கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: August 20, 2020
பார்வையிட்டோர்: 15,908 
 
 

நான் சாரங்கபாணி.! சின்ன வயசில இருந்தே அம்மா.. அப்பாலாம் “சாரி…சாரி”. ணே கூப்டுவா..! சின்ன வயசுல என்ன எல்லாரும் “சாரி.சாரி.”ன்னு கூப்டரச்சே.. “ஏன்..! நீங்க என்ன தப்பு பண்ணினேள்.?.எங்கிட்ட சாரி கேட்கரேள்?” னு ஜோக் அடிப்பேன் நான்.. குறைஞ்சது ஒரு ஆயிரம் தடவையாவது நான் இந்த ஜோக்க அடிச்சிருப்பேன்..அம்பது வயசு வரைக்கும் .. ஆரம்பத்துல எல்லாரும் சிரிப்பாங்க.. போகப் போக கடைசியா நானே சொல்லிட்டு நானே கெக்கபிக்கேனு சிரிக்கர்து வழக்கமா போய்டுச்சு…!

திருச்சி லால்குடி பக்கத்துல மணக்கால் கிராமம் தான் என் ஊரு… ! சின்ன வயசில இருந்தே .. பிறந்த நாள் முதலா இந்த நாலு தெருதான் என்னோட சாம்ராஜ்யம்..!

நான் , என்னோட ஆத்துக்காரி ஜானு, மகன் ப்ரபு நந்தன் , மருமக விசாலாக்க்ஷி..பேரன் கிருபாகரன் னு என்னோட சமஸ்தானம் ஜம்முனு ஒரு குறைவுமில்லாம போய்ண்டிருக்கு..! சுசீலா ன்னு ஒரு பொண்ணு மணப்பாறையில கட்டி குடுத்தாச்சு..மாப்பிள்ளைக்கு அங்க ஒரு ஆபீஸ்ல உத்யோகம்.. ரெண்டு புள்ளைகள்.. பேரன் ஒன்னு . பேத்தி ஒன்னு..வருவா ஒரு மாசம் , ரெண்டு மாசம் ஒரு தடவை…. புள்ளைகள இழுத்துண்டு எங்கள பாக்க.. என் பையன் ப்ரபுவுக்கு திருச்சில துப்பாக்கி கம்பெனீல உத்யோகம்.. ஸ்கூட்டர் வெச்சிண்டிருக்கான்.. !

இப்ப ரிட்டயராய்ட்டேன்… ஜம்முனு ஈஸி சேரப் போட்டுண்டு இந்த திண்ணயிலயே உக்காந்துண்டு தெருவ வேடிக்க பாக்கிரதுதான் என்னோட தலையாய பணியே…! திண்ணைன்னா ஒரு ஆள் படுக்கர மாதிரினு நினைக்காதீங்க… பத்து பன்னென்டு பேர் தாராளமா உக்காரலாம்.. ! அப்பா கூட அக்ரஹாரத்து மாமாக்களோட கோயில் விஸேஷம்..திருவிழா விஷயமா பேசணும்னா கூட எங்காத்து திண்ணதான்.. ஜமுக்காளத்த விரிச்சிண்டு ஏதாவது பலகாரத்தயும்..வெத்தல சீவலையும் போட்டு கொதப்பிண்டு பேசரது வழக்கம்..!

“அப்பா.. குடிக்க ஏதாவது வேணுமா..? காஃபி பால் ஏதாவது குடிக்கரேளா?” ன்னு ஒரு குரல்.. திரும்பிப் பாத்தேன்..மருமக விசாலாக்க்ஷிதான்..

“இல்லம்மா .. தூத்தம் மட்டும் ஒரு சொம்புல குடும்மான்னு கேட்க நினைச்சேன்.. ஆனா இப்பல்லாம் கோர்வையா பேச வர்ரதில்ல.. “தூத்.. தூத்தம் ” னு அரைகுறையா கையால சைகை பண்ணினேன்..”

“சரிப்பா” ன்னு உள்ள போய்ட்டா.. !

ஜானு எங்க ஆளக்காணுமே?! எங்க போய்ட்டா..?! ஒரு வேள அடுப்படில ஏதாவது வேலையா இருப்பா..!

சரி நாம கன்ட்டின்யூ பண்ணுவோம்.!

அப்பா ஜமீன்தார்கிட்ட கணக்குபுள்ளையா இருந்தார்..கொஞ்ச நில புலம் லாம் வெச்சிண்டிருந்தார்.. ஆள் வெச்சு விவாயம் லாம் தடபுடலா நடக்கும்..! பின்னால இருக்கே.. சிவன் கோயில் அதுக்கு பக்கத்துலதான் எங்க நிலம்லாம் இருந்தது.. வாய்க்கா ஓரத்து நிலம்தான்.. தண்ணிக்கு அப்பல்லாம் குறைவே இல்லயே.. நல்லா பச்ச பச்சயா இருக்கும் எல்லா நிலமும்..

இந்த வீடு கூட அப்பாவோட சம்பாத்யம்தான்..! நல்லா தேக்கும்..செம்மரமுமா தூண் தூணா வெச்சு கட்டின அக்ரஹாரத்து வீடு.. ! அவர் ரொம்ப மிடு்க்கா ஜட்காவுல ஏறி ஜமீன்தார் வீட்டுக்கு போறதும்.. வர்ரதுமா ..இந்த அக்ராஹாரத்து தெருவே ஓரக்கண்ணுல பாக்கரத நான் கவனிச்சிருக்கேன்.. !

ஆத்துல அம்மா சொன்னா செய்யரதுக்கு ரெண்டு மூனு வேலக்காரா கூட உண்டு.. அதனா ல சின்ன வயசுல எனக்கு வீட்டு வேல செஞ்சுலாம் பழக்கமேயில்ல.. சின்னான் மாமாதான் என்ன ஸ்கூலுக்கு கூட்டிண்டு போரது ..வர்ரது எல்லாம்.. ! சிகை வெட்டிக்க கூட புழக்கடைக்கே ஆள் வந்து நிப்பார் மாசா மாசம்..! கிணத்தடி பக்கத்துல மாமரத்தடிதான் என்னாட பார்லர் அந்த சின்ன வயசுல..!

பக்கத்துல லால்குடிலதான் ஸ்கூல் வரை படிச்சேன் .. ஜட்காலதான் போக ..வர . பக்கத்துல வாய்க்கா ஓடும்…அதாவது மெய்ன் வாய்க்கால்ல இருந்து பிரிஞ்சு வர சின்ன வாய்க்கா இது.. ரோடு ஓரமா ஊருக்காக ஓடும்..!

சின்னான் மாமா வோட பசங்க வெங்கடேசன்.. சுப்புணிலாம் அதுல தவள புடிக்கர்தும்.. மீன் பிடிக்கர்துமா குதிச்சு விளையாடுவாங்க.. எனக்கு ஆரம்பத்துல நீச்சல் தெரியாது.. அம்மா கிட்ட அழுது அடம்புடிச்சு கேப்பேன் அடிக்கடி.. அம்மா ஒத்துக்கவே மாட்டா.. “நீச்சல் கத்துண்டு நீ என்னடா பண்ணப் போற..? சிந்து பாத் மாதிரி கப்பல் ல ஏறி கடல் ப்ரயாணம் போகப் போறியோ?”ன்னு பட படன்னு வாய அடைப்பா.! ஆனா நான் விடவேல்லியே!.. அப்பா கிட்ட கெஞ்சி கூத்தாடி ஒரு வழியா ஒத்துக்க வெச்சிட்டேன்.! சின்னான் மாமா கிட்ட சொல்லி நீச்சல் கத்துக்க அனுப்பினார் அப்பா . ஆனா ஒரு கண்டிஷன் .. “தவளையவோ.. மீனையோ தொடப் படாது.., பிடிக்கப் படாது.., பூணூலை பத்திரமா அவிழாம பார்த்துக்கணும் தெரிஞ்சுதா? “ன்னார் அப்பா.. ரெண்டு மூனு வாரத்திலயே நன்னா நீச்சல் சொல்லித் தந்துட்டார் சின்னான் மாமா… அப்ப பத்து வயசு இருக்கும்.. ! நல்லா நீச்சல் தெரிஞ்சதும் நான் ஊர்க்குள்ள இருக்கிற சின்ன வாய்க்கால் பக்கமே போறதில்ல.. நானம் சுப்புணியும்..வெங்கடேசனும் பெரிய வாய்க்கால்லதான் தினம் குளியலே..காலங்காத்தால ஏழு மணிக்கு சிலு சிலு னு நெல்லு மணத்தோட அடிக்கிற காத்துல மூச்ச ஆழமா இழுத்துப் பிடிச்சிண்டு மாமரத்து கிளையில இருந்து தண்ணிக்குள்ள தலை கீழா டைவ் அடிக்கர்தெல்லாம் என்ன மாதிரியான சுகம்னு சொன்னா புரியாது.. சொல்லவும் முடியாது….அதுவும் கோத்ரெஜ் கம்பனிக் காரன் உட்ருக்காம் பாருங்கோ.. புதுசா சிந்த்தால்னு ஒரு சோப்பு.. அட அட அட.! அத உடம்புல போட்டுண்டு நல்லா நொரை பொங்க தண்ணில டைவ் அடிச்சா தண்ணி பூரா சிந்தால் சோப்பு மணமாத்தான் கம கமக்கும்..! நெஞ்சு பூரா நெல்லுப் பால் வாசன இன்னிக்கும் மூக்கடியில வீசர மாதிரி ஒரு நெனப்பு..! ஆனா அம்மாதான் வீணா பயப்படுவா..தெனமும்… அப்பா சொல்லுவார்.. ” பயப்படாதடீ.. நானும் கூட பாத்தனே ..!? நன்னா மீன் குட்டியாட்டமா நீஞ்சரான் உம்புள்ள. “.. னு சொல்ரப்போ சின்னான் மாமா வும் ஆமாங்கம்மா கவலப்படாதீங்கன்னு தைரியம் சொல்லுவார்… அம்மா கண்ணுல பெரும தெரிஞ்சாலும் உதடு மட்டும் எப்பவும் பயந்துண்டேதான் இருக்கும்..!

“அம்மா ..!” னு ஸ்கூல்ல இருந்து ஓடி வந்தான் எம் பேரன்.. மணி நாலரைக்கும் மேல ஆய்டுத்து போல .! ஸ்கூல் விட்டாச்சு.. ஐந்தாவது படிக்கிறான்.. வீட்டுக்குள்ள ஓடிப் போகும்போது என்ன ஒரு பார்வ பாத்தான்..” ஹாய் தாத்தா!” னு ஒரு கையாட்டல். நான் கூட கை ஆட்டலாம்னு நெனச்சேன்.. ஆனா பாழாப் போன கை.. சட்டுனு தூக்க முடியல பாருங்கோ.. அதுக்குள்ள உள்ள ஓடிப் போய்ட்டான் பேராண்டி.. யார் பேரன் .? சூட்டிகையாத்தானே இருக்கணும்.! ஆனா இவன் அப்பன் கொஞ்சம் சாதுதான்.. போனமா வந்தமான்னு இருப்பான்.. அம்மா மாதிரி..!

பத்தாவது முடிச்சப்புறம் டிப்ளமா சிவில் இன்ஜினியரிங் படிக்க திருச்சி போய்ட்டேன்..தெனம் காலைல பாசஞ்சர்ல ஏறி போய்ட்டா சாயந்திரம் லேட்டாதான் வீட்டுக்கு வருவேன்.. அதனால வீட்டுலதான் பாத்ரூம் குளியல்.. ஆனா வாரம் ஒரு தடவ சுப்புணி யும் வெங்கடேசனும் படித்துறையில ஆஜராய்டுவோம்.. வெங்கடேசனும் எங்கூடத்தான் படிச்சான்.. சுப்புணி அப்ப ஏழாவது லால்குடி ஸ்கூல்லதான் ..! அப்புறமா ஜமீன்தார்லாம் இல்லாம போனதால அப்பாவும் நெல புலத்தோட விவசாயம் பண்ரதோட நிறுத்திண்டுட்டார்..! ஆனா கிராமத்துக்கு எல்லார் விவசாயக் கணக்கும் அப்புறமா கூட அப்பாதான் பாத்துண்டார்.. ஜட்கா இல்லன்னாலும் ரொம்ப மிடுக்காத்தான் அக்ரஹாரத்துல நடப்பார்.. ஊர்லயும் அதே மரியாத எப்பவும் உண்டு..!

வாரா வாரம் வாய்க்கால்லதான் எங்க முழுப் பொழுதும் போகும்.. எப்படி ரோட்டுக்கு அந்தப் பக்கம் ஊர் பக்கமா சின்ன வாய்க்கா போகுமோ அதே மாதிரி பெரிய வாய்க்கால் ஓரமா ரயில்வே ட்ராக் போகும்.. ரோடு.. வாய்க்காலத் தாண்டி குறுக்கால சின்ன பாலத்து மேல ரயில் போகும்.. ரயில்வே லைனும் வாய்க்காலும் கொஞ்ச தூரத்துக்கு ஒன்னாவே போகும்..!

நானும் சின்னானும்.. அந்த பாலத்து மேல நின்னு தண்ணியில குதிப்போம்.. உயரம் கம்மிதான் பத்து பன்னென்டு அடிதான் .. !

ஊரே தணணி புடிக்கரதும், துணி தோய்க்கர்தும்.. ரொம்ப அமக்களமா இருக்கும் படித்துறையே.. படித்துறையில தண்ணி புடிக்கணும்.. கொஞ்சம் தள்ளிப் போய்தான் துணி தோய்க்கணும்.. ஆடு மாடு குளிப்பாட்ணும்னா. ஒன்னு ஆத்துக்கு தான் போகணும்..வாய்க்கால்ல ஆடு மாடு குளிப்பாட்ட முடியாது.. இந்த வாண்டுகள், பொண்டுகள், மாமிகள் லாம் எதையாவது தண்ணிக்குள்ள போட்டுட்டா தேடித் தர்ர ஆழ்கடல் வீரர்களே நாங்கதான்னா பாருங்களேன். !?

எங்க ஊர்லயும் கலர் கலரா பொண்டுகள் உண்டு.. என்னதான் தண்ணி புடிச்சாலும்.. துணி தோய்ச்சாலும் .. பல பொண்டுகளின் பார்வை எங்கள மாதிரி நீச்சல் வீரர்கள் மேலதான் இருக்கும்..எங்களுக்கும் இது தெரியும்.. ! வெங்கடேசனுக்கு கூட அந்த தறி ஓட்டுர மலர் விழி மேல ஒரு அபிப்ராயம் இருந்தது.. அவளுக்கும்தான்..!

கோடி வீட்டு புள்ளயைண்டான், விக்கி, கையில ஒரு ஃபுட் பாலத் தூக்கிண்டு எங்காத்துக்கு வந்தான் .. எம்பேரனுக்கு ஜோடி இவன்..எம்பேரன் வர்ர வரை திண்ணையோரமாவே நிப்பான்.. என் சின்னான் மாதிரி..என்னையே பாத்துண்டு நிப்பான்.. நான் மெல்லமா கையசைச்சு சிரி்ச்சா.. தானும் சிரிப்பான் பதிலுக்கு.. அவ்வளவா பேச்சு வார்த்தை இல்லை..” காபி குடிச்சியா.?” ன்னுகேப்பேன்… குடிச்சேன்னு தலையாட்டுவான்.. “ஜானு.. இந்தப் புள்ளையாண்டானுக்கு சாப்பிட ஏதாவது குடு”ன்னு உள்ள பார்த்து சொல்லுவேன்..என்ன வெறிச்ச பாத்துட்டு உள்ள எட்டி பார்ப்பான்..!

இந்த காலத்து பொடிசுகள் ஸ்கூல விட்டு வந்த உடனே.. கை கால அலம்பரதுகளோ இல்லயோ. காபி டிபன் சாப்டரதுகளோ இல்லயோ. யூனிஃபார்ம கூட கழட்டாம ரோட்டுல எறங்கி விளையாட ஆரம்பிச்சர்துகளே..!

ஆனா அந்த காலத்துல கை கால அலம்பிண்டு சந்தி பண்ணாம அம்மா டிபனும் தர மாட்டா.. ரோட்ல போய் விளையாடவும் விடமாட்டா..அப்பாட்ட சொல்லிடுவா…! அப்புறம் யாரு நூத்தி எட்டு , ஆயிரத்து எட்டுனு காயத்ரி எக்ஸ்ட்ரா வா சொல்ரது..?

அம்மா வெங்காய துகையலும்,ரவா தோசையும் அருமையா முறுகலா பண்ணுவா.. நெய்விட்டு.. அக்ரஹாரமே மணக்கும் சாயந்திரமானா..!

இப்ப கூட முறுகல் தோசை மணக்கர்து .. ஜானுவா இருக்கும்..கொண்டு வருவா கொஞ்ச நேரத்துல ! அவளோட கைமணமும் அம்மா மாதிரிதான்.. அந்த விஷயத்துல நான் குடுத்து வெச்சவன்தான்….!

எங்க விட்டேன் .? ஆங்.! இப்பலாம் நெறைய மறக்கர்து.. ப்ளாங்க்கா ஆய்டரது புத்தி..இருங்க யோசிக்கறேன் .ம்ம். ஆங் .!! சொல்ல மறந்துட்டனே…!? நான் ஜானுவ மொத மொதலா நேருக்கு நேரா பார்த்ததும் அங்கதான் .. எங்க தெருவில கடைசி வீட்டுக்கு குடி வந்திருந்தாங்க.. அவளோட அப்பாதான் சிவன் கோயிலுக்கு புதுசா வந்திருக்கும் குருக்கள்.. எங்க வீட்டுத் திண்ணையில இருந்து கொஞ்சம் எட்டிப்பாத்தா ஜானு வீடு தெரியும்..!

வழக்கம் போல ஞாயித்துக்கிழமை நாங்க வாய்க்கால்ல விளையாடும் போது மாமிங்க கூட்டத்துல ஒரு சலசலப்பு . விசாரிச்சா யாரோ தண்ணி புடிக்கும் போது , மோதிரத்த தொலச்சுட்டாளாம்.. போய்ப்பாத்தா.. கூட்டத்து நடுவில ஜானுதான்.. மூஞ்சில பயம் பதட்டம். கண்ணுல பிச்சுண்டு கொட்ட ரெடியா இருந்த அழுகை…!

அழாதீங்கோ.. அழாதீங்கோ.. தேடித் தர்ரேன்னு சொல்லிட்டு நான்தான் மூக்க புடிச்சிண்டு உள்ள போய் தேடினேன்.. பாறைக்கடீல கிடந்தது பள பளன்னு பச்ச கல்லு வெச்ச மோதிரம் அது .. எடுத்து ராஜாம்பா மாமி கிட்ட குடுத்த போது தான் ஜானு மொத மொத என்ன பாத்தா.. ரொம்ப தேங்க்ஸ் னு எனக்கு கண்ணாலயே நன்றி சொல்லிட்டு அந்த மோதிரத்த போட்டுண்டா.. அப்ப கூட பளிச்சுனு வெயில்ல அந்த மோதிரம் என் முகத்துல டால் அடிச்சது எனக்கு ஞாபகம் இருக்கு…”மறக்காம ஆத்துக்கு போனதுக்கப்புறம் மோதிரத்துல நூல் சுத்திப் போட்டுக்கோங்கோ.. அவிழாம இருக்கும்” னு ஐடியா சொன்னேன்.. சரின்னு தலையாட்டிட்டு விடு விடுன்னு போய்ட்டா.. தூரமா போய் மெய்ன் ரோட்ட க்ராஸ் பண்ணும்போது திரும்பி என்ன பாத்ததா ஒரு ஞாபகம்.. அது சரி நான் ஏன் இன்னும் வெறிச்சு நின்னுன்டு அசடாட்டம் அவளையே பாத்திண்டிருக்கேன்..? வெங்கடேசன் என் இடுப்புல குத்தினான்..!

அதுக்கப்புறமா அடிக்கடி எங்காத்துக்கு வருவா .. எங்கம்மா வ பாக்கிற சாக்குல.. “மாமி மிளகாப் பொடி இருக்கா..? இந்த வாரம் கல்கி இருக்கா.? விகடன் வாங்கிட்டேளா.? தலைய பிண்ணி விடுங்கோளேன் மாமி.. அம்மா ஆத்துல இல்ல”ன்னு இப்படி பல பல காரணங்கள்..!! அப்பதான் அம்மா கிட்ட சமையல் கத்துண்டு இருப்பா போல..!ஓரப் பார்வையா என்ன பாத்துண்டே அடு்க்களை, புழக்கடை வரைக்கும் போவா அம்மாவத் தேடிண்டு..! எனக்கு பட படன்னு பயமா இருக்கும் அவ வந்தாலே..! அம்மா கூட பாவாடை ப்ளவுஸ் பிட்டுனு அடி்கடி அவள கூப்டு வெச்சு குடுப்பா.. !

“அப்பா.. சாப்டரேளா.?” ன்னு கேட்டுண்டு விசாலாக்க்ஷி வந்தா திண்ணகிட்ட .. தோச சாப்டுங்கோன்னு தட்டை நீட்டினா..! நான் சொல்லல.. ஜானுதான் தோச பண்ணின்டிருக்கா.? தொட்டுக்க மிளகாப் பொடி நெய் விட்டு.. காரமில்லாம ..!

“ஜானு.? ஜானு எங்க.?”ன்னு பாதி சைகையால கேட்டேன்..

“அம்மா அடுப்படியில வேலையா இருக்கா .. மோடையெல்லாம் துடைக்கணுமே!” ன்னு சொன்னா விசாலாக்க்ஷி..!

ஆமாம். இந்த பொம்மனாட்டிகளுக்கு மட்டும் ஓய்ச்சல் ஒழிவே கிடையாதே.. நாங்கல்லாம் ரிட்டயர்டு ஆகி ஜம்முனு ஈஸி சேர்ல உக்காந்திடரோம்..ஆனா அவங்கதான் பாவம்..!

“நீ போய் அவள வரச் சொல்லும்மா..!” னு சொன்னேன்..!

“சரி மாமா” ன்னு உள்ள போய்ட்டா விசாலாக்ஷி..!

தோச முறுகலா பண்ரதில்ல இப்பெல்லாம் “பல்லு போய்டுத்தே வாய்ல குத்தும் னு தான் ” னு காரணம் சொல்லுவா ஜானு..!

அடிக்கடி வாய்க்காலுக்கு தோய்க்க வரும்போது ஜானகி என்னத் தேடுவா.. எங்க இருந்தாலும் என் முகத்துல பளிச்சுனு வெளிச்சம் அடிச்சா அது அவதான்.. தள்ளி இருக்கிற தோய்க்கர கல்லுல துணிய சோப்பு போட்டுண்டே கை மோதிரத்த வெய்யிலுக்கு வாகா திருப்பி என் மூஞ்சில படர மாதிரி அடிப்பா பாருங்கோ.. எனக்கு வாய்க்கா தண்ணிலயும் வேர்த்து கொட்டிடும்.. என்னதான் தைரியமோ இந்தப் பொண்ணுகளுக்கு ..? நம்மால ஆகாதுப்பா..! எச்சில முழுங்கிண்டு அவள பாத்து சிரிப்பேன்.. மெல்லமா.!. வெங்கடேசன் அந்தப் பக்கமா திரும்பி நின்னுண்டு சிரிப்பான்.. கடங்காரன்..!

மெல்லமா தோசைய விண்டு விண்டு வாய்ல போட்டேன்.. ஜானு வந்தா உள்ள இருந்து.. கூப்டேளான்னு கைய தலப்புல துடச்சிண்டே வந்து நின்னா பாருங்கோ.. இன்னும் அதேமோதிரம் போட்டுண்டிருக்கா.. இப்ப சைஸ் கரெக்டா இருக்கு கழண்டு விழரதில்லை..

“வாம்மா..வந்து இப்படி காத்தாட உக்காரு.எத்தன நாழிதான் அடுப்படியிலயே அடைஞ்சு கிடப்ப.?”னு சொன்னேன்.. என் கால் பக்கமா வந்து உக்காந்துண்டா ஜானு.எப்பவுமே எம்பேச்சுக்கு மறுபேச்சில்ல அவகிட்ட..!

மேல கீழயும் தோச விழர்து.. ஜானுதான் நெஞ்சு மேல விழுந்த தோசைய எடுத்து வாய்ல போட்டா..!

“அப்பா.. கைய அலம்பிக்கிரேளா?” ன்னு சொம்பு ஜலத்தோட வந்தா விசாலாக்க்ஷி.. திண்ணையோரமாவே அப்படியே அலம்பியும் விட்டா..! கையில சின்ன காப்பி டம்ளர்…!

“ஜானு இப்பல்லாம் ஏன் காபி சூடாவே இல்ல?” ன்னு கேட்டேன்..

“நீங்கதான் மேலயும் கீழயும் கொட்டிக்கிறேளே.. சுடுமேன்னுதான் சூடு குறைச்சலா காபி போடச் சொல்ரேன் விசாலா கிட்ட”னு சொன்னா ஜானு.. கரெக்டுதான்.. நிறைய சிந்தறேன் இப்பெல்லாம்.. கை நடுங்கர்தே..!?

காபி ம்ளர விசாலாக்ஷி வாங்கிண்டு உள்ளபோய்ட்டா..!

“என்ன யோஜன பலமா இருக்கு?” னு கேட்டா ஜானு.!

“ஒன்னுமில்லம்மா.. பழைய யோஜன.. ! ஞாபகம் இருக்கா நீ மோதிரம் தொலச்சது.. ?

“வாய்க்கால்தானே..? நன்னா ஞாபகம் இருக்கே..? பள பளன்னு விரிஞ்ச மாரோட நீங்கதானே வந்தேள் ஆபத் பாந்தவரா.? டக்குனு தண்ணிக்குள்ள போய் எடுத்து குடுத்துட்டேளே ன்னு எப்பவோ நடந்தத இப்பவும் ஆச்சர்யமா சொன்னா ஜானு..!

என்னப் பத்தி பேசினாலே கண்ணு விரியும் அவளுக்கு.. இப்பவும்..!

அப்ப ரோட்ல யாரோ நிழலா நடந்து போறது தெரிஞ்சது .யார்னு உத்து பாத்தேன்.. அட சுப்புணிதான்.! அவனுக்கும் வயசாய்டுத்தே..?! வெங்கடேசன் இல்ல கொஞ்ச நாள் முன்னாடி காலமாய்ட்டான்..! எனக்குதான் இன்னும் வேள வரல..!

சுப்புணி நேரா திண்ண கிட்ட வந்தான்.. பழைய கண்ணாடி வழியா என்னையே வெறிச்சு பாத்தான்.. நெறைய இருமரான்.. பீடி , சிகரெட்டுக்கு பஞ்சமில்ல போல இன்னும்..!

“எப்படிடா இருக்க சுப்புணி ?” சைகையிலயே கேட்டேன். ? நல்லா இருக்கேன் சாரி.. நீ எப்படி இருக்க?” னு கேட்டான்.. அவனும் பாதி சைகைதான்.. ஆனா மனசுக்கு பாஷை தேவையில்லயே..?!

“இதோ பாக்கிறயே.? நானும் ஜானுவும்.. ஜம்முனு இருக்கோம் பாரேன் !”னு சொன்னேன்.. !

“ஞாபகம் இருக்கா ஜானு..? வெங்கடேசன் தம்பி..!”

“நீங்க சொல்லித்தான் தெரியுமா உங்க மூனுபேரையும் நன்னா தெரியுமே!” ன்று சொன்னா ஜானு..

வெங்கடேசன் தான் எனக்கும் சுப்புணி்க்கும் சிகரெட்டு பழக்கம் சொல்லித் தந்தது.. வாய்க்கா ஓரமா அந்தப் பக்கமா மறைஞ்சு மறைஞ்சு ஒரே சிகரெட்ட பாதி பாதியா அடிப்போம்..எல்லா வாண்டுகளையும் போலத்தான்.. ஒரே இருமலா இருக்கும்…ஆனா அம்மா வுக்கு இதல்லாம் தெரியாது..ஆனா ஒரு நாளைக்கு ஜானு பாத்துட்டா.. கையும் புகையுமா புடிச்சிட்டா மூனு பேர்த்தயும்.. ஒரே அழுகை.. வெங்கடேசும்.. சுப்புணியும் ஒரே ஓட்டமா ஓடிட்டாங்க..ஜானு அழுது புலம்பி தலையில அடிச்சி சத்தியம் வாங்கிட்டா..

பத்த வெச்ச உடனேயே அணைஞ்சு போச்சு என்னோட சிகரெட் பந்தம்.! இல்லன்னா நானும் சுப்புணி மாதிரி இருமிண்டு இருந்திருப்பேன். இப்பவும் எனக்கு இருமர்து.. ஆனா இவன மாதிரி இல்ல.

“சுப்புணி ஜானு ரவா தோச செஞ்சிருக்கா? சாப்டரியா?” ன்னு கேட்டேன்!

“ஆமாம் உக்காருங்கோளேன்..ரெண்டு தோச சாப்டுங்கோ.”ன்னு கூப்டா ஜானு.!

சுப்புணி என்னயே வெறிச்சு வெறிச்சு பாத்தான்.. இல்ல எனக்கு பசிக்கல.. நான் சாவகாசமா வர்ரேன்னு சொல்லிட்டு..மெல்லமா நடந்து போய்ட்டான்… என்னமோ போகும்போது ஜானு கிட்ட சொல்லிண்டு போகணும் கூட தோணல அவனுக்கு..! அவனுக்கும் வயசாரதே! மறந்திருப்பான்.! சரி விடுங்க..!

நேரமாய்டுத்து .. விளக்கேத்தியாச்சு.. விளையாடப் போன பேராண்டி ஓடி வந்தான்..வழக்கம் போல அம்மான்னு கத்திண்டே.. பாட்டிய ஏறெடு்த்து கூட பாக்கலை…

“பாத்துடா..! படியில தடுக்கிடப் போறது!” ன்னு பதட்டப்பட்டா ஜானு.. ஆனா அவன் காதுலயே போட்டுக்கல…. பேரனோட செட்டு விக்கி வாண்டு வந்தான்..வழக்கம்போல திண்ணய புடிச்சிண்டு எங்களையே பாத்தான்..

” தோச சாப்டிரியாடா ? னுைகேட்டேன்.. “ஜானு புள்ளாண்டானுக்கு தோச குடேன்”னு கேட்டேன்.. “இதோ தரேனே!” ன்னு உள்ள போனா ஜானு..!

விக்கியோட அம்மா அவன தேடிண்டு வந்தா..! “என்னடா பண்ர.?”ன்னு கேட்டுண்டே..!

“நான் தாத்தா கூட இருக்கம்மா..தாத்தா தோச தோசன்னு ஏதோ சொன்னார் .. ஜானு ஜானு ன்னு கைய காமிச்சு பேசினார்மா” னு அம்மா கிட்ட சொன்னான் விக்கி.!

“சரி.சரி.வாடா.. டைம் ஆரது படிக்கணும்.. ஹோம் ஒர்க் செய்யல இன்னும்” னு கூட்டிண்டு போய்ட்டா அவன் அம்மா.!

சொல்ல மறந்துட்டனே.? இந்த திண்ணதான் எனக்கும் ஜானுவுக்கும் இந்த வீட்லயே ரொம்ப பிடிச்ச இடம்..! அவள நான் பொண்ணு பார்த்ததே இந்த திண்ணையிலதான்.. ஆமாம்.. ஜானு வீடு சின்னதுங்கரதால அம்மாதான் “நம்ம ஆத்துலயே வெச்சுக்கலாம் பொண்ணு பாக்கிற ஃபங்க்ஷன “ன்னு சொல்லிட்டா.. ஜானு அப்பாவும் அம்மாவும் மொதல்ல ஒத்துக்கலை..! ஆனா அம்மா ஸ்ட்ரிக்டா சொல்லிட்டா.. “ஜானு எங்காத்து பொண்ணு.. அவள மாட்டுப் பொண்ணா நான் பாக்க ஆரம்பிச்சு ரொம்ப நாளாச்சு.. அதனால ஃபார்மாலிட்டிலம் பாக்காதீங்கோ.. ஊர்க்காரா வரணும் உக்காரணும்னா இடம் வேணும்ல ?” னு கேட்டா அம்மா.! ஜானு அப்பாக்கு கண்ணு கலங்கிடுத்து..!

நான் அப்பா .. ஊர்க்காரா லாம் இந்த திண்ணையிலதான் உக்காந்திருந்தோம். எங்காத்துக்குள்ள இருந்து அம்மாதான் ஜானுவ கூட்டிண்டு வந்தா.. “பொண்ண நன்னா பாத்துக்கோடா”ன்னு என்ன அதட்டினா அம்மா.!

நான் தலயத் தூக்கவேயில்ல… ஆனா லைட்டா என் மூஞ்சில வெளிச்சம் தெறிச்ச மாதிரி இருந்தது.. ஜானுதான் அது .! கடங்காரி..! என்ன துணிச்சல் அவளுக்கு.? னு ஆச்சர்யமா இருந்தது..

“எல்லாம் படித்துறையில பாக்காததா..! புதுசா பாக்க போறான்?”னு ஒரு குரல் கூட்டத்துல இருந்து..ராஜாம்பா மாமிதான்…நாக்க புடிங்கிக்கலாம் போல வெக்கம் வெக்கமா வந்தது..

“எல்லாம் எங்காத்து புள்ள தலையத் தூக்கி பாக்காது தெரியுமோன்னோ” ன்னு வக்காலத்து வாங்கினா அம்மா..!

அப்பெல்லாம் கரெண்ட் இல்லன்னா.. பல நாட்கள் நான் இதே திண்ணையில தான் படுப்பேன்.. அப்பா அம்மா தூ்கினபின் ப்ரபுவ தூங்க வெச்சிட்டு ஜானு வும் திண்ணக்கு வந்துடுவா.. என் கைகால புடிச்சி விட்டுண்டே ரொம்ப நேரம் பேசிண்டு இருப்போம்.. நான் கூட அவ கால புடிச்சி விடுவேன்.. சங்கோஜப் படுவா.. காட்ட மாட்டா.. ஆனா பாவம் நாள் முழுக்க அடுப்படியில நிக்கிற கஷ்டம் எனக்கும் தெரியுமே..!

இப்ப கூட நான் திண்ணையிலதான் படுக்கர்து.. ஜானு உள்ள ரேழியில படு்துப்பா..பெஞ்ச்ல..! திண்ணையில ஃபேன் வெச்சு , கொசு வலையெல்லாம் கட்டித் தந்திருக்கான் ப்ரபு..நல்ல புள்ள..!

வாசல்ல ஸ்கூட்டர் சத்தம் கேக்கர்து.. ப்ரபு தான் ஆஃபீஸ் முடிஞ்சு வந்துட்டான்..! பாவம் அலைச்சல்தான்..!

கையில காய்கறி கூடையோட வந்து என் பக்கத்துல உக்காந்தான்..!

“என்னப்பா? ஆஃபீஸ் முடிஞ்சுதா?” ன்னு கேட்டேன்.. வழக்கம் போல சைகையிலதான்…வெறும் ஆபீஸ் மட்டும்தான் வாய்ல காத்து காத்தா வந்தது..!

ஆனா அவன் புரிஞ்சிண்டட்டான்.. “ஆ.. ஆங் முடிஞ்சுதுப்பா.. நீங்க எப்படி இருக்கேள் ? உடம்பு எப்படி இருக்கு.. காபி டிபன் சாப்டேளா?” ன்னு வாஞ்சையா கேட்டான்..!”

ஓ..! ஆச்சே.!. கை கால அலம்பிண்டு வா ஜானு தோச பண்ணியிருக்கா சாப்டு”ன்னு சொன்னேன்.. !

“ஓ !! தோசையா !? யார் செஞ்சது.. ? அம்மாவா.. சூப்பர் .. இதோ சாப்டரேன் பசிக்கர்து” ன்னு உள்ள எழுந்து போனான் ப்ரபு..!

கொஞ்ச நேரத்துல திரும்ப வந்தான்.. வர்றேளா? டைம் ஆய்டுத்து ..! பாத் ரூம் போலாம்.. போய்ட்டு வந்துட்டு படுத்துக்கோங்கோன்னு கைய புடிச்சி சைடு ரேழி வழியா பாத் ரூம் கூட்டிண்டு போய் உக்கார வெச்சான்..எனக்கு வசதியா இருக்கணுமேன்னு சைடுல ஒரு புது டாய்லெட் பாத் ரூம் கட்டியிருக்கான் ப்ரபு.. வெஸ்ட்டர்ன் டைப்புதான் ..!

இப்பல்லாம் டாய்லெட்ல உக்காந்த உடனே சுச்சூலா ம் வர்ரதில்ல ..ரொம்ப லேட்டாரது.. கேட்டா “வயசாரதே .. அப்படித்தான் இருக்கும்”னுட்டார் டாக்டர்..!

பாத் ரூம் போய்ட்டு வந்தப் புறம் மெல்ல பெட்ல படுக்க வெச்சான் ப்ரபு..

“ஜானு .!! எங்க.? எங்க போய்ட்டா”னு கேட்டேன்.. ?

“யாரு.? அம்மாவா..? அம்மா உள்ள படுத்துண்டுட்டா.. டயர்டா இருக்காம்”னு சொன்னான் ப்ரபு.. “ஆமாம்ல அவளுக்கும் வயசாரதே.. பாவம்..!” னு நினச்சுண்டேன்.!

“எதாவது வேணும்னா கூப்டுங்கோப்பா.. நாங்க இங்கதான் இருக்கோம்” னு சொன்னான் ப்ரபு.. திண்ணையோரமா உள் ரூம்தான் அவன் பெட்ரூம்.. நான் ஏதாவது பலமா இருமினாலும் உடனே லைட்ட போட்டுண்டு வந்துடுவான் குழந்த பாவம்.. ! பெட்ல ஈரம் பண்ணிட்டனான்னு செக் பண்ணுவான் அக்கறையா.!

இப்பலாம் அடிக்கடி பெட்லயே ஈரம் பண்ணிடரேன்.! அதத்தான் தவிர்க்க முடியல.!

காலைல ஆஃபீஸ் போரதுக்குமுன்னாடி ப்ரபு என்ன டாய்லட்லாம் கூட்டிண்டு போவான்.. பக்கத்து க்ளினிக்ல இருந்து ஒரு நர்ஸ் ஸையும் ஏற்பாடு பண்ணி இருக்கான் அவசர உதவிக்கு..!ஆனா அவள் வர்துக்கு பதிலா ஜானுவே என்ன பாத் ரூம் கூட்டிண்டுபோலாமேன்னு தோணும்.ஆனா பாவம் ஜானுவாலயும் என்ன தூக்கி நிறுத்தி உக்கார வெக்கமுடியாதே.. ஆனா மூனாவது லேடீஸ் முன்னாடி குளிக்கர்து. அவ டாய்லட் அலம்பி விடரதெல்லாம் ..வெக்கம் கலந்த வேதனைதான் போங்க..!

ஜானுகிட்ட இத சொன்னா..” போதும் போங்கோ .! நீங்க எப்பதான் வெக்கப் படல.. ? இத்தன வயசானப்புறமும் வெக்கப் பட்டா எப்படி?” னு அதட்டுவா..!

ராத்திரி தூக்கம் சரியா வரல.. உள்ள பேச்சு சத்தம் கேட்டுது.. ப்ரபுவும் விசாலாட்சியும்தான்..

“ஏண்ணா..! இப்பல்லாம் அவரால ஒன்னும் முடியல..! அடிக்கடி பெட் வெட் பண்ரார்..! நான் ஒருத்தியா பொம்மனாட்டி என்ன பண்ணுவேன்..? நேத்து கூட பகல்ல நீங்க போனதுக்கு அப்புறம் சேர்ல உக்காந்துண்டே டாய்லெட் போய்ட்டார்..ரொம்ப நேரம் எனக்கு தெரியல.. அப்புறம் தெரிஞ்சு ஓடிப்போய் நர்ஸ் ஸ கூட்டிண்டு வந்தேன்” னு சொன்னா..!

“என்ன பண்ரதும்மா.. ! எனக்கும் புரியல.. ஏதோ பக்கத்துலயே க்ளினிக் இருக்கர்தால சமாளிக்கிறோம்..”னான் ப்ரபு.

“அடிக்கடி ஜானு..ஜானு ன்னு அம்மாவ கூப்டு அவா கிட்டயே பேசிண்டு இருக்கார்..பாவம்..!”

“ஆமாம்மா. அம்மாதான் அவராட பேச்சுத் துணையே இப்பெல்லாம்!” னான் ப்ரபு..!

“சேர்ல உக்காந்து படுக்கையில படு்த்தே அவருக்கு முதுகெல்லாம் கொஞ்சம் புண்ணு வரவும் ஆரம்பிச்சிருக்கு..! நான் நர்ஸ்கிட்ட பவுடர் போட்டு விடச் சொல்லியிருக்கேன்”னு சொன்னா விசாலம்.!

“ஓ…!!

“அவரும் ரொம்ப கஷ்டப்படரார்ணா.. நினைவு தப்பர்து அடிக்கடி..பேசரதும் புரியர்தில்ல …!

“என்ன பண்லாம் விசாலம்” னுகேட்டான் ப்ரபு..

“தப்பா நினைச்சுக்காதேள்.. நர்ஸ் சொன்னா திருச்சில ஓல்டு ஏஜ் ஹோம் இருக்காம்.!. உடம்பு சரியில்லன்னா கூட பத்திரமா பாத்துப்பாளாம்..! உள்ளயே ஹாஸ்பிட்டல் வசதி இருக்காம்..! டாக்டர்ஸ் ரெகுலரா வந்து பாக்கறாளாம்..! அவர் சௌகர்யமா இருக்கணும்னா அங்க சேத்திடலாம்”னு சொன்னா விசாலம்..!

கொஞ்ச நேரம் அமைதி..!

எனக்கு பட படன்னு வந்தது..ப்ரபு என்ன சொல்லுவானோன்னு பதட்டமா இருந்தது.!

கொஞ்ச நேரம் அமைதிக்கு பிறகு ப்ரபு … “ஆமாம் விசாலம் நீ சொல்ரதும் ப்ராக்டிகலா சரியான யோசன தான்.. நீ அட்ரஸ் குடு நான் நாளைக்கு போய் விசாரிக்கிறேன்” னு சொன்னான் ப்ரபு ..!

அவன் சொல்ரத கேட்டதும் எனக்கு என்ன சொல்ரதுன்னே தெரீல! அழுகை அழுகையா முட்டிண்டு வர்ரது..!

டே ..! ப்ரபு..!! ஏன்டா இப்படி சொன்ன ? உன் கஷ்டம் எனக்கு புரியர்துடா ..! ஆனா நான் என்னடா பண்ரது..! பிறந்ததுல இருந்து இந்த வீடுதான்டா எனக்கு..! இந்த திண்ணையையும் ஜானுவையும் விட்டுட்டு நான் எங்கடா போவேன்..ஜானுவால என்ன விட்டுட்டு இருக்க முடியாதுடா..! டேய் ப்ரபு உன்னோடயும் பேரன் பேத்தியோடயும் கடைசி வரைக்கும் இந்த வீட்ல நானும் ஜானுவும் இருக்கர்துதான்டா நாங்க வாழ்ந்ததோட அர்த்தமே..! வேணான்டா ப்ரபு ..! இனிமே டாய்லட் வந்தா விசாலத்துகிட்ட முன்னாடியே சொல்லிடரேன்டா…! இல்லன்னா சுப்புணிய கூப்டு வெச்சுக்கலாம்டா பகல்ல…என்னய எங்கயும் அனுப்பிடாதடா ப்ரபு.. னு மனசுக்குள்ள ரொம்ப கெஞ்சினேன் அவன்கிட்ட..!

தூக்கம் வரல சுத்தமா.. பொரண்டு பொரண்டு படுத்தேன்.. இன்னிக்கு வெய்யில் அதிகம்.. காத்து இல்ல..ரொம்ப வியர்த்து வியர்த்து கொட்டித்து.. !

“ஜானு..ஜானு ” ன்னு ஜானகி ய கூப்டேன்..!

அவளும் தூங்கல போலிருக்கு..!

“என்னண்ணா..? கூப்டேளான்னு வந்தா ஜானு..!

“கொஞ்சம் தூத்தம் குடு ஜானு.. ப்ரபு சொன்னத கேட்டியா..? என்ன எங்கியோ ஆஸ்பத்திரிக்கு அனுப்பரேங்கரான்..ஏன் நீயெல்லாம் இருக்கியே என்ன பாத்துக்க மாட்டியா? என்ன விட்டு எப்படி இருப்ப நீ..?” னு கேட்டேன்.. !

“உங்கள விட்டு நானெங்கண்ணா போகப் போறேன்..? நீங்க போனா நானும் கூடவே வந்துட்டு போறேன்.. கவலப் படாதீங்கோ..”ன்னு ஆறுதல் சொன்னா ஜானு.!

“அந்த ஃபேன கொஞ்சம் ஸ்பீடா வைய்யி..ஜானு.. ரொம்ப வேர்த்துக்கொட்ரது.. சரியா பேச முடியல என்னால.! னு சொன்னேன்..

“ஏன் உடம்ப போட்டு படுத்திக்கறேள்..? கவலப் படாதீங்கோ” னு சொல்லிட்டு நெஞ்சு கை காலெல்லாம் துடச்சி விட்டா ஜானு .!

நல்லா காத்து அடிக்க ஆரம்பிச்சிது… “அப்பாடா இப்பதான் தூக்கம் வர்ரது ஜானு..எங்கைய அப்படியே புடிச்சிக்கோ.. ” னு சொல்லிட்டே ஜானு கைய புடிச்சிண்டே தூங்க ஆரம்பிச்சேன்..!

காலைல விடிஞ்சு அஞ்சரை ஆறு மணி இருக்கும்…என் திண்ண பக்கம் நெறைய பேரு கூட்டமா..!

திண்ணை நடையெல்லாம் யெல்லாம் அலம்பி விட்ருந்தா..!

ப்ரபு வேற …..என்ன ஆச்சுனு தெர்ல.!!? அழுதிண்டிருந்தான்.!

இவ்ளோ நேரம் ஆகியும் கோலம் கூட போடாம இத்த விசாலம் ஏன் ஊர் வம்பு அடிச்சிண்டு இருக்கான்னு தெரியல..!

விக்கி அம்மா விசாலத்து கிட்ட கேட்டாங்க ..!

“எப்படி ஆச்சு .? எத்தன மணிக்கு?

“தெரியலை மாமி.. வெடிகாத்தால ரெண்டு மூனு மணி வரைக்கும் கூட இருமிண்டு இருந்தார்! அதுக்கு அப்புறம்தான்னு நினைக்கிறேன்”னு சொன்னா விசாலம்..!

ஆமாம்மா மாமி.. கொஞ்ச நாளாவே மாமா உடம்பு சரியில்ல..! ரொம்ப தளர்ந்துட்டார்..! னு கவலையா சொன்னா விக்கி அம்மா..!

“ஆமா மாமி.. அடிக்கடி எப்பவோ காலமாய்ட்ட எங்க மாமியார வேற பேர் சொல்லி….ஜானு .. ஜானு ன்னு பேச ஆரம்பிச்சிட்டார் ..! பழைய நெனவெல்லாம் வர்ரது போல..! தனக்குத் தானே ஏதேதோ பேசிண்டு..! நெனப்பும் அடிக்கடி தப்ப ஆரம்பித்துடுத்து மாமி..!”

“ஆனா பாருங்கோ ஒரு சப்தம் இல்லாம கவலையில்லாம ..தொல்லையில்லாம பகவான் கிட்ட போய் சேர்ந்துட்டார்..! இத்தன வருஷம் ஜம்முனு வாழ்ந்த மனுஷன்…! சுபம்தான் மாமி இது..! கவலப்படாதீங்கோ”ன்னு சொன்னார் விக்கியோட அப்பா..!

“தங்கையாத்துக்கு சொல்லியாச்சா.?”ன்னு கேட்டார்..!

“ம் .. சொல்லிட்டோம் மாமா..! வந்துண்டிருக்கா எப்ப வேணும்னாலும் வரலாம் “னு சொன்னான் ப்ரபு..

நெறைய பேர் வர ஆரம்பிச்சா..!

நான் ஆச்சர்யமா அவாளையே பாத்திண்டிருந்தேன்.. ஜானு என் பக்கத்துல வந்தா.. !

“இவால்லாம் என்ன சொல்ரா.? ஜானு..என்ன ஆச்சு? என்ன ஹோம் கு கூட்டிண்டு போகப் போறாளா?”ன் னு கேட்டேன்..!

“நீங்க கவலப் படாதீங்கோ..! நாம எந்த ஹோமுக்கும் போகப் போறதில்ல..! சுசீலா வந்துண்டு இருக்காளாம்.. ! அவளையும் பேரன் பேத்திய பாத்து எத்தன நாளாச்சு. ? வாங்கோ அவ வர்ர வரைக்கும் நாம காலார வாய்க்கால் பக்கம் போய்ட்டு வரலாம்.!. இங்க இவாளோட கூட்டத்தில நமக்கு என்ன வேலை..?”ன்னு கேட்டுண்டே ஜானு என் கையப் புடிச்சிண்டு நடக்க ஆரம்பிச்சா..!

நானும் கூடவே தெருவில எறங்கி நடக்க ஆரம்பிச்சேன்.. அட என்ன ஆச்சர்யம்..?! ரொம்ப சுலபமா எனக்கு நடக்க வர்ரதே..?!.ரொம்ப தெம்பா இருக்கு… ரொம்ப நாளைக்கு அப்புறம்..! காத்து வேற சில்லுனு முகத்துல ..!

இங்கயே வாய்க்கால் காத்தும் நெல்லு வாசமும் அடிக்க ஆரம்பிச்சிடுச்சு.. மூச்ச ஆழமா இழுத்து விட்டேன்..!

ஜானு புடிச்சிருந்த என் கையில ஏதோ நெருடித்து.. பளிச்சினு மூஞ்சில ஒரு வெளிச்சம் தெறிச்சிது.. என்னன்னு பார்த்தேன் .!

அவ போட்டிருந்த பச்சக் கல்லு மோதிரம்தான்..!

நான் ஜானுவ பார்த்து வெக்கமா சிரிச்சேன்..அவளும்தான்…!

இனிமே இதுதான் எங்க வாழ்க்கைனு புரிஞ்சிது..!

எதிர்க்க சுப்புணி வர்ரான் கொஞ்சம் வேகமா..எங்கள கவனிக்கல …! ஏதோ அவசரம் போல்ருக்கு.. சரி போகட்டும்…!

நானும் , ஜானுவும் காலாற வாய்க்கா பக்கம் நடக்க ஆரம்பிச்சோம்..!

Print Friendly, PDF & Email

1 thought on “நான் சாரங்கபாணி..!

  1. classic short story. Presentation of the story is amazing.
    Very touching at the end.
    In fact during the course of reading I could not imagine his wife Jaanu is no more.
    Would like to read more and more his stories.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *