கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: October 23, 2013
பார்வையிட்டோர்: 18,266 
 
 

குவளை மலர் போன்ற அவளது நயனங்கள் இன்னும் பூக்கவில்லை.

சன்னலுக்கு வெளியே ஒளிவிலக்கம் கண்டதும் எழுந்து கொண்டேன். எங்கோ ஐந்து தரம் ஒலித்த மெல்லிய மணியோசை, ஒரு முழு நாளின் அடிவேரும் கருகிவிட்டதை உணர்த்திற்று.

மென் மஞ்சத்தில் அவளது அழகிய நித்திரை நீடித்தது. இறைவனின் மேடும் பள்ளமுமான உலகமைப்பைப் பிரதிபலிக்கும் கோல நிலை, தரையில் கசங்கிய பூவிதழ்கள். யாரும் கசக்காதிருந்தும் வேளை வந்தவுடன் பூக்கள் வாடிவிட்டன.

என் கண்களில் பிசுபிசுப்பு, இரவிலே உறங்கி நாட் கணக்காகிறது. ‘தப்பித் தவறி என் கை கால்கள் அவள்மீது பட்டுவிட்டால்?’ நினைப்பின் ஆரவாரமின்றி நிச்சிந்தையாய் உறங்குகிற அவள் கைகூட என் மேல் படவில்லை. நித்திரையில்கூட அவள் பொறுமை உடையக் காணோம்!

மரத்த பார்வையைச் சன்னலுக்கு வெளியே வைத்தேன். கீழ்வானின் அடிஉதட்டில் ஒளி வரிகள். ‘மதமத’வென்ற காற்றின் குளுமை.

சன்னலை நெருங்கி நின்றேன். அவளை உரிமையுடன் நான் அணுக அனுமதித்து இன்றோடு பதினைந்தாவது நாள் அடி சாய்கிறது. கடந்து சென்ற அந்த வேதனையான, வெறுமையான இரவுகளை, எண்ணிக்கையில் ஒரு புள்ளி கூட்டுவதைத் தவிர இந்த இரவுக்கு வேறு சிறப்பு என்ன?

உனக்குப் புண்ணியமாகட்டும் கார்த்தி, நாளைக்காலை அவள் முகத்தில் நான் பொலிவைக் காண வேண்டும் என்று நான் மாடிக்கு வருமுன்பாக அம்மா படித்துப் படித்துக் கேட்டுக் கொண்டதை இன்னும் நான் மறக்கவில்லைதான், என்ன செய்ய?

‘அவளை வெட்டிப் புதைத்துவிடலாமா?’ என்று சற்றுப் பொறுத்து அம்மா கேட்கப் போவதை நான் எதிர்பார்த்திருக்க வேண்டியதுதான்.

வேறே என்ன செய்வது? அப்படி ஆகக்கூடாது என்றுதானே மறுத்தேன், மன்றாடினேன்? “நான் சொல்வதைக் கேளம்மா. விஜி பேரில் எனக்கு எவ்விதக் குரோதமோ, அருவருப்போ கிடையாது. என்னத்தைச் சொல்ல? அவளை நினைக்கும்போதெல்லாம் நான் ஒரு சகோதரனாகவே இருக்கிறேனம்மா!”

“அதெப்படி, உனக்கு மாத்திரம் தனியாக ஓர் அர்த்தம் வருமோ? மாமன் மகளைத் தங்கை என்றால் கேட்கிறவர்கள் சிரிப்பார்கள்.”

அம்மாவின் பிடிவாதத்திற்கு மருந்தேது? அப்பாவின் அரவணைப்பை இளமையிலேயே இழந்துவிட்ட எனக்கு அவளை எதிர்த்து நிற்கத் துணிவேது? இருப்பினும் சொன்னேன்: “கருத்தறிந்த நாள் முதல் ஒரே வீட்டில் பழகி வந்ததால் வந்த வினையம்மா இது”.

“போகப் போக எல்லாம் சரியாகிவிடும்” — அம்மா வளையவில்லை. எனக்கும் என் மனத்தை வளைக்க முடியவில்லையே! விஜியின் பெற்றோர் உயிருடன் இருந்து, அவள் அவர்களிடமே வளர்ந்திருந்தால் என் மனம் இப்படியொரு விகாரமாய் முற்றியிருக்காதோ என்னவோ!

ஆனால் பிரத்தியட்சம்?

பாலும் பழமும் கரத்திலேந்தி, அதற்கிசைவான கொடி உடலை நெளித்துக் கொண்டு அவள் படியேறி வருகிற இரவுச் சித்திரங்கள் சாபம் நிறைந்ததாகவே தோன்றுகின்றன. இந்த ஸ்தானத்தில் நான் மாத்திரம் இல்லையெனில், இரண்டு ஜீவன்களின் இன்பங்கள் பறிக்கப்பட்டிருக்காதே! தவறான பாடத்திற்குப் பரீட்சை வைத்து அதில் என்னை நிர்ப்பந்தமாய்த் தேறச் செய்ததால் அல்லவோ இந்தக் குழப்பமும் புழுக்கமும்!

நின்று நின்று கால்கள் அலுத்துப் போன ஓர் இரவில், அவள் என்னை வினவினாள். “பழம் நறுக்கித் தரவா?”

”உன்னை விடவா வேறு ஒரு பழம்” என்று நான் ஆசையாய்த் தாவுவேன் என்று அவள் எதிர்பார்த்திருக்கவே முடியாது. ஏனெனில், மூச்சுப் பேச்சின்றிக் கழிந்த முந்தையை சில இரவுகளை அவள் மறந்திருக்க முடியாதே!

“எனக்குப் பசியில்லை” என்றேன் மிகுந்த அநாகரீகமாய்.

“இரண்டு துண்டம் சாப்பிடக்கூடவா பசி வேண்டும்?” — இனிமையான அவள் குரலில் ஏக்கமும் நம்பிக்கையும் விகசித்தன.

“பசிக்காமல் உண்டால் ருசிக்காது விஜி”. பொருள் செறிந்த என் பேச்சால் அவள் குழம்பவில்லை.

“தேவையில்லா விட்டாலும் விரும்பினால் புசிக்கலாமே?”

“தேவையின்றி விரும்புவது பேய்க்குணம்” — வெறுப்பு மலிந்த சொல்வரிசை. ஆயினும் சிறிதும் அவள் அயரக் காணோம்! படித்தவள் என்பதற்காக, பண்புள்ளவள் என்பதற்காகத் தன் இயற்கையையுமா மறைத்துக் கொள்ள முடியும்?

சமீபத்தில் அவள் பி.டி. பாஸ் பண்ணியபோது, “பொறுமையுள்ள, உறுதியுள்ள, இனிமையுள்ள ஆசிரியையாய் இந்நாட்டுக்குப் பயன் படுவாயாக!” என்று அம்மா வாழ்த்தியதை நான் கூடக் கேட்டேன். அந்தப் பொறுமை, உறுதி, இனிமை எல்லாம் எனக்கே பாடம் சொல்லித்தர முயல்கிறதோ?

தன் அமைதியால் அவள் என்னைத் தகர்க்க முடியும் எனக்கருதியிருந்தால் தோற்றுத்தான் போவாள். வேண்டுமானால் அவளும் குமுறட்டும். பொங்கட்டும். அப்படிச் செய்யாமல் அம்மாவிடம் போய் இந்த இழிவையெல்லாம் ஏன் கூறவேண்டும்?

அப்படியும், அவளே போய் வெட்கமில்லாமல் சொல்லியிருக்க மாட்டாள்தான். அம்மாவுக்குத்தான் எந்த விஷயத்தையும் எப்படிக் கக்க வைப்பதென்று தெரியுமே! இதெல்லாம் முழுசாக முந்தா நாள்தான் வெளிப்பட்டிருக்க வேண்டும். அன்றிலிருந்துதானே ’விஜியை வெட்டிப் புதைத்துவிடலாமா’ என்று என்னிடம் யோசனை கேட்டுக் கொண்டிருக்கிறாள் அம்மா!

“பெண் பாவமடா! ஏழேழு ஜென்மத்துக்கும் விடாது!”

கல்யாணத்தை ஆயிரங் காலத்துப் பயிர் என்று வர்ணிக்கிறவர்களே அதைக் கணநேர வான வில்லாய்ப் பண்ணி வைத்திருக்கிறார்கள். பாவம் மாத்திரம் என்னை விடாதாம்.

கட்டில் கால்கள் கிரீச்சிட்டன. இறுகிய மெழுகுச் சிலை மாதிரி சற்று முன் படுக்கையில் கிடந்தவள் உயிரோட்டத்தின் வசந்த நெகிழ்ச்சியுடன் எழுந்து அமர்ந்தாள். சில கணங்களுக்கு அப்படியே அமர்ந்திருந்தாள்.

பின்னர் எழுந்து என்னருகே வந்தாள். குனிந்த என் பாதங்களைத் தொட்டு கண்களில் ஒற்றிக் கொண்டு நடந்தாள். நாரின் பிணைப்பிலிருந்து விடுபட்ட சில பூந்தளிர்கள் அவளது கேசத்திலிருந்து உதிர்ந்தன.

தன்னை எதிர்ப்பார்த்திருக்கிற அம்மாவுக்கு அவள் என்ன பதிலைக் கூறுவாள்?

குளித்துவிட்டு வந்த என்னை அம்மா பார்த்த பார்வையில் கடுமையான வெம்மையிருந்தது.

“என் பிள்ளை இத்தனை கொடூரப் புத்தியுள்ளவனாயிருப்பான் என்று நான் ஒரு கணமும் நினைத்ததில்லை”.

“நானா அம்மா கொடியவன்?” அம்மாவுக்கு எதிரில் இதற்குமேல் என்னால் வேகப்பட முடியுமோ?

”இன்னும்கூட நீ நல்லவன் என்றுதான் எனக்குள் சாதித்துக் கொள்கிறேன். ஆனால் உன் காரியமெல்லாம் நல்லதுதானா கார்த்தி? நாலையும் யோசிக்கவில்லை என்றால் இப்படியொரு காரியத்தைப் பண்ணி வைத்திருக்கப் போவதில்லை. அவளைப் பார்த்தாயா? எத்தனை பொறுமையாய் இருக்கிறாள்! ஒரு சிறிதேனும் மாற்றம் தென்படுமா என்று நானும்தான் பார்க்கிறேன். அவளல்லவோ பெண்! இதோ பார் கார்த்தி, அவளது பொறுமைக்காகவேனும் அவளை நீ மதிக்கலாம். அசட்டுக் கற்பனையால மனிதத் தன்மையை இழந்து விடாதே மகனே!”

அம்மா தொடர்ந்தாள். “தியாக புத்தி கூடவா உனக்கு இல்லாமல் போய்விட்டது? கார்த்தி, இன்னொரு ஜீவனின் இன்பத்தை அனுசரித்து வாழ்வதில்தான் வாழ்வின் மகத்தான் நிறைவு இருக்கிறது”.

தியாகம்! இன்னொரு ஜீவனின் இன்பத்தை அனுசரித்து வாழ்வது! அழகான தொடர்தான். ஆனால் கொள்கையளவில் அல்லாமல் பிரத்தியட்ச நிலைக்குச் சில உண்மைகள் ஒத்துக் கொள்வதில்லையே! தன்னைப் போட்டுவிட்டு இன்னொருத்தரைத் தூக்கிக் கொள்வதாவது?

கால் போன போக்கில் ஊர் சுற்றிவிட்டு இரவு எட்டு மணிக்குமேல் வீடு திரும்பினேன். தெளிவற்ற மனநிலை.

முன் ஹாலில் பேச்சுக் குரல் கேட்க, என் வேகம் சுருங்கிற்று.

”கொழு கொழுவென்றிருக்கிறாயே விஜி, என்ன டானிக்?” — யாரோ ஒருத்தி. தொடர்ந்து நான்கைந்து பெண் குரல்களின் சிரிப்பு.

விஜி தெம்பாகப் பேசினாள். “எந்த டானிக்கும் கணவனின் அன்புக்கு இணையாகுமா?”

உடம்பு சிலிர்த்து உறைய அப்படியே நின்றவன் மௌனமாக அவர்களைத் தாண்டி மாடிக்குச் சென்றேன்.

சற்றுப் பொருத்து விஜி அங்கு வந்தாள். “அம்மா சாப்பிடக் கூப்பிடுகிறார்கள்”.

தாங்க முடியாத வருத்தத்துடன் அவளை நோக்கினேன். எண்ணம் உள்ளுக்குளேயே தேங்க மறுத்துக் கேட்டுவிட்டேன். “பொய்கூடச் சொல்கிறாயே நீ!”

”என்ன?”

”உன்மீது நான் அன்பாயிருப்பதாக அவர்களிடம் அளந்தாயே?”

“உண்மையும் அதுதானே! இல்லையென்றால் நான் என்றோ மடிந்துவிட்டிருப்பேன்”.

நடிப்பின் செயற்கையோ, கெட்டிக் காரத்தனத்தின் மெச்சத்தக்க குதூகலமோ அவள் முக பாவத்தில் இல்லை. அப்படியென்றால்? அவளுக்குத் தன்னை பிறர் முன் பிட்டு வைக்க விருப்பமில்லையென்றால் அங்கே நடிக்கட்டும். இங்கேயுமா அப்படி? வாழ்வை இழந்து நிற்கிறது ஒரு கஷ்டமானால், இவள் காட்டுகிற தீவிரப் பொறுமை ஆளைத் துளைக்கிறதே! ‘என்னை எதற்காக இப்படி வதைக்கிறீர்கள்?’ என்று ஒரு வார்த்தை கேட்டாலாவது மனத்திற்கு ஆறுதலாயிருக்கும்.

பதினைந்து நாட்கள் கழிந்தன.

அன்று அலுவலக நேரம் முடிந்து நான் கிளம்ப வேண்டியதாயிற்று. இருபத்து நாலு மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்று ஒரு சட்டம் வந்தால் இப்பரந்த உலகில் பெரு மகிழ்வெய்தக் கூடிய ஒரே மனிதன் நான் ஒருவனாகத்தான் இருக்க முடியும்.

வழக்கப்படி அலுவலக நண்பர் ராஜுவும் பஸ் நிற்குமிடத்திற்கு வந்து கொண்டிருந்தான். அவன் முகத்தில் ஏதோ வாட்டம்.

”என்ன ராஜு முகம் சரியில்லையே”, என்றேன்.

”என் மனைவி ஊருக்குப் போயிருக்கிறாள் கார்த்தி. மாமனார் பிடிவாதமாக இரண்டு நாளைக்கு இருக்கட்டும் என்று அழைத்துப் போய்விட்டார்.”

‘இதற்குத்தானா’ என்று நான் கேட்கவில்லை. ஆறுமாதம் தனிக்குடித்தனம் நடத்தியவன், மனைவியை ஓர் இரண்டு நாட்களுக்குப் பிரிந்திருக்க முடியாதாமே!

“புதுசுகள் மாதிரி ரொம்ப அலட்டிக் கொள்கிறாயே? பழமும் தின்று கொட்டையும் போட்டவன் தானே நீ?”

”என்னைப் பற்றிச் சொல்லவில்லை கார்த்தி. அவளால் ஒரு நாளைக்கு என்னைக் காணாமல் இருக்க முடியாது”.

“அத்தனை அக்கறையா மனைவிமீது?’ — பொருள் செறிந்த என் கேள்வி அவனுக்குப் புரிபடாதிருக்க நியாயமில்லை. ஆறு மாதம் முன்பு, “எனக்குப் பிடிக்காத ஒருத்தியை என் தலையில் சுமத்துகிறார்களே என் பெற்றோர்” என்று புலம்பியவன் இவன். நண்பர்கள் எல்லாம் கூடிக்கொண்டு புது மாப்பிள்ளையான அவனைக் கேலி பண்ண நேர்ந்த ஒரு சந்தர்ப்பத்தில் அவன் எப்படிக் குமுறினான்! ‘தயவு செய்து என் வேதனையை அதிகப்படுத்தாதீர்கள். கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரியைப் பற்றி என்னால் ஒரு புத்தகமே எழுத முடியும்’ என்று அவன் பொங்கினானே! இப்போது ஏன் இப்படி நடிக்கிறான்?

ராஜு சிரித்துக்கொண்டே சொன்னான். “வாஸ்தவம்தான் கார்த்தி. ஆனால் அது, இப்போது நினைத்துப் பார்கக்வும் தகுதியில்லாத காலமாகிவிட்டது. நமக்கு ஒன்று பிடிக்கவில்லை என்றால், அதற்காக இந்த உலகை விட்டு ஓடுவதா ஆண்மை? தோல்வியை நிரந்தரமாக்கி அதற்கு அடிமைப்படுவதா விவேகம்? மனத்தைக் கட்டுப்படுத்தி விட்டால் நம்மால் எதையும் விரும்ப முடியும் கார்த்தி, ஆண்மையும் அதுதான்”.

“அப்படி முடியவில்லை என்றால்?”

“அந்த இடத்தை ஒரு பெண் பிடித்துக் கொண்டுவிடுவாள். தனக்கு எந்தத் தீங்கும் இழைக்கப்படாத மாதிரி வைரமாய் இறுகிவிடுவாள். இறுதியில் நமக்கே சோதனையாகி விடும். இம்மாதிரி நிலையை ஒரு பெண்ணால் உருவாக்க முடியும்”.

எனக்குத் திடுக்கென்றிருந்தது. என் கதையை அல்லவா படிக்கிறான் இவன்! அப்படியானால் நான் விட்ட இடத்தைத்தான் விஜி பிடித்துக்கொண்டு விட்டாளோ?அதன் வெற்றி அவளது இந்த அசாதாரணப் பொறுமையோ?

இறுதியில் ஜெயிப்பது யார்?

பின்னே, ஆண்மையை உணராத ஆண்மகனுக்கு வெற்றி ஏது? என்றது என் மனம்.

ஒரு நீண்ட காலத்திற்கு நடத்தத் துணிந்திருந்த போராட்டத்திற்கு அக்கணமே ஒரு முடிவு கொண்டு வந்தேன். அவளை ஜெயிக்க விடுவதில்லை. அவளுக்கு வாழ்வளிக்கிற சாக்கில் அவள் பலத்தைப் — பொறுமையை நொறுக்கி என் காலடியில் வீழ்த்துவது.

ராஜுவுக்கு என் மனம் நன்றி செலுத்திற்று.

நான் வீட்டினுள் நுழைந்ததும் கூடத்து ஊஞ்சற் பலகையில் ஒரு கனத்தை தோற்பெட்டியும் அதன்மீது ஹோல்டால் ஒன்றும் கண்டேன். யாராவது விருந்தினரோ, அல்லது இங்கிருந்து யாராவது போகிறார்களோ?

மாடிக்குச் சென்ற என்னைத் தொடர்ந்து விஜி வந்தாள். நெற்றியில் பளிச்சென்ற திலகம். கூந்தலில் கதம்பச் சரம். உடம்பைச் சுற்றி ஒரு வாயில் சேலை. இடக் கையில் ஒரு கேரளத்துக் குடை மாத்திரம் இருந்தால் அசல் வாத்தியாரம்மாதான்.

“காலையிலேயே உங்களிடம் சொல்ல வேண்டுமென்றிருந்தேன். உங்கள் சட்டைகளுக்கு இஸ்திரி போட்டுக் கொண்டிருந்ததால் நீங்கள் ஆபீஸ் புறப்பட்டதைக் கவனிக்கவில்லை. அம்மா சொல்லியிருப்பார்களே?”

எனக்கு ஒன்றும் புரியவில்லை.

”கடலூர் பெண்கள் உயர் நிலைப்பள்ளியில் எனக்கு வேலை கிடைத்திருக்கிறது. நாளைக்கே போய்ப் பொறுப்பேற்றாக வேண்டும்.”

எனக்குத் துணுக்கென்றிருந்தது. தன் வெற்றியை உறுதிப்படுத்திக் கொள்ள அல்லவா வழி பார்த்திருக்கிறாள்! ’உன்னை ஜெயிக்க விடுவதில்லை என்று தீர்மானித்திருக்கிறேன் விஜி. அதனால் உனக்கு வாழ்வளிக்கப் போகிறேன். அவசரப்படாதே’ என்று எனக்குள் கூறிக்கொண்டேன். பின்னர் அவளைப் பார்த்து, “என்னால் உனக்கு வாழ்வளிக்க முடியும்” என்றேன் வெற்றிப் பெருமிதத்துடன்.

அவள் அமைதியாய்ச் சிரித்துச் சொன்னாள். “முடியும் என்கிறீர்களே! இதோ இந்த அற்புத வாழ்வே நீங்கள் இட்ட பிச்சைதானே? உங்கள் சுகமே என் லட்சியம். உங்கள் நலத்திற்காக நான் எந்தத் தியாகமும் செய்வேன்.”

அவள் கண்களைக் கூர்ந்து நோக்கினேன். அவற்றில் ஓர் அசாதாரண உறுதி. என் உள்ளம் ஏன் இப்படி நடுங்குகிறது? நேற்றுவரை நான் அவளிடம் கண்டவை பொறுமையும் இனிமையும்தான். இப்போது உறுதியை எடுத்து விளையாடத் துவங்கியிருக்கிறாளோ? என்னால் அதைத் தகர்க்க முடியுமா?

அவள் குனிந்து என் பாதங்களைத் தொட்டு வணங்கிவிட்டு நடந்தாள்.

சில கணங்களுக்கு எனக்கு ஒன்றுமே தோன்றவில்லை. பின்னர் விடுவிடுவென்று கீழே வந்தேன். அம்மாவை அழைத்துச் சொன்னேன். “என் அனுமதியின்றி விஜி எங்கும் போகக் கூடாதம்மா”.

அம்மா அலட்சியமாக என்னைப் பார்த்தாள். “ஓகோ, பெண்மையை இப்போதுதான் நீ உணர்ந்திருக்கிறாயாக்கும்! ஆண்மையை அவள் என்றோ உணர்ந்துவிட்டாளே!”

“அவள் இங்கிருந்து போகக்கூடாது அம்மா” என்றேன் அம்மாவின் பேச்சை வாங்கிக் கொள்ளாமல்.

“அவள் யாருக்காக இங்கிருந்து போகிறாள்? உனக்காகத்தான். வீட்டுக்கு வரக்கூட இஷ்டமில்லாமல் நாளெல்லாம் வெளியிலே நீ சுற்றுவது அவளுக்கு மிகுந்த மன வேதனையைத் தருகிறது. நான் இங்கு இல்லையென்றால்கூட அவருக்குச் சற்று நிம்மதி போலிருக்கிறது என்று என்னிடம் கூறிவிட்டே இப்படியோர் ஏற்பாட்டைச் செய்திருக்கிறாள். உன்னால் தனக்கு எத்தனையோ மனக்கஷ்டங்களும் வேதனையும் விளைந்திருக்க, அதையெல்லாம் ஒரு சிறிதும் பொருட்படுத்தாமல், உனக்காக ஓர் அநாதையாய் வெளிக்கிளம்பி விட்டாள். இம்மாதிரி ஒரு மருமகளைப் பிரிந்து நான் எப்படி உயிர் வாழ்வேன்?”

அம்மாவின் கண்களிலே கண்ணீர். என் வாழ்நாளிலே நான் காணாத அபூர்வ நிகழ்ச்சி. விஜியின் உயர்வை, அம்மா கூறிய அந்தத் தொடரைவிட, ராஜுவின் விளக்கத்தை விட, என் சொந்த அனுபவத்தைவிட, இந்தக் கண்ணீரே வெளிப்படுத்திற்று.

“என்னை மன்னித்துவிடு அம்மா” என்றேன்.

“விஜியின் பொறுமையை எனக்கு ரசிக்கத் தோன்றவில்லை. அது என் பிடிவாதத்தை நகைப்பதாகவே தோன்றியது அம்மா. என் தேவையை அலட்சியப் படுத்துவதாகவே பட்டது. அதனால்தான் நீ புகழ்கிற அந்தப் பொறுமையைக் கண்டு நான் சினந்தேன். அஞ்சினேன்”.

“அஞ்ச வேண்டியதுதான். படு பள்ளத்தில் நிற்கிற உன்னைப் போன்றவர்கள் அந்த மலையைக் கண்டு அஞ்ச வேண்டியதுதான் கார்த்தி. பொறுமைக்கு இலக்கணமான பூமா தேவிக்கே விளக்கமடா அவள்!”

“விஜியின் பிரயாணத்தை நிறுத்திவிடு அம்மா” — வேண்டினேன்.

“அது முடியாது”.

“முடியாதா அம்மா?”

“ஒரு பெண்ணுக்குப் பொறுமை, இனிமை, உறுதி இம்மூன்றும்தான் பாதுகாப்பு. செயல்படத் துவங்கியிருக்கிற அவளது உறுதியைக் குலைத்து அந்தப் பாவத்தைக் கட்டிக் கொள்ள நான் தயாரில்லை. உன் பாவத்தை நினைத்து வருந்து. அவள் எப்போதாவது திரும்பி வரலாம்.”

அம்மா அவளை ரயிலில் ஏற்றி வழியனுப்புவதற்காக வாசலில் நின்ற டாக்ஸியை நோக்கி நடக்க, விஜி என்னை நோக்கி வந்தாள்.

நான் முதன் முறையாக அவள் கரங்களைத் தொட, அவள் மேனி சிலிர்த்தது. ”ஒரு பெண்ணின் வெற்றி அவளது கணவனின் தோல்வியாக இருக்கலாமா விஜி? என் பலத்தை நான் பெற வேண்டும். மன்னிக்கும் இடத்தில்தான் ஒரு மனைவியின் கடமை பூர்த்தியாகிறது.”

அவள் சலனமின்றிக் கூறினாள்.

“உங்கள் மகிழ்ச்சிக்கு என் துணை தேவை என்று நான் உணர்ந்தால் நிச்சயமாக அந்தக் கணமே உங்கள் பாதங்களைத் தேடிக்கொண்டு வந்துவிடுவேன். எனக்கு விடை தாருங்கள்”.

செயலின் விளைவை நான் எதிர்நோக்கி நின்றேன்.

வெளியே என் இன்பங்களை அள்ளிக் கொண்டு டாக்ஸி பறந்தது.

சிறு குறிப்பு:

கமலப்பித்தன் என்ற புனை பெயரில் எழுதிய நாகூர் எழுத்தாளர் எஸ்.எஸ்.அலீ. தூயவன், கமலப்பித்தன், ஹத்தீப் சாஹிப், ஜஃபருல்லா நானா போன்றவர்களெல்லால் ஒரே காலகட்டத்தில் எழுதிக் கொண்டிருந்தவர்கள்.

பூமி விளக்கம் ஆனந்த விகடனில் 1960’களில் பிரசுரமான முத்திரைக்கதை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *