கதையாசிரியர்:
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: January 18, 2014
பார்வையிட்டோர்: 25,691 
 
 

கதைக் காலம்: கி.பி. 1564

கதைக் களம் :அக்பரின் அரசில் போரின் பிறகு இணைக்கப்பட்ட ‘கோண்டுவானா’ சிற்றரசு. (தற்போதைய ஒரிஸ்ஸா-ம.பி. எல்லை)

நர்மதா நதியின் வடகரையை அடைந்ததும் கரையேறி அமர்ந்தாள் கன்வார். மூச்சு வாங்கியது. மார்புக் கச்சைக்குள் செருகியிருந்த கட்டாரியை உருவி எடுத்து அடர்ந்த மரங்களுக்கிடையே பரவிக்கிடந்த கற்களின் மீது போட்டுவிட்டு கைகளைப் பின்தாங்கலாக ஊன்றியவாறு ஒரு நிம்மதிப் பெருமூச்செறிந்தாள்.

ஈரத் துணியைப் பிழிந்து உடல் முழுவதும் துடைத்தாள். மஞ்சள் வெய்யிலில் மேலும் சிவந்து காணப்பட்டட அவள் முகம் கண்ணீர் பொங்கிப் பொங்கி வழிந்து கன்றிக் கிடந்ததைத் தெளிவாகக் காட்டியது.

திடுமென்று காதுகள் கூர்மையாயின.

குதிரைகளின் குளம்பொலிதான்! அதோ தூரத்தில் இரண்டு குதிரைகள்!
ஒற்றனைப் போன்ற எச்சரிக்கை உணர்வுடன். சட்டென்று நதிக் கரையை அடுத்திருந்த ஒற்றையடிப் பாதையைத் தாண்டி மூங்கில் புதர்களுக்குள் மறைந்து கொண்டாள்.

பாரசீகக் குதிரைகளில் காற்றினும் கடுகிப் போய்க் கொண்டிருந்தவர்கள் முகலாய மாமன்னன் அக்பரின் ஆட்கள்.

கழுகுகளிடமிருந்து தப்பிய கோழிக் குஞ்சு நரிகளைக் கண்டதும் வெடவெடத்தது.

மூச்சை மெதுவாக விட்டாள். மனம்தான் கனத்துப் போயிருந்தது.

பதினெட்டு வயதுப் பருவம் அவள் உடலெங்கும் ஓடிப் பரவியிருந்த போதிலும் உள்ளத்துக்குள் அந்தப் பருவத்துக்கே உரிய துள்ளல்கள் ஒடுங்கிப் போய் கவலையே மண்டிக் கிடந்தது. உதடுகள் மட்டும் “மால்சிங். மால்சிங்.’ என்று முணுமுணுத்தன.

பிறந்தது முதல் கணவன் மால்சிங் இறந்தது வரை வளர்ந்த ஊர் இப்போது இவளை விரட்டுகிறதா! இவள் செய்தது தவறா?

வீர மண்ணைக் கையில் அளைந்தாள்.

கோண்டுவானாவின் ராஜபுத்திரகுல ராணி துர்க்காவதி அக்பரின் பெரும் படைகளுடன் மோதி வரலாற்றில் நிலைத்துவிட்ட வீரக்களம் இதுதான். இரண்டு திங்கல் முன்னதாக அக்பரின் தளகர்த்தன் ஆசப்கானிடம் சிக்கி விடாமல் ராணி துர்க்காவதி கட்டாரியால் தன் நெஞ்சைப் பிளந்து கொண்டு இந்தக் கரையில்தான் வீர மரணம் எய்தியிருந்தான்.

கைகளில் அப்பிய ஈரமண் பிசுபிசுத்தது.

‘இந்த மண்ணில் நீ செய்தது எப்படித் தவறாகும்?’ என்று அவளைக் கேட்பது போலிருந்தது ஈரம்.

”மால்சிங்கின் மனைவி ரூப் கன்வார் ‘ஸதி’ (உடன்கட்டை)யிலிருந்து தப்பிவிட்டாளாம்”

நாலாதிசையும் பச்சாதாபத்தோடும் கோபாவேசத்தோடும் இச்செய்தி பரபரப்பாகப் பேசப்பட்ட நேரத்தில்தான் ஊரை அடுத்திருந்த நர்மதையின் எதிர்க்கரையில் நிலைத்த பார்வையோடு நிதானமாக ஈரத் துணிகளை பிழிந்து கொண்டிருந்தாள் கன்வார்.

நாற்புறமும் பார்த்து குளம்பொலிகள் சென்று தேய்ந்து மறைந்து விட்டதை நிச்சயித்துக் கொண்டு தன்னை யாரும் பின்தொடரவில்லை என்ற தைரியத்தோடு பிழிந்த துணியைத் தோளில் போட்டவாறு எழுந்தாள்.

தரையில் கிடந்த கட்டாரியை எடுத்து இடைக்கச்சில் செருகியபோது.

கன்வாரின் தோளில் விழுந்து அழுத்தியது ஒரு கரம்.

“யாரது?”

துள்ளித் திமிறிக் கட்டாரியை ஓங்கியவாறு திரும்பினாள்-

அழுத்தமாக வந்த கன்வார் கேள்விக்கு மெல்லிய சிரிப்பொலிதான் பதிலாகக் கிடைத்தது.

“கமலாவதீ!”

அடுத்துநடந்த நிகழ்ச்சி அவளை மூச்சிழக்கும் நிலைக்குக் கொண்டுபோனது.

ராம்மோகன் மூங்கில் புதர்களிலிருந்து வெளிப்பட்டான்.

கன்வாரின் கைகளை இறுகப் பற்றி இழுத்துக் கொண்டு ஒற்றையடிப் பாதைக்கு அப்பால் அடர்ந்த மரங்களிடையே இருந்த பாழ்மண்டபத்துக்குள் நுழைந்தாள் கமலாவதி. ராம்மோகனும் புன்னகையோடு பின்தொடர்ந்தான்.

நதிக்கரையை அடுத்து பரந்து விரிந்து கிடந்த மைதானத்;தை ஒட்டி அப்படி ஒரு மண்டபம் இருப்பது வெளியிலிருந்து பார்த்தால் தெரியாதுதான்.

நடுவில் இருந்த கல்மேடையில் அமரப் போனவளைத் தடுத்து சுற்றியிருந்த தடுப்புச் சுவருக்கு அருகில் நிறுத்திக் கொண்டாள் கமலாவதி.

இடிந்து கிடந்த வாயிலருகில் நின்றுகொண்டிருந்தான் ராம்மோகன்.

“இதுவும் ஒரு ‘ஸதி மாதா’ மண்டபம்தான் கன்வார்.”

கன்வாரின் வெறுப்பு மண்டிய விழிகளில் மண்டபம் பலிபீடமாகத் தெரிந்தது.

தோளில் கிடந்த மேலாடையை எடுத்து உதறி முதுகுப்புறமாக செய்து விட்டாள் கமலாவதி. கைகளை இறுகப் பற்றிக் கொண்ட கன்வார். அந்த இருளில் கண்கள் பழகியதும்தான் கமலாவதியின் ஆடை மாற்றத்தைக் கவனித்தாள்.

“இந்த ஆடையில் உன்னைப் பார்க்கும்போது சந்தோஷமா யிருக்குதடி’என்று கூறியவாறு அவளது பின்னல் ஆடையையும் வெண் முத்தாரத்தையும் தொட்டுத் தழுவி தாடையை அன்போடு ஏந்திக் கொண்டாள்.
நெடுநாட்களுக்குப் பிறகு கமலாவதியின் நெற்றியில் திலகம்!

கன்வாரின் கண்களில் நீர் முத்துச் சரம் கோத்து நின்றது.

கமலாவதியும் கண்கலங்க நின்றிருந்தாள்.

நன்றி ததும்பும் விழிகளால் ராம்மோகனை ஏறிட்டாள் கன்வார்.

போருக்கு முன்னால் அடுத்தடுத்த வீடுகளில் இருந்த கமலாவதி கன்வார். ரூப்மதி மூவரும் உயிர்த் தோழிகள்.

ராஜபுத்திரப் பெண்களிடையே ராணி துர்க்காவதியின் வீரத்துக்கு அடுத்தாற்போல இப்போது பேசப்படுவது இந்தத் தோழியர் மூவரும்தான்.

துர்க்காவதிக்குப் பிறகும் ஆசப்கானின் படைகளை நெருங்க விடாமலிருந்தது தலைநகர் சௌராகார்கோட்டை.

அதை வீழ்த்தி முன்னேற ஆணை பறந்தது அக்பரிடமிருந்து.

வீழ்ந்தது-கோட்டை மட்டுமல்ல கன்வார் ரூப்மதி போன்ற ராஜபுத்திர குல இளம் பெண்களின் வாழ்க்கையும்தான்.

பிளந்த மார்பிலிருந்து உடலின் பெரும்பகுதியில் ஓடிப் பெருகியிருந்த ரத்தச் சேற்றோடு மால்சிங்கின் உடல் வீடு வந்து சேர்ந்தபோது கன்வாரின் வீட்டில் பெருங்கூட்டம் கூடிவிட்டது.

வயது தகுதி வித்தியாசம் மறந்த அழுகை ஒலிகள்.

‘என்னைத் தனியா விட்டுட்டுப் போயிட்டீங்களே! என்னையும் உங்களோடயே கொண்டு போயிருக்கக் கூடாதா? ஐயோ…”

என்னென்னவோ சொல்லி அழுது கொண்டிருந்த கன்வார் இப்படிச் சொல்லி அழும்போது மட்டும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர் உறவினர் சிலர் ஒருவர் அர்த்தத்தோடு தலையாட்டினார். மற்றவர் ‘ஆமாமா’ என்றார்.

“நீ தப்பி வந்ததில் எனக்கு ரொம்பச் சந்தோஷம் கன்வார். ஆனால் ரூப்மதி போய்ச் சேர்ந்ததிலும் எனக்கு வருத்தமில்லை.

சுயநினைவுக்கு வந்த கன்வார் வெடித்துச் சீறினாள்.

“என்னடி வருத்தமில்லை? பாடி ஆடித் திரிந்த பச்சிளம் குழந்தையடி அவள்! உயிரோடு நெருப்பில் பொசுங்கும்போது என்னென்னவெல்லாம் சொல்லி எப்படியெல்லாம் கதறினாளோ!” சொல்லும்போதே கண்களில் குபுக்கென்று கண்ணீர் கொட்டியது.

“அதற்கில்லையடி. என்ன இருந்தாலும் அவள் இப்போது தெய்வமாகி விட்டாள் இல்லையா? நம்மோடு வம்பு பண்ணித் திரிந்தவளை இப்போது கும்பிடப் போகிறோம்! எல்லாம் வந்து வழிபாடு தொடங்கப் போகிறார்களாமே!”

“அவர்களையும் சாகச் சொல் அதற்கும் ஒரு கோயில் கட்டிக் கும்பிடு போ! வாழவேண்டிய வயதில் ஒரு பெண்ணை நெருப்பில் தள்ளிக் கொன்ற பாவிகளை எந்தத் தெய்வமும் மன்னிக்காது”

ஒரு வறண்ட புன்னகையுடன் அமைதியாகவே பதிலளித்தாள் கமலாவதி.

“உயிரோடிருந்தே உன்னைப்போல வெறுந்தரையில் தூங்கி ஒருவேளை உணவை உப்பில்லாமல் உண்டு வெளியில் தலைகாட்டாமல் நரகச் சிறையில் கிடப்பதை மட்டும் உன் தெய்வம் ஒத்துக்கொள்கிறதா கன்வார்?”

ஒன்றா! இரண்டா எட்டாண்டுகள்! மேலாடை அணிவதற்கு முன்பே திருமணம் செய்து கொடுக்கப்பட்ட கமலாவதி வெள்ளை நூலாடையோடு வீடு திரும்பியும் பட்ட கொடுமைகள்! விதவையாம்! துக்கிரியாம்! அண்ணனும் அப்பாவும் கூட அரக்கர்களாகிவிட்ட நிலைமையில் ராம்மோகனின் துணிச்சல்தான் கமலாவதியை வாழத் தூண்டியது.

படபடவென்று எங்கிருந்தோ வெளவால்கள் பறந்து போயின.

ராம்மோகன் அருகில் வந்தான். “சரி சரி… விவாதத்தில் இறங்க இதுவல்ல நேரம். எந்த நேரமும் நம்மை அவர்கள் கண்டுபிடித்துவிடலாம். விடிவதற்குள் நர்மதா நதி ஓட்டத்தோடு மாளவ நாட்டுக்குப் போய்விட வேண்டும். கன்வார். நீயும் எங்களோடு வந்துவிடு.”

இரவோடு இரவாகப் பெரிய பெரிய மூங்கில் கழிகளை வெட்டிக் குறுக்காகக் கட்டி மூன்று பேர் அமர்ந்து போகத் தக்க தெப்பத்தைத் தயார் செய்து விட்டான் ராம்மோகன்.

பின்னிரவு நேரத்தில் நொந்த மனத்தோடு மூங்கில் தெப்பத்;தை மூவரும் நதியில் இறக்கினார்கள்.

விடிவதற்குள்-பத்து நாழிகைப் பயணத்தில் -கோண்டுவானா எல்லையைத் தாண்டி மாளவம் வந்ததும் கரையேறிக் கொள்ளலாம். பசி வேறு வயிற்றைக் கிள்ளியது.

ராம்மோகனின் கையிலிருந்த மூங்கில் கழியைப் பிடிவாதமாக வாங்கிக் கொண்ட கன்வார் தெப்பம் செலுத்துவது போல் செலுத்திக் கொண்டு போனாள்.

ஒரு நாழிகை கடந்து இருக்குமோ! இருக்கலாம்.

அரைத் தூக்க நிலைக்கு வந்து விட்ட கமலாவதி வியாபாரக் குடும்பத்தில் பிறந்ததால் ‘ஸதியிலிருந்து தப்பித்து விட்டாள். ஆனால் ரூப்மதி போன்றவர்கள் ஏன் இந்தத் தற்கொலைக்குச் சம்மதிக்கிறார்கள்? போய்க் கொண்டிருக்கும் கணவன் உயிரை இவர்கள் விடும் உயிர் போய் சொர்க்கத்தில வரவேற்குமாம்! இதை உண்மையென்றும், அதுவே தமது மதக் கடமையென்றும் மனதார நம்பும் இளைஞர்களும்- ஏன் இளம்பெண்களும்கூட இருக்கத்தானே செய்கிறார்கள்! அதற்குக் கோயில் கட்டி வருமானம் பார்க்கும் கொலைகாரர்களை என்ன செய்வது?

நதி ஓட்டத்தோடு தெப்பம் போய்க் கொண்டிருந்தது.

இப்போதும் பிடிபட்டால் தன் கதி என்ன?

நினைக்கவே உடல் நடுங்கியது கன்வாருக்கு.

‘அது என்ன மினுக் மினுக்கென்று?’

நதிக்கரை ஓரத்துக் கோண்டுவானாப் பாதையில் தூரத்தில் மினுக்கிய தீவட்டி ஒளி இவளது நினைவோட்டத்தை ஒருமுகப்படுத்தியது. அருகில் வர வரக் குதிரைக் குளம்பொளி துல்லியமாகக் கேட்டது.

எழுந்து கவனித்த ராம் மோகன் கரையேறிப் பதுங்கி விடலாமென்றான்.

வருபவர்களின் குறி தானாகத்தானிருக்கும் என்பதை ஊகித்துக் கொண்ட கன்வார். ராம்மோகன் கூறியதைப் பிடிவாதமாக மறுத்து விட்டதோடு அவர்களிருவரையும் நதிக்குள் இறங்கி மூங்கில் தெப்பத்தின் எதிர் எதிர் முனைகளைப் பிடித்தவாறு சுவாசத்துக்காக முகத்தை மட்டும் அண்ணாந்து நீர்மட்டத்துடன் இருளில் மறைத்துக் கொண்டு நதி ஓட்டத்தோடு போகச் சொல்லி அவசரப்படுத்தினாள்.

தீவட்டிகள் நெருங்கி வந்தவுடன் திடுமென்று கன்வார் மட்டும் தெப்பத்திலிருந்து குதித்துக் கரையேறிப் புதர்களுக்கிடையே ஓட ஆரம்பித்ததும் ராம்மோகனுக்கு ஒன்றும் புரியவில்லை.

வந்த குதிரை வீரர் இருவரும் அந்த இருளில் ஆற்றில் போய்க் கொண்டிருக்கும் ‘வெறும்’ தெப்பத்தைப் பார்த்துவிட்டு குதிரையிலிருந்து குதித்துக் கன்வாரை விரட்டிக் கொண்டு போகும் போதுதான் புரிந்தது-அந்தப் பாவி கன்வார் இவர்களைத் தப்பு விப்பதற்காகவே தன்னை அடையாளம் காட்டி அவர்களைத் திசை திருப்பியிருக்கிறாள் என்று!

வந்தவர்கள் – கன்வாரின் மாமன் அமர்சிங்கின் ஆட்கள்!

சம்பிரதாயத்தை மீறிய கன்வாரை இனியும் விட்டு வைக்க மாட்டார்கள்!

கழி ஊன்றித் தள்ளாததால் ராம்மோகனும் கமலாவதியும் மேலேறி வருவதற்குள் வேகம் பிடித்து நடு ஆற்றுக்கு வந்திருந்து தெப்பம் சொட்டச் சொட்ட நனைந்த ஆடைகளோடு கமலாவதி கன்வார் சென்ற திசை நோக்கி அழுது அரற்ற மாளவத்தை நோக்கிப் பாய்ந்து கொண்டிருந்தது நதி.

பொல பொலவென்று விடியவும் கன்வாரை இழுத்துக் கொண்டு வந்தவர்கள் ஆற்றைக் கடந்து ஊருக்குள் நுழையவும் சரியாக இருந்தது.

கூட்டம் கூட்டமாக ஜனங்கள் போய்க் கொண்டிருந்தார்கள்.

‘தப்பிச் சென்ற கன்வாரை ‘ஸதி’ நடக்கும் நேரத்துக்குள் எப்படியும் பிடித்து வந்து விடுவார்கள்’ என்று பலரும் பேசிக் கொண்டார்கள்.

கோண்டுவானா அரண்மனைக் கோட்டை உள்வாயில் பெரிய மைதானம்.

அந்த நேரத்திற்குள் எங்கிருந்து தான் கூடியதோ-ஏராளமாய்க் கூட்டம் தூரத்துக் கருங்கல் மேடையில் குருமார்களின் மந்திர உச்சாடனம்.

நேற்று மாலை நடந்தது போக இன்று ஸதி நடக்க உள்ள பதினெட்டுப் பெண்களின் கூட்டம் கல்மேடையின் அருகில் ஒரு கும்பலாக நின்றது-குழந்தை முகங்கள்.

கற்பூர மூட்டைகளோடு குடம் குடமாக நெய் சந்தனம் முதலிய ஆகுதிகள் பெய்து பெய்து இரண்டு நாட்களாக நடந்து கொண்டிருந்த அக்கினி ஹோம சடங்குகளில் அந்தப் பிராந்தியமே புகை மண்டிக் கிடந்தது.

நேரம் ஆக ஆக மந்திர உச்சாடனங்களில் குரூரம் ஏறிக் கொண்டிருந்தது.

சம்பிரதாய முரசுகள் தாரைகள் எக்காளங்களை வாசிப்போர் தருணமறிந்து தனித்தனி வாசிப்புகளில் கவனமாயிருந்தனர்.

கருங்கல் மேடையிலிருந்து இறுகக் கட்டிய மஞ்சள் முண்டாசு மஞ்சள் அங்கியோடு நரைத்துத் தொங்கிய தாடியை மெதுவாகத் தடவிக் கொண்டே எழுந்த குருநாதரின் வலது கை உயர்ந்ததுடன் மந்திர உச்சாடனங்களும் பெண்களின் விசும்பலும்கூடச் சட்டென்று நின்றன.

“இறந்த வீரர்களின் இளம் மனைவியர் அனைவரும் வந்து விட்டனரா?”

கை உயர்த்திக் கேட்ட குருநாதரின் புள்ளி விவரக் கேள்விக்கு யாரோ ஒருவன் பதில் கூறினான்.

“ரூப் கன்வார் மட்டும் வரவில்லை.” ஏராளமான கண்கள் கேள்விக் குறியுடன் அவனை ஏறிட்டன. அவன் மீண்டும் சொன்னான்.

“அவள் ‘ஸதி’ நடப்பதை எதிர்க்கிறாளாம்.”

பத்துப் பதினைந்து வாள்கள் உறையிலிருந்து வெளிப்பட்ட வேகம் நடுங்கிக் கொண்டிருந்த பெண்களின் பீதியை அதிகப்படுத்தியது.

அதே நேரம் கூட்டத்தில் பின்பகுதியில் ஏற்பட்ட சலசலப்பு கல்மேடை குருமார்களின் கவனத்தை ஈர்த்தது.

குருநாதரை நோக்கி ஓடோடி வந்த அமர்சிங் மூச்சு வாங்கக் கூறினான்.

“கன்வார் வந்து விட்டாள் ரூப் கன்வார் வந்துவிட்டாள்!”

நெற்றியில் ரத்தம் வழிய வீரர்கள் சூழ கட்டாரியுடன் வந்து கொண்டிருந்த கன்வாரைப் பார்த்துக் குருநாதரின் முகத்தில் ஏளனம் இழையோடியது.

மூச்சு வாங்க நின்று கொண்டிருந்த அமர்சிங்கின் முகத்தில் வெற்றிப் புன்னகை.

மந்திரப் புகையையும் வாசனைப் பூக்களையும் கணவன் மால்சிங்கின் வீர மார்பு பிளந்துகிடக்கும் சடலத்தையும் மாறிமாறிப் பார்த்தவாறு கன்வார் தாடைகள் இறுக நின்று கொண்டிருந்தாள்.

அவள் கையிலிருந்த கட்டாரியை அமர்சிங் பிடுங்கி கொண்டதும்தான் தன் நிலையை முற்றுமாகத் தெரிந்து தலை நிமிரிந்தவள் அழுத்தம் திருத்தமாகச் சொன்னாள்! “நான் ‘ஸதி’ நிகழ்வதை விரும்பவில்லை.”

அமர்சிங் உறுமினான். “அப்படியானால் நேற்று நீ என் மகன் உடல்மீது விழுந்து புரண்டு அழும்போது ‘என்னையும் கொண்டு போயிருக்கக் கூடாதா’ என்று சொல்லிச் சொல்லி ஏன் அழுதாய்? நீ என் மகனின் வீரத்தை அவமதித்து விட்டாய் கன்வார்! ஏற்பாடாகிவிட்ட இந்த ‘ஸதி’க்கு நீ உடன்படாவிட்டால் என்ன நிகழும் தெரியுமா?” மால்சிங்கின் உடல்மீது மந்திர நீர் தெளிக்கப்பட்டு அருகில் விறகுகள் அடுக்கப்பட்டன.

‘ஸதி’ பெண்களைச் சூழ விறகு மலைகள் வளர்ந்து கொண்டிருந்தன.

கூட்டத்திற்கு வெகு தூரத்தில் புழுதிப் படலத்தினிடையே ஒரு புரவி மின்னல் வேகத்தில் வந்து கொண்டிருந்தது.

அதன்மீது ரௌத்திரம் கொப்பளிக்கும் முகத்தோடு ராம்மோகன்!

ஒரு முடிவுக்கு வந்தவள் குருநாதரின் கண்களை நேருக்கு நேர் பார்த்துக் கூறினாள் கன்வார்:

“ராணி துர்க்காவதியின் பணிப்பெண் நான் அவளைப் போலவே போர்க்களத்தில்தான் சாக விரும்புகிறேன்.”

மென்மையாகச் சிரித்தார் குருநாதர்.

“ராணி துர்க்காவதி நாட்டுக் காவலுக்காக விதிவிலக்குப் பெற்றவள். இதோ! நாட்டுக் காவலுக்காக உயிரைக் கொடுத்திருக்கும் உன் கணவனுக்காக நீ உன் உயிரைத் தருவதுதானே நம் குலப்பெண்களின் வழக்கம்!”

“என் கணவன்மீது பாசம் இருப்பதால்தான் நான் இப்போது சாக விரும்பவில்லை. போர்க்களத்தில் என் கணவன் விட்ட பணியை நான் தொடர வேண்டும்.”

“காலகாலமாய் நடந்து வரும் சம்பிரதாயங்களை நீ நிந்திக்கிறாய் கன்வார்!”

அத்துடன் தலையை அசைத்தவாறு நிதானமாகத் திரும்பி மேடையேறினார். அவ்வளவுதான்-

எக்காளங்கள் ஏக காலத்தில் முழங்கின. மங்கள மேளங்கள் சாவுப் பாறையாகப் பேரொலி எழுப்பின.

சிதைகளில் நெய்க்குடங்கள் கவிழ்ந்து தீப்பந்தங்கள் விழுந்தன.
அதே நேரம் வேகவேகமாய் வந்து நின்ற குதிரையிலிருந்து குதித்துக் கூட்டத்தை நோக்கிப் பாய்ந்து வந்தான் ராம்மோகன்.

குப்பென்று எழுந்த பெரும் புகையிடையே அமர்சிங் இடம் பெயர்ந்தான்.

மால்சிங் உடல்மீது வந்து விழுந்த கன்வார் மயங்கிச் சரிந்தாள். அடுத்த கணமே நெய்யும் தீயும் அடுத்தடுத்து அவளைத் தழுவின. நெருப்புச் சூடு பட்டுத் திமிறிக் கொண்டு எழுந்தவளை மேலே மேலே வந்து விழுந்த விறகுக் கட்டைகளும் நெய்க்குடங்களும் எழமுடியாமல் செய்து விட்டன.

பதறிக் கொண்டு வந்த ராம்மோகன் வீரர்களின் வாள்முனையை லட்சியம் செய்யாமல் சிதைகளை நெருங்கித் தேடிக் கொண்டிருக்கும் போதே –

திடுமென்று சூழ்ந்தெழுந்த பேரோசையில் வானம் கிடுகிடுத்தது.

குருமார்களைத் தொடர்ந்து தூரத்தில் நின்ற கூட்டமும் பெருங் குரலில் “சதி மாதாகீ ஜெய்” என்று எழுப்பிய பெருங்கூச்சலில் கன்வார்களின் மரண ஓலம் வெளியில் கேட்கவேயில்லை.

– குமுதம் 10-03-1988 இதழில் “நா.முத்து பாஸ்கரன்” என்று இருக்கும்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *