கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: July 17, 2014
பார்வையிட்டோர்: 11,340 
 
 

வழக்கமான வெள்ளிக்கிழமை மாலையின் கூட்ட நெரிசல் இன்றைக்கும் திருச்சி
பேருந்து நிலையத்தை நிரப்பியிருந்தது… மதியமே கிளம்பியிருந்தால்
இவ்வளவு கூட்டத்தில் மாட்டியிருக்க மாட்டேன், நேரம் ஆக ஆக கூட்டம்
இன்னும் அதிகமாகிக்கொண்டுதான் இருந்தது…. தோளில் ஒரு பை, கையில் ஒரு
பெட்டி என்று கூடுதல் சுமையால்தான் இன்றைக்கு இன்னும் பேருந்தில்
ஏறமுடியவில்லை…. அடித்துப்பிடித்து ஒரு பேருந்தில் ஏறினால் அத்தனை
இருக்கைகளும் கைக்குட்டைகளால் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தது… ஒரு மணி
நேர போராட்டத்திற்கு பிறகு உடலுக்கு சிறிது ஓய்வு தேவைப்பட்டது….
பெட்டியை என் கால்களுக்கு இடையேயும், பையை என் மடியிலும் வைத்தவாறு
பேருந்து நிலைய இருக்கை ஒன்றில் அமர்ந்தேன்…. கைக்குட்டையை எடுத்து
முகத்தை துடைத்தேன், வியர்வைக்குள் முக்கி எடுத்ததை போன்று அதுவும்
ஈரமானது…

ஆசுவாசப்படுத்தியபடியே சில நிமிடங்கள் வேடிக்கை பார்த்தேன்… இவ்வளவு
மனிதர்கள் அப்படி எங்கேதான் செல்கிறார்கள்?…. அத்தனை பேர் முகத்திலும்
கூட்ட நெரிசலின் எரிச்சலை தாண்டியும், பயணம் செய்ய இருக்கின்ற உற்சாகம்
மேலிடவே செய்தது… அப்போதுதான் அந்த முகத்தையும் கவனித்தேன்… நாற்பது
வயது மதிக்கத்தக்க அந்த நபர் செந்தூரான் மாமாவை போலவே தெரிந்தது…
மாமாவின் சாயலா? மாமாவேதானா? என்ற குழப்பம் சில நிமிடங்களுக்கு பிறகுதான்
தீர்ந்தது… ஆச்சர்யத்தை விட அதிர்ச்சியே மேலோங்கி இருந்தது… காரணம்,
இத்தனை நாள் உயிருடன் இருக்கிறாரா? என்றே தெரியாத ஒருவரை எதேச்சையாக
காணும்போது அதிர்ச்சி உண்டாவது இயல்புதானே!… அவரேதான், ஆனால்
அவசரத்தில் வரைந்த ஓவியம் போல, பழைய வடிவத்தை முற்றிலும் இழந்து இவ்வளவு மாறியிருக்கிறார்… அழுக்கான சட்டையில் ஆங்காங்கே ஒட்டுப்போடப்பட்டு, வேஷ்டியின் நிறம் கிட்டத்தட்ட செம்மஞ்சள் நிறத்தை நோக்கி நகர்ந்துகொண்டு இருக்கிறது….

வேகமாக எழுந்து அவரை நோக்கி சென்று, அவர் முகத்திற்கு நேராக நின்றேன்…
அருகில் பார்த்தபோது இன்னும் அதிர்ச்சியானேன்… பத்து நிமிடத்திற்கு
ஒருமுறை தலைவாரி, எண்ணை பசையே தெரியாத அளவிற்கு எப்போதும் பவுடர் பூத்த முகத்தோடு, மெலிதாக மணக்கும் மல்லிகை சென்ட் சகிதம் வரும் மாமாதான்
அதுவரை நான் பார்த்திருந்த செந்தூரான்… ஆனால் இப்போதோ உருக்குழைந்த
உருவத்தோடு, தன் தோற்றத்தின் மீது அக்கறை அற்றவராக நிற்கிறார்…
முகத்தின் பெரும்பகுதியை ஆக்கிரமித்திருந்த தாடிக்கு இடையில் வெளிப்பட்ட
பழுப்பேறிய பற்கள் என்னை இன்னும் ஆச்சரியப்படுத்தியது….

என்னை இன்னும் அவர் கவனிக்கவில்லை, ஏதோ ஒரு பேருந்தை எதிர்பார்த்து
நின்றுகொண்டிருக்கிறார்….

“மாமா….” அருகில் சென்று அழைத்தேன்….

கண்டுகொள்ளவில்லை, ஒருவேளை இன்னும் கவனிக்கவில்லையா என்ற குழப்பத்தோடு,

அவர் தோள் தொட்டு, “மாமா…. செந்தூரான் மாமாதானே நீங்க?” என்றேன்…

என் தலை முதல் பாதம் வரை ஏறிட்டு பார்த்தார்…. தன் வலது கையால் தாடியை
வருடிக்கொண்டே கண்களை சுருக்கியபடி இன்னும் கூர்மையாக கவனித்தார்….

“யாருன்னு சரியா வெளங்கலையே?” குரல் மட்டும்தான் இன்னும் அவரை விட்டு விலகவில்லை…

“நான்தான் மாமா மணிமாறன்….”

அவரது பார்வை இன்னும் அகன்றது, சில நொடிகளுக்கு பிறகு புருவம்
உயர்ந்தபோதுதான் என்னை அவர் அடையாளம் கண்டுகொண்டதாக தோன்றியது…

“டேய் மண்டப்பயலே…” சொல்லிக்கொண்டே என் கன்னத்தை கிள்ளினார்….

‘மணிமாறன்’ என்று சொன்னதற்கு பதிலாக, ‘மண்டையன்’ன்னு சொல்லிருந்தா மாமா இவ்வளவு யோசித்திருக்கமாட்டார்… எங்கள் தெரு பசங்களுக்கு ‘மண்டை,
கோனையன், நெருப்பு, சப்பை’னு மாமா சூட்டிய பெயர்கள்தான் ஊருக்குள்
அடையாளமே… இன்றைக்கும் ஊருக்குள் ‘மண்ட மணி’ன்னு சொன்னால்தான்
பலபேருக்கு என்னை அடையாளம் தெரியும்…

“நல்லா இருக்கியா மாமா?” அவசியமற்ற கேள்வி… இதுபோன்ற சம்பிரதாய
கேள்விகள் எதற்கும் மாமா பதில் சொல்லமாட்டார்….

“வாடா டீ சாப்பிடலாம்…” சொல்லிக்கொண்டே ஒரு டீக்கடையை நோக்கி என்னை
அழைத்து சென்றார்…

“ஒரு டீ, ஒரு பால்…” என்று கடைக்காரரிடம் நான் சொன்னபோது, மாமா
கமுக்கமாக சிரித்தார்… தான் இன்னும் அவர் குடிக்கும் பாலை நினைவில்
வைத்திருப்பதால் கூட இருக்கலாம்…

பாதி நுரையும், மீதி பாலுமாக ஆற்றி கையில் கொடுத்த கடைக்காரனை முகம்
சுளித்து பார்த்தார்…. குவளையை இடமும் வலமுமாக சுழற்றிவிட்டு முதல்
வாய் குடித்தபோது, அவர் முகம் சிறுத்தது….

“பச்ச தண்ணியில சக்கரையை போட்டு குடுக்குறாணுவ… இதுக்கு பேரு
பாலாம்…” என்னை பார்த்து சிரித்தார்….

சிறுவயதில் எங்கள் மாட்டில் கறக்கும் பாலை மாமா வீட்டிற்கு
கொண்டுபோகும்போதுதான் அவர் எனக்கு அறிமுகமானார்.. நான் கொண்டுபோகும் பாலை தண்ணீர் கூட கலக்காமல் அப்படியே காய்ச்சி, சக்கரை கலந்து குடிப்பதை
ஆச்சரியமாக பார்த்ததுண்டு… அந்த தெருவிலேயே அவர் வீடுதான் காரை வீடு…
ஆனாலும், வாழ்ந்து கெட்ட வீடுகளுக்கான அடையாளமாக பெயர்ந்த காரைகளும்,
படிந்த ஒட்டடைகளும் இப்போதும் என் கண்முன்னே நிற்கிறது…. ஒருகாலத்தில்
வேலிக்கணக்கில் நிலமிருந்து, மாமாவின் பெற்றோர் இறந்த பிறகு சொந்தங்களால்
அவை சிதறடிக்கப்பட்டு, அப்போது அவருக்கு எஞ்சியது அந்த பாழடைந்த வீடும்,
நான்கு ஏக்கர் நிலமும் மட்டும்தான்…. நிலத்தை கூட குத்தகைக்கு விட்டுவிட்டு, வீட்டின் திண்ணையில் ஒருசிறிய பெட்டிக்கடை போட்டிருந்தார்….

பெட்டிக்கடை என்றால், கடையின் மொத்த விற்பனை பொருட்களையும் ஒரு சின்ன
பெட்டிக்குள் அடைத்திடலாம், அந்த அளவிற்கு அது ஒரு சம்பிரதாய
பெட்டிக்கடை…. “தம்பி என்ன பண்ணிட்டு இருக்காரு?”னு யாரும் கேட்டால்,
“அவுக ஊருல கடை வச்சிருக்காராம்!”னு வெளியுலகில் பேசிக்கொள்ள, தனக்கொரு
அடையாளமாகத்தான் அந்த கடையை நடத்தி வந்தார்…

நான்கு கண்ணாடி குடுவைகளில் தேன்மிட்டாய், கல்கோனா, சூட மிட்டாய், கடலை
மிட்டாய்… இரண்டு பிளாஸ்டிக் பைகளில் முறுக்கும், பன்னும்…. நான்கு
பீடிக்கட்டு, தீப்பெட்டி, சில சவுக்கார கட்டிகள்… இவ்வளவுதான் அவர்
மொத்த கடையே…

பால் கொடுக்க போகும்போது அவர்கள் வீட்டு தொலைக்காட்சியில் ஏதோ ஹிந்தி
படம் ஓடிக்கொண்டிருக்கும்… பாலை வாங்கி அதை கிண்ணத்தில் ஊற்றுவது வரை,
கண்கொட்டாமல் தொலைக்காட்சியை பார்ப்பேன்…. எங்கள் தெருவில்
தொலைக்காட்சி இருக்கும் ஒரே வீடு அதுதான், வெள்ளிக்கிழமை ஒளியும் ஒலியும்
பார்க்கவும், நள்ளிரவில் போடப்படும் தமிழ்ப்படம் பார்க்கவும் தெருவே அந்த
வீட்டு திண்ணை வரை ஆக்கிரமிக்கும்…

அப்படி நானும் என்னை போன்ற சிறுவர்களும் தொலைக்காட்சி பார்க்க
செல்லும்போதெல்லாம் ஆளுக்கு இரண்டு தேன் மிட்டாய்கள் கொடுப்பார்…
“செந்தூரு சவுக்காரம் ஒன்னு தாய்யா, ரெண்டு நாள்ல காசு தரேன்” ன்னு
சொல்லி வாங்கி செல்லும் பலரும், எத்தனையோ ‘இரண்டு நாட்கள்’ கடந்தும் காசு
கொடுப்பதில்லை, மாமா அதை பொருட்டாகவும் நினைப்பதில்லை… ஒருசில
வருடங்களாக நான் கவனித்தவரை, ஒரு பத்து பைசா அவர் கல்லாவில் கண்டதாக
எனக்கு நினைவில்லை….

இருவரும் குடித்துவிட்டு, குவளையை அருகில் வைத்தவாறு, ஒரு ஐம்பது ரூபாய்
தாளை எடுத்து கடைக்காரரிடம் நீட்டினேன்… என் கையை தட்டிவிட்டுவிட்டு,
தன் சட்டைப்பைக்குள்ளிருந்து கசங்கிய இருபது ரூபாயை எடுத்து கடையில்
கொடுத்தார்… மீதி சில்லறையை எண்ணி பைக்குள் போட்டவாறே, “உனக்கென்ன
பெரியாளா ஆகிட்டோம்னு நெனப்போ!” என்றார்… நான் பதில் சொல்லவில்லை,
சிரித்துக்கொண்டேன்….

இருவரும் பேசிக்கொண்டே பேருந்து நிறுத்தத்தின் ஒரு ஓரத்தை அடைந்தோம்…
அதிகம் வெளிச்சமில்லாத, ஆள் நடமாட்டமும் அவ்வளவாய் இல்லாத அந்த பகுதியில் தூசி படிந்த ஒரு இருக்கையை ஒரு காகிதத்தால் சுத்தப்படுத்தி, அதில்
அமர்ந்தோம்… மாமாவிடம் எனக்கு கேட்க ஆயிரம் கேள்விகள் வரிசை கட்டி
நிற்கிறது, என்றாலும் கூட பதினைந்து வருட இடைவெளி இயல்பாகவே எனக்குள் ஒரு தயக்கத்தை ஏற்படுத்தி இருந்தது….

“சப்பை, கோனையன் எல்லாரும் எங்க இருக்கானுவ?” மாமாவே தொடங்கிவைத்தார்…

“அவனவனும் வெளியூருல இருக்குறான் மாமா… சப்பை கூட போன மாசம்தான்
மலேசியா போனான்….”

“அட…. குண்டி கழுவ தனியா கம்மாய்க்கு போவமாட்டான், அவனல்லாம்
வெளிநாட்டுக்கு போய்ட்டான்… ஹ ஹ ஹா…” சிரித்தார்…. தொடர் சிரிப்பு
இருமலில் முடிந்தது….

“நீ எங்க இருக்க மாமா?” பதில் வருமா? என்ற குழப்பத்தில்தான் கேட்டேன்….

“அதல்லாம் இருக்கேன்டா…. நீ இந்த ஊருலதான் வேலை பாக்குறியா?” மழுப்பலான
பதிலோடு, திசை திருப்பும் கேள்வியும் இலவச இணைப்பாய் வந்தது…

“ஆமா மாமா… திருச்சிலதான்… ஒரு கம்பெனில வேலை பாக்குறேன்…. நீ ஏன்
மாமா இப்டி ஆகிட்ட?… ஆளே அடையாளம் தெரியாம…”

“எனக்கென்ன வயசு இன்னும் இருபதாவே இருக்கும்னு நெனச்சியோ?… நானாச்சும்
நீ பார்த்ததுமே அடையாளம் கண்டுக்கற மாதிரி இருக்கேன்… நீதான் அடையாளமே
தெரியாத அளவுக்கு மாறிட்ட…. குட்டிப்பயலா, மூக்கு ஒழுக பாத்த மண்டயனை
இந்த மாதிரி பாப்பேன்னு நெனச்சு கூட பாக்கல…” எப்போதுமே மாமா தன்
கஷ்டத்தை பகிர்ந்துகொள்ளவே மாட்டார்…. சிறுவயதிலாவது மறைப்பதில்
‘எனக்கு புரியாது!’ என்கிற காரணம் இருக்கலாம், இப்போதும் அப்படித்தான்
இருக்கிறார் அந்த வீம்புக்காரர்….

“தாடியாவது ஷேவ் பண்ணிருக்கலாம்ல?”

“தாடிதாண்டா உன் மாமனுக்கு அழகு… நம்ம திருவள்ளுவர் முதலா பெரியாரு
வரைக்கும் இதானே அடையாளம்…” மாமாவிற்கு சமாளிப்பதற்கு கற்றுக்கொடுக்கவா
வேணும்?… பொய்யை நெய் போல விரும்பி உருக்குவார்…. சிறுவயது முதலே
மாமா சொன்ன பொய்களை பொய் என்றே தெரிந்தாலும் நம்பியே பழகியதால்,
இப்போதும் கூட அவர் சொன்னதை நம்புகிறேன்…

பெரும்பாலான அவரது பொய்கள் பேய்க்கதைகள் வடிவில்தான் வெளிவருவதுண்டு…

“ராத்திரி பன்னெண்டு மணி இருக்கும்டா…. யாரோ அழுவுற சத்தம் கேட்டு
போனேன்… நம்ம வாக மரத்துப்பக்கம் பார்த்தா பனைமரம் ஒசரத்துக்கு ஒரு
உருவம் நின்னுச்சு… கையும் காலும் என் உசரத்துக்கு இருந்துச்சு….”

“பேய்க்கு கால் இல்ல தானே மாமா?” சப்பை ஒருமுறை குறுக்கு வேள்வி கேட்டுவிட்டான்….

“இது கொள்ளிவாய் பிசாசுடா… வாய்லேந்து நெருப்பா கக்குச்சு… அது அடி
எடுத்து வைக்கையில மரமெல்லாம் ஆடுச்சு… அப்டியே நடந்து நம்ம சப்பை
வீட்டுப்பக்கம் போனதை பார்த்தேன்டா…” என்று கொள்ளிவாய் பிசாசை சப்பை
வீட்டுக்கு டைவர்ட் செய்துவிட்டார் மாமா… இந்த கதை கேட்டு சப்பை
பயந்து, அவனுக்கு மூன்று நாள் காய்ச்சல் வேற… காய்ச்சலுக்கு கூட “அந்த
பிசாசு வேலையாத்தான் இருக்கும்…. அது காலைப்பத்தி கேட்டான்ல,
அதான்…”என்று சொன்ன மாமாவிடம், அதற்கு பிறகு நாங்கள் என்ன கேள்வியை
கேட்பது?…

அதுவும் குறிப்பாக அவர் வீட்டு பின்புறத்தில், ஒரு ஐம்பதடி தூரத்தில்
குட்டிச்சுவரும், மிச்ச ஓடுகளுமாக கிடந்த ஒரு பாழடைந்த கட்டிடத்தை பற்றிய
மாமாவின் கதைகள்தான் நிறைய… “அதுக்குள்ள அஞ்சாறு பேய் இருக்குதுடா…
அத்தனையும் ரத்தக்காட்டேரி….”ன்னு சொல்லும்போது மாமாவின் பற்கள் கூட
கொடூரமாகத்தான் தெரியும்…. அதுவரை எப்போதாவது அந்த பக்கம் பொன்வண்டு
பிடிக்க பசங்களுடன் போவதுண்டு, இந்த கதைக்கு பிறகு அந்த பாதையிலேயே
அடியெடுத்து வைப்பதில்லை….

அப்போதெல்லாம் அவர் பொய்கள் பேய் வடிவில் வெளிவந்தன, இப்போதோ பெரியார்
மற்றும் வள்ளுவராய் உருமாறி இருப்பது மட்டும்தான் காலம் செய்த மாற்றம்…

“இருபது வருஷம் இருக்குமா மாமா?”

“பதினேழு வருஷம்டா….” என் கேள்வியை சரியாக புரிந்துகொண்டார்….

“ஏன் மாமா யார்கிட்டயும் சொல்லாம ஊரைவிட்டு கிளம்பிட்ட?”

“சொல்ற அளவுக்கு அப்ப சூழ்நில இல்ல…”

“உன் நிலம் போடுற ஆளுக குத்தகை பணம் கொடுக்குறாகளா?”

“ஹ ஹா… ஊரே வேனாம்னதுக்கு அப்புறம் என்னடா நெலம்?… அந்த
நிலத்துக்காகத்தானே அவங்கள்லாம் கதை கட்டுனதே!”

“அப்போ அதல்லாம் கதைன்னு சொல்றியா?”

“இல்ல… எல்லா கதைக்கு பின்னாடியும் ஒரு காரணம் இருக்குன்னு சொல்றேன்….”

மாமா ஊரைவிட்டு கிளம்புவதற்கு முன்னான அந்த நான்கு நாட்களும்
அவரைப்பற்றிய பேச்சுதான் ஊரெங்கும்.. அந்த பேச்சுகள்தான் அவரை ஊரைவிட்டே
கிளப்பியதோ? என்று கூட நான் எண்ணியதுண்டு… மாமா எங்களுக்கெல்லாம்
கற்பனை வடிவில் பயத்தை உண்டாக்கிய அந்த பாழடைந்த பழைய வீட்டிலிருந்துதான் அவருக்கு பிரச்சினை தொடங்கியதே….

அந்த வீட்டில் மாமாவும் வேறு ஒரு இளைஞனும் ஒன்றாக சேர்ந்து….

“கருமம்… அசிங்கம்…. அடச்சீ” என்று என்னன்னவோ செய்ததாக ஊர் முழுக்க
பேசினர்…

“இது இன்னிக்கு நேத்திக்கு இல்லப்பா… ரொம்ப காலமாவே அந்த வீட்டுக்குள்ள
எவனோ புது ஆளு போயிட்டு வர்றத நானே பாத்திருக்கேன்… வந்தவன் ஆம்புளன்னு
சும்மா இருந்தேன்… கருமம் பிடிச்சவணுக ஆம்பளையும். ஆம்பளையும்…”
எதிர்வீட்டு வாசலில் கட்டில் போட்டு எப்போதும் தெருவை வேடிக்கை
பார்த்தபடி படுத்திருக்கும் கோவிந்தன் சித்தப்பா இப்படித்தான்
சொன்னார்… தனியாக வீட்டிலிருந்த பக்கத்து தெரு பெண்ணிடம் இவர்
சில்மிஷம் செய்து பஞ்சாயத்து செய்யப்பட்ட ஒருவாரத்தை தவிர, பெரும்பாலும்
சித்தப்பாவின் இருப்பு அந்த வாசல்தான்…

“இதல்லாம் வெளிநாட்டு அசிங்கம்பா…. நம்ம பயலுகள அவன் வீட்டு பக்கமே
விட்டுடாதிக…” எங்க பள்ளிக்கூடத்து வாத்தியார் இப்படி சொன்னதால், மாமா
வீட்டு பக்கமே நாங்கள் செல்லாதபடி தடையுத்தரவு போடப்பட்டது… எங்கள்
பெற்றோர் கூட, “ஏய், அந்த செந்தூரு வீட்டுப்பக்கம் போவக்கூடாது…. அவன்
ஆம்புளைக கூட அசிங்கம் பண்றவனாம்… ஆம்பளைக்கு தேடுறவனுக்கு வயசெல்லாம் கண்ணுக்கு தெரியவா போவுது?” என்று ஏதேதோ புரியாத விஷயங்கள் பேசி ஒருவித பயத்தை மாமா மீது உண்டாக்கினார்கள்…

அடுத்த இரண்டு நாட்கள் கூட மாமாவை ஒரு பேய் போல பார்த்து பயந்து
ஓடுவோம்… வாசலில் நின்று என்னை அழைத்த அவரை கண்டு அலறி அடித்து ஓடிய
சம்பவம் எனக்கு இன்னும் கண் முன்னால் நிழலாடுகிறது…

அதன்பிறகு மாமாவை பற்றிய பேச்சு காற்றில் கரைந்துவிட்டது, அவர் நினைவு
கூட வருவதில்லை… பாழடைந்த வீட்டுப்பக்கம் சிகரெட் பிடிக்க போகும்
நேரங்களில் மட்டும் அவர் நினைவு வருவதுண்டு…. பதினேழு வருடத்தில் ஒரே
ஒருமுறை மட்டும் மாமாவை பற்றி ஊருக்குள் ஒரு செய்தி வந்ததியாக பரவியது…

“அந்த கடைக்காரன் செந்தூரு இருந்தான்ல, அவனுக்கு எயிட்ஸ் வந்து செத்து
போயிட்டானாம்…” என்றபோது எனக்கெல்லாம் சப்தநாடிகளும் ஸ்தம்பித்து
நின்றது…. மாமாவை பற்றிய ஒருவித அருவருப்பு எண்ணம் மனதில் படிந்தது…
சரியாக அப்போது ஒரு பேருந்து வர, இருக்கையில் அமர்ந்திருந்த மாமா
பதற்றத்தோடு எழுந்தார்…

“இதான் கடைசி பஸ்… நான் கெளம்புறேன்…” சொல்லிவிட்டு வேகமாக எழுந்து
சென்றார்….

ஒருவழியாக உட்கார அவருக்கு இடமும் கிடைத்தது, எந்த ஊர் பேருந்து என்பதை
நான் கவனிக்கவில்லை… செல்லும்போது பின்னால் பார்த்தால்
தெரியப்போகிறது…

பேருந்து கிளம்ப இன்னும் ஒருசில நொடிகள்தான் இருந்தன…. ஜன்னல் ஓர
இருக்கையில் அவர் அமர்ந்திருந்ததால், ஜன்னலுக்கு வெளியே பேருந்தின்
வெளிவழியாக அவரோடு பேசிக்கொண்டிருந்தேன்….. எனக்குள் இன்னும்
உறுத்திக்கொண்டிருந்த ஒரு கேள்வி தொண்டையில் நிற்கிறது…

கேட்டுவிடலாம் என்ற முடிவோடு, “ஏன் மாமா நீ கல்யாணம் பண்ணிக்கல?” என்றேன்….

“தோனலடா… எதுக்குடா கல்யாணமல்லாம்?”

“இல்ல மாமா, புள்ளை குட்டிகளோட சந்தோஷமா இருந்திருக்கலாம்ல?” என்றேன் நிதானமாக….மெதுவாக என் தலையை வருடியபடி “அதான் நீங்கள்லாம் இருக்கிங்களே!” என்றார்….

பேருந்து புறப்பட்டது…. ஸ்தம்பித்து நின்றேன் நான்..

ஒரு பிள்ளையை போல நினைத்து பாவிப்பவன், தன்னை காமக்கண்ணோட்டத்தில்
பார்ப்பதாக எண்ணி வெறுத்து ஒதுக்கிய வலியை அப்பாவாக அவர் உணர்ந்திருப்பதன் வெளிப்பாடுதான் இந்த நாடோடி வாழ்க்கை அவருக்கு…
கிழிந்த சட்டையில்லை, அழுக்கேறிய வேஷ்டி இல்லை, முகம் முழுக்க தாடி
இல்லை, பழுப்பேறிய பற்கள் இல்லை…. ஆனாலும், நானே எனக்கு அசிங்கமாக
தெரிகிறேன்….

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *