மலரத்துடிக்கும் மொட்டு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: May 18, 2022
பார்வையிட்டோர்: 18,456 
 
 

(2002 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

திருக்கோணமலை பிரதேச செயலக (பட்டணமும் சூழலும்) சாகித்ய விழா 2002 மற்றும் திருக்கோணமலை மாவட்ட இலக்கிய விழா 2002 ஆகியவற்றிற்கான திறந்த சிறுகதைப் போட்டிகள் இரண்டிலும் முதலாவது பரிசு பெற்ற சிறுகதை

வானத்தை ஓவிய சுவராகக் கொண்டு செங்குத் தாக வரையப்பட்ட நெடுங்கோடுகள் என நெடிதுயர்ந்த பனைமரங்கள் செறிந்து நிற்கின்றன.காலைக் கதிரவனின் செம்மஞ்சள் நிற ஒளிக்கற்றைகள், தலை சிலுப்பி நிற்கும் பனை மரங்களின் வட்டுகளில் பட்டு சிதறி தெறிக்கின்றன. நிழல்கள் நிலத்தில் சாய்ந்து படர்ந்திருக்கின்றன…. இயற்கையின் இந்த அழகோவியத்தின் மத்தியில் அந்த சின்னஞ்சிறு வீடு நிமிர்ந்து நிற்கின்றது!

தனது இறுதித் தேர்வினை எழுதி முடித்து விட்டு நேற்றைய தினம் பல்கலைக்கழகத்தால் வந்த சிவந்தினி விழுந்து படுத்தவள் படுத்தவள் தான். விடிந்து இத்தனை நேரமாகியும் கூட எழுந்திருக்கவில்லை பல்கலைக் கழகம் சென்றோமா படித்தோமா வந்தோமா என்று வந்து விட்டிருந்தால் எதற்காக அவள் அழவேண்டி இருந்திருக்கும்? அவள் எத்தனை உறுதியுடன் பல்கலைக் கழகம் சென்றாள் ! ராகவனுக்கு பதிலாக வேறெவனையாவது காதலித்திருந்தால் கூட இன்று இத்தனை சோதனை ஏற்பட்டிருக்க மாட்டாது…

வீட்டு முற்றத்தில் குந்தியிருந்த படி காலிடுக்கில் ஓலைக் கீற்றொன்றினை மிதித்து வைத்து கிடுகினை பின்னிக்கொண்டிருந்த அவளது தாய் நாயகியின் கண்களில் பனித்த நீர் கன்னங்களை நனைக்க புறங்கையால் திவலைகளை தட்டி விடுகின்றாள். செல்வன் இளவயதிலேயே அவலச் சாவுக்கு உட்பட்ட பின் மாதனையும் சிவந்தினியையும் வளர்த்தெடுக்க அவள் பட்ட கஷ்டங்கள் கொஞ்சநஞ்மல்ல…. இன்று மாதன் தனிக்குடித்தனம் நடாத்த போய் விட்டாலும் தனது தாயைப் பார்ப்பதற்காகவும் மயில் வாகனம் வாத்தியார் தனது தந்தைகாலத்தில் வைத்திருந்த வாடிக்கையை முறிக்க முடியாததாலும் அவன் அந்த வளவுக்குள் இன்னமும் சில மரங்களை தொழில் ரீதியாக வைத்திருந்தான்.

சிவந்தினி படிப்பில் காட்டிய திறமை அவளை பல கஷ்டங்களுக்கு மத்தியில் உயர் கல்விக்கு அனுப்பி வைத்தது. ‘சாதி குறைந்த பெட்டைக்கு என்ன பட்டப்படிப்பு? என்று கேட்டு ஊரார் துாற்றினர். அப்போதெல்லாம் அவளுக்கு வழிகாட்டியாக இருந்தவர் மயில் வாகனம் வாத்தியார் தான்.

பின்னி முடித்த கிடுகினை எடுத்து தாழ்வார சுவரோரம் அடுக்கிய நாயகி மகளைப்பார்ப்பதற்காக அறைக்குள் போனாள்… “என்ன பிள்ளை.. பொம்பிளைப் பிள்ளைகள் காலை எறிஞ்சு நிமிர்ந்து படுக்கக் கூடாது…. ஒருக்களித்து படுக்க வேணுமெண்டெல்லே சொல்லித் தந்தனான்…. நீ எல்லாத்தையுமே மறந்து போனாய் என்ன?’ -நாயகி மகள் அருகாக கட்டிலில் அமர்ந்து நெற்றியில் கைவைத்து தலையை நீவி விட்டாள்.

‘நீ சும்மா இரு….’ – தாயின் கையை தட்டிவிட்ட சிவந்தினி தனது கோபத்தை அவ் வார்ததையால் வெளிக்காட்டினாள்.

‘பிள்ளை…இந்த இடத்தை நீ மறந்து விடம்மா…. அவங்கள் உயர் சாதி காரங்கள், எங்களுக்கும் அவங்களுக்கும் ஒரு நாளும் ஒட்டாது. எங்களுடைய பிடிவாதத்திற்காக எதையாவது செய்ய நேர்ந்தால் மறைமுகமாக எங்களை பழிவாங்கவும் தயங்க மாட்டான்கள்’

நாயகியின் அனுபவங்கள் அவளை அப்படி பேச வைத்தன. கால் நூற்றாண்டுக்கு முன்னர் நடந்த கோயில் பிரச்சனைகளின் போது அவள் சிறு பெண். ஆனாலும் அவளது தந்தை சாதியம் பேசுபவர்களது பொல்லடிக்கும் வாள் வெட்டுக்கும் உட்பட்டு படுகாயங்களுக்கு உள்ளாகி வந்ததை அவள் மறந்து விடவில்லை . அவ்வூர் குடிசனங்கள் பாவிக்கும் ஒரே கிணற்றிற்குள் விசத்தைக் கொட்டி நீர் அருந்த விடாமல் தடுத்ததும் இன்னமும் அவள் நினைவில் இருந்தது…..

‘அம்மா… அந்த நாளையிலை எங்கடை ஆட்கள் இருந்த நிலை வேறு, இப்ப நாங்கள் இருக்கிற நிலை வேறு… ஏன் நேரடியாய்ச் சொல்லுறனே….. ராகவனுக்கும் எனக்கும் படிப்பிலோ சமுதாய அந்தஸ்திலோ என்ன ஏற்றத் தாழ்வு இருக்கு?

சிவந்தினி தனக்கு உயர்சாதிக்காரன் தான் வேணும் என்று அடம் பிடித்து ராகவனைக் காதலிக்கவில்லை. சிவந்தினி காதலில் விழுந்தது எவருக்குமே அவ்வயதில் இயற்கையாக உள்ள கிளர்ச்சி காரணமாகவேயன்றி வேறில்லை. உயர் சாதியினருக்கு சவால் விடுவது போன்ற மகளின் பேச்சு நாயகிக்கு உள்ளுர மன மகிழ்ச்சியையே கொடுத்தது. அந்நாட்களில் தொழிற் கருவிகள் பற்றி மட்டுமே பெருமை பேசிய ஒரு சமுதாயம் இந்த குறுகிய காலத்தில் வளர்ச்சியின் உச்சிக்கு வந்து விட்டதென்றால்….நாயகியின் உள்ளம் குளிர்ந்தது.!

சிவந்தினி தொடர்ந்தாள்…… அம்மா…. போன விடுமுறைக்கு நான் வந்த போதே எல்லா உண்மைகளையும் உன்னட்டை சொல்லிப் போட்டன். இன்டைக்கு பின்னேரம் ராகவன் உன்னைச் சந்திக்க வாரார். அவரோடை நீ கதைத்தால் உன்னுடைய மனம் மாறாமல் போகாது எண்ட நம்பிக்கையிலை தான் நான் இருக்கிறன்.’

படலை திறக்கும் சத்தம் கேட்கவும் நாயகி…’ பிள்ளை வாத்தியார் வாறார்….. நீ முகத்தைக் கழுவிப் போட்டு வந்து அவரோடை கதை’ என கூறி வெளியேறினாள்.

வாத்தியார் ஒரு வித்தியாசமான மனிதர். இளவயதிலேயே மனைவியை இழந்திருந்தாலும் தனது ஏக பத்தினி விரதத்தை பிடிவாதத்துடன் அனுஷ்டித்து தனது ஒரே மகனை படிப்பித்து வெளிநாட்டுக்கும் அனுப்பி வைத்தவர். ‘மெல்போர்னில்’ எப்படி அவன் சுகம் அனுபவிக்கிறான் என்பதை மூன்று மாத கால டூர் விசாவில்’ அண்மையில் தான் சென்று பார்த்து வந்தவர்.

செல்லன் இருந்த காலத்தில் அந்தக் காணியின் ஓரமாக அமைக்கப்பட்டிருந்த எந்த தலைவாசல் கொட்டில் வாடிக்கையாளர் அனைவரையும் அன்று வரவேற்றதோ அதே கொட்டில் இன்று அவருக்கு மட்டுமே உரித்தாக போய்விட்டது. காலையும் மாலையும் மாதன் வாடிக்கைப் பொருளை மறைத்து வைத்து விட்டுப் போய் விடுவான்.

அதை சுவைத்த படியே சிறிது நேரம் அவர் ஆறுதல் அடையும் சந்தர்ப்பம் இருக்கிறதே… அது கோடீஸ்வரருக்கு கூட அனுபவிக்க எட்டாது!

சிவந்தினி சிறுவயது முதலே வாத்தியாரின் புத்தி மதிகளைக் கேட்டு…ஐயா…ஐயா..’ என அழைத்தபடி அவரைச் சுற்றித் திரிந்தவள்…சிவந்தினி கைகால் அலம்பி வந்ததுமே வாத்தியார் அவளை உரிமையுடன் அழைத்தார். அவளும் அருகில் வந்து அவருக்கு வந்தனம் செலுத்தி அவர் அருகில் இருந்த படிக்கட்டில் அமர்ந்தாள்.

‘ஏன் பிள்ளை…சோதனையெல்லாம் எப்படி?. வினவினார்.

‘நல்லாய் செய்தன் ஐயா’ சிவந்தினி.

‘நீ கெட்டிக்காரி…பரீட்சையில் மட்டும் கெட்டித்தனத்தை காட்டினால் போதாது…’ என்று தொடங்கி அவர் இழுக்கவும்….. ‘ஏன் ஐயா தயங்குறீங்கள் சொல்ல வந்ததை சொல்லுங்கோவன். நான் பட்டம் பெற்றாலும் என்ன…’

‘அடியே பிள்ளை சிவந்தினி…’ என்று என்னை நீங்கள் அழைப்பீர்களே ….அதே சிவந்தினி தான் ஐயா நான்!’

வாத்தியாரின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் அருவியாக பீறீட்டது …… இல்லைப்பிள்ளை உனக்கு தெரியும்…. நான் உயர் சாதிக்காரன் எண்டாலும் சாதி பார்க்கிற தீய பழக்கம் என்னிலை கிடையாது. நான் சொல்ல வாரதென்ன வெண்டால் ஒண்டு கொம்மாவின்ரை மனதை நோகப் பண்ணாதை யெண்டது…. மற்றது சாதி மதம் இனம் எண்டு மாறி கலியாணம் முடிக்கிறதாலை எப்பவும் இரு பக்க காரருக்கும் பிரச்சனை தான் எண்டது.’

‘ஐயா…. என்னுடைய தந்தையை நான் கொஞ்ச காலம் தான் ஐயா என்று அழைத்தனான். ஆனால் உங்களை நான் எனக்கு புத்தி தெரிந்த காலம் தொடக்கம் இற்றை வரைக்கும் ஐயா என்று அழைத்து வாறன். அதிலை மானசீகமாக நான் உங்களை எனது தந்தைக்கு நிகராகவே மதிக்கிறேன்…’ அப்படி சொல்லும் பொழுதே சிவந்தினியின் விழிகளிலிருந்து பொல பொல என்று கண்ணீர் பெருகியது. வாத்தியாரது மனதும் கசிந்து விட்டது. மகள் இல்லாத குறைக்கு அவள் அவருக்கு மகளே தான் என்பதை அவரது சொற்கேட்டு நடக்கும் பல சந்தர்ப்பங்களில் அவள் அவருக்கு நிரூபித்திருக்கிறாள். அவருடைய மனதில் இப்போது ஒரு வைராக்கியம் உருவானது. சிவந்தினி என்ற மொட்டு மலர்ந்து பொலிவுற வேண்டுமேயன்றி வாடிக் கருகி விடக் கூடாது….

‘ஏனடி பிள்ளை அழுகிறாய்…. நான் கொம்மாவின்ரை பேச்சைக் கேட்டு கதைக்கிறன். நீ உன்னுடைய பக்க நியாயத்தை சொல்லன்.’ – வாத்தியார்.

‘ஐயா… நானும் ராகவனும் அம்மா அறிந்திருக்கக் கூடிய காலத்துக்கு கூடுதலாக சினேகிதமாக இருந்திருக்கிறம். தவிர, நாங்கள் எல்லை மீறா விட்டாலும் அம்மா நினைத்து பார்க்கிறதை விட கூடுதலாக நெருங்கி பழகி இருக்கிறம்.’ சிவந்தினியின் விம்மல் அதிகரித்தது.

எல்லை மீறா விட்டாலும் என்று சிவந்தினி சொன்னதுமே வாத்தியாரின் மனம் தான் ‘மெல்போர்னில்’ பார்த்து அறிந்த வாழ்க்கை முறைகளை நினைத்துக் கொண்டது. கட்டுப் பாடற்ற பாலியல் சுதந்திரம்…. பாடசாலையில் பயிலும் நாட்களிலேயே இல்லற சுகத்தை அனுபவித்தல்… தனது வாழ்க்கைத் துணையை தானே தேர்ந்தெடுத்தல்…. பிடிக்கா விட்டால் பிரிந்து விடுதல்…. தாம்பத்திய வாழ்க்கையை நடாத்திய படியே கணவன் ஆசை நாயகி ஒருத்தியையும் மனைவி ஆசை நாயகன் ஒருத்தனையும் வைத்துக் கொள்ளும் சுதந்திரம்…..

வாத்தியாரின் மெய் ஒருகணம் சிலிர்த்தது. எங்களுடைய கலாச்சாரத்தில் ஒரு ஆடவனோ பெண்ணோ எப்படிப்பட்டதொரு பாரிய விரதத்தை அனுஷ்டிக்கின்றனர்.! மெல்போர்னில் இளவயதில் மனைவியை இழந்த என்னைப் போல் ஒருவனும் இளவயதில் கணவனை இழந்த நாயகி போன்ற ஒருத்தியும் சந்திக்க நேர்ந்தால் என்ன ஆகியிருக்கும்? என்று வாத்தியாரின் மனம் எடைபோட்டது. ஒரு கணமேதான் அவர் அப்படி எண்ணினார். உடனேயே தன்னைச் சுதாகரித்துக் கொண்டு..அடி பிள்ளை நீ ஒன்றுக்கும் யோசியாதை நான் பின்னேரம் வாறன். ராகவனைப் பார்த்து கதைப்பன். கொம்மாவுக்கும் எடுத்துச் சொல்லுவன்’ என்று சிவந்தினிக்கு உறுதி கூறி விடை பெற்று சென்றார்.

வாத்தியார் செல்லவும், படலை மறைவில் நின்று விட்டு வருவது போல நாயகியின் மச்சாள் செல்லி உள்ளே வந்தாள், செல்லியைக் கண்டால் நாயகிக்கு நடுக்கம் பிடித்து விடும். கணவனின் தங்கையாகையால் அவளுக்கு மறைத்து எந்த ஒரு வீட்டுக் கருமத்தையாவது செய்ய முடியாது.

‘சிவந்தினி பெடிச்சி என்ன சொல்லுறாள் மச்சாள்? செல்லி வினவினாள்.

‘நான் என்ன சொல்லுறது செல்லி…… அவள் ஓடப் போறன் அல்லது சாகப் போறன் எண்டு தான் நிற்கிறாள். கொண்ணன் இருந்தால் எனக்கு இப்படி ஒரு அவலம் வருமே?

கண்ணீர் வராவிட்டாலும் நாயகி கண்களைப் பிசையத் தவறவில்லை.

“நீ ஏன் மச்சாள் அவளுடைய ஆசைக்கு முரணாய் நிற்கிறாய்…ஓடட்டன் விடன். கறுவல் விதானையாற்றை பெடியன் எங்கட சாதிப் பெட்டையை முடிச்சிட்டான் எண்டு ‘வெட்டுறன் கொல்லுறன்’ எண்டு துள்ளினவை. நேற்றுப் பார்த் தன் மருமகளை நடு வீட்டுக் கை வைச்சு பேரப்பிள்ளையை கொஞ்சி விளையாடிக் கொண்டிருக்கினம்’

செல்லிக்கு தெரியாத விசயம் என்று இந்த ஊரிலை எதுவுமே கிடையாது. அதேபோல் அவளது காதுக்கு எட்டி அவள் அதனை எவருக்காவது தெரிவிக்காத விசயம் என்றும் எதுவுமே இருக்காது! இது ஒரு நியதி போல அமையும்…ஆனால் ஊரில் நாயகி குடும்பத்தை ‘வாத்தியார் பகுதி’ என்று குத்தி கதைப்பதற்கு மேலாக வாத்தியார் – நாயகி பற்றி எந்த ஒரு ‘கிசு கிசுவும்’ அவளுக்கு சுவாரசியமாக எட்டவில்லை.

செல்லிக்கு சிவந்தினி தேனீர் பரிமாறினாள். அன்புடன் ‘மாமி’ என்று அழைத்து சுகநலம் விசாரித்தாள். நாயகியிடமிருந்து எந்த கதையையும் பிடுங்க முடியாமல் போனதால் செல்லி சிவந்தினிக்கு பேச்சுக் கொடுத்துப் பார்த்தாள்…என்ன பிள்ளை நல்லாய் மெலிஞ்சு போனாய்?

‘நான் எங்க மாமி மெலிஞ்சனான்…நாளாந்தம் போட்டு கழட்டுகிற ‘சாறி பிளவுஸ்’ அப்படியேதான் இருக்குது’ என்று கூறி சிவந்தினி நழுவவும்….. ‘சிரட்டையில் அல்லாமல் தேனீர் ருசிக்காது’ என்று கூறிய படியே செல்லியும் புறப்பட்டாள்.

செல்லி கூறிய விடயங்கள் நாயகியை சிந்திக்க வைத்தன…கறுவல் விதானை பகுதியென்டால் ஊரே நடுங்கும். அவரே இவ்வளவு துாரம் இறங்கி போகிறார் எண்டால் இண்டையான் நிலையிலை சாதி ஏற்றத் தாழ்வைப் பற்றி ஆர் பேசமுடியும்? சாதியம் பேசுறவை இருட்டறைக்குத் தான் போக வேணும். குடிமை எண்டு எவரும் அடிமை வேலை செய்யக் கூடாது எண்டும் “ஓடா”…! அனைத்து நியாயங்களும் நாயகியின் சிந்தனைக்கு வந்தாலும் அவளை ஏதோ ஒரு மனக் குழப்பம் சஞ்சலப்படுத்திக் கொண்டே இருந்தது.

சிவந்தினியின் கைவரிசையில் தயாராகி அவளாலேயே பரிமாறப்பட்ட மதிய உணவின் திருப்தியில் நாயகி சிறிது கண்ணயர்ந்துவிட்டாலும் மாலையில் வாத்தியார் வந்ததுமே..

என்னவாம் வாத்தியார் மகள் சொல்லுறாள்? என்றே அக்றையுடன் விசாரித்தாள் . வாத்தியார்…. ‘நீ ஏன் நாயகி கவலைப்படுகிறாய். உனக்கு ஒரு கவலை வர நான் விடுவேனா? என்று தைரியமூட்டினார். நாயகியும் அமைதி அடைந்து ‘நான் உங்களைத் தான் வாத்தியார் நம்பியிருக்கிறன்’. என்று கூறி அவரை தனது துணைக்கு இணைத்துக் கொண்டாள்…. சிவந்தினி வாசற்படியில் நின்றபடி குரல் கொடுத்தாள்….. ‘அம்மா …… ராகவன் வாறார்….. ஐயாவையும் கூட்டிக் கொண்டு இஞ்சை வாங்கோவன்…

ராகவன் சிவந்தினியைக் காட்டிலும் சிறிது தோற்றப் பொலிவு குறைவாக இருந்தாலும் முகத்தில் அமைதியும் அறிவுத் தெளிவும் பிரகாசித்தன. சிவந்தினி வாத்தியாரையும் தாயையும் அவனுக்கு அறிமுகம் செய்து வைக்கவும் ராகவன் தனது குடும்ப நிலைப்பற்றி விளக்கினான். பின்னர்…’நான் சிவந்தினியை உயிருக்குயிராய் நேசிக்கிறேன். என்னை நீங்கள் நம்ப வேண்டும்.’ என்று வேண்டிக் கொண்டான்.

அந்நேரம் பார்த்து நாயகியின் மனதில் எங்கோ ஒரு மூலையில் தொக்கி நின்ற ஐயங்கள் விசுவ ரூபம் எடுத்தன… ‘தம்பி…உங்களுக்கு கோடி புண்ணியம் கிடைக்கும். எனக்கு சாதி பெரிசில்லை. எனக்கு என்ரை மகள் தான் பெரிசு…. என்ரை மகளை என்னோடை விட்டு விடுங்கோ.’ என்று கூறி கையேந்தி அழுதாள்.

‘அம்மா…நீங்கள் அநாவசியமாக பயப்படுகிறியள். நான் சாதியம் பார்ப்பவனல்ல. அதனால் தான் உங்கள் மகளை மணம் முடிக்க முன்வந்திருக்கிறன். சிவந்தினியை மறந்து விடு எண்டு கேட்பதை தவிர நீங்கள் எந்த நிபந்தனையை முன்வைத்தாலும் நான் அதை நிறைவேற்றுவன்’

ராகவன் உணர்ச்சிவசமாகி பேசவும் நாயகி ஒரு கணம் சிந்தித்தாள். பின் ராகவனை எதிர் நிறுத்திக் கேட்டாள்…. ‘சிவந்தினியை நீங்கள் உங்கள் வீட்டுக்கு கூட்டிக்கொண்டு போறியள் எண்டு வைப்பம்…. தங்களுடைய மகன் விரும்பி விட்டான் என்பதற்காக பரிந்து உங்கடை அம்மா அப்பா எனது மகளை ஏற்கக் கூடும்…

அப்படியில்லாமல் கோபம் கொண்டு உங்கள் இருவரையும் வீட்டை விட்டு துரத்தினாலும் நாளைக்கு அவையளுக்கு வருத்தம் துன்பம் எண்டு வந்தோ அல்லது உங்களுக்கு குழந்தை ஒண்டு பிறந்தோ உங்களை வீட்டுக்கு அழைக்கும் எந்த சந்தர்ப்பத்திலென்றாலும் என்னையோ எனது மகன் மாதனையோ உங்கள் வீட்டில் ஏற்றுக் கொள்வார்களா?

ராகவன் அந்த தாயிடமிருந்து இப்படி ஒரு உணர்ச்சி பூர்வமான கேள்வியை எதிர் பார்க்கவில்லை. அந்தக் கேள்விக் குரிய பதிலை அவனால் தனித்து வழங்கவும் முடியாது. அக்கேள்விக்குரிய பதிலை இறுக்க வேண்டியது சமுதாயமே…. இருப்பினும் அவனது மனச்சாட்சி ஏதோ பேசியது…… ஒரு தாய் மனம் நோக ஒரு கலியாணம் நடக்கக் கூடாதம்மா.’ என்று வெறுமனே நியாயத்தை முன்னிறுத்தி கூறினான்.

வாத்தியார் முழித்தார்….. ‘சிவந்தினி அவனுடன் இணைந்து தற்கொலை புரிந்து விடுவாள்’ அல்லது அவனோடு சேர்ந்து எங்கையாவது ஓடிவிடுவாள்’ என அவர் நினைத்தார்… சிவந்தினி இளங்குருத்து, அவள் யாருக்காகவும் தனது வாழ்க்கையை பாழடிக்க வேண்டியதில்லை ராகவனோடு ஓடிவிடுவதில் எந்தத் தப்பும் இல்லை ‘மெல்போர்னில்’ படிக்கும் மாணவ மாணவிகள் நடைபாதைகளில் செல்லும் போதே ஏதேச்சையாக முத்தம் பரிமாறிக் கொள்வதை எமது நாட்டு பெற்றோரே சட்டை செய்வதில்லை என்பதை தெரிந்து கொண்டவர் அவர்.

சில வினாடிகள் தான் எவர் முன் நிற்கிறேன் என்பதை சிவந்தினி மறந்தே விட்டாள். ராகவன் தன்னை மணந்து கொள்வான் என்ற நம்பிக்கையில் தான் நடந்து கொண்ட சந்தர்ப்பங்கள் எல்லாம் அவளுக்கு நினைவுக்கு வந்தன. இந்த குற்ற உணர்வுகளுடன் ராகவனை விடுத்து மற்றொருவனுடன் வாழ முடியுமா? அவளது இதயம் ஏதோ ஒரு முடிவை செயற்படுத்த வேகமாக துடித்தது. சிவந்தினி துணியமாட்டாள். துணிந்து விட்டால் தனது தீர்மானத்தில் தடுமாறமாட்டாள்…

ராகவன் அவள் பின்னால் சுற்றிய நாட்கள்.. அவளை வர்ணித்த பொழுதுகள்…விதம் விதமான ஆடைகளை அணிய வைத்து அங்கங்களை இரசித்த மாலை நேரங்கள்…அனைத்தும் அவளது மனத்திரையில் விழுந்தன…

எழுந்தாள்…. தான் அமர்ந்திருந்த ஆசனத்தை இடது கையால் ஓரமாக நகர்த்தி விட்டாள். யாருமே எதிர் பாராதபடி ராகவனின் வலது கையை உறுதியுடன் பற்றி அவனை அறைக்குள் இழுத்தெடுத்து கதவினை இறுக பூட்டிக் கொண்டாள்!

நாயகிக்கு இரத்தம் உறைந்து நாளங்களெல்லாம் செயலிழந்து விட்டது…

வாத்தியார் மட்டும் உள்ளார்ந்த மனத் திருப்தியுடன் கொடுப்புக்குள் சிரித்துக் கொண்டார்.!

– ஸ்திரீ இலட்சணம், முதற் பதிப்பு: அக்டோபர் 2002, ஈழத்து இலக்கியச் சோலை, திருக்கோணமலை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *