கதையாசிரியர்:
தின/வார இதழ்: தென்றல்
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: April 15, 2012
பார்வையிட்டோர்: 7,926 
 
 

நேஹாவின் போக்கு எனக்குப் புரியவே வெகு நாட்கள் ஆயின. என் சொந்த மகளே எனக்குப் பல சமயங்களில் புரியாத புதிராய் தான் இருந்தாள். சமீபகாலமாய் சிறுமியின் போக்கில் அதிகமான தீவிரம்.

இத்தனையிலும் வேதனை என்னவென்றால் சிந்திக்கவும் சில நிமிடங்கள் கிடைக்காத என் வேலை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கட்டாயம். பொருளாதாரம் காரணமாய் இல்லாமல் படித்து விட்டதன் ஒரே காரணமாய், கிடைத்த நல்ல வேலையை விட மனம் இல்லாமல் நான் வேலையை உடும்புப்பிடியாய் பிடித்திருந்தேன். இயல்பாகவும் எனக்கு வீட்டு வேலைகள் செய்ய துளியும் பிடிக்காது. பணிக்குச் சென்று பொருளீட்டுவது என்பது எனக்குப்பேருவகை கொடுத்து வந்திருக்கிறது.

நேஹாவின் நினைவில் ஆழ்ந்து விடும் இம்மாதிரித் தருணங்களில் மட்டும் நான் என் வேலையை வெறுப்பதுண்டு. இந்த மனவேதனையைக ்கூட கணவருடன் பகிர்ந்துகொள்ள மனம் இடம் கொடாது. இதே சாக்காக வைத்துக்கொண்டு ‘வேலையை விட்டுடு’ என்ற பல்லவியை ஆரம்பித்து மூளைச் சலவை செய்து விட்டாலோ? என்ற பயம். அம்மாவிடமோ கேட்கவே வேண்டாம்.

ஆறு வயதிற்குச் சற்று அதிகமாக முரட்டுத்தனமும் பிடிவாதமும் நேஹாவிற்குச் சமீபகாலமாய் இருப்பதாய் எனக்குத் தோன்றுகிறது. நேற்று அவள் வகுப்பு ஆசிரியை அவசரமாய் அழைத்துத் தொலைபேசியில் பேசியதிலிருந்து இந்த நிமிடம் வரை மனதைக்குடைகிறது. யோசிக்கவென்று வலுவில் தேடிக்கொண்ட இந்தத் தனிமைக்கு நான் கொடுத்தவிலையோ என் மதிய உணவு. ஷெண்டன் வேயின் அந்த சந்தடி மிக்க உணவங்களில் என்னால் யோசிக்கவே முடியாது என்று தெரிந்து தான் தனிமையான அந்த மரத்தடியைத் தேடிச்சென்றேன்.

காலையில் நான் செய்த வேலைகளில் ஒரு தவறும் இல்லாமல் இருந்தால், நிச்சயம் அது இமாலையச் சாதனையே. கைகளும் கண்களும் தங்கள் வேலைகளைச் செய்த வண்ணமிருக்க மனம் மட்டும் தன் போக்கில் பிடிவாதமாய் அசை போட்டவண்ணம் இருந்தது. மதியம் போய் தான் சரி பார்க்கவேண்டும்.

குற்றம் குறைகளைக் கூறி விட்டு, அவள் நன்றாகப் பாடுகிறாள், பேசுகிறாள், மற்ற பிள்ளைகளோடு அருமையாகப் பழகுகிறாள் என்றெல்லாம் ஆசிரியை கூறிய போதிலும் முதலில் கூறிய குற்றப் பத்திரிக்கையைத் தானே என் மனம் மீண்டும் மீண்டும் அலசுகிறது. நிச்சயம் அது குற்றமாகச் சொல்லப்பட்டதால் அல்ல. தீர்வே காணாமல் மூன்று வருடங்களாய் என்னைக் குழப்பும் அவள் போக்கும் அது அடைந்திருக்கும் தீவிரமும் தான் மனதைச் சஞ்சலப்படுத்துகிறது.

ஆசிரியையிடம் எதிர்த்து வாயாடுகிறாளாம். எது சொன்னாலும், தயாரான பதில். அதுவும் துடுக்கான இடக்கான பதில் தயராய் வைத்திருந்தாள். நேற்று வகுப்பில் அவரவர் குடும்பத்தாரின் படத்தை வரைந்து வண்ணம் தீட்டச்சொல்லியிருக்கிறார் ஆசிரியை. இவள் எல்லாவற்றையும் செவ்வனே செய்து, வழக்கம் போல் தாயாருக்கு –அதாவது எனக்குக் கால்கள் வரையவில்லை. முழங்கால் வரை மிக அழகாக வரைந்திருந்தாளாம்.

எல்லோரையும் தாத்தா, பாட்டி கமலா உள்பட எல்லோரையும் வரைந்து வண்ணமும் நன்றாகத்தீட்டி முடித்தவள், எவ்வளவு சொல்லியும் நேஹா கால்கள் வரைய மறுத்திருக்கிறாள்.அதன் பிறகு அவள் ‘ நான் எப்பொதுமே இப்பிடித்தான் வரைவேன், வேற மாதிரி வரைய மாட்டேன் ,’ என்று பிடிவாதமாய் கூறியது தான் ஆசிரியைக்கு எரிச்சலைத்தந்தது போலும். நேஹாவைப்பற்றி அவர் முழுமையாக இன்னும் அறியவில்லையே. வருடம் தொடங்கி ஓரி மாதங்களே ஆகியிருந்தன. பாலர் பள்ளி சிரியர்கள் புரிந்து கொள்ள இரண்டு வருடம் எடுத்தனரே, அதே போல தொடக்கப்பள்ளியிலும் குமல்லவா?!

பெற்ற தாயான எனக்கே அவளின் சில செயல்கள் பழகிவிட்ட போதிலும் புதிராய்த் தானே இருக்கிறது. நேஹா பிறந்ததிலிருந்து, வருடக்கணக்கில் வீட்டில் பணிபுரியும் கமலாவிற்கும் பழகிவிட்டது. ஆனால் புரிய மட்டும் இல்லை. நடுத்தர வயதான காரணத்தாலோ என்னவோ கமலா பொறுமையாக நேஹாவைச் சமாளிக்கிறார். இல்லையென்றால் வெகுவாகச் சிரமப்பட்டிருப்பேன்.

நேற்றிரவு பேசியதில் அவளை ஒரு மனோதத்துவரிடம் காண்பிக்கலாம் என்று கணவரின் ஆலோசனை ஓரளவு சரியெனப்பட்டது. அதே சமயம் நிலைமையின் தீவிரமும் புரியவில்லை. மருத்துவரின் உதவிதேவையா என்றே புரியவில்லை. ஒரே குழப்பம்.

மூன்று வயதில் பாலர் பள்ளியிலேயே ஆங்கிலப்பாடமும் சரி தமிழ் பாடமும் சரி தானாய் அனாயாசமாய்ச் செய்யக் கூடிவள் தான். இருப்பினும், அம்மாவை வரைச்சொன்னால் காலில்லாமல் தான் வரைவாள். ஆரம்பத்தில் பெரிய விஷயமாகப்படாத போதிலும் தொடர்ந்து நேஹா அப்படியே வரைவது என் மனதை உறுத்தவே செய்தது. ‘ ஏம்மா அம்மாக்கு காலில்லேன்னா எப்பிடி நடப்பேன்? நேஹாக் குட்டி அம்மாவுக்கும் கால் வரையியாம்’ என்று நைச்சியம் செய்தலோ போனால் போகிறதென்று சிறிது மனமிரங்கி, ஒரு சக்கர நாற்காலியில் என்னை உட்காரவைக்கத் தயாராய் இருந்தாளே தவிர எனக்குக்கால்கள் மட்டும் அவள் வரையத்தயாராய் இல்லை.

போன வருடம் டான் டோக் செங் மருத்துவமனையில் நண்பர் ஒருவரை காணச்சென்றிருந்தோம் நானும் என் கணவரும். நேஹாவும் எங்களுடன் வந்திருந்தாள்.அங்கு ஒரு பெண் காலில் எலும்பு முறிவால், நடக்க முடியாத காரணத்தால் சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்தாள். அதைப் பார்த்த நேஹா அங்கேயே சில நிமிடங்கள் அதைப் பார்த்தபடி மேற்கொண்டு நடக்காமல் நின்று விட்டாள். வைத்தகண் வாங்காமல் அந்த சக்கர நாற்காலியையே பார்த்தபடி நின்றவளை கிட்டத்தட்ட உலுக்கி இழுத்துக்கொண்டு தான் நாங்கள் மேற்கொண்டு நடந்தோம். அவள் வெகு தூரம் சென்றும் கூட தன் பார்வையை அந்நாற்காலியை விட்டு அகற்றாமல் கழுத்தைத்திருப்பிப் பார்த்துக்கொண்டே வந்தாள்.

அன்று மாலை திடீரென்று நேஹா, ‘அப்பா, நாம ஹொஸ்பிடல்ல பாத்தோமே வீல் சேர், அதே மாதிரி அம்மாவுக்கும் ஒண்ணு வாங்கிடலாம்பா ‘ என்ற போதும் எங்களுக்கு குழப்பம் தான். அவள் முகத்தில் துளியும் சிரிப்போ சந்தேகமோ இல்லை. தீர்மானமான தொனி வார்த்தைகளில் இருந்தது. ‘நடக்கமுடியாட்டாதான் வீல் சேர் வேணும்மா. அம்மாவுக்குதான் நடக்க முடியுமே,’ என்று அவர் சமாளித்தாலும், எங்கள் இருவர் மனங்களிலும் அடித்த குழப்ப அலைகளை அப்போது எங்கள் முகங்கள் காட்டின.

இதைப்பற்றி நிறைய பேசி அலசியிருக்கிறோம். கணவரும் சரி என் அம்மாவும் சரி என் வேலைக்கு உலை வைக்கத் தயாராய் இருந்தனர். எல்லா பேச்சும் தீர்வில்லாமலேயே முடிந்து வந்தது. வேலையை விடத்தான் நான் தயாராய் இல்லையே. எத்தனை பெண்கள் வேலைக்குப்போகிறார்கள். ஊருல உலகத்துல வேலைக்குப் போறவங்களுக்கெல்லாம் பிரச்சனையே வருவதில்லையா என்ன? சமாளிக்க வேண்டும் , சமாளிப்பேன் என்ற மன உறுதி என்னை வேலையுடன் வலுவாய் பின்னிவிட்டது.

மற்ற நேரங்களில் எல்லாப்பிள்ளைகளையும் போலவே தான் இருப்பாள் இந்த ஒரு விஷயம் தவிர. அம்மாவிடம் ஆசை, பாசம் எல்லாம் சற்று அதிகமாகவே உள்ளவள் தான். அப்பாவிடமும் ஒட்டுதல் அதிகம். இரக்க குணம் அதிகம். நாய் பூனை இவைகளைக்கண்டால் கண்களில் மகிழ்ச்சி மின்னும்.

‘உங்களுக்கு நான் சமைக்கஹெல்ப் பண்ணவாம்மா?’ என்று பெரிய மனுஷியைப்போல் அடிக்கடி கேட்பாள். ‘அப்பா உங்க காடிய நாம ரெண்டு பேருமா வாஷ் பண்ணுவோமா’ என்றுஅப்பாவையும் கொஞ்சிக் கொஞ்சி அழகாய் கேட்பாள். அம்மா அப்பாவிடம் கோபமும் நேஹாவுக்கு வரும் அடிக்கடி.

காலில் செருப்பு அணியாமல் இருக்க அவளுக்கு ஏனோ ஆர்வம் அதிகம்.வெறும் காலுடன் நடக்க அவள் மிகவும் ஆசைப்படுவாள். நான் வீட்டில் காலணிகள்அணியாத நேரங்களில் என் கால்களை அவள் ரசிப்பதை நான் பார்த்திருக்கிறேன். அந்த நேரங்களில் அவள் முகம் பிரகாசமாய் இருக்கும். கண்கள் ஆனந்தத்தில் ஜொலிக்கும். நான் காலணியணிந்தால், உடனே அவள் முகம் மாறி விடும். அவளுடைய போக்கும் மாறும். என் காலணிகளைக் கண்டாலே அவள் செய்கை வினோதமாகி விடும். புத்தம் புதிய விலை உயர்ந்த காலணியை ஆசையாய் முதல் நாள்தான் வாங்கி வந்திருப்பேன். வீட்டுக்கு வந்து நான் போட்டுப்பார்த்துக் கொண்டிருக்கும் போது நேஹாவின் பார்வையில் தீவிரம் தெரியும்.

அதன் பொருள் புரியாமல் இந்நாள் வரை நானும் பலமுறை யோசித்துச் சலித்ததுண்டு. ‘ நேஹாவுக்கும் அம்மாவோட ஷ¥ மாதிரி வாங்கிடலாமா? உனக்கு என்ன கலர்ல வேணும்’ என்று கேட்டாலும் பதில் ஒரு முறைப்பாய்த் தானிருக்கும். பேசவே மாட்டாள். முகத்தில் வேறு எந்த விதமான பாவமும் இருக்காது. இறுகிப் போன முறைப்பு மட்டுமே பிடிவாதமாய்ப் படர்ந்திருக்கும்.

விஷயம் அத்துடன் முடிந்துவிட்டால் பரவாயில்லை. ஆனால், சற்று நேரம் சென்று நேஹாவின் சத்தமே இல்லையே என்று தேடினால் என் புது காலணியை வைத்துத் தன் கத்தரிக்கோலால் பலம் கொண்டமட்டும் போராடிக் கிழித்துக் கொண்டிருப்பாள். முகத்தில் தீவிரம் பளிச்செனத் தெரியும். வாய்ப்பு கிடைத்தால் விடாமல் பயன் படுத்திக்கொண்டாள். கோபமும் எரிச்சலும் வந்தாலும் சிரமப்பட்டுக் கட்டுப்படுத்திக் கொண்டு விடுவேன். அதையும் மீறி ஓரிரு கடும் சொற்கள் வரவே செய்யும் என் வாயிலிருந்து. மற்ற சமயங்களில் சட்டென்று அழுது விடும் நேஹா இந்த மாதிரி நேரங்களில் சலனமே இல்லாமல் இருப்பது தான் ஆச்சரியம். சாதாரணமாய் ஏசுவதற்கும் முன்னால் அழுதுவிடும் நேஹாவா இவள் என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கும். அவள் கண்களில் வெற்றியின் பெருமிதம் தான் தெரியும்.

பொதுவாய் எந்தப் பொருளையும் அழிக்கும் சுபாவம் அவளுக்கு இல்லை. காலணிகள், அதிலும் என் காலணிகள் தான் அவளை ஏனோ வெறுப்படைய வைத்தன. இது ஏனென்று நான் பல முறை யோசித்ததுண்டு. என் கேள்விகளுக்கு பதில் மட்டும் கிடைத்ததே இல்லை.

சரி,பெண் குழந்தைகளுக்கு ஆடை அணிகலன்களில் இருக்கும் மோகம் தான் போலும் நேஹாவிற்கும் என்று நினைத்தேன். தாயானாலும் என்ன, என்னிடம் பொறாமையோ என்று நினைத்து, நேஹாவுக்கும் அது போல காலணிகள் வாங்கிக் கொடுக்கலாம் என்றும் முயற்சித்தேனே. ஆனால் அவற்றை அவள் பிடிவாதமாய் அணிய மறுத்துவிட்டாள். ஏன், கையில் எடுத்துக்கூடப் பார்க்கவில்லை.

இதன் பலனாய் எங்கள் வீட்டில் காலணிகள் நேஹாவின் கைக்கு எட்டாத உயரத்தில் வைப்பதுதான்வழக்கமாகிவிட்டது. என்னிடம் நேஹாவுக்குக்கோபம் வந்தால் நாற்காலியில் ஏறி எடுத்தாவது என் காலணிகளை கிழித்துவிடுவாள்.

யோசித்து யோசித்து ஆயாசம் மட்டுமே மிஞ்சிய வேளையில், அம்மாவிடம் பேசினால் என்ன என்று தோன்றவே, கையடக்கத் தொலைபேசியை உயிரூட்டி,” ஹலோ, அம்மா,எப்பிடி இருக்கீங்க, அப்பா எப்பிடியிருக்காரு. நேஹாவோட டீச்சர் கூப்பிட்டுப் பேசினாங்கம்மா. ஆமா, ஆமா அதே பழைய பிரச்சனையே தான். ம்,,.. இல்ல இல்ல. ஐயோ அம்மா, இப்போ தானே ப்ரைமரி ஒன்ல இருக்கா. இப்பவே என்ன நீங்க இப்பவே அவ பீயெஸேல்ஈ(ஆறாம் வகுப்பு- PSLE- Primary Scool Leaving Examiation) எழுதப் போற மாதிரி பேசறீங்க? ஆமா,.. நாங்க அவள சைக்கியாட்ரிஸ்டு கிட்ட கூட்டிட்டுப் போகபோறோம். ம்ம்…ஆமாம். அதுல என்னம்மா தப்பு. என்ன,..ம். சரி,.. .. ஐயோ,.அம்மா, அதுக்கும் இதுக்கும் என்னம்மா சம்பந்தம்? ம்ம்…..இல்ல, மத்த படி நல்லாதான் இருக்கா. சரி, சாயந்தரம் மறுபடி போன் அடிக்கிறேன், வச்சிடறேன்.”

அம்மா அபிப்பிராயப்படி நான் வேலைக்குப்போவது நேஹாவுக்குப் பிடிக்கவில்லை. அதே அவளுக்கு மனதில் சொல்லத்தெரியாத வருத்தத்தைக் கொடுத்திருக்கிறது. அதனால் நான் வேலையை விட்டுவிடுவது நல்லது. என்ன பிரச்சனை வந்தாலும் என் வேலையைக் காரணம் காட்டுவதே அம்மாவின் வழக்கம். இதே இந்த மூன்று வருடங்களாக விடாமல் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

அம்மாவிற்கு இப்போது ஒரு புதிய காரணம் கிடைத்திருக்கிறது. நாளிதழ்களில் கொட்டை எழுத்தில் போட்டிருக்கிறார்களே. வீட்டிலே இருக்கும் பிள்ளைகள் படிப்பில் சிறப்பாகச் செய்கிறார்கள் என்று. நாளிதழ்களுக்கும் விவஸ்தை என்பதே இல்லை. பள்ளிச் சிறார்களுக்கு நாளிதழ் வாசிக்கும் பழக்கம் பெறுகி இருக்கும் இச்சமயத்தில் இப்படிப்போட்டால் தேர்வில் அவர்கள் மோசமாய் செய்தால் அம்மாவைக் காரணமாக்கவே வழி செய்கிறார்கள்.

இதோ இப்போது அம்மாவே அதைச் சுட்டிக் காட்டித் தானே என்னை மடக்கப்பார்கிறார். நேஹா படிப்பது ஒன்றாம் வகுப்பு, ஆனால் நாளிதழைப் படித்து விட்டு அம்மா இப்போதே அவள் தொடக்க நிலை இறுதி ஆண்டில் படிப்பது போல பேசுகிறார்.

அடுத்த நாள் மனோதத்துவரீதியாய் பற்பல கேள்விகள் எங்களையும் அதி முக்கியமாக நேஹாவையும் கேட்ட மருத்துவர். அவளை சில படங்கள் வரைச்சொன்னார். மரம், வீடு என்று பல படங்கள். கடைசியில் அம்மாவை வரைச்சொன்னார். வழக்கம் போல நேஹா அம்மாவை நொண்டியாக்கினாள்.

“ரெண்டு மூணு வயசுல இருந்தத விட தீவிரம் கூடியற்கு காரணமே, அவள் வளர்வது தான். இத்தகைய பிரச்சனைகளை முளையிலேயே கிள்ளி எரிந்தால் எளிது. இல்லையென்றால் அவள் வளர வளர அதுவும் உடன் வளரும். இப்பவும் தாமதமாகல, நீங்க சரியான நேரத்துல தான் வந்திருக்கீங்க. இந்த நிலையை நாங்க டெலிஷன் ஆபரேஷன் (deletion operation) என்றோ அரைகுறையாக காண்பது (incomplete seeing) என்றோ கூறுவோம். இதை சரி செய்வது சுலபம் தான். செய்தால், நேஹா பள்ளியில் இன்னும் சிறப்பாச் செய்வா. இரண்டு நாட்களாய் பேப்பர் பார்த்திருப்பீர்களே. வீட்டிலிருக்கும் தாய்மார்களில் குழந்தைகள் பள்ளியில் சிறப்பாகச் செய்வதாய் கணக்கெடுப்பு காட்டுகிறது. இது கணக்கெடுப்புத் தானே தவிர முற்றிலும் ஏற்கக்கூடியதன்று. இருந்தாலும் ஓரளவு உண்மை இல்லாமலில்லை. இது உண்மையா பொய்யா என்று வாதிடல் அவசியமே இல்லை. அவரவர்கு அவரவர் குழந்தை சிறந்து விளங்கவே விருப்பம் இல்லையா? யாருமே அதை தவறென்று நிரூபிக்கவேனும் வேலையிலிருந்து கொண்டு சவாலாய் பிள்ளையை வளர்க்கலாம். ஆனால் அவர்கள் தோற்றால் அந்த வருடங்கள் திரும்ப அவர்களுக்குக்கிடைக்காது. அதை விட அந்தக் குழந்தைக்குக் கிடைக்காது. வென்றால் மகிழ்ச்சிதான்.

பெரும்பாலும் தாய் வேலைக்குப் போவது பிள்ளைகளைப் பாதிக்கலாம் என்றாலும் ஒரு சில குழந்தைக்கு அதிகமாகம் மனம் பாதிப்படைகிறது. இது விதிவிலக்கு தான். விதிவிலக்கு நம் வாழ்வில் வரும் பட்சத்தில் நாம் அதிக கவனமும் தியாகமும் செய்யவேண்டும் என்பதைத் தவிர வேறு வழில்லை. உண்மையை உணர்ந்த பின்னும் அதை விட்டு ஓட முற்படுவது மடமை. உண்மையைச்சந்திப்பது தான் புத்திசாலித் தனம். வயதாக ஆக நேஹாவின் தீவிரம் கூடும் என்பதால் இப்பவே இதை நாம குணப்படுத்தணும். கால்ல ஷ¥ போட்டுகிட்டு அம்மா போனா அப்பறம் ரொம்ப நேரம் கழிச்சுத்தான் அம்மாவப் பார்க்கமுடியும்னு அவமனசுல ஆழமாப் பதிஞ்சிடிச்சு. ரெண்டு வயசிலேயிருந்து அவங்கம்மாவ அவ மிஸ் ண்ணியிருக்கா. ஏங்கியிருக்கா. அதுனால அம்மவோட கால் மேலயும் காலணி மேலயும் நேஹாவுக்கு வெறுப்பு. காலும் காலணியும்இல்லாம அவ அவம்மாவ பார்க்க நினைச்சு அதையே தன் மனசுல ஆழமா பதிச்சு வச்சிருக்கா. இதனாலேயே அம்மாவ காலில்லாம அவ வரையறா. தவிர காலணிகளக் கண்டா கூட வெறுக்கறா. அப்படி வரையும் போது அவளுடைய ஏக்கத்துக்கு மருந்து கிடைக்குது. இது ஒரு நிலை தானே ஒழிய வியாதி இல்லை. அதனால நீங்க பயப்படாம எப்பவும் போல அவ கிட்ட நடந்துக்குங்க. ஆறு வயசுல சுலபமா அவள மறக்க வைக்க முடியும். வேலைய நீங்க விட்டுட்டு அவகூடவே இருந்து, அவளுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுங்க. நிச்சயம் அவ மறப்பா. மாறுவா. இத இப்பிடியே விட்டா பதின்ம வயது ஆக ஆக அவளுக்கே ஏன்னு தெரியாம சில வெறுப்புகள் அவளிடத்துல வளரும். உங்க மகள விட வேல ஒண்ணும் பெரிசுன்னு எனக்குத்தோணல. நிச்சயமா நீங்களும் அதேதான் நினைப்பீங்கன்னு தெரியும். அதிகம் யோசிக்காம வேலைய விட்டுட்டு ஆறு மாதம் தொடர்ந்து கண்காணிச்சுட்டு வந்து என்ன பாருங்க”, விடை பெற்றுத் திரும்பிய என் மனம், வேலையை விடத் தீர்மானித்தது.

நேஹாவின் தேவைகளை மையமாய் வைத்து நான் யோசிக்க வில்லையோ. இத்தனை நாள் அவளை இரண்டாம் நிலையிலும் வேலையை முன்னிலையிலும் வைத்தே நான் யோசித்திருப்பது புரிய ரம்பித்தது. நேஹாவின் இடத்திலிருந்து நான் சிந்திக்கத் தவறி விட்டிருந்தது புரிந்தது. இதையே அம்மா சொன்ன போது ஏன் மனம் ஏற்க வில்லை? என்று நினைக்காமல் இருக்க முடியவில்லை. மனோதத்துவம் என்று அறியாமலேயே அனுபவத்தில் அம்மா பற்பலவற்றைக் கற்றிப்பதை எண்ணி மனம் வியந்தது.

வீட்டிற்குச்சென்றதுமே முதல் வேலையாக அம்மாவைத் தொலை பேசியில் அழைத்தேன். தீர்மானத்தைக் கூறியதுமே அம்மா மகிழ்ச்சியில் மலர்ந்தது தொலைபேசியானாலும் என்னால் உணர முடிந்தது. குரலில் நெகிழ்ச்சியுடன் தன் சந்தோஷத்தை வெளிப் படுத்தினார்.

முழு மனதுடன் அடுத்ததாக என் ராஜினாமாக் கடிதத்தை கணினியில் தட்டச்ச ஆரம்பித்தேன். நண்பர்களும் உடன் வேலை செய்பவர்களும் நிச்சயம் அருமையான வேலையை உதறுகிறாயே என்று தான் சொல்வார்கள். அதற்கெல்லாம் சலனமே படக் கூடாதென்று என் மனதிற்கு விடாமல் சொல்லிக் கொண்டிருந்தேன். வேலையை விட்டதும் மனதிற்கு வருத்தமாகத் தானிருக்கும். என் வருத்தத்தை மறக்க காலம் நிச்சயம் எனக்கு உதவும்.நேஹாவின் நினைவில் நான் நொண்டியாவதையோ இல்லை அவள் வாழ்க்கையையே நொண்டியாக்குவதையோ தாயான என் மனம் எப்படி ஏற்கும்?

கதை வந்த கதை இதுதான்
Dr. Loganathan என்னும் மனோவியல் வல்லுனர் ஒருவர் பினாங்கில் இருக்கிறார். சில வருடங்களுக்கு முன்னால் அவர் எழுதிய psychology article ஒன்றைப் படித்தேன். என்னுள் பெரிய தாக்கம் ஏற்பட்டது. அது தந்த inspiration தான் என்னுள் கதைவடிவம் கொண்டது. முழுக்க முழுக்க கற்பனை! படித்த நண்பர்கள் எல்லோருமே மிகவும் மனதைத் தொடும் கருவென்றும் கதையாக்கம் சிறப்பு என்றும் சொல்லும்போது நம்ப முடியாததற்குக் காரணம் அது முழுக்கற்பனை என்பதே! முதலில் நான் கொடுத்த பெயர் ‘நொண்டி’. அதனை, சிங்கைச்சுடர் ஆசிரியர் திரு. பிச்சினிக்காடு இளங்கோ அவர்கள் ‘நுடம்’ என்று மாற்றினார். கதையை எழுதுமுன் லோகநாதன் அவர்களிடம் கேட்டேன். எழுது என்று ஊக்குவித்தார். பிறகு, எழுதிய கதையை முதலில் படித்ததும் அவர் தான். ‘உன் குழந்தையா? இப்போ என்ன வயசு?’ என்று கேட்டார். அதையே வெற்றியாகக் கொண்டேன். உண்மையில் எனக்கு ஆரோக்கியமான இரண்டு ஆண்பிள்ளைகள் மட்டுமே உண்டு.

– சிங்கைச்சுடர் மே 2002, திண்ணை 19-06-03, பதிவுகள்- இணைய இதழ் August 2004, தென்றல் முல்லை – காலாண்டிதழ் (நான்காம்) oct-dec 2004, நுடம்(நொண்டி) சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் நடத்திய முத்தமிழ் விழா -இரண்டாம் பரிசு

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *