கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: April 17, 2017
பார்வையிட்டோர்: 16,297 
 
 

காற்றில் சாசுவதமாக கைகளை அசைத்தபடி நடக்கத் தொடங்கினாள் செவத்தகன்னி. பொழுது மெல்ல ஏறிக்கொண்டிருந்தது. பொழுதுக்கும் அனலாய் கொட்டித் தீர்த்த வெயில் குறைந்து போய், தெற்கேயிருந்து மெல்லிய காற்று வேப்பம்பூக்களின் வாசனையோடு வீசியது. சைக்கிள் பஞ்சர் ஆகிவிட்டிருந்தது. அதனை எடுத்துக்கொண்டும், ‘முக்கூட்டில்’ இருக்கும் கடைத்தெருவில் சலீம்பாய் கடையில் மளிகை சாமான்கள் வாங்கிக்கொண்டும் வரவேண்டும் என கிளம்பியிருந்தாள். பக்கத்து தெருவிலிருக்கும் கடையில் ஒன்னுக்கு ரெண்டு கொடுத்து வாங்க வேண்டும். முக்கூட்டுக்கும், ஓர்ச்சேரிக்கும் மூன்று மைல் தூரம் இதனை கடந்து தான் டவுனுக்கு போக வேண்டும் என்பதால் முக்கூட்டிலிருந்து தான் நாலு ரோட்டுக்கு பஸ் பிடித்து போய் இருபது மைல் உள்ள தஞ்சாவூருக்கு போக முடியும். அதுவெல்லாம் உடனே நடந்து விடும் காரியமல்ல. ஒரு நாள் பொழுதும் செலவாகி விடும். அதோடு குறைந்தது ஒரு ஐநூறாவது வேண்டாமா? தனக்குத்தானே முணுமுணுத்துக் கொண்டாள்.

நடையின் வேகத்தில் சரக் முரக் என்று அணிந்திருந்த ஆடை ஓசை எழுப்பியது. இருபுறமும் தரிசாய் கிடந்த வயல்களில் நெல் தாள்கள் மக்கிக் கிடந்தன. பயிரெடுப்பு முடிந்திருந்தது. தூரத்தில் ஒருவர் ‘கிளுக்கி’ வைத்து நண்டு பிடித்து கொண்டிருந்தார். வளராத இளம் வெள்ளை நத்தைக் கூடுகளை ஆற்று மணலில் பொறுக்கியெடுத்து சிறு துளையிட்டு மெலிதான இரும்பு கம்பியில் கோர்த்தால், சலங்கை போல சத்தம் எழும். இதனையே சணலில் கோர்த்து கட்டிக் கொண்டு சிறுவர்கள் குறவன், குறத்தி ஆட்டம் ஆடி மகிழ்வார்கள். கம்பியில் கோர்த்த சலங்கையை மூங்கில் குச்சியில் வளைத்து கட்டி வரப்பிலிருக்கும் நண்டு வளைகளில் உள்ளே விட்டு குச்சியை முன்னும் பின்னுமாக திருப்ப வேண்டும். அப்போது உள்ளேயிருக்கும் நண்டு மழை பெய்கிறது என வெளியே வரும். முகப்பவுடர் டப்பாவில் இருக்கும் தண்ணீரை பீய்ச்சி அடிக்க வேண்டும். மழைதான் என்று நம்பி நண்டு மேலே வரும்போது கிடுக்கி குச்சியால் பிடித்து சாக்குப்பையில் போட்டுக்கொள்ளலாம். இது இந்தப் பகுதிக்கான நண்டுபிடி நுட்பம். அதுவும் வைகாசி மாதத்து நண்டுக்கு அப்படி ஒரு சுவை. தை மாதத்திலிருந்து மழை குறைவு என்பதால் ‘வளை’யில் நீர் தேங்குவது அரிது. தொடர் மழையும் மிக மிகக் குறைவு தான் என்றாலும் ஆடி மாதம் வரைக்குமான நீரை தேக்கி வைத்துக் கொள்ளும் திறன் கொண்டவை நண்டுகள். பங்குனி மாதம் கர்ப்பக்காலம் என்பதால் அதற்கான நீரினை உடம்பிலும், வளையின் பள்ளத்திலும் சேமித்துக் கொள்ளும். இப்போது அங்கே பிடித்துக் கொண்டிருப்பது பூசாரி தாத்தாவாகத் தான் இருக்க வேண்டும். அவர் இதுபோன்ற வேலைகளில் அபார நுட்பம் கொண்டவர். கோடை காலத்தில் தினம் எறநூறு ரூபாய்க்கு நண்டு பிடித்து விற்று விடுவார். மீண்டும் உற்றுப் பார்த்தாள். அவரைப் போலத்தான் தெரிந்தது. அங்கே இருந்த ஆள்.

எதிரே பைக்கில் வேட்டி சட்டையில் வந்த ஒருவன் “இடுப்புக்கு மேல் ஒரு மாதிரியாகப் பார்த்து உதட்டை பிதுக்கினான். சட்டென்று திரும்பி பார்த்து விலகி கிடந்த தாவணியை எடுத்து போட்டுக்கொண்டாள்.”

தானும் ஒரு தடவை பார்த்து “நாக்க தொங்க போட்டுக்கிட்டு எவ கெடைப்பான்னு அழையிறானுங்க” நடை வேகமானது.

பரபரப்பாக இருந்த கடைத்தெருவில் பன்னீர் சைக்கிள் கம்பெனியில் இரண்டு ஆட்கள் நின்று பேசிக் கொண்டிருந்தார்கள். சைக்கிள் ஓரமாக நிறுத்தப்பட்டிருந்தது. உட்கார்ந்த நிலையில் சைக்கிளுக்கு பெண்டு எடுத்துக் கொண்டிருந்தார்.

இவளைப் பார்த்ததும், “வாம்மா.. சைக்கிள் போட்டு எத்தினி நாளாச்சு உனக்கு ஆள் சொல்லி அனுப்பிச்சசா தான் அம்மா வருவீங்களோ” என்றார்.

இல்லிங்க. காசு இல்லாம போச்சு. அதான் முணகினாள், எதிர்த்துப் பேசினாள். அவ்வளவுதான்… கோபக்காரர்.. நல்ல தொழிற்காரர்.

அவர் கேட்ட பணத்தைக் கொடுத்துவிட்டு சைக்கிள் பின் ‘டயர்’யை காற்றை அழுத்திப் பார்த்தாள். நல்ல நங்கென்று அழுத்தமாக இருந்தது.

குயில்தோப்பு பக்கம் சைக்கிளை விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அங்கே மண் சாலையில் ஈச்சம் முட்கள் மண்ணில் நிரவிக் கிடக்கிறது. காட்டுக்கருவை முட்கள் வேறு கொத்தாக டயர்களை பதம் பார்த்து விடுகிறது…

பாய் கடையில் சாமான் வாங்கும்போது கடையில் நாலைந்து பேர் நின்று கொண்டிருந்தார்கள். பைக்கில் வந்த இரண்டு இளைஞர்களும் கைலியை தூக்கி கட்டியிருந்தது அவர்களின் உள்ளாடை தெரியுமளவுக்கு இருந்தது.

“அவர்களில் ஒருவன் ெசவத்த கன்னியிடம் நெருங்கி வந்து நின்றான். அழுகிய பழ வாசனை வீசியது. அந்த வாசனை எப்போதோ எவரிடமோ உணர்ந்த வாசனை அது.. சட்டென்று பின் வாங்கினாள். அவர்கள் வாங்க வந்த பொருளை வாங்காமல் இவளையே உற்றுப் பார்ப்பது போல் ஒரு பிரமை ஏற்பட்டது.”

“சாமான்” வாங்கியாச்சா?

“சாமன் கொடுத்தா தானே வாங்க முடியும்….”

“இரண்டு இளைஞர்களும் வாங்க வேண்டிய பொருளை வாங்காமல் தாமதித்தார்கள்.”

“வர வர பாய் கடையில சாமான் சரியில்ல அப்படி நல்ல சாமானா இருந்தா அவர் வெச்சிகிட்டு வீணா போன சாமானதான் நமக்கு கொடுக்குறார்…”

“சொல்லுங்கப்பா.. உங்களுக்கு என்ன வேணும் சலீம்பாய் அவர்களை பார்த்து கடிந்து கொண்டார்.”

“சிகரெட் கொடுங்க…”

அவர் எடுத்துக் கொடுத்தார்.

“ஒருவன் நெருங்கி வந்து செவத்தகன்னியிடம் “உன் பேரென்ன?” என்றான்.

பதில் சொல்லாமல் சலீம்பாயைப் பார்த்தாள்.

“பொழைப்பை கெடுக்காதீங்கடா… சாமீகளா! வட்டிக்கு வாங்கிப்போட்டு, வியாபாரம் பண்ணிக்கிட்டு கெடக்கேன். அவர்கள் விலகிப் போனார்கள்.”

பொழுது ஏறிவிட்டிருந்தது. அந்த இருவரும் பாண்டியைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் இவ்வளவு துணிச்சலாக கடைத்தெருவில் நடந்து கொள்ள மாட்டார்கள்.

“சாமான் என்று அவர்கள் குறிப்பிட்டது பாய்க்கு புரிந்ததோ இல்லையோ இவளுக்கு புரிந்தது.”

பொழுது காரிருள் கொண்டது. கடைத்தெருவில் ஆட்களின் சலசலப்பு. குடிகாரர்களின் வாக்குவாதங்கள். டீக்கடைகளில் சுடப்படும் பஜ்ஜி அந்தியில் விற்கப்படும் குரவை மீன், கீச்சலான குரலில் கருவாடு விற்கும் பாட்டி. மேற்கேயிருக்கும் சாராயக் கடையிலிருந்து மதுவருந்தி வரும் மனிதர்கள். சற்று தூரத்தில் இருந்த இரும்பு பட்டறையில் அழுத்தமாக அடிக்கப்படும் கம்பிகளின் சத்தம் துருத்திகளில் சுத்தப்படும்போது எழும் தீப்பொறிகள். கரை வேட்டிக்காரர்கள் பூட்டிய அரிசிக் கடையில் உட்கார்ந்து அடிக்கும் அரட்டை. அங்கங்கே நிற்கும் நடுவயதுக்காரர்கள் இடுப்பு மேலே செலுத்தும் கூர்மையான பார்வை. பஸ்சுக்காக காத்திருக்கும் அறிமுகம் இல்லாத பயணிகள். பஞ்சர் ஒட்டுவதில் தீவிரம் கொண்டிருக்கும் சைக்கிள் கம்பெனிக்காரர், இப்படியாக ஒரு ஒழுங்கமைவில் குடியிருந்தாலும் சற்று தூரத்தில் யாரோ தன்னை குறி பார்த்து கொண்டிருப்பது அச்சம் துளிர்த்தது செவத்த கன்னிக்கு. சைக்கிளில் ஏறினாள். கூட்டமாகவும் தனித்தும் கூடு திரும்பும் பறவைகள் குரலிட்டு அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தன.

சாலையின் இருபுறங்களிலும், வேலிக்கு அரணாக கிளுவை ஒதியன் கண்ணாலமுருங்கை, வாதம்மடக்கி மரங்களும் அடர் கொண்ட நல்லகாட்டாமணிகளும், புண்ணாக்கு செடிகளும் வளர்ந்து நின்றன. இடைவெளியிட்டு இருந்த இந்த மரங்கள் இடையே ஓரிரு பனை மரங்களும் இருந்தன. அதில் குலை தள்ளிக் கிடந்த காய்கள். தாகம் கொண்டவர்களை கூவி அழைத்துக் கொண்டிருந்தது. பொருட்களை பாலிதீன் வைத்து ஆம்பரில் மாட்டியிருந்தாள். நடைபயணமாக வரும் ஆட்கள் பொழுது போகும் முன்னே வந்து சென்று விட்டார்கள் போல. இருள் கொண்ட சாலை வெறிச்சோடிக் கிடந்தது. சைக்கிளில் இருந்த இருக்கைக்கு ஒரு ஸ்பாஞ்ச் வைக்க சொல்லியிருக்கலாம். பின்புறத்தை வைக்கும் போது பாறை கல்லில் வைப்பது போல் இருந்தது. இருந்தாலும், இருள் கொண்ட அந்தியில் தவழ்ந்து வரும் தென்றல் காற்று, சித்திரை மாதத்தின் வெக்கையை தணித்தது. வேகமாக சைக்கிளில் போய்க் கொண்டிருந்தாள். பின்னால் வேகமாக வெளிச்சமிட்டு பைக் சீறி வரும் சப்தம் கேட்டது. திரும்பி பார்க்கும் முன்பு செவத்த கன்னியை கடந்து சில அடி தள்ளி நின்று இதனை எதிர்பார்க்காத அவள் பதட்டத்துடன் பிரேக் பிடித்து நிறுத்தினாள். பைக்கிலிருந்து இறங்கிய ஒருவன் சைக்கிளிலிருந்து இறங்கி நின்ற இவளின் அருகே வந்தான். அவளின் முகமும் துல்லியமாக தெரிந்தது. இவள் பிடித்திருந்த சைக்கிள் ஆன்பரை பிடித்த அவன் உனக்கு என்ன ஊரு

“ஓர்ச்சேரி”

“ஐந்நூறுவா இந்தா வாங்கிக்கோ”

“வேண்டாம்.. போங்க..”

“ஒரு அரை மணி நேரம் எங்கிட்டே பேசிட்டு போ…” உடல் நடுங்கியது. வார்த்தை குழறியது. சைக்கிளில் ஏறி ஓடிவிடலாம் என முயற்சித்தாள்.

மற்றொருவனும் இவளருகே வந்து தொடக்கூடாத இடத்தில் தொட்டான். காறி தூவென துப்பினாள்.

வடக்கேயிருந்து ஒரு ‘பைக்’ வந்தது. இவளை விட்டு விலகி பைக்கை எடுத்துக்கொண்டு ஓடிப்போனார்கள்.

வியர்வையில் ‘தொப்பென்று நனைந்துவிட்டது!’ உடல்…

“குலத்தெய்வம்” நொண்டி வீரனை கூப்பிட்டுக்கொண்டே சைக்கிளில் ஆக்ரோஷமாக மிதிக்க தொடங்கினாள். எதிரே வந்த பைக்கில் மூன்று பேர் முண்டியடித்துக் கொண்டு உட்கார்ந்து போனார்கள். ஊர் எல்லைக்கு அருகேயிருந்த சுடுகாடு வாய்க்கால் மதகில் உட்கார்ந்து இருவர் பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்களை கடந்து போகும்போது ஒற்றை நாய் தெற்குப் பார்த்து அழுதுக் கொண்டிருந்தது. ஓர்ச்சேரி மெலிதான வெளிச்சத்தில் இருந்தது. காட்டாற்றின் கரையில் கிழக்கும் மேற்குமாக படுகையில் மூன்று தெருக்களில் குடி வந்திருந்தார்கள்.
ஐம்பதுக்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் மூன்று ‘கல்’ வைத்து கட்டிய வீடுகளைத் தவிர அத்தனையும் மண்ணால் சுவரெழுப்பி பனை ஓலையால் கூரை வேய்ந்த வீடுகள். வடக்குப் பார்த்து காட்டாற்று கரையில் இருந்த வீட்டில் வந்து இறங்கிய போது, துகில் உரியப்படும் முன் துரியோதனன் நாடகத்தில் சபையிலிருந்து தப்பிக்க முயலும் திரௌபதியின் முனைப்பு ஞாபகத்துக்கு வந்தது செவத்த கன்னிக்கு. இலவச குண்டு மின்சார பல்பு வீட்டுக்குள் எரிந்து கொண்டிருந்தது. வாசலில் ஆடுகள் படுத்துக் கிடந்தன. சைக்கிளிலிருந்து இறங்கி உள்ளே குரல் கொடுத்தாள். முனியம்மா முறத்தில் கொட்டிய அரிசியில் கல் பொறுக்கிக் கொண்டிருந்தாள்.. இவள் வருவதைப் பார்த்ததும்..

“ஆச்சி.. ஏன் இம்புட்டு கால தாமதம்”

“கடையில ஒரே கூட்டம்”

“வரும் வழியில் நடந்த விஷயத்தைச் சொன்னால் ஒப்பாரி வைக்கத் தொடங்கி விடும் என்று நடந்ததை வெளிக்காட்டாமல் பாலிதீன் பையிலிருந்த பொருட்களை கீழே கொட்டிப் பிரித்து வைத்தாள். கோழிக்கூட்டில் அடைபடாத கோழிகள், சுவற்றில் உட்கார்ந்து செவத்த கன்னியைப் பார்த்தது. பொழுது ஏறி விட்டிருந்தது. சாப்பிட்டு விட்டு படுத்தால் போதும் என மனம்
முன்னும் பின்னுமாக குழம்பின. எதிர்காலம் குறித்த பயம் உருவானது!”

சுடரும் மின்மினிகள் இல்லாத இந்த இரவை போல பௌர்ணமி தேயும் வெளிச்சத்தை தருவதை போல வாழ்வு குறித்த, எல்லா கணிப்புகளும் பொய்யாகிக் கொண்டிருந்தன. எல்லாம் அவனால் அப்போது எடுத்த ‘முடிவு’ பெரும் தோல்வியை தந்து விட்டது. மஞ்சள் வெளிச்சத்தை படரச் செய்யும் அந்த ‘பல்பை’ நிறுத்தலாம் போலிருந்தது. அம்மா உடம்பு வலியால் முனகுவது ேகட்டது. பருத்தி வயல்களில் பொழுதுக்கும் பஞ்சு எடுப்பது சற்று சிரமமான வேலை. தகிக்கும் வெயில் ஒருபுறம் என்றாலும், காய்ந்த பஞ்சுகளில் எடுக்கும் போது பறக்கும் கண்ணுக்கு தெரியாத தூசுகள் பறந்து கண்களில் படியும். வயலில் சற்று ஈரம் இருந்தாலும் குளிர்ச்சி கிடைக்கும். அது இல்லையென்றால் புழுங்க வேண்டியது தான். ஒரு வாரமாக கீழ் கட்டளையில் அம்மாவும் மகளும் பஞ்சு எடுத்ததால் கையில் கொஞ்சம் பணம் சேர்ந்திருந்தது.

அம்மா சட்டியில் இழையும் உயிர் நண்டுகளை பிடித்து தேவையில்லாத பகுதிகளை நீக்கிக் கொண்டிருந்தாள். பேசிக்கொள்ள வார்த்தைகள் தீர்ந்து போனது போல ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

தெருக் கடைசியிலிருந்த அமுதா வந்தாள். “ரெண்டு மூணு நாளா நாக்குக்கு ஒனக்கையே இல்லாம போச்சு. துக்கினி கொழம்பு குடு கன்னி”

“ம்”

“ஆமாம் வாங்கடி… நீங்க நல்ல கறி பொல்ல கறி ஆக்குன்னா மட்டும், கதவடைச்சிகிட்டு துன்னுங்க.. நாங்க ஆக்குன்னா மட்டும் நாக்கை தொங்க போட்டுகிட்டு வாங்க”

“என்னத்தே இப்படிச் சொல்லிபுட்டே என்னத்த நீ கேட்டு நான் இல்லன்னு சொன்னேன்…”

“குழம்பு.. பூண்டு வாசத்துடன் அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்தது…”

“கொதிக்கட்டும் ஒக்காரு அண்ணி”

அமுதாவின் கையைப் பற்றி நீள்வாக்கில் கிடந்த பெஞ்சில் அமர்த்தினாள் செவத்த கன்னி. சில மணி நேரத்துக்கு முன்பு, நடந்த அந்த விஷயத்தை சொல்லலாமா? என்று தோன்றியது. வேண்டாம் என நிறுத்திக் கொண்டாள்.

அமுதா தனது வீட்டுக்காரன் பற்றிய குற்றச்சாட்டுக்களை அடுக்கத் தொடங்கினாள். இது கேட்டு கேட்டு அலுத்துப்போன விஷயம். ஆனாலும், அவள் சொல்ல சொல்ல ‘ம்’ போட்டு கேட்டுக் கொண்டிருந்தாள். அம்மா கிண்ணத்தில் குழம்பையும் நண்டு துண்டங்களையும் போட்டுக் கொடுத்தாள். கிளம்பிப் போனாள் அமுதா. சாப்பிட்டுவிட்டு படுத்தபோது இரவாகி விட்டது. நாளைக்கு யாருக்கு பஞ்சு எடுக்கப் போவது என தெரியவில்லை. பார்த்துக் கொள்ளலாம் என படுத்தாள்.

கீழே விரிக்கப்பட்டிருந்த பாயில் படுத்தபோது ‘மடித்த’ கோரையின் வாசனையிலிருந்து அறிவழகனின் ஞாபகம்! சடுதியில் வந்து இவளை துன்புறுத்தியது. எப்படியாவது அந்த நினைவுகளில் விடுபட நினைத்தாலும், ஏற்படும் அனுபவங்கள் கசப்பின் சுவையை தருவதாக இருந்தது. அதனால் ஒவ்வொன்றையும் எளிதாக கடந்து விட வேண்டும் என ஒவ்வொரு முறையும் முயற்சித்தாள். இந்த உடல் இல்லை என்றால் என்னை பின்ெதாடர்ந்து வருபவர்களின் எண்ணிக்கை எத்தனையாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டாள். இப்போது தன்னை வசீகரிக்க நினைப்பவனும் முன்னால் தன்னோடு வாழ்ந்தவனும் கிட்டத்தட்ட ஒரு முகம் கொண்டவர்களாக வேறு வேறு முகமூடிகளும், ஒப்பனைகளும் கொண்டவர்களா? ஒவ்வொரு முறையும் உடலை ஒப்புக்கொடுத்துதான் அவர்களின் சுயத்தை கண்டறிய வேண்டுமா? அனுபவம் அவள் மீது இடைவிடாத ரணங்களை பதித்து இருக்கிறது. நினைவுகள் சுழன்றன.

“பத்தாம் வகுப்பு வரை மட்டுமாவது எப்படியாவது செவத்த கன்னியை படிக்க வைக்க வேண்டும் என்பதில் தங்கவேலு உறுதியாக இருந்தார். இரண்டு மகன்களும் ‘உதவாக்கரையாக’ இருக்கிறார்கள் என்பது அவர் கணிப்பாக இருந்தது. பெரியவன் கேரளாவுக்கு மாட்டுக்கறி கடைக்கு போனவன் உயிரோடு இருக்கிறானா? இல்லையா என்று தெரியவில்லை. அடுத்தவன் திருப்பூர் பனியன் கம்பெனியில் வேலை செய்து எப்போதாவது பணம் அனுப்பினான், இப்போது இல்லை. ஆனால் ‘இவன்கள்’ இருவருக்கும் பத்து வருட இடைவெளிக்கு பிறகு பிறந்தவள் செவத்த கன்னி. இவள் பிறந்த சில மாதங்களில் தங்கவேலுக்கு நல்ல வருமானம் கிடைத்தது. இவன் மாடுகளை தோலுரிப்பதில் மகா கெட்டிக்காரன். சுற்று வட்டார கிராமங்களில் காணியாச்சி பார்க்கும் ஆட்களோடும், நல்ல உறவு இருந்தது. அதேபோல விசேஷகாலங்களில் ஆடு உரிக்க இவனுக்கு ஏக கிராக்கி. செத்த மாட்டையே ஒரு மணிநேரத்தில் உரிப்பவன் என்றால் ‘ஆடு’ எல்லாம், அரை மணி நேரம் கூட ஆகாது. அப்படியொரு லாவகம் அவன் கையில் சூரி கத்தியைப் பிடிக்கும்போது அத்தனையொரு நுட்பம். செத்த மாட்டை தரையில் கிடத்தி கழுத்து மேல்புறமாக தாடையை கீறி கீழ்பாகத்திலிருந்து மெல்ல நகர்ந்து வயிறு… பின்புறம் என கீறி கைகளை உள்நுழைத்து அழுத்தி விரல்களை தள்ளி நெம்பி வரும் அழகே அழகு அப்படியொரு நேர்த்தி. மாட்டு தோல் விலையில் கிடைக்கும் பணத்தை இவன் முக்கால் பாகமும் காணியாச்சிக்காரனுக்கு கால்பாகம் என்பதே ஊதியம். ஆனால் ஆட்டில் அப்படியில்லை. உரிப்பவனுக்கே தோல் சொந்தம். தோல் விற்ற வகையில் ஒரு ஏக்கர் நிலமே வாங்க முடிந்தது. அது எல்லாம் செவத்த கன்னி பிறந்த பிறகு என்பதால் அவளை செல்லமாக வளர்த்தான். அதனாலே இவள் படித்து ஏதாவது ஒரு வேலைக்கு போகவேண்டும் என்பதிலும் தீவிரம் காட்டினான் தங்கவேலு. ஆனால் பத்தில் தேறி பதினொன்றில் படித்துக் கொண்டிருந்த அந்த மழைக்காலத்தில் தான் தங்கவேலுக்கு காமாலை முற்றி உடல் சொடிந்து போனது. தினமும் குடித்த சாராயமும் பீடியும் நோயின் தீவிரத் தன்மையை அதிகரித்திருந்தது. இறுக்கமான நிறத்தில் கடும் வலிமை கொண்டிருந்த உடம்பு ஓரிரு மாதங்களில் சுணங்கிப் போனது. நாட்டு மருந்துகளும், பத்தியங்களும் பயன் அளிக்கவில்லை. காற்றும் மழையும் கடும் சீற்றத்துடன் பெய்ந்த அந்த ஞாயிற்றுக்கிழமையின் நள்ளிரவில் தங்கவேலுவின் உயிர் போனது. அதுவரை சீராக போய்க்கொண்டிருந்த வாழ்க்கை. குழப்பமாகவும் கோளாறாகவும் மாறியது. இரண்டு அண்ணன்களும் திசை தெரியாமல் போய்விட்டார்கள். அம்மா அவர்களை பெற்று இருக்க வேண்டாம் என சொல்லி அழுதாள். பனிரெண்டில் தோல்வியடைந்து மேற்கொண்டு படிக்க முடியாமல் போனது. உறவுக்காரர்கள் எப்போதாவது பார்க்கும்போது நலம் விசாரிப்பதோடு அவர்கள் நிறுத்திக் கொண்டார்கள்.

அம்மாவோடு நாற்று நட வயலில் இறங்கினால் வயலும் வீடும் அம்மாவும் என கிராமத்தின் அழிஞ்சை காடுகளில், வயல்வெளிகள், திடல்களில், பறவைகளின் பாடல்களை கேட்கும் முனைப்புகளில், வாசனையோடு பூக்கும் காட்டுமல்லிச் செடியின் தேடல்களில், தோட்டங்களில், வைக்கும் கனகாம்பரம் நட்டுப் பூ பறித்து கட்டி விற்கும் ஆர்வங்களில், இளமை தரும் இனம் புரியாத மகிழ்ச்சியின் நெகிழ்வுகளில், ஏதோ ஒன்றை அடைய விரும்பும் விருப்பங்களில் திளைத்துக் கொண்டிருந்தாள். வட்டமான முகத்தில் பூக்கும் பருக்களில் உடலில் வழியும் வியர்வை வாசனையில், முகத்தில் மினுங்கும் பொலிவில் ஒரு புதிய மனுஷியாக தான் இருப்பதையும், தனக்குள் மிளிரத் தொடங்கியிருக்கும் மார்பைப் பார்க்கும்போது ஒரு பெருமிதம் பொங்கி வழிந்தது…

ஒரு ஏக்கர் தங்களது நிலத்தில் புழுதியடிக்கும் டிராக்டர் வருவதாக அம்மா முனியம்மா சொல்லி இவளையும் அழைத்தாள். அது ஒரு ஆடி மாதம் ஆனி மாதத்தில் ஒரு நாள் கனத்த மழை பெய்ந்தது. அதுக்கு பிறகு எல்லோரும் கோடை உழவு தொடங்கி விட்டார்கள். வடக்குப்புறமாக நீண்டு கிடக்கும் வயல்வெளிகளில் இடையே ‘துண்டக்கட்டளை’ என அழைக்கப்படும். தங்களது வயல் நல்ல செழுமையான நிலம். இரண்டு போகம் நெல்லும் ஒரு போக காலத்தில் புஞ்சை பயிர்களை உளுந்தோ, பயிறோ, எள்ளோ வஞ்சனையில்லாமல் விளையக்கூடியது. நல்ல வாய்க்கால் பாசனம், ஓடம்போக்கியாற்றில் மதகைத் திறந்தால் போதும். ஓர்ச்சேரியான் வாய்க்கால் உடைத்துக் கொண்டு ஓடும். ஒரு ஏக்கரும், ஒரு மணி நேரத்துக்குள் பாய்ந்து விடும். நல்ல வாசனையுள்ள ‘மண்’. நுகர்ந்து பார்த்தால் பீர்க்கம்பூ வாசனையடிக்கும் வயலின் வரப்புகளில் மூன்று வேப்பம் மரங்களும் ஒரு கருவேல மரமும் நின்றது.
தாயும், மகளும் வேப்பமரத்தின் நிழலில் அமர்ந்து தூரத்திலிருந்து வயல்வெளிகளில் ஊர்ந்து வரும் டிராக்டரை பார்த்தார்கள். வெயில் சுதியிழந்து கிடந்தது. ஆடிக்காற்று மரங்களை அசைத்து ஆட்டிக்கொண்டிருந்தன. அவன் சிவப்பு சட்டையும், நீலநிற லுங்கியும் அணிந்திருந்தான். நடுத்தரமான உயரத்தில் கொஞ்சம் போல வெளுப்பாக இருந்தான். ‘கண்கள் செண்பகப் பறவையின் கண்களை போல அவ்வளவு சிவப்பு.’ அதற்கு பிறகு அவனை தொடர்ந்து சந்திக்க வேண்டியிருந்தது. வயல்வெளிகளில் தெருக்களில், சாலைகளில் ஏதோ ஒன்றை தேடி அலைபவனை போல தெரிந்தான். அவனை பார்க்கும் ஒவ்வொரு சந்திப்புகளிலும் அடிவயிற்றில் சொரசொரப்பு எழும். உடல் நடுங்கும். வியர்வை பெருகும். தொண்டை வறண்டு தாகமெடுக்கும். அவன் இவளை வெறித்து பார்த்துக்கொண்டே போய்க் கொண்டிருப்பான். ஒருநாள் வடக்குவெளியில் நடவுக்கு சென்றுவிட்டு தனியாக வந்தபோது கொல்லுருரான் வாய்க்கால் மதகடியில் நீண்ட வரிசையிலான பனைமரங்களின் இடையே வந்து கொண்டிருந்தான்.

எதிரே வந்தபோது கண்ணடித்து அழைத்தான் போவதா? வேண்டாமா என்று தயங்கி நின்றாள். ஆனாலும் நடுக்கத்துடன் அருகே போனபோது வெடுக்கென்று கையைப் பற்றி உள்ளங்கையில் அழுத்தமாக உதடு பதித்தான். உதறியடித்து விட்டு, வேகமாக ஓட்டம் பிடித்தாள். இரவெல்லாம் உறக்கமில்லை. பார்த்த சினிமா படங்கள் எல்லாம் ஞாபகத்துக்கு வந்தன. பிறகான பொழுதுகள் மரங்கள் அடர்ந்த தோப்புகளிலும் புதர்கள் மண்டிய திடல்களிலும் அந்தி கருக்கலிலும் நிழல்களை போல அவனோடு ஊடாடிக் கிடந்தாள். பல உச்சி வெயில் பொழுதுகளில் முனியம்மா மகளை தேடி அலைந்தாள். தெருக்கார பெண்கள் ஜாடை மாடையில் அவளிடம் ஏதோ பேசி சொன்னார்கள். எதுவும் புரியாத ‘புங்கன் கட்டையாக’ குழம்பித் தவித்தாள் முனியம்மா.

குறுவை சாகுபடி முடிவுற்று, சம்பா நடவு தொடங்கியிருந்த முதிர்வெயில் கொண்ட புரட்டாசி மாதத்தின் கடைசி சனிக்கிழமையில் ஒரு மஞ்சள் பை நிறைய துணிகளை எடுத்துக்கொண்டு முக்கூட்டு பக்கம் போவதை ஊர் தலையாரி ‘தங்கையன்’ பார்த்துக் கொண்டு வந்து முனியம்மாவிடம் சொன்னான்.

அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமையே டிராக்டர் டிரைவர் அறிவழகனோடு, செவத்தகன்னி ஓடிப்போன விஷயம் ஊரெங்கும் பரபரப்பாக பேசப்பட்டது. சங்கறுக்கப்பட்ட ஆட்டைப் போல முனியம்மா வீட்டோர வாசல்படியில் அமர்ந்து பிதற்றிக் கொண்டிருந்தாள். சிறுவர்களும் வயதான பெண்களும் கூடி நின்று வேடிக்கைப் பார்த்தார்கள். தெரு ஆட்கள் வந்து கெட்ட வார்த்தையில் திட்டினார்கள். இரவு, ஓர்ச்சேரி மூன்று தெருக்களை உள்ளடக்கிய மொத்த ஜனக்கட்டும், மையமான பொது புளிய மரத்தடியில் கூடி விவாதித்தார்கள் நாட்டாண்மை பஞ்சாயத்து உள்ளிட்டவர்கள் இது கிராம கௌரவ பிரச்சனை என்றும், அந்த டிராக்டர் டிரைவர் அறிவழகன் பத்து மைலுக்கு அப்பால் இருந்து வந்தவன் என்றும், உடனே அவன் கிராமமான குழிக்காட்டுக்கு ‘ஆள்’ அனுப்பி விபரத்தை சொல்லவும் எங்கேயிருந்தாலும் தேடவும் முடிவெடுக்கப்பட்டது. இதற்கான செலவுக்கு ஒரு ஏக்கர் நிலத்தையும், அடகு வைத்து ஊரே இருவரையும் பிடிக்க ஆகும் செலவைப் பார்த்துக்கொள்ள முடிவெடுக்கப்பட்டது. அவர்கள் குழிக்காட்டுக்கு போன போது தான் அறிவழகனுக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பது தெரிய வந்தது. அறிவழகன் மனைவி கைக்குழந்தையை தோளில் போட்டுக்கொண்டு ஒப்பாரி வைத்து அழுவதாலும் அந்த ஊர்க்காரர்கள் திரண்டு நாளை வரப்போவதாகவும் செய்தி சொல்லி போனவர்கள் முனியம்மாவிடம் வந்து சொன்னார்கள். ஆனால் எவரும் வரவில்லை. சிவப்பு கட்சிக்காரர் மூலமாக 27 நாட்கள் தேடி திருப்பூர் பனியன் கம்பெனி ஒன்றில் வேலைப் பார்த்துக் கொண்டிருந்த இருவரையும் தேடிப்பிடித்துக் கொண்டு வந்தார்கள். இரண்டு கிராமம் கூடி சர்வ கட்சியில் உள்ள ஒன்றிய அளவிலான பிரமுகர்கள் முன்னிலையில் கிராமத்தில் கூட்டம் கூட்டப்பட்டது.

இருவரையும் புளியமரத்தில் கட்டி வைத்து புளியம்சிம்புவால் ஆளுக்கு நாலு அடிக் கொடுத்து செவத்த கன்னியின் கழுத்தில் கட்டியிருந்த தாலியை அறுத்து ஆளுக்கு பத்தாயிரம் வீதம் கிராமத்துக்கு கொடுக்கவும் இருவரையும் பிரித்துவிடவும் முடிவெடுக்கப்பட்டது. செவத்த கன்னியின் முகத்தில் கிராம முக்கியஸ்தர்கள் காறி உமிழ்ந்தார்கள். இப்படித்தான் அப்பாவின் நிலமும் தன்னுடைய மானமும் தான் செய்த தவறால் பறி போனது. அப்படியொரு தவறை செய்திருக்காவிட்டால் இப்படியொரு நெருக்கடியும் கஷ்டமும் வந்திருக்காது.

அறிவழகன் ஏமாற்றினான். நாம் ஏமாந்தோம் அவன் வார்த்தைகள் பிடித்திருந்தன. அவன் சொல்லில் ஏதோ ஒரு சக்தியிருந்தது. அவன் பேச்சை மீறமுடியாமல் அவன் பின்னால் போனாள், அந்த வலி நிரம்பிய அனுபவத்துக்கு பிறகுதான் இந்த கிராமத்தின் ஆண்களின் பார்வை இவள் மீது படரத் தொடங்கியது. வயற்வெளிகளில் தனித்திருக்கும் பொழுதுகள் மிகவும் அபாயம் நிறைந்தவையாக மாறத் தொடங்கியது. ஒவ்வொன்றிலும் மிக கவனமாக அடியெடுத்து வைத்தாள். காதல் குறித்த பிடிமானம் நழுவிப்போனது. ஆண்கள் பற்றி ஒரு முடிவுக்கு வரமுடியாமல் போனது. அதன் பிறகு சூழலின் நெருக்கடியில் உருவான காதல்கள். எல்லாம் வெறும் உணர்ச்சியின் பிதற்றல்கள் என உணர்ந்தபோது உடல் பற்றிய ஒரு தெளிவு ஏற்பட்டது.

படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்தாள், வயிறு உப்பியது. யாரோ வெளியே கனைப்பது கேட்டது. கொட்டடியில் ஆடுகள் கட்டிக் கிடந்தன. கீழத்தெருவில் நாய்கள் குரைத்தன. அது கிழக்குப் பார்த்த வீடு கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தாள். ஆடுகள் போட்ட பச்சை புழுக்கைகளின் வாசம் எழுந்தது. இவள் கதவைத் திறக்கும் சத்தம் கேட்டதும் ஆடுகள் கத்தின. நெற்றி வெள்ளை ஆடு மடி தளர்ந்து கிடந்தது.

“குட்டிக்கிட்டு போட்டுக் கெடக்கா” என முணுமுணுத்துக் கொண்டாள். உள்ளே எட்டிப் பார்த்தாள். ரவி நின்று கொண்டிருந்தான்.

“யாரு…?”

“நாந்தேன் கன்னி.. கிட்டே வந்தான்”

“சொல்லு…”

“முக்கூட்டுல சாயந்தரம் கறிகொண்டார் பேரன் உன்ன பார்த்தானாம், பிடிச்சு போச்சாம், எவ்வளவு பணமுன்னாலும் தர்றேன். ஒரு தடவ அழைச்சிக்கிட்டு வான்னு சொல்றேன். உன்னப் பத்தி நம்மூர்க்காரனுவோ தப்பா சொல்லியிருப்பானுவோ போலிருக்கு.. நான் அவன்கிட்டே டிராக்டர் ஓட்டுறதுனாலா ஒன்னும் பதில் சொல்ல முடியல.. என்ன சொல்ற.. எவ்வளவு பணமுன்னாலும் வாங்கி தர்றேன்..” கெஞ்சலுடன் சொன்னான், அவனிடமிருந்து அழுகிய பழ வாசனை வீசியது.

“வானத்தைப் பார்த்தாள் நட்சத்திரங்கள் சுடர்ந்தன. மெல்லிய தென்றல் தவழ்ந்தது. மரங்கள் மெல்ல அசைந்தன. ஆந்தையொன்று அலறிக்கொண்டு வேகமாக கிழக்கு பக்கமாய் பறந்தனது விசிலடிக்கும் பறவையின் சீழ்க்கையொலி தனி தனியாக விட்டு விட்டு கேட்டது.”

“அவரு எங்க நிக்கிறாப்புள்ள” மணி என்னாச்சு

“ஆத்தங்கரை மேட்டுல.. மணி 12 இருக்கும்”

“சரி.. முன்னே போ.. நான் பின்னே வர்றேன்.”

“கட்டாயம் வர்றியிலே”

“ம்…”

வீட்டுக்குள் நுழைந்தாள். அம்மாவின் குறட்டையொலி தீவிரமாகக் கேட்டது. குதிர் இடுக்கின் மறைவில் இருந்த அப்பாவின் சூரிக்கத்தியை எடுத்தாள். விரலால் சுனைப் பார்த்தாள். மிக கூர்மையாக உள்ளிறங்கியது.

அப்பா செத்த மாட்டை தோலுரிக்கும்போது கழுத்திலிருந்து தொடங்குவது ஞாபகத்துக்கு வந்தது. கூந்தலை முடிந்து இருளில் நடக்கத் தொடங்கினாள்.

– அக்டோபர் 2016

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *