கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: October 7, 2013
பார்வையிட்டோர்: 13,183 
 

வெகுநேரமாகியும் வீட்டு வேலைக்கான உதவிப்பெண் சாலம்மா வரவில்லை என்பதால், தேடிக்கொண்டு போனபோது அவள் காவேரி நகர் வீட்டுக்கு வேலைக்குச் சென்றிருப்பதாய்ச் சொன்னார்கள். மொபெட்டில் சென்றபோது அவ்வீட்டை தூரத்திலிருந்தே பார்க்க முடிந்தது. மினி வேன் ஒன்றில் தட்டுமுட்டுச் சாமான்களுக்கு சிகரமாக நாற்காலி ஒன்று மல்லாக்கவைத்து அடுக்கப்பட்டுக் கொண்டிருந்தது. அழைக்க வருவதை கவனித்துவிட்ட சாலம்மா வேகமாக வந்து, “”இன்னிக்கு வர்றத்துக்கு ஆவுறதில்லை. இங்க சொல்பா கெலசா (கொஞ்சம் வேலை) இருக்கு” என்றாள் கன்னடம் பிணைந்த தமிழில்.

காற்றின் விதைகள்“”ஏன்? என்னாச்சு?” என்றபோது, “”அந்த தாத்தா போய்ட்டாருல்லே?” என்றாள் புறங்கையால் வீசி அந்த வீட்டைக் காட்டியபடி. “”ஐயோ எப்போ?” எனக் கேட்க, “”அவரு போயி ரெண்டு மூணு வாரம் ஆவுதே. நல்லாத்தான் இருந்தாரு. மயக்கமாயிட்டாருன்னு ஆசுபத்திரிக்கு கொண்டு போனாங்க. ஐசூலயே பிரிஞ்சிடிச்சாம். காரியமெல்லாம் முடிஞ்சு வந்தவங்க எல்லாம் போயாச்சு. இப்போ மனெ காலி பண்ணிட்டுப் போறாங்க”

அவள் தந்த விவரங்களின் பின்னணியில் பார்க்கும்போது அந்த வீடு எரிந்து முடிந்த பூவாணம் போலக் களையிழந்து தோன்றியது. அவர் எப்போதும் உட்கார்ந்திருக்கும் நாற்காலிதான் அது. அந்த நாற்காலியே அவர்தான் என்றுகூட சொல்லிவிடலாம். புழங்கி வழுவழுத்துப்போன தேக்கு நாற்காலி. கண்படா அதன் அடிப்பகுதியில் இன்றுதான் வெளிச்சம் பட்டிருக்கவேண்டும். அட்டைப்பெட்டிகள், பாட்டில்கள், பழைய காலண்டர்கள், கைப்பைகள், நோட்டுப் புத்தகங்கள் என இதுவரை முக்கியமானதாக கருதப்பட்டவை குப்பைகளாய் வாசலில் கிடந்தன.

“”அப்போவே ஒரு வேன், சாமான்களோட மகன் வீட்டுக்கு மைசூர் போயிடுச்சு. இதுல அந்த அஜ்ஜி(பாட்டி) மட்டும் நாமக்கல் போறாங்க”

“” நாமக்கல்லுக்கா? தனியாவா?” எனக் கேட்டபோது “”என்னா பண்றது. பொண்ணு வீட்டுக்கு போறாங்ளாம். இனிமே அங்கதான் போலிருக்கு. அஜ்ஜியை கொண்டுபோய் விட்டுட்டு வரச் சொன்னாங்க. அதான் என் தம்பிய கூட்டிகிட்டு நானும் போறேன்” என்று பேசிக்கொண்டே இருந்தவள் இளைஞன் கைதட்டி அழைத்த சத்தம் கேட்டு போய்விட்டாள். முக்கால் சராயும், டி-ஷர்ட்டும், வயதிற்கு அதிகமான லேசான குபேர வழுக்கையும், கண்ணாடியுமாக இருந்த அவர்தான் மகன். பாட்டியைத் தேடிய கண்கள் அவள் உள்ளே துணிகளை மடித்துக் கொண்டிருப்பதைக் கண்டது. உற்றவரை இழந்தபின் வழக்கமான பணிக்குத் திரும்பி பழையபடி வழக்கமான வேலைகளை செய்ய ஆரம்பிப்பது என்பது கழிவிரக்கம் சொட்டும் ரணம். ஆனால் காலம் இதயமற்றது. மொபெட்டைத் திருப்புகையில் ஒரு முறை அந்த வீட்டை திரும்பிப் பார்த்தபோது பெரியவருடைய இல்லாமையே ஓர் இருப்பாக வெறிச்சோடியிருந்தது.

பெரியவருக்கு எழுபது தாண்டி இருக்கும். நிதமும் முழுக்கை சட்டை, வேட்டியுடன் மாலையில் வாக்கிங் ஸ்டிக்கை தரையில் ஊன்றாமல் ஆட்டியபடியே சாலையோரமாக நடந்துவிட்டு, திரும்புகையில் கோவில் வாசலில் ஒரு கும்பிடு போட்டுவிட்டு வீடு சென்று அடங்குவார். தோள்களை மூடிய புடவை, வைர மூக்குத்தி, தோடு (இல்லாவிட்டால் அந்த ஜொலிப்பு வருமா) அணிந்திருக்கும் பாட்டி மாலை நேரங்களில் வாசலில் உட்கார்ந்திருப்பார். பெரியவர் திரும்புவதைக் கண்டு எழுந்து அவருடன் சேர்ந்து உள்ளே போவார். அவர்களுக்கு இரண்டு மகள்களுக்கு இடையில் ஒரு மகன். பெரிய மகள் திருமணமாகி நாமக்கல்லில் இருந்தாள். இளைய மகள் காதல் திருமணம் என்பதால் புறக்கணிக்கப்பட்டு பதிவுத் திருமணம் செய்துகொண்ட கையோடு துபாய் சென்றுவிட்டாள். மெகட்ரானிக்ஸ் பட்டம் பெற்ற மகன் சம்பந்தமில்லா மென்பொருள் துறையில் நல்ல சம்பளத்துடன் மைசூரில் வசதியுடன் இருக்கிறான். என்ன காரணமோ அவனுக்குத் திருமணம் கூடவில்லை, தற்போது ஜாதி மதக் குறுகிய எல்லைகளையெல்லாம் கடந்து மனத்தின் அனுகூல எல்லைகளை விஸ்தரித்து இணையத்தின் மூலம் எந்தப் பெண்ணையும் திருமணம் செய்து கொள்ளும் அதிதாராள மனத்துடன் – இன்னும் தேடிக் கொண்டுதானிருக்கிறான்.

வாழ்க்கையில் சிலசமயம் ஒருவருடைய புத்திசாலித்தனம் முட்டாள்தனம் என்பதெல்லாம் பிறரால் நிர்ணயிக்கப்பட்டுவிடுகிறது. பெரியவர் விஷயத்தில் அப்படித்தான் ஆனது. பணி ஓய்வு பெற்ற பிறகும் சிலகாலம் தனியாரிடம் வேலைக்கு சென்றுகொண்டிருந்தார். பிறகு தன்னுடைய வீடுகள், காலி மனைகள், ரொக்க சேமிப்பு, வைப்புநிதிச் சான்றிதழ்கள் மற்றும் தங்க வைர நகைகள் இவற்றை மூன்றாகப் பிரித்து தனக்குப் பிறகு வாரிசுகளுக்குள் சிக்கல் வராதபடி தந்துவிடுவதே சரி என்று ஆயத்தமானார். இதைச் சொன்னபோது பாட்டி அதைத் தவிர்க்க விரும்பினார்.

“”நெருப்புன்னா வாய் வேகாது. இத்தனை வயசுக்கப்பறம் பயந்து என்ன ஆகப் போவுது?” என்றவரிடம் பாட்டி, “”அதுக்கில்லை. நீங்க உலகத்தை புரிஞ்சிக்கணும்” என்றாள்.

“”என்னத்தை புரிஞ்சிக்காம போயிட்டேன்? நாளைக்கு எனக்கப்றம் சொத்து விஷயத்துல பசங்களுக்குள்ள மனத்தாங்கல் ஏதும் வந்துடக்கூடாது. அது புரியுதா?” என்றார் அர்த்த அழுத்தத்துடன்.

“”புரிஞ்சதாலதான் கேக்கறேன். பாகம் பிரிக்கறதுல பிற்காலத்தில் வாரிசுகளுக்குள்ள சண்டை வந்துடும்னு பயந்தா… அந்த பயம்தான் இதுக்குக் காரணம்னா, அந்த சண்டை இப்போவே ஆரம்பிச்சுடாதா? அதை ஏன் யோசிக்கலை?” என்றாள்.

இந்த யோசனைக் கோணத்தை பெரியவர் எதிர்பார்க்கவில்லை என்றாலும் நம்பிக்கையை நழுவாத தொனியில், “”அதெல்லாம் வராது. நான்தானே பிரிச்சுத் தரப்போறேன். பிரச்சனை வந்தாலும் நானிருந்து சமாளிச்சுடுவேன். நானில்லாம போனாதான் உன்பாடு கஷ்டமாயிடும். அதுக்குத்தான் இந்த ஏற்பாடு” என்று சமாதானம் செய்தார். திட்டமிட்டபடி வகுத்தார். பிரித்தார். கொடுத்தார். ஆனால் வெகு விரைவிலேயே பாட்டியின் கணிப்பு சரியென்பது நிரூபணமானது. யாருக்கும் திருப்தியில்லாமல் “”ஒரு கண்ணுல வெண்ணைய் ஒரு கண்ணுல சுண்ணாம்பு” என்ற வசையை அவர் ஏற்க வேண்டியதாயிற்று.

குடும்பங்களில் ஆண்கள் முன்னின்று செய்வதில் தீவிரப்படுகிறார்கள். பெண்கள் தள்ளி நின்று அனைத்தையும் அனைவரையும் கவனிக்கிறார்கள். அதனாலேயோ என்னவோ அவர்களால் தீர்க்கமாக யோசிக்க முடிகிறது என்று தனக்குள் எண்ணிக்கொண்டார். சொத்துக்களை மூவருக்கும் சரிசமமாகப் பிரித்துக் கொடுத்ததுதான் பிரச்சனையாகிவிட்டது. சமபங்கு என்பது யாருக்கும் உடன்படாக இல்லை. ஒவ்வொருவரும் தத்தம் நியாங்களுக்காக தனக்கு அதிகப் பங்கு வந்திருக்க வேண்டும் என்றே ஆசைப்பட்டார்கள்.

“”பெரியவளுக்கு வசதிக் குறைச்சல். சின்னவளுக்கு கல்யாண செலவு ஏதும் நான் செய்யலை. பையனுக்கு இன்னும் கல்யாணமே பண்ணி வைக்கலை. அதனால சமவிகித பங்குங்கறது எடுபடலை. அவங்க ஞாயம் அவங்களுக்கு..என்ன பண்றது?” என்று விட்டுக் கொடுக்காத ஆதங்கமாகச் சொல்லிக் கொண்டாலும், அவர்களுடைய நியாயம் தத்தம் தேவைகளைச் சார்ந்த சுயநலம் என்ற உண்மையை அறிந்தவராக, ஆனால் அதை வெளிச்சமிடக் கூசியவராகவே ஒடுங்கி இருந்தார். கூரிய பாறை வெடிப்புகளின் மேல் ஓடும் ஆறு அன்பாக அவற்றை அணைத்துக்கொண்டு ஓடுகிறதா? மறைத்துக் கொண்டு ஓடுகிறதா?

மண்கோபுரம் சரிவது போல சடசடவென நடந்துவிட்ட சம்பவத்தை நினைக்கையில் அவருக்குக் குழப்பமான ஆச்சரியமே மிஞ்சியது. அன்றொருநாள் அனைவரும் சாப்பிட்டுவிட்டு, கைகழுவிய ஈரம் காய்வதற்குள் பாகம் பிரித்தது பற்றிய பேச்சு ஆரம்பிக்கப் பட்டுவிட்டது. பாகப் பொருட்களின் வணிக விலை சந்தை மதிப்பு, உபயோகம், அளவு, தேவை உள்ளிட்ட விவாதங்கள் சர்ச்சைகளாகி, கைப்பெட்டிகளுக்குள் அடங்கும் தங்கம் வெள்ளி பணம் பத்திரங்கள் இவற்றை மட்டும் எடுத்துக்கொண்டு அண்டா குண்டாக்களை அப்படியே வீசிவிட்டு ஒருவருக்கொருவர் போய்வருகிறேன் என்றும் சொல்லிக் கொள்ளாமல் காற்றில் பறக்கும் கூளமாக சிதறிப்பறந்தனர். நிஜ சொரூபங்கள் தோலுரித்துக்கொண்டு ஆடியது கண்டு அதிர்ந்துபோனார். பிள்ளைகள் மனதைச் சுற்றி இத்தனை மதில்கள் எப்போது வளர்ந்தன? இதுநாள் வரை அவர்கள் பேசியதெல்லாம் அவர்களது பேச்சு இல்லையா? என்ற கனத்த ஆச்சரியங்கள் மனதை அலைக்கழித்தது. பேரனை நினைத்துக் கொண்டார். படிப்பார்வம் உள்ள பேரன் ஒரு முறை வந்திருந்தபோது, பிரபஞ்சம் சூன்யத்திலிருந்து வந்திருக்கவேண்டும் என்ற ஸ்டீபன் ஹாக்கின்ஸ் விளக்கத்தையும் சூன்யவாதம் மறுத்து முழுமையிலிருந்து கிள்ளியெடுப்பினும், எடுத்ததும், எடுக்கப்பட்டதும் முழுமையே என்ற வேதாந்தத்தையும் ஒப்பீட்டுத் தெளிவுக்கான விளக்கமாக கேட்டபோது, அவனைப் பார்த்த அவர் பார்வையில் பெருமையும் வாஞ்சையும் பொலிந்தன. அவனோடு எவ்வளவு பேசியிருப்பார். அவனுக்காக கட்டிவைக்கப்பட்டிருந்த புத்தகங்கள் இப்போது சீண்டப்படாமல் சிதறிக் கிடக்க, நெடுநேரம் வரை அப்படியே உறைந்திருந்தார்.

வீடு வாசல் பணம் அனைத்துமே தான் சம்பாதித்த சொத்துக்கள்தான். ஆனால் தான் சொத்தாக தருவது இவற்றை மட்டுமா? நல்ல படிப்பும் ஆரோக்யமும்தானே? எல்லா விதத்திலும் நல்ல நிலையிலுள்ள பிள்ளைகள், சொத்துக்களுக்காக இப்படி விரிசலுறுவார்கள் என்ற நிஜம் அவருக்கு அதிர்ச்சியாகவும் அசூசையாகவும் இருந்தது.

“”நீதான் சரியாய் யோசிச்சிருக்கே போலிருக்கு” என்றவரிடம் பாட்டி, “”ஐயோ போதும். இதுல தப்பு சரி என்ன கிடக்கு எதுவானாலும் அவமானம். என்னைக்கா இருந்தாலும் நடக்கவேண்டிய ரகளைன்னு தெரிஞ்சப்றம் வலி வலிதான். விட்டுத் தள்ளுங்க. நமக்கு ஆதரவு பென்ஷன்தான்னு விதிச்சாச்சு” என்றாள்.

“”வெறும் வீடு வாசல் பணம் மட்டும்தான் இவங்களுக்கு சொத்தா? கெüரவம், மதிப்பு, அறிவு, பாசம் எல்லாத்தையும்தானே சம்பாதிச்சு வச்சிருக்கேன்? அது சொத்து இல்லையா பொண்ணு என்னடான்னா நகை பணம் காசுன்னு அலையறா. ஆனா அவள் வயித்துல பிறந்த பேரன் எவ்ளோ புத்திமான் தெரியுமா? புஸ்தகங்களைத் தேடித் தேடி படிக்கிறான். அவங்கவங்க ருசி அவங்கவங்களுக்கு” என்றார்.

சிறிதுநேர அடர்ந்த மெüனத்திற்குப் பிறகு, தெரிந்தோ தெரியாமலோ நம்முடைய எண்ணங்களும் செயல்களும் காற்றில் தூவப்பட்ட விதைகளாய் மிதந்து என்றோ எங்கோ விழுந்து எப்படியோ முளைக்கத்தான் செய்யும். அதனதன் குணங்களாக முள்ளாகவோ பூவாகவோ என்றபோது பாட்டி விளங்கியும் விளங்காததுமாக அவரைப் பார்த்தாள்.

பாகப் பிரிவினை பிரச்சனைக்குப் பின், கடிதங்கள் தொலைபேசிகள் என்று மகள்களிடம் வலிய ஏற்படுத்திக்கொண்ட ஒட்டுதல் செயற்கையானதாகவே தொடர்ந்தது. மகனுக்கு மைசூர் வேலை அமைந்து மாதம் ஒருமுறைதான் வந்துபோக முடியும் என்று நிலைமை சந்தர்ப்பத்துக்கேற்ற தீர்வாக அமைந்துவிட்டதை “”ரோகி கேட்டதும் வைத்தியர் தந்ததும் ஒண்ணாப் போச்சு” என்றாள் பாட்டி.

எதிர்பாராத போது முதுகில் விழும் பூ கூட திடுக்கிட வைத்துவிடுகிறது. பெரியவர் உதிர்ந்தது பாட்டியை திகிலாக்கி அலைக்கழித்தது. ஆனால் அடுத்த இரண்டு மூன்று வாரங்களில், பல வருடங்கள் முன்பே அணைக்கப்படாது போன குரோத நெருப்பு “பக்’ கென்று பற்றிக்கொண்டது. காலத்தில் மண்டிய குப்பைகூளங்களை பற்றிக்கொண்டு பகபகவென்று எரிந்தது. பின்பு சாம்பலடங்கிய அமைதியில் பாட்டி நாமக்கல்லுக்கு சென்று மூத்த மகளிடம் இருப்பது எனவும், பென்ஷன் பணம் தரப்படுவது போக, மாதா மாதம் மகன் பணம் அனுப்புவான் என்றும் சொல்லி, ஏற்றுக்கொள்ளப் பட்டது. அப்போது, தனக்கு திருமணமாகாததும் ஒரு விதத்தில் நல்லதாகப் போயிற்று என்று தோன்றியது அவனுக்கு. மூத்த மகளுக்கும் அப்படியே தோன்றினாலும், தான் பொறுப்பும் தியாகமும் நிறைந்த சிலுவை சுமப்பவளாக உருவகித்துக் கொள்ளும் வாய்ப்பை மிகச் சரியாகவே பயன்படுத்திக்கொண்டாள்.

துக்கம் விசாரிக்க வந்த கூட்டம் கரைந்தபின், தன் வயோதிக அம்மாவை, சாலம்மாவையும் அவள் தம்பியையும் துணைக்கு வைத்து நாமக்கல் அனுப்பிவிட்டு, தான் வீட்டுக்காரரிடம் வாடகை முன்பணத்தை திரும்பப் பெற்றுக்கொண்டு மைசூர் சென்றுவிடுவதே அவன் திட்டம். ஆனாலும் ஒரு மாதம் கழித்து அனுப்பச்சொல்லி மகளும், இப்போதே அனுப்பி வைப்பதாக மகனும் வெகு நேரமாக உள் அறையில் தீவிரமாக கைபேசி மூலமாக அடிக்குரலிலும் பெருங்குரலிலுமாக விவாதித்து – ஒருவரை மற்றவர் ஒத்துக்கொள்ள வைக்க முயன்று கொண்டிருந்தார்கள்.

காத்திருந்த பாட்டி, நீண்ட நேரம் நிற்க முடியாமல் தன் துணிப்பைகளுடன் ஹால் தரையில் உட்கார்ந்து கொண்டு சுவரில் சாய்ந்தபடி சொல்லப்படவிருக்கும் எந்த முடிவுக்கும் தயாரான மனநிலையில் சோர்ந்து காத்திருந்தாள். கண்களைத் தரையில் ஓடவிட்ட போது, நாற்காலி, செய்தித்தாள், புத்தகங்கள் என்று வழக்கமாக சிதறிக் கிடக்கும் ஹாலில் பார்வை இப்போது எதிலும் தடைபடாமல் வழுக்கிச்சென்று மேலெழுந்து சுவரில் பெரியவர் மாட்டி வைத்திருந்த காலண்டரில் சென்று தேங்கியது. போய்ப் பார்க்க முடியாட்டாலும் நினைச்சாலே போதும் என்று சொல்லிக்கொண்டே புது வருடத்தன்று அவர் மாட்டிய அருணாசல மலை அமைதியாக தொங்கிக் கொண்டிருந்தது.

வானை நோக்கி மல்லாக்க வைத்து கட்டப்பட்ட நாற்காலியுடன் வேன் நலுங்கிச் செல்ல, உதவிக்கு வந்த தம்பி பின்னால் ஏறி சாமான்களோடு நின்றிருக்க முன் பக்கத்தில் டிரைவருக்கும் சாலம்மாவுக்கும் நடுவே பாட்டி கையில் துணிப்பையை அணைத்தபடி உட்கார்ந்திருந்தாள். வேனை அனுப்பிவிட்டு வாசலில் நின்றிருந்த மகன், வேன் சந்து திரும்பி மறையும் முன்பாகவே கைபேசியில் யாரையோ அழைத்தபடி வீட்டுக்குள் சென்றுவிட்டான்.

மதியமே கிளம்பியிருக்க வேண்டியவர்கள் பலத்த விவாதங்களுக்குப் பின் கிளம்ப மாலையாகிவிட்டது. வீட்டு வாசல்களிலும் சாலைகளிலும் விளக்குகள் முளைக்க ஆரம்பித்துவிட்டன. வேன் கிளம்பிப் போய்க்கொண்டிருந்தது. முன்னிருட்டில் புறப்பட்டதாலும், நீண்டதூரப் பயணம் என்பதாலும் சாலம்மா இரண்டு முறை வண்டியை நிறுத்தி டிரைவரை டீ குடிக்கச் சொல்லி, இடையிடையே அவனுக்குப் பேச்சுக் கொடுத்தபடி சாலையில் கவனத்துடன் பயணித்தாள். பக்கத்திலிருந்த பாட்டி திடீரென ஏதோ ஒரு யோசனையில் வெடிப்பில், முன் பின் வாக்கியங்களற்ற தொக்கலாய் “”சாலம்மா நீ நல்லா இருக்கணும்” என்று சொல்லி அவளுடைய கையை இறுகப் பற்றினாள். வளையல்கள் துறந்த பாட்டியின் கைகள் முதிர்ந்த நாணலைப் போலிருந்தது. ஆனால் சிறிதும் உணர்ச்சிவசப்பட்டவளாக இல்லை. சற்றுநேரத்தில் மற்றொரு கையில் துணிப்பையை பிடித்தபடி தூங்கி வழிய ஆரம்பித்தாள்.

இவர்களை அனுப்பிவிட்டு உள்ளே சென்று அறையில் பழைய செய்தித்தாளை விரித்துப் படுத்த மகன் மைசூர் போவதை மறந்து ஆழமாய் உறங்கிக் கிடந்தான். இரண்டு மணி நேரம் கழித்து, கண்ணாடி டம்ளருடன் முக்கால்பாகம் காலியான தேன்நிற திரவம் அடங்கிய பாட்டிலுக்குப் பக்கத்தில் இருந்த செல்போன் பலமுறை அழைத்து அழைத்து ஓய்ந்தது. பிறகு “”அம்மாவை அடுத்த வாரம் அனுப்பவும். வீட்டில் யாருமில்லை. அவசரமாக வெளியூர் போய்க்கொண்டேயிருக்கிறோம். கரூர் தாண்டிவிட்டோம்” என்று நாமக்கல் மகள் அனுப்பிய குறுஞ்செய்தி வந்து அதிர்ந்து விழுந்து திறக்கப்படாமலேயே கிடந்தது.

அந்நிமிடத்தின் மறுமுனையில் திருவண்ணாமலை கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த பேரன், தாத்தாவிடம் தான் வாங்கிப் படித்து சேகரித்து வைத்திருந்த புத்தகங்களை எடுத்துப்போவதற்காய், இன்ப அதிர்ச்சியாக இருக்கட்டும் என அம்மாவைப் பார்க்க யாருக்கும் தெரிவிக்காமல், நாமக்கல்லுக்கு கிளம்பிக்கொண்டிருந்தான்.

வெப்பம் தணிந்து மலைக்காற்று வீசத் தொடங்கியிருந்தது.

– இரமேஷ் கல்யாண் (செப்டம்பர் 2013)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *