கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை  
கதைப்பதிவு: February 2, 2023
பார்வையிட்டோர்: 10,072 
 
 

(2003 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

யாருளர் களைகண் அம்மா
அரங்கமா நகருளானே!

– திருமலை

அமெரிக்கா சென்றிருந்தபோது 1999இல் பெர்க்லி பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கையைத் துவக்கிவைத்துப் பேசச் சொன்னார்கள். ஜார்ஜ் ஹார்ட் போன்ற அறிஞர்களும் பல அமெரிக்கத் தமிழர்களும் தமிழ் மாணவர்களும் வந்திருந்தனர். தேநீர் இடைவெளியின்போது ஒருவர் என்னையே பார்த்துக்கொண்டிருந்தார். என் வயசுதான் இருக்கும். ‘இவரை எங்கேயோ பார்த்திருக்கிறேளே…’ என்று என் அத்தனை நியுரான்களிலும் தேடினேன்.

அவரே அருகில் வந்து, “ரிமெம்பர் மீ? ஐ’ம் பாப்ஜி!”

“மைகாட்! பாப்ஜி… டேய் இங்கே என்ன செய்கிறாய்?” முன் மயிரை இழந்திருந்ததால் சட்டென்று கண்டுபிடிக்க முடியவில்லை. மனசுக்குள் அடர்ந்த முடியை வைத்துப் பார்த்த அடுத்த கணமே. அடையாளம் தெரிந்துவிட்டது. ஐந்தாவதிலிருந்து பி.எஸ்ஸி. வரை என் கிளாஸ்மேட்.

“நான் அமெரிக்கா வந்து பதினைந்து வருஷமாகிறது. பெர்க்லியில் இப்போது ஆராய்ச்சி பண்ணிக்கொண்டிருக்கிறேன்.”

“இஸ் இட்? கிரேட்.”

“நீ பெரிய எழுத்தாளனாகிவிட்டாயாமே… என் கதையை எழுதினாயா?”

“இல்லை. இன்னும் இல்லை!” என்றேன்.

“நீ மட்டும் அன்றைக்கு என்கூட எஸ்.ஆர்.பி. காலில் விழ வரவில்லையென்றால்… இந்த உலகம் ஒரு நியுரோபார்மாகாலஜிஸ்டை இழந்திருக்கும். எங்கேயாவது ஏ.ஜி. ஆபீஸில் கிளார்க்காக இருந்திருப்பேன்!” என்று என்னைக் கட்டிஅணைக்காத குறையாகத் தோள்மேல் கைபோட்டு கிளாஸை உயர்த்தினான். அவன் அமெரிக்க மனைவி, அவனைவிடப் பெரியவள் போல இருந்தான். “ஜேன், ரிமெம்பர்? ‘என்னைக் காப்பாற்றியவன்’ என்று சொல்வேனே ரங்கி!

“ராங்கி! ஓ… யா! எப்படி மறக்க முடியும்? பூ இதுவரை என்னிடம் அதை நூறு தடவை சொல்லிவிட்டாயே!” என்று சொல்லி நகர்ந்தாள்.

கூட்டத்திலிருந்து விலகி மொட்டை மாடியில் இரண்டு சேரை இழுத்துப் போட்டு உட்கார்ந்தோம்.

“ரங்கி!” என்னைக் கட்டித் தழுவிக்கொண்டு முதுகில் தட்டிக் கொடுத்தான்.

“லால்குடி பாசஞ்சர் – ஆபீஸர்ஸ் ட்ரெய்ன். எஸ்.ஆர்.பி. திஸ். இஸ் அன்பிலீவபிள். நானும் நீயும் பெர்க்லியில். நீ எழுத்தாளனாக; நான் ஆராய்ச்சியாளனாக!”

ஆபீஸர்ஸ் ட்ரெய்ன்!

திருச்சி ஜங்ஷனுக்கு லால்குடியிலிருந்து புறப்பட்டு ஸ்ரீரங்கத்துக்குச் சரியாகக் காலை ஒன்பது எட்டுக்கு வரும் லால்குடி பாசஞ்சரை. நாங்கள் ‘ஆபீஸர்ஸ் ட்ரெய்ன்’ என்போம், முனிசிபாலிட்டியில் ஒன்பது மணிக்குச் சங்கு பிடிப்பார்கள். கீழச்சித்திரை வீதியிலிருந்து அப்போது புறப்பட்டால்கூட ஆராமாக ஸ்டேஷன் போய்ச் சேர்ந்து விடலாம். என்னுடன் பாப்ஜியும் வருவான். இருவரும் சின்ன வயசிலிருந்து ஒரே கிளாஸ். ஒரே வயது. பூவராகவன் என்ற நிஜப் பெயர் சொல்லி யாரும் அழைப்பதில்லை. எல்வாருக்கும் பாப்ஜிதான். நன்றாகப் படிப்பான். பாடுவான். நன்றாக கிரிக்கெட் ஆடுவான்.

அப்பொதெல்லாம் தமிழ்நாட்டிலேயே கிண்டி, அண்ணாமலை, காரைக்குடி என்று மூன்று இன்ஜினீயரிங் கல்லூரிகள்தாம். ஃபார்வர்டு கிளாஸ் என்பதால் இன்ஜினீயரிங் ஸீட் கிடைக்காதவர்கள் பி.எஸ்ஸி பிஸிக்ஸ் சேர்ந்தோம். கிளாஸில் பக்கத்தில் பக்கத்தில் உட்கார்வோம். ரொம்ப மடிசஞ்சி இல்லை. அவ்வப்போது சிகரெட் குடிக்கத் தயங்கமாட்டான், உற்சாகமாகப் பேசுவாள். யாரையும் கிண்டல் பண்ணமாட்டான். எதையும் அலசிப்பார்த்து அறிந்துகொள்வான். பாப்ஜியும் நானும் ரயிலில் உட்கார ஸீட் இருந்தாலும் சுதவைத் திறந்து வைத்து, காலைத் தொங்கப்போட்டுக்கொண்டு வழி நடையில் பயணம் செய்வதுதான் பெரிய சாதனையாகக் கருதுவோம். டவுன் ஸ்டேஷன் போவதற்கு முன் காலடியில் காவிரி ஓடும். இப்போதுபோல் பெண்களை சைட் அடிப்பதெல்லாம் கிடையாது. காரணம், பெண்களே கிடையாது, ஸ்ரீரங்கத்திலிருந்து ஹோலிகிராஸ் கல்லூரிக்கு அனுப்பமாட்டார்கள். போனால், ‘சிஸ்டராக்கி விடுவார்கள்’ என்கிற அபத்தமான பயம், இந்திராகாந்தி, எஸ். ஆர். சி. கல்லூரியெல்லாம் அப்போது இல்லை. அதனால் பெண்களில் மேற்கொண்டு படிக்க வெகு சிலரே சென்னைக்கு அனுப்பப்பட்டனர். ஸ்ரீரங்கம் கேர்ள்ஸ் ஹைஸ்கூலில் எஸ், எஸ்.எல்.சி. படித்தபின் வீட்டில் இருந்துகொண்டு கல்யாணத்துக்குக் காத்திருப்பார்கள். தையல் கிளாஸ், இந்தி கிளாஸ், தவறாமல் பாட்டு கிளாஸ். சித்திரை வீதியெங்கும் பாட்டுக்கார நாணா வாத்தியார், அவரது புத்ர – புத்ரிகள் மேற்பார்வையில் ‘லம்போதர’வை ஆர்மோனிய சுருதியுடன் அபஸ்வரத்தை இறைப்பார்கள். சில பெண்கள் வயலின் கற்றுக்கொள்வது பூனை பிரசவிப்பதுபோல் கேட்கும். பணக்கார வீட்டுப் பெண்கள் பரத நாட்டியம் கற்றுக்கொண்டு ஹைஸ்கூலிலோ ரங்கராஜா கொட்டகை யிலோ, தேவர் ஹாலிலோ அரங்கேறுவார்கள். மற்ற பெண்கள் ஏரோப்ளேன், பாண்டி ஆடுவார்கள். புளியங்கொட்டை, கிளித்தட்டு ஆடுவார்கள். நவராத்திரிக்கு அலங்காரம் பண்ணிக்கொள்வார்கள். ஒருத்தருக்கொருத்தர் மருதாணி இட்டுக்கொண்டு. ‘உனக்குப் பத்திருக்கா… எனக்குப் பத்திருக்கா’ என்று சர்ச்சை பண்ணுவார்கள். போர்! இவ்வாறு தினம் தினம் கல்லூரிக்கு பி.எஸ்ஸி – பிஸிக்ஸ் பாடம் படிக்க ஜாலியாகச் சென்றுகொண்டிருந்த பரவசமான நாட்களில், பாப்ஜியின் வாழ்க்கையில் ஒரு பெரும்புயல் அடித்தது. முதல் வருடம் படிக்கையில் எஸ்.ஆர்.பி. என்னும் எஸ்.ஆர்.பரமேச்வரன் ‘ப்ராப்பர்ட்டிஸ் ஆஃப் மேட்டர்’ எடுப்பார். மொத்தம் நாற்பத்தைந்து நிமிஷ வகுப்பு. முப்பது நிமிஷம் சொல்லித் தருவார். பதினைந்து நிமிஷம் நோட்ஸ் கொடுப்பார். அதை நாங்கள் எழுதிக் கொள்ள வேண்டும்.

ஒருமுறை பாப்ஜி நோட்டுப் புத்தகம் எடுத்துவரவில்லையோ, பேனா பென்சில் இல்லையோ.. உடம்பு சரியில்லையோ – ஏதோ ஒரு நியாயமான காரணத்துக்காக, நாங்கள் எல்லாம் எழுதிக் கொண்டிருக்க… இவன் மட்டும் சுன்னத்தில் கை வைத்துப் பக்கத்தில் எழுதிக் கொண்டிருந்த என்னைப் பார்த்துக் கொண்டிருந்தான். ஜோசப் காலேஜின் பி.எஸ்ஸி வகுப்பறைகள் காலரியாக இருக்கும். நவராத்திரி கொலு மாதிரி உட்கார்ந்திருப்போம். மாணவர்கள் எல்லாரும் விரிவுரையாளர் கண்ணுக்குத் தெரிவார்கள். முன் பெஞ்சின் பின் பம்ம முடியாது.

எழுதாத பாப்ஜியை, எஸ்.ஆர்.பி. நோட்ஸ் கொடுப்பதை நிறுத்திவிட்டுப் பார்த்தார்: “எனி ப்ராப்ளம்?”

அவருக்குச் சற்று மாறுகண். மாணவனைப் பார்க்கிறாரா, கடிகாரத்தைப் பார்க்கிறாரா என்பது சிலவேளை குழம்பும். பாப்ஜி என்னைத்தான் கேட்கிறார் என்று எண்ணி, என் முகத்தைப் பார்த்தான்.

“யூ வித் தி ப்ளூ ஷர்ட்! யு…” என்றார். “வாட்ஸ் ஹிஸ் நேம் மானிட்டர்?”

பாப்ஜிதான் நீலச்சட்டை.

“ஆர்.பூவராகவன் ஸார்…”

“எழுந்திரு!” என்றார். எழுத்தான்.

“உடம்பு சரியில்லையா?”

பாப்ஜி தலையாட்டினான். நன்றாகப் படிப்பானே தவிர, இங்கிலீஷ் வராது. நாக்குப் புரளவில்லை.

“பின் ஏன் நோட்ஸ் எடுத்துக் கொள்ளவில்லை? உனக்கு எல்லாம் தெரியும் என்றால் கிளாஸுக்கு எதற்கு வருகிறாய்? என்னால் அறியாமையை மன்னிக்க முடியும். அலட்சியத்தை மன்னிக்க முடியாது!” என்று இங்கிலீஷில் பினந்துகட்டி நல்லபாம்பு போல மூச்சுவிட்டு பாப்ஜியை வெனியே அனுப்பினார்.

தாங்கள் ஒருத்தன்கூட எழுந்து, ‘சார், அப்படிப்பட்டவன் இல்லை!’ என்று ஒரு வார்த்தை சொல்லவில்லை. எல்லோருக்கும் பயம். பாப்ஜி கண்ணைத் துடைத்துக்கொண்டு வெளியே போனான்.

கிளாஸ் முடிந்ததும் வாயிற்படியிலேயே கன்னத்தில் கைவைத்து உட்கார்த்திருந்தான். மானிட்டர் ஜி.ஆர். “ஏண்டா, உடம்பு சரியில்லை….ரங்கராஜன் நோட்ஸ் பார்த்து எழுத்திக்கறேன்னு சொல்றதுதானே?” என்றான்.

“அந்த அளவுக்கு இங்கிலீஷ் தெரியாதுரா எனக்கு…”

எஸ்.ஆர்.பரமேச்வரன், அவரது அடுத்த கிளானில் பாப்ஜியை முதலில் பார்த்து, “என்ன நோட்ஸ் எழுதிக்கொள்ள உத்தேசமா. இல்லை உனக்கு நோட்ஸே தேவையில்லையா?”

அவன் அசட்டுச் சிரிப்பைத் தப்பாகப் புரிந்துகொண்டு அவனைக் கடைசி மேல் வரிசைக்கு அனுப்பினார். விதி பாருங்கள். அவனை வைத்தே விளையாடியது! அப்போதெல்லாம் சென் ஜோசப்ஸ் காலேஜில் நன்றாகப் படிக்கிற பையன்கள் ஒரு கோஷ்டி வானாடி, லால்குடி, பிக்ஷாண்டார்கோவில், உத்தமர்கோவில், ஸ்ரீரங்கம், திருச்சி ஆண்டார் ஸ்ட்ரீட், பட்டர்ஒர்த் ரோடிலிருந்து வரும் எங்களை ‘தயிர்வடைகள்’ என்பார்கள். முன் வரிசையில் அவசரமாக இடம்பிடித்து உட்காருவோம். படிக்காமல் ஊர் சுத்துகிற தடிப்பசங்கன் ஒரு கோஷ்டி.. பெரும்பாலும் கண்ட்டோன்மெண்ட் கேம்பியன்போல ஆங்கிலோ இந்தியப் பள்ளிகளிலிருந்து வருவார்கள். சிவப்பாக வாட்டசாட்டமாக இருப்பார்கள். ஹாக்கி, பாஸ்கெட்பால் நன்றாக ஆடுவார்கள். பிஸிக்ஸ், மேத்ஸ் எல்லாம் சுட்டுப்போட்டாலும் வராது. கடைசி மேல் வரிசையில் உட்கார்ந்துகொண்டு பாடப் புத்தகத்துக்குள் துப்பறியும் சுதைகள் படிப்பார்கள். இங்கிலீஷ் பேசுவார்கள். லெக்சரர் போர்டில் ஏதாவது எழுதும்போது பேப்பர் அம்பு அடிக்கும் கெட்ட பழக்கம் சிலரிடம் இருந்தது. பாப்ஜியின் புது வரிசையிலிருந்து அப்படித் திறமையாக ஏவப்பட்ட அம்பு ஒன்று கிளாஸ் முழுவதும் கிளைடர் போலப் பறந்து எஸ்.ஆர்.பியின் கிராப்பின் பின் பகுதியில் போய்ச் செருகிக்கொண்டது. அவர் தலை திருப்ப அதுவும் திரும்பியது.

பையன்கள் சிரித்துவிட…பாப்ஜி அதிகமாகவே சிரித்தது தப்பாகி விட்டது. அவர், “பூவராகவன் கெட்அப்!” என்றார் அநியாயமாக. “உடனே வெளியே போ. கிளாஸ் முடிந்ததும் என்னை ஸ்டாஃப் ரூமில் வந்து பார்!” என்றார்.

அவன் துடைகள் நிஜமாகவே நடுங்கின. உடளே ஜுரம் வந்திருக்கும். அவனைக் கடுமையாகப் பார்த்து, “நீ நல்ல குடும்பத்துப் பையன் என்று நினைத்தேன். உனக்கு நான் ஏன் டி.சி. கொடுத்து அனுப்பக்கூடாது?”

“நான் என்ன சார் செய்தேன்?” என்றான் அழாக்குறையாக. “ஆரோ அடித்தது?”

“அது யாரோ அடித்தது சார்!”

“யார் சொல்லு.. விட்டுவிடுகிறேன்.”

“நான் முன் பெஞ்சி ஆசாமி சார், அவர்கள் பெயர்கூடத் தெரியாது.”

“அது யார். பெயர் என்ன என்பதை வியாழக்கிழமைக்குன் கண்டுபிடித்துக் காகிதத்தில் எழுதிக்கொண்டு வர வேண்டும். அதன்பின்தான் உன்னை கிளாஸில் உட்கார அனுமதிப்பேன். இல்லையேல் உனக்கு டிஸ்மிஸ்!” என்றார்.

பாப்ஜி, “என்னடா வம்பாப் போச்சு!” என்று ஜி.ரங்கராஜனிடம் சொன்னான். அவன்தான் மானிட்டர்.

“டிசோஸாதான் அடித்தான். அவங்க யாரையும் காட்டிக் கொடுத்துடாதே. முரட்டுப் பசங்க, ஆக்கி ஸ்டிக்கால முட்டியைப் பேத்துடுவான்.”

“பிள்ள நான் என்னடா செய்வேன்? வியாழக்கிழமை கேப்பாரேடா…”

*நான் வேணா சொல்லிப் பார்க்கறேன். ஆனா, அவர் கேக்கற ஜாதியா தெரியலை!”

“ஆரோ அடிச்சது யார்னு சொல்லலேன்னா டி.சி. கொடுத்துருவேன் சுறார்ரா…”

“பண்ணினாலும் பண்ணுவேர், அது முசுடு. எதுக்கும் நீ நேஷனல்ல விசாரிச்சு வை, பாதி டெர்ம்ஸ் எடுத்துப்பாளான்னு,”

“அங்க பி.எஸ்ஸி பிஸிக்ஸ் கிடையாதேடா!” (அப்பொதெல்லாம்)

“வேற எதாவது சேரேன். பி.ஏ. இங்கிலீஷ், ஹிஸ்டரினு…”

“எங்கப்பா கேட்டா, தோலை உரிச்சுருவார்றா!” என்றான்.

“பேக் பெஞ்ச் பசங்க பன்றாங்க பாரு… அதுமாதிரி நோட்ஸ் எடுக்கலைன்னாலும் எடுக்கறாப்பல பாவனை பண்ணணும்டா. இந்த ட்ரிக் கூட தெரியலையா..அவர் ரொம்ப கோபிஷ்டு எதை வேணா மன்னிப்பார். நோட்ஸ் எடுக்கலைன்னா மன்னிக்கவே மாட்டார். உனக்கு இருக்கு என்னடா நாத்தம்?”

பாப்ஜி அடக்க முடியாமல் வேஷ்டியில் கொஞ்சூண்டு நம்பர்டு போய்விட்டான். வந்தது வரட்டும் என்று வியாழக்கிழமை பிரச்னைை எதிர்கொள்ளாமல் பாலுவைப் போய்க் கேட்டான்.

அவன் ஒரு குருட்டு யோசனை சொல்லியிருக்கிறான். “எஸ்.ஆர்.பி – யுடைய அடுத்த ரெண்டு மூணு கிளாஸை கட் அடிச்சுரு மறந்துருவேர்.”

நல்ல யோசளையாகப் பட்டதால் அவர் கிளாஸ் மூன்றை நழுவவிட்டான்.

நான், “வேண்டாம்டா … விஷப்பரீட்சை!” என்றேன்.

“பாரு! வேற எதாவது உருப்படியா யோசனை இருந்தா சொல்லு!”

எனக்கு சட்டென்று எதுவும் தோன்றவில்லை.

வியாழன், வெள்ளி, சனி, திங்கள்கிழமையும் நழுவவிட்டு, செவ்வாய் போவதாகத்தான் இருந்தான். சற்றும் எதிர்பாராமல் திங்களன்று எல்.கே.கேக்கு பதில் இவர் வந்துவிட்டார். பாப்ஜி சகலமும் ஸ்தம்பித்துப் போய் உட்கார்ந்திருக்க…

“பூவராகவன் ஸ்டாண்ட்அப்!” என்றார். “என் வகுப்புகளுக்கு வராமலிருந்தால் பொறுப்பிலிருந்து மீளலாம் என்று எண்ணுகிறாயா? நாளை பிரின்சிபால் அலுவலகத்திலிருந்து வெட்டர் வாங்கிப்போ…”

“சார் ப்ளீஸ்…”

“நோ எக்ஸ்க்யூஸஸ். உன் மாதிரி ஒழுங்கற்ற மாணவனை நான் என் 25 வருவு சர்வீஸில் பார்த்ததில்லை. கெட் அவுட்!”

பெனின்சுலார் ஓட்டலில் போய் தோசை, காபி சாப்பிடும்போது அவன் சாப்பிடவே இல்லை! பெல் அடிப்பதன்முன் லாலிஹாலில் நான், குவ்ஸார், பாபு, கலாம், பாப்ஜி எல்லோரும் பேசிக்கொண்டு இருக்கையில் அவன் நிஜமாகவே அழுதுவிட்டான். சொக்காயால். அடிக்கடி கண்ணைத் துடைத்துக்கொண்டான். “எல்லாம் போச்சு. டி.சி.கொடுத்து அனுப்பிவிடத் தீர்மானித்துவிட்டார்றா! ஆபீஸில் கேட்டேன். பிரின்ஸிபாலிடம் கையெழுத்து வாங்கியாச்சு. இனி என்னை ஸ்ரீரங்கநாதர்கூடக் காப்பாற்ற முடியாது. என்ன செய்வேன்? நாளைக்குத் தபாலில் லெட்டர் போய்விடும்.”

“அதிகாலையில் எழுந்து போஸ்ட்மேனைத் துரத்திப் புடிக்கலாமேடா”

“அதையும் பார்த்துவிட்டேன். ரிஜிஸ்தர் தபால் கொடுக்க மாட்டான். பேசாம செத்துப்போய்டட்டுமா?”

“கேனத்தனமாப் பேசாதே”

“எந்த மார்க்கமும் தென்படலையேடா” என்றான், குரல் கம்மிப் போய் விட்டது.

ரங்கு கடையில் இதுபற்றிப் பேச்சு வந்தது. “ரங்கு, எதாவது வழி சொல்லேன்.”

“ஒரே ஒரு மார்க்கம்தான் இருக்கு”

“என்ன?*

“நேராப் போய் அவர் கால்ல விழுந்துரு. பிடிச்ச காலை விடாதே. எழுந்திருக்காதே. நம்ம வைஷ்ணவ சம்பிரதாயமே சரணாகதிதான்.”

பாப்ஜி என்னைப் பார்த்தான். “நீயும் வரியாடா?”

“கால்ல விழறதுக்கா?”

“கால்ல விழ வேண்டாம்டா, ஒரு மாரல் சப்போர்ட்டுக்கு.”

மெயின்கார்டு கேட்டில் முன் ஸ்டாப்பில் இறங்கி சர்ச்சைத் தாண்டி, ரோட்டைக் கடந்து ஐஸ்க்ரீம் பார்லருக்குப் பின்னால் கல்லூரி சார்ந்த ஸ்டாஃப் காலனி குவார்ட்டர்ஸில் இருந்தார் எஸ்.ஆர்.பி. நாங்கள் போனபோது நாலைந்து டியூஷன் பையன்கள் காத்திருந்தார்கள். ஓர் இளம்பெண், “யார் வேணும்?” என்றது. நாங்கள் பதுங்கி, “சார் இருக்காரா?” என்றோம்.

“பேரு?”

“ரங்கராஜன்னு சொல்லுங்கோ…”

“என்னைப் போய்’ங்கோ’னு சொல்லிண்டு!” என்று சிரித்தாள் அப்பெண். “உக்காரு வருவார் அப்பா…யாரோ ரங்கராஜனாம்..”

அந்தப் பெண் ஒரு ஆறு வயசுப் பையனைப் பாதுகாத்துக் கொண்டிருந்தாள். அந்தப் பையன் யாரையும் பார்க்காமல் சுவரையே பார்த்துக்கொண்டிருந்தது விநோதமாக இருந்தது. பாப்ஜி ஃப்ரெண்ட் பண்ணிக்கொள்ளும் உத்தேசத்தில் “பையன் பேர் என்ன?”

“கோவிந்தன்” என்றாள்.

“கோவிந்து, எப்படி இருக்கே? ஷேகாண்ட் குடு.”

அந்தப் பையன் கையைப் பிடித்தான். அவன் பாப்ஜியின் கைவிரலைப் பிடித்து எடுத்துப் பார்த்துக் கைகுலுக்கிவிட்டு ‘களுக்’ கென்று சிரித்தான்.

அந்தப் பெண் ஆச்சரியத்துடன், “ரொம்ப நாள் கழிச்சு இப்படிப் பண்றான்!” என்றாள்.

“இவனுக்கு என்ன?” என்றேன்.

“பிறந்ததிலிருந்தே இப்படித்தான் இருக்கான். யாரையுமே நேராப் பார்க்கமாட்டான். இன்னிக்கு ஒரு நாளைக்குத்தான் உங்களை நிமிர்ந்து பார்த்திருக்கான். தலை சின்னது. அதனாலதான்னு டாக்டர் சொல்லியிருக்கார் சரியாப் போய்டும்னு. ஒண்ணு ரெண்டு தலைகீழா சொல்வான். ஃபிட்ஸ் வரும்.”

கோவிந்து, பாப்ஜியின் கைவிரலை. முன்னும் பின்னும் ஆட்டிச் சிரித்துக்கொண்டிருந்தான். உடல் நன்றாக வளர்ந்திருக்க…மூளைதான் சற்றுப் பின் தங்கியிருந்தது.

எஸ்.ஆர்.பி. வெளியே வந்தார். காலேஜில் புஷ்கோட்டும் பி.யூ.சின்னப்பா நடையுமாக இருப்பவரை, வீட்டில் பனியனுடன் பார்க்கும் போது அவ்வளவு பயமாக இல்லை.

“நீயா?” என்றார். முகம் இறுகியது.

“உன் மேட்டர் முடிஞ்சு போச்சே. நத்திங் கேன் பி டன். பிரின்ஸிபாலை பார்த்துட்டு டி.சி. வாங்கிட்டுப்போ!”

“அப்பா! கோவிந்து இவனைப் பார்த்துச் சிரிச்சான்பா!”

“இஸிட்!” என்றார்.

பாப்ஜி, தன் வாழ்க்கையே அதில்தான் தொங்குவதுபோல் கோவிந்துக்கு விளையாட்டுக் காட்டினான். ‘ஆனை ஆனை அழகர் ஆனை’ என்று கைரெண்டையும் காதாக்கிக்கொண்டு தலையை ஆனைபோல ஆட்டினான். கோவிந்து அடக்க முடியாமல் சிரித்தான்.

எஸ்.ஆர்.பியின் கண்களில் முதல் முறையாக நீரைப் பார்த்தேன். “He has never done this before. கடவுள் ஏதோ உன்னைப் பத்தி இவன் மூலம் சேதி சொல்ல விரும்பறார்.”

“ஆமா சார்…ஆமா சார்…இவன் நீங்க நினைக்கிற மாதிரி ரௌடி இல்லை சார்” என்றேன்.

“நீ ஏண்டா அழறே?”

“ரொம்ப ஃப்ரெண்டு சார்.”

எஸ்.ஆர்.பி., பாப்ஜிக்குக் கொடுத்த தண்டனையை மூன்றுநாள் தள்ளிப்போடச் சம்மதித்தார். “நீ வராத நான்கு கிளாஸின் பாடங்களை நோட்ஸ் எழுதிப் படித்துவிட்டு வரவேண்டும். அதன்மேல் ஒரு டெஸ்ட் வைப்பேன். அதில் சரியாக எழுதிவிட்டால் மன்னிப்பு. போனால் போகிறது என்று.”

பாப்ஜி என்னைப் பார்த்தான். “மூணு நாளா?”

“உடனே ஒப்புக்க!” என்றேன்.

பாப்ஜியின் பிரச்சினை அதோடு தீரவில்லை.

என்னிடமிருந்து எல்லா நோட்ஸையும் வாங்கி காப்பி எடுத்துக் கொள்ளச் சாயங்காலம் வந்திருந்தான். நாலு மணிக்கு வந்தவன் தொடர்ந்து எழுதி இரவு எட்டு மணியாகிவிட்டது.

“ஐயோ இதை எல்லாம் படிக்கணுமே. ரெண்டு நாள்ல எப்படிடா படிக்கப் போறேன்?” என்று ஏறக்குறைய அழுதுகொண்டே கேட்டான். “எல்லாத்தையும் கடம் அடிச்சுரு!” அவன் வீட்டுக்குத் திரும்பும்போது வானம் இருண்டு மழை வந்தது. தொப்பலாக நனைந்துவிட்டான். அவன் எழுதின நோட்ஸெல்லாம் பாழாகிவிட்டது. சொட்டச் சொட்ட நனைந்துவந்து வீட்டு சங்கிலி கேட்டை அசைத்தான். உள்ளே வந்து சட்டையைப் பிழிந்தான்.

“நான் அவ்வளவுதாண்டா! என் விதிதாண்டா என்னைத் துரத்தறது.”

“என்னடா ஆச்சு!” என்றாள் பாட்டி.

“மழை வந்து எல்லாம் வீணாய்டுத்து பாட்டி. பெருமாள் சதி பண்றேர்.”

“இதுக்காக மழையில வந்தியா?”

“டேய்…நீ படிச்சிருக்கியாடா அந்தப் பாடமெல்லாம்!”

“ஆளை விடு! என்னால சொல்லித் தர முடியாது.”

“எனக்கு மட்டும் ஏண்டா இப்படி எல்லாமே தப்புத் தப்பா நடக்கணும்? என் ஜாதகம் அப்படியா? ஒரு நாள் நோட்ஸ் எழுதாம் இருந்தது ஒரு பெரிய குற்றமா? அதுக்கு இப்படி அடுத்தடுத்துத் தண்டனையா…எனக்கு பேப்பர்ல அம்பு எப்படி பண்றதுன்னுகூடத் தெரியாது பாட்டி.”

பாட்டி, “கவலைப்படாதே. சில வேளைல கிரகம் அப்படித்தான் படுத்தும். திருமஞ்சனக் காவேரி தாண்டி, அம்மா மண்டபம் ரோட்டில் அனுமார் கோயில் இருக்கு பாரு? அவருக்கு வடைமாலை சாத்தறதா வேண்டிக்கோ.”

“பாட்டி, இத்தனை லேட்டா வேண்டிண்டா எந்த அனுமாரும் என்னைக் காப்பாத்த முடியாது.”

“அப்படித்தான் நினைச்சிண்டிருக்கே…உடனே சைக்கிளை எடுத்துண்டு போய் சேவிச்சுட்டு வேண்டிட்டு வந்துரேன்.”

மெள்ள நசநசவென்று பெய்த மழை, அவன் திரும்பி வந்ததும் வலுத்தது. வானமே உடைவதுபோல சத்தம் கேட்டது. வளைகுடாவில் காற்றழுத்தம் குறைந்து சைக்ளோனிக் ஸ்டார்மாகி, ராத்திரி முழுக்கப் பேயாய்க் காற்றடித்தது. ஜன்னல்கள் எல்லாம் ‘மடேர் மடேர்’ என்று திட்டின. பக்கத்து வீட்டு பாலு குடையை எடுத்துக்கொண்டு தெருவில் நுழைந்த அடுத்தகணம் அது கூடாகி, கறுப்புத்துணி மட்டும் விண்ணில் பறந்தது. நல்லவேளை! குடையைக் கைவிட்டான். இல்லையேல் அவனையும் தூக்கிக்கொண்டு போயிருக்கும். முழுமையான புயல்காற்று வீச கரண்ட் போய்விட்டது. தந்திக் கம்பங்கள் கொண்டை ஊசிகள்போல வனைந்தன. சித்திரைத் தேர்முட்டியிலிருந்து ஒரு தகரப் பாளம் விடுதலை பெற்றுப் பிரித்துகொண்டு சித்திரை வீதி முழுவதும் கன்னா பின்னாவென்று அல்லாடிவிட்டு ரங்கசாமி கோனார் வீட்டில் போய் மோதி ஓட்டைப் பெயர்த்தது, ஒருவரும் வெளியே போக முடியவில்லை. பாப்ஜி வீட்டுக்குப் போகாமல் அரிக்கேன் லைட்டில் என் நோட்ஸை வைத்து உருப் போட்டான். ராத்திரி எங்களுடனேயே கூடத்தில் சுருண்டு படுத்துவிட்டான்.

“ஒரு எழவும் மண்டைல ஏறலை!” என்றான்.

மறுநான் காலைதான் கரண்ட் வந்தது. ரேடியோ போட்டதில் ஒரு வாரத்துக்குப் பள்ளிக்கூடங்கள் காலேஜ்கள் லீவு என்று அறிவித்தார்கள்.

“சட்டுனு ஞாபகமில்லை எஸ்.ஆர்.பி. என்ன சொன்னார்? என்ன ஆச்சி?”

“புயல்னால ஒரு வாரம் லீவு கிடைச்சுடுத்தில்லை, நன்னா படிச்சுட்டேன். அவரானா டெஸ்ட் எல்லாம் வேண்டாம்னுட்டார். ரங்கி ஒண்ணு கவனிச்சியோ?”

“என்ன?”

“உங்க பாட்டி அன்னிக்கு அனுமாருக்கு வேண்டிக்கச் சொன்னா பாரு. நிஜமாகவே வேண்டிண்டேன். பலன் கிடைச்சுடுத்து பாரு”

“எப்படிச் சொல்றே?”

“அனுமார் யாரு? வாயுபுத்ரன். அன்னிக்கு அடிச்சது என்ன? புயல் காத்து.”

“போடாச்சி. அமெரிக்கால உக்காந்துடுண்டு இதையெல்லாம் நம்பறியா? பாப்ஜி டெஸ்டுக்குச் சரியா படிக்கலைன்னு பேய்க்காத்தை ஸ்ரீரங்கத்திலிருந்து நாகப்பட்டினம் வரைக்கும் ஊரெல்லாம் சேதம் உண்டாக்க அனுப்புவாரா? அவருக்கு வேற வேலை கிடையாதாடா?”

“எனிவே இப்படி நினைச்சுப் பார்க்க ரொமாண்டிக்கா இருக்கில்லை.”

“எனக்குத் தோணலை. அப்புறம் நீ எஸ்.ஆர்.பி – யைப் பார்த்தியோ?”

“ஒரு முறை பார்த்தேன். எங்கப்பா போனபோது, ஸ்ரீரங்கம் போயிருந்தப்ப. அந்தப் பையன் கோவிந்து தொடர்ந்தேர்த்தியா ஃபிட்ஸ் வந்து போய்ட்டானாம். அந்தச் சோகத்திலேயே அவர் பாதியாயிட்டார். ஒரு காலத்தில இவரைப் பார்த்தா அப்படிப் பயந்தோம்னு இருந்தது.”

இருட்டிவிட்டது. அவன் மனைவி பின்னால் வந்து நின்றான்.

“என்ன, எல்லாம் பேசியாகிவிட்டதா..இந்த மனிதரை எதற்கு அமெரிக்கா அனுப்பினீர்கள்?” என்றாள். வேடிக்கையாக அவள் மேல் ஒரு ஜாக்கெட்டை அணிவித்தான்.

“இன்றைக்கு ஒரு ப்ரோஸாக்கும் ஒரு டைலான்டினும் அந்தப் பையனைக் காப்பாற்றியிருக்கும்!”

“பாப்ஜி, நீ என்ன ஆராய்ச்சி பண்ணுகிறாய் பெர்க்லியில்?”

“நியூரோ ஃபார்மாகாலஜி, போஸ்ட் டாக்டரேட் ரிஸர்ச் பண்ணுகிறேன். அட்டென்ஷன் டெபிஷென்சி. சிண்ட்ரோம் பாராப்ளிஜியா எபிலெப்சி மாங்கோலிசம் பற்றி ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதி அதற்கான மிதைல்ஃபெனிடேட் சார்ந்த ஒரு புது மாத்திரையும் கண்டுபிடித்திருக்கிறேன். ஆனா, இன்னிக்குகூடக் காகித அம்பு எப்படி அடிக்கிறதுனு தெரியாது!” என்று சிரித்தான்.

“நீ கண்டுபிடிச்ச மருந்து பேரு என்ன?”

“கோவிந்த்!” என்றான்.

– 2003, ஸ்ரீரங்கத்துக் கதைகள்

Print Friendly, PDF & Email

2 thoughts on “பாப்ஜி

  1. இரண்டு நண்பர்களின் சுவாரிசியமான கதை…

  2. சுஜாதாவின் பாணியில் கதை முழுவதிலும் நகைச்சுவை. கடைசி வரி சிலிர்க்கவைத்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *