சிறுவாடு என்கிற சிறுசேமிப்பு

4
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: November 29, 2017
பார்வையிட்டோர்: 12,831 
 

“யக்கா.. யக்கா …”

“யாரது பாப்பாத்தியா என்னா தங்கச்சி இவ்வளவு அரக்கபறக்க ஓடிவரவ என்னாச்சி” என்று ஆவலுடன் கேட்டால் நேர்த்தியாக பராமரிக்கப்பட்டிருந்த சிறு குடிசையின் வாசலில் உட்கார்ந்து கீரையை ஆய்ந்து கொண்டிருந்தாள் அலமேலு.

“ஒன்னுமில்ல அலமேலு யக்கா இந்த பேங்கு பயலுவ அந்த அட்ட செராக்ஸு இந்த அட்ட செராக்ஸுன்னு சொல்லி தெனமும் இழுத்தடிக்கிறானுவு ஆனா இதுவர என் வேலை முடிஞ்சபாடில்ல யக்கா. இன்னும் எத்தனை தடவதான் குடிக்காட்டுக்கும் சிறுப்பாக்கத்துக்கும் அலையா அலையனுமோ தெரியல ” என்று அலுத்துக் கொண்டாள் பாப்பாத்தி.
குடிக்காடு,கடலூரு ஜில்லா, திட்டக்குடி தாலுக்கா, மங்களூரு பஞ்சாயத்தில் சிறுப்பாக்கத்திற்கு அருகில் இருக்கும் ஒரு குக்கிராமம்.

“என்னாடி தங்காச்சி சொல்ற புரியும்படியா சொல்லேன்” என்றாள் அலமேலு கீரையை ஆயந்து கொண்டே.

“ஏக்கா நம்ம ரேடியா பொட்டியில ஒருநாளு அரசாங்கம் ஏழமக்களுகாக பேங்குல கணக்கு தொவக்கி அதுல கொஞ்ச கொஞ்சமா பணத்த போட்டுகிட்டு வந்தமுனாக்க நாம சேத்துவக்கிற பணத்துக்கேத்த லோனு கொடுப்பாங்கலாம், பணத்துக்கு மாசாமாசம் வட்டியும் தருவானுங்கன்னு ஒருசேதி வந்தத நம்பி போனேங்கா ஆனா நானும் நடையா நடக்குறேன் எனக்குமட்டும் அந்த அட்ட செராக்ஸு இந்த அட்ட செராக்ஸுன்னு கேட்டாங்க நானும் எடுத்துக்குட்டு போனேன்”

“அப்பறமென்னா தங்கச்சி நல்லபுடியா முடிஞ்சுச்சிதான”

“எங்கக்கா முடிஞ்சுச்சி எல்லாமே சரியா எடுத்துட்டு போயும் அது நொட்டம் இது நொட்டம் அந்த ஆபீசரு லீவு மெசினு வேலசெய்யலன்னு அலையவுடுரானுவுக்கா

ஹ்ம் எனக்குலாம் அதுக்கான குடுப்பன இல்ல ஆனா

வெள்ளயும்,சொல்லையுமா சைனும் கியினுமா போட்டுகிட்டும்

கரை வேஸ்டி கட்டிக்கிட்டும் வரவுனுக்குத்தான் இந்த அரசாங்கமும்,பேங்கும் எல்லாம் செய்யுது நமக்குலாம் எங்கக்கா செய்யப்போகுது

ஆனா ஒன்னு தேர்தல் நேரத்துல மட்டும் பாரேன் வரிஞ்சி கட்டிக்கிட்டு நம்ம வூட்டுபக்கம் ஓட்டு வாங்குற வரைக்கும் தெனமும் நடையா நடப்பானுவ”

“ஏ தங்கச்சி நான்லாம் அந்த காலத்துல எந்த பேங்க பார்த்தேன் ஆனா எனக்கு அப்பவே சொந்தகாலுல நிக்கனுமுன்னு தைரியம்மட்டும் இருந்துச்சி” என்ற அலமேலு கீரைக்கட்டை கீழே வைத்துவிட்டு பாப்பாத்தியை நிமிர்ந்து பார்த்து, “ஒனக்கு செறுவாட பத்தி தெரியுமா.. தங்கச்சி” என்று கேட்டாள்.

தலையைச் சொறிந்து கொண்டே “அப்படீன்னா…” என்று ஆச்சரியத்துடன் கேட்டாள் பாப்பாத்தி.

“ஒனக்கு செறுவாடு சேத்த கதைய சொல்லுறேன் நல்லா கேட்டுக்க

ஏன் வீட்டுக்காரர் முனியாண்டி தாராளமனுசன் போறவன் வாரவனெல்லாம் வாங்க தலைவர வணக்கமுன்னு சொன்னாபோதும் தலையில ஐஸ்கட்டி வச்சமாறி ஆயிடும் அப்புறம் நல்லா இருக்குரீயா வாவேன் கடைக்கு போயிட்டுவருவோமுன்னு சொல்லி

டேய் தம்பி ஒரு கோட்டரும் ரெண்டு தட்டு தல கறியும் எடுத்துத்துட்டு வான்னு சொல்லி அந்த நாத்தம் புடிச்ச கோட்டர மாரளவு மூக்க புடிக்க குடிச்சதுமில்லாம வூட்டுலயும் தெனாதெனம் சண்டதான் அதுமட்டுமா வூடு பூராவும் ஓரே வாந்திதான்
ஹ்ம் என்னா பன்றது

ஆனாதங்கச்சி என்புருசன் ஊருக்கு செலவாளி வூட்டுக்குதான் கஞ்சன்

ஒரு நாள் “ஏன்யா இப்படியே பொருப்பு இல்லாம குடிச்சே அழிக்கிறியே ஒனக்கே நல்லாயிருக்கா..முன்னலாம் சாராயம் குடிக்கனுமுன்னா 10 பல்லாங்கு தூரம் போகனும் அவ்வளவு தூரம் போகனும்மான்னு சொல்லி நடக்க கஷ்டமா இருக்குன்னு படுத்துக்குவ இப்ப என்னான்னா எழவு எடுத்தவனுங்க ஏன் தாளிய அறுக்குறத்துக்குன்னே தெருத்தெருவா சாராயக்கடைய தொறந்துவச்சி இப்புடிபண்றானுகளே

நாசமா போவ

கட்டையில போவ

ஆத்துக்கு அந்தான்ட…

ஆடுமேய்க்கும் சின்னதம்பி…

நான் அல்லி மொளவாரைப்பன்..

அவரக்கா தீயெலும்பன் ஆகூம்…

கொளத்துக்கு அந்தான்ட…

குதுர மேய்க்கும் சின்னதம்பி…

நான் குனிஞ்சி நடவு நட…

ஏன் பொற முதுவெலும்பு

முறிஞ்சதென்ன ஆகூம்…”னு ஆத்திரம் தீர திட்ட ஆரம்பிச்சுட்டேன்

“அய்யோ இப்ப என்னா நடந்துபோச்சின்னு ஓன் அண்ணன் தம்பிய ஒப்பாரி வச்சி இழுக்குறவ”னு ஒன்னுந்தெரியாதாமாதிரி கேட்டாரு ஏன்வீட்டுக்காரர்.

“ஏங் குடும்பத்தை இப்படி ஏழரை வருஷ சனியன் வாட்டி எடுக்குறது போல 5 வருஷ சனி படாதபாடு படுத்தி எடுக்குதே..

இப்புடியே போனா ரெண்டு பொம்பளபொண்ணுங்களையும் எப்பய்யா கரை சேக்க போறோம்

குந்த வூடு இல்லனாலும் கெட்டிக்காரி அலமேலுன்னு ஊரே பேசுது… ஹ்ம்

இந்த மனுசன நம்பி எப்புடி ரெண்டு புள்ளைங்களையும் கரசேக்க போறேனோ.. எப்படியாவது படிக்கவச்சி நல்லமாப்புளையா பாத்து கர சேத்துட்டோமுனா நம்ம கட்டை எப்படி போனாலும் பரவாயில்லை

நான் என்னா செய்யுவேன்..

ஏது செய்யுவேன்
ஏம் பொம்பளபுள்ளங்கல எப்புடியாவது கரசேக்கனுமே”னு பொலம்பிக்கிட்டே இருந்தேன்
அப்பதான் தங்கச்சி எனக்கு இந்த செறுவாடு யோசன வந்துச்சி

எங்கயிருந்து ஆரம்புக்கிறதுனு யோசிச்சப்ப ஏன் வூட்டடுக்கார மனுசன் முனியாண்டி வூட்டுக்கு சமான் வாங்க தர 10,20 பணத்துல ஒருரூபா,ரெண்டு ரூபான்னுமிச்சம் செஞ்சன்

குருவி சேக்கரமாறி சேத்த பணத்த கோழியில போட்டன்

அப்பறமென்ன ஏன் கோழிதான்னு தெரிஞ்சா ஒனக்கு எங்க இருந்துடி காசு வந்துச்சேன்னு நோண்டி நோண்டி கெராஸு கேள்விலாம் கேப்பாருன்னு பயந்து மூனாவது வூட்டு சிவகாமி அம்மாகிட்ட வாரத்துக்குவுட்டுட்டேன்

சிவகாமி யம்மாகிட்ட உனக்கும் எனக்கும் என்னதான் சண்ட வந்தாலும் சேரி ஏன் வூட்டுக்காரனுக்கிட்டமட்டும் சொல்லக்கூடாதுனு சொல்லிவச்சுட்டேன்

அவளும் “சேரி சேரி அலமேலு நான் சொல்லல நீ ஓன்னும் கவல படாத”னு நம்பிக்கை கொடுத்தா.

கொஞ்சநாள் கழிச்சு சிவகாமியம்மா

“அலமேலு நீ வாரத்துக்கு வுட்ட கோழி 20 முட்டை போட்டுருக்கு நாளு வேற ஆயிக்கிட்டே போகுது சீக்கிறமா வலைய வச்சுட்டோமுன்னா..”னு சொன்னா
உடனே நான், “ரொம்பவும் சந்தோஷம் சிவகாமி யம்மா

நல்ல நாளு பாக்கனும் அதுமட்டுமா எவ கண்ணுலையும் படாம அவியம் வச்சாதான் நெரைய கோழி பெறுவும் இத கூட வயசுக்கு சின்னவ நான் சொல்லிதான் தெரியனுமா ஒனக்கு”னேன்

“ஏன் அலமேலு இதுகூடவா தெரியாது எனக்கு இன்னைக்கு நல்ல நாளுதான் காலையில ஊர்ல எல்லாரும் வெரப்பு தெளிச்சாங்க இதவிட ஒரு நல்லலாளு வேணுமா என்ன..”னு சிவகாமி அம்மா சொன்னதும் இன்னிக்கு ராத்திரியே அவியம் வச்சுடலாம் சொல்லிட்டு,

” சரி நீ போ நான் ராத்திரிக்கா அவுருக்கு தெரியாம வாரேன்னு” சொல்லி சிவகாமி அக்காவை அனுப்பி வைக்கும்போதே நாலு கரிகோட்ட துண்டும்,மூனு காஞ்ச மொளவாயும் எடுத்து வச்சிருக்கச் சொல்லிட்டேன்

அப்புறம் அன்னக்கு ராத்திரியே நானும் சிவகாமி அம்மாவும் சேர்ந்து அவியம் வைச்சுட்டொம்.

நாள் நகர நகர நாலு முட்டை கூமூட்டையாக போயி 16 குஞ்சுகளை பொறிச்சுச்சு கோழி.6 மாசத்துல காக்கா பருந்து கழுகு பூனைக் கிட்ட இருந்து காப்பாத்திய குஞ்சுகள் பெரிய கோழியாச்சு. ஆளுக்கு பாதியா பிரிச்சுக்கலாம் என முடிவெடுத்து 8 குஞ்சு கோழியோடு தாய்கோழியையும் நான் வாங்கிக்கிட்டு வந்து பக்கத்து தெரிவுல இருக்கும் மாரியாம்மா, ராமாயி, முருவம்மா கிட்ட வாரத்துக்கு விட்டேன்

மாசம்போயி கோழி எல்லாம் அதிகமாக…திடீர்னு ஒரு யோசனை வந்துச்சி பாப்பாத்தி

” இத்தனையும் இருக்குறது ஏன் வூட்டுக்காரருக்கு தெரிஞ்சா எல்லாத்தையும் புடுங்கி குடிச்சே அழிச்சுடுவாரே இந்த மனுசன்…. என்னா செய்யலாம்னுட்டு எப்படா இந்த கோழி வியாபாரி வருவாண்ணு காத்திருந்தேன்”

ஒருநாள் ராத்திரி
“கோழி இருக்கா கோழி

கோழி இருக்கா கோழி”னு சத்தம் கேட்டப்போ ரெண்டாம் பேத்துக்கு தெரியாயம நைசா

“ஏ.மங்கா.. நீயும் மயிலும் படிச்சி முடிச்சவொடன் சாப்புட்டு தூங்குங்க அப்பா வர நேரஞ்செல்லும் ஒரு வேல அம்மா எங்கன்னு அப்பா கேட்டா பக்கத்துவூட்டு சிவகாமி ஆத்தாவ பாக்க போயிருக்குன்னு சொல்லுமா”னு எம்பொண்ணுககிட்ட சொல்லிப்புட்டு எல்லா கோழியையும் ₹1500 க்கு கோழி ஏவாரிகிட்ட வித்து முனியாண்டிக்கு தெரியாம முந்தானையில வைச்சிகிட்டேன்.

தூங்கும்போது ஒரு நல்ல யோசன வந்துச்சு இந்த பணத்தை எத்தன நாள் முடிச்சு முடிச்சு பத்திரபடுத்துறது பேசாம ஒருகொரா ஆடு புடுச்சி வாரத்துக்கு வுட்டுடலாம் என முடிவு பண்ணி பக்கத்து தெருவுல இருக்குற ராணி அம்மாகிட்ட வாரத்துக்கு விட்டு வருசம் 5 கடக்க குட்டி ஆட்டோடு சேர்த்து 5 ஆடுகாளாய் பெறுகட்டும்னு கொடுத்தேன்.

“அய்யய்யோ பாவிப்பய பார்த்தா கொஞ்சநஞ்சமா குருவி சேக்குறதுபோல சேத்து வச்ச எல்லாமே விணாப்போயிடுமே நான்

என்னா செய்ய போறேனோ

ஏது செய்ய போறேனோ”னு எல்லா ஆட்டையும் நல்ல ஆட்டு வியாபாரியா பார்த்து 10 ஆயிரத்துக்கு வித்து அதே போல முந்தானையுல முடிச்சி வச்சி நாள்கள் கடந்ததும் பிறகு ஒருயோசனை வந்திச்சு பால்மாடு புடிச்சி வாரத்துக்கு வுட்டா நல்ல காசுவருமேன்னு நெனச்சி நல்ல செனை மாடா வாங்கி சிவகாமி அம்மா ராசியானவங்கன்னு அந்தம்மாகிட்டயே வாரத்துக்கு வுட்டேன்.

கொஞ்சவருசம் கழித்து மாடு கன்னு குட்டிபோட, மறுவருசமும் குட்டிபோட,அதற்கு மறுவருசமும் குட்டிபோட குட்டி மாடு பெருசா வளர்ந்த பிறகு அது குட்டிபோட அதனுடைய பால்காசு என இப்படியே எல்லாத்தையும் வித்து

2 லட்சம் சேர்த்து சரி இவ்வளவு பணத்தை வச்சி என்னா செய்ய போறோம் குந்த கூட சொந்த குடிசை இல்லையே நமக்கு ஒரு மெயின்ரோடா பார்த்து அதுக்கு பக்கத்துல ஒரு மணக்கட்டு வாங்கி வருசம் கடக்க கடக்க மணைகட்டின் விலை அதிகமாக 10 லட்சத்துக்கு அந்த மணக்கட்டை வித்து பணத்தை வரகு குதுருக்குள் ஒரு மஞ்சள் பையுக்குள் போட்டுகட்டி வச்சேன்.

ஒருநாள் ஏன்வீட்டுக்காரர், “பொம்பல புள்ளைங்களை கர சேக்கமா இப்படி குடிச்சி குடிச்சே எல்லாத்தையும் அழிச்சுட்டேனே ஊருல போறவன் வாறவன்லாம் வயசுக்கு வந்த ரெண்டு பொம்பல புள்ளைங்கல வச்சிக்கிட்டு

இதபார்ரா மைனர் போல தண்ணிய போட்டுக்குட்டு ஆட்டம் போடுரான்னு கேவலமா பேசுரானுவ அலமேலு

ஒரு பைய கூட மதிக்க மாட்டக்குறானே நான் என்னசெய்வேன்

உன் தாளிமேல சத்தியமா சொல்றேன் சத்தியமா இனி குடிக்க மாட்டேன்

நான் செஞ்ச தப்புஎல்லாத்தையும் மண்ணுச்சுருங்க ஏம் புத்திய செறுப்பாலயே அடிச்சிக்கனும் போல இருக்கு

இனி எப்ப சம்பாதிச்சி ஏன் ரெண்டு பொம்பள புள்ளையும் கரைசேக்க போரனோ நான்”னு புத்தி தெளிஞ்சு புலம்பினாரு.

“என்னங்க சின்ன புள்ள மாறி காலுல விழுந்துகிட்டு

ஒடம்புல உயிரும்

மனசுல தெம்பும்

இருந்தா போதும் இப்பவாது திருந்துணீங்களே அதுவேபோதும்

எனக்கும் நம்ம பொண்ணுங்களுக்கும் சந்தோஷமா இருக்கு ராசா”னு சந்தோசத்தில பூரிச்சுப் போயிட்டேன்

பொறகு என்ன பாப்பாத்தி

எங்கவூட்டு ஆம்படையானும் திருந்தி வாழ வரகு குதுருக்குள்ள இருந்த 10 லட்சத்தையும் கொடுத்து நல்ல மாப்பிள்ளையா பாத்து ரெண்டு பொண்ணுகளுக்கும் 4 லட்ச ரூபா வீதம் ஜாம் ஜாம் ன்னு கலியாணத்ததை முடிச்சிவச்சோம்

மீதியிருந்த 2 லட்ச பணத்துல சின்னதா ஒரு எடத்த வாங்கி சின்னதா கொட்டா போட்டு புதிசா வாழ்க்கையை நானும் எங்கவூட்டுகார ராசா முனியாண்டியும் துவங்க ஆரம்பிச்சோம் தங்கச்சி”

“ஏ யக்கா இவ்வளவு விசியம் நடந்து இருக்கா ஓங் குடும்பத்துல”னு ஆச்சரியப்பட்டா பாப்பாத்தி

“ஆமா தங்கச்சி நான் பட்ட கஷ்டத்த இன்னும் சொன்னேனா மால கண்ணீருதான் ஆறா ஓடும்

இப்படி சேமிச்ச நம்ம கெராமத்து மக்களுக்கு என்னமோ சேமிப்பு திட்டமுன்னு எங்க பேங்குல உங்க காச போடுங்குறான் அப்பறம் நம்ம எல்லா பணத்தையும் சேத்து கடன் ஒதவி நமக்கு செய்யாம பெரிய பெரிய மிட்டா மெராசுக்கு மட்டும் அல்லிக்கொடுக்குறான் அதுமட்டுமா தங்கச்சி கடனையும் கொடுத்து வட்டியும் மொதலையும்

கட்சி மாறிமாறி வரும்போது
வட்டியும் தள்ளுபடி செஞ்சி கடனையும் தள்ளுபடி செஞ்சி இன்னும் நம்மலபோல படிக்காத ஏழமக்களை வச்சே எம்புட்டு வருசம் ஏமாத்துவானுங்க

ஆனா தங்கச்சி வர தேர்தலுக்கு நம்ம வெவசய மக்களுக்காக எந்த கட்சி தெனா தெனம் ஒழைக்குதோ அந்த கட்சிச்குதான் ஏன் ஓட்டும் ஏன் குடும்ப ஓட்டும்

ஓன் ஓட்டு யாருக்குன்னு ஓன் முடிவுலேயே வுட்டுடுறேன்” என்று சொல்லிக் கொண்டே

“அய்யய்யோ மறந்தே புட்டன் இன்னிக்கு சாயங்காலம் ஏன் மகளும் மருமகனும் அதுமட்டுமா பேரபேத்திங்களும் வராங்க நான் வாரன் தங்கச்சி வேல அதிகமா இருக்கு. நான் வேலைய கவனிக்கிறேன். நல்லா யோசிச்சுபாரு பாப்பாத்தி…” என்று சொல்லிக்கொண்டே ஆய்ந்த கீரைகளை எடுத்துக் கொண்டு குடிசைக்குள் சென்றாள் அலமேலு.

எத்துனை வசதிகள் வந்தாலும் ஏழைகளுக்கு எட்டாக்கனியாகவே போய்விடுவதற்குப்பின் இருக்கும் ரகசியத்தை உணராத சாமானியரில் ஒருவராய் தன் விதியை நொந்து கொண்டே வீதியை வெறித்துப் பார்த்து நடந்து கொண்டிருந்தாள் பாப்பாத்தி…

அந்தி மயங்கிக் கொண்டிருந்தது வீதியின் திருப்பத்தில் இருந்த பிள்ளையார் கோவிலைத் தாண்டும்போது வந்த சாராய நெடி மூக்கில் ஏற நினைவு வந்தவளாய் திரும்பிப் பார்த்தாள் பாப்பாத்தி…..

கோயிலுக்கு அடுத்திருந்த டாஸ்மாக் கடையில் வியாபாரம் களைகட்டியிருந்தது….

Print Friendly, PDF & Email

4 thoughts on “சிறுவாடு என்கிற சிறுசேமிப்பு

  1. எனது முதல் சிறுகதையை பதிந்தமைக்கு வாழ்த்துகளும்,பாராட்டுதல்களும்.மென்மேலும் என்னை எழுத தூண்டிய நிர்வாக குழுமத்திற்கு நன்றியும் அன்பும்.

    ப.எங்கல்ஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *