கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: April 28, 2021
பார்வையிட்டோர்: 5,507 
 
 

மான்குட்டி போல் அவள் துள்ளித்துள்ளி ஓடி வந்து கொண்டி ருந்தாள். அவளுக்கு ஆகக் கூடினால் ஆறு வயதுதான் இருக்கும். அவள் பின்னால் அவளை எட்டிப் பிடிப்பது போல, ஆனால் அவளின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாததால் சற்றுப் பின் தங்கியவனாக, அவளை விடஇரண்டு வயது சிறியவனாக அவளது தம்பி ஓடி வந்து கொண்டிருந்தான்.

அவள் வாய் ஏதோ ஒரு பாடலை மழலைக் குரலில் மெல்ல மிழற்றிக் கொண்டிருந்தது. அதற்கிசைவாக அவளது தம்பியும் ராகமிழுத்தபடி ஓடி வந்து கொண்டிருந்தான். அவர்களின் களங்கமற்ற முகங்களைப் போலவே நீல வானமும் நிர்ச்சலனமாகக் காட்சியளித் தது.பரந்து விரிந்து கிடந்த வயல் வரம்புகளினூடாக, தடுமாறாமல் இலாவகமாக, இலயம் பிசகாமல் அவர்கள் ஓடிக் கொண்டிருந்தனர்.

ஓடிய களைப்பில் அவள் நின்று திரும்பிப் பார்த்தாள். தூரத்தே தென்னை மரங்களாலும் வாழை மரங்களாலும் சூழ வர மறைக்கப்பட்ட அவர்களின் குடிசை – வைக்கோல் வேயப்பட்டு மஞ்சளாகத் தெரிந்தது. தாயின் குரல் எட்ட முடியாத தூரத்திற்கு அவர்கள் வந்து விட்டார்கள். அம்மாவை ‘உச்சிப் போட்டு’ ஓடி வந்து விட்டதை நினைக்க அவளுக்குச் சிரிப்பு வந்தது. அவள் சிரித்தாள். அரிசிப் பற்கள் பளீரிட அவள் வாயை அங்காந்தபடி அழகாக, ஆனந்தமாகச் சிரித்தாள். அவள் சிரிப்பதைக் கண்டு அவள் தம்பியும் சேர்ந்து சிரித்தான். அவனது சிரிப்புக்குக் காரணம் வேண்டியிருக்க வில்லை. வீட்டில் இருந்தால் தூளியில் தூங்கும் சின்னத் தங்கை யைப் பார்த்துக் கொள்ளும்படிஅம்மா சொல்லுவாள். அதிலவளுக்கு இலயிப்பில்லை. அழுதபடி அல்லது மூத்திரம் பெய்தபடி இருக்கும் தங்கையைத் தூக்கி ஆட்டுவதைவிட இப்படி உல்லாசமாகத் தம்பி யுடன் ஓடித் திரிவதில் தான் அவளுக்குப் பிரியமதிகம். நல்ல வேளையாக இன்று அப்பாவும் வீட்டில் இல்லை. விதை நெல்லு வாங்குவதற் காக அவர் விடியற் காலையிலேயே புறப்பட்டு ‘ரவுணு’ க்குப் போய் விட்டிருந்தார். அவர் இருந்தால்ஒன்றில் அவர் முன் புத்தகத்துடன் இருக்க வேண்டும். அல்லது தோட்டத்தில் அவருடன் கூடமாட ஒத்தாசைக்கு நிற்க வேண்டும். இரண்டுமே அவளுக்கு அலுப்புத் தருபவை.

இன்று அவளுக்குச் சுதந்திர நாள்.அவள் உள்ளத்தில் பொங்கும் மகிழ்ச்சிப் பெருக்கிற்கு எல்லையே இல்லை. அவள் மீண்டும் ஓட ஆரம்பித்தாள். .எதிரே கரும் பச்சையாகக் கவிந்து மறைத்திருந்த காட்டில் இடைக்கிடையே தலை நீட்டிய சூரியன் குஞ்சுகள்’ அவளை ‘வா வா’வென அழைப்பது போல் ஒளி ஜாலங் காட்டின. அந்தக் காட்டை நோக்கித் தான் அவள் ஓடிக் கொண்டிருந்தாள். அங்கே யெல்லாம் போகக் கூடாதென்று தாய் அவளை நெடுகிலும் எச்சரித்த போதிலும் கூட அங்கே சென்று, தாழ வளைந்து நிற்கும் மரக் கொப்புகளில் ஏறிக் குதிப்பது தான் அவர்களுக்கு அலுக்காத ஒரே விளையாட்டு.

காட்டை அண்மிய போது அவள் ஓட்டம் தடைப்பட திடீரென அவள் நின்றாள். அவள் பார்வை தூரத்தே நிலை குத்திப் பதிந்தது. அவள் பார்வை சென்ற திசையில் தம்பியும் பார்த்தான். அவன் கண்களில் திகைப்பும் மிரட்சியும் கலவையிட்டன. எதிரே ஓர் உருவம் நிலத்தில் மல்லாந்தபடி கிடந்தது. ”வாக்கா திரும்பிப் போயிடலாம்” அவள் சட்டையைப் பிடித்து இழுத்த படி தம்பி நின்றான்.

“பொறுடா என்னன்னு பார்ப்போம்”. அந்த மனிதன் யார்? அவன் ஏன் அப்படிக் கிடக்கிறான்? என்பதை அறிந்து விட அவாவும் உள்ளார்ந்த ஆர்வத்துடன் அவள் மெல்ல மெல்ல அம்மனிதன் படுத்துக் கிடக்கும் இடத்தை நோக்கி அடியெடுத்து வைக்கலானாள்.

கிட்டச் சென்று பார்த்த போதுதான் அவள் நெஞ்சைப் ‘பக்கென’ப் பயம் கௌவியது. அதைத்து வீங்கிய முகமும், இரத்தம் வடிந்து உறைந்த உதடுகளும், சிராய்ப்புற்றுக் குருதி பெருகும் உடம்பும், அலங் கோல ஆடையுமாக அண்ணாந்து கிடந்த அவன் தோற்றம் – அந் நிசப்த வனத்தின் பயங்கரத்தை மிகைப் படுத்துவதாக இருந்தது.

திரும்பி ஓடி விடுவோமா என்ற எண்ணத்தை அவள் செயல் படுத்த முனைகையில், அம்மனிதனின் முனகலோசை அவளைத் தடைப்படுத்தியது. அவள் திரும்பிப் பார்த்தாள். இப்போ அவன் கண்கள் சிறிது திறந்த மாதிரித் தெரிந்தன. தலையைத் தூக்க முயன்று முடியாமல் அவன் தலை மீண்டும் மண்ணில் மோதியது. அவன் அனுங்கத் தொடங்கினான்.

அவளுக்கிப்போ பயம் போய் விட்டது. அவனைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. அவனுக்காக அழவேண்டும் போல மனதில் ஓர் இரக்க உணர்வும் சுரந்தது. அவனுக்குத் தான் ஏதாவது உதவி செய்ய முடியுமா என்று யோசித்தாள். அவளின் அப்பா சில வேளை களில் நல்ல குடி வெறியில் இப்படிக் கிடந்து புலம்பும் போது, அம்மா முகத்தில் தண்ணீரால் விசிறியடித்து உணர்வு வரப் பண்ணு வதை அவள் கண்டிருந்தாள்.

“வாடா, தண்ணி எடுத்துக் கொண்டு வருவம்”. தம்பியை இழுத்துக் கொண்டு அவள் காட்டுப் பாதையை விலக்கியபடி ஓடினாள். மாரி யில் சலசலத்தோடும் சிற்றருவி ஒன்று ஓடிய சுவடு மட்டும், கோடு கிழித்தாற் போல் வெண்மணற் பரப்பிட்டுக் காணப்பட்ட ஓரிடத்தில் அவள் பரபரவென மண்ணைத் தோண்டலானாள்.

பூமாதேவி கருணைக் கண்ணைத் திறந்தாள் போலும். குட்டை நீரால் நிரம்பியது. காட்டுச் செடியொன்றின் பெரிய இலையொன்றைப் பிடுங்கித் தன் தம்பி கையில் நீரைக் கொள்ள ஏற்றவாறு வளைத்துக் கொடுத்தாள். தன் சின்னஞ் சிறு கைகளாற் குட்டையிலுள்ள நீரைக் கோலிக் கோலி இலையை நிரப்பினாள். அவள் மனம் போல இலையும் நீரால் நிறைந்து தளும்பியது. தம்பியிடம் இருந்த அதை வாங்கிக் கொண்டு, ஊற்றுப்படாமல் பதனமாக அடியெடுத்து நடந்து அம் மனிதன் விழுந்து கிடந்த இடத்தை அடைந்தாள்.

உணர்வு வரப்பெற்று அவன் எழுந்து பார்த்தபோது அவர்கள் அங்கிருக்கவில்லை.இரண்டு விளாம்பழங்களும் இரண்டு மாம்பழங் களும் மட்டும் அவன் தலைமாட்டில் காணிக்கைப் பொருட்கள் போல் வைக்கப்பட்டிருந்தன. அவள் மீண்டும் தம்பியுடன் வீட்டினுள் ஓடி நுழைந்த போது தாயின் அர்ச்சனைக் குரல்தான் அவர்களை வரவேற்றது.

“ஏண்டி நீ பாட்டுக்கு சுத்திட்டு இப்ப தான் வர்றியா? போதாக் குறைக்கு அவனை வேற இழுத்துகிட்டுப் போ. நான்தான் தங்கச்சி யையும் பாக்கணும்; சமையலும் செய்யணும்; தோட்டத்தையும் பாக்கணும். மூதேசி, நீ எதுக்கடி பொறந்தே? ஓடுகாலிக் கழுதை நீ செத்தாத் தாண்டி எனக்கு நிம்மதி”. பொரி பொரி என்று அவள் பொரிந்து தள்ளினாள். விழுந்து கிடக்கும் மனிதனைப் பற்றி அம்மா விடம் சொல்ல வேண்டும் என நினைத்துக்கொண்டு வந்தவள் வாயை மூடிக் கொண்டாள். பசி வயிற்றைக் கிள்ளியது. பேசாமல் குசினிக் குள் போய்க்குந்தி விட்டாள்.

“சனியனே, இந்தா திண்ணு தொலை” என்ற வசவுடன் அம்மா பீங்கானை அவள் முன் வைத்தாள். சாப்பிடும்போது அம்மனிதனின் முகம் தான் அவள் கண்முன் நிழலாடியது.

“பாவம். அவனுக்குப் பசிக்குமே..” என்று நினைத்துக் கொண்டாள். சாப்பிட்டுக் கை கழுவியானதும் மீந்த சோற்றை ஒரு வாழை இலையில் சுற்றிக் கொண்டாள். மெதுவாக நழுவி விடலாம் என்று தான் அவள் பார்த்தாள். ஆனால் படலையைத் திறந்த போது அது ‘கிரீச்’சிட்டு அவளைக் காட்டிக் கொடுத்து விட்டது. தங்கச்சிக்கு பாலூட்டிக் கொண்டிருந்த அம்மா எழுந்து வர முடியாததால் அங்கிருந்தே சத்தமிட்டாள்.

“அந்தச் சொறி நாயோட சங்காத்தம் வச்சுக்காதேன்னா கேக்க மாட்டேங்கறே.. இரு இரு அப்பா வரட்டுக்கும். கொல்ல சொல்றேன் உன்ன..” உச்ச ஸ்தாயியில் கத்தும்போது அவள் குரல் விகற்பமுற்றுக் கீச்சிட்டது.

“இது அதுக்கில்லேம்மா” என்றபடி அவள் பதிலுக்குக் காத்து நிற்காமல் ஓடியே போய்விட்டாள். அவள் கொணர்ந்து தந்த சோற்றை அகோரப் பசி யுடன் ‘அவுக் அவுக்’கென அவன் அள்ளி விழுங்கிய போது அவள் தூரத்தே நின்று அவனையே வியப்புடன் பார்த்த படியிருந்தாள்.

பசி கொஞ்சம் ஆறியதும் நன்றியுணர்வுடன் அவன் அவளைப் பார்த்து மெல்லச் சிரித்தான். வெடித்த உதடுகளுக்கிடையே அச் சிரிப்பு வெகுளித் தனமாக வெளிப்பட்டது. அவன் சிரிப்பைக்காண அவளுக்குச் சந்தோஷமாக இருந்தது. தைரியமாக அவனை நெருங்கி “நீயார்? எங்கிருந்து வந்தாய்?” என்று கேட்டாள். அவள் கேள்வி அவனுக்குப் புரிந்தது. ஆனால் மொழி புரியவில்லை. இருவரும் இரு வேறு மொழியினர். ஆனால் மொழிக்கு அப்பாற்பட்ட மனித உணர்வு அவர்களை இணைத்திருந்தது.

அவனது மகளுக்கும் இவளுடைய வயசுதான் இருக்கும். பூ உதிர்வது போல என்ன மாதிரிச் சிரிப்பாள். வாய் ஓயாமல் எந்நேர மும் எத்தனை ‘கிழவிக் கதைகள்’ சொல்வாள். ‘’நான் அப்பா பிள்ளை’ என்று சொல்லிச் செல்லம் கொட்ட மடி மீது ஏறிக் குந்திக் கொள்வாளே அவளை…..அவளை..

அவன் நினவுச் சக்கரம் பின்னோக்கிச் சுழல ஆரம்பித்தது. அன்று பியதாசாவின் திருமண அழைப்பிதழ் கையில் கிடைத்த போது அவன் எவ்வளவு சந்தோஷப்பட்டான். கொழும்பில் அவன் வேலை செய்த காலத்தில் அவன் தங்கியிருந்த வீட்டுக்காரரின் மகன்தான் பியதாஸ.

அவன் ஒரு யதார்த்தவாதி. ஒத்த உணர்வுகள் கொண்டோரி டையே நட்பு மலர மொழி ஒரு தடையல்லவே. தியேட்டர், கடற்கரை என்றெல்லா இடமும் அவர்கள் இணைந்தே திரிந்தனர். யாழ்ப்பாணத் துக்கு அவன் மாற்றலாகிச் சென்ற பின்னர் கூட அவர்கள் தொடர்பு அறுந்து விடவில்லை அவனது திருமணத் தின் போது பியதாஸ நாலு நாள் அவன் ஊரில் வந்து நின்று ஒரு’கலக்குக் கலக்கி’ப் போட்டுத்தான் போனான்.

வழமை போல அன்றும் ட்ரெயினில் நல்ல ‘கிரவுட்’ தான். அதில் மனைவிக்கும் பிள்ளைக்குமாக இடமெடுத்துக் கொடுத்து விட்டு, வாசலில் கொக்குத் தவமியற்றியபடி நின்ற அவன் பியதாஸ வுடன் கழித்த பசுமையான நாட்களைப் பற்றிய நினைவுகளில் மகிழ்ந்து காத்திருந்த வேளையில் தான் அந்த எதிர்பாராத சம்பவம், மதுவைப் போல மொழி வெறியும் கூட எவ்வளவு அனர்த்தங்களை விளைவித்து விடலாம் என்று உணர வைத்த இரத்த வெறியாட்டம் நடந்தது.

தனது மகள் யன்னலால் தூக்கி எறியப்பட்ட போது என்ன நடக்கிறது என்று அவனால் உணர முடியவில்லை. மனைவி துகிலுரியப்பட்ட போது அவன் ஓடிக் கொண்டிருந்தான். உயிரைக் கையில் பிடித்த படி கண் மண் தெரியாத வேகத்தில், ஒரு பைத்தியக் காரனைப் போலப் பயந்தடித்து, காட்டை ஊடறுத்தபடி அவன் ஓடிக் கொண்டிருந்தான். இந்த இரண்டு நாட்களும் அவன் அவனாகவே இல்லை. இப்போதுதான் தெளிவாக அவனால் சிந்திக்க முடிகிறது.

‘சீ..கேவலம்! இந்த உயிரைக் காக்கவா நான் இப்படி ஓடி வந்தேன்?’ நினைக்கும்போது அவனுக்குத் தன் மீதே வெறுப்பு வந்தது. அவன் கண்களினின்றும் உவர் நீர் ஊற்றுக்கள் உதயமாயின. அவன் கேவிக் கேவி அழத் தொடங்கினான். பார்த்துக் கொண்டிருந்த அவளுக்குப் பயமாகப் போய் விட்டது. வீட்டைத் திரும்பிப் பார்த்தாள். தூரத்தே அவளின் தந்தையின் உருவம் நிழற் கோடாகத் தெரிந்தது.

“அப்பா கண்டாப் போச்சு” என்றபடி அவள் ஒளிவதற்கு இடம் தேடலானாள். நிறை வெறியில் தள்ளாடித் தள்ளாடி நடந்து வந்து கொண்டிருந்தார் அவளின் அப்பா. அவர் கையில் ஒரு வேட்டைத் துப்பாக்கி. அவரைப் பின் தொடர்ந்து இன்னும் நாலைந்து பேர் வந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் அவனை நெருங்கி வந்துவிட்டார்கள்.

“ஆ, அந்த அவன்..” என்று அவர்களில் ஒருவன் அவனைச் சுட்டிக் காட்டினான். யாரோ ஒரு மனிதன் அந்தக் காட்டின் கரையில் விழுந்து கிடக்கும் விஷயம், அவள் தம்பி மூலம் அம்மாவுக்கும், அவளிடமிருந்து அப்பாவுக்கும் பின் மற்றவர்களுக்கும் பரவி, அவனைத் தேடித் கொண்டு இதோ அவர்கள் வந்து விட்டார்கள். அவர்களைக் கண்டதும் அவன் எழுந்து ஓடப் பார்த்தான். ஆனால் அவனால் முடியவில்லை.

“அடோ,உம்ப கௌதடோ?”

“கொய்த இந்தலா ஆவே? பற தெமலோ, கத்தா கொறண்டடோ”

“யாரடா நீ? எங்கிருந்தடா வந்தாய்? கதையடா…பறத் தமிழா!”

சரமாரியாகக் கேள்விக் கணைகள் அவனை நோக்கிப் பாய்ந்தன. பயத்தாலும் மொழி பேசமுடியா மடமையாலும் அவன் பேந்தப் பேந்த விழித்தான். தப்பி ஓடி வந்துவிட்ட கைதியைப் பார்ப்பது போல அவர்கள் அவனை வன்மத்துடன் பார்த்து நின்றார்கள்.

அவளின் அப்பா துப்பாக்கியைச் சடாரென ஒடித்து நிமிர்த் தினார். கண்ணில் வைத்துக் குறி பார்த்தபோது தடுமாறி விழப் பார்த்தார். அவனது கும்பிட்ட கைகள் வட்டத்தினூடாக மங்கலாகத் தெரிந்தன. “ஹோ..ஹோ..” வென்ற எக்காளச் சிரிப்புடன் துப்பாக்கி விசையில் அவர் கை பதித்தார். சன்னம் சீறிப் பாய்ந்தது. கை துண்டாடப்பட்ட நிலையில் அவன் துடித்துப் புரண்டான். விழுந்து விடாமலிருக்கத் துப்பாக்கியை ஊன்றி இவர் தன்னைச் சமநிலைப் படுத்திக் கொண்டார். அடுத்த ரவை அவன் காலைத் துளைத்துக் கொண்டு போயிற்று. சூடான அந்த வயல் நிலத்தில் அவன் இரத்தம் தெறித்து அதைக் குளிரச் செய்தது.தணியாத தாகத்துடன் அவன் உடம் பினின்றும் பெருகிய குருதிப் புனலை அந்த வரட்டுத்தரை வேகமாக உறிஞ்சிக் கொண்டது.

சுற்றி நின்ற கூட்டம் ஜெய கோஷம் செய்து இவருக்கு உற்சாக மூட்டியது. வேட்டை நாய்களால் சூழப்பட்ட முயற் குட்டி போல அவன் மொழியிழந்து போனான். அந்த மனிதனின் மரணம் அவர்களின் மகிழ்ச்சி ஆரவாரமானது. அவனுடலில் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அத்தனையையும் அவர்கள் செய்தார்கள். அவன் தலையைத் துண்டாடிப் பந்தாடினார்கள். யார் மீதோ அல்லது எதன் மீதோ அவர்களுக்கு இருந்த ஆத்திரத்தை அவர்கள் அவன் உடம்பின் மீது காட்டினார்கள். அவர்களின் அடிமன உந்தல்களின் வெளிப்பாடாக – வக்கிரங்களின் வடிகாலாக – பலவீனங்களின் பிரதிபலிப்பாக அந்த மனிதனை அவர்கள் பயன்படுத்திக் களித்தார்கள். காட்டு மிராண்டி களைப் போல அவனை அவர்களால் கடித்துத் தின்னத்தான் முடிய வில்லை. முடிந்திருந்தால் அதையும் செய்திருப்பார்கள்.

அன்று பின்னேரம் மரத்தடியில் மயக்கமாக விழுந்து கிடந்தவ ளைத் தூக்கி வந்து கட்டிலில் கிடத்திய போது அவள் காய்ச்சலுடன் புலம்பிக் கொண்டு கிடந்தாள்..”மனிதன்..மனிதன்…” என்று. காலைப் பொழுது விடிந்த போதும் கூட அவள் கண் திறக்கவில்லை. அவள் தாயின் ஒப்பாரி இதயத்தைத் தொட்டு உலுக்குமாப் போல உரத்து ஒலிக்கிறது. அதைப் புரிந்து கொள்ளப் பாஷை தேவையில்லை!

திசை – 27-10-1989 [சிறுகதைப் போட்டியில் ஆறுதல் பரிசு பெற்றது.]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *