையாட்டினான்.

எல்லா பேப்பர்லயும் சைன் பண்ணிட்டாங்களாம். ஓவரால் ரிவிஷன் பண்ணி இஷ்யூ பண்ணணும். சீப் ஊர்ல இல்லியாம்… மூணு நாள் கழிச்சுத் தான் வர்றாராம். அப்ப வரச் சொல்லிட்டாங்க.
சுபாஷ் காப்பி கப்பை உதட்டில் வைத்து அவனை அனுதாபத்தோடு பார்த்தான்.

குழந்தை?

கீழே வேலைக்காரி வெச்சுட்டிருக்கா.
ஊரிலிருந்து யாரும் வரலியா?

வந்தாங்க. போய்ட்டாங்க… அவங்கவுங்களுக்கு அவங்க வேலை.
சாமிநாதன் குரல் இடறியது. அவன் கை உயர்ந்து முஷ்டி மடக்கி வாயருகே போய் உதடுகளை அழுத்தி மூடி எதையோ அடக்குவது தெரிந்தது.

எல்லாம் நானே சமாளிச்சுடுவேன் சார்! ஆனா கொழந்தை ஓயாம அழறதைப் பார்க்கப்போ தாங்கலே. அதுக்குப் பசி. தாய்ப்பால் தேவைப்படறாப்போலத் தோன்றது.

சுபாஷ் எதிர்பார்க்கவில்லை. சாமிநாதன் கண்களில் நீர்த்துளிகள் அரும்பின.

சார்… சார்… நீங்க ஆம்பளே… அழக்கூடாது. கத்தத் தோன்றியது. நோ. அந்த நிலை! யார் என்ன ஆவார்கள் என்று எப்படிச் சொல்வது? அவனாக கர்ச்சீப் எடுத்துக் கண்களைத் துடைத்துக் கொள்ளும் வரை சாமிநாதனைப் பார்க்காமல் தவிர்த்து சுபாஷ் காப்பியைப் பருகினான்.

யோசித்தால் எல்லாம் சிம்பிள் ஈக்வேஷன். ஒருத்தி பாலுக்கு ஏங்கும் குழந்தையை விட்டுவிட்டு உலகிடம் விடைபெற்றாள். இன்னொருத்தி குழந்தையைத் தவறவிட்டு விட்டு மார்பில் பால் கட்டிப்போய்த் துடித்துக் கொண்டிருக்கிறாள்.

சாமிநாதன் பேண்ட் பாக்கெட்டில் இருந்து கர்ச்சீப் எடுத்து முகத்தை அழுந்தத் துடைத்துக் கொண்டான்.

ஐ ஆம் சாரி… அநாவசியமா உங்களை டிஸ்டர்ப் பண்ணிட்டேன்.
இவனை இங்கேயே விட்டு அகன்று சுலோசனா ரூமுக்குப் போக வேண்டும் என்று மனம் துடித்தது.

சார்… மேடம் எப்படி இருக்காங்க?

தேறிட்டாங்க. ப்ரிமெச்சூர்ட் பேபி ஆனதாலே இன்க்யூபேட்டர்ல வச்சும் பயனில்லே.

கொழந்தை?
தவறிடுத்து.

அதே காலனியில் ஆறு வருஷமாக இருந்ததில் சுலோசனாவுக்கு நடந்த இரண்டு அபார்ஷனுக்கும் சாமிநாதன் ஒரு சாட்சி. என்ன நினைப்பான் இவன்? குழந்தை என்பது கத்திரிக்காய் வியாபாரமா? விரும்பும்போது வேண்டும். இல்லாவிட்டால் வேண்டாமா?
அவனுக்கு சாமிநாதனிடமிருந்து விடுபட வேண்டும் போலிருந்தது.

அப்ப ஊருக்கா?

இல்லே… காலனிக்குத்தான். கொஞ்சம் பேக் பண்ண வேண்டியிருக்கு. இவ்வளவு பெரிய வீடு வேண்டாமே அவ போனப்புற்ம ஒரு சின்ன போர்ஷன் பார்த்து வச்சிருக்கேன் வெங்கடேசா நகர்லே.

சரி… அப்புறம் சந்திப்போம்…

சார். இஃப்யூ டோன்ட் மைண்ட்… மேடத்தை வந்து பார்க்கலாமா? அப்புறம் நாம எப்போ மீட் பண்ணப் போறோம்?

கொஞ்சம் திகைத்துத் தடுமாறிக் கடைசியில் சுபாஷ் ஒப்புக் கொண்டான்.

ஆறாம் நம்பர் ரூம் கதவை சுபாஷ் திறந்ததும், எங்கே போய் தொலைஞ்சிட்டீங்க. எவளாவது எக்கதியாவது… என்று சீறத் தொடங்கியவள்… பின்னால் சாமிநாதனைப் பார்த்ததும் வாயை அடக்கிக் கொண்டாள். லேசாக ஒரு பரிச்சயப் புன்னகை செய்தாள்.
உடம்பு தேவலையா மேடம்?

பரவாயில்லே.

இங்க சாந்தா இன்சூரன்ஸ் க்ளெய்முக்காக பேப்பர்ஸ் வாங்க வந்தேன். வழியே சாரைப் பார்த்தேன். எப்படி இருக்கீங்கன்னு பார்க்கத் தோணித்து.

ஈஸிட்.. ரொம்ப தாங்க்ஸ்.

சாந்தா இருந்திருந்தா உங்களுக்காக ரொம்ப ஃபீல் பண்ணியிருப்பா. ஆக்சுவலா அந்த ஆக்ஸிடெண்டுக்குச் சரியா அரைமணி நேரம் முன்னாடி கூட உங்களைப் பத்தித்தான் பேசினா. ஒரு சமயம் நீங்க காஸ் தீர்ந்து போய் கேக்க வந்தீங்களாம். அப்போ ரெண்டு நாள்லே அவங்க பொறந்தாத்துலேர்ந்து கெஸ்ட் வர சமயம். இல்லேன்னு சொல்லிட்டாளாம். ஏன் சொல்லிட்டோம்ணு ஃபீல் பண்ணினா… ம்ஹ்ம்.. மறுபடியும் இவன் அவள் எதிரில் அழுது வைக்கப் போகிறான் என்று சுபாஷûக்குப் பயமாக இருந்தது. நல்ல வேளையாக இல்லை.

கொழந்தை எங்க இருக்கு?

கீழே வேலைக்காரி வச்சுண்டிருக்கா.

எப்படி பீட் பண்றீங்க?

டெய்ரி மில்க்தான்… ரெண்டு மூணு நாள் ஒத்துக்கல்லே. வயத்தால போய்டுத்து. அப்புறமா அட்ஜஸ்ட் ஆயிடுத்து.
அதைக்கேட்டதும் சுலோசனாவிடம் புருவங்கள் நெரிந்தன. அந்த முகம் தெரியாத குழந்தையின் துன்பத்தில் பங்கு கொள்வது போல ஒரு பாவம் முகத்தில் படிந்தது.

குழந்தை கீழேதான் இருக்கு?

ஆமாம்… கொஞ்சம் எடுத்துட்டு வாங்களேன்… இஃப்யூ டோன்ட் மைண்ட் இன்னிக்கு மட்டுமாவது அதுக்கு நான் பிரெஸ்ட் மில்க் பீட் பண்றனே.

சுபாஷ் சகஜமாகத் திரும்பி சாமிநாதன் முகத்தைப் பார்த்தான். இப்படி சுலோசனா திடீரென்று எந்த உச்சத்துக்கும் மாறக் கூடியவள் என்பது அவனுக்குத் தெரிந்தது தான்.

இதோ கொண்டு வர்றனே..

சாமிநாதன் போகும்போது கதவை மூடிக்கொண்டு போனான்.
மன்னிச்சுட்டாப் போல இருக்கு, என்றான் குறும்பாக.
மண்ணாங்கட்டி… என்றாள் சுலோசனா எரிச்சலோடு.
அதுதானே கடைசியிலே மீதி, என்று தத்துவம் விட்டான் சுபாஷ்.

– ஜூன் 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *