கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: July 10, 2012
பார்வையிட்டோர்: 12,852 
 
 

இரவானால் போதும், அப்பா! அப்பா! என என்னை ஏலம் போட ஆரம்பித்து விடுவார்கள் எனது மகளும், மகனும். இரவு உணவுக்குப் பிறகு வழக்கமாக இந்த ஏலம் தொடங்கிவிடும்.

வேறெதற்கு, எல்லாம் கதைகேட்கத்தான். படித்தது,கேட்டது,பார்த்தது என எல்லாம் சொல்லியாகிவிட்டது. கஜானா காலியென்றாலும் இலவசத் திட்டங்களை அமுல்படுத்தியாக வேண்டிய கட்டாயத்தில் உள்ள மாநில அரசுகளின் நிலையில்தான் நானுமிருந்தேன்.

அப்பா, சீக்கிரமா வரீங்களா இல்லியா,என கூப்பாடு போட்ட கையோடு, இந்த அப்பா ரொம்ப மோசம், வரவர ரொம்பத்தான் பிகு பண்றாரு என்ற அலுப்புப் புராணம் அழுகையாக மாறுவதற்குள் எதையாவது சொல்லி சமாதானம் செய்யலாமென நினைத்தப்போது, எனது மகள், தனது தம்பியை சிரிக்க வைப்பதற்காக டவலைக்கொண்டு தலையில் முண்டாசு கட்ட முயற்சித்துக் கொண்டிருந்ததை பார்த்தவுடனே எனது தாத்தாவின் ஞாபகம் வந்தது. எப்படி தாத்தா திடீரென எனது நினைவுகளை நிறைத்துக் கொண்டாரெனத் தெரியவில்லை. ஆனால் பிள்ளைகளுக்குச் சொல்வதற்கு விஷயம் கிடைத்துவிட்டது.

நான் பிறந்து வளர்ந்த கிராமத்தில் உள்ள வீடுகள் அனைத்தும் வெளிப்புற திண்ணைகளைக் கொண்டிருக்கும். பகலில் பெரியவர்களின் பஞ்சாயத்து நடக்கும். இரவானால் கதைகள் அரங்கேறுமிடமாகிவிடும். இப்போது போலில்லாமல் பெரியவர்களும் கதைகேட்பதில் மிகவும் ஆர்வம் காட்டுவர்.பகலில் கதை கேட்பது வேகாத கறியை மெல்லுவதுப்போல.கதை கேட்பதற்கென்றே உருவாக்கப்பட்டதுதான் இரவு நேரம். அதுவும், மழைக்கால கனத்த இருள் சூழ்ந்த இரவுநேரத்தில், போர்வையை தலைவரையிலும் போர்த்திக்கொண்டு ஒருவரோடொருவர் நெருக்கியடித்துக்கொண்டு கதை கேட்கும் ஆனந்தம் இருக்கிறதே..அடடா..அதற்கீடிணையே கிடையாது.சொல்லப்படும் கதைகள் நமக்குள் நிகழ்ந்துக்கொண்டிருக்கும். புதுப்புது உலகங்களை உருவாக்கி அவற்றில் நம்மை உலவவிடும் ஆற்றல் அந்தக்கதைகளுக்கு இருந்தன.

பதினெட்டு வயது வரை எனது கிராமத்தில் தான் இருந்தேன். எனது தாத்தாவின் மறைவுக்குப் பிறகு அம்மாவின் ஊருக்கு குடிபெயர்ந்துவிட்டோம். முதல் பேரன் என்ற முறையில் என் பேரில் தாத்தாவுக்கு ரொம்ப பிரியம். காலையில் கண்விழிப்பதிலிருந்து இரவு தூங்குவது வரையில் அவருடன் தான் இருப்பேன். எத்தனையோ கதைகளை அவரது கருங்கல் பலகைப் போன்ற பரந்தமார்பில் படுத்தபடி கேட்டிருக்கின்றேன்.

எப்போதுமே எனக்கு கதைகளை கேட்பதை விட எனது தாத்தாவை கவனிப்பதே உவப்பான காரியமாக இருந்தது. நாயக்கர்மகால் தூண் போல என்று உவமைகூறுவார்களே அதைப்போல ஆஜானுபாகுவாக இருப்பார். எனக்கு அதுபோன்ற உடல்வாகு அமையவில்லையே என்ற ஏக்கம் இப்போதுமுண்டு. எனக்கு வாய்த்ததோ அம்மா வழி உடல்வாகுதான்.

எங்கள் வட்டாரத்தில் மாட்டுவைத்தியத்திலும், தரமான மாடுகளைத் தேர்ந்தெடுப்பதிலும் எனது தாத்தாதான் சூப்பர் ஸ்டார். எனவே எப்போதுமே அவருக்கு சுற்றுவட்டாரத்திலிருந்து அழைப்புகள் வந்துக்கொண்டேயிருக்கும். மாடுகளை வாங்குவதில் உதவவும்,மாடுகளுக்கு வைத்தியம் பார்க்கவும் பல ஊர்களுக்குச் சென்றுவருவார். திரும்பிவருகையில் நிச்சயமாக இரண்டு விஷயங்கள் நடந்தேதீரும். ஒன்று எனக்கு மறக்காமல் தின்பண்டம் வாங்கிவருவது, இரண்டாவது, எனது பாட்டி போடும் சண்டை. ஏனென்றால், பணத்திற்கு அவர் என்றுமே முக்கியத்துவம் கொடுத்ததில்லை. தருவதை வாங்கிக்கொள்வார். ஊர்சேவையே அவரது இயல்பாக இருந்தது. வீட்டு நிர்வாகத்துக்கு எந்தவகையிலும் தாத்தாவின் திறமைகள் பயன்படாததால், அவரை பிழைக்கத்தெரியாதவரென்றே அனைவரும் பழித்தனர். அவர் அதுகுறித்து கவலைப் பட்டதாக தெரியவில்லை. தனது போக்கில்தான் அவர் வாழ்ந்து வந்தார்.

இறுதிகாலம் வரையில் எவருக்கும் அவர் சுமையாக இருந்ததில்லை. கால்கள் வீங்கி நடக்கமுடியாமல் ஒரு நாள் தடுமாறி விழுந்தார். எல்லோரும் சிரமப்பட்டு அவரைத் தூக்கி படுக்கையில் கிடத்தினோம். பகல் பொழுதில் அவரை படுக்கையில் பார்த்தது அப்போதுதான். நான் பக்கத்தில் அமர்ந்து தேவையான பணிவிடைகள் செய்தேன். அமைதியாக என்னையே பார்த்துக்கொண்டிருந்தார். அடுத்த நாள் மதிய வாக்கில் அவரது உயிர் பிரிந்தது.அடுத்த நாளே, காலம்பூராவும் அவரைத்திட்டித் தீர்த்த எனது பாட்டியும் படுத்த படுக்கையானார். மூன்றாவது நாள் அவரும் தாத்தாவைத் தேடிச்சென்றுவிட்டார். ஊரே இந்த அதிசயத்தைப் பார்த்து வியந்தது. இருவருக்கும் ஒன்றாகவே காரியச்சடங்குகள் செய்யப்பட்டன.
எனது தாத்தா எவரிடமும் அதிகமாகப் பேசியதில்லை. எனக்கும் கூட கதைகளை சொல்லியிருக்கின்றாரே தவிர, தன்னைப் பற்றி எதையும் கூறியதில்லை. அவரால் எத்தனை தூரமும் தொடர்ந்து நடக்க முடியும்,அதேப்போல் தொடர்ந்து ஒரே இடத்தில் மணிக்கணக்காக அமர்ந்திருக்கவும் முடியும். அந்த சமயத்தில் அவரைப் பார்க்கும்போது ஒருஜென் குருவைப் போல இருப்பார். பூரணமான அமைதி அவரது முகத்தில் மட்டுமல்ல, உடல்பூராவும் நிறைந்திருக்கும்.

ஒருதடவை, திருச்சியிலிருந்த தாத்தாவின் ஒன்றுவிட்ட தம்பி, தனது அண்ணனைக் காண வந்திருந்தார். அவர் வரும்போது தாத்தா தண்டரை ஏரியில் மீன் பிடித்துவரப் போயிருந்தார். எனவே, தாத்தாவிடம் அவரை அழைத்துப்போகும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இது அபூர்வமான வாய்ப்பு. ஏனெனில், நீர்நிரம்பி கரைததும்பும் காலத்தில் பெரியவர்கள் மட்டுமே ஏரிக்கு செல்லமுடியும். சிறியவர்களுக்கு, அதுவும் என்னைப்போன்ற ’அறுந்த வால்களுக்கு’ நிச்சயமாக அனுமதியே கிடையாது. போகும்போது, சரளமாக பேசிக்கொண்டே வந்தார். தாத்தாவைப் பற்றியும் கூறினார்.

என் அண்ணன்…அதாண்டா உன்னோட தாத்தா ஒரு சமயம், இப்போ போறமே அந்த தண்டரை ஏரிக்கரையில, வீட்டுத்தேவைக்காக ஒரு பனைமரத்தை வெட்டி அதை ஏத்திகிட்டு வரதுக்கு மாட்டுவண்டியை எதிர்பார்த்து, அந்த வழியே எந்த வண்டியும் வராததால ஒண்டி ஆளா, தன் தோள்ள சுமந்துவந்து சேர்த்தது,இன்னும் என் கண்ணிலிருந்து மறையலடா. பத்துபேரு சேர்ந்தாலும் முக்கிமுனகி தான் தூக்கமுடியும், ஆனா யானையைப் போல ஒத்தைஆளா உன் தாத்தா அலாட்டா தோள்மீது தூக்கிக்கிட்டு வந்தாருடா. எப்பேர்பட்ட பலம், எப்பேர்பட்ட மனோதிடம் என சொல்லி சொல்லி மாய்ந்துப் போனார்.

தண்டரை ஏரி சீக்கிரமாக வந்து விடக்கூடாதென வேண்டிக்கொண்டேன். அப்போதுதானே தாத்தாவைப் பற்றி இன்னும் அதிகமாக தெரிந்துக் கொள்ளமுடியும். திருச்சித் தாத்தா மேலும் தொடர்ந்தார்,
ஒரு சமயம், தின்னனூருக்கு பக்கத்திலிருந்த களத்துமேட்டிலிருந்து மாட்டுவண்டியில நெல்மூட்டைகளை ஏற்றி வருவதற்காக நானும் உன் தாத்தாவும் போயிருந்தோம். மூட்டைகளை வண்டியில ஏற்றுவதற்குள் இருட்டிவிட்டது. எனவே எருதுகளை இழுத்துப் பிடித்தபடி வலது காலை வண்டிச்சக்கரம் நகராமலிருக்க அண்டைக் கொடுத்து லாந்தரை பற்றவைத்தார். திடீரென தீக்குச்சி வெளிச்சம் கண்டு எருதுகள் மிரண்டு, வண்டியை இழுத்துவிட்டது. நானோ வண்டியின் பின்பக்கம் உட்கார்ந்திருந்தேன். சுதாரிப்பதற்குள், முழு வண்டி பாரமும் உன் தாத்தாவின் வலது கால் மீதேறி இறங்கிவிட்டது.நான் பதறிப்போய்விட்டேன். ஒன்றுமில்லடா, என்று என்னை சமாதானம் செய்துவிட்டு, சாதுரியமாக எருதுகளை அடக்கி நெல்மூட்டைகளை ஊர்கொண்டுவந்து சேர்த்துவிட்டார்.வீட்டில் யாருக்கும் சொல்லக்கூடாது என்று கட்டளையிட்டுவிட்டார். பயத்தோடு அவரது காலைப்பார்த்தால், என்ன ஆச்சரியம், லேசாக வீங்கியிருந்தது, அவ்வளவுதான். புளிப்பற்று போட்டதோடு சரி. மகாபாரத பீமனைப் போன்றவர் உன் தாத்தா என்று புகழ்ந்தார்.

தாத்தாவைப் பார்க்க பட்டாபிராமிலிருந்து ஒருவர் வருவார். எப்போதும் பிரம்பு பிடியுள்ள பெரிய குடையுடன் தான் வருவார். அவர் வந்துவிட்டால் இருவரும் பேசியபடியே தண்டரை ஏரியில் காடென ஆளுயரத்திற்கு வளர்ந்திருக்கும் தக்கைப்பூண்டுகளுக்கிடையில் புகுந்து தொலைதூரம் சென்று அமர்ந்துக்கொள்வார்கள். கூடவே நானும் செல்வேன். அடுத்து பட்டாபிராம்காரர் தனது குடையை லேசாக பிரித்து அதனுள்ளிருந்து மிக்சர் பொட்டலத்தை எடுப்பார். குடை, பை போலவும் பயன்படுமென்பதை அன்று தெரிந்துக்கொண்டேன். மிக்சர் பொட்டலத்தை பேருக்கு கொஞ்சம் எடுத்துக்கொண்டு, என்னிடம் தந்துவிடுவார்கள். அவர்கள் பேசுவது எனக்குப் புரியாது. என்றாலுமென்ன நஷ்டம், மிக்சர் லாபம்தானே.

மாடுபிடித்துவர தாத்தா ஒங்கோலுக்கு போயிருந்த சமயம், பட்டாபிராம்காரர் வந்திருந்தார்.தாத்தா இல்லையென்றதும் என்னிடம் மிக்சரைக் கொடுத்துவிட்டு கிளம்பியவரிடம், தாத்தாகிட்டதான் பேசுவீங்களா, என்கூட பேசமாட்டீங்களா என நான் கேட்டேன். இதை அவர் சற்றும் எதிர்பார்க்கவில்லை. என்னை சட்டென்று அணைத்தவர், சரி, வாயேன், ஏரிப்பக்கம் போய்ப்பேசுவோம் என்றபடி என்கையைப்பிடித்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தார். நானுமிதை எதிர்பார்க்கவில்லை. வழக்கம்போல, என் தாத்தாவும் அவரும் எந்த இடத்தில் உட்கார்ந்து பேசுவார்களோ, அதே இடத்தில் அமர்ந்து என்னுடன் பேசலானார்.

வெள்ளக்காரன் நம்ம தேசத்தை ஆண்ட காலத்திலிருந்து உன் தாத்தாவை எனக்குத்தெரியும். அப்போ நான் சுதந்திரப்போரட்டங்களில் தீவிரமாக பங்காற்றியதால், அரசாங்கம் என்னை எப்படியாவது பிடிச்சு ஜெயில்ல போடணும்னு முயற்சி செஞ்சுது. இந்த வட்டாரத்திலிருந்த தேசபக்தர்களுக்கும், தலைமைக்கும் இடையே தகவல் பரிமாற்றம் என்மூலமாகத்தான் நடந்துவந்தது. இதையெப்படியோ தெரிந்துக்கொண்ட போலீசார் என்னை எப்படியாவது பிடித்துவிட வேண்டுமென்று தனிப்படையே அமைத்து தீவிரமாக தேடிவந்தனர்.

ஒருதடவை, விடியற்காலை நான்கு மணியிருக்கும், இந்தப்பகுதியிலிருந்த ரயில்வே சங்கத்தலைவரை சந்தித்து தலைமையின் தகவலைத் தருவதற்காக போய்க்கொண்டிருந்தபோது ரகசிய போலீசார் என்னைப் பின் தொடர்ந்து வருவதை கவனித்துவிட்டேன். அவ்ர்களுக்கு போக்குக்காட்டி ஏமாற்ற எவ்வளவோ முயற்சித்தும் முடியாமல், ஒருகட்டத்தில் அவர்கள் என்னைப் பிடிக்க ஓடிவருவதைப் பார்த்து நானும் வேகமாக ஓடினேன். அப்படி இப்படி ஓடி தண்டரை ஏரிப்பக்கம் வந்துவிட்டேன். அப்போது ஏரி வறண்டு இருந்ததது, ஆளுயரத்திற்கு தக்கைப்பூண்டுச்செடிகள் காடுபோல வளர்ந்திருந்தது என்னிடமும் முக்கியமான ஆவணங்கள் இருந்தன. எனவே தக்கைப்பூண்டு காட்டுக்குள் புகுந்துவிட்டேன்.
நன்றாக விடிந்துவிட்டது. எப்படி போவது என்று தெரியவில்லை. பழக்கமானவர்களுக்கு மட்டும்தான் ஏரிக்குள் அங்குமிங்கும் சாரைப்பாம்பைப் போன்று செல்லும் ஒத்தையடிப் பாதைகளை அடையாளம் கண்டு தக்க ஊருக்குப் போக முடியும். ஆளுயர தக்கைப்பூண்டுகள் என்னை எவ்வளவு நேரம் காக்குமென தெரியாததால், குருட்டாம்போக்கில் நடந்துக்கொண்டிருந்தேன்.சுற்றிச் சுற்றி வருவதாக தோன்றியதேயொழிய எந்த முனையையும் தொட்டதாக தெரியவில்லை. ஒருவழியாக தக்கைப்பூண்டுக் காட்டைவிட்டு வெளியேறிவிட்டேன். எந்த பக்கம் வந்துள்ளேன் என்பது தெரியவில்லை. நண்பகலாகிவிட்டிருந்தது. பசி ஒரு பக்கம், அடுத்து என்ன செய்வதென்பது தெரியாத நிலை ஒரு பக்கம்.
நான் ஏரியை ஒட்டியிருந்த வயற்பரப்பை தாண்டி ஊருக்குள் நுழைந்தேன். அதுதான் நிர்மலச்சேரி என்ற இந்த கிராமம்.அதற்குள் ஏதோ ஒரு கணக்குப்போட்டு, போலீசார் என்னைத்தேடி இந்த கிராமத்திற்கும் வந்து விசாரிக்க ஆரம்பித்துவிட்டனர். எனக்கு இதுபற்றியெல்லாம் அப்போது எதுவும் தெரியாத நிலையில் மெதுவாக கிராமத்துக்குள் நடந்து வந்துக் கொண்டிருந்தேன். நாலுவீடு தாண்டியிருக்க மாட்டேன், சடாரென என்னை ஒரு வலுவான கரமொன்று பற்றியிழுத்தது. சரிதான், போலிசிடம் அகப்பட்டுவிட்டோம் என நினைத்து வெள்ளைக்கார அரசை எதிர்த்து கோஷம் போட வாயைத் திறந்தேன். அவ்வளவுதான், எனது வாயும் சட்டென்று பொத்தப்பட்டது. என்னால் திமிரவே முடியவில்லை.சரியான உடும்புப்பிடி. ஒரு மூலைக்கு இழுத்துப்போய், உஷ் என எச்சரிக்கை செய்தபடி உன் தாத்தா எனது சட்டையை கழட்டலானார். நான் மந்திரவயப்பட்டவன் போல அவருக்கு கட்டுப்பட்டேன்.ஒரு துண்டைக் கொடுத்து தலையில் முண்டாசாக சுற்றிக்கொள்ளச் சைகை காட்டினார். மாடுகளின் குளம்புகள் பதிந்து சேறும் சகதியுமாக இருந்த தொழுவத்திலிருந்து கொஞ்சம் மண்ணை வாரி எனது முகத்திலும், உடம்பிலும் பூசி நிமிட நேரத்தில் என்னை வேலைக்காரனாக மாற்றிவிட்டார். உன் தாத்தாவுக்கு ஏற்கெனவே என்னைத் தெரிந்திருந்தது.

வீட்டின்முன்பக்கமுள்ள வாசலில் கொட்டி வைக்கப்பட்டிருந்த அவித்த நெல்லில் இருந்து ஆவி கிளம்பிக்கொண்டிருந்தது. அதை ஒரு கூடையில் வாரி பரவலாக கொட்டி காயவைக்கும்படி கட்டளையிட்டார். எனக்கு அவ்வளவாக பழக்கமில்லையென்றாலும் உன் தாத்தா செய்து காட்டியபடியே நானும் செய்தேன். இந்த நேரத்தில் ரகசிய போலீசார் உங்கள் வீட்டை நோக்கி வந்தனர். என்னை யாரென்று உன் தாத்தாவிடம் கேட்டனர்.அவனா எங்க வேலைக்காரனுங்க அய்யா என்று அவர்களுக்கு பதிலளித்துவிட்டு, என்னடா இங்க பராக்கு பார்க்கிற, வேலைய ஒழுங்கா செய்யுடா நாயே என என்னைப் பார்த்து கண்டபடி திட்டியபடியே பக்கத்திலிருந்த பித்தளைச்சொம்பை எடுத்து என்மீது வீசினார். அது சரியாக எனது தோள்பட்டையை தாக்கி காயப்படுத்திவிட்டது. அடிப்பட்ட இடத்திலிருந்து ரத்தம் குபுகுபுவென பெருக்கெடுத்தது. அதைப்பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் உன் தாத்தா என்னை தொடர்ந்து திட்டிக் கொண்டிருந்தார். போலீசாருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. என்னய்யா இப்படி அடிச்சுப்புட்டியே என கேட்டதற்கு, இந்த வேலைக்கார நாயிங்கள பத்தி எனக்குத்தான் தெரியுமுங்க, கொஞ்சம் இடம்கொடுத்தா போதும், மடமே எனக்குத்தான் சொந்தமுன்னு பட்டா போட்டு குந்திக்கிடுவானுங்க சாமி.

நாங்ககூட இப்படி அடிச்சதில்லடா, நீ எங்கள விட பெரிய காட்டுமிராண்டியா இருப்ப போலிருக்கே. உன்னைப் பார்த்தப்பவே முரட்டு ஆளா இருக்கானேன்னு நினைச்சோம், ஆனா இந்த அளவுக்கு கோபம் ஒரு மனுஷனுக்கு ஆகாதுடா. அந்தப் பையனுக்கு ரத்தம் எப்படி ஒழுவுது பாரு. கொஞ்சம் அவனைப் போய் கவனிடா என்ற படியே அங்கிருந்து நகர்ந்துச்சென்றனர். அவர்கள் அங்கிருந்து சென்றவுடன் என்னிடம் ஓடிவந்து ரொம்ப வலிக்குதா என விசாரித்தபடியே மருந்து வைத்து கட்டு கட்டினார்.
இந்த சம்பவத்திற்குப் பிறகு எனக்கும் உன் தாத்தாவுக்கும் நெருக்கமான பழக்கமேற்பட்டது. அவரது தைரியம், எதற்கும் கலங்காத அமைதியான சுபாவம், மற்றவர்களுக்கு வலியப்போய் உதவும் பெருந்தன்மை, எல்லாமே என்னைக் கவர்ந்துவிட்டது. தேசபக்தர்கள் ரகசியமாக கூடவும், தலைமறைவாக இருப்பதற்கும் எத்தனையோ முறை உதவியிருக்கின்றார். இதுவரை யாருக்கும் தெரியாது. சுதந்திரம் பெற்ற பிறகுகூட இது குறித்து அவர் எவரிடமும் சொன்னதுமில்லை. என்னை சொல்லவிட்டதுமில்லை. தான் செய்த காரியங்கள் குறித்து தம்பட்டமடித்துக் கொள்ளுவதை அவர் வெறுத்தார். அன்று ஆரம்பித்த தொடர்பு இன்றளவும் தொடர்கிறது என்று சொல்லிமுடித்த பட்டாபிராம்காரரை பிரமிப்போடு பார்த்துக்கொண்டிருந்தேன். எனது தாத்தா சாவுக்கு வந்தவர்தான், அதற்குப்பிறகு அவரைப் பற்றியெதுவும் தெரியாமலேயே போய்விட்டது.

எனது பிள்ளைகளுக்கு, புரியும்படிச் சொன்னேனா என்பது குறித்து சந்தேகமிருந்தாலும், சொல்லி முடித்தபோது எனக்கு ஒரு திருப்தி ஏற்பட்டது. இப்போதும் எனது தாத்தாவைப் பற்றி வேறெதாவது தெரியுமாவென கேட்டுக்கொண்டேயிருக்கின்றனர்.

ஒரு நாள் இரவு வழக்கம்போல, கதைக்கு பஞ்சம் வந்துவிட்டது. நான் ரொம்பவும் யோசிப்பதைப் பார்த்த எனது மகள் யதார்த்தமாக, அப்பா! இன்னைக்கு உன்னைப் பத்திச் சொல்லுப்பா என கேட்டபோதுதான், என்னைப்பற்றிச் சொல்ல எதுவுமேயில்லை என்பது புரிந்தது.

*** இந்த சிறுகதை தினமணி கதிரில் வெளியானது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *