கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: August 12, 2021
பார்வையிட்டோர்: 7,399 
 
 

(நகர நரக வாழ்க்கையில் நகர்வது கடினமே!..)

திருமணமான புதிதிலேயே சுரேஷ் தன் மனைவி கலாவை கவனித்தான்… காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றுக்கு அவள் அருந்துவது காப்பி தானா? அல்லது ஒரு 1% காப்பியோடு 99% சர்க்கரை தண்ணீரா??… காப்பியில் அவ்வளவு சர்க்கரை கலந்து இருப்பாள்!!

“அதிகாலையில்… அதுவும் வெறும் வயிற்றில்… இந்த மாதிரி எல்லாம் சர்க்கரை அதிகம் சாப்பிடாதே! உடம்புக்கு ஆகாது” எவ்வளவோ முறை மண்டையில் அடித்துக் கொள்ளாத குறையாக சொல்லி பார்த்தான்… கேட்டாளா அவள்?

“வாழற வரைக்கும் சந்தோசமா வாழணும்… அதுதான் என் பாலிசி! எனக்கு காப்பியில் இவ்வளவு சர்க்கரை இருந்தால் தான் பிடிக்கும்” என்று சொல்லி மழுப்பினாள்.

‘சர்க்கரை வியாதி அனேகமாக பரம்பரை அடிப்படையில் ஒருவரை தாக்குகிறது என்றாலும்… ஒரு கட்டுப்பாடு இருந்தால் தானே கஷ்டம் குறையும்?… இல்லை இந்த பூமியில் முதன் முதலில் ஒருவரை சர்க்கரை வியாதி தாக்கியபோது அது எந்த பரம்பரை வழியில் வந்ததாம்?? கொஞ்சம் யோசிக்க வேண்டாமா??

‘வாழற வரைக்கும் சந்தோசமா வாழணும்!!…. இன்னிக்கி அநேக இளைஞர்கள் இப்படித்தான் நினைக்கிறார்கள்… சந்தோஷத்தின் உண்மையான அர்த்தமே மாறிப்போய்விட்டது…. ஒரு வியாதியினால் கஷ்ட காலம் வரும்பொழுது கஷ்டப்படுவது அந்த ஒரு நபர் மட்டுமல்ல…. உற்றார் உறவினர் என்று எல்லோரையும் சேர்த்தல்லவா அந்த வியாதி கஷ்டப்படுகிறது??.’

கலாவுக்கு 30 வயதில் முதன் முதலில் தொடர்ச்சியாக இரண்டு நாட்கள் ‘தலை வலிக்கிறது… தலை சுற்றுகிறது’ என்றதும் வீட்டில் அனைவரும் பதறினார்கள்.

ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று படிப்படியாக பரிசோதித்ததில் (அந்தப் பரிசோதனைகளுக்கு மட்டுமே சுமார் 500 வெள்ளி செலவான போது இந்த பொருளாதார நெருக்கடியில் அந்த செலவு ஒரு மாபெரும் அனாவசிய செலவாக…. கஷ்டமாக இருந்ததை சுரேஷ் மட்டும் தான் அறிவான்)

கலாவுக்கு சர்க்கரை வியாதி என்று டாக்டர் தீர்மானமாக சொன்ன பொழுது, ஒரு பெரிய இடி விழுந்த மாதிரி இருந்தது கலாவுக்கு மட்டுமல்ல, சுரேஷுக்கும் தான்.

30 வயதில் ஒரு ஆட்கொல்லி வியாதிக்கு ஆளானதில் கலங்கிப் போனாள்…. வாழ்க்கையின் பாதி தூரத்தை கூட சரியாக கடக்கவில்லையே?…. இந்த நிலையில்???

இனிமையாக இருந்த வாழ்க்கை இனி கசக்கத்தான் போகிறது.

இந்த நிலையில் பிள்ளைகள் இருவரையும் பள்ளியில் சேர்க்கும் காலம் வந்துவிட, சோம்பேறித்தனமாக காலை 8 மணிக்கு பின்பே தூக்கம் கலைந்து எழுந்து பழக்கப்பட்ட அவளுக்கு ஒரு சிரமமாக ஆகிவிட்டது.. காலை ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து சமையல் வேலைகளை முடித்துவிட்டு… எஞ்சியிருக்கும் வீட்டுப் பாடத்தை பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுத்து, ஞாபகப்படுத்தி, பள்ளிக்கு வழியனுப்பி…. பசிக்கிறதே என்று வயிறு முட்ட சாப்பிட முடியாமல்…. எல்லாவற்றிலும் ஒரு அளவாக சாப்பிடுவது…. தூங்குவது…. சுதந்திரமாக வாழ்ந்தவள் காலத்தின் கட்டாயத்திற்கு, கட்டுப்பாட்டுக்கு அடங்கி வாழ வேண்டியதாகிவிட்டது!!

நான்கு ஆண்டுகளுக்கு முன் குடும்பத்தோடு சிங்கப்பூர் வந்து குடியேறிய போது ‘இனி வாழ்க்கை முழுவதும் இன்ப மயமே!’ என்று குதூகலித்தவளுக்கு இப்பொழுது எல்லாம் ஏமாற்றமாக இருந்தது.

இந்த கலியுக காலத்தில் யாரை எந்த நேரத்தில் என்ன கொடுமை வந்து தாக்கும் என்பது புரியவே இல்லை… இனி வாழ்க்கையில் ஒவ்வொரு மணி நேரத்தையும் திட்டம் போட்டுத்தான் செலவழிக்க வேண்டும்!

‘காலம் பொன்னானது!’ இப்பொழுதுதான் அது உரைக்கிறது.

“என்னங்க….என்னை உடற்பயிற்சி செய்ய சொல்கிறார் டாக்டர்… ஒரு பவர் ரைடர் (Power-Rider) வாங்கிக் கொடுங்களேன்”… ஒருநாள் இரவில் படுக்கையில் அவள் சுரேஷிடம் கேட்டாள்.

ஏதோ எந்திரத்தனமாக அவளை தொட்டு உறவாட எண்ணி முற்பட்டவன் சரேலென்று எழுந்து கொண்டான்.

‘இந்தப் பெண்டாட்டிகள் எல்லோருமே இப்படித்தான்!… வேண்டிய காரியத்தை சாதித்துக்கொள்ள இரவில் கணவன் தன்னுடன் உறவாட முயலும் சமயமாக பார்த்து…. வெட்கம் கெட்டவர்களாக…. ஒருவித விபச்சாரத்தனமாக….. வியாபாரமாக!!…’

“பவர் ரைடரா?…. என்ன விலை தெரியுமா உனக்கு?… இப்போ இருக்கிற செலவுக்கு இதெல்லாம் தேவைதானா? உடற்பயிற்சி செய்யனணும்னு டாக்டர் சொன்னார்னா அதுக்கு எதுக்கு இந்த மெஷின் எல்லாம்??

காலாற நட… இல்லை ஓடு…. சும்மா விறுவிறுன்னு நடப்பதும் ஓடுவதும் உடம்புக்கு எவ்வளவு நல்லதுன்னு தெரியாதா உனக்கு?… எதிலுமே ஒரு ஆடம்பரம் ஆடம்பரம்னு மனசு அலைஞ்சு தான் இன்னிக்கு உலகமே பொருளாதார நெருக்கடி நிலையில் தவிச்சுகிட்டு இருக்கு…. தேவையானதை மட்டும் ஆசைப்படு… முடிஞ்சா, நம்முடைய அதே அடிப்படை தேவைதான் அடுத்தவங்களுக்கும் தேவைப்படுதுன்னு புரிஞ்சுகிட்டு, அது இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவி பண்ணனும்…..நிம்மதியான, சந்தோஷமான வாழ்க்கைக்கு இது தான் அடிப்படை.

சர்க்கரை வியாதியை ஒரு கட்டுப்பாடோடு வெச்சுக்க மிக முக்கியமான ஒன்று…. வியர்க்க வியர்க்க ஏதாவது வேலை, உடற்பயிற்சி செய்யணும்கிறது தான்… உடம்பு வேர்த்தாலே பிடிக்காது உனக்கு!!… மூக்கையும் முகத்தையும் சுளிச்சி என்ன பயன்?.. உடம்பில் சேரும் அழுக்கெல்லாம் வெளியேறினால் தானே நலமாக வாழ முடியும்?….

கோடைக்காலம், மழைக்காலம், வசந்த காலம்….குளிர்காலம்…. இதெல்லாம் மாறி மாறி வருதே….இதெல்லாம் என்ன வேடிக்கையா?.. இயற்கையை மதித்து வாழுணும் கலா…. இல்லைன்னா நாம போட்ட திட்டம் ஒன்னு… நடக்கிறது வேற ஒன்னுன்னு தான் இருக்கும்.

நீ வியர்க்க வியர்க்க வேலை செய்யறதுக்கு…. அதுவும் இந்த பொருளாதார நெருக்கடியை சமாளிக்க வேண்டிய காலகட்டத்தில எவ்வளவோ இருக்கு…

நான் சொல்றதை கொஞ்சம் யோசித்துப் பார்….. நீ சிங்கப்பூருக்கு வர்ரதுக்கு முன்னாலே… நம்ம சென்னை வீட்ல எப்படி வாழ்ந்துகிட்டு இருந்தோம்….. ஒரு குடம் குடிதண்ணீருக்காக எத்தனை மாடிப்படி ஏறி இறங்கி…. ‘ஒரு குடம் தண்ணி ஊத்தி ஒரே பூ பூத்துச்சாம்!…. ஒரு கூடம் தண்ணீர் கொண்டு ஒரே நாள் தான் போகுமாம்!’… இப்படி பாட்டு பாடிக்கிட்டே அந்த ஒரு குடம் தண்ணீரை கஷ்டம் தெரியாமல் சுமந்துகிட்டு வருவியே!…. துணிகளை எல்லாம் ஏதாவது பாட்டு பாடிக்கிட்டே கையால துவைச்சு போடுவியே…. சமையல் பாத்திரங்களை எல்லாம் விறுவிறுன்னு கழுவிப் போட்டு பளிச்சின்னு உன் முகத்தையும் என் முகத்தையும் காட்டுவியே!…

‘சொர்க்கம் என்பது நமக்கு, சுத்தம் உள்ள வீடு தான்’ னும் பாடிக்கிட்டே… அவ்வளவு பெரிய வீட்டுத் தரையை ரெண்டு மூனு நிமிஷத்துல கூட்டுவியே!?…. எல்லாத்தையும் எந்த எந்திரமும் வெச்சு செய்யாமல், உன்னையும் ஒரு எந்திரமா நினைக்காமல், ஒரு கடமை உணர்வோடு செய்வியே?….

இப்பவும் அதுபோல பண்ணுறது தானே? நாங்க ஆம்பளைங்க, வெளியே போய் கஷ்டப்பட்டு வேலை பார்த்து சம்பாதித்து வர…. நீங்க மட்டும் சொகுசாக வாழ நினைப்பது என்ன நியாயம்?… என் சம்பளத்துல கிட்டத்தட்ட 800 வெள்ளி குறைஞ்சு போச்சு உனக்கே தெரியும்… இந்த பொருளாதார நெருக்கடியை சமாளிக்க யார் யாரோ என்னென்னவோ யோசிச்சு பண்றாங்க… நீயும் செலவை குறைக்க ஏதாவது யோசிச்சுப்பண்ணு…. அதை விட்டுவிட்டு பவர் ரைடர் வேணுமாம் பவர் ரைடர்!!

துணிகளை முன்ன மாதிரி கையால துவைச்சு போடு…. பாத்திரங்களை கையால் கழுவு… தரையை கையால் கூட்டு… கழுவு… இதெல்லாம் எவ்வளவு உன்னதமான உடற்பயிற்சின்னு ஆய்வு செய்பவர்களை கேட்டால் சொல்வார்கள்…. இப்படி ஓடியாடி இடுப்பு வளைஞ்சு வேலை செய்தால், எவ்வளவு வியர்க்கும்னு உனக்கு தெரியும்……எவ்வளவு தண்ணீரும் மின்சாரமும் மிச்சம் ஆகும்னு பில் வரும் போது உனக்கு கண்கூடாக தெரிஞ்சுக்கலாம்… அப்படி மிச்சமாகும் பணத்தை வைச்சுக்கிட்டு தவணை முறையில வேணா உனக்கு வேண்டியதை வாங்கிக்கோ…அது எல்லாருக்குமே நன்மைதான்!

இதைத் தவிர…. தினமும் ஒரு முறையாவது பிளாக்குக்கு கீழே போய் வர படிக்கட்டை பயன்படுத்து…. இது ஒரு நல்ல உடற்பயிற்சி மட்டுமல்ல… அவசர காலத்தில் கஷ்டம் தெரியாமல் இருக்க உதவும்…

இது கலியுகம் கலா…. யாருக்கு எங்கே எப்போ என்ன நடக்கும்னு தெரியாது… புயல், வெள்ளம், பூகம்பம், போர்… அது இதுன்னு லட்சக்கணக்கானவங்க ஒரே ராத்திரியிலே வீடு இழந்து நடுத்தெருவில் நிற்கிறார்கள்…. இதெல்லாம் என்ன மேலோட்டமாக பார்த்து படித்து மறக்க வேண்டிய செய்திகளா??….

நம் அடிமனதை தாக்கி ‘ஆண்டவா… அறிந்தோ அறியாமலோ செய்த பாவங்களை மன்னித்துவிடு.… நல்வழிகாட்டு’ன்னு மனமுறுக தொழுதால் தானே விடிவுகாலம் பிறக்கும்??…. ஐயோ…. ஆண்டவா!” சுரேஷ் தலையில் பலமாக அடித்துக் கொண்டு படுக்கையில் சாய்ந்தான். பொருளாதார நெருக்கடியால் சில மாதங்களாக மனதில் கொந்தளித்து வந்ததை எல்லாம் கலாவிடம் கொட்டித் தீர்த்தான்.

கஷ்டம் தெரியாமல் வாழ்ந்தவர்களுக்கு எந்த ஒரு முதல் கஷ்டமும், எவ்வளவு சிறியதாக இருந்தாலும்…. அது மிக கொடூரமானதாகத் தான் தெரியும்!!

கலா விக்கித்து அழ ஆரம்பித்தாள்.

அன்றிலிருந்து அன்றாடம் அவ்வப்பொழுது வீட்டு வேலைகளை எல்லாம் செய்யும்பொழுது தன் கஷ்ட காலத்தை நினைத்து நினைத்து…. அடிவயிற்றிலிருந்து பொங்கி வரும் அழுகையை… அந்த உப்பு நீரை…. அந்த அசுத்தத்தை…. அந்தப் பாவத்தை…. கண்ணீராக சிந்தினாள்!!

இரண்டு வாரம் கழித்து, வழக்கமான உடல் பரிசோதனைக்கு சென்ற பொழுது டாக்டர் மிகவும் ஆச்சரியப்பட்டார்.

“உன் சர்க்கரை அளவு ரொம்ப கட்டுப்பாடோடு இருக்கே?!!.. என்ன செய்தே?”

“வீட்டு வேலையெல்லாம் செய்தேன்… நல்லா அழுதேன்….”

“ம்ஹூம்….அழறது உடம்புக்கும் மனதுக்கும் நல்லது தான்…. சரி நீ இப்படியே கட்டுப்பாடோடு இருந்தா மற்றவர்களைப்போல் நலமாய்… நோயாளி என்பதை மறந்து நிம்மதியாக வாழலாம்!”

கலாவுக்கு உடம்பெல்லாம் புல்லரித்தது! இந்த நற்செய்தியை கணவனிடம் சொல்லி அவன் தந்த அறிவுரைகளுக்கு நன்றி சொல்லவேண்டும் என்று துள்ளிய மனதோடு வீடு திரும்பினாள்.

***

அழைப்பு மணியோசை கேட்டதும் ‘சுரேஷ் தான்’ என்று எண்ணி கதவை திறந்தவளுக்கு ஒரு அதிர்ச்சி…. வாசலில் நிற்பது ஜெயாவா?… கலங்கிய கண்களோடு… வாடிய முகத்தோடு… திருமணத்திற்கு முன் அழகுப் பதுமையாக வலம் வந்தவள்!… இப்போது ஏன் இப்படி?

ஜெயாவும் கலாவும், அதே போல் அவர்களின் கணவன்மார்கள் பிரபுவும் சுரேஷும் நெருங்கிய நண்பர்கள்…. இரண்டு ஜோடிகளுக்கும் கிட்டத்தட்ட ஒரே காலகட்டத்தில் தான் திருமணம் நடந்தது. ஜெயா-பிரபு தம்பதிகளுக்கும் ஒரு ஆண் ஒரு பெண் குழந்தைகள் பிறந்து அவர்களும் பள்ளிக்கு செல்கிறார்கள்.

“உள்ளே வா ஜெயா… ஏன் ஒரு மாதிரி இருக்கே!” கலா விசாரித்தது தான் தாமதம்…. ஜெயாவுக்கு அழுகை பீறிட்டு வந்தது.

“அவர்….உன் வீட்டுக்காரர் சுரேஷ்… இன்னும் வரலையா?” அழுது விசும்பி நின்றதும் ஜெயா கேட்டாள்.

“வரும் நேரம் தான்… என்ன விஷயம் ஜெயா?”

“அவர் வந்துவிடட்டும், சொல்றேன்…அதோ…வந்துட்டார் போலிருக்கே?!”

திறந்திருந்த கதவு வழியாக எட்டிப் பார்த்தவாறே காலணியைக் கழற்றியவன், ஏதோ ஒரு பதட்டம் நிலவுவதை புரிந்து கொண்டான்.

“பிரபு எங்கே?… அவன் வரலியா?… அவன் நலம்தானே?”

மறுபடியும் அழ ஆரம்பித்தாள் ஜெயா… ‘இந்தப் பெண்கள் அழுதழுதே காரியத்தை சாதித்துக் கொள்வார்கள்!’ என்று சலிப்படைந்த சுரேஷ், “என்ன பிரச்சினை ஜெயா?… சொல்லு” என்று சோபாவில் அமர்ந்து கேட்டான்.

“என்னமோ தெரியலை… அவர்.. பிரபு போக்குல கொஞ்ச நாளா ஒரு மாற்றம் இருக்கு… எதுக்கெடுத்தாலும் எரிஞ்சு விழறார்… பிள்ளைகளோடு எவ்வளவு பாசமாக இருந்தவர், இப்போ அவர்களை அடித்து நொறுக்கறார்!. ஒரு வாரமா என்ன பேச்சு எடுத்தாலும், திட்டு அடி தான் மிஞ்சுது….நாங்க இரண்டு பேரும் உங்க இரண்டு பேர் மூலமாகத்தான் ஒருத்தரை ஒருத்தர் நல்லா தெரிஞ்சு கிட்டு கல்யாணம் பண்ணிகிட்டோம்… இப்போ எல்லாம் குட்டிச்சுவரா போயிடுச்சு!”… இன்னும் விஷயத்திற்கு வராமல் ஓ என்று புலம்பினாள் ஜெயா.

சுரேஷுக்கு எரிச்சலாகத் தான் இருந்தது… “அப்படி என்னதான் நடந்தது?.. நெருப்பில்லாமல் புகையாது…. நீ என்ன செய்தாய்? பிரபு என்கிட்ட எதுவும் சொல்லலியே?.. என்னாச்சு உங்களுக்குள்ளே?… அவனுக்கு அலுவலகத்தில் ஏதாவது பிரச்சினை இருக்கும்…சம்பளம் குறைந்து இருக்கும்…. மன உளைச்சல் இருக்கும்…. இந்த பொருளாதார நெருக்கடியினால் என்னென்னவோ கஷ்டம் நம்மை பாதிக்குது… புரிஞ்சுகிட்டு அனுசரிச்சு நடந்துக்க வேண்டியது முதல்ல பெண்கள்தான்” சுரேஷ் கலாவை முறைத்தவாறே சொன்னான்!.

“ஐயோ அதெல்லாம் ஒன்னும் இல்லை” ஜெயாவின் அழுகை இன்னும் ஓயவில்லை.

“அப்போ வேற என்ன பிரச்சனை?”

“நேத்து ராத்திரி ‘ஜெமி ஜெமி’ன்னு தூக்கத்துல பேசறார்… எழுப்பி என்னன்னு கேட்டா…. யார் இந்த ஜெமின்னு கேட்டா…அவர் ‘அவள் அலுவலகத்தில் வேலை பார்க்கிறவ… என் புது காதலி’ன்னு வெட்கமில்லாமல் சொல்றார்… என்கூடவும் இப்ப எல்லாம் சரியா உறவாடறதில்லை…. இன்னிக்கி காலையில இதுக்கு ஒரு முடிவு கட்டணும்னு அவர் கிட்ட பேசினேன் எந்த கேள்விக்கும் சரியான பதில் சொல்லாமல் ‘நான் அவளை கட்டிக்கப் போறேன்… அவகூடத் தான் இனிமேல் வாழப்போறேன்’ன்னு கத்திக்கிட்டே வேலைக்கு போயிட்டார்…. எனக்கு என்ன செய்யறதுன்னு தெரியலை… உடம்பெல்லாம் வெடவெடக்கது…. நீங்களே சொல்லுங்க சுரேஷ்…. நான் அப்படி என்ன தப்பு பண்ணினேன்? எனக்கு புரியலை.. இல்லை அப்படியே தப்பு பண்ணியிருந்தாலும், அவர் இப்படி செய்வது நியாயமா?” ஜெயா புலம்பினாள்.

“பிரபுவா இப்படி?… என்னால நம்ப முடியலை… இன்னொரு பெண்ணை ஏறிட்டுக் கூட பார்க்க மாட்டான் அவன்… தானுண்டு தன் வேலையுண்டுன்னு இல்ல இருப்பான் எப்பவும்? …சரி… சரி… நீ இப்போ வீடு திரும்பு… அவன் திரும்பும் நேரம் ஆயிடுச்சு…. எப்பவும் போலவே சாதாரணமாக இரு. நாளைக்கு நான் அவன் ஆபிசுக்கு போன் பண்ணி அந்த சண்டாளி ஜெமியோடு பேசி….நான் கொடுக்கிற டோஸ்ல… அந்த ஆபீசை விட்டு ஓடிப் போயிடுவா…. நீ பயப்படாம வீட்டுக்குப் போ”

***

மறுநாள் காலை…

சரியான தூக்கமின்மையாலும் மனக்குழப்பத்தாலும்… ஒரு வித மன உளைச்சலோடு பிரபு வேண்டாவெறுப்புடன் வேலை பார்த்துக் கொண்டிருந்தான். தொலைபேசி மணி ஒலித்தது…. ஒலித்ததும் உடல் அதிர்ந்தது லேசாக. “ஹலோ குட் மார்னிங் திஸ் இஸ் J&K”

மறுமுனையில் சுரேஷ் கொஞ்சம் குரலை மாற்றிக்கொண்டு “ஜெமி ப்ளீஸ்… நான் அவ பாய்ஃபிரண்ட் கிரன் பேசுறேன்” என்று புதிர் போட்டான்.

பிரபுவுக்கு தூக்கிவாரிப்போட்டது…. இவனுக்கு எப்படித் தெரியும்?… “ஹலோ இது ராங் நம்பர்” என்று சொல்லிவிட்டு பட்டென்று போனைவைத்தான்.

சில வினாடிகளில் மறுபடியும் போன் ஒலித்தது…. மறுபடியும் அதே குரல்… “ஹலோ திஸ் இஸ் ராங் நம்பர்… ஜெமின்னு யாரும் இங்கே இல்லை…. இந்த ஆபீஸ்ல பொம்பளைங்களே கிடையாது மிஸ்டர்!” மறுபடியும் பட்டென்று போனை வைக்க… இதயம் திக் திக் என்றது.

மறுபடியும் போன்… “ஹலோ நீதான் அந்த பிரபுவா?”

“ஆமாம் யார் நீ?…. உனக்கு எப்படி என் பெயர் தெரியும்?”

“எனக்கு எல்லாம் தெரியும்…ஏய் மிஸ்டர்….உனக்கு வெட்கமாயில்லை?.. ஜெமி என்னை துரோகம் பண்ணிட்டு உன் கூட ஒட்டறது சரிதானா? எச்சில் இலையில் சாப்பிடுவதற்கு வெட்கமா இல்லை?? உனக்கு கேவலமா இல்லை??…. உனக்கு கல்யாணம் ஆகி ரெண்டு புள்ளைங்க வேற?! சதையை தேடி அலைவதுதான் உன் வாழ்க்கையா?…. இல்லை அதுதான் எத்தனை காலத்துக்கு முடியும்? எல்லார் சதையும் ஒரு நாள் தொங்கித்தான் போகும்!!… கூப்பிடு அந்த ஜெமியை…!!”

பிரபுவுக்கு உடல் வெடவெடக்க ஆரம்பித்தது…. “நான் நிஜமா தான் சொல்றேன்…. ஜெமின்னு யாருமே இங்க இல்லை!”

“அப்போ யாருடா அந்த ஜெமி?… ஏன் உன் பொண்டாட்டிய அழ வைக்கிற?” சுரேஷ் சொந்தக் குரலில் கத்தினாள்.

“ஹேய்…..சுரேஷ்… நீயா இவ்வளவு நேரம் பேசினது?”

“ஆமாம் சொல்லு, யார் அந்த ஜெமி?”

“நினைச்சேன்… நேத்து அவ லேட்டா எங்கேயோ போய்விட்டு வீடு திரும்பினப்பவே நினைச்சேன்…. உன் கிட்ட தான் கம்ப்ளைண்ட் பண்ணி இருப்பான்னு …”

“அது சரி… இது என்ன கூத்து?… என்னதான் நடக்குது உன் வீட்ல? யார் தான் அந்த ஜெமி?”

“சாயங்காலம் சந்திச்சு பேசுவோமே?”

***

வேலை முடிந்ததும் இருவரும் ஒரு பூங்காவில் சந்தித்துக் கொண்டனர். “உன் கிட்ட சொல்லனும்னு சிலசமயம் நினைப்பேன்… அப்புறம் எப்படியாவது சமாளிப்போம் என்று சும்மா இருந்துவிடுவேன்” பிரபு பேச ஆரம்பித்தான்.

“அது தான் நிறைய பேர் பண்ற தப்பு…. குடும்பத்துல இருக்கிற நிறைய பிரச்சினைகளுக்கு மூல காரணம்…. வெளிப்படையா பேசிக்காம எப்படி பிரபு ஒரு பிரச்சினைக்கு தீர்வு காண முடியும்?”

“பேசிப் பார்த்தேன் சுரேஷ்….எவ்வளவு வெளிப்படையா ஒரு புருஷன் பேச முடியுமோ அவ்வளவையும் ஜெயா கிட்ட பேசி பார்த்துட்டேன்…. சில ஜென்மங்களை திருத்தறது…. புரிஞ்சிக்க வைக்கிறது ரொம்ப கஷ்டம்கிறது அவ விஷயத்துல தெரிஞ்சுக்கிட்டேன்”

“ஏன் இப்படி சலிப்படையற?… என்னதான் இருந்தாலும் அவ உன் மனைவி… உன்னுடைய அணுகுமுறை ஒரு வழியில் சரி இல்லன்னா… வேற அணுகுமுறையை கையாள வேண்டியது தானே?”

“அந்த அணுகு முறை தான் இந்த ஜெமி!”

“நீ என்ன சொல்ற?” சுரேஷ் வியப்படைந்தான்.

“ஏன் சுரேஷ் ….ஜெயாவை பொண்ணு பார்க்கப் போனப்போ….அவ எவ்வளவு அழகா இருந்தா… நீயும் எவ்வளவு கிண்டல் பேச்சு பேசி என்னை சிரிக்கவச்சு சந்தோஷப் படுத்தினே?…. இப்போ…. இப்போ அவ எப்படி இருக்கா பார்த்தியா? உடம்பு நோகாம வேலை பார்க்கணும்னு ஆசைப்பட்டா, அப்புறம் உடம்பை எப்படி திடமாகவும் கட்டாகவும் வச்சுக்க முடியும்?.. பொண்ணு பார்த்த அன்னிக்கு…. கல்யாணம் பண்ணிடன்ணிக்கு மாத்திரம் சீவி சிங்காரிச்சு அழகு காட்டினா…. வாழ்க்கை பூராவுக்கும் அது போதுமா? அன்னிக்கு சிங்காரிச்சுக்கிட்டத்தில குறைஞ்சபட்சம் ஒரு 25% சதவிகிதமாவது தினமும் சிங்காரித்துக்கொண்டு அழகா… வேலையிலிருந்து திரும்பும் கணவனை வரவேற்று உபசரிக்க வேண்டாமா?…. வெளியிலே போய் வரும்போதெல்லாம்…. அதுவும் இந்த சிங்கப்பூரில் எத்தனை விதவிதமான அழகான பொம்பளைங்களை பார்க்கிறோம்?!… பார்க்காமல் இருக்க முடியுமா??!!… அவங்க காட்டுற, பண்ற கூத்தை… இதெல்லாம் பாக்குற நம்ம உடம்பை…உணர்வை எவ்வளவு பாதிக்குது??!!… நம்ம பெண்டாட்டியும் அழகா இருக்கணும்னு மனம் ஏங்கறதுல என்ன தப்பு?

கல்யாணம் ஆன புதுசுல… காலையில வேலைக்கு கிளம்பறப்ப….. அவ குளிச்சி முடிச்சி சிங்காரிச்சிக்கிட்டு… ஒரு முத்தம் கொடுத்து வழி அனுப்பி விடுவாளே!!… அந்த சந்தோஷமான நாள் எல்லாம் இப்போ இல்லையே?! அந்த சந்தோஷமான… சிறு சிறு அன்புப் பரிமாற்றங்கள் வாழ்க்கை முழுவதும் தொடர வேண்டிய விஷயங்கள் இல்லையா?!… இரண்டு பிள்ளைகள் பெத்துட்டா…. முடிஞ்சதா காதல் வாழ்க்கை??!! இனி எல்லாத்தையும் எந்திரத்தனமா தான் செய்யணுமா?

பெரிய வீடாக வாங்கணும்… சொகுசாக வாழணும்னு… ஆசைப்பட்டால் மட்டும் போதுமா? வீட்டை சுத்தமாக வைத்திருக்க வேண்டாமா?… 8 மணிநேரமும் ரொம்ப துப்புரவான சூழ்நிலை..Clean Room Job…. பின்பு வேலை செய்துவிட்டு வீடு திரும்பினா….அந்த வீடும் துப்புரவாக இருந்தால் தானே நம்ம மனம் அதே சீரான நல்ல நிலையில் இருக்கும்?

ஒரு வேலைக்கும் போகாமல்… வீட்டிலேயே இருந்துக்கிட்டு…. இரண்டு பிள்ளைகளைப் பார்த்துக் கொள்வது…. அப்படி என்ன பெரிய கஷ்டமோ புரியலை…. எப்ப பார்த்தாலும் போன்ல வளவளன்னு யாரோடயோ பேசிக்கொண்டே திரிஞ்சா?…. வீட்டை கவனிக்க நேரம் எங்கே கிடைக்கும்?”

“சரி….இதெல்லாம் வெளிப்படையா பேசி தீர்க்க வேண்டிய விஷயங்கள் தானே?… அவளை அழ வைக்க வேண்டிய அவசியம் என்ன?”

“‘நல்ல மாட்டுக்கு ஒரு சூடு நல்ல மனிதனுக்கு ஒரு சொல்’ன்னுவாங்க… வெறும் வாய் வழி அறிவுரைகள் சரிவராத பட்சத்தில்… ‘அடியாத மாடு படியாது’ என்கிற நிலைக்கு போக வேண்டியது தான்…. பிறந்த வீட்டில் இருந்த வரைக்கும் அவ சொகுசாக வாழ்ந்து விட்டாள்… எந்த ஒரு வேலையையும் செய்து கொடுக்க அங்கே யாராவது இருந்தாங்க….ஆனா…. இப்போ எல்லாத்தையும் அவ தானே பார்க்க வேண்டியிருக்கு? என்னுடைய வேலை பளு காரணமா என்னாலயும் அவளுக்கு ஒத்தாசையாக இருக்க முடியவில்லை…. இரண்டு குழந்தையை பெற்றெடுத்த கஷ்டம், வளர்க்கும் கஷ்டம் எனக்கு புரியுது…. ஆனால் பிள்ளைகள் தான் வளர்ந்துட்டாங்களே?…. இனியாவது பழையபடி இருக்க வேண்டாமா? எதுவும் வெச்சது வெச்ச இடத்தில் இருக்கிறது இல்லை…. எதிலுமே அப்படி ஒரு சோம்பேறித்தனம்… அவளுடைய அந்த சோம்பேறித்தனத்தை போக்கத்தான் நான் படாதபாடு படறேன்… உடம்பு நோகாம வேலை பார்க்க அவ கேட்கிறத எல்லாம் என்னால வாங்கி தரமுடியாது…. இங்கேதான் சண்டையும் சச்சரவும் மூண்டது… புள்ளைங்களுக்கும் ரொம்ப செல்லம் கொடுத்து கெடுக்கிறாள்… ஆறு வயசு பையனுக்கு இன்னும் சோறு ஊட்டி விடுகிறாள்!…

கல்யாணம் பண்ணிக்கிட்டன்னிக்கு மட்டும் புருஷனுக்கு சோறு ஊட்டினால் போதுமா?!… அப்பப்ப வாழ்க்கைல அந்த பாசத்தை பகிர்ந்து கொள்ள வேண்டாமா?… ஆனால் இது மாதிரி எது நான் பேசினாலும் அதற்கு ஒரு விலை பேசறா… இதை வாங்கித் தா அதை வாங்கித் தான்னு… இப்படி விபச்சாரத்தனமா பேசிப் பேசியே என்னை விட்டு விலகிப் போவது அவள்தானே ஒழிய நான் இல்லை…. நிறைய கணவன்மார்கள் இப்படி ஒரு சூழ்நிலையில் தான் வேற ஒரு பெண்ணை… இன்னொரு அன்பை நாடிப் போறாங்க….

என்கிட்ட அவ போட்ட வாய்ச்சண்டை கொஞ்ச நஞ்சமில்லை…’உன்னை போய் தெரியாத்தனமா கல்யாணம் பண்ணிக்கிட்டேன் பாரு… எல்லாம் என் தலையெழுத்து!’ ன்னு பேசினது தான் என்னால தாங்கிக்க முடியலை. காதல் அன்பு என்கிற வார்த்தைகள் எல்லாம் அர்த்தம் இல்லாமல் போச்சு…. எல்லாத்திலேயும் ஆடம்பரம் தான் தலை விரிச்சுகிட்டு தாண்டவம் ஆடுது…. அவளை விட்டு விலகிப் போறதா நாசூக்காக எடுத்துக் காட்டி மறுபடியும் ஒரு ஈர்ப்பை நமக்குள்ள வளர்த்துக் கொள்ளத் தான்…. அவளை பயமுறுத்த ‘ஜெமி’யை உபயோகித்தேன்… ஆனா உண்மையில என் மனைவிக்கு தவிர இன்னொருத்திக்கு என் மனசுல இடம் தரமாட்டேன்…. என்னை தெரியாதா உனக்கு?” சற்றே கண் கலங்கியது பிரபுவுக்கு.

“தெரியும் ….ஆனா இந்த காலத்துல நிறைய காம வெறி பிடித்து அலையற பெண்களும் இருக்காங்க… அந்த மாதிரியான ஒரு பெண்ணோட வலையில நீ சிக்கிக்கிட்டியோன்னு பயந்துட்டேன்… அவ்வளவுதான்”

***

பிறகு….வீடு திரும்பிக் கொண்டிருந்த சுரேஷ், வழியில் ஜெயாவுக்கு போன் செய்தான்… “ஒரு புருஷன் நல்லவனாக இருக்கிறதும்…. கெட்டவனாக மாறுவதும் பொண்டாட்டி கைல தான் முக்கியமா இருக்கு…. காலை மாலை உன்னை நீயே அலங்கரிச்சுக்கிட்டு… வீட்டையும் அழகா துப்புரவா வச்சிக்கிட்டு பிரபுவோடு அன்பாக பழகு.,. அது போதும்… அந்த ஜெமி வேறு யாருமில்லை…. நீதான்… ஜெ…ய…ல…க்ஷ்….மி….இதை சுருக்கிக் பார்….ஜெமி…. நீயே தான்!!.”

ஆழ்ந்த சோகத்தில் மூழ்கி தவித்துக் கொண்டிருந்த ஜெயாவின் மனம் இதைக் கேட்டதும் பூரித்துப் போய் ராக்கெடாக பறந்தாள்… புருஷன் வீடு திரும்ப இன்னும் அரைமணி நேரம் இருப்பதை உணர்ந்து கிடுகிடுவென்று குளித்து முடித்து அலங்கரித்துக் கொண்டாள். ‘இன்னைக்கு என் கையால அவருக்கு சோறு ஊட்டணும்’ என்று எண்ணி சிரித்துக்கொண்டாள்.

***

தன் ப்ளோக்கை அடைந்த பிரபு, வழக்கமாக சுரேஷின் அறிவுரையை ஏற்று, படிக்கட்டு வழியாக ஆறாவது மாடிக்கு நடைபோட…. இரண்டாவது மாடிக்கு நடுவே இருந்த………. அந்த சிறு தரையில்……… ‘அது என்ன?.. டவல் துணியில்?…. உள்ளே தெரிவது…. அசைவது… ஒரு பச்சைக்குழந்தை கால்கள் தானே?’…. பிரபுவுக்கு இரத்தம் உறைந்தது. அதனருகே சென்று துணியை விலக்கிப் பார்த்தான்…. விரலைச் சூப்பிக் கொண்டு பூந்தளிராக பூத்திருந்த ஒரு அழகான குழந்தை!…. அதன் தொப்புள் பை கூட சரி செய்யப்படாமல், விலகி தொங்கிக் கொண்டிருப்பதை பார்த்தவனுக்கு ஆத்திரமும் வேதனையும் ஒன்று சேர்ந்து தாக்கியது.

இடுப்பில் தொங்க வைத்திருக்கும் தன் கைத்தொலைபேசியை எடுக்க…. ‘எங்கே என் தொலைபேசி…. யாராவது திருடி விட்டார்களா?’ என்று தொலைபேசியை காணாமல் ஒரு கணம் குழம்பி…. ‘ஓ பொருளாதார நெருக்கடியை சமாளிக்க அதன் இணைப்பை துண்டித்து முடக்கிவிட்டு விட்டோமே?!’ என ஞாபகம் வர…. மூன்று படிகளாக தாவி ஓடி தன் வீட்டை அடைந்தான்.

ஜெயாவின் அலங்கரிப்பு வேதனையாக உறுத்த…. தொலைபேசியை அடைந்தான். போலீசுக்கு தகவல் கூறிவிட்டு சுரேஷுக்கும் தான் கண்டதை தெரிவித்து உடனே வரும்படி அழைத்தான்.

“நீ இங்கேயே இரு… நான் கொஞ்ச நேரம் கழித்து வரேன்” ஜெயாவின் பதிலுக்கு காத்திராமல் மறுபடியும் ஓடினான்.

பத்து நிமிடத்தில் போலீஸ் வந்து சேர்ந்தது… இன்னொரு மூன்று நிமிடத்தில் ஆம்புலன்ஸ் வந்து சேர்ந்தது…குழந்தையின் நிலைமை மோசமாக இருந்ததால் அதை காப்பாற்ற வேண்டிய ஏற்பாடுகளை கேள்வியின்றி செய்தனர்.

“பெத்தவங்களுக்கு இந்த அழகான குழந்தையை தூக்கி எறிய எப்படித்தான் மனம் வந்ததோ?”

“அவங்க எல்லாம் மனுசங்க தானா?”

“பணமும் காம வேட்கையும் தான் வாழ்க்கையில ரொம்ப முக்கியமா போயிடுச்சு… ச்சே!”

“சேத்து வச்ச புண்ணியம் தான் சந்ததியை காக்கும் என்றால்… இது யார் செய்த புண்ணியம்?..… இல்லை யார் செய்த பாவம்?… மனசாட்சி இல்லாதவங்களுக்கு எல்லாம் எதுக்கு இந்த காதல் கீதல் எல்லாம்?”

“மனசாட்சி இல்லாம தப்பு பண்ணிக்கிட்டே போனா… பாவம் பண்ணிக்கிட்டே போனா…. பரிகாரம் கூட தேடிக்காம, இஷ்டத்திற்கு கூத்தடிச்சா…. அப்புறம் கஷ்டம் வரும்பொழுது, அந்தக் கஷ்டத்தை புரிஞ்சுக்கக் கூட முடியாமல்…. புத்தி பேதலிச்சு… “ஐயோ!… ஐயோ!… எனக்கு மட்டும் ஏன் இப்படி?’ன்கிற வார்த்தைகள் தான் பூகம்பமா வெடிக்கப் போகுது…. மூளைக்குள் எரிமலைக் குழம்புகள் கொந்தளிக்கும்…. இரத்த வெள்ளத்தில் இருதயம் மூழ்கிப் போகும்”

பலர் பலவாறு மொழிந்தார்கள்…. சபித்தார்கள்….

“சுரேஷ்… இது யாரோட குழந்தை?… எந்த வீட்டில் இருந்து தூக்கி எறியப்பட்ட குழந்தைன்னு… எனக்கு ஒரு யூகம் இருக்கு” பிரபு சுரேஷின் காதருகே சொன்னான்.

“போலீசுக்கு சொல்ல வேண்டியது தானே?”

“சொல்லலாம்…. முதல்ல என் யூகம் சரிதானா என்று பார்ப்போம்…. இப்போதைக்கு முதல்ல அந்த குழந்தையை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போகட்டும்… நாம நம்ம வேலையை ஆரம்பித்து…. தேவைப்பட்டால் அப்புறம் போலீசை நாடுவோம்”

பதினைந்து நிமிடத்தில் எல்லோரும் கலைந்தார்கள். போலீஸ் அந்த ப்ளோக்கில் உள்ள ஒவ்வொரு வீட்டையும் சோதனை செய்ய… புலன் விசாரிக்க சென்றனர்.

“நாம போகவேண்டிய ப்ளோக் அதோ 2-ப்ளோக் தள்ளி…. அதுதான்…. போலீசை திசை திருப்பத் தான் வேணும்னு அங்கே இருந்து இந்த ப்ளோக்கில் வந்து குழந்தையை விட்டுட்டு இருப்பாங்கன்னு என்னோட யூகம்….இரண்டு நாள் முன்ன…. நான் அந்தப் பக்கமாக நடந்து வந்தப்போ… என் மேல அந்த டவல்…. குழந்தையை சுற்றி இருந்த அதே டவல்…. அந்த ப்ளோக்கின் ஒரு வீட்டிலிருந்து என் தலை மேல விழுந்துச்சு…. அதோட கலர், டிசைன் ரொம்ப புதுமையாக இருந்துச்சு…. நல்லா ஞாபகம் இருக்கு… அது எந்த வீட்டில் இருந்து விழுந்ததுன்னு மேலே பார்த்து தேடினப்போ… ஒரு பொம்பளை கையை காட்டி அது தன்னுடையதுன்னு சைகை காட்டினா…சின்ன உதவி பண்ணலாம்ன்னு… அதை எடுத்துக்கிட்டு அவங்க மாடிக்கு போனேன்… கொடுத்தேன்… உள்ளே நிறைமாத கர்ப்பமாக இருந்த ஒருத்தியையும் பார்த்தேன்….” பேசிக்கொண்டே இருவரும் அந்த வீட்டை அடைந்தனர்.

அழைப்பு மணிக்கும் பதில் இல்லை…. கதவை தட்டியும் பயன் இல்லை… ஆனால் உள்ளே என்னென்னவோ பேச்சுக் குரல் கேட்டது.

“இது நிச்சயம் இவங்களோட வேலை தான்…. ஹலோ!… ஹலோ!… நாங்க போலீஸ் இல்லை… ஆனா இப்போ கதவு திறக்கலைன்னா நிச்சயமா இங்கே போலீஸ் வரும்” சுரேஷ் கத்தினான்.

சில வினாடிகளில் கதவு திறக்க, பேய் அறைந்தார் போல் காட்சியளித்த வீட்டுப் பெரியவர், சுமார் 45-48 வயது தந்தை….. இவர்களை மிரள மிரளப் பார்த்தார்.

“உள்ளே வரலாமா?” சுரேஷ் கேட்டவாறே அவர் பதிலுக்கு காத்திராமல் உள்ளே நுழைந்தான். பிரபு பெரியவரை முறைத்து, பின் பாவமாக பார்த்தான்.

நுழைவு அறையின் ஒரு மூலையில் அழகான மீன் தொட்டி ஒன்றில் அழஅழகான மீன்கள்… பரந்த மனப்பான்மையால் ஆண்டவன் படைத்த அந்த பரந்த கடல் வாழ்க்கைக்காக ஏங்கி ஏங்கி… துள்ளித் துடித்துக் கொண்டிருந்தன….

இன்னொரு மூலையில்… தொங்கிக் கொண்டிருந்த கூண்டு ஒன்றில் அழகான காதல் பறவை ஜோடி ஒன்று…. கொஞ்சிக் குலாவிக் கொண்டிருந்தது… ‘காதலே அது பொய்யடா… வெறும் கூண்டில் அடைக்கப்பட்ட கிளிகளடா!’

“ஆக… இந்த வீட்ல மீன்களுக்கும், பறவை…நாய்… பூனைகளுக்கெல்லாம் வாழ இடம் இருக்கிறது…. ஆனால் ஒரு அழகான பிஞ்சுக் குழந்தைக்கு இடமில்லை…. இல்லையா மிஸ்டர்…?” சுரேஷ் தன் கையை நீட்டி பெயர் அறிமுகம் செய்து கொண்டான்.

“உங்களுக்கு என்ன வேணும்?” பெரியவர் நடுங்கினார்.

“எங்களுக்கு வேண்டியது ஒன்னும் இல்லை… அந்த குழந்தை உங்களுக்கு ஏன் வேண்டாமல் போனது?”

அந்த பெரியவர் திடீரென்று குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்தார். சுரேஷ் பிரபு இருவரின் கையையும் பிடித்து இழுத்துச் சென்று ஒரு அறையில் கட்டிலில் படுத்துக் கிடந்த தன் மகளை காட்டினார்.

“இவளுக்கு என்ன வயசு இருக்கும் நீங்களே சொல்லுங்க?”

“13…. 14 இருக்கலாம்”

அந்த சிறு பெண்ணின்…. சிறுமியின் முகத்தைக் கண்ட இருவருக்கும் இரத்தம் உறைந்தது….

‘கடவுளே…. இது என்ன கொடுமை?’ “சார்… அந்த குழந்தையை தூக்கி எறிஞ்சது போதாதுன்னு இப்போ உங்க பொண்ணோட உயிரையும் ஊசலாட விட்டீர்களே…. முதல்ல ஆஸ்பத்திரிக்கு கொண்டு போங்க சார்” சிறுமி தற்கொலை செய்து கொள்ள ஏதோ முயன்று இருக்கிறாள்.

“எங்க டாக்டருக்கு போன் செய்து இருக்கோம்… இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்துவிடுவார்” பெண்ணின் தாயார் நடுங்கியவாறு கூறினாள்.

சில நிமிடங்களில் அந்த டாக்டர் வந்தார்… அவர் தன் வேலையை கவனிக்க…. சுரேஷும் பிரபுவும் அந்த பெற்றோரிடம் பேச முற்பட்டனர்.

“இது எப்படி நடந்தது?”

“அவளோட பாய்ஃபிரண்ட் செய்த வேலைதான்…. அவனோட அப்பா எங்களை தூக்கி எறிஞ்சி வேற பேசிட்டாங்க…. எங்க குடும்ப மானத்தை காப்பாற்ற எங்களுக்கு வேறு வழி தெரியலை… அவங்க வேற மதத்தை சேர்ந்தவர்கள்….கீழ் ஜாதிக்காரங்க…. எங்களுக்கு எதுவுமே பிடிக்கலை….”

“நீங்க உங்க பொண்ணை நல்லபடியாக கண்காணித்து இருக்கணும்… ஒரு பிள்ளையை பெற்று சும்மா அஞ்சு ஆறு வருஷம் வரைக்கும் அதோடு கொஞ்சி குலாவி விட்டு… அப்புறம் அதை கவனிக்காமல் விடுவது தான் இன்றைக்கு அநேக பெற்றோர் செய்யற பெரிய தப்பு… அம்மாமார்கள் எல்லாம் மகளோடு நெருக்கமாக பழகி மாதவிடாய் எல்லாம் மாதம் தவறாம கவனிக்கணும்… அம்மா ஒரு பக்கம் அப்பா ஒரு பக்கம் வேலைக்கு பறந்தா?…. வீட்டிலேயும் வேற பெரியவர்களை வச்சுக்க தயங்கினா?… புள்ளைங்க தறிகெட்டு நெறிகெட்டுத் தான் போவாங்க….

எத்தனை சின்ன சின்னப் பசங்க, பொண்ணுங்க சிகரெட் பிடிக்குதுங்க… ஸ்கூல் யூனிபார்ம்லேயே…. காதல் என்கிற பேரில், கையை கோர்த்துக்கிட்டு…. பொது இடங்களில் ஒட்டி உரசிக்கொண்டு… ச்சே!…. இது மாதிரியான விஷயத்திற்கும் அரசாங்கம் தடை போட்டு தண்டனை கொடுத்தால் தான் நம்ம ஆசிய கலாச்சாரம் கெட்டுப்போகாமல் இருக்கும். இந்த மாதிரியான பிள்ளைகளால் ஏற்படற பல குடும்பப் பிரச்சினைகள் குறையும்… இதையெல்லாம் சீரியஸாக எடுத்துக்காம சும்மா பேப்பர்ல படிக்கிற செய்திகளை எல்லாம் மேலோட்டமாக படிச்சிட்டு மறுநாளில் அதை மறந்து வாழ்ந்து….. அப்புறம் கஷ்டம் வரும்பொழுது….. அவதிப்பட வேண்டியது தான்….. சரி, இனி நீங்க என்ன செய்யறதா உத்தேசம்?”

“இனி என்ன செய்யறது?… கடந்த ஐந்து ஆறு மாசமா என் மகளையும் சேர்த்து நாங்களும் ஒரு வகை சிறை வாழ்க்கையை வாழ்ந்து தவிச்சிக்கிட்டு இருக்கோம்….. இனி என்ன செய்யறது?… பைத்தியம் ஒன்னு தான் பிடிக்கணும்!” பெரியவர் அழாத குறையாக சொன்னார்.

“ப்ளீஸ்… ப்ளீஸ்… மனதை தளரவிடாதீர்கள்…. உலகத்தில் நடக்கிற எல்லா அசம்பாவிதங்களுக்கு…. போராகட்டும், பொருளாதார நெருக்கடி ஆகட்டும், பெரிய விபத்துகள் ஆகட்டும், இல்லை இனவெறி கலவரங்கள் ஆகட்டும்….. எல்லாத்துக்கும் ஒரே ஒரு அடிப்படை தீர்வு – எல்லா மக்களும் ஒன்று சேர்ந்து ‘ஒன்றே குலம்! ஒருவனே தேவன்!’ என்கிற அசைக்க முடியாத உண்மையை உணர்ந்து வாழனும்கிறதுக்காகத் தான்…. நடந்த விஷயத்தை நீங்கள் வெளி உலகத்துக்கு மூடிமறைக்க எவ்வளவோ திட்டம் போட்டும்…. தெரிஞ்சு போச்சே!… ஒவ்வொரு விசைக்கும் அதற்கு சமமான எதிர்விசை உண்டு (To Every Action There is Always an Equal and Opposite Reaction)… நியூட்டன் விஞ்ஞானி இதை விஞ்ஞானத்துக்கு மட்டும் சொல்லிவிட்டுப் போகலை….. பொது வாழ்க்கைக்கும் சேர்த்து தான் அதைச் சொல்லியிருக்கிறார்…. அது அந்த ஆண்டவனடோ வாக்கு!!

நீங்க வெளி உலகத்துக்கு மூடி மறைச்சுவிட்டாலும்…. உங்களுக்குன்னு ஒரு மனசு இருக்கே?!… நடந்ததை மறந்து உங்களால் நிம்மதியாக வாழ முடியுமா?…. தூங்க முடியுமா?… அந்த பிஞ்சுக் குழந்தையின் பரிதவிப்பை உங்களால் உணர்ந்தும் அலட்சியமாக இருக்க முடியுமா?.. ஒரு வேளை கல் நெஞ்சம்கிறது இதுதானோ?!” சுரேஷ் மண்டையில் அடித்துக் கொண்டான்.

ஒரு உத்வேகத்துடன் எழுந்த அந்த தந்தை, தொலைபேசியை எடுத்து ஏதோ ஒரு நம்பரை அழுத்திவிட்டு, “ஹலோ… போலீஸ்” என்று அழைத்தவர் தன் பெயரையும் விலாசத்தையும் கூறிவிட்டு, அந்தப் பிஞ்சுக் குழந்தை தன்னுடைய வாரிசு தான் என்பதை கூறி, நடந்ததை சுருக்கமாக விளக்கிவிட்டு அந்த குழந்தையை எந்த மருத்துவமனையில் சேர்த்து உள்ளார்கள் என்பதை அறிந்து கொண்டார்.

“என் வீட்டில் நடந்த இந்த விஷயத்தை நாளைக்கு நாட்டுல இருக்கிற எல்லாரும் தெரிஞ்சுக்கட்டும்…. அந்தப் பையனோட அப்பன்கிட்டயும் பேசறேன்…. தேவைப்பட்டால் சமூக நலச் சங்கங்களின் உதவியையும் நாடறேன்… போதுமா?… உங்களுக்குத் திருப்திதானே?… இந்த சம்பவம் நாட்டு மக்களுக்கு ஒரு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தணும்னு நான் வேண்டிக்கிறேன்….. சரி நான் இப்போ அந்த ஆஸ்பத்திரிக்கு போய் குழந்தையை பார்க்கப் போகிறேன்…… நீங்களும் வர்ரீங்களா?”

நொடிப்பொழுதில் மாறிப்போன அந்த தந்தையைக் கண்டு அசந்து போயினர் இருவரும்.

“பிரபு நீ வீட்டுக்கு கிளம்பு… உனக்காக ஜெயா….ஜெமி….காத்துக்கிட்டு இருப்பா!…. நான் இவரோட போயிட்டு அந்தக் குழந்தையை பார்த்துட்டு அப்புறம் வீடு திரும்பறேன்…. கலாவுககு போன் செய்து தகவலை சொல்லி விடு, ஓகே?”

***

மூன்று மணி நேரம் கழித்து, அந்தக் குழந்தையின் மலர் சிரிப்பை கண்ட திருப்தியோடு தன் வீட்டை அடைந்தான் சுரேஷ். அவன் நடையில் ஒரு தளர்ச்சியை… சோர்வை கவனித்த கலா கண் கலங்கினாள்.

“ஏன் கண் கலங்குறே?” தண்ணீர் அருந்தியவாறு சுரேஷ் அவளிடம் மாற்றம் இருப்பதை கவனித்தான்.

“பொருளாதார நெருக்கடியை சமாளிக்க காரை உபயோகிக்கறதையும் நிறுத்திட்டு இப்படி அவதிப்படறீங்களே?!….அது இருக்கட்டும் நீங்க இன்னிக்கு இன்னொரு பிரச்சினையை தீர்த்து வைக்க வேண்டியிருக்கு… நம்ம அந்த ரூம்ல பக்கத்து வீட்டுக்காரி உட்கார்ந்து அழுதுட்டே இருக்கா…. அவளோட பேசலாம் வாங்க… இப்பத்தான் ஒரு பத்து நிமிஷம் முன்னாடி திறந்திருந்த வீட்டுக்குள்ளே தபதபன்னு புகுந்தாள்…. அவ புருஷனோட ஏதோ பெரிய சண்டை போலிருக்கு. அவளை துரத்தி அடிக்க வந்தவன் என்னைப் பார்த்ததும் அவன் வீட்டுக்குப் போயிட்டான்…”

சுரேஷ் தன் ரூமுக்குள் எட்டிப்பார்க்க… பக்கத்து வீட்டுகாரி எழுந்து கொண்டு தன் அழுகையை கட்டுக்குள் கொண்டு வந்தாள்.

“என்ன மேடம் உங்க பிரச்சனை?”

“பொருளாதார நெருக்கடியினால் எனக்கு வேலை போயிடுச்சு… ரெண்டு மாசமா வேற வேலைக்கு ட்ரை பண்ணிட்டுத் தான் இருக்கேன்… ஆனா ஒன்னும் கிடைக்கல….. என் மேல அவருக்கு கோபம்… ‘இருந்த வேலையை தக்க வச்சுக்க தெரியாத சோம்பேறி… தண்டம்… ஊர்சுத்திப்பொறுக்கி…. அது இது’ன்னு சும்மா சும்மா எதுக்கு எடுத்தாலும் திட்டறார்…. இன்னிக்கு எனக்கும் கோபம் வந்து எதிர்த்து பேசிட்டதக்கு இப்படி அடிக்க ஆரம்பிச்சிட்டார்… பயந்து போய் இங்கே ஓடி வந்துட்டேன்… இவரை நம்பி நான் என் சொந்தங்களையும் பகைத்துக்கொண்டு கல்யாணம் பண்ணிக்கிட்டேன்… இனிமே நான் எப்படி வாழறது?” மறுபடியும் அழுகை பீறிட்டு வர “ஆண்டவா!… ஆண்டவா!” என்று கதறினாள்.

“சரி நீங்க கொஞ்ச நேரம் இங்கேயே இருங்க. நான் போய் அவரோடு பேசிட்டு வரேன்…. ஆனா அவரை பகைவனா மட்டும் நினைக்க ஆரம்பிக்காதீங்க…. பொருளாதார நெருக்கடியினால் யார் யாருக்கோ என்னென்னவோ குழப்பம் வாழ்க்கையில்…. மனசை மட்டும் தளரவிடாதீர்கள்…. இதை நம் வாழ்க்கையின் ஒரு பலப்பரீட்சை காலமாக நினைக்கணும்… நம் மனப்பான்மையை சோதிக்க ஆண்டவன் வகுத்துள்ள ஒரு பலப்பரீட்சை… அமைதியா இருங்க… இப்ப வந்துடறேன்”

சுரேஷ் பக்கத்து வீட்டை அடைந்து கதவை தட்டினான். சில வினாடிகள் கழித்து கதவு திறக்கப்பட்டது.

“உள்ளே வரலாமா?” புயலுக்குப் பின் அமைதி அவன் முகத்தில் கண்டான் சுரேஷ்.

ஹாலில் ஆங்காங்கே பெரிய வடிவில் ஜோடியாக எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தொங்கிக் கொண்டிருந்தது.

“நீங்க காதல் திருமணம் தானே செய்துகிட்டீங்க?”

“ஆமாம்”

“கேட்கிறேன்னு கோவப்படாதீங்க…..எதை காதலிச்சீங்க??… அவள் அழகையா?…உடலையா?……இல்லை அவள் சம்பாதிக்கிற பணத்தையா?”

“எங்க காதல் அப்படிப்பட்டது இல்லை!”

காதல்…… என்ன ஒரு அற்புதமான…… உண்மையான பொய்!!

“அப்போ ஏன் இந்த சண்டை?”

“இல்லை…. இந்த வருஷம் எப்படியும் ஒரு கார் வாங்கலாம்னு திட்டம் போட்டிருந்தோம்… இப்போ எல்லாம் குட்டிச்சுவரா போயிடுச்சு!”

“குட்டிச் சுவராக போனது உங்களுடைய கார் வாங்கும் ஆசை மாத்திரமில்லை… உங்களுடைய அன்பான பொன்னான வாழ்க்கையும் தான்… விரலுக்குத் தகுந்த வீக்கம் இருக்கிறதால் தான் தாளத்துல ஸ்ருதி இருக்கு…. இதை முதல்ல புரிஞ்சுக்குங்க. கார் வைத்துக் கொண்டு இருக்கிற நானே இந்த பொருளாதார நெருக்கடியினால் அதை உபயோகிக்க முடியாத நிலையில் இருக்கேன்… ஆனா நீங்க?!… ஏன் சார், நீங்க பார்க்கிற வேலை மாத்திரம் என்ன நிரந்தரமானதா?… உங்களுக்கே நாளைக்கு வேலை போயிருச்சுன்னா என்ன பண்ணுவீங்க?… இல்லை, திடுதிப்புன்னு ஏதாவது புயலோ பூகம்பமோ வந்தா??… இல்ல சார், இதெல்லாம் இப்போ பூமில ரொம்ப சகஜமா நடக்குது…. எதற்கும் தயாராக…. நேர்மையாக…. உத்தமமாக வாழ வேண்டியது தான் இந்தக் காலத்தின் அவசியம்… கட்டாயம் கூட!… நடக்கிற ஒவ்வொரு அசம்பாவிதத்தையும், அசௌகரியங்களையும் நம் நேர்மையை….உத்தம உள்ளத்தை…. ஒற்றுமை மனப்பான்மையை சோதிக்கற பரீட்சையாக எண்ணிப் பாருங்க…. இந்த மாதிரியான பலப் பரீட்சையில் பாஸ் பண்ணினால் தான் நாளைக்கு…. அடுத்த நூற்றாண்டில்…. அமைதியான, நிம்மதியான, சந்தோஷமான வாழ்க்கையை வாழ முடியும்!

உங்க மனைவியை அடித்து விரட்டினா அவங்க எங்கே போவார்கள்?… இல்லை உங்களால் தான் பிரிந்து தனித்து வாழ முடியுமா?.. போங்க சார்… போயி அவங்களை கூட்டிட்டு வாங்க… ப்ளீஸ்!” சுரேஷ் கைகூப்பினான்.

தப்பை உணர்ந்தவனாக மனைவியை அழைத்து வரச் சென்றான் அவன்.

“இன்னைக்கு எங்க வீட்டுல தான் சாப்பிடணும்” கலா அவர்களை உட்கார வைத்தாள். அரை மணி நேரத்தில் உணவு பரிமாறப்பட்டது.

சாப்பிட்டு முடித்ததும் கலா, “நான் உங்களுக்கு ஒன்று சொல்லலாம்னு நினைச்சுக்கிட்டு இருக்கேன்….. நீங்க ஏன் காரை உபயோகிப்பதை நிறுத்தினீங்க?.. செலவை குறைக்கத் தானே?… இப்போ, நீங்க மாத்திரம் தனியாக உபயோகித்தால் தான் செலவு…. உங்களோட இன்னும் மூனு நாலு பேரை சேர்த்துக்கிட்டா?… நீங்க வேலைக்கு போற அதே இடத்துக்கு, இல்லை அந்தப் பக்கமா போறவங்களையும் கார்ல சேர்த்துக்குங்க…. பஸ்ஸுக்கு கொடுக்கிற அதே காசை வாங்கிக்குங்க….. சுற்றுச்சூழல் மாசையும் குறைக்கலாம்… ஐடியா நல்லாயிருந்தா நாளைக்கே ஒரு சின்ன நோட்டீசை எழுதி போட்டு விடவா?” கண்கள் பிரகாசமாக வைத்துக் கொண்டு பேசினாள்.

“ரொம்ப நல்ல ஐடியா!…. என்னை முதல்ல சேர்த்துக்கோங்க சார்!” பக்கத்துவீட்டுக்காரன் சொன்னதும் கலகலவென்று சிரிப்பொலியில் வீடு அதிர்ந்தது!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *