கனவுகளைத் துரத்தியவன்

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: அறிவியல்  
கதைப்பதிவு: August 7, 2012
பார்வையிட்டோர்: 15,710 
 
 

சற்றே பெரிய சிறுகதை

குமாரராஜாவின் அப்பா, நள்ளிரவு இரண்டு மணிக்கு என்னை எழுப்பி போனில் பேசியபோதுதான், அவர் சொல்ல வந்த விஷயத்தின் தீவிரம் எனக்குப் புரிந்தது.

‘‘சத்யா! ராஜா உன்னிடம் பேசியிருப்பான்னு நினைக்கிறேன். அவன் மறுபடியும் கனவு கினவுன்னு ஆரம்பிக்காம பார்த்துக்கோ. நாலஞ்சு நாளா அவன்கிட்டே பேச முயற்சி பண்றேன்… எந்த ரெஸ்பான்சும் இல்லை. எங்கே இருக்கான்னே தெரியலை. எதற்கும் ஒரு எட்டு பிட்ஸ்பர்க் போய் ராஜாவைப் பார்த்துட்டு வந்துடேன்!’’

‘‘ஓ.கே. சார்!’’ என்று போனை வைத்துவிட்டுக் கண்களைத் தேய்த்துக்கொண்டேன். தூக்கம் கலைந்து, லேசாக வியர்க்கத் தொடங்கியது.

குமாரராஜாவைப் பார்த்து ஏறக்குறைய ஒரு வருடம் ஆகிவிட்டது. நான் பிட்ஸ்பர்க்கில், பார்க்கர் சிஸ்டம்ஸ் நிறுவனத்தில் வேலை செய்தபோது, இருவரும் ஒரே அறையில் தங்கினோம். ஆறு மாத கான்ட்ராக்ட் முடிந்து, நான் சிகாகோ வந்துவிட்டேன். அவன் பார்க்கர் சிஸ்டத்திலேயே ஒட்டிக்கொண்டான்.

சிகாகோவிலிருந்து பிட்ஸ்பர்க் என்ன, பெசன்ட் நகரிலிருந்து பல்லாவரம் செல்லும் தூரத்திலா இருக்கிறது… ஒரு எட்டு போய்ப் பார்த்துவிட்டு வர? 470 மைல்கள்!

இருந்தாலும், நான் பிட்ஸ்பர்க் செல்ல முடிவு செய்துவிட்டேன். காரணம், ஐந்து தினங்களுக்கு முன்பாக எனக்கு குமாரராஜா அனுப்பியிருந்த இமெயில்…

‘சத்யா,

நாம் உடனே பேச வேண்டும். இத்தனை நாட்களாக நான் எதிர் பார்த்த கனவை, நேற்று இரவு கண்டேன். அந்த ஸ்வப்ன சுந்தரியின் பெயரையும் கண்டுபிடித்துவிட் டேன். ஆச்சர்யமாக இருக்கிறதா? உடனே பேசு!  குமாரராஜா.’

எனக்கு ஆச்சர்யமாக இல்லை. அதிர்ச்சியாக இருந்தது!

கனவு கண்டானா? தூங்கினால்தானே கனவு காண முடியும்? ஒரு கனவு கண்டதற்கே, ஏறக்குறைய நான்கு வருடங்களாக அலைந்து கொண்டு இருக்கிறான். மறுபடியும் கனவா? ஸ்வப்ன சுந்தரியின் பெயரை வேறு கண்டுபிடித்துவிட்டதாக எழுதி யிருக்கிறானே!

அவன் வேலை பார்க்கும் பார்க்கர் சிஸ்டம்ஸ் அலுவலகத்துக்கு போன் பண்ணினேன். இந்த வாரம் முழுவதும் அவன் அலுவலகமே வரவில்லை என்றார்கள். வீட்டுக்குப் போன் பண்ணினேன். பானாசோனிக் ஆன்சரிங் மங்கை, ‘ஸாரி…’ என்று அலுக்காமல் பேசத் தொடங்கி னாள். அவனுக்கு அனுப்பியிருந்த நான்கு இ&மெயில்களுக்கும் பதில் இல்லை. சின்சினாட்டி நகரில் உள்ள பார்த்தசாரதியிடம் விசாரிக்கலாம் என்றால், அவனும் இந்தியா சென்றுவிட்டான். அலுவலக வேலை களில் மூழ்கி, இரண்டு நாட்களாக குமாரராஜாவை மறந்தேபோயிருந்த சமயத்தில்தான், சென்னையிலிருந்து அவன் அப்பாவின் போன்!

விடிந்ததும், பிட்ஸ்பர்க் புறப்பட் டேன். நான் அங்கே போய் குமாரராஜாவைச் சந்திப்பதற்குள்… அவன் எனக்கு முன்பு எழுதிய ஒரு நீண்ட கடிதத்தை இங்கே தருகிறேன். படித்துக் கொண்டு இருங்கள். பிட்ஸ்பர்க்கில் சந்திப்போம்.

குமாரராஜாவின் கடிதம்…

‘நானும் கனவு காண்கிறேன், எல்லோரையும் போல! குதிரை, தேவதை, சிம்ரன், ஹனுமான், ரயில், எதிர் வீட்டு ரேணுகா… இப்படி ஏதாவது ஒரு கனவு தினமும் வந்துகொண்டுதான் இருந்தது.

2002ம் ஆண்டு, செப்டம்பர் மாதத்திலிருந்துதான் எல்லாமே தலைகீழாக மாறத் தொடங்கியது. பலப் பல கனவுகள் வருவதில்லை. ஒரே ஒரு கனவு. தினமும் காலையில் சுமார் 5.45 மணிக்கு… தொடர்ந்து ஒரு வருடமாக, நான்ஸ்டாப் ஷோ!

தினமும் வரும் அந்தக் கனவு, இன்னும் முழுமை அடையாத கன்னிக் கனவு. அதிகாலைக் கனவு பலிக்கும் என்பார்கள். எனவே, அந்தக் கனவு என்னைத் தீவிரமாக ஆக்கிரமிக்கத் தொடங்கியது. அப்படி என்ன கனவு அது?

மாலை நேரத்தில் நான் ஒரு பூங்காவில் அமர்ந்திருக்கிறேன். அங்கே என்னைத் தவிர, வேறு மனித நடமாட்டமே இல்லை. பூங்கா முழுக்கப் பசுமை போர்த்திய செடிகளை, வாசனை மலர்கள் பல வண்ணங்களில் ஆக்கிர மித்திருக்க, மேற்கே சூரியன் முக்கால் வாசி மறைந்துவிட்டிருந்தது. மஞ்சளும் சிவப்பும் தூவப்பட்ட வானம். கிழக்கே திரும்பிப் பார்க்கிறேன். அதுவும் சிவப்பாக இருக்கிறது. வானம் விடியலுக்குத் தயாராவது போன்ற சிவப்பு. குழப்பத்துடன் மீண்டும் மேற்கே பார்க்கிறேன். சூரியனின் மேல் விளிம்பு மறைய எத்தனித்துக் கொண்டு இருக்கிறது.

அந்த அதிசயத்தை நான் ஆர்வத்துடன் தரிசித்துக்கொண்டு இருக்கும்போது, நாஸ்ட்ரடாமஸ் ஞாபகம் வருகிறது. பின்னால் நிகழப் போவதையெல்லாம் பல நூறு ஆண்டு களுக்கு முன்பே சொல்லிப்போன தீர்க்கதரிசியல்லவா அவர்! ‘ஒரு செப்டம்பர் மாதம், வானில் இரண்டு சூரியன்கள் தெரியும்’ என்று அவர் எழுதியிருந்ததாக ஞாபகம்.

ஆஹா… இன்றுதான் அது நடக்கப்போகிறதா!

எண்ணங்கள் வேகமாகச் சுழலத் தொடங்க, என்னைக் கடந்து சென்ற அந்தப் பெரியவரைக் கவனிக்கிறேன். லேசாகக் கூன் விழுந்து, கையில் தடியுடன் மெதுவாக நடந்துகொண்டு இருக்கிறார். நீண்ட தாடி. தூய வெண்ணிற ஆடை உடலை முழுக்க மறைத்துத் தரையில் தவழ்கிறது. அவரை இதற்கு முன் எங்கோ பார்த்த ஞாபகம்.

அடடே! வேறெங்கும் இல்லை, நேற்றைய கனவிலும் இவர் வந்தார். ஸோசபிரபா ஸாகரர் என்று வாயில் நுழையாத ஏதோ ஒரு பெயர் சொன்னார். யோசித்துக் கொண்டு இருக்கும்போதே, அந்தப் பெரியவர் நடப்பதை நிறுத்திவிட்டுத் திரும்பி என்னைப் பார்த்துப் புன்னகைக் கிறார். நான் என் இருக்கையை விட்டு எழுந்து, அவரை வணங்க… ‘இன்றாவது நீ நேரத்துக்கு வந்திருக்கலாம்… நான் உனக்காக இரவு முழுக்கக் காத்திருந்தேன். சரி, வா! அவகாசம் இல்லை. சூரியன் மறைவதற்குள்… இல்லை, விடிவதற்குள் உனக்கு விஷயத்தைச் சொல்லிவிடுகிறேன்’ என்று என்னை அழைக்கிறார்.

அவரது கட்டளைக்குக் கட்டுப்பட்டு, ஒரு பிரிய ஆட்டுக்குட்டி போல் அவரை நோக்கி ஓடுகிறேன். அவரது கண்கள் என்னை ஊடுருவ, எனக்குள் ஏதோ மின்சாரம் பாய்வது போன்ற உணர்வு. அவர் மேற்கு கிழக்கு திசைகளை மாறி மாறிப் பார்த்துக்கொண்டே, என்னிடம் வேக வேகமாகப் பேசுகிறார். ஏறக்குறைய இருபது நிமிடங்கள்… அவர் சொன்ன ஒவ்வொரு சொல்லும், கனவில் எனக்குத் தெளிவாக ஞாபகம் இருந்தது. விழித்துப் பார்த்தபோது, அவர் கடைசியாகப் பேசிய ஒரு சில வாக்கியங்களைத் தவிர, மற்ற விவரங்கள் எல்லாம் மறந்து போயிருந்தன.

‘நான் இப்போது சொன்ன விஷயங் களை நீ அப்படியே கடைப்பிடித்தால், நான் குறிப்பிட்ட அந்தப் பெண் உனக்குக் கிடைப்பாள். அவளை நீ அடைந்தால், இந்த உலகத்தை ஆளப்போகும் சக்கரவர்த்தி நீதான்! நானூறு வருடங்களுக்கு முன்பே நாஸ்ட்ரடாமஸ் எழுதி வைத்துவிட்டுப் போன உண்மை இது. ஓர் இந்தியன் இந்த உலகை ஆளப்போகிறான். அது, நான் குறிப்பிட்ட அந்தப் பெண்ணை நீ அடைவதன் மூலம்தான் சாத்தியம்! நான் சொன்ன அந்தக் கேள்வியை, அந்தப் பெண்ணைச் சந்திக்கும்போது மறக்காமல் கேள்… பிறகு, பார் நடக்கும் வேடிக்கையை!’

அந்தப் பெரியவர் மறைந்துவிட, எனது கனவும் கலைந்துவிடுகிறது. கண்களைத் திறக்காமல், அவர் என்ன சொல்லியிருப்பார் என்று யோசித்துப் பார்க்கிறேன். ம்ஹ¨ம், ஞாபகத்துக்கே வரவில்லை.

ஆனால், அவர் மறுநாளும், மறுநாளும் என தினமும் என் கனவில் வந்து, மறுபடி மறுபடி அவ்வளவு தெளிவாக அந்தப் பெண்ணின் பெயர் சொல்லி, அவளைச் சந்தித்தால் அவளிடம் என்ன பேச வேண்டும், என்ன கேள்வி கேட்கவேண்டும் என்கிற அனைத்து விவரங்களையும் சொல்லி, ஏதோ ஒரு நாடகத்துக்கான ஒத்திகை போல நடத்தியிருந்ததைப் பார்க்கும்போது, இதெல்லாம் ஏன் உண்மையாக இருக்கக் கூடாது என்று எனக்குத் தோன்றியது.

அப்பாவிடம் என் கனவைப் பற்றிச் சொன்னேன். அவர் என்னை பாலகுறிச்சி என்கிற ஊருக்கு அழைத்துச் சென்றார். ஸ்ரீபைரவ ஜோசியர் என்று ஒரு பிரபல ஜோசியர் அங்கே இருந்தார். அவர் எனது ஜாதகத்தை முழுக்க ஆராய்ந்துவிட்டு, என் காலிலேயே நெடுஞ்சாண் கிடையாக விழுந்துவிட்டார்.

‘பகவானே! உங்களைப் பற்றிச் சொல்ல என்ன இருக்கிறது! தேசத்தை ஆளப்போகும் ஜாதகம் ஐயா இது! லட்சத்தில் ஒருவருக்குதான் இப்படியான யோக ஜாதகம் அமையும். நீங்கள் இந்த ஜாதகத்தை இனி யாரிடமும் காட்டாதீர்கள். எல்லா யோகங்களும் தாமாகவே உங்களைத் தேடி வரும்!’ என்று மெய்சிலிர்த்தார்.

நான் ஒரு முடிவுக்கு வந்துவிட்டேன். கனவில் ஸோசபிரபாசாகர் என்ன சொன்னார் என்பதை அறிந்து, அவர் குறிப்பிட்ட பெண்ணை அடைந்தே தீருவது என்று தீர்மானித் தேன். ஆனால், கனவில் அந்தப் பெரியவர் சொல்லும் விஷயங்களை எப்படி ஞாபகம் வைத்துக்கொள் வது? அதற்காகத் தீவிர ஆராய்ச்சியில் இறங்கினேன். திருச்சியில் போது மான தகவல்களைச் சேகரிக்க முடியவில்லை. எனவே, சென்னை சென் றேன். கன்னிமரா லைப்ரரி யில் தொடங்கி, எங்கெல் லாம் புத்தக வாடை அடித் ததோ அங்கெல்லாம் ஒட்டிக்கொண்டு, தகவல் திரட்டினேன்.

லேண்ட்மார்க்கில் சஞ்சிகைப் பகுதியில், ‘நேச்சர்’ (Nature) என்ற புத்தகத்தைத் தேடிக்கொண்டு இருந்தபோதுதான், ‘ஆம்னி’ (OMNI) என்கிற அந்தப் பத்திரிகை என் கண்ணில் பட்டது. அதில் வெளிவந்தி ருந்த ஒரு விளம்பரத்தைப் பார்த்ததும், நான் துள்ளிக் குதிக்காத குறை. ‘நோவா ட்ரீமர்’ (Nova Dreamer) என்கிற கருவியைப் பற்றிய விளம்பரம்தான் அது!

உடனே 300 டாலருக்கு அயல்நாட்டு டி.டி. எடுத்து அனுப்பினேன். மூன்று வாரத்தில், நோவா ட்ரீமர் கருவி என் வீட்டுக்குப் பார்சலில் வந்தது. அன்றைக்கு நான் அடைந்த ஆனந்தத்துக்கு அளவே இல்லை. அந்தக் கருவியை உபயோகிப்பது எப்படி என்று அதன் மேனுவலை முழுமையாகப் படித்து மனப்பாடம் செய்துவிட்டேன். உடன் அனுப்பப்பட்டிருந்த பயிற்சி முறைகள் அடங்கிய ஆடியோ கேசட்டை நாலைந்து முறை போட்டுக் கேட்டேன்.

இரவு எப்போது வரும் என்று ஆவலுடன் காத்திருந்தேன். இரவு வந்தது. நோவா ட்ரீமர் கருவி பொருத்தப்பட்ட நீலநிற மாஸ்க்கை என் கண்கள் மீது பொருத்திக்கொண்டு, வெல்க்னோ என்ற பட்டையைத் தலையில் கட்டிக்கொண்டு, கட்டிலில் படுத்தேன். மிருதுவான வெல்வெட் துணி கண்களை அழுத்தாமல் இதமாக இருந்தது. மைக்ரோ எலெக்ட்ரானிக்ஸ் சர்க்யூட், சென்ஸார் பொருத்தப்பட்ட நோவா ட்ரீமர் கருவி, கனவு வரும் சமயம் என்னை எழுப்பத் தயாராக இருந்தது. ‘ரெம்’ (REM & Rapid Eye Movement) தூக்கத்தில் கனவு வரும்போது, கண்களின் இமைகள் வேகமாகத் துடிக்கத் தொடங்கும். அந்த சிக்னலை நோவா ட்ரீமரில் உள்ள சென்ஸார் அனலைஸ் செய்து, கனவுதான் என்பதை உறுதி செய்து கொண்டு, கண்களுக்கு சிவப்பு நிற ஒளியைப் பாய்ச்சும். அப்போது நாம் விழிப்பு நிலையை அடைவோம். இருந்தாலும், கண்களைத் திறக்காமல், அப்படியே படுத்துக்கொண்டு இருந் தால், கனவுகளை நம்மால் முழுவது மாக உணர முடியும். அதில் இடம்பெறும் ஒவ்வொரு சின்ன விஷயத் தையும் ஞாபகம் வைத்துக்கொள்ளவும் முடியும்.

இருப்பினும், அதற்குப் பொறுமையும், நிறையப் பயிற்சியும் வேண்டும். ஆனால், பல நாட்கள் போராடியும், நோவா ட்ரீமர் கருவி மூலமாக என் கனவை நினைவு வைத்துக்கொள்ளவே முடியவில்லை. இருந்தாலும், மனம் தளராத விக்கிரமன் போல், நான் என் முயற்சியைத் தொடர்ந்துகொண்டு இருந்தேன்.

மூன்று வாரம் கழித்துப் புதிய பிரச்னை முளைத்தது. இரவில் தூக்கமே வருவ தில்லை. எவ்வளவோ முயற்சி செய்தும், என்னால் தூங்கவே முடியவில்லை. காலை வரை கண்களை மூடிக்கொண்டு படுத்திருப் பேன். பிறகு எழுந்து, அலுவலகம் சென்றுவிடு வேன். மதியம் லேசாகத் தலை வலிப்பது போல் இருக்கும். ஆனால், படுத்தால் தூக்கம் வராது. இப்படியே ஒரு வாரம் ஓடிவிட்டது.

ஒருநாள் என் அப்பா, நான் தூங்காமல் படுக்கையில் புரண்டுகொண்டு இருப்பதைக் கவனித்து, ‘‘என்னப்பா… ஆபீஸ்ல ஏதாவது பிராப்ளமா?’’ என்றார்.

நான் மெதுவாக விஷயத்தை அவரிடம் சொன்னேன். விடிந் ததும், கிராப்பட்டியில் உள்ள ஒரு டாக்டரிடம் என்னை அழைத்துச் சென்றார். எனக்குக் கனவு வரத் தொடங்கியதிலிருந்து நடந்தது அத்தனையையும் டாக்டரிடம் விரிவாகச் சொல்லி முடித்தேன். அவர் என்னை மேலும் கீழும் பார்த்தார். பிறகு, என்னை வெளியே அனுப்பிவிட்டு அப்பாவிடம் மெல்லிய குரலில் பேசியது, என் காதிலும் விழுந்தது.

‘பையன் சும்மா கனவு, கனவுன்னுஅலைஞ்சுட்டிருக்கிறதாலே தூங்கலைன்னு நினைச்சுட்டிருப்பான். தூக்கம் வராம எங்க போகும்? அதெல்லாம், உடம்பு அசதி வந்தா தானா தூங்கிடுவான். நீங்க ஒண்ணும் கவலைப் படாதீங்க. இப்படியே தொடர்ந்தா, வேலியம் எழுதித் தர்றேன்…’

அந்த டாக்டருக்கு ‘பேஸிக் ஸ்லீப்பிங் டிஸார்டர்’ (ஙிணீsவீநீ ஷிறீமீமீஜீவீஸீரீ ஞிவீsஷீக்ஷீபீமீக்ஷீ) பற்றிய விவரம்கூடத் தெரியாது என்று தோன்றியது.

இரவு தூங்க முடியவில்லை என்பது, எனக்குப் பல விஷயங்களில் இப்போது வசதியாகப் போய்விட்டது. நிறைய புத்தகங்கள் படிக்கத் தொடங்கினேன். எனது வேலை நேரத்தை மாற்றிக்கொண்டு, தினமும் இரவு ஷிப்ட் செல்லத் தொடங்கினேன். பகலில் லைப்ரரி யிலேயே பழியாகக் கிடந்தேன். கிடைத்த புத்தகங்களையெல்லாம் படித்தேன்.

ஒரு மாதத்துக்குப் பின், யு.எஸ். செல்ல வாய்ப்பு கிடைத்தது. நியூஜெர்ஸி வந்து, மூன்று மாதங்களுக்கு ஒரு க்ளையன்ட் என்று மாறி, தற்போது பிட்ஸ்பர்க் வாசம்! அதன்பின் நடந்ததெல்லாம்தான் உனக்குத் தெரியுமே!

கடந்த இரண்டு வருடங்களாக இங்கே யு.எஸ்ஸில் வாழ்க்கை அற்புதமாகச் சென்றுகொண்டு இருக்கிறது. படிக்க வேண்டும் என்று தீர்மானித்துவிட்டால், நேரம் எவ்வளவு கிடைத்தாலும் போதாது. அதுவும் யு.எஸ். போன்ற தேசத்தில், லைப்ரரியில் தொடங்கி, பார்ன்ஸ் அண்ட் நோபல், பார்டர்ஸ் என்று டாலரை செலவு செய்யாமல், குளுகுளு ஏ.சி&யில் உட்கார்ந்து, ஸ்டார்பக் காபியைப் பருகியபடி நாள் முழுவதும் படிக்கலாம். இலக்கியம், விஞ்ஞானம், தத்துவம்…

எட்டு மணி நேரத்துக்கு மேல் ஏன் வேலை செய்கிறாய் என்று கேட்கக் கூடிய கம்பெனி. இதற்கா கவே, சிலிக்கன் வேலியை விட்டு ஒதுங்கி 2000 மைல் தள்ளி, பிட்ஸ்பர்க் நகரில் இருக்கிறேன். பிரபல ஹாலிவுட் டைரக்டர், நம்ம ஊர் மனோஜ் நைட் ஷியாமளன்கூட இதே நகரில்தான் இருக்கிறார். என் கதையைக் கேட்டால், அவர் படமாக எடுக்கக்கூடும்.

லாரன்ஸ் ப்ளாக் என்ற நாவலாசிரியரின் கதை ஒன்றில், இவான் டர்னர் என்று ஒரு கதாபாத்திரம். கொரிய யுத்தத்தில் ஏற்படும் விபத்தில், அவனும் என்னைப் போலவே தூங்காத வியாதியில் சிக்கிக்கொள்வான். நிறைய பாஷைகள் கற்றுக்கொண்டு, பாங்காக் வீதிகளில் இளமை ஊஞ்சலாடிவிட்டு, மியான்மர் சென்று துப்பறிந்துகொண்டு திரிவான். அவனுக்கு எதனால் தூக்கமின்மை ஏற்பட்டது என்பது கதையில் சரியாக விளக்கப்பட்டிருக்காது. ப்ளாக், எல்லாம் அப்படித்தான் என்றிருப்பார். உலகில் எத்தனையோ நிகழ்வுகளுக்கு அர்த்தம் தெரிவதில்லை. இந்த விநோத நிலையை வேறு எப்படி வகைப்படுத்த? எனது நிலையும் அதே மாதிரிதான்!

நான்சி க்ரெஸ் என்கிற சயின்ஸ் ஃபிக்ஷன் எழுத்தாளர், ‘ஸ்பெயின் தேசத்துப் பிச்சைக்காரர்கள்’ என்கிற கதையில், எதிர்காலத்தில் ஒரு சமுதாயமே இப்படித் தூங்காமல் இருக்கும் என்று எழுதியிருப்பார். அதற்காக, கருவிலேயே ஜெனிட் டிக்கல் லெவலில் சில மாற்றங்களைச் செய்துகொள்ளும் அளவுக்கு விஞ்ஞானம் வளர்ந்துவிடும் என்றபடி கதை நகரும்.

ஆக மொத்தம், நான் இந்தக் கடிதத்தில் ஆதாரமாகச் சொல்ல வந்த செய்தி இதுதான்…

என்னை அந்த அதிகாலைக் கனவும், ஸோசபிரபாசாகரர் என்கிற கிழவர் சொன்ன அந்தப் பெண்ணும் அரித்துக்கொண்டு இருந்தன. எல்லாம் சில மாதங்களுக்குத்தான்! நான் கனவில் தேடிய பெண்ணைப் பற்றிய விவரங்கள் நோவா ட்ரீமர் மூலம் கிடைக்கவில்லை. கனவுகளைத் துரத்திய எனக்குக் கிடைத்தது தூங்கா வியாதி! இதை வியாதி என்று சொல்ல முடியாது. வரம் என்றுதான் சொல்ல வேண்டும். தூங்கா வரம்! வாழ்க்கையில் எவருக்கும் கிடைக்காத பாக்கியம்!’

குமாரராஜா தூங்கினான்; கனவு கண்டான்; கனவில் ஸோசபிரபாசாகரர் குறிப்பிட்ட அந்தப் பெண்ணின் பெயரைக் கண்டுபிடித்துவிட்டான் என்றதும், உங்களுக்கும் அவனைப் பார்க்க ஆர்வம் வந்திருக்குமே?

ஆனால், எட்டு மணி நேரப் பயணம், மூன்று மணி நேரப் போராட்டங்களுக்குப் பிறகு, செயின்ட் ஃப்ரான்சிஸ் மருத்துவமனையில் அவனைப் பார்த்தபோது, அதிர்ச்சியில் உறைந்தேன். ஐ.சி.யூ. யூனிட்டில் கண்ணாடிக் கூண்டுக்குள் தூங்கிக் கொண்டு இருந்தான்.

உடனே, குமாரராஜாவின் அப்பாவைத் தொடர்புகொண்டேன். இரண்டாவது ரிங்கில் போனை எடுத்தவர், என் குரலைக் கேட்டதும் உற்சாகமானார்… ‘‘சொல்லுப்பா! குமாரராஜா கிட்டே பேசினியா?’’

‘‘இல்லே… பார்த்தேன் சார்!’’

‘‘நல்லது! நேர்லயே போயிட்டியா? எப்படி இருக்கான்..?’’

‘‘நல்லாத் தூங்கிட்டிருக்கான்!’’

‘‘நல்ல செய்தி சொன்னேப்பா! அவன் தூங்கி ஏறக்குறைய நாலு வருஷம் ஆச்சு! நல்லாத் தூங்கட் டும்!’’

‘‘இல்ல சார், இந்தத் தூக்கம் வேற மாதிரி! கடந்த அஞ்சு நாளா தூங்கிட்டே இருக்கான் சார்!’’

‘‘ஐயோ! என்னப்பா சொல்றே?’’ என்றார் அதிர்ச்சியுடன்.

‘‘சார், நான் இங்கே ஹாஸ்பிட்டல்ல இருந்து பேசறேன். என்ன பிரச்னைனு டாக்டர்களால கண்டுபிடிக்க முடியலை. அவனோட உடல் உறுப்புகள் எல்லாம் நல்லா வேலை செய்யுது. இதைக் கோமான்னும் வகைப்படுத்த முடியாதுங்கிறாங்க. இப்போதைக்கு திரவ உணவை மட்டும் ட்யூப் வழியா செலுத்திட்டிருக்காங்க. ஒரு மாதிரி, ஹைபர்னேஷன் நிலை…’’

சில விநாடிகள் எதிர்முனையில் மௌனம் நிலவியது.

‘‘சார்… பயப்படுறதுக்கு ஒண்ணுமில்லேன்னு டாக்டர்ஸ் சொல்றாங்க… நீங்க தைரியமா இருங்க!’’

‘‘கொஞ்ச நாளாவே அவனைப் பத்திக் கவலையாதான் இருந்தது. கல்யாணம் பண்ணிக்கடான்னு சொன்னாலும் கேட்காம புத்தகம், புத்தகம்னு இருந்தான்’’ என்றார் சுருதி குறைந்த குரலில்.

‘‘டாக்டர் நிர்மலாங்கிற இந்தியர்தான் அவனைக் கவனிச்சுட்டு இருக்காங்க. அவங்களுக்காகத்தான் வெய்ட் பண்ணிட்டிருக்கேன். அவங்ககிட்டே பேசி, விவரங்களைத் தெரிஞ்சுக்கிட்டு, மறுபடி உங்ககிட்டே பேசறேன்’’ என்றேன்.

‘‘யார் அவனை ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போனது? ஏன் யாருமே எனக்குத் தகவல் கொடுக்கலே?’’

‘‘மூணு நாளா வீட்ல தூங்கிட்டு இருந்திருக்கான். சந்தேகம் வந்து, பக்கத்து அபார்ட்மென்ட்காரர் 911 எண்ணுக்கு போன் போட்டுச் சொல்லிட்டார். உடனே போலீஸ் வந்து, வாசல் கதவை உடைச்சுக்கிட்டு உள்ளே போய்ப் பார்த்தப்போ, ஆழ்ந்த தூக்கத்தில் இருந்திருக்கான். இன்னும் ரெண்டு நாள் அவனை யாருமே கவனிக்காம இருந்திருந்தா, தூக்கத்திலேயே…’’

‘‘என்ன வாழ்க்கை..! அமெரிக்கா, அமெரிக்கான்னு கண்காணாத தேசத்துக்குப் போய், அவசர ஆத்திரத்துக்குக்கூட துணைக்கு யாருமில்லாம…’’ & எதிர்முனையில் அவர் விசும்பியது எனக்குக் கேட்டது.

‘‘அவன் டைரியிலே குறிச்சுவெச்சிருந்த திருச்சி போன் நம்பர் பழசு. அதனால, உடனே உங்களைத் தொடர்புகொள்ள முடியலையாம். நான் பிட்ஸ்பர்க் வந்துட்டிருக்கும்போதுதான், அவன் வேலை பார்த்த பார்க்கர் சிஸ்டத்தைத் தொடர்புகொண்டு, என் செல் நம்பரைக் கண்டுபிடிச்சுத் தகவல் கொடுத்தாங்க. ரெண்டு நாளா ஐ.சி.யூ.விலே வெச்சு மானிட்டர் பண்ணிட்டிருக்காங்க..!’’

‘‘பத்திரமா பார்த்துக்கோப்பா! எதுன்னாலும் உடனே போன் பண்ணு!’’

‘‘ஒண்ணும் ஆகாது. நீங்க கவலைப்படாதீங்க சார்…’’ என்று ஆறுதல் சொல்லிவிட்டு, செல்போனைத் துண்டித்தபோது, டாக்டர் நிர்மலா உள்ளே நுழைந்தார்.

என்னை நெருங்கிப் புன்னகையுடன் கைகளை நீட்டினார். அவரது குளிர்ச்சியான கரங்களைப் பற்றி, ‘‘ஐ’ம் சத்யா! குமாரராஜாவின் நண்பன்!’’ என்றேன்.

முன்னெற்றியில் தவழ்ந்த முடிகளைக் கோதிவிட்டுக்கொண்டு, ‘‘டாக்டர் நிர்மலா!’’ என்றார்.

ஐந்தடி உயரம். அமெரிக்கத்தனம் கலந்த முகம். உற்சாகம் மிளிரும் கண்கள். சற்றே பெரிய மூக்கு. உதட்டுக்குக் கீழே இடது பக்கம் லேசான மச்சம். அவளுக்கு இருபத்தைந்து வயதுக்கு மேல் இருக்க முடியாது. அமெரிக்காவில் இருபத்தைந்து வயதில், இந்திய டாக்டரைப் பார்ப்பது அபூர்வம். இன்ஜினீயர்கள்போல… இந்தியாவில் எம்.பி.பி.எஸ். படித்துவிட்டு நேராக இங்கே வந்து டாக்டராகிவிட முடியாது. இங்கேயே பிறந்து வளர்ந்தவராக இருக்க வேண்டும்.

கடந்த நான்கு நாட்களாக நடந்த சம்பவங்களை அமெரிக்க ஆங்கிலத்தில் நிதானமாகச் சொல்லி முடித்தவர், சட்டெனத் தமிழுக்கு மாறி சரளமாகப் பேசத் தொடங்கினார்…

‘‘குமாரராஜாவோட ஹிஸ்டரி தெரியாம எங்களால தொடர்ந்து என்ன பண்ண முடியும்னு தெரியலை…’’ என்றவர், சில விநாடி தயக்கத்துக்குப் பிறகு, ‘‘சத்யா! இன்னொரு முக்கியமான விஷயத்தையும் உங்ககிட்டே சொல்லணும். இதுவரைக்கும் இங்கே நான் யார்கிட்டேயும் இதுபத்திச் சொல்லலை. அவரோட பழைய உடையைச் சோதித்தபோது, இந்தக் காகிதம் கிடைச்சுது…’’ என்று தனது பச்சை நிற கோட் பாக்கெட்டிலிருந்து ஒரு காகிதத்தை எடுத்து, என்னிடம் நீட்டினார்.

அவரது கைகள் லேசாக நடுங்கியதைக் கவனித்தபடி, கசங்கி இருந்த அந்தக் காகிதத்தைப் பிரித்துப் படிக்கத் தொடங்கினேன்.

பெயர்: நிர்மலா

பிறந்த தேதி: செப்டம்பர் 23

வயது: 26

அடையாளம்: உதட்டுக்குக் கீழேயும், இடுப்புக்குக் கீழேயும் மச்சம் இருக்கும்.

பூர்விகம்: திருநெல்வேலி சந்தித்தால், கேட்கவேண்டிய கேள்வி…

குமாரராஜாவின் கிறுக்கல் கையெழுத்து.

அதிர்ச்சியுடன் நிமிர்ந்தேன்.

‘‘ஹாஸ்பிடல்ல அட்மிட் செஞ்சப்போ அவர் போட்டிருந்த பேன்ட் பாக்கெட்டில் இந்தக் காகிதம் கிடைச்சுது. இதிலே குறிப்பிட்டிருக்கிறது என்னைத்தான்னு நினைக்கிறேன். அந்தரங்கமான விஷயங்கள் உள்பட, நூறு சதவிகிதம் அப்படியே பொருந்துது. ஆனா, இவரை நான் இதுக்கு முன்னே சந்திச்சதே இல்லை. என்னைப் பத்தின விவரங்கள் எப்படி இவ்வளவு கரெக்டா இவருக்குத் தெரிய வந்ததுன்னு தெரியலை. என்கிட்டே இவருக்கு என்ன கேக்கணும்னும் புரியலை’’ என்றார் குழப்பத்துடன்.

நான் குமாரராஜாவைப் பார்த்தேன். அயர்ந்து தூங்கிக்கொண்டு இருந்தான்.

வெளியான தேதி: 23 ஜூலை 2006

1 thought on “கனவுகளைத் துரத்தியவன்

  1. வெரி குட்.இந்த கதை ரொம்ப நல்ல இருக்கு. இது வரைக்கும் பல கதை படித்து இருகேன் றேபலி அனுப்பியது கிடையாது. இதன் தொடர்ச்சி எங்கே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *