பேருந்திலிருந்து நான் இறங்கியபோதே டீ கடைக்காரர் பார்த்து விட்டார்.
”வாங்க தம்பி…டீ குடிச்சிட்டு போங்க..”என்றார்.
இதைக் கேட்டதும் மகிழ்ந்தேன்.
குறுக்காய் கிடந்த பலகையில் அமர்ந்தேன்.
முண்டா பனியனுடன் அமர்ந்திருந்த ராமசாமி.”அட இது யாரு…நம்ப கோவாலு மகன் தானே நீ?”என்றார்.
”ஆமா..”
”எப்படி இருக்கே..பட்டணத்துல படக் கம்பெனியில வேல செய்யறதா சொன்னாங்க..அந்த செல்வராசு தானே..’
”ஆமா..இப்ப நான் என் பெயரை சிட்டி ராஜான்னு மாத்திட்டேன்..”
”பெயரை மாத்திட்டியா…செல்வராசுங்கறது எவ்வளவு நல்ல பேரு..ஆமாம் நம்ம நமீதா எப்படியிருக்கு…?”
முண்டா ராமசாமியின் கேள்வியில் அதிர்ந்தேன்.
நான் ஒன்றும் பதில் சொல்லவில்லை.
”பேப்பர்ல்ல படிச்சேன்..மானாட மயிலாடல்ல இப்ப வர்றது இல்ல..இவளுகளுக்கெல்லாம் என்ன இருக்குன்னு ரொம்ப தூக்கி விடறீங்க..எங்க காலத்துல இருந்த சில்க் ஸ்மிதா பார்த்திருக்கியா..? நம்ப கமல் தம்பி கூட மூணாம் பிறை படத்துல ஒரு ஆட்டம் போடும்..அது ஆட்டம்..” தனது சினிமா அறிவை காட்டி விட்டு எழுந்த முண்டா ராமசாமி டீக்கு காசை கடைக்காரர் கையில் திணித்து விட்டு கிளம்பினார்.
டீ கடைக்காரர்”தம்பி வடை சூடா இருக்கு..சாப்பிடறீங்களா?”என்று கேட்க-
”வேண்டாம்..டீ மட்டும் போதும்”என்றேன்.
”இருங்க தூள் மாத்தி அடிச்சு தர்றேன்..”
அவர் டீ தூளை மாற்றிக் கொண்டே”இப்ப என்ன படம் எடுக்கறீங்க ..?”கண்களில் ஆர்வம் மின்ன கேட்டார்.
”நான் இருக்கறது சீரியல் எடுக்கற கம்பெனியில…”
“சீரியல்ன்னா தினமும் டீ.வி.பொட்டியில போடுறாங்களே..அதுவா..?”
”ம்..அதான்..”
பட்டணத்துல பொழுதன்னைக்கும் டீ.வி.பொட்டி முன்னால உட்கார்ந்திருப்பாங்க..அது இங்கேயும் வந்துட்டு..”
தேநீரை அழகாய் ஒரு ஆத்து ஆத்தி முகத்துக்கு முன்னால் நீட்டினார்.
தேநீரை உரிஞ்சிக் குடித்தேன்.
”நீங்க என்னென்ன பண்ணுறீங்க…?”
“”புரொடக்ஷன் அசிஸ்டெண்ட்..அவ்வளவுதான்..”
”புரொடக்ஷன் அஜிஸ்டெண்டா..?”
”தயாரிப்பில் உதவின்னு அர்த்தம்..”
”உதவின்னா..?”
”இப்படி டீ ஆத்தி கொடுப்பது..” என்று சொன்னால் அட அதுக்குதான் அவ்வளவு கெத்தா கிளம்பினியா?” என்று கேட்டு விட்டால்.
”தம்பி ..அந்த வேலை எப்படித்தான் இருக்கும்..?”
அவர் கேட்டதும் நடந்த நிகழ்ச்சி ஒன்று என் மனதில் திரைப்படமாய் ஒடிற்று.
நாயகியாக நடிக்க வந்த பெண்ணை படபிடிப்பிற்காக அழைத்து வரப் போனேன்.
”காலையில் சரியா ஆறு மணிக்கு எல்லாம் ஸ்பாட்ல இருக்கணும்”என்று சொல்லியிருந்தார் இயக்குனர்.
விடியற்காலையில் மூன்று மணிக்கே எழுந்து டிரைவரை கிளப்பிக் கொண்டு புறப்பட்டேன்.
டிரைவர் ”நம்ம டைரக்டரோட காரு நிக்குது பாருங்க..”என்றார்.
”எங்கே..?”
”நடிகை வீட்டுக்குப் பக்கத்துல…” டிரைவர் சிரித்துக் கொண்டே சொன்னார்.
நான் காரிலிருந்து இறங்கினேன்.
நிசப்தமாய் இருந்த தெருவில் நடந்து வீட்டின் அழைப்பு மணியை அழுத்தினேன்.
நடிகையின் வீட்டுக் கதவு திறந்தது.
நடிகை,தலையெல்லாம் கலைந்த நிலையில் நைட்டியில் இருந்தார்.
”என்ன?”
”நீங்க இன்னும் ரெடியாகலையா..ஆறு மணிக்கே டைரக்டர் ஷாட் வைக்கணும்ன்னார்..”நான் சொல்ல நடிகையின் முகத்தில் கேலிச் சிரிப்பு.
”ஷாட்டா…இன்னைக்கு படபிடிப்பு இல்ல..எல்லாத்தையும் நாளைக்கு மாத்திட்டார் “”
வீட்டினும் இருந்து அரை டிராயரில் வந்த இயக்குனர் என்னைப் பார்த்து கடுகடுத்தார்.
”உன்னை யாரு இங்கே வரச் சொன்னது…புரொடக்ஷன் மேனேஜர் கிட்ட ராத்திரியே சொல்லிட்டேனே..””
”அது எனக்கு தெரியாது சார்..”
”தெரியாதுன்னு காலையில் கிளப்பிக் கிட்டு வந்துட்டியா..போ..புரொடக்ஷன் மேனேஜர் கிட்டப் போய் பாரு..”
நொந்துக் கொண்டே திரும்பினேன்.
தயாரிப்பு மேலாளர் இன்னும் ராத்திரி வாசனை தெரியாத நாற்றத்துடன் கத்தினார்.
”என்ன அவசரம் உனக்கு..காலையில நான் வர்றதுக்குள்ளே கிளம்பி போயிட்டே”
”நீங்க தானே சார் சொன்னீங்க ..ஹீரோயின் உன் பொறுப்பு சரியா ஆறு மணிக்கு ஸ்பாட்ல இருக்கணும்ன்னு சொன்னீங்க.”
“எப்ப சொன்னேன்..?”
”ராத்திரி பத்து மணிக்கு ”
”பன்னிரெண்டு மணிக்கு வேற மாதிரி ஷாட் மாத்திட்டாரு..போய்யா போ.நான் சொல்லாம கிளம்பிடாதே..”
அவர் பின்னால் சொன்ன வார்த்தைகள் என்னை அதிகமாகவே காயப் படுத்தி விட்டன.
அன்று இரவு பஸ் ஏறியவன் தான்.
”என்ன தம்பி..டீ ஆறதுக்குள்ளே குடியுங்க..அப்படி என்ன தம்பி யோசனை..நம்ம கிராமத்துல படம் புடிச்சா என் கடையில பசங்க டீ குடிக்கறா மாதிரி சீன் வையுங்க..”
அதைக் கேட்டதும் எனக்கு சிரிப்புதான் வந்தது.
தேநீரை குடித்து விட்டு நினைவை கலைந்து டீ க்கு காசை தந்து விட்டு வீட்டை நோக்கி நடந்தேன்.
வழியில் நண்பர்கள் எல்லோரும் சூழ்ந்து கொண்டார்கள்.
”எப்படி இருக்கே..தலை,தளபதி எல்லாம் பார்த்தியா..அண்ணி எப்படி இருக்கு..”
”அண்ணியா..?”
”அதான் ஷாலிணி..”
”உனக்கு என்னடா..யோகக்காரன்…தினமும் நடிகர்,நடிகைகள்ப் பார்ப்பே?”
சினிமாவுக்குப் போனால் தினமும் நடிகர் நடிகைகள் வந்து எல்லாரையும் சந்தித்து கொண்டே இருப்பார்கள் என்று நினைத்து உள்ளார்களே?
தயாரிப்பு உதவியாளர் என்று கால் பதித்த குற்றத்திற்காக புழுக்கடிப் படுவது எனக்குதான் தெரியும்.
ஊரிலேயே இருந்து விவசாயத்தைப் பார்த்து கொள்ள வேண்டியதுதான்.என் முடிவு அம்மாவிற்கு நிச்சயம் சந்தோஷத்தை தரும்.
என்னைப் பார்த்ததும் பரவசப் பட்டாள்.
”இரும்மா குளிச்சுட்டு வர்றேன்..”
நான் வந்ததில் அவருக்கு பெரும் மகிழ்ச்சி.
”சீக்கிரம் வா .கறிக்கொழும்பு வைக்கிறேன்..”
ஆற்றில் குளித்து விட்டு திரும்பிய போது வீடே மணமணத்தது.
சூடான சோற்றில் குழம்பை ஊற்றிக் கொண்டே சொன்னாள்.
”தம்பி என்னையும் பட்டணத்துக்கு அழைச்சிட்டுப் போயிடு..”
”என்ன ஆத்தா சொல்றே..?”
“எத்தனை நாளுக்குதான் இந்த மண்ணுல போராடறது..? அதான் உன் கூடவே வந்துடலாம்ன்னு” பேசிக் கொண்டே போனாள்
எனக்கு தலைச் சுற்றியது.
பட்டணத்தைப் பற்றிய பிரமிப்பும் எதிர்ப்பார்ப்பும் மற்றவர்களைப் போல் என் ஆத்தாக்காரியையும் ஆழமாகப் பற்றியிருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டேன்.
முகத்தில் முதிர்ச்சியின் மீதான் ரேகைகள்..சிறுவனாய் இருந்த நாளில் அம்மாவுடன் கழணிக்குப் போனது ஞாபகம் வந்தது.
கூடவே நான் பட்டணத்தில் மூன்று மாதமாய் அறைக்கு வாடகை கொடுக்காதது ஞாபகம் வந்தது.
உடனே கிளம்பி விட்டேன்.
”என்ன ராசா உடனே கிளம்பிட்டே..”
”உன்னைப் பார்க்கணும்ன்னு தோணுச்சு வந்தேன்..”
கனமான மனதுடன் கிளம்பினேன்.
நான் பேருந்தில் ஏறி உட்கார ஜன்னல் அருகிலேயே நின்று இருந்திருந்தாள்.
பேருந்து கிளம்பியதும் கூடவே ஓடி வந்தவள் எக்கி என் கையில் திணித்தாள்.
பேருந்து வேகம் எடுக்க கையைப் பிரித்தேன்.
மடித்து மடித்து வைக்கப் பட்டிருந்த இரண்டு நூறு ரூபாய்த் தாள்கள்.
– வாரந்தரி ராணியில் வெளி வந்த சிறுகதை…இதன் கிளைமாக்ஸ் காட்சி ஒரு இயக்குனரால் சுடப்பட்டு படத்தில் கையாளப் பட்டது.