“முந்தி நம்ப சாதிக்காரங்களை மத்தவங்க ஒதுக்கி வெச்சிருந்தாங்களாம். எங்கே, ஊரில. அப்போ, காந்திதான், `மனுசங்க யாரும் மட்டமில்ல, எல்லாரும் கடவுளோட குழந்தைங்கதான்’னு சொல்லி, நாம்ப செய்யற வேலையைக்கூட அவரு செஞ்சாராம். அவரு மகாத்மாடா. அதான் அவர் பேரை ஒனக்கு வெச்சேன்!”
தொட்டியிலிருந்த தண்ணியை மொண்டு குளித்துவிட்டு, இடுப்பில் துவாலையுடன் கண்ணாடிக்கு முன்னால் நின்று தன் உடல் வனப்பை ரசித்துக்கொண்டிருந்த காந்திக்கு தாத்தாவின் குரல் கேட்டது. தினமும் கேட்டதுதான். முகத்தைச் சுளித்தான்.
ஐந்து வயதாக இருந்தபோது, சஞ்சிக்கூலியான (JANJI – மலாய் மொழியில், சத்தியம். அதுவே, `காண்ட்ராக்ட்’ என்பதன் தமிழ்ச்சொல்லாக சஞ்சியென மறுவிற்று). தன் தந்தையின் கைவிரலைப் பற்றிக்கொண்டு `ஊரிலிருந்து’ அன்றைய மலாயாவுக்கு வந்த தாத்தா, தோட்டப்புற தமிழ்ப்பள்ளியில் `அஞ்சு கிளாஸ்’வரை படித்தவர். இளவட்டங்களைப்போல மலாய் மொழி கலக்காமல், சுத்தமான தமிழ் பேசுவார்.
`ஒங்கப்பன் ஒழுங்கில்ல. அதான் ஒங்கம்மா பெத்துப் போட்டுட்டுப் போனதும், ஒன்னய நானே வெச்சுக்கிட்டேன்!’ என்று அடிக்கடி சொல்வார். இதையெல்லாம்கூட `வயசான தோஷம்’ என்று அலட்சியப்படுத்தலாம். ஆனால், அவர் சொன்னதில் காந்தியால் தாங்கமுடியாதது, `நீயும் காந்திமாதிரி இருக்கணும்டா. பொய்யே பேசக்கூடாது’ என்பதுதான்.
பெயர் வைத்துவிட்டால் மட்டும் ஆயிற்றா? மேல்நாட்டில் படித்துப் பட்டம் பெற்ற காந்தி எங்கே, இந்தக் கேடுகெட்ட குப்பத்தில் வாழும் தான் எங்கே! `உயர உயரப் பறந்தாலும்’ என்ற் ஏதோ சொல்வாரே, தாத்தா! அந்தக் கதையாகத்தானே இருக்கிறது!
வலுக்கட்டாயமாக அந்த காந்தியை ஒதுக்கிவிட்டு, தன் முகபிம்பத்தில் கவனத்தைச் செலுத்தினான். ஓரிரு பருக்கள் இருந்த கன்னத்தில் எச்சிலைத் தடவினான்.
“காந்தி, டேய்!” தாத்தாவின் குரல் வாசலிலிருந்து கேட்டது.
அதைக் காதில் வாங்கிக்கொள்ளாமல், கண்ணாடியின் பின்னால் கைவிட்டுப் பார்த்துவிட்டு, திருப்தியுடன் தலையை ஆட்டிக்கொண்டான் காந்தி. `ரெண்டாயிரம் கொடுப்பாங்களாமே! கொஞ்சம் சேர்ந்ததும், மொதல் வேலையா தாத்தாவை ஊருக்கு அனுப்பி வைக்கணும். பளனி, மதுரை எல்லாம் போய், சந்தோசமா சாமி தரிசனம் பண்ணிட்டு நிதானமாத் திரும்பி வாங்கன்னு!’ அந்த நினைப்பிலேயே சுதந்திரம் வந்துவிட்டதுபோன்ற நிறைவு ஏற்பட்டது. `கறுப்புதான் எனக்குப் பிடிச்ச கலரு!’ என்று தானே எழுந்ததது பாட்டு.
தாத்தாவின் நினைவு தொடர்ந்தது. `கல்யாணம் கட்ட ஒருவாட்டி ஊருக்குப் போனேன். கப்பல்லே. அதோட சரி. வர்ற பத்தாவது மாசம் திரும்பிப் போலாம்னு இருக்கேன்!’ வருடம் தவறாமல் இதையே நம்பிக்கையோடு சொல்வார். `பத்தாவது மாசம்’ வந்துவிட்டால், `நாலாவது மாசம்’ என்று அதை மாற்றிக்கொள்வார், அலுக்காமல். ஆனால், ஒவ்வொரு தேர்தலின்போதும் ஓட்டுப் போடப்போகும் முதல் ஆள் அவராகத்தான் இருப்பார்.
புரியாது, அவன் ஒருமுறை கேட்டேவிட்டான். `ஊரு, ஊருங்கறீங்க! இங்க யாரு பதவிக்கு வந்தா என்ன, வராட்டி என்ன? எதுக்கு இப்படி ஓட்டுப்போடணும்னு ஓடறீங்க?’
வெகுண்டெழுந்தார் தாத்தா. `என்னடா அப்படிக் கேட்டுப்பிட்டே? நாம்ப இருக்கிற எடத்துக்கு உண்மையா இருக்க வேணாம்? இந்த மண்ணிலதான் பிள்ளைகுட்டி பெத்து, நாயா ஒளைச்சு அவங்களைக் காப்பாத்தி, இந்த வீட்டைக் கட்டிப்போட்டு..!’
“டேய் காந்தி!” குரல் சற்று அருகிலிருந்து மீண்டும் கேட்க, “என்ன தாத்தா?” என்று சலிப்புடன் குரல் கொடுத்தபடி, ஆறங்குலச் சீப்பை கையில் எடுத்துக்கொண்டான் காந்தி. பதினேழு நிமிடங்கள். தினசரிக் கணக்கு. அவனுடைய ஒவ்வொரு வயதுக்கும் ஒரு நிமிடம். தலை வாரி முடிய இன்னும் நான்கு நிமிடங்கள்.
“எனக்கு இந்த நேசனைக் கொஞ்சம் படிச்சுச் சொல்லுடா. கண்ணே தெரிய மாட்டுது!”
காந்தி பல்லைக் கடித்துக்கொண்டான். மலாய் பள்ளிக்கூடத்தில் படித்த தன்னை டியூஷன் வகுப்புக்கு அனுப்பியாவது தமிழ் கற்றுக்கொள்ள வைத்தது இதற்குத்தானா என்ற எரிச்சல் பிறந்தது. தமிழ் கற்ற நேரத்தில் கணக்கில் கவனம் செலுத்தியிருந்தால், பாசாகித் தொலைத்திருக்கலாம்.
`இன்னொரு வருசம் படியேண்டா!’ என்று தாத்தா வற்புறுத்தியபோது மறுத்துவிட்டான். அக்கம்பக்கத்தில் யார் எட்டாவதைத் தாண்டி இருக்கிறார்கள்?
“காந்தி..!”
`அன்னாடம் பேப்பர் படிக்காட்டி என்ன! தினமும் சண்டை, கொலை, கற்பழிப்பு, அவ்ளோதான்! போரிங்! பரிச்சை எளுதக்கூட நான் இவ்வளவு படிச்சதில்ல!’ தனக்குள் முணுமுணுத்துக்கொண்டான். இதையெல்லாம் தாத்தாவிடம் சொல்லித் தப்பிக்க முடியாது. அவர் பேசப் பிடித்துக்கொண்டால் அவ்வளவுதான்.
சில சமயம், அரைகுறை ஆடைகளில் கவர்ச்சிகரமாகப் போஸ் கொடுத்துக் கொண்டிருந்த நடிகைகளைப் பார்த்துவிட்டு, `சினிமா பக்கம் படிக்கட்டுமா, தாத்தா?’ என்று இவனே துணிந்து கேட்டாலும்,`இப்பல்லாம் என்னடா சினிமா? அந்தக் காலத்தில பாகவதர் பாடுவாரு, பாரு!’ என்றபடி, `கிஸ்னா, முகுந்தா,’ என்று பாடவும் ஆரம்பித்துவிடுவார். ஒரு வரி பாடுவதற்குள் இருமல் ஆரம்பித்துவிடும். பாட்டை நிறுத்திவிட்டுப் பேச்சைத் தொடர்வார்: `காந்தி! ஒன்கிட்டே சொல்லி இருக்கேனோ? நான் ஒன் வயசா இருக்கிறப்போ பாட்டு படிச்சபடி, மேடை நாடகத்திலே எல்லாம் நடிச்சிருக்கேன்!’
`ஒன் வயசா’ என்று அவர் ஆரம்பிக்கும்போதே, அடுத்து வரும் வார்த்தைகளை அவன் ஒலியில்லாமல், கூடவே உச்சரிப்பான். அந்த அளவுக்கு அவ்வார்த்தைகள் அவனுக்கு மனப்பாடம் ஆகியிருந்தன. முகத்தில் அலட்சியச் சிரிப்பு தெளிவாகத் தெரியும். நடிகர் என்றால் பணக்காரராக இருக்க வேண்டாமோ?
தெருமுனையில் அழுகைச்சத்தம்.
எந்த ஒழுங்குமுறையும் இல்லாது, அவரவர் அவசரத்துக்குக் கட்டிக்கொண்டிருந்த குடியிருப்பு ஆதலால், `குடிசை’ என்றும் சொல்ல முடியாமல், `வீடு’ என்றும் மனதாரச் சொல்ல முடியாது, நவக்கிரகங்கள்போல் வெவ்வேறு திசையை நோக்கியிருந்தன அந்த புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்டிருந்த உறைவிடங்கள்.
ஓரத்திலிருந்த சில வீடுகளை முதல்நாள்தான் டிராக்டர் வைத்து இடித்துத் தள்ளியிருந்தார்கள். எப்போதும் காணப்படும் ஆளுயர குப்பைமேடு, பலகைகளும், உலோகத் தகடுகளும் சேர, மேலும் உயர்ந்து இருந்தது. தெருநாய்கள் ஆரவாரமாக விளையாடிக்கொண்டும், சண்டை பிடித்துக்கொண்டும் இருந்தன.
வீட்டை இழந்து, தமது சொற்ப உடைமைகளுடன் பெண்கள் அழுதபடி நிற்க, அவர்களைப் பார்த்து சிறுகுழந்தைகளும் அழுதுகொண்டிருந்தனர். ஆண்கள் கண்ணில் நிராசை — இந்தமாதிரி சுதந்திரமான இடத்தில் இனிமேல் தங்கமுடியுமா என்ற விரக்தியில்.
`நானும் இப்படி ஒண்ணுமில்லாம நிக்கற நெலமை வரக்கூடாது!’
“காந்தி! இன்னுமா தலைசீவி முடியல? முடி எல்லாம் கொட்டிடப்போகுதுடா!” பலமுறை கேட்டிருந்த தாத்தாவின் நகைச்சுவையை ரசிக்க முடியாது, தரையில் கிடந்த பாய்மேல் ஏற்கெனவே எடுத்து வைத்திருந்த ஜீன்சையும், டி.ஷர்ட்டையும் அணிந்துகொண்டான்.
தீபாவளியை முன்னிட்டு, கோலாலம்பூர் `செமுவா ஹௌஸ்’ (SEMUA HOUSE — எல்லோருடைய வீடு) கட்டிடத்தின் பக்கத்தில் பிரத்தியேகமாகக் கடைகள் போடப்பட்டபோது, வெளியில் தொங்கிக் கொண்டிருந்த அந்தச் சட்டை எல்லாருடைய கவனத்தையும் ஈர்க்கத் தவறவில்லை. அதன் இரு பக்கங்களிலும் குறுந்தாடியுடன் ஒசாமா பின் லாடன் — ஈராக் போர் மூள காரணமாக இருந்தவர். நமட்டுச் சிரிப்புடன் பலரும் நகர, `இதைப் போட்டா, நம்பளையும் பாப்பாங்கல்ல!’ என்ற நப்பாசையுடன் அவன் வாங்கியது.
“டேய்! கூப்பிட்டுக்கிட்டே இருக்கேன்ல?”
“நான் வெளியே போகணும்!” என்று முணுமுணுப்பாகப் பதிலளித்தவன், ஒரே பாய்ச்சலில் வெளியே நடந்தான். அவசரத்தில், தாழ்வான கூரையின் அலுமினியத் தகடு நெற்றியில் இடித்தது.
அதனால் உண்டான வலியும், `பாத்துப் போயேண்டா!’ என்ற தாத்தாவின் கரிசனம் ஏற்படுத்திய ஆத்திரமும் அவன் பைக்கை உதைத்த விதத்தில் தெரிந்தது. அதற்கு அவன் அவசரம் புரியவில்லை. நிறைய உதை வாங்கியது.
`இது வேற! சனியனை `ஸம்பால’ (SAMPAH – குப்பை, மலாயில்) கடாசிட்டு, சீக்கிரம் புதுசு ஒண்ணு வாங்கணும். பளபளான்னு இருக்கும்!’ என்று சொல்லிக்கொண்டவனுக்கு, செல்வநாதனைப்போல் தானும் கார் வாங்கும் நாள் தூரத்தில் இல்லை என்ற எண்ணமே சற்று ஆறுதலைக் கொடுத்தது.
செல்வநாதன் — பதினான்கு வயதில், சிகரெட்டுப் பழக்கத்தை ஆரம்பித்து வைத்த குரு. `இதுக்கெல்லாம் பணமில்லியே!’ என்று இவன் தயங்கியபோது, `ஸ்கூலுக்குப் போக பஸ் எதுக்குடா ஒனக்கு? நடந்து போவியா! அந்தக் காசை நல்லா, ஜாலியா செலவழிக்கலாமில்ல?’ என்று ஞானம் வழங்கியவன். அவன் இன்று புதிய ப்ரோட்டான் வீரா காடி வைத்திருக்கிறான். கழுத்தில் கெட்டியான தங்கச் சங்கிலி. எட்டு பவுன் இருக்கும். ஒரு காதில் ரஜினி வளையம்.
“இன்னும் எத்தனை நாளைக்குத்தாண்டா காந்தி இந்த நாத்தம் பிடிச்ச கம்பதிலேயே (KAMPUNG — கிராமம்) இருப்பே? வீட்டுக்கு ஜன்னலுமில்ல, காத்துமில்ல. என்னிக்காவது ஒரு நாள் எல்லாத்தையும் இடிச்சுட்டுப் போயிடுவாங்க!” என்று செல்வநாதன் சில மாதங்களுக்குமுன், தற்செயலாகச் சந்திப்பதுபோல் சந்தித்து, ஆரம்பித்தபோது, “பதிலுக்கு அவங்க அபார்ட்மெண்ட் தர மாட்டாங்க?” என்று அப்பாவித்தனமாக வினவினான் காந்தி.
“பெரிய அபார்ட்மெண்ட்!” நண்பன் பழிப்புக் காட்டினான். “பத்தடுக்கு மாடி, தெரியுமா? புறாக்கூண்டு மாதிரி, ஒவ்வொண்ணிலேயும் நாலு வீடுங்க. ஒரே ரூம்புதான். லிஃப்ட் எப்பவுமே ரோஸா (ROSAK — பழுது) ஆகிடும். இப்ப மாதிரி, தண்ணிக்காசு, விளக்குக்காசு குடுக்காம இருக்கமுடியுமா? நீ லோரி கிளீனரா வாங்கற சம்பளம் அதுக்கே சரியாப் போயிடும்!”
`இவனுக்குத்தான் எவ்வளவு சமாசாரங்கள் தெரிந்திருக்கிறது!’ என்ற பிரமிப்பையும் மீறி, தாத்தாவைபோல் லோரி டிரைவராக ஆனாலும், தன் தரித்திரம் தொலையாது என்ற உண்மை புரிய, காந்தியின் முகம் தொங்கிப்போயிற்று.
அதை எதிர்பார்த்திருந்த நண்பன் வேப்பிலை அடித்தான். “நீ வர்றியா, சொல்லு. எங்க பெரிய மண்டகிட்ட கூட்டிட்டுப்போறேன். பியாசாவா (BIASA –வழக்கமாக), அவர் யாரையும் கண்டுக்க மாட்டாரு. ஆனா, `இப்பிடி, நம்ப பையன் ஒருத்தன் கஸ்டத்தில இருக்கான். நல்ல பையன், மண்ட. சொன்ன பேச்சு கேப்பான்’னு நான் எடுத்துச் சொன்னதுமே, `பாவம், கூட்டிட்டு வாடா. நம்பளோட சேத்துக்கலாம்’னு சொல்லிட்டாரு!”
“தமிழாளா?”
“அட,நீ ஒத்தன்! தமிழவங்க `விதி, விதி’ ன்னு பொலம்பிக்கிட்டு, கஸ்டத்திலேயே காலத்தைக் கடத்திடுவாங்க. இவரு சீனரு!”
யோசித்தபடியே வீடு திரும்பிய காந்தி, செல்வநாதன் குறுகிய காலத்திலேயே பெரிய பணக்காரன் ஆனதுபற்றி தாத்தாவிடம் வியப்புடன் தெரிவித்தான்.
“எனக்கென்னமோ, அவன் குறுக்கு வழியில போறான்னுதான் படுது!” என்ற தாத்தா, “எப்பவும் நம்பளைவிடக் கீள இருக்கிறவங்களைத்தான் பாக்கணும். அப்பத்தான் அந்த பத்துமலை முருகன் நம்பளை எவ்வளவு நல்லா வெச்சிருக்காருன்னு வெளங்கும்,” என்று தத்துவம் பேசினார்.
குண்டும் குழியுமாகப் பெயர்ந்த மண்தரையில் சிமெண்டு பூசி, சுவர் என்ற பெயரில் மரப்பலகைகள் வைத்த இடத்தில் காலம் தள்ளிவிட்டு, தான் ஏதோ பெரிய அதிர்ஷ்டசாலி என்பதுபோல் தாத்தா பேசியபோது, காந்திக்கு எரிச்சல்தான் எழுந்தது.
அவர்கள் வீட்டு வாசலில் நின்று பார்த்தால், உலகத்திலேயே உயரமான இரட்டைக் கோபுரங்கள் தெரியும். இன்னொரு பக்கம் செல்வம் கொழிக்கும் மலைநாட்டின் மிகப் பெரிய பேரங்காடியான `மெகா மால்’. இவையெல்லாம் எப்படி தாத்தா கண்ணில் மட்டும் படாமல் போயின?
`தாத்தா கனவிலேயே சந்தோசமாயிடறவரு!’ என்று முகத்தைச் சுழித்துக்கொண்டான். தானும் அவரைமாதிரி ஆகிவிடக்கூடாது என்று உறுதி எடுத்துக்கொண்டது அப்போதுதான்.
நடுராத்திரி. ஏதோ ரகளை. வழக்கமாக, அக்கபக்கத்தில் எவனாவது குடிகாரன் மனைவியை அடிப்பதுபோல் இல்லாமல், வித்தியாசமாக இருந்தது. காந்தி எழுந்து வந்தான்.
வீட்டுக்குள் போலீஸ்காரர்கள்! ஒருவர் கையில் அவன் கண்ணாடிக்குப்பின் ஒளித்து வைத்திருந்த பார்சல்!
“யாரிது?” காந்தியைக் காட்டிக் கேட்டார் ஒருவர்.
“என் பேரப்பிள்ளைதாங்க. சின்னப்பையன்! அவனுக்கு ஒண்ணும் தெரியாதுங்க”.
“இதில நிறைய டாடா (DADAH — போதைப்பொருள்) வெச்சிருக்கீங்க. எங்கேயிருந்து வந்திச்சு?”
“எனக்குத் தெரியாதுங்க, பாஸ். இல்லாட்டி, `யாராவது சாமான் ஏதாச்சும் ஒங்ககிட்ட குடுத்தாங்களா?’ன்னு நீங்க கேட்டப்போ, நானே இதைக் காட்டி இருப்பேங்களா?” தாத்தா கூறிக்கொண்டிருந்தார். “என் கூட்டாளியோட மகன் — அசலூர்க்காரன் — `கிளப்புக்குப் போறேன், மாமா. நாளைக்கு வெள்ளனே வந்து இதை எடுத்துக்கிட்டுப் போறேன்! அப்படின்னான். இதுக்குள்ளே என்ன இருக்குன்னு அவனும் சொல்லல. நானும் கேக்கல”.
“ரெண்டு கிலோ இருக்கும்! என்னமோ கதை அளக்கறீங்களே!”
“நம்பிக்கைத் துரோகம் செய்துட்டானுங்க, பாவி!” தாத்தாவின் குரலில் அழுகை. காந்தி இருந்த பக்கம் அவர் திரும்பவே இல்லை.
“தாத்தா..!” தயக்கத்துடன் அழைத்தான் பேரன். இப்படியெல்லாம் ஆகும் என்று செல்வநாதன் ஏன் எச்சரிக்கவில்லை? இப்போது என்ன செய்வது?
கண்டிப்பான குரலில், “ராங்கி பண்ணாதே, காந்தி. பெரியவங்க பேசறப்போ, குறுக்கே பேசக் கூடாதுன்னு ஒனக்கு எத்தனை வாட்டி சொல்லியிருக்கேன்?” என்றார் தாத்தா, அவன் பக்கம் திரும்பாமலேயே. அதிகாரிகளிடம், “என் பேரப்பிள்ளைங்க!” மீண்டும் சொன்னார். “பேருதான் காந்தி. வெளங்காத பய. படிப்பும் ஏறல,” என்றுவிட்டு, “நான் வெள்ளக்காரன் காலத்திலேயே அஞ்சு கிளாஸ் படிச்சவன்!” என்றும் தப்பாமல் சொன்னார்.
தாத்தாவின் தற்பெருமையைக்காதில் வாங்காது, “வயசான காலத்திலே நீங்க இப்படி ஒரு காரியம் செய்திருக்க வேண்டாம். ஒரு கிலோ டாடா வெச்சிருந்தாலே மரண தண்டனை. தெரியுமில்ல?” என்று மேலும் அதட்டினார் அதிகாரி.
மரண தண்டனையா! அதிர்ந்தான் காந்தி.
தாத்தா தொணதொணப்புதான். எப்படியும் சில வருடங்களில் சாகப்போகிறவரும்கூட. ஆனால், `தவறு’ என்று தெரிந்தே, பேராசை பிடித்துத் தான் செய்த காரியத்துக்காக சட்டம் அவரைத் தூக்கிலிடுவதைப் பார்த்துக்கொண்டிருந்தால், தான் என்ன மனிதனோடு சேர்த்தி?
`காந்தி பொய்யே சொல்ல மாட்டாராம். அதான் அவர் பேரை ஒனக்கு வெச்சேன். நீயும் அவர்மாதிரி..!’
தாத்தா மட்டும் இப்போது பொய் சொல்லலாமோ என்று குழந்தைத்தனமான கோபம்தான் முதலில் எழுந்தது காந்திக்கு.
சட்டென விளங்கியது அவனுக்கு. தன்னைக் காப்பாற்ற, மரண தண்டனைக்கும் துணிந்துவிட்டார்!
தான் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற தெளிவு வர அதிக நேரம் பிடிக்கவில்லை காந்திக்கு.
“ஸார்! தாத்தாவுக்கும், இந்தப் பார்சலுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல,” என்று திடமாக ஆரம்பித்தான்.
ஆழ்ந்த வருத்தத்தையும் மீறி, தாத்தாவின் முகத்தில் சிறு நகையின் ரேகை படர்ந்தது. பேரனுக்குக் காரணப்பெயரைத்தான் வைத்திருக்கிறோம் என்ற பெருமிதத்தின் வெளிப்பாடு அது.
(தமிழ் நேசன் பவுன் பரிசுப்போட்டியில் பரிசு பெற்றது, 2004)