கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: April 28, 2013
பார்வையிட்டோர்: 12,053 
 
 

பரிணாம வளர்ச்சி என்ற சித்தாந்தம் தமிழனுடைய விஷயத்தில் பொய்த்துப் போயிருக்கிறது. எப்படி என்கிறீர்களா?.நம் இனம் மிகமிகத் தொண்மையானதுதானே?. ஆமாம். யார் இல்லேன்னா?. கல் தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த குடிகள் நாம். சரி அப்படியானால் பரிணாம வளர்ச்சி தத்துவத்தின்படி சிந்தனைகளில், அறிவு நுணுக்கங்களில், ஒரு கெட்டிக்காரத்தனத்தில், இன்று உலகத்திற்கே நாம்தான் வழிகாட்டுபவர்களாக இருந்திருக்க வேண்டும். இல்லையா?. ஆமாம். இருக்கிறோமா?. இல்லையே ஏன்? நம் அறிவு குன்றிப்போனது எவ்வாறு?.

இல்லையில்லை நாம் அறிவாளிகள்தான் நம்மில் எத்தனையோ மேதைகள், நாம் எழுதாத நூல்களா?,தொடாத சப்ஜெக்ட்களா?. பிரபஞ்சத்தைப் பற்றி நம் முன்னோர்கள் எவ்வளவு பாடியிருக்கிறார்கள்?. இறைவனோடு இயற்கையையும், அதன் ரகசியங்களையும் பாடியிருக்கிறார்களே. வின்வெளி, தத்துவம்,உளவியல், மருத்துவம், இரசாயணம்… இந்த உலகில் எதை நாம் ஆராயாமல் விட்டிருக்கிறோம்?

நோ..நோ..இதெல்லாம் நம்மைநாமே ஏமாற்றிக்கொள்ளும் சமாளிப்புகள். ஒருவிதமான தப்பித்துக் கொள்ளும் சாதுரியம், எஸ்கேப்பிஸம் ரைட் சகோதரர்கள், ஜேம்ஸ்குக், ஃப்ளமிங், எடிசன்,கெப்ளர்,ஐஸக்நியூட்டன், ஐன்ஸ்டீன்,…. இப்படி உலகளவில் புகழ்பெற்ற சித்தாந்தங்களைச் சொன்ன அறிவியல் மேதைகளை பட்டியலிடுங்கள். அவர்களில் ஒன்றிரண்டு பேராவது தமிழன் இருக்கின்றானா?என்று பார். புரியும்…இதுதான் நாம். நோபல் பரிசு பெற்றவர்கள் கூட நம்மில் மிக சொற்பமாய் இருக்கிறார்கள்தான்.. ஆனால் அவர்கள் கூட ஏற்கனவே இருக்கின்ற ஒரு சித்தாந்தத்திற்கு ஒரு கிளையைச் சொன்னதற்காக. சில விதிவிலக்குகள் இருக்கலாம். அதுவே நம்மை மதிப்பிடும் உரைகல்லாகாது. திரைப்படங்களில் உத்தமர்களாக வலம் வருபவர்கள் நிஜத்திலும் அப்படியே என்று நம்பி, ஏமாந்து, நம்மை ஆள்வதற்கு அவர்களை அங்கீகரித்து விடுகின்ற அளவுக்கு புத்திசாலிகள் நாம். அதுமட்டுமா?அவர்கள் தொட்டது,தொட்டுத் துலங்கியது, துலங்காதது, அத்தனையும் தேவர்களின் அம்சங்கள் என்று போற்றி, பாதாதிகேசங்களை வருடி, ஜெபித்து, நம் மடியிலிருந்ததையும் பறிகொடுத்துவிட்டு, புரியாமல் விதியை நொந்துக் கொண்டிருக்கும் அறிவுக் கொழுந்துகள் நாம். இந்த அறிவிலித்தனம் நம்மிடம் எப்படி வந்தது?. அன்றைக்கு நம் முன்னோர்களின் ஐக்யூ 120க்கு மேலிருந்தது என்றால், இன்றைக்கு 140ஐ தாண்டியிருக்க வேண்டுமே. என்னாச்சி?.அறிவின் பரிணாம வளர்ச்சி என்பது அறிவிலித்தனத்தை நோக்கித்தானா?. எத்தனை காலங்களுக்குத்தான் நாம்தான் உலகத்துக்கு பூஜ்ஜியத்தை அறிமுகப் படுத்தியவர்கள் என்று பீற்றிக் கொண்டிருப்பது?. அல்லது நடிகர்களின் கட் அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்து ஜென்மசாபல்யம் அடைந்துக் கொண்டேயிருப்பது?.

சென்னையில் விமானம் ஏறியதிலிருந்து, சிங்கப்பூர் சங்கி ஏர்போர்ட்டில் கால் பதிக்கும் இந்த நிமிஷம் வரையிலும் இதே சிந்தனையின் சஞ்சாரந்தான் எனக்கு. பயணங்களின் போது கண்களை மூடியபடி இப்படி எதையாவது அசை போட்டுக் கொண்டிருப்பது எனக்குப் பிடித்தமான பொழுது போக்கு. இந்த இடத்தில் என்னைப் பற்றி கொஞ்சம் சொல்லவேண்டும். நான் ஒரு சொற்பொழிவாளன். இங்கே இராமயாணத்தில் கிஷ்கிந்தா காண்டத்தை மட்டும் எடுத்துக் கொண்டு பேச வந்திருக்கின்றேன். சற்றேரக் குறைய இராமனை நிறை குறைகள் கொண்ட மனிதனாய் தோலுரித்துக் காட்டும் காண்டம்.

சென்னையில் ஏறும்போதே கவனித்தேன். பயணிகளில் ஒரு சில வெள்ளைக்கார முகங்களையும்,சில வெளுத்த கண்கள் உப்பிய சீன முகங்களையும் தவிர்த்து, மற்றதெல்லாம் கறுத்துப் போன நம் முகங்களே. எல்லாம் அண்ணாச்சிகள் மயம். திரைகடலோடியும் வயிற்றைக் கழுவு. நான் பார்த்தவரையில் சிறுசிறு சிப்பங்களில்(மூட்டைகளில்) அரிசி,பருப்பும், அட்டைப் பெட்டிகளில் உப்பு மிளகாய், புளி, மசாலா வகையறாக்களும், தினசரிகளால் மூடி சுருட்டப்பட்ட சுருணைகளில் படுக்கும் பாய்களையும், தன் காலடியில் வைத்துக் கொண்டு விமானத்தில் பயணம் செய்யும் பரிதாபமான பயணிகள் நம் தமிழனாகத்தான் இருக்கும்.பார்த்த அந்த நொடியே மனசு கனத்து விடுகிறது.

சிங்கப்பூரில் நண்பர் வீட்டில் இரவு தங்கினேன். நாளை மறுதினந்தான் என் நிகழ்ச்சி இருக்கிறது. நண்பர் இங்கே சாலை பராமரிப்பு அலுவலகத்தில் உயர் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இருபது வருடங்களுக்கு முன் கடலூரிலிருந்து இங்கு வந்து குடியேறிய சிங்கப்பூரியன். இரவு முழுதும் விஸ்தாரமாய் பல விஷயங்களையும் பேசிக் கொண்டிருந்தோம். லட்சம் ரூபாய் வரைக்கும் கமிஷன் கொடுத்து விட்டு, இங்கே வேலைக்கு வந்து, சில மாதங்களிலேயே வேலையில்லை என துரத்தும் அவலங்களையெல்லாம் அவர் சொல்லச் சொல்ல, நெஞ்சினில் பந்தாய் அடைத்தது.

“ நண்பரே! நம் முன்னோர்களை நெனைச்சா ஆத்திரந்தான் வருகிறது.. தன் சுகம் ஒன்றே குறியாய் வசவசன்னு பெற்றுத் தள்ளிவிட்டு, காப்பாற்ற வழி தெரியாமல், பழம் பெருமைகளை பேசிப்பேசி…கனவுகளில் சுகங்கண்டு வாழ்ந்து முடித்து, போய் சேர்ந்து விட்ட அறிவிலிகள். திட்டமிடாத வாழ்க்கை. அப்படி பிண்டங்களாக வந்து விழுந்தவைகள்தாம் இன்றைக்கு ஒரு சாண் வயிற்றுக்காக ஆலாய் பறந்து,நாலா திசைகளிலும் ஓடி ஓடி துக்கப்பட்டு, அவமானப்பட்டு, வயிற்றை நிரப்பிக் கொள்ளும் அவலங்களாக திரிகின்றன.”—நான் பொரிந்து தள்ளிக் கொண்டிருக்க, நண்பர் என்ன சொல்வதென்று தெரியாமல் என்னையே பார்த்துக் கொண்டிருந்தார்.

மறுநாள் ஞாயிற்றுக்கிழமை. பகல் முழுக்க சண்டோசாவில் தண்ணீர் உலகம்,ஜூராங் பறவைகள் பூங்கா என்று சுற்றிவிட்டு வீட்டிற்குத் திரும்பினேன். நண்பர் எனக்காக காத்திருந்தார்.

”கிளம்புங்கள் சிராங்கூன் சாலை வரைக்கும் போய் வருவோம். இங்கே வேலை செய்யும் பெரும்பாலான தமிழர்களை ஞாயிற்றுக்கிழமை அன்று ஒருநாள் மட்டும் அங்கே பார்க்கலாம்.சுவாரஸ்யமாக இருக்கும்.”

நாங்கள் சிராங்கூன் சாலையை சென்றடைந்த போது, திகைத்து நின்று விட்டேன். நாம் சிங்கப்பூரில்தான் நிற்கிறோமா?, அல்லது நெரிசலான தி. நகரிலா?.. இதற்கு முன்புகூட ஓரிரு தடவைகள் இந்த இடத்தை கிராஸ் செய்திருக்கிறேன்.. நான் பார்த்தவரையில் சிங்கப்பூரின் மற்ற இடங்களைப் போல இங்கும் ஒரு ஒழுங்கு, கட்டுப்பாடு, தூய்மை தெரியும். குப்பைகளை கண்ட இடங்களில் போட முடியாது, சாலை விதிகள் கடுமையாக கடைபிடிக்க வேண்டும், இத்தியாதி. ஆனால் இப்போது…?.எங்கு பார்த்தாலும் மனிதத் தலைகள். அப்பப்பா…முழுக்க முழுக்க தமிழ் முகங்கள். கடுமையான் சாலை விதிகள் சுலபமாய் மீறப்பட்டுக் கொண்டிருந்தன. வானளாவிய கட்டடங்களுக்கு முன் புறங்களில் பச்சைப் பசேலென்று விரிந்துக் கிடக்கும் புல் தரைகளையெல்லாம் நம்ம ஆட்கள் ஆக்கிரமித்துக் கொண்டு துவம்சம் பண்ணிக் கொண்டிருந்தார்கள். எங்கும் யோவ் மாமோய்!,மச்சான், டேய் மாப்ள! அண்ணாச்சீ! என்ற கூக்குரல்கள்தாம். ஒருவரையொருவர் தழுவிக் கொண்டு, எங்கும் சிரிப்பும் கும்மாளமும்தான். சுற்றிலும் சுருள் சுருளாய் புகை மண்டலங்கள். பொது இடங்களில் புகை பிடிப்பதை சட்டம் இங்கே தடை செய்திருக்கிறது. இருப்பினும் ஞாயிற்றுக் கிழமை அன்று ஒருநாள் மட்டும் எந்த சட்டங்களும் அங்கே செல்லுபடியாவதில்லையாம். ஊடே நடந்தோம். அங்கங்கே சிறு சிறு குழுவாய் கூடி தங்களுக்குள் சீட்டு நடத்திக் கொண்டிருந்தார்கள். சீட்டுகள் ஏலம் போய்க்கொண்டிருக்கின்றன. பார்த்துக் கொண்டே
நடந்தோம். சிலர் என்னுடன் வந்த நண்பரை அடையாளம் கண்டு வணக்கம் சொன்னார்கள். ஒரு சிலர் வெட்டவெளியில் தனியாய் உட்கார்ந்துக் கொண்டு அவரவர் வீடுகளுக்கு கடிதம் எழுதிக் கொண்டிருந்தார்கள். கொஞ்சம் பேர் ஒரு ஓரமாக உட்கார்ந்துக் கொண்டு கிழே வெறித்துக் கொண்டிருந்தார்கள். நண்பர் அவர்களைக் காட்டி

“இவர்கள் புது முகங்கள். வந்து ஓரிரு மாதங்கள் ஆகியிருக்கும். வீட்டு ஞாபகம் வந்துவிட்டது. போய் பேச்சு கொடுத்தீர்களானால் போச்சு, குபுக்கென்று அழுகை வெடித்துவிடும்..”—என்றார்.

ஒரு இடத்தில் அடர்த்தியான கும்பல் தெரிய அருகில் சென்றோம். ஒரு வாலிபன் தேம்பித் தேம்பி அழுதுக் கொண்டிருக்க, சுற்றிலுமிருந்தவர்கள் அவனை தேற்றி கொண்டிருந்தார்கள்.

“அட அழாதப்பா! அப்பிடித்தானிருக்கும், சமாளி. சீனாக்காரனுங்க கும்பல் ஜாஸ்தி. ஃபிலிம் காட்டுவானுங்க. பயப்படாத..”

“இல்லீங்கண்ணே! நான் பி.ஈ. படிச்சவன். சூப்பிரவைசர் வேலை. எனுக்குக் கீழ ஒர்க் இன்ஸ்பெக்டர்கள் நாலு பேரு வேலை செய்யறானுங்க,.நாலும் சீனாக்காரங்ங்கதான். அவங்க செய்ய வேண்டிய வேலையைக் கூட என்னை செய்யிடான்றானுங்க. கேட்டா இங்க அப்பிடித்தான்னு சொல்லிட்டு சிரிக்கிறானுங்க. சீஃப் என்ஜினியர் கிட்ட புகார் சொன்னால், சரி கவனிக்கிறேன்னு சொல்லிட்டு அவனுங்களைப் பார்த்து கண்ணடிக்கிறார்.”

“அவனும் சீனாக்காரனா?.”

“ஆமாம். நேத்திக்கி பாருங்க, ரெண்டாவது தளத்தில மார்பிள் பதிக்கிறதை கவனிச்சிக்கிட்டிருக்கேன், மேல ஆறாவது தளத்திலயிருந்து ஒரு மார்பிள் பீஸ் என் பக்கத்தில விழறமாதிரி போட்டானுங்க. விழுந்த சத்தத்தில உயிரே போயிடுச்சி எனக்கு. நிமிர்ந்து பார்த்தா அங்கிருந்து அசிங்கமான சைகைக் காட்டி சிரிக்கிறானுங்க. அவமானமா இருக்கு. எனக்கு வாணாம். என்னை ஊருக்கு அனுப்பிடுங்க. அவன் மூக்கை சிந்தினான். பக்கத்திலிருந்தவன் அவன் தோளைத் தட்டினான்.

“டேய்! என் விரலைப் பாருடா..”—–வலது கையில் ஆட்காட்டி விரல் கால் பாகந்தான் இருந்தது.

“உன்னைமாதிரிதான் வந்த புதுசுல எங்கிட்டயும் தகராறு பண்ணானுங்க. பஞ்சிங் மிஷினாண்ட இருந்தப்ப பவரை ஆன் பண்ணிட்டானுங்க, ஒரு செகண்ட்ல விரலு போச்சி. பத்துநாள் ட்ரீட்மெண்ட் எடுத்துக்கிட்டு வேலைக்கு வந்தேன். வந்தவுடன் மேலதிகாரிங்க கிட்ட கம்ப்ளயிண்ட் பண்ணேன். ஒரு அதிகாரியும் கண்டுக்கல. ஆனா அடுத்த நாளு ஏண்டா கம்ப்ளயிண்ட் பண்ணே?ன்னு நாலு சீனாக்காரனுங்க வழியில என்னை மடக்கி அடிக்க வந்தானுங்க. இந்த மாதிரி டைம்லதான் தைரியத்த வுட்ரக்கூடாது,எதிர்த்து நிக்கணும்.எதுக்கும் அசரக் கூடாது.

“டாய்! தோ பாருங்கடா எம்மேல கையை வெச்சீங்க வீட்டுக்கு ஒழுங்கா போய் சேரமாட்டீங்க. இப்ப ஒரு சவுண்டு குடுத்தேன்னா, எங்காளுங்க ஓடிவந்துடுவாங்க. எல்லாத்துக்கும் துணிஞ்சிதான் இவ்வளவு தூரம் வந்திருக்கோம்..”—சொல்லிவிட்டு தயாராய் நின்னேன். அவனுங்க இதை எதிர்பாக்கல. ஒரு நிமிஷம் என்னா பண்றதுன்னு குழம்பி நின்னானுங்க.உடனே நான்

“வாணாம்..சண்டை போட்றதுக்காக நாங்க இம்மாம் தூரம் வரல. நீங்கள்லாம் எனுக்கு சொந்தக்காரன் மாதிரி ஃப்ரண்டா இருப்பீங்கன்னு நம்பித்தான் வந்திருக்கோம். நீங்களும் அப்பிடியே நெனைச்சா சந்தோஷம், இல்லை எதிரிதான்னு நெனைச்சீங்கன்னா அதுக்கும் நாங்க தயார்.”—அப்படீன்னு சொல்லிட்டு நின்னேன். எல்லாம் ஒரு உதார்தான். ஒரு நிமிஷம் என்ன பண்றதுன்னு புரியாம முழிச்சிக்கிட்டு நின்னானுங்க. அப்புறம் பாரேன் வந்தவனுங்க எல்லாரும் சிரிச்சிக்கிட்டே வந்து என் கையைப் புடிச்சிக்கிட்டானுங்க. இன்னைக்கு அவங்கள்லாம்தான் என் ஃப்ரண்டுங்க. நானு போயி அவங்க வீட்ல விதவிதமான நூடுல்ஸ் சாப்பிடுவேன். அவனுங்க என் ரூமுக்கு வந்து சாம்பார் சாதத்தை விரும்பி சாப்பிட்டுவிட்டுப் போவானுங்க. வாடா போடா, தடியா, இப்படித்தான் பேசிக்குவோம். ரொம்ப குழப்பிக்காத தம்பீ. காலேஜ்ல ரேக்கிங் நடக்கல?, அது மாதிரிதான் இதுவும். ரொம்ப தொந்தரவு குடுத்தா அப்ப சொல்லு. நாங்கள்லாம் எதுக்கு இருக்கோம்?. வந்து கச்சேரி வெச்சிட்றோம். ஆனா நீயே தான் இத்த சமாளிக்கணும். எடுத்து வுட்ற பூனை எலி புடிக்காது.அதுவா புடிக்கணும். புரியுதா?. எதுக்கும் அசராத.”

அவன் சிகரெட்டை எடுத்து பற்ற வைத்துக் கொண்டான். நான் நண்பரை பார்க்க, அவர் அர்த்தத்துடன் தலையாட்டினார். இருவரும் நடந்துபோய் மரத்தடியிலிருந்த சிமெண்ட் பெஞ்சில் உட்கார்ந்தோம்..

“நண்பரே! பார்த்தீங்களா?. இதோ அழுதுக் கொண்டிருக்கும் இளைஞனும் ஒரு நாளைக்கு என்னைப் போல் வருவான். நானும் இப்படிப் பட்ட இழிவுகளுக்காக பல இரவுகள் அழுதிருக்கிறேன். சோர்ந்து போகும்போது எல்லோரும் ஓடி வந்து எப்படி தாங்கிக் கொண்டார்கள் பார்த்தீர்களா?. இதுதான் நாம்.இந்த பாசந்தான் நம் பலம். ஒரு சாண் வயிற்றுக்காக உலகமெல்லாம் ஓடி திரியும் தமிழினம் என்றீர்களே, அது சரியான பார்வைதானா?.உலகைச் சுற்றி வந்த ஒருத்தர் சொன்னார். உலகின் எந்த மூலைக்குச் சென்றாலும், ஒவ்வொரு நூறு கிலோமீட்டர் தூரத்திற்குள் நிச்சயமாக ஒரு தமிழ் குடும்பம் வாழ்கிறதாம். அதை நீங்கள் வறுமையின் அடையாளம் என்கிறீர்கள். தப்பு நண்பரே1 அது உங்கள் பார்வையின் கோளாறு. தமிழன் எந்த சவாலையும் சமாளிப்பான், தோற்று ஓடிப்போகமாட்டான்., எதிர் கொள்வான், போராடுவான், வெற்றி பெறுவான், என்பதைத்தானே நமக்கு உணர்த்துகிறது?. சண்டையிட்டுத்தான் ஜெயிக்க வேண்டும் என்பதில்லை. அதற்கு வாழ்க்கை ஒண்ணும் போர்க்களமுமில்லை. வாழ்க்கையில் பணிந்துபோய் ஜெயிப்பவர்களே அதிகம்.
ஒரு நியூட்டனும், ஐன்ஸ்டீனும், கெப்ளரும், எடிசனும், இங்கே தோன்றாமல் போனது துரதிர்ஷ்டமே. ஆயினும் ராமானுஜத்தின் பல கணக்குகளுக்கு இன்றைக்கும் விடை தெரியாமல் உலகமே மூளையை கசக்கிக் கொண்டிருக்கிறது. அங்கே அவர்கள் ராமானுஜத்திற்கு விழா எடுக்கிறார்கள். அமெரிக்காவிலும், ஜெர்மனியிலும், இங்கிலாந்திலும் எவ்வளவு தமிழர்கள் தத்தம் மூளை பலத்தில் கோலோச்சுகிறார்கள் என்பதை நீங்கள் அறியவில்லை.வதவதவென்று பெற்றுப் போட்டுவிட்டு போன நம் முன்னோர்களை வசைபாடுவதை விட்டுவிட்டு, அவர்களை நன்றியுடன் நினையுங்கள். அவர்கள்தாம் இந்த அறிவையும், பண்பையும் நமக்களித்த கொடையாளிகள்.”——–அவர் கண்கள் மின்ன பேசிக் கொண்டிருக்க, எனக்கு இந்த புதிய பார்வை பிடிபட்டதில் வெட்கப்பட்டேன்.

– நார்வே நாட்டிலிருந்து வெளிவரும்` சர்வதேச தமிழர்’ இதழில் 1999 ம் வருஷம்பிரசுரமான சிறுகதை
.

.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *