கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: November 4, 2016
பார்வையிட்டோர்: 12,175 
 
 

பேருந்து விட்டு இறங்கியதுமே காதை வந்தடைந்த மேள சத்தம் நெஞ்சுக் கூட்டுக்குள் இடம் பெயர்ந்து துடிக்க ஆரம்பித்தது. பேருந்து தடத்தினை கடந்து, தண்ணீரும், தாமரையும் இல்லாது பெயரளவில் மட்டுமேயாக இருந்த தாமரை குளத்தைத் தாண்டி, அடுத்திருந்த தெருவில் நுழையும்போதே குறுகுறுத்தது உள்ளங்கால்கள். உள்ளே செல்லச் செல்ல என் கால்கள் நடக்கிறதா இல்லை நடனமாடுகிறதா என்பதை கவனமாகப் பல முறை சோதித்து பார்த்தும் சந்தேகம் தீரவில்லை. மேளத்தின் சத்தம் நிமிடந்தோறும் அதிகரித்துக் கொண்டே சென்று என்னைச் சட்டென்று கை கால்களைக் கட்டிக்கொண்டு உட்கார இடம் பார்க்கத் தூண்டியது.

புடவையின் கொசுவத்தை தூக்கி பிடிக்க ஒரு கையும், கால்களின் வேகத்தைக் கூட்ட ஒரு கையுமாக, வெங்கலத்தை நிச்சயித்துவிட்டு வெள்ளிக்கு முயற்சி செய்வதை போல போகும் அம்மாவைப் பார்த்தால், இந்தச் சத்தங்கள் எதுவும் பாதித்ததைப் போல் இல்லை, சாதாரணமாக நடப்பதை போலத் தான் இருந்தது.
கையில் மாலையோடு மக்கள் நடக்கும் வேகத்தில் வழி நெடுக உதிர்ந்த பூக்கள் நிற வேற்றுமையின்றி பாதை அமைத்தது.

“பராக்குப் பார்க்காம சீக்கிரம் வாடி…” திரும்பித் திரும்பிப் பார்த்து நான் வருவதை அம்மா உறுதி செய்துக் கொண்டார்கள்.

அந்தத் தெரு முழுக்கவே ஒரு விதத்தில் அம்மாவுக்குப் பங்காளிகள் தான். வீட்டிற்கு முன்னால் ஷாமியானா பந்தல் அடையாளம் காட்டியது. இன்னொரு பந்தலை சேர்த்து போட்டா நல்லா இருக்கும், யாரிடம் கேட்பது என்பதை போல் முழித்துக் கொண்டு அசௌகரியமாக அதற்குக் கீழ் பிளாஸ்டிக் நாற்காலிகளையும், மடக்கு நாற்காலிகளையும் போட்டு, வீட்டு வாசலிலும், எதிர் வீட்டு வாசலிலும் மக்கள் வெயிலுக்கு நெருக்கியடித்து அமர்ந்திருந்தார்கள். புதிதாக ஆட்கள் வர வர எழும் அழுகை சத்தமும், மார்பில் அறைந்துக்கொள்ளும் காட்சிகளும் யாரையும் கேட்கும் வாய்ப்பு இப்போதைக்கு அமையாது என்றது.

“உள்ளே வா…” கிசு கிசு வென்று வந்தது அம்மாவின் குரல்.

“ம்மா…விடும்மா கையை…” நானும் அம்மா பொண்ணு ஆகிவிட்டேன், என் குரலும் கிசு கிசுத்தது… “சொன்னா கேளும்மா ப்ளீஸ்…”

“ம்ப்ச்…சும்மா வம்பு பண்ணாம வா.”

“நான் இங்கயே நிக்கிறேன், நீங்க போங்க உள்ளே…”

“கல்யாணம் பண்ணி ரெண்டு புள்ள பெத்தாச்சி, இன்னும் சின்னப் புள்ளைன்னு நினைப்பா, இவ்வளவு தூரம் வந்திட்டு உள்ளே வந்து பார்த்து விசாரிக்காம போனா நல்லாவா இருக்கும்.

“ஐயோ போதும்மா காது வலிக்குது, சரி கையை விடுங்க வரேன்…நீங்க முதல்ல போங்க…”

உள்ளே நுழைந்தவுடன் அம்மாவின் உடல் மொழி மட்டுமல்ல அதுவரை அந்த அறையில் அமைதியாக அமர்ந்திருந்த அனைவரின் உடல்மொழிகளும் மாறிவிட்டது. நெஞ்சில் அடித்து அழுதுக் கொண்டு அம்மாவும் போக, அவர்களும் அப்படியே வர நடுவழியில் அனைவரும் ஒன்று சேர்ந்துக் கட்டிக்கொண்டு அழுதவர்கள் அப்படியே கும்பலாக அமர்ந்து ஒப்பாரி வைக்க ஆரம்பித்துவிட்டார்கள். கூட ஆட்கள் வந்து சேர சேர கும்பல் பல குழுக்களாகப் பிரிந்து பிரிந்து சேர்ந்து ஒப்பாரி முடித்துப் பின்பு தனித்தனியாகி அப்படியே ஓரமாக அமைதியாக அமர்ந்தது.

வாசல் அருகாலில் கைகளைக் கட்டி சாய்ந்து நின்று கொண்டிருந்த என்னால் அம்மாவின் பார்வையை உணர முடிந்தது. ஆனால் என் பார்வையை அவர்களை நோக்கித் திருப்பும் உத்தேசமேயில்லை. பொறுத்தது போதும் மனோகரியாக அம்மா எழுந்து வந்து, என்னை வெளியே தள்ளிக் கொண்டு வந்தார்கள்.

“என்னடி இப்படியே மரம் மாதிரி நிக்கிற ஒப்பாரி வைக்கத் தெரியலைனாலும் வந்து விசாரிக்கவாவது செய்யலாமில்ல…”

“என்னன்னுமா விசாரிக்கிறது வயசானவர், உடம்பு சரியில்லாம இருந்தார் அது தான் எனக்குத் தெரியுமே, அப்பறமென்ன அவங்க கிட்ட போய்க் கேட்கறது.”

“வந்த இடத்திலும் வியாக்கியானம் பேசிக்கிட்டு, இங்க நின்னு உனக்கு விளக்கவுரை சொல்ல முடியாது…நீ வாயையே திறக்க வேணாம், போய் அவங்க பக்கத்துல நில்லு மீதி தானா நடக்கும்…” அக்கம்பக்கம் பார்த்துக்கொண்டே அம்மாவின் பற்களின் இடுக்குகளிலிருந்து வெளியேறி விழுந்த வார்த்தைகள், பற்களின் கவலைக்கிடமான நிலையைச் சொன்னதில் பயந்து போய்…”ம்ம்ம்…சரி வாங்க…கூடவே நிக்கணும் சொல்லிட்டேன்…” தயக்கமாகச் சம்மதம் சொல்லிக் கூடவே நிபந்தனையும் சேர்த்தேன்.

அதற்குள் காபி விநியோகத்தை பரவலாக்கிக் கொண்டிருந்தவர்களிடமிருந்து கோப்பைகளை வாங்கி “குடிச்சிட்டு போகலாம்…” என்று என் கையிலும் திணித்தார்கள்.

“என்னம்மா இப்ப தான் எல்லாம் அடிச்சிக்கிட்டு அழுதீங்க அதுக்குள்ள காபி…”

“அழறதுக்கு தெம்பு வேண்டாமா…” முறைத்து பார்த்த என்னை…”நீ திரும்பவும் ஆரம்பிக்காத…” காபியை குடி என்று கண்கள் புருவம் விரல்கள் என்று அனைத்திலும் அம்மா அபிநயம் பிடித்ததில், முன்பே ஒப்பாரி வைத்திருந்தால், இது நிகழாமல் தடுத்திருக்கலாம் என்று தாமதமாக உணர்ந்தேன்.

பந்தலுக்கு வெளியே மேளத்தை நெருப்பில் அடிக்கடி காட்டி சூடேற்றி விட்டு டீஸர் மட்டுமே வெளியிட்டுக் கொண்டிருந்தார்கள். பக்கத்தில், பின்பக்கம் இறுக்கமாக கைகளைக் கட்டிக்கொண்டு, கலர் கலர் துண்டுகள் வானவில்லை காட்ட நின்றிருந்த வெள்ளை வேஷ்டி சட்டைக்காரர்களோடு அனல்பறக்கும் விவாதத்தில் இருந்தார் தாத்தாவின் மூத்த மகன்.

சம்பிரதாயப்படி கைப்பாடை தான் கட்டணும் என்று வீரமுழக்கம் செய்துக்கொண்டிருந்த பண்பாட்டுக் காவலர்…திடீரென்று முளைத்த அக்கா கணவனின் பண சொருகளில் கைப்பாடையை தூக்குபவர்களுக்குத்தான் தெரியும் அதோட கஷ்டம் என்று போதிமரத்தடிவாசியானார். அதோடு பூப்பல்லக்கில் ஸ்பீக்கரோடு சேர்த்து, டிஷ் ஆன்டெனாவையும் பொருத்தலாமா என்று போன் போட்டு பல்லக்கு செய்பவர்களிடம் தீவிர ஆலோசனையில் இறங்கினார்.

காபியை சாக்கிட்டு தாமதித்துக் கொண்டிருந்த என்னை…அம்மா, எண்ணற்ற ஜீவன்களுக்கு காபியை உணவாக்கிவிட்டு உள்ளே தள்ளிக் கொண்டு சென்றார்கள்.

இறந்தது அம்மாவோட அத்தையின் கணவர், எனக்குத் தாத்தா…பாட்டியைச் சுற்றி அமர்ந்திருந்த கூட்டம் அவர்கள் அருகில் செல்ல விடாமல் என்னை மிரட்டியது.

அடிக்கடி கழுத்தை தடவியபடி, புடவையைக் கையால் சுற்றியபடி, சிவந்திருந்த கண்களை இறுக்கமாக மூடி மூடித்திறந்துக்கொண்டு, ஒருவித அவஸ்தையும் மிரட்சியாக அமர்ந்திருந்தார்கள் திருமணமான பெண்கள்.

இன்னும் ஒரு கைப்பிடி செயினை பாட்டியின் கழுத்தில் போட்டுக் குங்கமத்தின் அளவை கூட்டலாமா என்று ஆலோசனையில் இருக்கும் கணவனை இழந்த பெண்களையும், தாத்தாவையும் மாறி மாறிப் பார்த்து எதற்கு அழுகிறோம் என்று தெரியாமலே பாட்டி அழுதுக் கொண்டிருந்தார்கள்.

அரைகுறையாக அள்ளி முடிந்திருந்த கொண்டையில் சொருகியிருந்த மல்லிகை, கோணல் மாணலாக இருந்தாலும் அழுத்தமாக இருந்த குங்குமம், திட்டுத்திட்டாக முகத்தில் இருந்த மஞ்சள் கரைகள், தங்க வளையல்களோடு புதிதாக நிறைந்திருந்த கண்ணாடி வளையல்கள், மேலே சோம்பலாகச் சுற்றிக் கொண்டிருந்த பட்டுப் புடவையுமாக இருந்த பாட்டியின் முகத்தைப் பார்த்து என் கண்கள் தானாகவே நிறைய ஆரம்பித்தது. குங்குமத்திற்கும், மஞ்சளுக்கும் மங்களகரம் என்று பெயர் சூட்டியவர்கள் எவ்வளவு கொடூரமானவர்களாக இருக்க வேண்டும்.

அசையாது நின்றிருந்த என்னைப் பாட்டியை நோக்கி அம்மா நெட்டித் தள்ளிவிட்டார்கள். கலங்கிய கண்களோடுப் பாட்டியின் மேல் விழுந்த என்னை பாட்டியோடு சேர்த்து பக்கத்தில் அமர்ந்திருந்தவர்களும் கட்டிக்கொண்டார்கள்…“நம்ம தாத்தா நம்மளையெல்லாம் விட்டுட்டு போயிட்டாரும்மா…” சற்றைக்கெல்லாம் சுழல் காற்றில் சிக்கிய கொடி போலானேன்… கும்பல், குழுக்களாகி பத்து நிமிடத்திற்கு பின் சுவற்றை ஒட்டி ஒரு ஓரத்தில் அமர்ந்திருந்தேன், அம்மா இருபது முப்பது பேர் தள்ளி அமர்ந்திருந்தார்கள்.

எழுந்து நைசாக அறையை விட்டு வெளியேறிப் பின் வாசலில் காலை வைத்தேன் காபி கப் ஒன்று கையில் வந்து அமர்ந்தது.

தோட்டத்து முற்றத்தில் அத்தை, பெரியம்மா, சித்தி, அண்ணி என்று அனைவரும் அமர்ந்து காபி குடித்தப் படி பேசிக் கொண்டிருந்தார்கள். என்னைப் பார்த்ததும் நலம் விசாரித்துவிட்டு அருகில் அமர்த்திக்கொண்டார்கள்.

“இங்க தான் இருக்கீங்களா எல்லாம்…” கேட்டுக்கொண்டே அம்மாவும் பின்னோடு வந்தார்கள். “ஆமாண்ணி வந்து உட்காருங்க சித்த நேரம், இனிமே ஆளுங்க அதிகமா வரமாட்டாங்க, வெளியே வெயிலு மண்டைய பொளக்குது…உட்கார இடமில்லாம கூட்டம்.”

“பெரிய சாவில்லையா…அதான் இவ்வளவு கூட்டம்…”

“ஆமா…பெரிய சாவு, பெரிய வீடு, ஆனா ஒரு பந்தலை பெருசா போடமாட்டானுங்க…உட்கார நிழலில்லாம ஜனம் அல்லாடுது…”அம்மாவின் கூற்றை இடைவெட்டினார்கள் அத்தை.

சாவு வீட்டில் எல்லாரையும் எதிர்கொள்வதில் இருக்கும் சங்கடம்போல் வேறு எங்குமில்லை…சொந்த பிரச்சனை, சோகம், பகை, கோபம் இப்படி அனைவரும் வெவ்வேறு மனநிலையில் இருப்பார்கள்.

அறிமுக குடும்பஸ்திகள் கையை எங்கே வைப்பது, முகத்தை எப்படி வைப்பது, எப்ப உட்காருவது, எப்ப நிற்பது, பார்வையை ஒரே சுவற்றில் வைக்கலாமா இல்லை மாற்றி மாற்றி வைக்கலாமா என்று பெரும் போராட்டத்தில் இருப்பார்கள்.

ஆரம்ப கட்ட அதிர்ச்சி விலகி அத்தை, மாமன் மகன்களின் அரவம் உணர்ந்து முக பாவங்களை நாசுக்காகச் சரிசெய்துக் கொண்டு அழுபவர்களின் முகத்தில் பரு இல்லையென்றாலும் சொல்லி விடலாம் பருவப் பெண்கள் என்று.

அனைவரையும் பார்த்து நான் கிளம்பறேன் என்று சைகை செய்தார்கள் பெரியம்மா…அதற்கு, சாவி கொடுத்ததை போல் தலையாட்டியவர்களை பார்த்துக் குழம்பிப் போனேன். நமக்கு அந்த அதிர்ஷ்டமில்லையா என்று அம்மாவைப் பார்த்தேன்… ம்ஹும்…இப்ப அவங்க முறை பார்க்கமாட்டாங்களே…”என்ன பெரியம்மா அதுக்குள்ள கிளம்பறீங்க இன்னும் எடுக்கவே இல்லையே…” ஆவலை அடக்கமுடியாமல் கேட்டேன்.

“இல்லமா விஷயம் கேள்விப்பட்டதும் போட்டது போட்டபடி வந்திட்டேன். அக்கா என்ன பண்றாளோ, அந்த உடம்போட பிள்ளைகளைத் தனியா வச்சிட்டு கஷ்டப்படுவா. இவங்க எடுப்பாங்கன்னு எதிர்பார்த்தா நேரம் வளத்திட்டே இருப்பாங்க, பெரியப்பா எடுக்கற வரை இருந்திட்டுதான் வருவாரு…நீ அடுத்த தடவை அம்மா வீட்டுக்கு வரும்போது சித்த பிள்ளைகளையும் கூட்டிட்டு வந்து கண்ணுல காமிச்சிட்டு போ, என்னால தான் எங்கயும் அசைய முடியலை…நான் இப்படியே பின்கட்டு வழியா போய் ரோட்டை பிடிச்சி பஸ் ஸ்டாண்டுக்கு போயிடுறேன்…முன் பக்கமா போனா பதில் சொல்லி மாளாது…” என்று புடவையைச் சரி செய்துக்கொண்டே விரைந்தார்கள்.

“என்னம்மா ஆச்சு விஜி அக்காவுக்கு…? நீங்க எதுவுமே சொல்லலை…”

“இப்ப தான், ஒரு வாரத்துக்கு முன்னாடி இடுப்பை வலிக்குது, அடிவயித்த வலிக்குது, விட்டு விட்டு ஜுரம் அடிக்கிதுன்னு சொன்னான்னு டாக்டர் கிட்ட போய்க் காட்டினாங்க …சிறு நீர் தொற்றுன்னு சொல்லி மாத்திரை குடுத்தாங்க… அது இன்னும் சரியாகலை…திரும்ப வலிக்கிற மாதிரி இருக்காம்…போய் அவளை ஒரு எட்டு பார்த்திட்டு வந்தா தேவலாம்…”

“அப்படியா அக்காவைப் பார்த்தே ரொம்ப நாள் ஆச்சு…போய்ப் பார்த்தா தேவலாம்…” ஆனால் போய்த்தான் ஆக வேண்டும் என்று யாராவது கழுத்தை பிடித்துத் தள்ளும் வரை பசங்க, ஸ்கூல், அலுவலகம், வீடு, கிடைக்கும் இடைவெளியில் அம்மா வீடு என்ற சுழற்சியை விட்டு நகரவே முடிவதில்லை, எத்தனை பெருமூச்சுகள் வெளியேறினாலும் வெற்றிடம் கிடைப்பதில்லை.

“இன்னும் எவ்வளவு நேரமாகும் சித்தி…”

“இன்னும் ஒரு மணிநேரத்துல எடுத்திடலாம்னு சொன்னாங்கடி… முக்கியமானவங்க எல்லாம் வந்தாச்சில்ல…இனிமே காத்திருக்க மாட்டாங்க.”

அடுத்தது யாரெல்லாம் கவலைக்கிடமாக இருக்கிறார்கள் என்று இறப்பு சான்றிதழ்கள் எழுத ஆரம்பித்தார்கள் சுற்றி இருந்தவர்கள்.

ஒரு மணி நேரம் ரெண்டரை மணிநேரமாகி சாவோடு நானும் அம்மாவும் சொல்லாம கொள்ளாம் கிளம்பி வீடடைவதற்குள் மணி நான்காகிவிட்டது.

வேகமாகக் குளித்துவிட்டு வந்து வாசலில் அமர்ந்தேன், அம்மாவும் அதற்குள் குளித்துவிட்டு காபியோடு வந்தார்கள்.

“ம்மா…மறுபடியும் காபியா…வாந்தி வருது மா…”

“அதுக்குத்தான் பாலா எடுத்திட்டு வந்தேன்…இதைக் குடி அதுக்குள்ள கீரை ஆய்ந்து கடைஞ்சிடறேன், சாப்பிட்டிடலாம்.”

“ம்ஹும்…சாப்பிடலாம் நேரமில்லம்மா…நான் பால் குடிச்சிட்டு கிளம்பறேன், அப்ப தான் ஏழுமணிக்குள் வீட்டுக்குப் போக முடியும்.”

“எதுக்கு இப்ப சுடத்தண்ணி ஊத்தன கணக்கா குதிக்கிற, ஒரு ரெண்டு நாள் தங்கிட்டு போகலாம்…” ஒரு கட்டு முருங்கை கீரையும் முறமுமாக என் எதிரில் இருந்த திண்ணையில் அமர்ந்தார்கள்.

புரையேற முயற்சித்த பாலை லாவகமாகத் தொண்டை குழிக்குள் இறக்கினேன். பழக்கம். இப்படித்தான் அம்மாவிடமிருந்து எந்த நேரத்தில், எந்தப் பக்கத்திலிருந்து ஜோக் வருமென்று சொல்ல முடியாது.

“என்னடி முறைக்கிற…மாப்பிள்ளைக்கிட்ட பசங்களை கூட்டிட்டு வரச் சொல்லு, ஒரு ரெண்டு நாள் லீவு போட்டா மூணு நாள் தங்கிட்டு போகலாம்.” அசால்டாகச் சொல்லிவிட்டு பழுப்பு இலைகளை லாவகமாக விளக்கிக் கீரையை வேக வேகமாக உருவிப் போட்டுக் கொண்டிருந்தார்கள்.

“ம்மா…உங்களுக்கு நல்லாவே தெரியும் இது நடக்காது, இப்படியெல்லாம் பசங்க லீவ் போட முடியாதுன்னு அப்பறம் எதுக்கு இப்படி சொல்றீங்க.”

“வீட்டுக்கு வந்த புள்ளைய தங்கிட்டு போன்னு தாண்டிச் சொல்லுவாங்க…உடனே கிளம்புன்னா சொல்லுவாங்க…”

“ஏம்மா இப்படி… உண்மை என்னான்னு உங்களுக்கும் தெரியும் எனக்கும் தெரியும்…சும்மா எதுக்கு இந்த ட்ராமா.”

“என்னடி ட்ராமா போடறாங்க…”

“இது ட்ராமா இல்லாம வேற என்ன, ஏற்கனவே தெரிஞ்ச ஒரு விஷயத்தை இப்பத்தான் புதுசா கேள்விப்படற மாதிரி கேட்கறது, சாவு வீட்டுக்குப் போய் எப்படி செத்தாங்கன்னு கேட்கறது, ஆக்சிடென்ட் ஆகிடுச்சுன்னா எப்படி நடந்ததுன்னு டெமோ கேட்கறது, குழந்தை பிறந்து, பேர் வச்சதுக்கூட தெரிஞ்சிருக்கும் ஆனா கல்யாணமாகிடுச்சான்னு தெரியாத மாதிரியே கேட்கறது, எதுக்கு இந்தத் தேவையில்லாத நாடகம், உண்மையா எதார்த்தமா இருந்தா என்ன…?”

“எதார்த்தமா இருக்கறதுன்னா… சாவுக்கு அடிச்சிக்கிட்டு கூட அழமா அமைதியா நிக்கிறது, உண்மையா இருக்கோம்னு எனக்கு ரெண்டு நாளைக்கு முன்னாடியே தெரியும் உங்களுக்கு உடம்பு சரியில்லைன்னு நேரம் கிடைக்கல வந்து பார்க்க அப்படின்னு எதிர்ல இருக்குறவங்களை அவங்க சோகத்தைச் சொல்ல விடாம பண்ணி வாயடைக்கிறதுதானே. இப்படியெல்லாம் இருந்தா மனுஷங்களுக்கு மன அழுத்தம் அதிகமாகி பைத்தியம் தான் பிடிக்கும். அதுக்கு வேஷங்கட்டினா ஒன்னும் தப்பில்லை. தெரிஞ்சவங்களா இருந்திட்டு பத்திரிக்கை வச்சிருக்க மாட்டாங்க அதனால அப்படி கேட்கறது தான் பார்க்கும்போது. அதெல்லாம் கேட்கற எங்களுக்கும் தெரியும் கேட்கப்படற அவங்களுக்கும் தெரியும் உண்மை என்ன எதார்த்தமென்னன்னு இருந்தும் இப்படி காலங்காலமா நடந்திட்டு தான் இருக்கு இந்த நாடகம். அப்படி தான் எல்லாரும் விசாரிப்பாங்க.”

“தெரிஞ்சிட்டே புதுசா கேட்கற மாதிரி கேட்கறாங்களேன்னு எரிச்சல் வராதாம்மா?”

“ம்ம்ம்… உன்னை மாதிரி சில பேருக்கு வரும்…போட்டிருக்கிற துணி அழகா இருக்கு, நல்லா பேசுறீங்க, தெளிவா சிந்திக்கிறீங்க, இந்த மாதிரி யாராவது பாராட்டா சொன்னா இதமாயிருக்கு இல்லையா அதுக்கு பேர் என்ன அவங்க பாவனையை நீ விரும்புறேன்னு தானே அர்த்தம்.”

“இருக்கலாம் ஆனா குறை சொல்லும்போதும் அதுக்காக நான் கவலைப்படறதில்லை. அது என்னை எந்த விதத்திலும் பாதிக்கிறதில்லை.” வேகமாக வந்து விழுந்தது வார்த்தைகள்.

“குழந்தைகள் கிட்ட மிரட்டற மாதிரி, சமாதான படுத்துற மாதிரி, அலுவலகத்தில் லேட்டாகிடுச்சு, வேலையை முடிக்கலை அதுக்கெல்லாம் ஏதாவது காரணம் சொல்லி நடிக்கிறதில்லையா. உனக்கு இதெல்லாம் டிராமா இல்லையா. எல்லா இடத்திலேயும் தான் நடக்குது அவங்கவங்களுக்கு ஏத்த மாதிரி, சமாதானம் சொல்லவோ, பாதுகாத்துக்கவோ, விசாரிக்கவோ இல்லை குறை சொல்லவோ…” அம்மா கீரையை தான் உருவுறாங்களா இல்லை என்னைஉருவுறாங்களான்னு தெரியலை…சட்டு சட்டுன்னு கீரையை இழுத்து முறித்து முறத்தில் போட்டுக்கொண்டிருந்தார்கள்.

“உடம்பு சரியில்லாதவங்களை ஹாஸ்பிடல்ல தான் போய்ப் பார்ப்பேன்னு பிடிவாதமா போய் டீ, போண்டா எல்லாம் சாப்பிட்டு வரது. இதுல விருந்துக்குப் போயிட்டு வந்த மாதிரி சரியா கவனிக்கலைன்னு குறை வேற…அதுக்கும் ஏதாவது காரணம் வச்சிருக்கீங்களாஎன்ன…?”

“இல்லையா பின்ன… ஹாஸ்பிடல்ல நோய்வாய் பட்டு இருக்கும்போது உடம்போட மனசும் பலகீனமா இருக்கும், நாலு மக்க மனுஷங்க போய்ப் பார்த்தா கொஞ்சம் தெம்பா இருக்கும். அவங்களை பார்க்க வரவங்களை கூட இருக்குறவங்க உபசரிக்கிறாங்க…நம்மைத் தேடி வரவங்களை உபசரிப்பது தமிழ் பண்பாடுடி…

“ஹாஸ்பிடல்லையாம்மா பண்பாடு…அவங்களே சோகமா இருப்பாங்க, எப்ப உடம்பு சரியாகுமோ, பில் எவ்வளவு தீட்டப்போறாங்களோன்னு அங்க போய் டீ, போண்டா செலவு வேற… சாவு வீட்டையே விட மாட்டேங்கறீங்க…அடுத்த நாளே வடை, அதிரசம்னு படையல் போட்டு விருந்து வச்சிடறீங்க…அது என்ன எல்லா சாவு வீட்லயும் செத்தவங்களுக்கு பிடிக்கும்னு அதிரசமே செய்யறீங்க…அதுவும் நேரம் இல்லைன்னு சக்கரை அதிரசம் தான்.”

“பால் தெளி, படையல், விருந்து, எண்ணெய் முழுக்கு, இப்படி இதெல்லாம் இல்லைன்னா துக்க வீட்டில துக்கத்துல இருந்து வெளியே வரவே முடியாது. எதைப்பத்தியும் யோசிக்கவே முடியாம அடுத்தடுத்து நடக்குற இந்த மாதிரிச் சம்பிரதாயங்கள் தான் துக்கத்தை தள்ளிப் போடுது. முப்பது கும்பிடற வரைக்கும் ஜனம் வந்திட்டு போயிட்டு தான் இருக்கும். அதுக்கப்புறம் யோசிக்கும்போது துக்கத்தைக் கூடத் தள்ளி நின்னு பார்க்க ஆரம்பிச்சிடுவோம்.”

“போம்மா…எல்லாத்துக்கு ஏதாவது ஒரு காரணம் சொல்லும்மா…நீங்க என்ன சொன்னாலும் தெரிஞ்சிக்கிட்டே தெரியாத மாதிரி கேட்கறதை என்னால ஏத்துக்க முடியாது…நான் கிளம்பறேன் நேரமாச்சி…” எழுந்திருக்க முயற்சி செய்த என்னைப் பிடித்து இழுத்து அமர வைத்தார்கள்…அம்மா பக்கத்தில் இருந்த கைபேசி வேறு கத்திக்கொண்டிருந்தது.

“இருடி, நீ ஒன்னும் ஏத்துக்க வேணாம்…ஒரு அஞ்சி நிமிஷம் பொறு இதைக் கடைஞ்சிடறேன் சாப்பிட்டிட்டு போகலாம்.”

“ம்ப்ச்…வேணாம்மா, பசிக்கிலை இப்ப…” நேரமாகுதென்று வாட்சை பார்த்த என்னைக் கவனிக்காமல் கைபேசியை கவனித்தார்கள்.

“ஒரு நிமிஷமிரு விஜி அக்கா போன் பண்றா…சொல்லு விஜயா, நல்லாயிருக்கியாமா, ஆமாம், அதெல்லாம் முடிஞ்சி நாங்க வீட்டுக்கு வரும்போது நாலாகிடுச்சி…நல்லவேளை அம்மா சீக்கிரம் கிளம்பினாங்க…இங்க தான் இருக்கா…இரு குடுக்கறேன்…இந்தா அக்கா பேசுணுங்கறா…” கையைத் தூக்கி வாட்சைக் காட்டி நான் சைகை செய்ததையும் கவனிக்காமல் போனை என் கையில் திணித்தார்கள்.

“சொல்லுக்கா…நல்லா இருக்கேன், எல்லாரும் நல்லா இருக்காங்க…நீ எப்படி இருக்க…? அப்படியா…என்னாச்சிக்கா…?”சொற்கள் வெளியேறியவுடனே நாக்கை கடித்துக் கொண்டேன்… என் பார்வை எதிரிலிருந்த அம்மாவின் மேல் படிந்தது…அம்மா முறத்தை புடைத்துக் கீரையிலிருந்த தூசி தும்பைகளை ஊதி தள்ளிவிட்டு, யம்மாடி இந்த ஒரு கட்டு கீரையை ஆய்ந்து முடிக்க இத்தனை நேரம் என்று அலுத்தபடி முறத்தை ஒரு கையிலும், கீரை உருவப்பட்ட குச்சிகளைச் சேர்த்து மறுகையிலுமாக அள்ளிக் கொண்டு வீட்டிற்குள் நுழைந்தார்கள். “டாக்டரை பார்த்தியா…என்ன சொன்னார்…?” தொடர்ந்தேன்…சாப்பாடு வரும் வரை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *