கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: January 24, 2013
பார்வையிட்டோர்: 10,469 
 
 

நான் வந்து சொன்ன பிறகுதான் அவனுடைய மரணம் வேளியே தெரிய ஆரம்பித்தது. எங்கள் அப்பார்ட்மெண்ட்டில்வசிப்பவர்கள் ஒவ்வொருத்தராய் எரிச்சலுடன் வந்து கூட ஆரம்பித்தார்கள்.அனுபவித்துக் கொண்டிருக்கும் ஞாயிறு தின சுகத்துக்கு இடையூறு இது.

”என்ன சார்!. எல்லாரும் பொணத்தை போட்டு வெச்சிட்டு இப்படியே பேசிக்கிட்டு காலத்த ஓட்டினால் .என்ன அர்த்தம்?. நேரமாகுதில்ல? .. ராமநாதன் சார்! கார்பரேஷனுக்கு போன் அடியுங்க. . சீக்கிரமா வந்து பாடியை கிளியர் பண்ணச் சொல்லிடுங்க.நொந்த உடம்பு., லேட்டானால் ஏரியாவே நாறிடும்.”

”ஆமாம்பா! மிஸ்டர். கதிரேசன்! நீங்களும் போன் பண்ணுங்க.. இருட்றதுக்குள்ள கிளியர் ஆவணும்..”.—. ..

”பாவம், பசியும், பட்டினியுமா கிடந்து செத்தான்… கால்ல புழு வெச்சிட்டு,, அப்ப்பா…,கிட்ட வரும்போதே என்னா நாத்தம் .அடிக்கும்?. .என்னா கர்மமோ.?. இதெல்லாம் எப்பவோ பட்னு போயிருக்கணும்.. இப்படி வதைஞ்சி சாவணும்னு எழுதியிருக்கு பார். ஹும்!..”

“ நீங்க வேணா பாருங்க இந்த பேக்குப்பயல ஏமாத்தி சொத்தை எழுதி வாங்கினவங்கனுங்க புழுத்துப் போய்தான் சாவப் போறானுங்க. எம்பெருமான் பார்த்துக்குவார்.”—நெற்றியில் பட்டை அடித்துக் கொண்டிருந்த ஒரு ஆன்மீகவாதி. சபித்தார்…

”என்னத்த பார்த்துக்குவார்?. அவன்லாம் நல்லாத்தான் இருப்பானுங்கய்யா எத்தினி பார்க்கிறோம்.?..”

“ஆமாமா, எப்பவும் சத்தியத்துக்குத்தானே சோதனை..”

வீட்டுப் பக்கம் போனால் அவனை கொம்பெடுத்து துரத்தியவர்கள்தான் இவர்கள் அனைவரும்.. இரண்டொருவர் செல்போனில் கார்ப்பரேஷனுக்கு தொடர்பு கொள்ள முயன்றுக் கொண்டிருந்தார்கள்.. இத்தனைக்கும் காரணமான அவன் எதிரே இருந்த காலிமனையில் பிணமாய் கிடந்தான். அநாதை….

நான் தாம்பரத்திலிருந்து திருவல்லிக்கேணியில் இந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு குடிவந்த இரண்டாம் நாள் காலையில்தான் முதன் முதலாய் அவனைப் பார்த்தேன்… மெய்ன் கேட் வாசலில் நின்றுக் கொண்டிருந்தான்.. சிகப்பாக இருந்தான், வடஇந்தியமுகம், மேல்- சட்டையில்லாத மெலிந்த தேகம். பரட்டை.த்தலை, எந்த காலத்தில் போட்டதோ? அடையாய் அழுக்கேறி, உட்காரும் இடத்தில் நைந்துபோய் கிழிந்திருக்கும் காக்கி பேண்ட்,. தூரத்தில் சூன்யப் பார்வை, அடிக்கடி இல்லாத யாரையோ இந்தியில் திட்டிக் கொண்டிருந்தான். வலது பாதம் பலமாய் அடிபட்டிருக்கும் போல, வீங்கியிருந்தது. மேலே துணியைச் சுற்றி, சணல் கயிற்றால் கட்டி வைத்திருந்தான். ஒழுகிக் கொண்டிருக்கும் சீழில் துணி நனைந்து காயத்தில ஒட்டிக் கொண்டிருக்க,அடையாய் ஈக்கள் மொய்த்துக் கொண்டிருந்தன. அவன் வலி தாளாமல் விட்டு விட்டு கத்திக் கொண்டிருந்தான். ஒரு பார்வையிலேயே தெரிகிறது மூளை வளர்ச்சி குறைந்தவன்.

வாட்ச்மேன் ஒரு கொம்பை எடுத்து, நான் தடுக்க தடுக்க ஒரு அடிபோட்டு அவனைத் துரத்தினான். பாவம் அவன் ஊளையிட்டபடி எதிர் பக்கம் நொண்டி நொண்டி ஓட,. ஓடிய தடமெங்கும் அவன் காலிலிருந்து ரத்தம் சொட்டியது.-.

”நாலு பெரிய மன்சனுங்க போற வர்ற இடம், இங்க வராதடான்னா வந்து வந்து நிக்கிற. ..பிச்சிடுவேன்.”—வாட்ச்மேன் எச்சரித்தார்… அவனைப் பார்க்க பாவமாயிருந்தாலும் நம்மால எதுவும் செய்யமுடியாத போது, கூடிய வரைக்கும் இதையெல்லாம் பார்க்காமல் ஒதுங்கிப்போய்விடுவதே உசிதம். அதைத்தான் அன்றைக்கும் செய்தேன். ஆனால் சிலசமயங்களில் சம்பவங்கள் நமக்கென்றே நிகழ்வது போலிருக்கும். விடாது கருப்பு போல நம்மையே துரத்தும்.அப்படித்தான் அன்றைக்கும் நேர்ந்தது. .மறுநாள் காலையில் டியூட்டிக்குக் கிளம்பி வெளியே வரும்போது . கரெக்டாக எதிரில் நிற்கிறான். இப்போதும் வலியில் கத்திக் கொண்டுதானிருந்தான் பாவமாயிருந்தது. பாவம் எதையாவது வாங்கி சாப்பிட்டுக் கொள்ளட்டும் என்று ஒரு பத்து ரூபாய் தாளை எடுத்து நீட்டினேன். அவன் வாங்கவில்லை. அந்த இடத்தை விட்டு நகர ஆரம்பித்தான்.. பார்த்துவிட்டு வாட்ச்மேன் சிநேகமாய்கிட்டே வந்து
“காசு வாங்கமாட்டான் சார்! இட்லியோ,சப்பாத்தியோ, பரோட்டாவோ, வாங்கிக் குடுங்களேன்,, டக்குன்னு வாங்கிக்குவான்.”

“ பாவம் பசி மட்டும்தான் அவன் புத்திக்கு தெரியுது. ஆமாம், இவனுக்கு சொந்தம்னு யாரும் இல்லியா?”

“எல்லாம் எப்பவோ மேல பூட்ச்சிங்க சாரு.. இதுங்க பம்பாயிலிருந்து பத்து, பாஞ்சி வருசங்களுக்கு முன்ன இங்க வந்து செட்டில் ஆயிட்ட குடும்பமாம் சாரு. சேட்டு குடும்பம். இங்க பீடா ஸ்டால் போட்டுக்குனு பொழப்பு. நடத்திக்கிணு இருந்துச்சிங்க. அதுங்களுக்கு இவன் ஒரே புள்ள. அப்பன் எப்பவோ பூட்டான்.. மூணு மாசத்துக்கு முன்ன திடீர்னு இவன் அம்மாவும் பூட்டா. .இதோ எதிர்ல பொதாரா கீதே அந்த காலி மனை இவங்களுதுதான்.,சொந்த இடம் சாரு,. முப்பதுக்கு தொண்ணூறு… 2700 ச.அடி., ஒரு கிரவுண்டுக்கு மேல. இது இன்னா எடம் சாரு? திருடன் கிட்ட குடுத்தாக் கூட ரெண்டு மூணு கோடி போவும். இவன் எடந்தான் ஆனா இப்ப இல்ல.”

“ஏன்?.”

“ரெண்டாங்கெட்டானுக்கு இந்த ஒலகத்தில எடம் கிடையாது சாரு.. எல்லாம் இந்திக்காரனுங்க, கேப்மாரிப் பசங்க. இவன் அம்மா சாவுக்கு பம்பாயிலயிருந்து வந்தவனுங்க. . பொணத்த எடுத்துப் போட்டுட்டு, ஒரு பத்து நாளு இங்கியேயிருந்துக்கிணு இவனுக்கு வேளாவேளைக்கு சிக்கனும், பரோட்டாவுமாய் வாங்கிக் குடுத்தே கையெழுத்தோ, கைநாட்டோ, வாங்கி, கமுக்கமா ஒரு சேட்டுக்கு வித்துட்டு இவனை அம்போன்னு வுட்டுட்டு பூட்டானுங்க. எடம் கைய வுட்டு பூட்ச்சின்னு கூடத் தெரியாம இந்த கயித இங்கியே சுத்திங் கெடக்குது. எல்லாம் விதி.”

எனக்கு ஐயோ பாவமே! என்றாகி விட்டது. என்ன கொடுமை இது?.
இப்போது எதிர் வாடையில் அவன் அங்கிருந்தபடி வாட்ச்மேனையே பயத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான்., .பார்க்க பாவமாய் இருந்தது.இரண்டு கோடி சொத்துக்கு அதிபதி இப்போது ஏமாற்றப்பட்டு நடுத்தெருவில்..நிற்கிறான்…பாவம் ஒரே பிள்ளைன்னு எவ்வளவு செல்லமா ஊட்டி ஊட்டி வளர்த்திருப்பார்கள்.?. இந்த சொத்தை விதரணையில்லாத இந்த பிள்ளைக்கு வெச்சிட்டுப் போக எத்தனை லட்சம் பீடாக்களை சுருட்டி வித்து சேர்த்தார்களோ… இன்னிக்கு பட்டினியும், பசியுமாய் கிடக்கிறான்.. அவனைப் பற்றிய ஒரு பரிதாப உணர்வு பச்சக்கென்று என்னுள்ளே வந்து ஒட்டிக் கொண்டது. மறுநாள் பரோட்டா பார்ஸலுடன் அவனை நெருங்கினேன். ஒன்றும் சொல்லாமல் கிட்டே வந்து வாங்கிக் கொண்டான். புதுசா தலையில அடிப் பட்டிருந்தது. ரத்தம் கன்னங்களில் ஒழுகிக் காய்ந்துப் போயிருந்தது.முட்டிகளில், முழங்கைகளில், சிராய்ப்புகள். அடிக்கடி கீழே விழுந்திடுவான் போல.

”க்யா ஹுவா? என்னாடா காயம்?” என்றேன். தெருக் கோடிப் பக்கம் காட்டினான்.

“அட்ச்சான்… தெவிடியாப் பையன் அட்ச்சான்’.

அழுகை போல் சொன்னான். எவனோ அடிச்சிருக்கான். செல்லுபடியாகும் என்பதால் பெண்களிடம் ஆண்கள் காட்டுகிற மாதிரி, இவன் கிட்டே யாரோ வீரத்தை காட்டியிருக்காங்க. என்னால் ரொம்ப நேரம் அங்கே நிற்க முடியவில்லை. அந்தளவுக்கு அவன் மேல் தாங்கமுடியாத துர்நாற்றம் வீசியது. அழுகல் நாற்றம். மூக்கைப் பொத்திக்கொண்டு குனிந்தேன். அந்த நேரம் வலி தாளாமல் அவன் தன் காலில் சுற்றியிருந்த துணியை பிரித்தெடுக்க. அய்யய்யோ! கடவுளே! இதென்ன கோரம்.? ரணம்.பாதத்தின் அகலத்துக்கு புரையோடிப் போய், சொதசொதவென்று சீழ்,. ரணத்தின் மேல் அரிசி கொட்டிவைத்தது போல இல்லையில்லை அது அரிசி இல்லை, கொசகொசவென்று புழுக்கள். அவ்வளவும் புழுக்கள், நெளிகின்றன. குமட்டிக் கொண்டு ஒரு முறை கொஞ்சம் வாந்தி எடுத்துவிட்டேன். உயிருள்ள மனிதர்கள் யார் மீதும் இவ்வளவு கோரத்தை நான் பார்த்ததில்லை. அடியெடுத்து வைக்கும் போது புழுக்கள் கீழே உதிர்கின்றன. எதையும் பொருட்படுத்தும் நிலையில் அவன் இல்லை. எனக்கு மனசு கேட்கவில்லை. இவனுக்கு நாம் எதையாவது செய்யவேண்டும். . யாராவது செய்யட்டும் என்றுஒதுங்கிப் போக மனமில்லை. உடனே மனவளம் குன்றியவர்களை வைத்து காப்பாற்றும் ஆஸ்ரமங்களின் தொலைபேசி எண்களை நெட்டிலிருந்து தேடியெடுத்தேன்..எப்படியாவது இவனை ஒரு ஆஸ்ரமத்தில் ஒப்படைத்து விடவேண்டும்.அப்போதுதான ஒரு கசப்பான நிஜத்தை சந்திக்க நேர்ந்தது .எல்லா ஆஸ்ரமங்களும் ஏறக்குறைய ஒரே மாதிரிதான் பேசின.

“சரீ! இவ்வளவு இண்ட்ரஸ்ட் காட்றீங்களே, அவன் உங்களுக்கு என்ன உறவு?”

“”சக மனுஷன்ற உறவுதான் சார். இங்க அடுக்குமாடி குடியிருப்புல தங்கியிருக்கிறவன் நான். எங்கள் குடியிருப்புக்கு எதிரிலதான் அவன் கிடக்கிறான். மூளை வளர்ச்சியில்லாதவன் காலில் புழு வெச்சி கோரம் ராத்திரியெல்லாம் வலியில் கத்தறான் சார்! ப்ளீஸ்! அந்த ஜீவனைக் காப்பாத்துங்களேன்.”

“எல்லோரும் இப்படித்தான் சொல்றீங்க. எத்தனை பாக்கிறோம்? புள்ளையே அப்பனை அனாதைன்னு தள்ளி விட்டுட்றான், புள்ளைய தள்ளிவிட்ற அப்பனுந்தான் இருக்கான். மூளை வளர்ச்சி இல்லாதவன் என்றதால பெத்தவளே தன் புள்ளய அனாதைன்னு சொல்லி இங்க கொண்டாந்து போட்டுட்டுப் போயிட்றா. அதுபோல எத்தனை பிள்ளைங்க இங்கே இருக்குதுங்க. தெரியுமா?.எல்லாத்தையுந்தான் பாக்கறோமே.. நாங்க மட்டும் என்ன பண்ணமுடியும்? உண்மையிலேயே அந்த ஆளு மேல உங்களுக்கு இண்ட்ரஸ்ட் இருந்தா. ஒரு பத்து நாள் வெச்சி வைத்தியம் பார்த்து, ரணம் ஆறினப்புறம் நீங்களேகூட்டி வாங்க அப்ப பார்க்கலாம்.”

லைனை துண்டித்துக் கொண்டார்கள். வெறுத்துப் போயிற்று.. சரி அவர்களுக்கு என்ன நெருக்கடியோ? அவனுக்கு என்னால் முடியறதை செய்யணும்.. முதல்ல புழுக்களை ஒழிக்கணும். ரணம் ஆறணும். ஆறின பிறகு நாமளே ஆஸ்ரமத்திலே கொண்டுபோய் சேர்த்திடுவோம். அந்த நிமிஷத்திலிருந்து அவ்வப்போது அவனுக்கு ஏதாவது உணவு வாங்கிக் கொடுக்க ஆரம்பித்தேன்.. என் அப்பா கொஞ்சம் கொஞ்சம் சித்த வைத்தியம் செய்வார்.. வேப்பெண்ணையில் வெள்ளை குங்கில்யம்,மிர்தார்சிங், ஒரு சிட்டிகை மயில்துத்தம், எல்லாம் போட்டு காய்ச்சுவார். படுக்கைப் புண்ணு வந்து புழு தள்ளிட்ட வயசான மனுசங்களுக்கு அதை உபயோகப் படுத்துவார். அப்பாவுக்கு போன் பண்ணி, அந்த எண்ணை எனக்கு வேண்டுமென்று சொன்னேன். .

” என்ன ரோட்ல எதனா வயசானதுங்க உன் கண்ல பட்டுட்ச்சா?. சரி..சரி நாளைக்கு ஒரு வேலையா அங்கதாண்டா வர்றேன். அப்ப கொண்டு வர்றேன்.. எனக்காக மெனக்கெடாதப்பா. நான் உடனே ஊருக்கு திரும்ப வேண்டியிருக்கு.நீ டியூட்டிக்குப் போ., எண்ணை பாட்டிலை வாட்ச்மேன் கிட்ட குடுத்திட்றேன் ,சரியா?.”—-

அப்பா அப்படித்தான். எவ்வளவு நேரமானாலும் வீட்டுக்குப் போயிடணும். மாலை டியூட்டி முடிஞ்சி வீட்டுக்கு வந்தப்ப அந்த எண்ணை தயாராக காத்திருந்தது. .எனக்குள்ளே கொஞ்சம் இடிக்கிறது. நாம செய்யறது என்னதான் புண்ணிய காரியம் என்றாலும் அதீதம்னு படுகிறது. எஸ்! அப்நார்மல். யாரால.. இப்படி வேளாவேளைக்கு செலவு பண்ண முடியும்? ,எத்தினி நாளைக்கு? நாட்ல எவ்வளவோ கெடக்குதுங்க..

ஆனால் கண்ணெதிரே ஒரு ஜீவன் வதையறதை என்னால பார்த்துக்கிட்டு சும்மா இருக்க முடியவில்லையே.. ’வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்னு சொன்னவனும் மனுசன்தான். .மனிதர்களை கூட்டம் கூட்டமாய் அழித்த ஹிட்லரும் மனுசன் தான்.அதுக்காக நான் வள்ளலாரும் இல்லை, ,ஹிட்லரும் இல்லை. இது ஜஸ்ட் உதவும் குணம், பண்பு, குட்வில் அவ்வளவுதான். இவன் அக்கம் பக்கம் எங்கியாவது போய் நின்றால் சனியன் புடிச்சவனை தொரத்துடா!. இப்படித்தான் எல்லாரும் பேசினார்கள்.. .

மறு நாள் காலையில் ஒரு இட்லி பார்ஸலைக் கொண்டுபோய் கொடுக்கிறபோது, படக்கென்று வேப்பெண்ணை கலவையை அவன் கால் ரணத்தின் மேல் சாய்த்தேன். எரிச்சல் தாங்காமல் அவன் ஓவென்று அலற, புழுக்கள் கீழே உதிர ஆரம்பித்தன.. வேகமாய் வந்து விட்டேன். கொஞ்ச நேரம் கத்திக் கொண்டிருந்தான். இந்தியில் என்னை ரொம்ப நேரம் திட்டிக் கொண்டிருந்தான். கேட்டது. மறுநாள் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.. மதியம் ஆறு இட்லி,சட்னுயுடன் அவனிடம் போனேன். கால் ரணம் ஆறிய பின்னால் அவனை ஆஸ்ரமத்தில் சேர்க்கிற வரைக்கும் முடிகிறபோது சப்ளை அண்டு சர்வீஸை தொடரும் எண்ணம் எனக்கு வந்துவிட்டது.., புதர் மனையில் சுருண்டுக் கிடந்தான். என்னைப் பார்த்ததும் எதுவும் பேசாமல் பாதத்தை நிமிர்த்திக் காட்டினான். ஆஹா! புழுக்கள் சுத்தமாய் இல்லை. ஒன்றிரண்டு செத்துப் போயி மேலே ஒட்டிக் கொண்டிருந்தன. வேப்பெண்ணை நாற்றத்தில் ஈக்கள் கூட மொய்க்கவில்லை.மனசு நிறைந்தது. ..சீக்கிரமே ரணம் ஆறிவிடும் என்ற நம்பிக்கை வந்தது..
“பாபுஜீ! பாபூ!…மேரா பாப் மர்கயா, மா மர்கயா!.”—துக்கத்தினாலோ, வலியினாலோ அவன் ஊளையிட்டு அழுதான். இந்த ஸ்டேஜில்தான் நான் ஒரு வாரம் லீவு போட்டு விட்டு வீட்டுக்கு போகவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. என் தங்கச்சிக்குக் கல்யாணம்.ஃபிக்ஸ் ஆயிடுச்சி. .திரும்பி வர ஒரு வாரமாகும். சரி இதுக்குமேல நாம என்ன பண்ணமுடியும்?.
வேப்பெண்ணை கலவை பாட்டிலை அவன் கிட்ட குடுத்து தினசரி தடவச் சொன்னேன். எந்த ரீயாக்ஷனும் இல்லாம பார்த்துக் கொண்டிருந்தான். அவன் கிட்ட சாப்பாட்டுக்கு ஐம்பது ரூபாய் தாளை கொடுத்துவிட்டு, மகனே உன் சமத்துன்னு கிளம்பிவிட்டேன். ஒரு பிச்சைக்காரனுக்கென்று மருந்து தயாரித்து, சப்பாத்தி குடுத்து, ஐம்பது ரூபாயும் பிச்சையும் போட்டு,….இல்லை. என்னைப் பொறுத்தமட்டில் அது பிச்சை இல்லைங்க, பரிவு மனுஷத்தனம். ஒரு பாவப்பட்ட ஜீவனுக்கு என்னாலான உதவி. மனசுக்கு நிறைவு. ஓட்டலுக்குப் போகிறோம்,முந்நூறு நானூறுன்னு கம்ப்யூட்டர் பில் வருது பில் சரியான்னுகூட செக் பண்றதில்லை. அப்படியே கொடுத்துட்றோம், சம்பளம் வாங்குகிற சர்வருக்கு அஞ்சி பத்துன்னு டிப்ஸ் வைக்கிறோம். இப்படி வாழ்க்கையில் தினந்தோரும் கணக்குப் பார்க்காமல் எவ்வளவோ பணத்தை வீண் செலவு பண்ணிக்கிட்டுத்தான் இருக்கோம். குடையும் உள் மனசுக்கும் சமாதானம் சொல்லிக் கொண்டேன். .

pio ஒரு வாரம் லீவு முடிந்து காலையில்தான் வந்தேன். ஏரியாவிலேயே எங்கியும் அவன் தென்படவில்லை. டியூட்டி முடிஞ்சி மாலை வீட்டுக்கு வந்தபோதும் அவன் இல்லை. சரி எங்கியோ தொலைந்தான்.. மறுநாள் காலையில் டியூட்டிக்கு கிளம்பறப்ப மனசு கேட்காமல் வாட்ச்மேனைக் கேட்டேன்

”தெரியல சாரு! நானும் பார்க்கல சாரு.. நாலு நாளைக்கு முன்னால பக்கத்துத் தெரு அம்மன் கோயிலாண்ட பார்த்தேன்… எல்லாம் அடங்கிப் போச்சி சாரு! ரொம்ப நாளு தாங்கமாட்டான். அநேகமாய் இந்நேரம் ஆளு பூட்டானோ இன்னாவோ. அனாதை பொணம், கார்ப்பரேஷன் லாரி வாரிக்கிணு பூட்டிருக்கலாம்…”.

. நிஜமாவே செத்துப் போயிருப்பானோ?., கார்பரேஷன் லாரி அள்ளிக்கிட்டுப் போயிருக்குமோ?. உண்மையில் அவனுடைய மரணம், அவனை விட என் மனசுக்குத்தான் பெரிய நிம்மதியைக் கொடுக்கும் போல இருந்தது. அன்றைக்கு மாலை அறையில் முகம் கழுவிக் கொண்டு வந்து உட்காரும் போதுதான் ஜன்னல் வழியாகப் பார்க்க நேரிட்டது.. எதிரே புதர் மண்டிக் கிடந்த மனையின் பின்புறத்தில் அவன் படுத்துக் கிடப்பது தெரிந்தது..ஐயோ1 கொடுமையே.

என் அறை இரண்டாவது மாடியிலிருப்பதால் பார்க்க முடிந்தது. உற்றுப் பார்த்தேன், சலனமில்லை. பாவி! போயிட்டியா? இறங்கி விரைந்தேன். செடி, கொடிகளை விலக்கிக் கொண்டுச் சென்றேன். உடம்பு ஒரு பக்கமாய் விறைத்துக் கிடக்க, உயிர் இருந்தது.. இந்த ஒரு வாரத்தில் கால் ரணம் அதிகமாகி சீழ் ஒழுகிக் கொண்டிருந்தது. மருந்து போட்டிருக்க மாட்டான். நான் பார்க்கும் போது இரண்டு மூன்று ஓணான்கள் கால் ரணத்தைச் சுற்றியிருக்கும் சதையை பிய்த்துத் தின்றுக் கொண்டிருந்தன., சத்தம்கேட்டு ஓடிவிட்டன. அவனுக்கு சுரணையே இல்லை.

”டேய்..! டேய்..!”

கழுத்து திரும்ப வில்லை, உடல் விறைப்பாகக் கிடந்தது. .தொட்டேன், கொதிக்கிறது. நல்ல ஜுரம்.. கண்கள் மட்டும் இடவலமாய் அலைந்துக் கொண்டிருக்க,. வேறு சலனமில்லை.. நான் ஓடிப் போய் ஒரு கப் பால் வாங்கிக் கொண்டு வந்தேன். அவன் வாயைத் திறக்கவில்லை, பல் கிட்டிக் கொண்டிருந்தது. சற்று நீக்கி நீக்கி கொஞ்சங்கொஞ்சமாய் ஊற்றினேன். இறங்கியது.. ஊற்றிக் கொண்டிருக்கும் போதே ஒரு ஸ்டேஜில் பால் உள்ளே இறங்காமல் வாயோரங்களில் வழிய ஆரம்பித்து விட்டது. போய்விட்டான். விடுதலையாகிப் போய்விட்டான். மூச்சு அடங்கி விட்டது. ஒரு நிமிஷம் அமைதியாக நின்றேன். எனக்கும் அவனுக்கும் என்ன உறவு? அவனுடைய கடைசிப் பால் நான் வார்க்க நேரிட்டதே. கடைசிவரைக்கும் உன் பேர் என்னான்னு கூட எனக்குத் தெரியாதேடா. சே! ஒவ்வொரு ஆன்மாவும். ஏதோ ஒரு கடமையை ஒட்டியே இந்த உலகில் பிறவியெடுக்கின்றன என்று எல்லா மதங்களும் சொல்கின்றனவே, இந்த ஆன்மா எடுத்த பிறவிக்கு என்ன கடமை இருந்திருக்க முடியும்? மனசுக்குக் கஷ்டமாக இருந்தது.
பிணத்தை எடுக்க கார்ப்பரேஷன்வண்டி இன்னும் வரவில்லை.. வந்தவர்களில் சிலரைத் தவிர மற்றவர்கள், அதான் தகவல் குடுத்தாச்சில்ல?,. இனிமேல் கார்பரேஷன்காரன் பாடு என்று சொல்லாமல் கொள்ளாமல், கையைக் காட்டிவிட்டு கழண்டு கொண்டனர்.. அதற்குள் விஷயம் தெரிந்து எங்கிருந்தோ வாயில் பீடியோடு வந்த நாலைந்து லுங்கி பரட்டைகள்வந்து, பாடியை புதர் மனைக்கு வெளியே ரோட்டோரம் இழுத்துப் போட்டார்கள். தலைமாட்டில் ஒரு சின்ன டப்பாவில் மண் கொட்டி அதில் நாலைந்து ஊதுபத்திகளை கொளுத்தி செருகி வைத்தார்கள். ஒருத்தன் ஓடிப்போய் ஒரு நாலு முழம் பூ வாங்கிவந்து முடிந்து பிணத்தின் கழுத்தில் மாட்டிவிட்டான். ரோட்டில் துண்டு விரித்து அண்ணன் பூட்டாருப்பா, அநாதை பொணம்பா என்று காசு வசூலிக்க ஆரம்பித்திருந்தனர்.. இது அர்ப்பணிப்போ, ஆதாயமோ?. தெரியவில்லை. அவர்களைத் தடுக்கும் தைரியம் இங்கே ஒருத்தருக்கும் கிடையாது. ..
கோடிக் கணக்கில் மதிப்புள்ள தன் சொத்தை பரோட்டா சிக்கனுக்கு தாரைவார்த்துக் கொடுத்துவட்ட பெரும்வள்ளல் இதோ நிர்ச்சலனமாய் கேட்பாரின்றி கிடக்கிறான். ,இவன் வாழ்க்கையை ஒரு திரைப் படமாக எடுத்திருந்தால், பார்த்துவிட்டு இங்கிருப்பவர்களில் எத்தனை பேர் கண்ணீர் விட்டு அழுதிருப்பார்கள் என்று ஒரு நிமிடம் யோசனை வந்தது.. .அழுத்தமான .காட்சிகளை திரையில் பார்க்கும் போது, கதையாய் படிக்கும் போது உருகிப் போய்,,. கண்ணீர் விட்டு அழுவதும்,…ஆனால் அதுவே கண்ணெதிரே நடந்தால் நமக்கு வேண்டாம் இந்த வேலைன்னு ஒதுங்கிக்கொள்வதும் மனிதர்களின் குணமாகிப்போனது. ஏன்?.சுயநலம். யாருக்காகவும் மெனக்கெடாத சுயநலம்.. .எல்லா நிகழ்வுகளையும் பங்கேற்பின்றி பார்வையாளனாகவே கடைசி வரையிலும் இருந்து உணர்ச்சியுடன் பார்த்துவிட்டு, அப்புறம் வசதியாக மறந்து விடுதல் என்பது நம்முடைய இயல்பாகி விட்டது. ஆனால் பாசம்,,பரிவு,,மனிதநேயம், என்பதெல்லாம் இன்றைக்கு அற்றுப் போய்விட்டதே என்று ஒப்பாரி பாட்டையும் நாமேதான் பாடிக் கொண்டிருக்கிறோம்.

கார்ப்பரேஷன் வண்டி வந்து நின்றபோது,, அங்கே அடுக்குமாடி வாசிகளுமில்லை, லுங்கி பரட்டைகளுமில்லை. காணாமல் போயிருந்தார்கள்..மிச்சமிருப்பது நானும், அவனும்தான். . … .

– “கலைமகள்’’ தீபாவளி மலர் 2012

Print Friendly, PDF & Email

1 thought on “நானும் அவனும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *