கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: February 10, 2013
பார்வையிட்டோர்: 13,932 
 

இரவு மணி 8.00.

அலுவலகத்திலிருந்து களைப்போடு வீட்டுக்குள் வந்தார் சிதம்பரம்.
அவரை பார்த்ததும், மூத்த மகன் அஸ்வின், ஓடிச்சென்று அம்மா காமாட்சியின் காதில் கிசு கிசுத்தான்.

“”என்ன.. காதை கடிக்கிறான்?..”

அவர் கேட்டதே எதுவும் கிடைக்காது என்பது போல ஒலித்தது.

“”ஒண்ணுமில்லீங்க..” வார்த்தைகளை மென்றபடி, வாசலில் அமர்ந்திருந்த காமாட்சி எழுந்து உள்ளே வந்து, பையை வாங்கிக் கொண்டாள்.

“”ஒண்ணுமில்ல, ஒண்ணுமில்லன்னு சொல்லியே அவன ஒண்ணுமில்லாம ஆக்கப் போற..”

செல்போன்

கழட்டப் போகும் கடைசி சமயத்திலும், செருப்பு மேலும் மிதி வாங்கியது.

“”டேய் அஸ்வின்.. இங்க வா.. நீயே உங்கப்பாகிட்ட பேசிக்கோ எனக்கென்ன..” நழுவினாள் காமாட்சி.

“”என்ன..?” என்பது போல, அஸ்வினை ஏறிட்டு பார்த்தார் சிதம்பரம்.

மெதுவாக அவரிடம் இருந்து விலகி, “”எனக்கு ஒரு செல்போன் வாங்கித் தாப்பா” என்றான் தயக்கத்துடன்.

எதுவும் சொல்லாமல் காமாட்சியை வெற்றுப் பார்வை பார்த்து விட்டு,””இப்ப எதுக்கு செல்போன்? பத்துதான படிக்குற.. பன்னெண்டு படிக்கும் போது வாங்கிக்கலாம். போய் படிக்கிற வழியப் பாரு” சட்டையை கழற்றி கொடியில் போட்டார். கிட்டத்தட்ட எறிந்தார்

“”எட்டு படிக்குற பொண்ணுங்க எல்லாம், செல் வச்சிருக்காங்கப்பா..”

“”பொண்ணுங்களுக்கு தேவை. உனக்கென்ன? முதல்ல எல்லா பாடத்திலேயும் 90 மார்க் வாங்கு. அப்புறம் வாங்கலாம் செல்லு”

“”செல் வாங்குறதுக்கு 90 மார்க்கெல்லாம் தேவையில்லப்பா. பணம் இருந்தா போதும்” என்றான் கிண்டலாக.

“களுக்’ என்று வாய் மூடிச் சிரித்தாள், சின்னவள் கிருத்திகா.

“”ஏய்.. சின்னக்கழுதை அங்க என்னடி சிரிப்பு? ஒழுங்கா படிக்கிற வேலையப் பாரு” அதட்டினாள் காமாட்சி.

“”பணத்தை பத்தி பேசினா, பல்லை உடைச்சிருவேன் போன வாரம் தான், 500 ரூபாய்க்கு பேட் வாங்கி கொடுத்தேன். தெருவுல அத்தன பேருக்கும் தானம் கொடுத்து, ஒடச்சிட்டு வந்து நிக்குற? பணத்தை பத்தின அக்கறை ஏதாவது இருக்கா உனக்கு..?”

“”அதெல்லாம் இருக்கு”

“”என்னடா இருக்கு? ஒரே வாரத்துல உடைச்சிட்டு வந்து நின்னயே?.. அந்த பேட்டோட பணம், எத்தன பேருக்குச் சம்பளம் தெரியுமா? 500 ரூபாயில, எத்தன பேர் குடும்பமே நடத்துறாங்கன்னு தெரியுமா? ரெண்டு கழுத வயசாகப் போகுது. எதாவது பொறுப்பு இருக்கா உனக்கு?” என்றார் சற்றே காட்டமாக.

“”அம்மா.. ஒரு கழுதைக்கு எத்தன வயசும்மா..” அம்மாவின் காதுக்குள் கிசு கிசுத்தாள் கிருத்திகா.

“”ம்.. உன் வயசு தான் கொஞ்சம் பேசாம இருக்கியா? வாங்கிக் கட்டப் போற, உங்கப்பாகிட்ட” என அடக்கினாள் காமாட்சி.

கை, கால் அலம்பி, உடைகளை மாற்றி, சேரில் வந்து அமர்ந்தார் சிதம்பரம். எதுவும் பேசாமல், தலையை கவிழ்த்தியபடி, கதவு நிலையில் சாய்ந்து நின்றான் அஸ்வின்.

“”இதோ பாருடா.. எங்க காலமெல்லாம் முடிஞ்சு போச்சு. இனி உங்க காலத்துல நல்லா படிச்சு, நல்ல வேலைக்கு போகலன்னா, நடுத்தெருவுல தான் நிக்கணும் தெரிஞ்சிக்கோ. சொந்தக்காரன்னு எவனும் உதவிக்கு வர மாட்டான். உருப்படற வழியப் பாரு” என்றார் ஆதங்கத்தோடு.

“”போப்பா.. அதெல்லாம் படிச்சிருவேன். இப்போ வேலை கிடைக்காட்டி என்ன.. ஒரு சர்வர் வேலை பார்த்து பிழைச்சுக்க மாட்டேனா..?” என்றான் அலட்சியமாக.
சுருக்கென்றது சிதம்பரத்திற்கு.

“”ஏன்டா சர்வர் வேலைன்னா, அவ்வளவு இளக்காரமா போச்சா உனக்கு? ஒவ்வொரு வேலைக்குள்ளேயும், எவ்வளவு கஷ்டங்கள் இருக்கு தெரியுமா?.. அது மட்டுமில்ல, இப்ப இருக்கிற வாழ்க்கையும், வசதியும் அதுல கிடைக்காதுடா” என்றார் பதட்டமாக.

“”அதெல்லாம், எனக்கும் தெரியும்..” என்று விளையாட்டாக அஸ்வின் முடிக்குமுன்,

“”என்ன தெரியும்..?” என்று கடுப்புடன் நிமிர்ந்து பார்க்க, எதுவும் பேசாமல் மெல்ல நகர்ந்து விட்டான். அங்கே அழுத்தமான ஓர் அமைதி நிலவியது.
செல்போன் வாங்கி தர மறுத்த ஏமாற்றத்தில் அவன் இருக்க, பணத்தை பற்றிய அக்கறை அவனுக்கு இல்லையே என்ற கவலையில் சிதம்பரம் இருந்தார்.
இந்த வயசுலயே, இவனுக்கு பணத்தின் மீது அலட்சியம் வந்துருச்சே.. இப்படியே போனா எந்த பொறுப்பும் இல்லாம போயிருவானே? பணத்தோட அருமையை எப்படி புரிய வைக்கிறது?.. சிந்தனையில் ஆழ்ந்தார்.

“”என்னங்க.. உங்க பிரச்னையை அப்புறம் வைச்சுக்கோங்க இப்ப, சாப்பிட வாங்க. அஸ்வின், கிருத்திகா எல்லோரும் வாங்க.. மொத்தமா எடுத்து வைக்கிறேன். தனித்தனியா போட முடியாது” சத்தம் போட்டு அழைப்பது போல, காட்சியை மாற்றி வைத்தாள் காமாட்சி.

அவள் பரிமாற எடுத்து வைத்த சாப்பாட்டு பாத்திரமும், சமையல் வாசனையும் சிதம்பரத்தின் மனதில் ஓர் எண்ணத்தை விதைத்தது.

சரிதான்.. அது தான் சரியா இருக்கும் வர்ற ஞாயிற்றுக் கிழமையே செஞ்சிடலாம் சற்றும் யோசிக்காமல் முடிவெடுத்தார்.

ஞாயிற்றுக்கிழமை. சீக்கிரமே எழுந்து கிளம்பிய சிதம்பரம், அஸ்வினையும் கிளம்பச் சொன்னார். திடீரென கிளம்பச் சொன்னதில் அவனுக்கு குழப்பம்.
இன்னைக்கு அண்ணா நகர் பசங்களோடு கிரிக்கெட் மேட்ச் வேற இருக்கே நான் இல்லாமல் எப்படி? கேட்கவும் பயம். பேட்டை எடுத்து தானம் பண்ண கிளம்பிட்டியா? என திட்டு விழும்.

இரண்டு நாட்களுக்கு முன் செல்லை பற்றி அப்பா விசாரித்துக் கொண்டிருந்தது சட்டென அவனுக்கு ஞாபகம் வந்தது.

ஆஹா.. நமக்கு செல்போன் வாங்கத்தான் போகிறோம்.

அவனுக்குள் ஆனந்தம் கூடவே ஆச்சர்யம் சந்தோசமாக கிளம்பினான்.
ஆனால், ஞாயிற்றுக்கிழமையில் கடைகள் கிடையாதே, உள்ளூர குழப்பமாகவும் இருந்தது.

“”என்னங்க ஏதாவது மேரேஜ் ஃபங்சனா?”

இடை மறித்துக் கேட்ட காமாட்சியிடமும், அவர் எதுவும் சொல்லவில்லை.
சொல்லாமல் எங்கும் போக மாட்டாரே அவளுக்குள்ளும் குழப்பம்.
உள் ரூமில் பார்த்தாள். கிருத்திகா இன்னமும் எழவில்லை. எழுந்திருந்தால், அவளும் வருவதாக அடம் பிடித்திருப்பாள்.

பேசாமல் அவளையும் எழுப்பி அனுப்பலாமா காமாட்சி யோசிக்கும் முன் இருவரும் பைக்கில் இருந்தனர்.

இருவரும் மத்திய பேருந்து நிலையத்துக்கு அருகில் இருக்கும், அந்த பெரிய ஓட்டலுக்கு வந்தனர்.

சிதம்பரத்தின் பால்ய நண்பர் ராமசாமியின் ஓட்டல் தான் அது. மிகவும் முக்கியமான இடத்தில் இருந்ததால், எப்போதுமே பிசியாக இருக்கும், தரமான உயர்தர சைவ ஓட்டல்.

உள்ளே நுழைந்த இருவரையும் பார்த்த ராமசாமி ஆச்சர்யப்பட்டார்.

“”வாப்பா சிதம்பரம்.. சொன்னபடியே வந்துட்ட. நீ வரமாட்டன்னுல நினைச்சேன். வீட்டுல சொல்லலியா?” சிரித்த படி வரவேற்றார்.

“ஏற்கெனவே வருவதாக பேச்சா.. அப்புறம் ஏன் அம்மா கிட்ட சொல்லல?’ புரியாமல் பார்த்தான் அஸ்வின்.

இருவரும் அமர, டிபன் ஆர்டர் செய்தார்.

“”என்னப்பா.. இன்னிக்கு என்ன விசேஷம்? வீட்டுக்கும் பார்சலா?” அஸ்வின் கேட்டான்.

“”இல்லப்பா இன்னிக்கு முழுவதும், நீ இங்க தான் இருக்கப்போற..”
திடுக்கிட்டு நிமிர்ந்தான் அஸ்வின்.

“”என்ன பார்க்குற நீதானே அன்னைக்குச் சொன்ன சர்வர் வேலை பார்த்து பிழைச்சுக்குவேன்னு. திடீருன்னு போய், எப்படி சர்வர் வேலை பார்ப்ப?.. அதான், இங்க கூட்டி வந்தேன். இன்னைக்கு ஒரு நாள் சர்வர் வேலை பாரு..”

அஸ்வினுக்கு தோசை தொண்டையில் சிக்கிக் கொண்டது.

“”அப்பா.. சும்மா தானே சொல்றீங்க..” அசட்டுத் தனமாக சிரித்தான்
சிதம்பரம் அமைதியாக இருந்தார்.

“”அன்னைக்கு ஏதோ, விளையாட்டா சொன்னேன். அதை போய் பெருசு படுத்துறயேப்பா”

“”இல்ல அஸ்வின். நீ சொன்னது விளையாட்டு இல்ல. அந்த மாதிரி பேச்சுக்கள் தான், வாழ்க்கையில உழைப்பின் அவசியத்தை நீர்த்து போக வைக்குது. நீ சொன்னது போல, இன்னைக்கு சர்வர் வேலை பார்த்துட்டு வா. நான் ராமசாமி அங்கிள் கிட்ட சொல்லிட்டேன்” என்ற படி எழுந்தார்.

“”அப்பா” என்றவன், அவர் உறுதிவுடன் எழுந்து போவதை பார்த்து அசந்து விட்டான்.

“”ராமசாமி.. பார்த்துக்கோ.. நைட் 8 மணிக்கு அனுப்பிரு”

“”என்ன சிதம்பரம்.. சின்னப் பையனை போய்..” ராமசாமி முடிப்பதற்குள், சிதம்பரம் போயே விட்டார்.

அவசர அவசரமாக பாதி சாப்பிட்ட கையோடு, கை கழுவி விட்டு வந்து நின்றவனை, பரிதாபமாகப் பார்த்தார் ராமசாமி. ஆனாலும், சிதம்பரத்தின் செயலில் ஒரு அர்த்தம் இருப்பதாகப் பட்டது.

“”அஸ்வின் உள்ள போய், டிரஸ்சேஜ்ச் பண்ணிக்கோ”

“”டிரஸ் சேஞ்சா அவர் தான் சொல்றார்னா நீங்களுமா.. அங்கி..ள்..” வார்த்தைகளுக்குள் தடுமாறினான்.

“”ஸôரி அஸ்வின் உங்கப்பா சொன்னா சொன்னது தான். அதுல ஏதாவது இருக்கும். போ போய் ஆகுற காரியத்தை பாரு”

திடீரென அவரும் ஏதோ பிஸினஸ் மேன் மாதிரி பேசவும் அஸ்வினுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை.

இதெல்லாம், அவனுக்கு ஏதோ கனவில் நடப்பது போல தோன்றியது. கண்கள் இருட்டிக் கொண்டு வந்தன. மீண்டும் பசிப்பது போல இருந்தது.

அடி வயிற்றில் ஏதோ ஒன்று ஓட, உடல் சூடானது. அம்மாவை பார்க்க வேண்டும் போல இருந்தது. ஏதாவது ஆதரவு கிடைக்குமா? என சுற்றும் முற்றும் பார்த்தவன், மெதுவாக அருகில் இருந்த ரூமுக்கு உள்ளே சென்றான்.
அவனுக்கென்றே ஒரு யூனிபாரம் தயாராக இருந்தது.

அடப்பாவிங்களா.. எல்லோருமா பேசி வச்சி, தயாராகத்தான் இருக்கீங்களா? கூட்டு சதியா இது? அம்மாவுக்கும் தெரியுமா? இருக்காது அம்மாவுக்கு தெரிந்திருந்தால், கண்டிப்பாக சம்மதித்திருக்க மாட்டாள்.

யோசித்துக் கொண்டே, டிரஸ்ûஸ மாற்றினான். அங்குள்ள சர்வர்களின் பார்வைகளை தவிர்க்க முயன்றான். இரண்டொரு தெரிந்த முகம் பார்த்து சங்கடமாக நெளிந்தான்.

“”அடடே… இந்த டிரஸ் உன் அளவுக்கு சரியா இருக்கே தம்பி” என்றபடி அருகில் வந்தார் மூத்த சர்வர் கணபதி.

அழுவதா, சிரிப்பதா என்றே தெரியவில்லை அஸ்வினுக்கு. புதிதாக பள்ளியில் சேர்க்கப்பட்ட குழந்தையைப் போல முழித்தான்.

“”தாத்தா உங்ககிட்ட செல்போன் இருக்கா அம்மா கிட்ட பேசணும்”
அவன் தன்னை தாத்தா என அழைத்ததும் சந்தோசத்தில் சிரித்து விட்டார் கணபதி.

“”செல்போனா.. நல்லா கேட்ட போ நான் பேசி கேக்க, யாரு இருக்கா?”
ஏதோ கேட்க கூடாததை கேட்டு விட்டதை போல சொன்னவர்,

“”போப்பா போய் சாப்பிட்ட தட்டெல்லாம் எடு. அங்க வண்டி இருக்கு பாரு. அத தள்ளிட்டு போ. பார்த்துப்பா.. எவன் மேலயாவது இடிச்சுடாத. அவனவன், அவசரத்துல இருப்பான். காச்சுருவாங்கெ காச்சு” பயமுறுத்தினார்.

திடுக்கிட்டான் அஸ்வின்.

“”சர்வர்னு சொன்னாங்க..” என்றான் அழாத குறையாக.

“”எடுத்த உடனேயே சர்வர் வேலை பார்க்க முடியாது தம்பி. முதல்ல டேபிள் துடை” என்று சொல்லியபடி லைனுக்கு போய் விட்டார். திரும்பிப் பார்த்தான். அனைவரும் அவரவர் வேலையை பார்க்கப் போய் விட்டனர்.

இனி பேசி பிரயோஜனமில்லை என்று நொந்தபடி, வண்டியை தள்ளிக் கொண்டு வந்தான்.

கைப்பிடியே அருவருப்பாக இருந்தது. அதை விட அருவருப்பாக இருந்தது, தான் டேபிள் துடைக்கப் போகிறோம் என்ற நினைப்பு.

ஹாலுக்கு வந்தவனுக்கு “திக்’ கென்றது. யாராவது தெரிந்தவர்கள் பார்த்து விட்டால், என்னாவது? “குபு குபு’வென வேர்த்தது.

சுற்றி எல்லா பக்கமும் பார்த்தான். மொத்தம் 20 டேபிள்கள் நல்ல வேளை தெரிந்த முகமாக யாரும் இல்லை. அப்பாடா என்றிருந்தது.

முதலில், எந்த டேபிளுக்கு போவதென்றே தெரியவில்லை. எல்லோருமே, சாப்பிடுவது போலவே தெரிந்தனர். ஒவ்வொரு டேபிளாக வந்தான். அவனுக்குள் ஆற்றாமையும், தயக்கமும் மாறி மாறி வந்து சென்றன.
மொத்த ஓட்டலுமே, அவனை பார்ப்பது போலவே, இருந்தது. அவன் வயது பெண்களைப் பார்த்தால், உள்ளுக்குள் வெட்கமாக இருந்தது. ஒரு டேபிளுக்கு அருகில் வந்து நின்றான். அங்கிருந்தவர், சாப்பிடாமல் அமர்ந்திருந்தார். அஸ்வினும், அவரையே பார்த்துக் கொண்டு இருந்தான்.

“”என்ன தம்பி.. வேலைக்கு வந்தியா.. திருட வந்தியா?” என்றார்.

திடுக்கிட்ட அஸ்வின், “”எ.. என்ன.. சார் இல்ல.. வந்து” குழறினான்.

“”பின்ன ஏன்.. தட்டு திருடுறவன் மாதிரி முழிக்கிற? எடுத்துட்டு போ”

“”நீங்க.. இன்னும் சாப்பிடலயே.. சார்”

“”நான் தட்டெல்லாம் திங்கிறது இல்லப்பா..”

குனிந்து பார்த்தான். எல்லாமே சாப்பிட்ட தட்டுகளாக இருந்தது. அவர் புதிதாக வந்தவர் போல எதுவும் பேசாமல், தட்டுகளை எடுத்து வண்டியில் வைத்து தள்ளினான்.

“”தம்பி யாரு துடைக்கிறது..?”

“”யாரு.. ஓ.. நான் தானா?”

துணி இல்லை. திரு திருவென முழித்தான். வேகமாக ஓடிப்போய் கல்லாவில் இருந்த ராமசாமியிடம் துணி கேட்டான். அவர் ரூமை காட்டி விட்டு, வேலையில் மூழ்கினார்.

ரூமுக்குள் ஓடியவன், துணியைத் தேடினான்.

“”என்னப்பா துணியா? அந்த உள் டேபிளில் இருக்குது பார். அதுதான் எடுத்துக்கோ” என்றார் அங்கு வந்த ராமு அண்ணன்..

வெறுப்போடு எடுத்துச் சென்று கழுவினான். கை எல்லாம் பிசு பிசுவென ஒட்டியது. அலசி எடுத்து வந்து, டேபிளை துடைத்தான். ஆனாலும் அழுக்கு ஒரு ஓரமாக இருந்து கொண்டே இருந்தது.

“”தம்பி.. வேலைக்கு புதுசா?”

“”ஆமாம்.. சார்”

“”இப்படியே அழுத்தி அழுத்தி துடைச்சேன்னு வச்சுக்கோ.. ஒரு வாரத்துல எல்லாரும் தரையில தான் உட்கார்ந்து சாப்பிடணும்” என்றார் நக்கலாக.

“”என்னடா இது? சரியான கிண்டல் பேர்வழியா இருக்கானே? இருக்கிற லொள்ளு போதாதுன்னு, இது வேறயா?” நினைத்து கொண்டே நிமிர்ந்து பார்த்தான்.

“”அங்க என்னாப்பா சத்தம்..” என எட்டிப் பார்த்த ராமசாமி, ஒருவரை அனுப்பி வைக்க, அப்போதைக்கு அது முடிவுக்கு வந்தது.

இப்படியே, ஒவ்வொரு டேபிளாக தட்டுகளை எடுத்துக் கொண்டு வந்தவன், கடைசி டேபிளின் அருகில் நின்று கொண்டான்.

“”என்ன.. இங்கயே நின்னுட்ட? போய் கழுவுற இடத்துல போடு” என்று ஒருவர் சொன்ன பிறகு தான், அவனுக்கே, வேலையின் தொடர்ச்சி தெரிந்தது.
இரண்டு மணி நேரம் ஓடியதே தெரியவில்லை.

கிட்டத்தட்ட எல்லா டேபிள்களையும் பல முறை துடைத்து விட்டான். இப்போது துடைப்பதில் ஒரு நேர்த்தி வந்திருந்தது. ஓரிரு முறை, லேசாக சிந்தினாலும் பிறகு பழகி விட்டான்.

காலை 11 மணி. ஓய்வு நேரம். கூட்டமும் குறைய ஆரம்பித்திருந்தது. காபி குடித்தான்.

அதே ஹோட்டலில் டேபிளில் அமர்ந்து சாப்பிடுவதை விட அது வித்தியாசமாக இருந்தது.

அன்றைய கிரிக்கெட் போட்டி நினைவுக்கு வந்தது அவனது டீம் பேட்டிங்கா?.. பௌலிங்கா..?

யார் முதலில் இறங்கி இருப்பார்களோ? என்னை தேடி இருப்பார்களா? சே.. ஒரு செல்போன் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? நேராக அவர்களிடமே கேட்டு விடலாம். எல்லோரும் செல்போன் வைச்சிருக்காங்க, என்னைத் தவிர. நினைத்தவனுக்கு சிரிப்பாக இருந்தது எரிச்சலாகவும் இருந்தது.

அந்த செல்போனை கேட்டுத் தானே இந்த அவதாரம் அதுவுமில்லாமல், நான் இங்கிருப்பது அவர்களுக்கு எப்படி தெரியும்? அப்பாவிற்கு பயந்து, கூப்பிடவும் வந்திருக்க மாட்டார்கள்

நினைவுக்குள் மேட்ச் ஓடியது.

“”என்ன தம்பி.. அதுக்குள்ள உட்கார்ந்துட்ட” என்று சிரித்தபடி, அவன் அருகில் அமர்ந்தார் கணபதி.

“”நீ பரவாயில்லை. படிக்கவாவது செய்யுற. உன் வயசுல எனக்கு படிப்பு மட்டுமில்லை, இந்த வேலையும் கெடையாது” என்றார்.

“”என் வயசுலயா? ஏன் நீங்க படிக்கலயா?” ஆச்சர்யமாக கேட்டான்.

“”ஆமாப்பா எனக்கு சின்ன வயசுலயே, அம்மா, அப்பா கிடையாது. அதனால படிப்பு இல்ல. இருந்திருந்தா கணக்கு எழுதியிருப்பேன். ஏதோ ராமசாமி ஐயா தான், இத்தன வருசமா காப்பாத்துறாரு” என்றார் கணபதி.

“”உங்க வீடு எங்க தாத்தா..”

“”வீடா.. எனக்கு கல்யாணமே ஆகலப்பா. இங்கேயே, இந்த ஓட்டல்லயே தான் தங்கியிருக்கேன்..” வியப்போடு பார்த்தான். குடும்பம், வீடே இல்லாமல் ஒருவரா..

“”வாப்பா.. டேபிள் துடைச்சாச்சு. இலை போடலாம். இனிமே மதியம் சாப்பாடுதான்”

“”நான் துடைக்கவே இல்லையே”

“”வேற ஆள் போட்டாச்சு. நீ இனிமே சர்வரா இருக்கலாம். சாம்பார், பொறியல் நீ எடுத்துக்கோ. சாப்பாடு கணக்கெல்லாம், நான் பாத்துக்குறேன்”

எழுந்து பார்த்தான். பாத்திரம் கழுவும் பிரிவிலிருந்த, அவன் வயதுள்ள ஒரு பையன், அமைதியாக டேபிள் துடைத்துக் கொண்டிருந்தான்.

அவன் முகமும், அமைதியும் கண்களில் தெரிந்த வெறுமையும் அஸ்வினுக்குள் ஏதோ நெருடியது.

“”யார் தாத்தா இது?”

“”பக்கத்து ஊர் தான் கவர்மெண்ட் ஸ்கூல்ல படிக்கிறான். லீவுல வந்து வேலை பார்ப்பான். அப்பா இல்லை ஐயா தான் உதவுறார். பெரிய குடும்பம் பாவம்”
என்ன.. அப்பா இல்லையா.. இவனுக்கு பிடிச்சதெல்லாம் யார் வாங்கித் தருவா? எனக்கு அம்மா சாப்பாடு ஊட்டுறது போல இவன் அவனோட அம்மாவுக்கு சாப்பாடு போடுறானோ? இவனுக்கு கிரிக்கெட் விளையாடத் தெரியுமா.. இவனுக்கு என்னால் ஏதாவது செய்ய முடியுமா..

ஏதேதோ நினைத்துக் கொண்டவனின் மனம் ஏனோ கஷ்டமாக கனத்தது.
மெல்ல மனதை மாற்றிக் கொண்டு லைனில் வேலைக்குள் இறங்கினான். மதியம் சாப்பாடு நேரம் முடிந்தது. வேலை ஆர்வத்தில், நேரம் போனதே தெரியவில்லை.

மணி மாலை 3.00. அப்போதுதான் பசியை உணர்ந்தான்.

இரண்டு முறை ராமசாமி வந்து அவனை சாப்பிடச் சொன்னதாகச் சொன்னார்கள் அது கூடத் தெரியாமல் வேலையில் ஐக்கியமாகி விட்டான்.
உள்ளே சென்று டேபிளில் அமர்ந்தான். கணபதி அவனுக்காக காத்திருந்தார். “”உட்காரு தம்பி” என்று சொல்லி சாப்பாடு பரிமாறினார்.

சாப்பிடும் வேகத்தில் தெரிந்தது அவனது களைப்பும் பசியும். அவன் சாப்பாட்டில் உழைப்பின் சுவை இருந்தது.

ஆரம்பத்தில் இருந்த சங்கடம் இப்போது கொஞ்சம் குறைந்துவிட்டது. சாப்பிடும் போது ஏனோ கண்கள் லேசாக கலங்கியது.

வீட்டில் என்ன சாப்பாடோ? அம்மா, இந்நேரம் கேட்காமலா இருப்பாள்? சொல்லியிருப்பாரா.. அல்லது ஏதாவது சொல்லி சமாளித்திருப்பாரா.. தங்கையை சமாளித்து விடுவார். அம்மாவை..? அம்மா சாப்பிட்டிருப்பாளா?.. போனால் தான் தெரியும்.

கலங்கிய கண்கள் மீண்டும் ஏதாவது செல்போன் கிடைக்குமா? என்று தேடியது
மாலையில் மீண்டும் காபி, வடையில் ஆரம்பித்தது வேலை.
காபி, வடைக்கு பில் சொல்ல ஆரம்பித்தவன், மெதுவாக டிபன் ஆர்டர் பண்ணுவது, அவைகளை ஞாபகம் வைத்திருந்து, பில் போடுவது, என்று பழகிக் கொண்டான்.

இவனுக்கு மூன்று டேபிள்கள் ஒதுக்கப்பட்டன. இடையே யாராவது தெரிந்தவர்கள் வந்தால், உள்ளேயே ஒளிந்து கொள்வது, டேபிள் மாற்றிக் கொள்வது என பழகிவிட்டான்.

வேலையோடு வேலையாக, சர்வர்களிடமும் பழகி, ஹோட்டல் சூழ்நிலையைப் புரிந்து நன்றாகவே ஒன்றி விட்டான்.

இரவு மணி 7.00. அம்மா ஞாபகம் வந்து கொண்டே இருந்தது.

ஹோட்டலுக்கு ஏதாவது போன் வந்தால், நமக்குத் தான் இருக்குமோ.. என்று, ஆர்வத்தோடு எட்டி, எட்டிப் பார்த்தான்.

அடிக்கடி மணி பார்ப்பதை பார்த்த ராமசாமி, அவனை அழைத்தார்.
“”அங்கிள்..” என்று அருகே சென்றான்.

“”அஸ்வின் நீ கிளம்புப்பா நேரமாயிருச்சு..”

“”அதுக்குள்ளயா.. சரி அங்கிள். தேங்க்ஸ்” பிரகாசமானது அவன் முகம்.
நீண்ட நாட்களுக்கு பிறகு விடுதலையானவன் போல, உற்சாகமாக உள்ளே சென்று, உடை மாற்றினான். சர்வர் டிரûஸ கழற்றி, ஹேங்கரில் தொங்க விட்டுப் பார்த்தான்.

ஒரு ராணுவ வீரன் பணியிலிருந்து விடை பெறுவது போல இருந்தது அவனுக்கு. ஆனாலும் மனதுக்கு கஷ்டமாக இருந்தது.

“”கணபதி அங்கிள்… ராமு அண்ணே… மாஸ்டர் போயிட்டு வர்றேன்”அனைவரிடமும் சொல்லி விடை பெற்றான்.

அனைவரும் உற்சாகத்துடன் வழி அனுப்பி வைத்தனர்.

“”அஸ்வின்.. இந்தாப்பா ஸ்வீட் பாக்ஸ்ûஸ பாப்பாகிட்ட கொடுத்துரு. அப்புறமா வீட்டுக்கு வர்றேன்னு, அப்பாகிட்ட சொல்லிரு”

ஒரு பெரிய ஸ்வீட் பாக்ஸ்ûஸ கையில் கொடுத்தார் ராமசாமி.

“”சரி அங்கிள்” வாங்கிக் கொண்டவன் கிளம்ப ஆயத்தமானான்

“”இந்தாப்பா.. உன் சம்பளம் 150 ரூபாய்”

“”சம்பளமா..?” அஸ்வின் திடுக்கிட்டான்.

“”ஆமாப்பா.. சம்பளத்துக்கு தான் நீ வேலை பார்த்த.. மூணு வேளை சாப்பாட்டோட 100 ரூபாய். நீ இரண்டு வேளை சாப்பிடல. அதனால், 150 ரூபாய்” என்று கொடுத்தார்.

அவன் கண்கள் கலங்கியது. ஏதோ காணாத பொருளை பார்ப்பது போல, பணத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.

“”வாங்கிக்கப்பா..”

வாங்கினான். விரல்கள் நடுங்கின. ராமசாமிக்கு அவனைப் பார்க்கவே கஷ்டமாக இருந்தது. கடையை விட்டு வெளியே வந்தான்.

சிலு சிலுவென வீசிய காற்றில் சிறிது நேரம் முகம் காட்டி விட்டு, ரோட்டில் இறங்கி நடந்தான்.

அவன் கிளம்பியதும், வீட்டுக்கு போன் போட்டு சொன்னார்.

டவுன்பஸ்ஸில் ஏறி அமர்ந்தான். காலையிலிருந்து நடந்ததெல்லாம் ஒரு கனவு போல மனதில் ஓடியது. இப்போது தான் உடல் வலியே தெரிந்தது. தான் உட்கார்ந்து இருப்பதையே, இப்போது தான் உணர்ந்தான்.

150 ரூபாய்க்கு, இவ்வளவு உழைப்பா? நான் தெரிந்தவன் என்பதால் தான் இதுகூட இல்லயென்றால், இன்னும் குறைவு தான். கணபதி தாத்தாவுக்கே இவ்வளவு தான் சம்பளம்.

இந்த அளவு பணத்தை எவ்வளவு ஈசியா செலவு பண்ணியிருக்கிறேன்? போன வாரம் கூட, 200 ரூபாய்க்கு புதுப்பட சி.டி வாங்கி வந்தேனே.. மாதம் 400 ரூபாய்க்கு, வேலை பார்க்கும் வேலைக்கார பாட்டியை, எவ்வளவு சாதாரணமாக திட்டியிருக்கிறேன். ஒவ்வொருவருக்குள்ளும், இப்படி ஒரு உழைப்பு இருக்குதா?
நினைத்தபடி, பாக்கெட்டை தொட்டுப் பார்க்க, மனதில் கனமாக உணர்ந்தான்.
மணி இரவு 8.00. மெதுவாக வீடு வந்து சேர்ந்தான்.

வீட்டில் அசாத்திய அமைதி நிலவியது. வீட்டுக்குள் ஏதோ பெரிய மனிதன் போல நுழைந்தான். குனிந்து எழுதி கொண்டிருந்தாள் தங்கை கிருத்திகா.

அடடா.. இவளுக்கு ஏதாவது வாங்கி வந்திருக்கலாமே.. ஒரு பாசமுள்ள அண்ணனாக கவலைப்பட்டான். அவனை நிமிர்ந்து பார்த்தவள்,

“”ஹய்யா.. அண்ணன் வந்தாச்சு..” என்று சொல்லி எழுந்து ஓடி வந்தாள்.
அண்ணனா.. ஆச்சர்யப்பட்டான். ஹாலில் அமர்ந்திருந்த சிதம்பரம்,

“”என்ன.. இவ்வளவு சீக்கிரம்?” என்று கேட்டார்.

“”அங்கிள் தான்.. போக சொல்லிட்டாங்க..” என்றான் சாந்தமாக.

மகனின் சத்தம் கேட்டு, சமையலறையிலிருந்து ஓடி வந்தாள் காமாட்சி.

“”அடே.. என் கண்ணே.. அஸ்வின் வந்துட்டயா..” ஓடி வந்து கட்டிக் கொண்டவள் கண்களில், அதுக்காகவே காத்திருந்தது போல பொல பொலவென கொட்டியது கண்ணீர்.

சொல்லி விட்டார் போல. ஒரு வேளை அம்மாவுக்கும் சேர்த்து இது பாடமோ? அவன் நினைவுகளுக்குள் எண்ணங்கள் ஓடின.

“”அய்யோ.. என் மகன் சர்வர் வேலை பார்த்துட்டா வந்திருக்கான். இதுக்கா இப்படியெல்லாம் வளர்த்தேன்? பாவி மனுஷன், கொஞ்சம் கூட இரக்கமே இல்லாம, இப்படி பண்ணிட்டாரே” கணவனை பார்த்து பொறுமினாள்.

அமைதியாக இருந்தார் சிதம்பரம்.

“”அம்மா.. இந்தாம்மா.. 150 ரூபாய்”

“”ஏதுடா கண்ணு?”.

“”இன்னிக்கு சம்பளம்மா..” பெரிய மனுஷ தோரணையோடு சொன்னான்.

“”அடக் கடவுளே..” தலையில் அடித்துக் கொண்டு நா தழு தழுக்க மகனை இறுக்க அணைத்துக் கொண்டாள்.

“”அண்ணா.. இங்க வாயேன்” கையை பிடித்து இழுத்தாள் கிருத்திகா.

“”ஏய் போடி.. அவனே பசியில வந்திருப்பான்” மகளை விரட்டியவள்,

“”வாப்பா.. சாப்பிடலாம்” என அழைத்தாள்.

“”அட போம்மா.. அவன் ஊருக்கே சாப்பாடு போட்டுட்டு வந்துருக்கான்.. அவனப் போயி..” என்று கூறி சிரித்தாள் கிருத்திகா.

கையை ஓங்கி அடிப்பது போல முறைத்த அம்மாவிற்கு, உதட்டில் பழிப்புச் சொல்லி விட்டு, அஸ்வின் கையை பிடித்து இழுத்துக் கொண்டு, உள் ரூமுக்குள் ஓடியவள்,

வீட்டு லேண்ட் லைனில் இருந்து ஒரு நம்பருக்கு போன் செய்தாள். அவன் பள்ளிக்கூட பையிலிருந்து ஒரு செல்போன் ஒலிக்கும் சப்தம் வந்தது.
ஐ.பி.எல் கிரிக்கெட்டின் லோகோ இசையில் இருந்தது அந்த ரிங் டோன். புருவத்தை சற்றே உயர்த்தியது தவிர வேறு எந்த உணர்ச்சியும் காட்டவில்லை அஸ்வின்.

அவன் முகத்தில் ஏதேதோ எதிர்பார்த்து, ஏமாந்த கிருத்திகா,

“”டேய் செல்போன்டா.. உனக்கு தான்” என்று சொல்லி சிரித்துப் பார்த்தாள்.

அவளை திரும்பி பார்த்த அஸ்வினிடம் எந்த சலனமும் இல்லாமல் போகவே,
“”அட போடா..” என்று சலிப்போடு சொல்லி நகர்ந்து போனாள்.

சிதம்பரம் ரூமுக்குள் வந்தார். அதற்குள் அவன், பையிலிருந்த செல்லை எடுத்து பார்த்திருந்தான். டச் ஸ்கிரீனில் அவன் முகம் வால்பேப்பராக சிரித்துக் கொண்டிருந்தது.

“”என்ன அஸ்வின்.. நல்லாயிருக்கா..”

“”ம்.. என்ன விலைப்பா..?”

“”மூவாயிரம் ரூபாய்..”

“”மூவாயிரமா..” என்று யோசித்தவனுக்கு ஏனோ கணபதி தாத்தாவின் முகம் ஞாபத்தில் வந்து போனது. தட்டு கழுவிய பையனின் அமைதி நெஞ்சுக்குள் நெருடியது.

செல்போனை கையில் எடுத்துக் கொண்டு அமைதியாக போய் விட்டான்.
அந்த அமைதியின் பொருள் புரிந்து கொண்ட சிதம்பரத்தின் உதடுகளில் மெல்லியதாக ஒரு புன்னகை தோன்றி மறைந்தது.

காமாட்சி மட்டும் இன்னமும் அழுது கொண்டிருந்தாள்.

– அக்டோபர் 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *