வாழ்வில் முன்னேற வேண்டுமென்று யாருக்குத்தான் விருப்பமிருக்காது? மூன்று வருடங்களாக அதற்கென (பதவி உயர்விற்காக) படாதபாடு பட்டுக் கொண்டிருக்கிறேன். பலன்?
இன்று சிங்களத் தராதரப் பரீட்சை முடிவுகள் வெளியாகின. நீங்கள் நம்பமாட்டீர்கள்; எங்கள் அலுவலகத்தில் ஆறாவது முறையாகவும் முதலாம் தரப் பரீட்சையிற் தோல்வி யடைந்து மீண்டும் ஒரு சாதனையை நிலைநாட்டிவிட்டேன்!
என்ன செய்வது? நாலு பிள்ளைகளைப் பெற்ற பின்னரும், ‘படியடா’ என்று மனுசனைச் சொன்னால், யாராற்தான் முடியும்? – கண்மண் தெரியாமல் இன்கிறீமென்ட்டைக் கட் பண்ணிவிட்டார்கள். நான் நான்கு பிள்ளைகளுடனும் ஒரு மனைவியுடனும், (சத்தியமாக) விலைவாசிகள் உயர்ந்து கொண்டிருக்கும் இக்காலத்தில் வாழ்க்கையைச் சமாளிக்க முடியாமல், திண்டாடுகிறேன்.
விதி! அரச கட்டளை அப்படி – நான் நம்பிக்கைக்கும் விசுவாசத்துக்கும் உரிய ஓர் அரச சேவகனல்லவா!
அரசகரும மொழித் திணைக்களத்தின் கற்பித்தற் பிரிவினாற் தயாரிக்கப்பட்டு வெளியிடப்படும் தமிழ் மூலம் சிங் களம் முதலாம் தரச் சிங்களத் தேர்ச்சிக்கான பாடங்களை எடுத்துக் கொண்டு மேசை முன் அமர்ந்தேன்….
தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன், மரத்தின் மீதேறி அங்கே தொங்கிக் கொண்டிருந்த உடலைத் தள்ளி வீழ்த்தினான். பின்னர். அந்த உடலைச் சுமந்து கொண்டு செல்ல, அதனுள் இருந்த வேதாளம் எள்ளி நகைத்து….
“மடையா! அம்புலிமாமா படிக்கிற நேரமே இது? பாடப் புத்தகத்தை எடுத்துப் படி” – எனது பலமான அதட்டலில் பயந்து போன மூத்தமகன் சுதர்ஸன் சிணுங்கியபடி எழுந்து சென்றான்.
“உங்களுக்கு இப்ப என்ன வந்திட்டுது? ஏன் பிள்ளை யளைப் போட்டு இப்படித் திட்டிறியள்?” என்றவாறே அடுப்படியில் இருந்து வெளியே தோன்றினாள் என் மனைவி.
“லலிதா , பிள்ளைகளா இதுகள்? ஒரே கறிக்கடை மாதிரி ! கீயோ மாயோ வெண்டு சத்தம் போட்டுக் கொண்டு என்னைப் படிக்கவும் விடாமல்…”
“உங்கடை படிப்பும் நீங்களும்! அந்த விசித்திரம் தானே இண்டைக்கு வெளிவந்திருக்குது!”
“போச்சடா!” இவள்கூட என்னைக் கிண்டல் செய் யத் தொடங்கி விட்டாள். இனி யார்தான் என்ன சொல்ல மாட்டார்கள்; எனக்கும் ரோசம் என்று ஒன்று இருக்கத்தானே செய்யும்? எதுவுமே பேசாமல் புத்தகத்தினுள்ளே மூழ்கினேன்.
பிள்ளைகள் ஒவ்வொன்றாக நித்திரைக்குச் சென்றன.
விறாந்தையில் அப்படியே புத்தகத்துடன் நித்திரையாகி விட்ட சுதர்ஸனை எழுப்பி சாப்பாடு கொடுத்துப் படுக்க வைத்தாள் லலிதா.
படிப்பதற்கு உகந்த ஒரு சூழ்நிலை உருவாகியதைப் போலிருந்தது. மலர்ச்செடிகளினூடு வீசி வந்த குளிர்ந்த தென்றல் உடலுக்கு இதத்தை அளித்தது. ஒரு சிகரட்டைப் பற்ற வைத்து அதில் இலயித்தவாறே, பாடத்திற் கவனத்தைச் செலுத்தினேன்.
“இஞ்சருங்கோ வந்து சாப்பிடுங்கோவன்”
“இப்ப வேண்டாம் லலிதா….கொஞ்சம் பொறுத்துச் சாப்பிடலாம்.”
“மத்தியானம் காச்சின சோறு, வேர்த்துப் போடும் வந்து சாப்பிட்டிட்டு இருங்கோ.”
எனக்கு இரவில் சோறு சாப்பிடுவது அவ்வளவாகப் பிடிப்பதில்லை. ஏதாவது பலகாரம் சாப்பிடவேண்டும்.
“லலிதா; ஏன் இண்டைக்கு இடியப்பம் கிடியப்பம் அவிக்கயில்லையே?”
“ஓ! நீங்கள், இஞ்சை சிலவுக்குக் காசு தாற விசித்திரத்திலை….மா வாங்கி, வாய்க்கு இதமா ‘கிடியப்பம்’ அவிச்சு வைச்சிருக்கிறன்… வாருங்கோ”
அதற்கு மேல் நான் பேசவில்லை. வாழ்க்கைப் பிரச்சனை தொடங்கிவிட்டால், நான் மௌனியாகி விடுவது வழக்கம்.
“சரி… சரி… இரு வாறன்”
அதற்கு மேலும் படிப்பில் நாட்டம் செல்ல வில்லை நிலவுகள் எங்கோ …..
எத்தனை பிரச்சனைகள்?
சோற்றுப் பிரச்சனை தான் சோசலிசத்தின் அடிப்படை என்கிறார்கள்; ஒரு வேளை சாப்பாட்டிற்காக என்ன பாடுபட வேண்டிக் கிடக்கிறது! அங்கு இங்கு என்று அலைந்து ஆறோ ஏழு ரூபாய்கள் கொடுத்து ஒரு கொத்து அரிசி வேண்ட உடலும் உள்ளமும் அலுத்துப் போய்விடும். அரிசிக்காக அன்றாடம் மாறிய ஐந்தோ பத்தோ… எவ்வளவு கடன் அடைக்க வேண்டியிருக்கிறது!
“இஞ்சருங்கோ…!”
இதமான தென்றலும் அரை நிழலான பால் நிலவும் அவித்துக் கொண்டிருந்த இரம்மியமான சூழலில் லலிதா எனக்கு ஒரு புது அழகுடன் தோன்றினாள்.
எ”ன்ன லலி….?” – என்னையும் மீறியதொரு கொஞ்சல் என் வார்த்தையிற் புகுந்து கொண்டது.
“சாப்பிட வாங்கோவன்…”
அவளுடைய அழைப்பு விடுக்கும் பார்வை என்னை வச மெக்கச் செய்தது. ‘இறைவா சுய உணர்வுகளிலிருந்து இழுத்துச் சென்று இன்ப மயக்கம் அளக்கும் இவள் அழகு மருந்திலிருந்து மீட்டு என்னைப் படிக்க வைக்க மாட்டாயா?’
முடியவில்லை!
படிப்புக்கு ஒரு முழுக்குப் போட்டு மூடிவைத்து விட்டு துருதுருப்புடன் எழுந்து செல்கிறேன்.
***
கேட்டானே ஒரு கேள்வி!
என்னுடைய மூத்த மகனைப் பற்றித்தான் கூறுகிறேன். படுமொக்கு! இன்று அவனுடைய பாடசாலைத் தவணை விடு முறை. ‘றிப்போர்ட்டை’ப் பார்க்கவே தேவையில்லை.
“ஏன்ரா கழுதை; உனக்குப் படிக்கிறதுக்கு என்ன? இப்பிடி அஞ்சும் பத்துமாக மாக்ஸ் வேண்டினால்… எங்கை உருப்படப் போறாய்?” என்றேன்.
அவன் வலு நிதானத்துடன், “அம்மா!…அப்பா கூட சிங்களச் சோதினை பெயில் தானே?” என்றான். வந்த ஆத்திரத்தில் ஓங்கி அறைய வேண்டும் போலிருந்தது. கைக்கு வந்த வாக்கில் இரண்டு வைத்தேன்.
“தகப்பனைப் போலைத்தானே பிள்ளையும் இருக்கும்” என்று அம்மா வந்து பிள்ளையை இழுத்துத் தடவிக் கொடுத்தாள்.
எனக்கு எரிச்சலாயிருந்தது; யாரை நொந்து என்ன பயன்? அரசாங்க உத்தியோகத்தனுடைய தலையெழுத்து அப்படி!
மனவருத்தத்துடன் கதிரையில் அமர்ந்தேன்.
“அப்பா ! நான் முதலாம் பிள்ளை…” என்றவாறே வந்தாள் அடுத்தவள். அவள் கெட்டிக்காரிதான். நல்ல புள்ளிகள் எடுத்திருந்தாள். அவளைப் புகழ்ந்து முதுகிலே தட்டிக் கொடுத்தேன்.
“அப்பா!…முதலாம் பிள்ளையாய் வந்தால் புதுச் சட்டை வேண்டித் தாறனெண்டனீங்கள் தானே?”
“போச்சடா!” (சுபாவம்: அடிக்கடி எனக்கு இந்தப் ‘போச்சடா’ வந்து கொண்டிருக்கும்! எதையுமே உருப்படி யாகச் சாதிக்க முடியாத இயலாத்தனம் தான் போலும்.)
இதுக்கு நான் என்ன செய்ய?
“சரிடா…கவிதாக்குஞ்சு…பேந்து நான் பிள்ளைக்கு வேண்டித்தாறன்” எனச் சமாளித்தேன்.
ஒரு பிஞ்சு உள்ளத்தை ஏமாற்றவும் மனது இசைய வில்லை. ஒரு நாளைய சீவியத்தை ஓட்டுவதே பெரிய பாடாக இருக்கும் விசித்திரத்தில் உடுப்பு வேறா?
நீங்கள் என்னை நேரிலே காண நேரிட்டால்… எனக் காகப் பரிதாபப்படுவீர்கள்; அல்லது… பரிகாசம் செய்வீர்கள். எனது உடுப்பு அப்படி! கிழியல்களுக்குத் தையல் போட்டுப் போட்டு, லலிதாவுக்கும் அலுத்துப் போயிருக்கும்.
அவள் அடிக்கடி சொல்வாள்; “இந்தச் சம்பளத் தோடையெண்டாலும் ஒரு சேட்டு வேண்டுங்கோ” என்று. எப்படி முடியும்? நாளாந்தச் செலவுகளுக்காக அவனிடம் ஐம்பது இவனிடம் நூறு என ‘றோலிங்’. மாதமுடிவில் சம்பளம் எடுத்தால், கையில் ஒரு சதம் மிஞ்சாது.
“இஞ்சருங்கோ…!”
“என்ன லலிதா?”
“நல்ல படமொண்டு வந்திருக்காம்.”
“அதுக்கு இப்ப என்ன?”
“இண்டைக்குச் சம்பளம் எடுத்தனீங்கள் தானே… போவமே?”
“என்ன லலிதா?…நீயும் அதுகளைப் போலை சின்னக் குழந்தையே? மனிசன்ரை கஷ்டம் தெரியாமல் கதைக்கிறாய்?”
“அதுக்கேன் இப்ப இப்பிடிக் கத்துறியள்? கூட்டிக் கொண்டு போக விருப்பமில்லையெண்டால்… இல்லையெண்டு சொல்லுங்கோவன்!”
எனக்கு விருப்பமில்லாமலா?
என் மனைவியை எங்காவது ஆசையுடன் உல்லாசமாக அழைத்துச் செல்ல வேண்டுமென எனக்கு ஆவல் இருக்கத்தானே செய்யும்?
ஆனால்… கையாலாகாத்தனம் என்னை வாட்டியது.
முன்பெல்லாம் சம்பள நாள் ஒரு சந்தோஷமான நாளாயிருக்கும். விலைவாசிகள் உயர்ந்து கொண்டிருக்கும் இந்நாளில் நான் ஒரு சாதாரண எழுத்தன் (கிளார்க்) என்னத்தைச் சாதித்துவிட முடியும்?
இப்பொழுது; கவலையான ஒரு நாள் சம்பள நாட்தான். கடன் காரருடைய தொல்லையைச் சமாளிக்க முடியாத நாள்! அவர்களுக்கு சமாதானம் சொல்லி அனுப்புவதற்குள் போதும் போதுமென்றாகிவிடும். கையிலே காசு வந்தால் போகின்ற வழி தெரியாது!
நான் பலமுறை கனவுகள் கண்டிருக்கிறேன். அந்தக் கனவுகள் மனதுக்கு இதமாக இருக்கும்…
இந்தச் சிங்களச் சோதினையை எப்படியாவது பாஸ் பண்ணிவிட்டால்…
நிறுத்தி வைக்கப்பட்ட ‘இன்கிறீமென்ட் அரியேஸ்’ கிடைக்கும்! பதவி உயர்வு கிடைக்கும்!
அப்படி ஒரு நிலை வந்தால் என் மனைவியையும் பிள்ளை ளையும் எவ்வளவு சந்தோஷமாக வாழவைப்பேன்!
அந்தக் கனவுகள் மாத்திரம் பலித்துவிட்டால் இன்ப வானிலே மிதந்து பறக்கமாட்டேனா? ஆனால்…அவைகளெல்லாம் கனவோடு சரி.
நிம்மதி –
என் போன்ற சாதாரண அரச ஊழியனுடைய வாழ்வில் அது எங்கே இருக்கிறது?
இரவு வந்து நீண்டு கொண்டிருக்கிறது. கடமைக்காக புத்தகத்தை விரித்து வைத்துக்கொண்டிருக்கிறேன்; ‘விடிந்தாற் பொழுதறுதியும்’ வாழ்க்கைப் பிரச்சனைகளின் தாக்கம் மனதிற்கு அலுப்பை ஊட்டி விடுகின்றது.
சிந்தனை, சிந்தனை –
ஒரு சுவாரஸ்யத்தை ஊட்டுவதற்காக சிகரட்டைப் பற்ற வைத்தேன். களைப்புற்ற மனதுக்கு சற்று உற்சாகம் மாட்டுவதைப் போலிருந்தாலும், எம்மட்டுக்குத்தான் அதிலேயும் இலயிக்க முடியும்?
“இப்ப என்னத்துக்கு யோசிச்சுக் கொண்டிருக்கிறியள்? இது உங்களுக்கு மாத்திரம் வந்த கேடே? ஊரோடை ஒத்தது தானே?”,
– என் மனைவி லலிதா.
உண்மையிலேயே அவள் எனக்குக் கிடைத்த ஒரு பொக்கிஷம்.
அவள் இல்லையென்றால், நான் எப்பொழுதோ தற்கொலை செய்திருக்கக்கூடும்.
அவளுடைய துணை எனக்குப் பெரிய நிம்மதி. என் பக்கத்தில் கதிரைச் சட்டத்தில் இருந்து…ஆதரவுடன் அணைத்து இரக்கத்துடன் தலைமயிரைக் கோதிவிட்டாள். நெற்றியில் துளிர்த்து வந்த வியர்வையை பரிவோடு உணர்த்தி விட்டாள்.
அவளுடைய இதமான தேற்றுதல் என்னை ஒரு பிரச்சனையற்ற உலகத்துக்கு அழைத்துப் போவதைப் போலிருந்தது. இப்படியான நேரங்களில் என் மனதுக்குக் கிடைக்கும் இதம், சொகுசு… வேறு எப்பொழுதும் கிடைப்பதில்லை.
ஒரு குழந்தையைப் போல, என் கண்மணியின் மடியிலே தலையை வைத்து, அவளை அணைத்துக் கொண்டேன்.
***
(இக்கதையின் ஆரம்பத்துக்கும், இனி அடுத்து வரும் பகுதிக்கும் இடைவெளி ஒரு வருடம்)
…அறிவிப்புப் பலகையில் என்னுடைய பெயர் இன்னும் அப்படியே இருக்கிறது! சென்ற கிழமை சிங்களப் பரீட்சை முடிவுகள் வெளியாகின. (நீங்கள் ஒரு வேளை நான் சித்தியடைந்திருக்க வேண்டும் எனப் பிரார்த்தனை செய்யக்கூடும்)
கடந்த ஒரு வருடமாக எவ்வளவு கஷ்டப்பட்டும், முயற்சிகள் எல்லாம் வீணாயின். வழக்கம் போலவே இம் முறையும் கோட்டை விட்டாயிற்று.
நான் என்ன தனிமனிதனா?
மனைவி, பிள்ளை, குடும்பம், வாழ்க்கை , பிரச்சனை என உழலும் ஒரு குடும்பஸ்தனால் எப்படி மனதை ஒரு நிலைப்படுத்திப் படிப்பதைப் புரிந்து கொள்ள முடியும்?
பரீட்சையிற் தோல்வியடைந்ததை விட ஒரு சோகமான செய்தி சொல்லப் போகிறேன்.
அது –
எனக்குக் காலக்கெடு தந்திருக்கிறார்கள்.
இன்னும் ஆறு மாதங்களுக்குள் நான் சிங்களச் சோதனையில் சித்தியடையாவிட்டால் வேலையிலிருந்து நிறுத்தப் படுவேன், எனத் தலைமை அலுவலகத்திலிருந்து அறிவித்திருக்கிறார்கள். (போச்சடா!’)
பேரிடியான இச்செய்தியை லலிதா எப்படித்தான் தாங்கிக் கொள்வாளோ!
– ‘ஓ!’
– வாய்விட்டு அழுதாலும் இந்த வேதனை தீராது. என் நிலை இப்பொழுது பரிதாபமானது. இதை லலிதா தாங்கிக் கொள்ள மாட்டாள்.
இல்லை. என் கவலைக்கு லலிதாவினாற்தான் மருந்து தரமுடியும். அவளுடைய தேற்றுதலில் இது ஒரு பெரிய விஷயம் போலவே தெரியாது. தன்னுடைய துயரங்களையெல்லாம் எப்படித்தான் மனதினுட் புதைத்துக் கொள்கிறாளோ! அவளுடைய இதயம் அப்படி விசாலமானதா? அல்லது மனைவிகளின் மனது இப்படி விரிவடைகிறதா…!
– வீட்டுக்கு வந்த பொழுது அங்கு லலிதா இருக்கவில்லை .
நான் தேடிவந்த ஆறுதல் எங்கே?
“அப்பா!…அம்மாவை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போட்டினம்…”
– அடுத்த பிரசவத்துக்காக அவளை ஆஸ்பத்திரியில் அனுமதித்தாயிற்றாம்! பிரசவச் செலவுகளுக்காக இனிப் பறக்க வேண்டுமே!
‘சோதனை மேற் சோதனை போதுமடா சாமி…வேதனை தான் வாழ்க்கையென்றால் தாங்காது பூமி…’ என்ற பாட்டு நினைவுக்கு வருகிறது!
– நீர்ப்பாசனத் திணைக் களத் தமிழ்ப்பண்பாட்டுக் கழகம் அகில இலங்கை ரீதி யாக நடத்திய 1974- ம் ஆண்டிற்கான சிறுகதைப் போட்டியில் பாராட்டுப் பெற்றது.
– சுடர் 1977 – பலாத்காரம் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பாதிப்பு: 10-07-1977, ,தமிழ்ப்பணிமனை, யாழ்ப்பாணம்