கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: March 10, 2022
பார்வையிட்டோர்: 13,905 
 
 

நூல் வெளியீடு முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த எங்களின் காருக்குள் புயல் வீசியது. சுனாமி வேகமாக அடித்து என்னை மூச்சுத் திணறச் செய்தது.

வீட்டுக்குள் போனதும், மீதிப் புத்தகங்களுடான அந்த காட்போட் பெட்டியும் அதனுள் இருந்த புத்தகங்களும் சுதர்சன் எறிந்த வீச்சிலிருந்த அந்த வெறுப்பையும் ஆத்திரத்தையும் உள்வாங்கி, அவற்றின் வடிவத்தை இழந்து போயின.

தென்றலின் இனிய வருடல் பட்டது போல இலேசாகப் பறந்த என் மனசுக்குள், கற்களை வாரி வீசி விட்டது போல அங்கங்கே கீறல் பட்டுப் பலமாக வலித்தது, கனத்தது.

அந்த வெளியீட்டுக்கு இருபது பேர் மட்டில்தான் வந்திருந்தார்கள். ஆனால், அவர்கள் யாவருக்கும் என் கதைகளுடன் பரிச்சயம் இருந்தது. அதனால் அனைவரும் தத்தம் கருத்துக்களை பகிர்ந்து கொண்டிருந்தனர். மொத்தத்தில் அது ஒரு ஆரோக்கியமான கருத்துப் பரிமாறலாக அமைந்திருந்தது. ஆறுமுகம் மாஸ்ரரின் முறை வந்தபோது, எனது கதைகள் சமூகப் பார்வையுடையவை எனத் தான் சொல்ல மாட்டேன் என்றார். என் கருப்பொருள்களை ஆதாரமாக வைத்து சிலர் அதற்கு எதிராகத் தங்கள் கருத்துக்களை முன்வைத்த போது சபை சுவாரஸ்யமாக இருந்தது.

இதயபூர்வமான என் நன்றியுரையில் என் குடும்பத்தருக்கும் நன்றி சொல்ல வேண்டுமென ஏனோ என் மனதில் படவில்லை. அப்பா, அம்மா சகோதரர் உட்பட யாருமே என் எழுத்தில் ஈடுபாடு காட்டததை மனதில் வைத்து, என் குடும்பத்தவர்கள் என் எழுத்தை என்றுமே பெரிதாக வரவேற்றதில்லை என கதையோடு கதையாக என் கதையை நான் சொன்னது, என் வாழ்க்கைப் படகினைத் திசைமாற்றப் போகின்றது என்பதை அப்போது நான் அறிந்திருக்கவில்லை.

அந்தக் குறிப்பைக் கேட்ட சுதர்சனின் நண்பன் ஒருவன், சுதர்சனுக்கு இட்ட தூபம்தான் அப்படிப் புகைத்துத் தள்ளியது. அந்த நச்சுப் புகைக்குள் மூச்செடுக்க முடியாமல் நாங்கள் தவித்தோம். மற்றவர்களின் அபிப்பிராயங்கள்தான் தன் வாழ்வுக்கான அங்கீகாரமென நம்பும் சுதர்சனின் ஆத்திரத்தை அது பலமாகவே ஊதிப் பெருப்பித்துக் கொண்டிருந்தது. .

கண்களில் திரண்ட கண்ணீரும், மனக் கொதிப்பும், என்னதைப் பிழையாகச் சொன்னேன் என மன்னிப்புக் கேட்க விரும்பாத என் அகம்பாகவும் என்னையும் ஆரோகணத்தில் கத்த வைத்தன. சுதர்சன் செய்த உதவிகளுக்காக நன்றி சொல்லாதது பிழை எனச் சொல்லாமல் விட்டதால் உருவான அந்த மோதலின் அனலைத் தகிக்க முடியாது பிள்ளைகள் மிகவும் வாடிப் போய்விடுகின்றனர். இதயம் பலமாக அடித்துக்கொண்டிருந்தது. உடம்பு நடுங்கியது. அதிலிருந்து ஒரு மாற்றம் தேடி கொம்பியூட்டருக்குள் தஞ்சமடைந்த நான், விமர்சனம் செய்தவர்களுக்கு நன்றி தெரிவித்து ஈமெயில் எழுதுகின்றேன்.

“உங்களுடைய விமர்சனத்துக்கும் நேரத்துக்கும் என் மனம் நிறைந்த நன்றி.

நல்லதொரு விமர்சகரும் எழுத்தாளருமாகிய உங்களின் இன்றைய விமர்சனமும் பாராட்டுக்களும் எனக்கு மகிழ்வையும் என் எழுத்துப் பற்றிய நம்பிக்கையையும் தந்திருக்கின்றன. அதற்கு என் மனமார்ந்த நன்றி.” எனபெயரை மாற்றி மாற்றி, அதே கடிதத்தை நான்காவது விமர்சகருக்கும் அனுப்பி முடித்த போது, பிரேமிடமிருந்து பதில் வந்தது,

அன்புள்ள ரஜனி

என்னுடைய விமர்சனம் உங்களுக்கு உதவியதில் எனக்கு மகிழ்ச்சி.

பாரதியின் பாடல்கள் இன்றும் நிலைத்திருப்பதைப் போன்று, சமூக அக்கறை மிக்க உங்கள் எழுத்துக்களும் என்றும் நிலைத்திருக்கும். அவை புலம்பெயர் வாழ்வின் மீது புதிய வெளிச்சமொன்றைப் பாய்ச்சியிருக்கின்றன.

உங்களுக்கு வசதியானபோது, உங்களுடைய சில கதைகள் பற்றியும் ஆறுமுகம் மாஸ்ரர் அவை பற்றித் தெரிவித்த கருத்துக்கள் பற்றியும் நேரில் கதைக்க விரும்புகின்றேன். உங்கள் வசதியைத் தெரிவியுங்கள்.

மீண்டும் வாழ்த்துக்களுடன்
பிரேம்

அந்த ஈமெயில் அன்றிரவு எனக்கிருந்த மனநிலைக்கு மிகுந்த ஒத்தடமாக இருந்தது. இருந்தாலும், இவர் ஏன் நேரில் கதைக்க வேண்டும் என்கின்றார் என்ற கேள்வி ஒன்று எனக்குள் மெதுவாகத் தலைதூக்கியது. அதை அடுத்த நாள் என் மகளுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.

ஏன் அப்படி எப்பவுமே ஆண்களில் சந்தேகப்பட வேண்டும் என என்னைக் கேட்கிறாள் என் மகள். என் எழுத்துக்களைச் செப்பனிடக்கூடிய அனுபவமிக்க பிரேமின் நட்பை வளர்ப்பது, எனக்கு நன்மையாக இருக்கும் என மேலும் அவள்அ பிப்பிராயப்படுகின்றாள். இந்த நாட்டுக் கலாசாரத்தில் வாழும் அவளின் கருத்தில் பொருள் இருப்பது மாதிரி எனக்கும் படுகின்றது. யோசித்துப் பார்த்தபோது அவரின் உடை, நடை, பாவனைகளும் நம்பிக்கையைத் தருகின்றன. எனவே எதிர்பார்ப்புடன் பதிலெழுதுகின்றேன்.

அன்புள்ள பிரேம் அவர்களுக்கு,

நீங்கள் என்ன சொல்ல விரும்புகின்றீர்கள் என்பதை அறிய எனக்கு ஆவலாக உள்ளது, உங்களுக்கு வசதியான போது சந்திப்பதற்கு நான் நிச்சயமாக ஆவன செய்வேன்.

அன்புடன்
ரஜனி

அன்புள்ள ரஜனி

வருகின்ற ஞாயிறு மாலை ஒரு புத்தக வெளியீட்டில் பேசுகின்றேன். சனி மதியம் குறும் திரைப்படவிழா இருக்கின்றது. இரு நிகழ்வுகளும் ஸ்காபோறோவில்தான் நடைபெறுகின்றன. ஞாயிறு வந்தால் என்னுடைய பேச்சையும் கேட்கலாம்.

அன்புடன்
பிரேம்

அன்புள்ள பிரேம் அவர்களுக்கு,

திங்கள் பாடசாலை நாள் என்பதால் ஞாயிறு மாலை வருவது எனக்குக் கஷ்டம், குறும் திரைப்பட விழாவுக்கு வருகின்றேன், சந்திப்போம்.

அன்புடன்
ரஜனி

அப்படியே, குறும் திரைப்பட விழாவுக்குச் சென்று பக்கத்தில் அமர்ந்துகொள்கின்றேன். இருந்தாலும், எங்களின் உரையாடல் அந்தப் படங்களைப் பற்றித்தான் இருந்ததேயன்றி அன்றைய கருத்தாடல் பற்றியதாக இருக்கவில்லை. முடிந்து விலகும் போது தனது தொலைபேசி இலக்கங்களைத் தந்து கோல் பண்ணுங்கோ கதைப்பம், எனச் சொல்கின்றார், பிரேம்.

அதன்படி நானும் அவரை அழைக்கின்றேன். தன் மேல் உள்ள கோபத்தால், தான் சொன்ன கருத்தை மறுப்பதற்காகவே ஆறுமுகம் மாஸ்ரர் அப்படி அன்று சொன்னார் என்றும், பிரச்சாரத் தொனியைக் குறைத்து கலைநயத்துடன் எழுதினால் என் கதைகள் இன்னும் நன்றாக இருக்கும் என்றும் சொல்கின்றார்.

அவருடைய விமர்சன உரை ஒன்றைக் கேட்டு, அதில் லயித்து, அவரது அந்தத் தமிழை நான் மிக ரசித்ததால், அவரின் பேச்சில் எனக்கொரு போதை ஏற்பட்டிருந்தது உண்மையே. பின்னர், இலக்கிய விழா ஒன்றில் எமக்கென ஒதுக்கப்பட்டிருந்த ஒரு மேசையில் தனித்திருந்து பேசியபோது, அக்கறையாக என் எழுத்துக்கள் பற்றி விசாரித்ததும் என் நூலுக்கான விமர்சகர்களில் ஒருவராக அவரையும் அழைக்கத் தூண்டியது.

பெரிதாக நெருங்கிய நண்பர்கள் என எவருமின்றி, அதுவும் எந்த ஆண் நண்பர்களுமின்றி குடும்பமும் நானும் என இருந்த நான், எங்கிருந்து சில நாட்களுக்குள் இப்படி நட்பு வந்ததோ தெரியவில்லை ஆனால் மிக மகிழ்ச்சியாக இருக்கின்றது எனப் பரசவித்துப் போகின்றேன். தொலைபேசி உரையாடல்களும் மின்னஞ்சல் உரையாடல்களும் தினமும் தொடர்கின்றன

அன்புள்ள ரஜனி

வீரகேசரியில் உங்களுடைய பேட்டி படித்தேன். மிக அழகாக உங்களுடைய கருத்துக்களைச் சொல்லியிருக்கின்றீர்கள். உங்களைப் போன்ற சொல்திறனும் செயற்திறனும் மிக்க பெண்களால்தான் இந்த நானிலம் மேம்படும்.

பெண்ணின் இயல்புகள் என ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட மௌனமும் மென்மையும் கலைந்து, உங்களது மொழியின் வீச்சு மென்மேலும் பிரவாகம் எடுக்கவேண்டும்.

உங்களுடைய எழுத்துப் பயணத்துக்கு உதவிசெய்யக்கூடிய சில புத்தகங்களை நான் தெரிந்தெடுத்து வைத்திருக்கின்றேன். ரொறன்ரோவும் மாக்கமும் சந்திக்கும் வடக்குப் புறத்தில் என் குடில் அமைந்திருக்கின்றது. வசதியான போது பெற்றுக்கொள்ளுங்கள்.

அன்புடன்
பிரேம்

என்னுடைய வளர்ச்சியில் அவர் காட்டும் அக்கறை, பாரி மன்னனின் தேர் அன்று அந்த முல்லைச் செடிக்குக் கொடுத்த தெம்புக்கு ஒத்த தெம்பை எனக்குத் தருகின்றது

அன்புள்ள பிரேம் அவர்களுக்கு,

உங்கள் பாராட்டுக்கும் அன்புக்கும் உதவிக்கும் மிக்க நன்றியுடையேன்.

நான் அந்தப் பக்கம் வரும் போது வருகின்றேன். டவுன்ரவுண் பக்கம் வந்தால் நீங்களும் எங்கள் வீட்டுக்கு வரலாம்.

அன்புடன்
ரஜனி

அன்புள்ள ரஜனி

பால்பனிப் பொழிவின் போது, இருவர் கை கோர்த்து நடக்கும் சந்தோஷத்துக்கு ஒப்பானது நல்ல நண்பர்களின் நட்பு.

உங்களைவிட பலவயதுகள் மூத்தவனான நான் இப்படிக் கேட்பது உங்களுக்கு அசெளகரியத்தைக் கொடுக்கக்கூடும் என்றாலும் உங்களை ஒன்று கேட்கலாமா? என்னை விழிக்கும் போது பிரேம் அவர்களுக்கு எனச் சொல்லாமல், வெறுமன பிரேம்

என மட்டும் எழுதுவீர்களா? என்னுடைய தங்கைச்சிமார் என்னை, டேய் தம்பி, வாடா, என்று தான் கூப்பிடுவார்கள். என் நணபர்களும் பிரேம் என்றழைப்பதையே நான் விரும்புவேன்.

அன்புடன்
பிரேம்

அன்புள்ள ரஜனி,

எப்படியிருக்கின்றீர்கள்?
அன்பைத் தேடி பிச்சைக்காரனான அலைந்த எனக்கு உங்களுடைய நட்பும் அன்பும் வாழ்க்கையில் பிடிப்பை ஏற்படுத்துகின்றன. என்றும் உங்கள் அன்புக்கு நான் நன்றியாக இருப்பேன்

அன்புடன்
பிரேம்

அவருக்கு கான்சர் வந்தபோது, அதற்கு ஆயுர்வேத சிகிச்சைதான் செய்யவேண்டுமென மனைவி அடம்பிடித்துப் பிரிந்து போயிருந்திருப்பதாகவும் அவர் மூலம் அறிந்தபோது, தனியாக அவர் வாழும் வீட்டுக்கு எப்படி நான் வர முடியும் என்கிறேன். அதற்கு அவர், தனது வீட்டுக்கு இப்படிப் பல பெண்கள் உதவிபெற வருவதுண்டு என இலக்கிய உலகில் எனக்குத் தெரிந்த சிலரின் பெயர்களைக் குறிப்பிடுகின்றார். அத்துடன் அவர் பற்றிய நல்லெண்ணமும் நானென்ன சின்னப் பிள்ளையா என்ற நினைப்பும் தலைதூக்க, சரி, விரைவில் உங்கள் வீட்டுக்கு வருகின்றேன் என்கிறேன்.

நான் எழுதிக்கொண்டிருந்த கதைகளை அவரின் பின்னூட்டல்களுக்காக அனுப்புகின்றேன். படித்த பெண்ணைத் திருமணம் செய்யாததால், தன் ஆய்வை விளங்கி உதவிசெய்ய ஒருவர் இல்லை எனச் சுயபச்சாதாபம் பேசியதுடன் உதவியாளரின் அறிவையும் அக்கறையையும் பாராட்டிப் பாராட்டி அந்த உதவியாளரை மனசால் நெருங்க முயன்ற பேராசிரியர் ஒருவர், பின்னர் அந்த உதவியாளரை முத்தமிட்ட சம்பவம் ஒன்று கதையில் சொல்லப்பட்டிருந்தது. அந்த பேராசிரியர் பாத்திரத்தை பெண்தாசன் என மிகவும் கோபமாக வைகின்றார், பிரேம். இன்னொரு கதையில், கோமாவில் படுத்திருக்கும் கணவனுடனும் சின்னப் பிள்ளைகளுடனும் அல்லல்படும் இளம் பெண் ஒருத்திக்கு மிக உதவியாகவும் நல்ல நண்பனாகவும் இருக்கும் ஒருவன், அவள் விரும்பினால் தான் இணையத் தயாராக இருப்பதாக சாடை காட்டியபோது அவனை நல்ல நண்பனாகவே அவள் பேண விரும்பு கிறாள் என முடிவை நான் அமைத்திருந்தேன். அப்படியில்லாமல் அவன் அவளுக்குத் தேவைப்படுகின்றான் என்ற முடிவைத் தான் போட்டு கண்ணை மூடி மானசீகமாக யோசித்த போது அது மிக நல்ல கதையாக இருந்தது என்கின்றார், பிரேம்.

புதுமையை வரவேற்கும் அவரின் அந்த இயல்பும், சக எழுத்தாளரை ஊக்குவிக்கும் பண்பும் அவர் மேல் எனக்கு மிகுந்த மரியாதையைக் கொண்டுவருகின்றன.

இன்னொரு நாள் கதைக்கும் போது, இலவசமாக வெளிவரும் சஞ்சிகை ஒன்றின் ஆசிரியர் பெண்கள் கேட்டால்தான் பிரதிகளை வீடு தேடிக் கொண்டு போய்க் கொடுப்பாராம். அவரின் சேஷ்டையை ஒழிக்க வேணும். ஒரு நாளைக்கு அவரை நீங்கள் ரிம் ஹோட்டனுக்குக் கூப்பிடுங்கள், கொஞ்ச நேரத்திலை நான் அங்கை வாறன். அவரை அம்பலப்படுத்தலாம் என்கிறார். பச்சோந்திகளை அம்பலமாக்க விரும்பும் அவரின் அந்த ஆத்திரம் எனக்குப் பிடித்துப்போகின்றது.

ஜூன் 27 அன்று. நான் அவரின் வீட்டுக்குப் போன போது, 9ம் இலக்கத்தில் முக்கியமான விடயங்கள் தன் வாழ்வில் நடப்பதாகச் சொல்லிக்கொள்கின்றார். நான் முக்கியமானவர் என நினைப்பவர், என்னை முன்னிலைப்படுத்தி இப்படிக் கதைத்தது, ஒரிரு அங்குலங்கள் நான் இன்னும் உயர்ந்திருப்பது போன்றதொரு உணர்வை எனக்குத் தருகின்றது.

வரவேற்பறையைச் சுற்றி நோட்டமிடுகின்றேன். பேரப் பிள்ளையுடனான படமும், மகனின் திருமணப்படமும் பிரேம் போட்டு மாட்டப்பட்டிருந்தன.

“தாடியில்லாமல் உங்களைப் பார்க்க ஆரோ போலிருக்கின்றது”

“யா, தாடியை எடுக்காவிட்டால் மகனின்ரை கலியாணத்துக்கு வரமாட்டன் எனப் பெரிய ஆர்ப்பாட்டம் நடந்தது. அது தான் வெட்டினது. தாடியில்லாமல் என்னைப் பாக்க எனக்கே பிடிக்கவில்லை. மகனுக்கும் என்ரை தாடி பிடிக்கும் … ரஜனி, உங்களுக்கு என்ரை தாடி பிடிச்சிருக்கா?’’

மெல்லச் சிரிக்கின்றேன், நான். “ஓம், உங்களுக்கு தாடி வடிவாயிருக்குது”

வரவேற்பறையிலிருந்து குசினியைப் பிரித்து நிற்கும் திரை கூட அழகாக துப்பரவாக கலைநயத்துடன் இருந்தது. பலதையும் பேசிக்கொண்டோம்.

“சுதர்சனை எனக்கு முந்தியே தெரியும். எப்படி அவரோடை நீங்கள் வாழுறியள் என நான் யோசிக்கிறன்”.

“என்ரை முதலாவது கதைக்கு அவர் எழுதின விமர்சனம்தான் எங்கடை கலியாணத்துக்குக் காரணமானது. ஆனால், இப்ப இலக்கியம் என்பது வேலையில்லாதவையின்ரை வேலை எண்டு அவர் நினைக்கிறார்.”

“அதை மட்டும் நான் சொல்லேல்லை, இரண்டு பேரின்ரையும் இயல்பு வேறுபாட்டையும் சேர்த்துத்தான் சொல்றன்.”

“ஆருக்குத்தான் பிரச்சினையில்லை, வீட்டுக்கு வீடு வாசல்படி.”

“சாப்பிட்டு விட்டுப் போறியளா?” என்ற போது, “என்ன எனக்கும் சேர்ந்து சமைத்து வைத்திருக்கிறீங்களா?” என்கிறேன்.

“சமைக்கிறது கஷ்டமில்லை, சேர்ந்து சாப்பிடுறதுக்கு ஒருத்தர் கிடைக்கிறதுதான் கஷ்டம்”, என்ற போது, என்ரை வயிற்றைக் குளிர்விக்கும் சந்தர்ப்பத்தையும் அவருக்குக் கொடுக்கிறேன்.

பின்னர், சரி போவோம் என வெளிக்கிட்ட போது, “என்ரை அரண்மனையைப் பார்க்கப் போறீங்களா? இது தான் என்ரை ரூம். இந்த மேசையிலிருந்துதான் நான் எழுதுகிறனான், இந்தச் சாய்மனைதான் என்ரை வாசிப்பிடம், இது என்ரை புத்தக அலுமாரி. உங்களுக்கு விருப்பமானதை எடுத்துக்கொள்ளலாம்,” ஏனடா தன்ரை படுக்கை அறையை இவர் எனக்குக் காட்டுகின்றார், என நான் நினைத்துக்கொண்ட போது, “ இது மாலாவின்ரை அறை, வெறுமனத்தான் இருக்கு. சுதர்சனோடை சண்டை எண்டால் இங்கு வந்திருக்கலாம்,” என மற்ற அறையைச் சுட்டிக் காட்டுகின்றார். சீரியசாகச் சொல்கின்றாரா, அல்லது பகிடியாகச் சொல்கின்றாரா என ஊகிக்க முடியாத ஒரு குரலாக அது இருக்கின்றது.

அவவின்ரை அறையா என எனக்குள் எழுந்த கேள்விக்கு, அவராகவே பதிலளிக்கின்றார்.

“சேர்ந்திருக்கேக்கையும் 10 வருஷமா வேறை வேறை ரூம் தான்… இரண்டாவது வேலை முடிஞ்சு சாமத்திலை வருவன் … பிறகு ஏதாவது செய்து சாப்பிட்டிட்டு, பேசாமல் படுத்திடுவன்”.

“வேலையாலை வந்து, சாமத்திலை – அதுவும் பசியோடை நீங்கள் சமைக்க அவ படுத்திருப்பாவா?” அவவில் குற்றமாகச் சொல்லாமல் தன்னுடைய நிலைப்பாடாக பிரேம் சொன்னது பிரேமின் மேல், இனம்புரியாதொரு பரிதாபத்தை எனக்குள் குவிக்கின்றது. அது என்னுடைய வீட்டில் நடந்தால் எப்படியிருக்கும் என்று நினைத்துப் பார்க்கவே பயமாக இருந்தது.

வாசலில், “கான் ஐ காவ் எ ஹுக்?” எனப் பிரேம் கேட்ட போது என்னை அறியாமலேயே என் மூக்கால் அவரின் கன்னத்தில் முத்தமிடுகின்றேன், நான்.

அடுத்த நாள் வேலையிலிருந்து கோல் பண்ணுகின்றேன். “ரஜனி, இராத்திரி நல்லா நித்திரை கொண்டீங்களா? கன நாளைக்குப் பிறகு இராத்திரித்தான் நான் முழுசா நித்திரை கொண்டனான்.”

“உங்கடை சாப்பாட்டுக்கும் உபசரிப்புக்கும் மிக்க நன்றி. நான் எதுவும் கொண்டுவரவில்லை. வந்து நீங்கள் சமைச்சுத்தர சாப்பிட்டிட்டு வந்திருக்கிறன்”

“சரி, இன்னொரு நாளைக்கு நீங்கள் சமைச்சுத் தந்தால் போச்சுது. உங்களை நினைச்சுப் பாக்கிறன். உங்கடை தியாகங்களுக்காண்டி ஆராவது கோயில் கட்டிக் கும்பிடப் போயினமோ?”

“நான் என்ன தியாகம் செய்யிறன்?”

“விருப்பமில்லாத வாழ்வை நிர்ப்பந்தக்களுக்காக வாழுறது தியாகமில்லையா?”

“பிரச்சினைகள் இப்ப எவ்வளவோ குறைஞ்சிட்டுது. இனி இப்படியே வாழ்ந்து முடிக்கிறதிலை கஷ்டம் இருக்காது. பத்து வயசிலை ஒரு பிள்ளை வேறை இருக்கிறாள்.”

“சுதர்சன் எவ்வளவு அதிஷ்டசாலி எண்டு அவருக்குத் தெரியுமா எண்டு நான் யோசிக்கிறன்.”

அன்று மாலை மகளுடன் ‘ரொய்ஸ் ஆர் அஸ்’க்குப் போனபோது பிரேமின் வீட்டில் சாப்பிட்டதையும் நான் எதையும் எடுத்துப் போகாதையும் அவரின் பேரப் பிள்ளைக்கு அவர் மியூசிக் படிப்பிக்க விரும்புவதையும் சொல்லி என்ன வாங்கலாம் என ஆலோசனை கேட்கிறேன். அவள் ஒரு பியானோவைக் காட்டுகின்றாள்.

இரண்டு நாட்களின் பின், மகளின் ஆலோசனைப்படி வாங்கிய பியானோவைக் கொண்டு பிரேமிடம் சென்ற போது டவுன்ரவுணில் இருக்கும் அவர் பேத்தி தன்னிடம் வரும்போது மட்டுமே வீடு கலகலப்பாக இருப்பதாயும் அல்லது தான் ஃபிரிஜ் உடனும் தலையணையுடனும்தான் கதைப்பதாகவும் பிரேம் பகிடியாகச் சொன்னாலும்கூட, அந்தக் குரலிலிருந்த சோகம் என் மனதில் பதிந்து கொள்கின்றது. அது பிரேமின் மேலான கரிசனையை அதிகரிக்கின்றது. அத்துடன் பிரேமுடனான உரையாடல்கள் மனதுக்கு இதமாக இருக்கின்றன

இப்படியே சந்திப்புகள் தொடர்கின்றன. இன்னொரு நாள் எனக்குப் பிடிப்பவை உங்களுக்கும் பிடிக்குமல்லவா, அதனால் சில பாட்டுக்களை உங்களுக்காகப் பதிவுசெய்தேன், அவற்றைக் கேட்க வசதிப்படுமா எனக் கேட்டு, ‘உறவுகள் ஒரு தொடர்கதை’, ‘அஞ்சலி,அஞ்சலி’, ‘நீ காற்று, நான் மரம்’ போன்ற பாட்டுக்களைப் பதிவுசெய்து தருகிறார். ‘என் மேல் பட்ட மழைத்துளியே இத்தனை நாளும் எங்கிருந்தாய்’, என்ற பாடல் கசெட்டின் முடிவிலும் ஆரம்பத்திலும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது.

நீண்ட காலமாக சினிமா பார்க்காமலும் சினிமாப் பாடல்களைக் கேட்காமலும் இருந்த எனக்கு சுதர்சனுடனான எங்கள் உறவில் காதல் இல்லாமல் போய்விட்டதே என்ற ஆதங்கத்தை அந்தப் பாடல்கள் ஏற்படுத்துகின்றன. எங்களுடைய தாம்பத்தியத்தை மேம்படுத்த ஏதாவது செய்ய வேண்டுமென்ற தாபம் எனக்கு ஏற்படுகின்றது. வெளியில் கடும் காற்றும் மழையும் ஒன்றுடன் ஒன்று போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றன

எங்களுடைய அலைவரிசைகள் மிகவும் எதிர் எதிரானவை என்பதற்கும் மேலாக, வாழ்க்கையில் ஏற்பட்ட எதிர்பாராத திருப்பங்களின் விளைவுகளான வீழ்ச்சிகளாலும், வன்முறைகளால் உருவான இடைவெளிகளாலும் வளர்க்கப்பட்ட முரண்பாடுகள் இருவரையும் வேற்றுக்கிரக வாசிகளாகவே மாற்றியிருந்தது.

விட்டிட்டு ஓடிடு என மனசுக்குள் துருதுருத்திக் கொண்டிருந்த அந்த உச்சஸ்தாயிலிலான அபசுரம், சுதர்சனுக்கு திடீரென ஏற்பட்ட மாரடைப்பால், ஒங்கி ஒலித்த நிலையிலிருந்து முனகிக் கொள்ளும் நிலைக்கு மாறியிருந்தாலும், பிரச்சினைகள் குறைவதாய் இல்லை. இருந்தாலும், இனி இந்த வாழ்க்கையை இப்படியே வாழ்ந்து முடித்துவிடலாம் என மனம் அமைதி நிலை ஒன்றை அடைந்ததன் விளைவுதான் அந்த சிறுகதைத் தொகுப்பு எனலாம். இரண்டு வருடங்களுக்குள் 20 சிறுகதைகளை நான் எழுதியிருந்தேன். அவரும் பலவகைகளிலும் அந்த நிகழ்வுக்குத் தோள் கொடுத்திருந்தார்.

“சிவானியின் ஈமெயில்களும் கரிசனைகளும்தான் என்னை இந்த ரண்டு வருஷமா வாழவைத்தன. அதோடை, ஊரிலையிருக்கும் பழைய காதலி ஒருத்தியிடமிருந்து நடுச் சாமத்திலை கோல் வரும் எடுக்காமலிருக்க முடிவதில்லை. அவள் போனுக்குள்ளாலை முயங்குவாள். இன்சினியர் பெண்சாதி ஒருத்தி தன்ரை புருஷனுக்கு எதுவும் விளங்குதில்லை என எனக்குச் சொல்லும் போது கேட்காமல் இருக்க முடிவதில்லை. இப்ப என்ரை வாழ்க்கைக்குள்ளை நீ வந்ததிலை எல்லாமே தேவையில்லாமல் போய்ச்சுது”.

அப்படி வெளிப்படையாகச் சொல்பவருக்கு என்ன சொல்வது எனத் தெரியாமல் அவரின் அந்த மயக்கும் விழிகளைப் பார்க்கின்றேன். நான். பாவமாக இருக்கின்றது. வெளியில் இடிமுழக்கத்துடன் மழை பலமாகக் கொட்டுகின்றது, அந்தக் கண்ணாடி யன்னலில் வந்து வேகமாக முட்டி முட்டி மோதுகின்றன, மழைத் துளிகள். எப்படியாவது உள்ளுக்குள் வந்துவிட முயற்சிக்கும் என்பது போன்ற அவசரம் அந்த சத்தத்தில் தெரிகின்றது.

“நீ ஒரு எழுத்தாளர் எண்டபடியால் உன்னை என்னாலை விளங்கிக்கொள்ள முடியும். அதாலை மனிசிட்டை சொல்லாததுகளைக் கூட உன்னட்டைச் சொல்ல முடியுது. உன்னை என்ரை தாயா, சினேகிதியா, கடவுளா எல்லாம பாக்கிறன், “… எனச் சொன்னவர், என்னை மெதுவாக முத்தமிடுகின்றார். நான் மிகவும் விலகி நின்று அது எனக்கேற்படுத்திய அசெளகரியத்தைச் சொல்கிறேன்.

பின்னர், இன்னொரு நாள் முதுகை வருடித் தந்த போது, பின்னுக்கு விலகிய நான், பின் திடீரென முன்னுக்குப் போய் அவரை முத்தமிடுகின்றேன். உடனடியாக அடுத்த நிலைக்கு அவர் தயாரானது கூட எனக்குத் தெரியாமல் போய்விடுகின்றது, என்ன நடக்கின்றது என்ற சுயநினைவின்றிய உடல் முழுவதுமான வருடல்களுக்குப் பின் வீட்டுக்குப் போய் உரஞ்சி உரஞ்சிக் குளிக்கின்றேன்.

இது நல்லதல்ல எனச் சொல்ல வேண்டுமென்ற நினைப்புடன் அடுத்த நாள் வீட்டுக்கு சென்றபோது, என் கையைக் கோர்த்துக் கொண்டு இலக்கியக் கூட்டங்களில் முன்வரிசையில் உட்கார்ந்திருக்க வேண்டுமென ஆசையாக இருக்கின்றது என்கிறார். உலக அழகிகள் கூட தன் மனதைச் சலனப்படுத்துவதில்லை என்றும், ஆனால் என்னுடன் ஏதோவொரு பூர்வ ஜென்ம பந்தத்தை உணர்வதாகவும் சொல்கின்றார். எனக்கு வாயடைத்து விடுகின்றது.

நீ என் மனைவி என உலகமெல்லாம் ஓங்காரமிட்டுச் சொல்லவேணும் போலிருக்கு என்றபோது அவருக்குள் என்னை நான் இழக்கின்றேன். நான் பொம்பிழை இல்லை, எனக்கு எந்தவித ஆசையும் இல்லை என என்னை நம்ப வைத்த நிகழ்வுகளைச் சவாலாக்கும் ஆசை எனக்குள் முகிழ்கின்றது. முடிவில், உடல் சுகம் என்றால் என்னவென்று தெரியாமல் வாழ்ந்த என் நரம்புகளை மீட்டிய அவர் பெரும் வித்துவானாக எனக்குத் தெரிகின்றார். அவர் மீட்டிய இசைக்குள் அடிமையாகின்றேன். ருசியாகச் சமைத்து அன்புடன் ஊட்டிவிடும் போது, நான் செய்வதை ரசித்து அனுபவிக்கும் போது, அந்த ரம்மியமான தருணங்களை எல்லாம் அணு அணுவாக ரசிக்க ஆரம்பிக்கின்றேன். சலங்கை கட்டி விட்டது போன்று இதயம் மிகவும் ஆர்ப்பரிக்கின்றது. மனசு உயர உயரப் பறக்கின்றது.

என்னுடைய பிள்ளைகளிடம் நான் எதையும் மறைப்பதில்லை என்றபோது, ஓம் அவர்களிடமும் நம் காதலைச் சொல் என்கிறார். பிள்ளைகளும் நான் சந்தோஷமாக இருக்கவேண்டும் என ஆசைப்படுகின்றனர். அப்படியாக, எனது முதலாவது கதை மூலம் ஏற்பட்ட ஒரு உறவு, எனது முதலாவது கதைப் புத்தகத்தால் வித்திடப்பட்ட இன்னொரு உறவால் முறிவடைந்து, என்னுடைய அந்தப் புதிய சந்தோஷத்துக்கு விவாகரத்து வெகுமதியாகின்றது. அது பிரேமுக்கு மிகவும் வசதியாகப் போய் விடுகின்றது. வீடு பார்த்த போது, முதல் போடுவதற்காக 5000 டொலர் நான் தருவேன் என்கிறார், என் கண்கள் நனைகின்றன. ஆனால் பின்னர் ஒரு 500 கூடத் தரவில்லை என்பது வேறுகதை.

தன் பிள்ளை கனடாவில் வளராததால் எங்கள் உறவை விளங்கிக்கொள்ள மாட்டான், கொஞ்சக் காலம் போகட்டுமன் என்கிறார்.

ஆனால், வெளியில் நின்றால் என்னுடைய அழைப்புக்களுக்குப் பதிலளிக்காமலிருப்பது, ஃபேஸ்புக்கில் என் படங்களுக்கு லைக் போடாமலிருப்பது, சந்திப்பது மற்றவர்களுக்கு தெரியாமல் இருக்க முயற்சிப்பது போன்றவை எனக்கு கோபத்தைத் தருகின்றன. ஏன் என்று கேட்டால் அது என் பாதுகாப்புக்காக என்கிறார், படத்துக்கு மேல் பல லைக் போட்டு தனிச் செய்தி அனுப்புகிறார். சரி என்னைக் கட்டாட்டிலும் பரவாயில்லை, பிரிஞ்சிருக்கிற மனுசியை டைவோஸ் பண்ணுங்கள் என்றால், என்ன அது பற்றி நான் யோசிக்கேல்லை எண்டா நினைக்கிறாய், அதோடை ஆர் கதைக்கிறது, கேட்கிறவையோடை சண்டைக்குப் போகும். இனி நான் கோடெல்லாம் ஏறியெல்லோ அலைய வேண்டும். சாகும் வரையும் நான் உனக்குத் தானடி சொந்தம், என்னிலை நம்பிக்கை இல்லையாடி என கொஞ்சம் அதிகாகச் சரசம் செய்கின்றார்.

உந்த செக்ஸ்க்காகத் தான் என்னோடை பழகிறியளோ என எனக்கு சிலவேளைகளில் சந்தேகம் வருது எண்டால், சரி அதை விட்டிடு என்பார், பிறகு திடீரென புதிசா முன்பொரு முறையும் செய்யாத விதத்தில் இன்பம் தருவார். அது எங்கை இதெல்லாம் படிச்சியள் எனக் கேட்டு நான் மாறி மாறி அவரின் உதடுகளையும் விரல்களையும் முத்தமிடுவதில் முடியும். கள்ளர்மாரி இருப்பது எனக்குப் பிடிக்கவில்லை என்றால், அப்ப விட்டிடுவமோ என்பார். என்ன பகிடியா விடுகிறியள் என எனக்கு கோபம் வந்தால், கொஞ்சம் பொறு என ஆறுதல்படுத்துவார்.

இப்படியாக மூன்று வருஷம் கழிந்த பின்னர், பென்சன்காசு எதற்கும் போதாமலிருக்கிறது, சாப்பாட்டுக்கும் இடத்துக்கும் வசதியா எங்காவது சீனியர் ஹோம் அப்பிளை பண்ணலாமோ என யோசிக்கிறன், அவளும் கஷ்டப்படுகிறாளாம், ஏதோ கட்டியிட்டன், மகனும் கவனிக்க மாட்டான் அதாலை இடமும் சாப்பாடும் கொடுக்கிறது என்ரை கடமை, வந்து ஒரு மூலையிலை இருந்திட்டுப் போகட்டும் என யோசிக்கிறன் என்கிறார். அப்படி அவவோடை அவர் இருக்கப் போனால் நான் எந்த உறவும் வைத்திருக்க மாட்டேன். என்கிறேன்.
“நீ என்ரை நிலைமையை விளங்கி எனக்கு உதவிசெய்யாட்டால் நான் என்ன செய்யேலும், பார்வைக்குத் தான் ஆறடி மனிசன் நான், மெல்லிய மனசடி எனக்கு உடைந்து போயிடுவனடி, என்னை விளங்கிகொள்”, எனக் கெஞ்சுகிறார். பிள்ளைகளும் நண்பர்களும் எனக்குப் பைத்தியமா, இப்பவே வெட்டிவிடு என ஏசுகிறார்கள். ஆனால் என்னால் அவரின் உறவை விட முடியாமலிருக்கிறது.

எதற்கும் கொஞ்சநாள் பிரேமை சந்திக்காமலிருப்பது, ஒரு முடிவெடுக்க நல்லது என நினைக்கிறேன். அதை ஈமெயிலில் எழுதுகிறேன். சந்திக்காவிட்டாலும் கதையேன் என்கிறார். நான் பதில் போடவில்லை. எங்கு நிற்கின்றாய் என கோல் வந்தது. கடையில் நிற்கின்றேன் என்றதும் அங்கு வந்து வெவ்வேறு நிறங்களில் வேறுபட்ட தலைப்புகள் எழுதி சில பைல்களைக் கொண்டுவந்து தந்தார். அன்றைக்கு ஏதோ பில்லைக் காணேல்லை எண்டு தேடினாய், இந்த பைல்களிலை தனித் தனிய எல்லாத்தையும் அடுக்கிவை என்கிறார், எனக்கு மனம் கசிகிறது.

அதே கட்டத்தில் சுதர்சன் திரும்ப என்னுடன் சேர விரும்பம் தெரிவித்திருந்தார். அப்படி என்னால் வந்து மீண்டும் வாழ முடியாது என்பதை விளக்கி எழுதிய பிரதியை பிரேமுக்கும் காட்டுகின்றேன். காதல் உள்ள ஒருவர் இப்படி மனிசியோடை திரும்பப் போக மாட்டார். ஏமாந்து போகப்போறாய் கவனமாயிரு என மகள் எனக்கு அட்வைஸ் பண்ணுவதைச் சொல்லி பிரேமின் மார்பில் முகம் புதைத்து அழுகின்றேன். அவரின் அன்பு வேணும் என அவரிடம் யாசிக்கிறேன். அவளுக்கு எங்கே எங்கள் காதல் விளங்கப்போகுது, என என் தலையைக் கோதி, கண்ணீரைத் துடைக்கின்றார், பிரேம். அவர் என்னை கைவிட மாட்டார் என்ற என்னுடைய நம்பிக்கை எனக்குள் மீண்டும் வலுப்பெறுகின்றது.

ஆனால், மனிசியுடன் குடியிருக்கப் போனபின், வருகிறேன் எனச் சொல்லிவிட்டு வராமல் விடும்போது எனக்கு முன்னுரிமை கொடுக்கவில்லை என ஆர்ப்பாட்டம் செய்கிறேன். அவ வீட்டிலிருந்தால் கதைக்கேலாது என்றபோது, அப்ப மனிசியிட்ட சொல்லு அல்லது நான் வந்து சொல்கின்றேன் என அடம் பிடிக்கிறேன்.

இரண்டு நாள் கழித்து வந்தபோது, எனக்கு முடிவு வேணும் என திரும்பத் திரும்ப நான் கேட்கிறேன். கிட்ட வராதை கொஞ்சிப் போடுவன் என்கிறார், அவர். அந்தக் கொஞ்சல் என்னை இறுதிவரை கொண்டுசெல்லும் என்பது புரிந்த தப்பித்தலுக்கான அவரின் ஆயுதம் என எனக்குப் புரிந்ததால் நான் அன்று கிட்டப் போகவே இல்லை.

நாலு நாள் கழித்து, தொடர்புகொள்ள வேண்டாம் என திடீரென பொலிஸ் மூலம் செய்தி அனுப்பிவிட்டு, ஃபேஸ்புக்கையும் புளாக் பண்ணுகிறார்.

என்ன நடந்தது என்பது எனக்குப் புரியவேயில்லை. உலகமே அழிந்தது போல ஒப்பாரி வைக்கின்றேன் நான். சரி, காதலித்தார், பிறகு பிடிக்காட்டால் விடுகிறதிலை என்ன பிழை என்கின்றனர் சிலர், இன்னும் சிலரோ அவர் இளமையிலிருந்தே அப்படித்தான், என உதாரணம் சொல்லி பொம்பிளை நான் அல்லவா யோசித்திருக்க வேண்டும் என்கின்றனர். என்னதான் செய்ய முடியும், பேசாமல் மறந்துவிட வேண்டியதுதான் எனப் புத்திமதி சொல்லவும் ஒரு சிலர் மறக்கவில்லை. எப்படி உங்களை அவர் ஏமாத்தியிருப்பார் எண்டு என்னாலை சொல்லேலும், நான் நினைச்சாலும் இப்படிச் செய்யமுடியும் என ஒருவர் தன்ரை கெட்டித்தனம் சொல்ல, இன்னொருவரோ நாங்களும் இருக்கிறம், எங்களிட்டை ஒருத்தரும் வருகினம் இல்லையே எனப் பச்சாதாபம் கொட்டுகின்றார்.

வாழ்க்கையிலை சாத்திரம் கேட்காத நான் அதற்காகவும், பிராயசித்தங்களுக்காகவும் செலவுகள் செய்வதையும், பச்சோந்தியானதைச் சொல்லிச் சொல்லி அழுது புலம்புவதையும், துரோகத்தைத் தாங்க முடியாமல் படும் அல்லலையும், மறக்க முடியாமல் காத்திருந்து தவிப்பதையும், பார்த்து எனக்காகக் கலங்கிய என் சினேகிதி வினோ, பிரேம் தானாக அவளிடம் விழுந்த தருணத்தை இறுகப் பற்றிக் கொள்கிறாள்.

ஃபேஸ்புக் செய்திகள், ஈமெயில்கள், பின் அவற்றை அழித்து விட்டாளா எனச் செக் பண்ணல்கள், தனிமையில் சந்தித்தல்கள், புரிந்துணர்வற்ற மனைவி மாலா என்ற பச்சாதாபங்கள், இரண்டு அறை வாழ்க்கை என்ற புலம்பல்கள், பரிசு வழங்கல்கள் என அவருடைய லீலைகள் அத்தனையையும் எனக்காகச் சகித்து, ஏன் எனக்கு இப்படித் துரோகம் செய்தார் என அறிய வினோ விளைந்த போது, அதே “கான் ஐ காவ் எ ஹுக்?” என அவர் கேட்டாராம். அவளுக்கு அது உச்சியில் அடிக்க மேலும் அவளால் நாடகம் போட முடியவில்லை. நாலு கேள்வி நறுக்காய் கேட்டுவிட்டு கொடுத்த பரிசுகளையும் திருப்பிக் கொடுத்துவிட்டு வந்திருக்கின்றாள்.

அப்போதும்கூட அவள் கைகளைப் பற்றி தன் கைகளுக்குள் வைக்க முயற்சித்தாராம் என அவள் எனக்குச் சொன்னபோது, ஐம்பதைத் தள்ளிய சூடு காய முதல் இருபத்தி ஐந்தா என என்னால் ஜீரணிக்க முடியவில்லை. ஆனால் அதுதான் கற்பனை உலகிலிருந்து நிஜத்துக்கு என்னைக் கொண்டுவருகின்றது. பொறுப்பான ஒரு தொழிலைச் செய்யும் நான், பிள்ளைகளை வழி நடத்திய நான், அதுவும் எனது ஐம்பதாவது வயதில் இப்படி ஒரு பொறுக்கியிடம் ஏமாந்திருக்கின்றேன் என்பது தெளிவாகப் புரிந்தது. என்னை என்னாலேயே மன்னிக்க முடியவில்லை.

சரி, இப்படி ஏமாந்தேன் என இன்னும் ஒருவர் சொல்லாமல் என்னால் காப்பது நடக்கக்கூடிய ஒரு விடயமல்ல, உலகிலுள்ள அத்தனை பேரின் முகமூடிகளையும் கழற்ற என்னால் முடியாது. ஆனால் பிரேமிடம் ஏமாந்தேன் என இன்னொருவர் நோகாமலிருக்க என்னால் இயன்றதைச் செய்ய வேண்டும் என முடிவெடுத்துக் கொள்கின்றேன், நான். மனதில் சற்று அமைதி வருகின்றது, முகத்தை நன்கு கழுவித் துடைத்துவிட்டு கொம்பியூட்டரின் முன்னால் போய் இருக்கின்றேன், நான்.

நன்றி: ஞானம் பெப்ரவரி 2017

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *