அவனுக்கு அடுத்தபடியாக இருந்தவன் பச்சை பெயிண்ட் அடித்த மாதிரி டை கட்டியிருந்தான். உள்ளே போகும் வரை டையை தடவிக்கொண்டே இருந்தான்.. முன்னாடி அந்த கதவுக்கு மேலே சின்ன கண்ணாடியில் வெள்ளெழுத்தில் கோ.நமச்சிவாயம்.., எம்.டி..ஓட்டிக்கொண்டிருந்தது.. இரண்டு பக்கமும் வெள்ளை சோபாக்கள்.. மேலே தொங்கிக்கொண்டிருக்கும் கூம்பு பல்புகள்.. இடதுபுறம் வெள்ளை நிற விரிப்புடன் ஒரு மேசை.. முன்புறம் அதே வெள்ளை நிற சொகுசு இருக்கையில் அந்த சிவப்பு பெயிண்ட் அடித்த உதடுகளுடன் உட்கார்ந்திருந்தவள் “ஆர்.பிரபு..” என்று சொற்களை வழியவிட்டாள்..
இவன் எழுந்தான்.. இன்னும் இவனைத்தவிர மூன்று பேர் இருக்கிறார்கள்.. நான்கு பேர் உள்ளே போய் வந்துவிட்டார்கள்.. இவன் ஐந்தாவது.. இன் பண்ணாத வெள்ளை சட்டை.. வெள்ளை பேண்ட்.. வளைந்திருந்த காதோர முடிகள்.. உதட்டில் சிகரெட் தழும்பு..புருவங்களுக்கு இடையில் வட்ட சந்தன பொட்டு..
உள்ளே நுழையும்போது கதவு தானாக வழிவிட்டது.. அந்த பெண்ணை திரும்பி பார்த்தான்.. கூந்தல் கழுத்தில் விழுந்து புரண்டிருந்தது.. சிறிய கண்கள்.. கைகளில் சிவப்பு ரிப்பன் மாதிரி கட்டியிருந்தாள்.. சேலையில் யாரோ ஒரு நடிகையை ஞாபகப்படுத்தினாள்..இவன் கவனிப்பதை அறிந்து “எஸ்..” என்றாள்..
“இங்க வேல கெடைச்சதுன்னா..?”
“கெடைச்சா..?”
“உன்னைய ஆட்டோவுல கூட்டிட்டு போயி டேம் பக்கம் மீன் வாங்கித் தர்றேன்…. கெட்லா.. கெண்ட.. ரோகு.. எது வேணும்..?”
அவள் பச்சை டையிடம் திரும்பி.”என்ன இது நான்சென்ஸ்..?”
அவன்..”அதெல்லாம் மீனோட பேருங்க.. “இவனிடம் “பாஸ்.. மொதல்ல உள்ளாற போங்க..ஏசி இருக்கம்போதே எனக்கு வேக்குது.. இதுல நீங்க வேற..”
அந்தப் பெண்..”உள்ளாற போய்யா..” என்றாள் வெடுக்கென்று.. முன்னாடியிருந்த டெலிபோனை தட்டி “எஸ் சார்..”என்றாள்.. இவனை வெறுப்புடன் பார்த்து..”நெக்ஸ்ட்.. விஷ்ணு..” என்றாள்..
இவன் போய் தன் இடத்தில் உட்கார்ந்துக்கொள்ள நெட்டையான ஒரு ஆள் புன்சிரிப்புடன் உள்ளே போனான்.. கதவு மூடிக்கொண்டது..
ஒரு ஆள் வெளியே வந்தான்.. வெள்ளை சட்டை யூனிபார்ம்.. சாப்ளின் மீசை.. குள்ளமாக ஆனால் பருமனாக..
“எந்தாளு..? என்றான் அவளிடம்
அவள் இவனை கை காட்டினாள்.. அவன் இவனருகில் வந்து “எழுந்திரு..”
எழுந்தான்.. இடதுபுற கதவில் தானாகவே வெளியேறினான்.. அந்த சாப்ளின் மீசை கூடவே வந்தது.. கம்பெனி அலுவலகத்தின் முகப்பில் வரிசையாக தொட்டிகளில் பூச்செடிகள்.. வெள்ளை நிறம்.. வேறு வேறு ரகத்தில் .. சாப்ளின் மீசையோடு இன்னொருத்தன் சேர்ந்தான்.. “இவனா..?” என்ற கரகரத்த குரலில் இருவரும் அவன் முதுகில் கை வைத்தார்கள்..
சட்டென்று இவன் கேட்டை நோக்கி ஓடினான்.. கையில் வைத்திருந்த ஃபைலை இடுக்கிக்கொண்டான்.. கேட்டருகே புல் வளையத்தை சுற்றி முன்னாடி வந்து கையை தொட்டவனை ஏமாற்றி ஒரு குதி குதித்து அந்த இரண்டு அலங்கார செடிகளை சுற்றி வந்து அதற்குள் கேட் கீப்பரின் கைகளுக்குள் தஞ்சமானதை அறிந்து ஒரு இடி இடித்து..
அந்தாள்..”அய்யோ.. அம்மா..”
“விட்றா.. என்னைய..”
“அந்த மேடத்துக்கிட்ட வம்புக்கா போறே.?.” அந்த சாப்ளின் மீசை இவன் மீது சாய வந்தது.. விலகிக்கொண்டு பின்னாடி இரண்டடி வைத்து மறுபடி வளைந்து ஓடி.. “புடி.. அவன புடி..”
கேட்டை தாண்டி காலியான அந்த அகலமான ரோடில் இடதுபுறம் பிரிந்து ஓட ஆரம்பித்தபோதுதான்.. “அடக்கடவுளே..டூ வீலரு உள்ளாற இருக்கே..”
***
“உங்க பேரு..?”
“பிரபு.. ஆர் பிரபு.. அம்மா பேரு அம்பிகை.. கவர்மெண்டு ஸ்கூலு இருக்குதுல்ல .. அதுக்கு பக்கத்துல வீடு.. அப்பா செத்துட்டாரு.. தாய்மாமாதான் பாத்துக்கறது..நான் ஒரே பையன்.. ஒரு அக்கா இருக்குது.. செங்கல்பட்டுல ஒரு ஓட்டல் மேனேஜரை கல்யாணம் பண்ணிட்…. .”
“என்ன படிப்பு..?”
“அக்கா ப்ளஸ் டூவோட நின்னுருச்சு.. நிறுத்திட்டாங்க.. அப்பா அப்பதான் செத்துப்போ……. “
“உம் படிப்ப பத்தி சொல்லு..”
“பி ஜி பாட்டனி.. அப்பறம் ஆறு மாசம் சமையல் செய்வது எப்படி படிச்சேன்”
“என்னது..?”
“நியூட்ரிஷியன்..”
“அப்பறம்..?”
“தலைவலிக்கும் தவக்களைக்கும் என்ன தொடர்புன்னு ஒரு கட்டுர எழுதினேன்.. படிச்சுட்டு ஒரு பத்திரிகைல நாலாம் பக்கத்துல போட்டாங்க.. ஓசூர் பக்கம் ஒரு ஆஸ்பிட்டல்ல இருந்து அழைப்பு வந்தது.. போனேன்.. அந்த டாக்டரு தவக்களைய பத்தி எழுதியிருந்த பாரு.. அருமையா இருந்ததுன்னு சொல்லி மொதல்ல என்னைய ஷேவிங் பண்ண வச்சு குளிக்க வச்சாரு.. தவள ஸூவாலஜி.. நீ பாட்டனி.. ரண்டையும் மிக்ஸ் பண்ணா புது விழயம் கிடைக்கும்.. இங்கேயே வேல பாருன்னு சொல்லி வேல போட்டுக் கொடுத்தாரு.. தவளையோட இனப்பெருக்க உறுப்பல. இருந்…..”
“ஏன் அப்படி பண்ண…?”
“அந்த பொண்ண பாக்கும்போது அப்படி சொல்லனம்னு தோணிச்சு..”
“ரண்டு நாளைக்கு உள்ளாற இருக்கியா..?”
“வேணாம் சார்.. விட்டுடுங்கோ… “ அந்தம்மாள் கையெடுத்து கும்பிட்டாள்..ஸ்டேஷனில் நான்கைந்து காக்கி உடைகள் இருந்தது.. சன்னலில் இருந்து வரும் காற்று.. டீ வாசனை.. வெளியில் “சொல்றா..”ன்னு அடிக்கடி கேட்கும் குரல்.. ஒரு காக்கி வந்து தலையை சொறிய. “போய்யா..” என்றார் இவனை விசாரிப்பவர்..
“இதப்பாரும்மா.. இவன் பேச்சு சரியில்லை.. கம்பெனில அந்த பொண்ணு கம்ப்ளெயின்ட் கொடுத்திருக்குது.. கிண்டல் .. கேலின்னு.. அப்பறம் இப்பதான் போன் பண்ணாங்க.. ஏதும் நடவடிக்க எடுக்காதீங்கன்னு..”
இவன்..”சார்.. ஒரு ரிக்வஸ்ட்..”
“என்னா..?”
“அவன்.. இவன்.. னு சொல்லாதீங்க சார்.. பிஜி கிராஜுவேட்.. தவக்களைய பத்தி நிறைய தெரிஞ்சு வச்சிருக்கேன்… பயாலஜி உலகத்துல அடுத்து வரப்போற என்னோட கட்டுர பெரிய அதிர்ச்சிய உண்டாக்கும்.. பேப்பர்ல வருவேன்.. டிவியில காட்டுவாங்க.. நான் பெரிய மனுசன் சார்.. நல்லவன்..”
அந்த அதிகாரி..”ஏம்பா சென்னப்பா..?”
“அய்யா..” ஒரு புசுபுசு மீசை காக்கி பக்கத்தில் ஒரு சேரை இடித்துக் கொண்டே வந்து “ஏதாச்சும் டீ.. பன்னு..?”
“இவனைய வெளிய தள்ளிட்டு போயி ஆட்டோ ஏத்தி விட்டுடு.. அக்கா கடைல நண்டு கெடைக்குமா இன்னிக்கு..?”
“இன்னிக்கா.. இன்னிக்கு என்ன கெழம.. செவ்வா.. கெடைக்குமுங்க.. இன்னிக்கு நண்டு ஸ்பெஷல்தான்..”
இவன் அம்மா..”நாங்க போகட்டுங்களா..?”
“போம்மா..போ.. போ.. இவனைய இழுத்துட்டு போ சென்னப்பா..அப்படியே ஒரு நண்டு சூப்புக்கு போயிட்டு வந்திடு..உனக்கும் சேத்தி வாங்கிக்க..”
“வாய்யா..” அந்த புசுபுசு தரதரவென்று இவனை தள்ளிக்கொண்டு கதவுக்கு வெளியே வண்டிகள் நிறுத்தியிருந்த இடத்தை தாண்டி.. உயரமான படிக்கட்டகளை கடந்து..”சார் .. உடுங்கோ.. உடுங்கோ.. “ என்று கத்திகொண்டே வந்தவன் தொப்பென்று தரையில் வீசப்பட்டான்..
***
இன்றைக்கு எனக்கு ஒரு கருப்பு நாள்..போலிஸ் ஸ்டேஷனுக்கெல்லாம் போனதில்லை.. காக்கி சட்டைகள்.. அந்த காந்தி போட்டோ.. நீளமாக தொங்கும் பழைய மின்விசிறி.. தேநீர் வாசனை… வெளியே நிறுத்தப்பட்டிருந்த அழுக்கு வாகனங்கள்.. அந்த அதிகாரியின் டேபிள் மீது ஒற்றையாக இருந்த ஒரு பென்சில்.. இதெல்லாம் எனக்கு பிடிக்கவில்லை.. அந்த இடத்தில் எனக்கு பிடித்திருந்த ஒரே விழயம் அந்த புசுபுசு மீசை.. அவர் அனுமதித்திருந்தால் தடவி பார்த்திருக்கலாம்.. என்னை மண் புழுதியில் தள்ளிவிட்டு அவர் மீசையை தடவின விதம் ரொம்ப ஸ்டைலாக இருந்தது.. அப்பறம் ஸ்டேஷனுக்கு வெளியே ஒரு பெண் பூ விற்கிறாள்.. அம்மா புலம்பிக்கொண்டே என்னை கையை பிடித்து வெளியேறும்போது அவள் திரும்பிப்பார்த்தாள்.. அந்த பார்வையை மறுபடிமும் சந்திக்கவேண்டும்.. என்னை விட பத்து.. பதினைந்து வயது அதிகமிருக்கலாம்.. ஆனால் அந்த கண்கள்.. ம்..
டைரியை அவன் அம்மா படித்துவிட்டு தூங்கிக் கொண்டிருந்தவனின் முகத்தில் விட்டெறிந்தாள்.. அவன் முழித்து திரும்புவதற்குள் கீழே உட்கார்ந்து “உங்கப்பன் கூட இப்புடி இல்லையே..” என்று மூக்கை உறிஞ்சினாள்..
“காலையிலேயே வந்து அறுக்காதம்மா.. என்னது இது..?”
“டைரி.. “
“டைரியா.. ?.. இதையெல்லாம் படிக்காதே.. குப்பை.. கிறுக்கல்,, லெமன் டீ வேணுமே.?.”
“நீ எனக்கு ஒரே பையன்டா..வந்து..என்ன சொல்றேன்னா..”
“போதும் .. போதும்.. லெமன் டீ..?”
“அந்த மூணாவது வீட்ல இருக்கா இல்ல.. ஸ்கூட்டியில போவாளே.. அவ ஏதோ ஷு கம்பெனியில வேல செய்யறாளாம்.. சொன்னேன்.. வரச்சொல்லுங்க.. பாக்கறேன்னு சொன்னா..”
“மறுபடியும் இன்டர்வியூ..?.. போரடிக்குதும்மா.. அதுவும் ஷூ கம்பெனி..?.. எனக்கும் அதுக்கும் என்ன சம்பந்தம்..? .. வேணுமுன்னா ஒரு ஜூஸ் கடை வச்சுக்கறேன்.. இந்தியாவுல யார்கிட்டயும் வேல செய்யக்கூடாது.. அதிகாரம் பண்ணுவாங்க.. வருசத்துக்கு நூறு ரூபாயதான் ஏத்துவானுங்க.. வணக்கம் போடலைன்னா விசாரன கமிஷன் வைப்பானுங்க.. சொந்தக்காரன மேல உக்கார வச்சு வார்த்தையால நக்கச் சொல்லுவானுங்க.. இதுக்கு குப்பை பொருக்கலாம்.. நான் ஒரு பையாலஜிஸ்டும்மா.. கொஞ்சம் பணம் இருந்தா தவக்கள பண்ணை ஆரம்பிச்சுடலாம்.. கவர்மெண்டு என்னைய திரும்பி பாக்கும்.. விவசாயம்.. மண்.. தண்ணின்னு தவக்களைய லிங்க பண்ணி உருப்படியான யோசனைய சொன்னா வருசத்துக்கு மூணு பர்செண்டு விவசாயம் முன்னேறும்.. ஏதாவது பட்டம் கொடுத்தா வாங்கி பாக்கெட்டுல வச்சுக்கிட்டு சுத்தலாம்.. ஆமா.. அந்தம்மாவுக்கு என்னம்மா வயசிருக்கும்.. ?”
“ஒரு நாப்பது.. நாப்பத்தஞ்சு.. எதுக்கு கேக்கற..?”
“பாத்துடலாம்மா..” என்றான் கொட்டாவி விட்டுக்கொண்டே..
***
“கம்புயூட்டர்ல ஏதாவது படிச்சிருக்கீங்களா..?” என்றாள் அவள்.. கொஞ்சம் உயரம் குறைவாக வளைவான கூந்தலுடன் அகலமான முகத்துடன் இருந்தாள்.. உதட்டில் ஒரு அலட்சியம்.. கண்ணாடி வழியே பார்த்தபோது கூர்மை தெரிந்தது.. கழுத்தில் பெரிய சங்கிலி.. அடிக்கடி மேலே இழுத்துவிட்டுக் கொண்டாள்.. இடுப்பில் தெரிந்த தாராளத்திலும் அலட்சியம்.. பாதங்களில் பச்சை நிற கோட்டு அலங்காரம்.. காதுகளில் தொங்கிய தோடுகள் ஆடியது..
பேப்பர்களை பார்த்து “பாட்டனியா..ம்.. ம்.. எப்ப முடிச்சது..?”
“மூணு வருசமாகுது..கம்ப்யூட்டர்ல எதுவும் தெரியாது.. அந்த சப்ஜெக்ட் புடிக்காது.. மெஷினையெல்லாம் புடிக்காது.. இலை..தழை.. நிறம்.. வாசனை.. இதெல்லாம் புடிக்கும்.. எல்லாம் பாட்டனி.. நீங்க அந்த ஷீ கம்பெனில என்னவா இருக்கீங்க.?”
நிமிர்ந்து அதே கூர்மையுடன்..”ம்.. புராஜக்ட் மேனேஜர்.. மூணு வருசமா எந்த வேலைக்கும் போகலையா..?”
“தவளை ஆராயிச்சி பண்ணிட்டிருக்கேன்..”
“தவளையா.. அது ஸுவாலஜி ஆச்சே..”
“அதெல்லாம் இல்லீங்க.. தவளை உலகம்னு ஒரு புத்தகம் வச்சிருக்கான்.. ஒரு தவளைய பாடம் பண்ணி வெளிய பூச்செடி பக்கம் தொங்க விட்டிருக்கான்.. கட்டுரை.. ஒசூரு.. டாக்டரு..அது.. இது…ன்னு புளுகுவான்.. யூ டூப்புல தவள வீடீயோ நிறைய பாப்பான்.. தவளைன்னா அவனுக்கு புடிக்கும்.. அவ்வளவுதான்.. “ என்றாள் ஓரமாக உட்கார்ந்திருந்த இவன் அம்மா..
“அம்மா.. அமைதியா இரு.. உனக்கு எதுவும் தெரியாது..”
“தெரிஞ்சுட்டு நீங்க என்ன பண்ணப் போறீங்க?” என்றாள் கண்ணாடி
“நாட்டுக்கு நல்லது பண்ணலாம் இல்லீங்களா.. தவளையோட எச்சில்ல எய்ட்சுக்கு மருந்து இருக்குமோன்னு எனக்கு ஒரு சந்தேகம்.. “
“ஏதாவது லேப்..?.. ஏதாவது மெடிக்கல் கம்பெனி சார்பாவா..?”
“இல்ல.. தனியா.. இப்போதைக்கு வெறும் ஆரம்பம்தான்.. “
“மூணு வருசமாவா..?”
“பணம் வேணும்.. அம்மா கல்யாணம் பண்ணிக்க சொல்றாங்க.. வேலைக்கு போக சொல்றாங்க.. எனக்கு அதெல்லாம் புடிக்காது.. இந்தியாவுல நிம்மதியா இருக்கனமுன்னா வேலைக்கு போகக்கூடாது.. போண்டா கடை வச்சுக்கலாம்.. சுதந்தரம்.. ஒரு பூ தானா முளைச்சி தானா வளந்து தானா அழியற மாதிரி.. இதெல்லாம் பாட்டனி.. உங்களுக்கு புரியாது..ஷூ கடைல செடிங்களுக்கு தண்ணி ஊத்தற வேல இருந்தா சொல்லுங்க..”
“கடை இல்ல.. கம்பெனி.. “ அவள் இவனுடைய அம்மாவை பார்த்தபோது இவன் அவளுடைய பாதங்களை கவனித்தான்.. கோடுகள்.. பச்சை நிறம்.. அலட்சியம்.. கூர்மை.. தாராளம்..
“எனக்கு இவள புடிச்சிருக்குது..” டைரியில் எழுதினான்..
***
எனக்கு இவள புடிச்சுருக்குதுன்னு டைரில எழுதியிருக்க.. அந்தம்மா உன்னைய விட பதினஞ்சு..இருபது வருசம் அதிகமா இருக்கலாம்.. உனக்கு சின்னம்மா மாதிரி.. சின்னம்மான்னு சொல்றப்போ பாழாப்போன உங்கப்பன் ஞாபகம் வருது.. அம்மா வீட்டுக்கு போனப்போ நீ பொறந்து மூணு மாசம் இருக்கறப்போ கெணத்துப் பக்கம் குளிக்கறதுக்கு போனப்ப பாத்ரூம் பக்கம் உன் சின்னம்மாவும்.. உங்கப்பனும்..,ம்.. கூட பொறந்த பொறப்பாச்சே.. ஏதும் பேசலை.. அடுத்த நொடியே கெளம்பிட்டேன். உங்கப்பன அப்பதான் புருஞ்சுக்கிட்டேன்.. உத்தமன்னு நினைச்சுக்கிட்டிருந்தேன் அப்ப வரைக்கும்.. எனக்கு வாழ்க்கை மேல மொத மொதலா வெறுப்பு வந்தது.. ஒரு பொண்ணுக்கு எது முக்கியம்.,? .. தலைக்கு பூ வக்கிறதா.. ? புரசன் கூட படுக்கறதா..?. இப்படி எழுதறேன்னு தப்பா நினைச்சுக்காத.. என்னைய வச்சுக்கிட்டு அந்த பொம்பளைய நீ பாத்த பார்வைல கூனிக்குறுகிப் போயிட்டேன்.. நீ வெளிய போன பெறகு அந்தம்மா சொல்லுச்சு..
சீக்கரம் கல்யாணம் பண்ணி வையுங்க.. பார்வ சரியில்லன்னு..
ஆங்.. எங்க விட்டேன்.. அதான். உங்கப்பன்கிட்ட.. என் கூடப்பொறந்தவ எனக்கு துரோகம் பண்ணது இருக்கட்டும்.. ஆனா அவ மேல கோவம் வரலை.. உங்கப்பன் மேலதான்.. அந்த நம்பிக்க போயிடுச்சே.. நானும் ஒரு கேடு கெட்ட புருசனுக்கு பொண்டாட்டியா இருக்கற பல பேர்ல ஒருத்தி ஆயிட்டேனே.. நானு அந்தாளு கூட பேச்ச குறைச்சுக்கிட்டேன்.. பொம்ம ஆயிட்டேன்.. எல்லாம் அது பாட்டுக்கு நடக்கும்.. புரிஞ்சுக்க.. எந்த சண்டையும் போடல.. அந்தாளு அப்படிப்பட்ட ஆளுன்னு போகப்போக புருஞ்சுக்கிட்டேன்.. எதுவுமே வெளியே தெரியாது.. பூன மாதிரி.. பேச்சுல அவ்வளவு நல்லத்தனம் தெரியும்.. எனக்குத் தெருஞ்சு ஏழெட்டு பொம்பளைங்களோட பழக்கம் இருந்திருக்குது.. தெரியாம எத்தனையோ.. அந்தாளு சாயல் உங்கிட்ட இருக்குது.. அந்தம்மா சொன்னாங்க.. கல்யாணம் பண்ணி வச்சிருங்கன்னு.. நானும்தான் சொல்றேன்.. ஆனா வர்ற மருமக பாவமோன்னு தோணுது.. என்னைய மாதிரி அவளும் ஒரு பொம்பளதானே.. அந்த நம்பிக்க ஒரு நாளு போயிடுச்சுன்னா.. ?,, அப்பறம் என்னை மாதிரி எந்திரம் மாதிரி வாழறதுக்கா..?.. ஒரு ஆம்பளைய திருத்த ஒரு கல்யாணமா..? .. என்ன அநியாயம்.. திருந்தலைன்னா. ?,, அந்த பொண்ணுக்கு தெரிஞ்சேதானே துரோகம் பண்ணறோம்.. அவளுக்கும் சூடு.. சொரண.. சிந்தன.. இதெல்லாம் இருக்குமுன்னு யாருக்கும் தெரியாதா..?.. அவள ஏன் ஒரே மாதிரி பாக்கறாங்க.. எனக்கும் அப்படி ஒரு நா தோணுச்சு.. எல்லாமே அது பாட்டுக்கு எனக்கும் உங்கப்பனுக்கும் நடக்குமுன்னு சொன்னேன் இல்லையா.. அந்தாளு சாகறதுக்கு அஞ்சு வருசத்துக்கு முன்னாடி நான் பக்கத்துல சேத்தல.. அந்தாளுக்கு என்ன.. பொண்டாட்டி இல்லன்னா பலபேருன்னு நான் கூட நினைச்சேன்.. ஆனா அந்தாளு என் கால்ல வந்து விழுந்தான்.. நைட்ல கைய புடுச்சுட்டு கெஞ்சுவான்.. சோறு.. தண்ணி வேணாம்.. ஆனா நீ வேணுமுன்னு சொன்னான்.. கடைசி வழி என்ன?.. அடிக்கறது.. உதைக்கறதுதானே.. அதையும் செஞ்சுப் பாத்தான்.. வலுக்கட்டாயமா.. சரி.. சரி.. என்னடா.. அம்மாவே இப்படி எழுதறாளேன்னு நினைக்காத.. அந்தாளு செத்தப்போ ஒரு சொட்டு கண்ணீரு கூட எனக்கு வரல..
ஏதோ ஒன்னு என்னைய விட்டு போன மாதிரி இருந்தது.. இன்னும் சொல்லப்போனா ஒரு நிம்மதி.. அந்த நிம்மதி அந்தாளு சாவுலதான் எனக்கு கெடைச்சது.. என்னடா நம்ம டைரில அம்மா இப்படி கிறுக்கி வச்சிருக்காங்களேன்னு தூக்கிப் போடுவியா.. இல்ல.. மறுபடியும் படிச்சு பாப்பியான்னு எனக்குத் தெரியாது.. எழுதனமுன்னு தொணுச்சு.. நான்தான் சொன்னேனே.. அந்தாளு சாயலு உங்கிட்ட இருக்குதுன்னு..
எனக்கு கவலை உனக்கு வர்றவள பத்தி.. நான் அவளுக்கு துரோகம் செய்ய விரும்பல.. உன் கல்யாணத்துக்கு பொண்ணு பாத்து சீக்கிரம் முடிக்கனம்னு ஒரு வருசமா நினைச்சுட்டிருந்தேன்.. ஆனா இப்ப.. இந்த நொடி .. நான் அப்படி நினைக்கல.. கல்யாணம் உன்னோட விருப்பம்.. அதாவது நானா பொண்ணு பாத்து செய்யமாட்டேன்.. நீ விரும்பி பண்ணிக்கோ.. என்னடா.. அம்மாவே இப்படி சொல்லறாங்களேன்னு நினைக்காத.. அந்த பொண்ணு உன்னைய புரிஞ்சுக்கலாம் இல்லையா.. நீ யாரு.. என்ன. ஏதுன்னு.. ?.. உண்மையா உன்னைய விரும்பற பொண்ணு உன்னை நல்லாவே புரிஞ்சுப்பா.. அதுக்கப்பறம் அவ முடிவு பண்ணட்டும் நீ வேணுமா. . வேணாமான்னு.. வேணாமுன்னு முடிவெடுத்தா நீ மாறலைன்னு அர்த்தம்.. உனக்கு கெடைக்கிறவ அப்பாவியா இருந்துடக்கூடாதுன்னு வேண்டிக்கறேன்.. பிரார்தன செய்யறேன்.. உன் வார்த்தைலயால சொன்னா அவ ஒடம்பு ஒரு பரிசோதன தவக்களையா ஆயிடக்கூடாதுன்னு மறுபடியும் வேண்டிக்கறேன்..
இந்த டைரிய தற்செயலாத்தான் சமீபத்துல பாத்தேன்.. அங்கங்க நிறைய பொம்பளைங்கள பத்திதான் எழுதியிருக்க.. கண்ணு.. பொட்டு.. கோடு.. ரிப்பன்.. காது வளையம்னு.. அதுக்கு பின்னாடி அவங்களோட ஒடம்புதான் தெரியுது.. கூசுது. இதையேல்லாம் நீ படிக்கனமுன்னுதான் உன்னோட டைரியிலேயே நான் எழுதறேன்..
ஒரு அம்மா கேட்டாளாம் மகனைப் பாத்து.. “எந்த பொம்பள வீட்டுக்குடா போயிட்டு வர்றே..?”ன்னு சிரிச்சுக்கிட்டே.. அந்த மாதிரி பொம்பளைங்களும் இருக்காங்க.. அவ எப்படி நல்லவளா இருக்கமுடியும்.?.. கடைசியா நான் சொல்ல வர்றது இதைத்தான்..
அப்படிப்பட்ட அம்மாவா நான் இருக்க விரும்பல..