கட்டியவளைக் கொண்டாடுகிறவர்கள்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: April 15, 2018
பார்வையிட்டோர்: 17,004 
 
 

”சொல்லச் சொல்ல இனிக்குதடா – முருகா

உள்ளமெல்லாம் உன் பெயரை . .”

அழைப்புமணியை அழுத்தியதும் மணியோசைக்குப் பதிலாய் வந்தபாட்டு ஒலியில் சுசீலா அம்மாவின் குரலில் உருகி நின்றோம்.

“முருகன் என்றால் அழகன் என்று தமிழ்மொழி கூ ஊ றும்

அழகன் எந்தன் குமரன் என்று . . “

“வாங்க சார் !”- பாடலை விழுங்கிக் கொண்டு அமுது அண்ணன் கதவைத் திறந்தார்..

“என்னண்ணே படக்குனு கதவத் தெறந்துட்டீங்க ?” ஏக்கத்துடன் சொன்னேன். எனக்குப் பின்னால் நின்றிருந்த செந்தில் வீட்டுக்குள் நுழையலாமா வேண்டாமா என்ற கேள்வியில் உள்ளும் வெளியிலுமாய் தன்னை அலைக்கழித்துக் கொண்டிருந்தான்..

“வீட்டுக்குள்ள சட்டைய அயன் பண்ணிட்டிருந்தேன். அதே கொஞ்சம் லேட்” என, குற்ற உணர்ச்சியோடு தன்னிலை விளக்கம் தந்தார் அமுது அண்ணன்.

“ணே, நல்ல. பிடிச்ச பாட்டு. சுசீலா அம்மாவோட கொரவளைய திருவுனாப் போல சட்டுனு நின்னுருச்சு” ரெம்பவும் வருத்தமாய் சொன்னேன்.

“அடபாவி, நெசமாத்தேஞ் சொல்றியளா . . நாங்கூட கதவத் தெறக்க லேட் பண்ணிட்டமேன்னு ஃபீல் பண்ணேன்.”

“இன்னம் கூட லேட் பண்ணலாம். அதுக்காக யாரும் வருத்தப்பட மாட்டாங்க என்னா செந்தில் ?” எனது கருத்தை உறுதிப்படுத்துவதற்காக உடன்நின்று கொண்டிருந்தவனை சாட்சிக்கழைத்தேன்.

செந்தில் பதில் சொல்லாமல் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தான்.

“சரிசரி, உள்ளவாங்க, இது உங்க மச்சினன்தான ? ஏம்மா ராகினி அந்த சேர எடுத்துப்போடு. சரவணன் வந்திருக்காரு பாரு” சொல்லிக்கொண்டே அறைக்குள் நுழைந்தார். அனேகமாய் அயன் பெட்டியை எடுத்து வைக்கப் போகலாம்.

“மாமா, ஒங்க பேச்சக் கேட்டு, இனிமே யார் வந்தாலும் லேட்டாவே கதவத் தெறக்கப் போறார். வாரவங்கள்ளாம் ஒங்கள ஏசப்போறாங்க” சொல்லிவிட்டு மறுபடியும் முன்போல் உடம்பை அப்படி குலுக்கிக் கொண்டு சிரித்தான். அதுஒரு அபூர்வ சிரிப்பு. சத்தமே இல்லாமல் பூ விரிவது மாதரி அத்தனை சாந்தமாய் . .. அதேசமயம் உள்ளத்து உணர்வை ஆனந்தக் களியுடன் வெளிப்படுத்துகிற உணர்ச்சி மின்னல். மோகனப் புன்னகை ஆணுக்கு உண்டுமா ? அந்தச் சிரிப்பிற்காகவே அவனை பலமுறை கன்னத்தில் முத்தமிட்டிருக்கிறேன். என் மனைவி பொறாமையுடன் பார்ப்பாள். “இவெ பொண்ணா மட்டுமிருந்தா ரெண்டாவதா தாலியக் கட்டீருப்பேன். இந்தச் சிரிப்புக்காகவே” என்று மாமியார் முன்னிலையிலேயே இந்த வார்த்தையினைச் சொல்லியுமிருக்கிறேன்.

சிரித்துக்கொண்டே அறையின் மூலையில் டிவிப் பெட்டியினை ஒட்டியிருந்த பிளாஸ்டிக் நாற்காலி அடுக்கிலிருந்து ஒரு நாற்காலியினை உருவி எடுத்தான் அடுத்ததை எடுக்கும்போது அமுது அண்ணனும் அவரது கொழுந்தியாள் ராகினியும் வந்துவிட்டனர். ராகினி அறைவாசலிலேயே நின்றுவிட்டார். அவரது வேலையை செந்தில் நிறைவேற்றிவிட்டான்.

“சேர எதுக்கு கோபுரமா அடுக்கி வப்பீங்க.? வாரவங்க ஒக்காரத்தான வாங்கிப் போட்ருக்கம். இப்பிடி ஒண்ணுமேல ஒண்ணாக் கெடந்தா, வாரவங்க, ஸ்டூல் போட்டா ஏறி ஒக்காருவாங்க !. ஒங்கவீட்ல யாருக்குமே காமன்சென்ஸ் ங் கறதே கெடையாது ?” அமுது அண்ணன் தேவையில்லாமல் ராகினியைக் கடிந்து கொள்ள அதற்கு பதில் சொல்ல முடியாமல் அந்த சிறுபெண் தலைகுனிந்து நின்றார். வயது, . .அவ்வளவுதான் பத்தாவது படிக்கலாம்.

“ணேய், யார் எடுத்துப்போட்டா என்னாண்ணே. “ அப்பெண்ணின் முகவாட்டம் என்னை வருத்தியது.

“இல்ல சரவணா, பெஞ்சிய விரிச்சுப் போட்ற வேண்டிதான. அத என்னத்துக்கு அடுக்கி வக்கெணும் ?”

“இல்லங்சார், அடுக்கிவச்சா அழகா, எடத்த அடைக்காம இருக்கில்ல. வீட்ட கூட்டிப் பெருக்கச் செய்ய தோதுவா இருக்கும். ஆளுக வந்தா விரிச்சுப் போட்டுக்க வேண்டிதே” செந்தில் காரியார்த்தமாய் பதில் சொன்னான். அவனை முதுகில் தட்டினேன். நல்லபதில்தான். ஆனால் அமுது அண்ணன் யாரும் தன்னை வார்த்தைகளால் வென்றுவிட சகிக்கமாட்டார். அதுவும் புதுஆள் – தன்னைவிட வயசில் குறைந்தவர் என்றால் உயிரைக் கொடுத்தும் ஜெயிக்க நினைப்பார்.

“எடத்த அடைக்காம இருக்கணும்னா வீட்ல இருக்கவங்க எதுக்கு தனித்தனியா நிக்கணும் ஒருத்தர்மேல ஒருத்தர் ஏறி உக்காந்துக்கலாம்ல. கட்டுலுமேல பீரோவ நிறுத்துனா வீடு விசாலமா இருக்கும் அந்த பீரோமேல டிவிப் பொட்டியத் தூக்கிவச்சிட்டம்னா இன்னம் நெருக்கடி இல்லாம ஃப்ரியா இருக்கும்ல”

செந்திலின் தோளை இறுகப் பற்றியபடி ஹஹ வென செயற்கையாய்ச் சிரித்தேன். அவரது பேச்சை இப்படி ஹாஸ்யமெனக் காண்பித்தால்தான் கடந்து போகமுடியும். பதிலுக்கு அமுது அண்ணனும் சிரித்தார்.

“சரிசரி உள்ளபோயி ஒங்க அக்காகிட்ட சொல்லி ரெண்டு காப்பி கொண்டுவரச் சொல்லு. அவ வேலையா இருந்தா நிய்யே போட்டு எடுத்துவா ?”

ராகினி உள்ளே போனதும் அமுது அண்ணன் இன்னொரு நாற்காலி எடுத்துப் போட்டு அருகில் உட்கார்ந்தார். “அப்பறம் ! என்னா மாமனும் மச்சினனும் ராத்தலா பொறப்பட்டு வந்திட்டீக ஃபைனான்ஸ் லீவா ?”

”பைனான்ஸ் லீவா ? வட்டிக்கடைக்கு என்னைக்கி ண்ணே லீவு விட்டாங்க. ஒலகமே தூங்குனாலும் வட்டி மட்டும் நொடிக்குநொடி ஊதிப் பெருத்துகிட்டு இருக்குமே.”

“அப்ப, வசூலுக்குதே வந்தீகளா ?”

நானும் வேறுசிலரும் சேர்ந்து பஜாரில் ஃபைனான்ஸ் கம்பெனி நடத்தி வருகிறோம். ஃபைனானாஸ் கம்பெனி என்றதும் பெரிய அளவில் கற்பனை வேண்டாம். தலைக்கு இருபத்தைந்தாயிரம்போட்டு பதினோருபேர் கூட்டு. அதில் நடத்துனர் மூவர். எனக்கு காசாளர் பொறுப்பு. எந்த பொறுப்பில் இருந்தாலும் மானேஜர், வசூல்பையன், என அனைத்துமாய்த்தான் இயங்க வேண்டியிருந்தது..வராக்கடன்கள் வசூலுக்கு பங்குதாரர்களையும் இணைத்துக் கொண்டு செல்வது வழக்கம்.

“நீங்கதான இந்தப்பக்கம் வந்தா வீட்டுக்கு வாங்கன்னு சொன்னீங்க. ஞாபகம் இருக்கா ?”

அமுது அண்ணன் எங்கள் கம்பெனி இருக்கும் மீனாட்சி சந்தில்தான் சிடி கேசட் கடை வைத்திருக்கிறார். பெரும்பாலும் அவரும் அவர் மனைவியுமே கடையில் இருப்பார்கள். இதற்கு முன்னால் அதாவது சிடி வருவதற்குமுன், ஃபிலிம் கேசட் வைத்திருந்தார். அதனை தினசரி வாடகைக்கு விடுவார். நல்ல ஓட்டம். கலியாணவீடுகள், கச்சேரிகள் சிலகிராமங்களில் திருவிழாக்களுக்கும் எடுத்துப்போய் பெரிய டிவி வைத்துப் படம் பார்க்கும் வழக்கம் இருந்தது. டிவியோடு கேசட் போடுகிற டெக்கும் வாடகைக்குக் கொடுத்து விடுவார். அதனை ஓட்டிவிட ஒருபையனும் அனுப்பிவைப்பார். டிவி, டெக், கேசட், ஆப்பரேட்டர் பையன் என அத்தனைக்கும் காசுதான். முகூர்த்த நாள், கோயில் திருவிழா போன்ற நாட்களில் அமுது அண்ணன் ரெம்பவும் பிசியாக இருப்பார். நல்ல காசு. சிடி வந்ததும் எல்லாமே கைவிட்டுப் போனது. கொஞ்ச நாள் விடாப்பிடியாய் டெக்கை விடாமலிருந்தார். ஃபிலிம்சுருள் அவரது கழுத்தைச் சுற்ற, மொத்தமாய் குப்பையில் அள்ளிப்போட்டுவிட்டு சிடிக்களை வாங்கி அடுக்கினார். அப்போதுதான் ஃபைனான்சில் தொடர்புவைத்தார். அந்த நாளிலிருந்து கடனாளிதான்.

அமுது அண்ணனின் மனைவி அமுதா ஏதோ வேலையில் இருந்திருப்பார் போலும் கணவனின் ஆணைக்காக தொட்டவேலையை அப்படியே விட்டுவிட்டு காப்பி போட்டுக் கொண்டு வந்துவிட்டார்

”நல்லாருக்கீங்களா ண்ணே” என்றபடி காப்பித் தம்ளர்களை வைக்க, சிறிய டீ பாய் ஒன்றை இழுத்து முன்னால் விட்டபடி கேட்டார்.

“ரெம்ப நல்லாருக்கேன் க்கா. ஒங்களத்தே ஆளக்காணாம். பிள்ளகளெல்லா சுகம்தான”

“ம் ,ஸ்கூலுக்குப் போயிருக்காக.” என்றவர், “ந்தா துணிய அலசிட்டு வந்திர்ரே” என்றபடி கிளம்பினார்.

“வெறும் காப்பியவா வந்தவகளுக்குக் குடுப்பாக. ஏதாச்சும் மிச்சர், பிஸ்கட் இல்லியா ? என்னா பழக்கம்’’ அமுது அண்ணன் முகம் சுளித்தபடி எழுந்தார்.

”ணே” வேகமாய் அவரைத் தடுத்தேன். எப்போது வந்தாலும் அமுதா அக்கா கடிப்பானோடுதான் காப்பி தருவார். வெறும் காப்பி வருகிறது என்றால் எதுவும் இருப்பு இல்லை என அர்த்தம்.”ஒண்ணும் வேணாம்ணே. காப்பி குடிக்காட்டி சங்கடப்படுவீங்கன்னுதான் குடிக்கிறோம். இப்பத்தே நம்ம நைனா கடைல அல்வாவும் காப்பியும் சாப்பிட்டு வரோம்” என்றேன்.

“ம் மச்சினே வந்த ஒடனே அல்வா வாங்கிக் குடுத்திர்ர போல. அதான் வீட்ல நல்ல கவனிப்பு.? நமக்கு அந்த நேக்கு தெரிய மாட்டேங்கிது.சரவணா வர்சமெல்லா வீட்டோட மாப்பிள்ளையாக் கெடந்தாலும் ஒரு மட்டு கெடையாது மரியாத கெடையாது “ வழக்கம்போல தனது புலம்பலைத் துவங்கலானார். வீட்டுக்குள்ளிருந்து அமுதா அக்கா என்னை பரிதாபமாகப் பார்த்தார். அதன் பொருள் புரிந்து கண்களை தாழ்த்தி நான் சமாளித்துக் கொள்வதாக சாடை காட்டினேன். காப்பியை குடிக்கத் துவங்கிய செந்தில் அமுது அண்ணனின் வார்த்தைகள் புரியாமல் என்னைப் பார்த்தான். அவனுக்கும் சாடை காட்டி அமைதிப்படுத்தினேன்.

அமுது அண்ணனும் அமுதா அக்காவும் காதல் கல்யாணம் முடித்தவர்கள். அண்ணன் டிவி டெக் கடை வைத்திருந்தபோது அமுதா அக்கா அடிக்கடி தன்வீட்டுக்கு கேசட் வாடகைக்கு வாங்கிப்போக வருவாராம். அமுதா அக்கா கொஞ்சம் வசதியானவர். கலர் டிவி முதன்முதலில் வாங்கிய குடும்பங்களில் அமுதா அக்காவின் குடும்பமும் ஒன்று. அதனால் புதிய கேசட் வந்ததும் அமுதா அக்கா வீட்டுக்கு கொண்டுபோய் போட்டுப் பார்ப்பதுதான் வழக்கமாம். அப்போது உருவான பழக்கம் காதலாகி கலியாணத்தில் முடிந்து விட்டது. வீட்டிலும் பெரிய அளவில் எதிர்ப்பு இல்லை.

அமுது அண்ணன் குடும்பம் சராசரியானதுதான். ஆனால் அமுது அண்ணனின் வாட்டசாட்டமான தோற்றமும் யாரையும் சட்டை பண்ணாத பேச்சும் தோரணையும், பெரிய ஆளாய் வருவார் என்கிற ஒருமயக்கத்தை அவர்களுக்கு ஏற்படுத்தி விட்டது. கலியாணத்திற்குப் பிறகு தன் குடும்பத்தாரோடு சண்டைபோட்டு அமுதா அக்காவின் வீட்டுக்கு வந்துவிட்டார். கடையும் அமுதா கேசட் சென்டராக மாறியது. ஆனால் அமுதா அக்காவோடு பிறந்த மற்ற பெண்களும் மாப்பிள்ளைகளும் தாய்வீட்டுக்கு வருவதில்லை. ஒரே ஒரு மச்சினன் அவனும் மொய் வைக்க மட்டும் வந்துபோகிறவனாக மாறிப்போனான். எல்லாப் புகழும் அமுது அண்ணனுக்கே.

“ஒரு பய என்னியக் கேக்காம எம் மாமியா விட்டுக்குள்ள நொழைய முடியாதுல்ல. வரும்போதெல்லா கட்டில் வேணும் பீரோவேணும், காசுவேணும் பணம் வேணும் னுதான நாக்கத் தொங்கவிட்டுகிட்டு வாராங்கெ. வந்தமா ரெண்டுநாள் இருந்தமான்னு கெளம்பறதில்ல. பாவம் கெழவெ கெழவிய இம்ச குடுக்கிறாங்கெப்பா. நா அந்த எடத்துல ஸ்ட்ராங்கா நிக்கலேன்னா இந்நேரம் வீட்ட மொளகா அரச்சிருப்பாங்கெ அதனாலதான என்னிய இருவது வருசமா விட்டுப் பிரியாம இருக்காக.”

அமுது கேசட் சென்டர் அமுதாவாக மாறிய ஒரு சம்பவத்தை மட்டும் வைத்துக்கொண்டு நிலவில் காலூன்றிய ஆம்ஸ்ட்ராங்கின் அழியாப் பெருமையை அமுது அண்ணன் தக்கவைத்ததோடு அதனை அஸ்திரமாகவும் பயன்படுத்திக் கொண்டிருப்பதே அண்ணனின் சிறப்பு.

புதிதாய் அறிமுகமாகிறவர்களுக்கெல்லாம் மாமியார் வீட்டை நம்பாதே என்பதும் மாமனார், மச்சினன், மதனியார் அத்தனைபேரும் கொடுமைக்கார கோமகன் கோமகள்கள் என்பதையும் தவறாமல் போதித்துவிடுவார் சந்தர்ப்பம் கிடைத்தால் அமுது சென்டர், அமுதாவான கதையும் சேர்த்துச் சொல்லுவார்.

”அல்வா, நா வாங்கித்தரல ண்ணே” என செந்திலைக் கைகாட்டினேன். மூன்றுமணிக்குமேல் நைனா கடையில் ஒரு கூட்டம் நிற்கும். ஒரு பித்தளைக் குண்டானில் வாழை இலையால் மூடப்பட்டு ஹோண்டாவில் பின்னால் ஒருஆள் உட்கார்ந்து கொண்டு அல்வாச் சட்டியினை ஏந்திவருவார். நாக்கில் எச்சில் ஒழுக காத்திருக்கும் கூட்டம் வரிசைகட்டிவிடும். தேக்குமர இலையில் காகித பின்புலத்தோடு எண்ணெய்வழிய எவர்சில்வர் கரண்டியால் அள்ளிப்போட்டு காரத்துக்கு மிளகுச்சேவும், ஓமப்பொடியும் கேட்டுவாங்கி பாதாம்பால் அல்லது டிகிரிக் காப்பியோடு மாலை டிப்பனை முடிப்பார்கள். செந்திலுக்கு அல்வாமட்டும் போதும். “காரத்தப் போட்டு காப்பிய விட்டா அல்வா டேஸ்ட்டு மறஞ்சிடும் மாம்ஸ்” என்பான்.

“அல்வா யார் வாங்கிக்குடுத்தா என்ன சார்” செந்தில் யதார்த்தமாய்க் கேட்டான்.

“அப்பிடியில்ல தம்பி. எல்லாத்துக்குமே ஒரு கணக்கு இருக்கு. இப்ப ஒங்க அக்காவுக்கு நீ அல்வா வாங்கித் தரலாம், ஆப்பிள் வாங்கித்தரலாம். ஆனா, அவங்களுக்கு நீ பூ வாங்கித் தரலாமா ?” கேட்டார் .”ஆகுமா? என்கிற கடைசி வார்த்தை மாறிவிட்டதாய் உணர்ந்தேன். இதெல்லாம் எதற்கு அமுது அண்ணன் செந்திலிடம் ஒப்பிக்கிறார் என விளங்கவில்லை. இதுபோன்ற வாதத்தையெல்லாம் எங்களைப் போன்றவர்களிடம்தான் பேசி களைப்பினை ஏற்படுத்துவார். அமுதண்ணனின் பள்ளி நண்பர் பிச்சாலுதான் இவரைப்பற்றி வேதனையோடு பகிர்வார். “அமுதே நல்ல தொழில்காரந்தானப்பா, ஆனா பாரு கலியாணம் முடிச்சு இருவதுவருசம் ஆகியும் மாமனார் வீட்டவிட்டு எறங்காம, இன்னம் என்னா செஞ்சாங்கன்னு கேட்டுக்கேட்டே பஞ்சராய்ட்டான் ” என வருந்துவார். அந்தப் பரிதாபம் இப்போதும் அவரது பேச்சில் வழியக்கண்டேன். செந்தில்தான் பாவம். அவனை இக்கட்டில் சிக்கவைத்து விட்டேன். எப்படி விடுவிப்பது.

அமுது அண்ணனின் அந்தக்கேள்வியில் சற்றும் பாதிக்கப்படாதவன் போல செந்தில் அவரைப் பார்த்தான். வேறெதுவும் மிச்சம் இருக்கிறதா என்று கேட்பதைப்போல. ஆனால் அமுது அண்ணனோ அசாதரணமான ஒருகேள்வியில் செந்திலை சிக்க வைத்துவிட்டதாய் கொஞ்சம் இடைவெளி கொடுத்தார்.

அவரிடமிருந்து அடுத்தவார்த்தை வராதது கண்டு செந்தில், “வாங்கிக் குடுக்கலாமே, குடுப்பேனே, என்னாங் மாமா?” என்னையும் இழுத்து பதில் சொன்னான்.

எங்கே நான் புகுந்து விடுவேனோ என எண்ணிய அமுது அண்ணன் அவசரமாய் அடுத்த கேள்வியை தொடுத்தார். ”சரி, நீ தம்பி. நீ தரலம்னே வையி. வேற அன்னியர்,– என்னப்போலன்னு நெனச்சுக்க. நா வாங்கிக் குடுக்கலாமா சொல்லு?”

செந்தில் சற்று நேரம் அவரை உற்று நோக்கினான். திரும்பி என்னையும் பார்த்தான். ”சாரு என்னா மாமா சொல்லவர்ராரு ? புரியல. பூ வங்கித் தாரதில என்ன பிரச்சனை ? ஒண்ணு காசு வேணும், இன்னொன்னு அன்பு அக்கறை வேணும். ரெண்டும் இருந்தா யார்வேணாலும் எது வேணாலும் வாங்கித் தரலாம்ல”

“ஓ நீ அப்பிடி வாரியா ? சரி, ஓ வழிக்கு வாரேன்” என்றவர்,” ஒங்க அக்கா பிள்ளைகளுக்கு ஸ்கூல் ஃபீஸ் யார் கட்டுவா ?”

“அக்காதேன் கட்டும். இல்ல மாமா கட்டுவார்”

“சரி, அக்கா மாமா எல்லாம் ஒண்ணுதான. அவகளுக்குப் பதிலா நீ கட்டுவியா ?”

“கட்டுவேனே !”

“ப்ச். நீ கட்டுவ தம்பி, ஆனா யாருக்கு கடமை ?”

“கடமைன்னா அக்கா, மாமாக்கு”

“ரைட், அததேஞ் சொல்லவாரேன். ஒரொருத்தருக்கு ஒரொரு கடமை இருக்குல்ல. அத அவங்கதான செய்யணும்”

“ சரி சார். அல்வா வாங்கி சாப்பிடுறதில என்ன கடமை ?”

“ நீ இப்ப ஒங்க மாமாவப் பாக்க வந்திருக்க. அதனால, அல்வா அவர்தான வாங்கிக் குடுக்கணும். ஒன்னோட எடத்துக்கு அவர் வந்தா நீதா வாங்கித்தர வேணும்.”

“இதெல்லா யார் சொன்னது. காமடியா இருக்கு” லேசாய்ச் சிரித்தான்.

”காமடியா?” அமுதண்ணன் ரெம்பவும் சூடாகிப் போனார். “இதான் தம்பி ஒலக நடமொற . இப்ப ஒங்க அக்கா வீட்ல ஒரு பெரச்சன. வெளியாள் வந்து பெரச்சன பண்றார். இது அவங்க எடத்துல நடக்கறதால அவங்க பாத்துக்குவாங்கன்னு விட்ருவியா, இல்ல எதுத்து நின்னு கேப்பியா”

“அவங்கவங்க பெர்ச்சனய அவங்கவங்கதான பாக்கணும்.? நாம தலையிட்டா வேற மாதரி ஆகிவிடும். இல்லியா”

செந்தில் அந்தக்கேள்விக்கு பதில் சொல்ல தாமதித்த சிறிய இடைவெளியில் புகுந்து அவனுக்கான பதிலையும் அவரே நிரப்பிக்கொண்டார் அமுதண்ணன்.

“அப்பிடியா சார். ஆனா, எங்க மாமாவோ நானோ எம்பிரச்சனை ஒம் பிரச்சனைன்னு இதுவரைக்கும் தனியா பிரிச்சுப் பாத்ததில்லை” என்றான். வீட்டுக்குள் பெண்களின் சிரிப்பொலி கேட்டது. யதேச்சையாகக் கூட இருக்கலாம். அன்று பணம் வசூலாகவில்லை. தானே நேரில் வந்து கட்டிவிடுவதாக வாய்தா வாங்கிக்கொண்டார் அமுது அண்ணன்.

*

எனது மனைவி சித்ரா என்னைவிட கொஞ்சம் பணவிசயத்தில் கருமி. அது அவள் குடும்பத்து பின்னணியாக இருக்கலாம். அவளோடு பிறந்தவர்களில் சித்ரா இரண்டாவதுபெண் மேலுமிரு பெண்களும் செந்திலும் அடங்கிய குடும்பம். வீட்டில் ஒருபகுதியை ஒதுக்கி பலசரக்குக் கடையாக்கி சித்ராவின் அம்மாவும் வீட்டிலிருக்கும் பிள்ளைகளும் கவனித்துவர, அவளது அப்பா, பஜார் கடைகளுக்கு நவதானியங்கள் வாங்கித்தரும் தரகுவேலை பார்த்து வந்தார். நான்கு பெண்களை கரைசேர்க்கவும், குடும்பத்தை கஞ்சிக்கவலை இல்லாது நடத்திச் செல்லவும் சித்ராவின் தாயார் மேற்கொண்ட பொருளாதார நடவடிக்கை அப்படியே சித்ராவிடத்தில் பழகியிருந்தது. எதிலும் விரயம் காணமுடியாது அத்தியாவசியமானவை மட்டுமே அவளது கைப்பிடியில் நிற்கும்.

தேனி பஜாரிலிருந்து பத்துருபாய் கொடுத்து ஷேர் ஆட்டோவில் ஏறி வர மனசில்லாமல் நடந்து வருவாள். ”ஒத்தைல வேகுவேகுன்னு நடக்கணும்னு விதியா ? பாக்குறவக என்ன நெனப்பாக ?” எனச் சொல்லுங்கள்,

அதுபற்றி தனக்கு கவலை இல்லை என ஒதுக்கிவிடுவாள். ”இதுனால அவுகளுக்கு எதும் செரமமா ? இல்லேல்ல.!” என்பாள்.

அப்படித்தான், இரண்டாவது பிரசவத்திற்குப் பின் குடும்பக்கட்டுப்பாடு செய்து கொள்ள அவளது தாயாரின் ஏற்பாட்டின் பேரில் பெரியகுளத்தில் உள்ள ஒரு மிசினரி மருத்துவமனையில் சேர்ந்திருந்தாள். எல்லாம் நல்லபடியாய் முடிந்தது. வீட்டுக்குத் திரும்ப வேண்டும். பெரியகுளத்தில் ’ஆலோ ஓலோ’ வெல்லாம் கிடையாது. அந்த ஊரின் பிரசித்திபெற்ற வாகனம் குதிரை வண்டிதான். ரயிலில் செல்வதுபோல அருமையாய் கொண்டு செல்லும். பேருந்து நிலையம் செல்ல குதிரைவண்டியா ?, தன் அம்மாவுக்கு மேலாய் சித்ரா யோசித்தாள். ஆனால் அவளால் மருத்துவமனையின் வெளிவாசலை சென்று அடைவதற்கே கால்களை எட்டிப்போட முடியவில்லை. குழந்தையை அவளது தாயார்தான் வைத்திருந்தார். செந்திலின் கை ஆதரவில் அவள் நடந்து வர, நான் பைச் சுமைகளை எடுத்து நடந்துகொண்டிருந்தேன்.

பற்களைக் கடித்துக் கொண்டும், முகத்தைச் சுளித்தும், கண்களை மூடியும் ஆப்பரேசனின் வலியை சமாளித்து நடந்தாள் என்று வையுங்கள். முன்னால் நட்ந்து சென்ற என்னை செந்தில் சத்தமிட்டு அழைத்தான். அந்த மருத்துவமனையில் அவ்வளவு சத்தம் கூடாது. ” மாமா, அவ்வளவு வேகமா எங்க போறீங்க.? வண்டிய உள்ளாற வரச்சொல்லுங்க. அக்காவால நடக்க முடியாது.”

“அட்மிட்டுக்கு மட்டும்தான் வண்டி உள்ளவர முடியும். டிஸ்சார்ஜுக்கெல்லாம் நாட் அலவ்டு” என உடன் வந்த நர்ஸ் சொன்னார். “கொலாப்ஸ் ஆயிரும்”

“ஏங்க, அவங்கனால முடியலீல்லங்க” நடந்து வந்து கொண்டிருந்தவளை நடக்கவிடாமல் நிறுத்தி வைத்தான் செந்தில்.

“நடக்கணும் தம்பி. பெட்லயே இருந்ததால அப்டி இருக்கும். கொஞ்ச சமயம் பழகீரும். நடக்கிறது ஹெல்த்துக்கு நல்லது” செந்திலின் கோரிக்கையை மறுத்து நர்ஸ் வாசல்வரை உடன் வந்தார்.

வாசலில் குதிரைவண்டிக்குப் பதிலாக டாக்சி வைக்கலாமா என்றேன். சித்ரா அத்தனை வெறிச்சியிலும் என்னை முறைத்தாள். செந்தில் டாக்சி நோக்கி நடந்தான். “அந்த மடப்பயலக் கூப்புடும்மா. இவன எதுக்கு கூட்டி வந்த ?” எனக் கடிந்தாள். என்னைவிட அவன்தான் வேலைக்குப் போகாமல் முழுசும் பக்கத்திலேயே இருந்தவன்.

“இல்லங்யா, குதுர வண்டிதா கொஞ்சம் மெதுவா அனுசரிச்சுப் போகும்” சித்ராவின் அம்மா தனக்கே உரிய மென்மையுடன் பேசலானார்.

குதிரைவண்டியில் ஓட்டுநருடன் சமமாக உட்கார்ந்து கொண்ட செந்தில் வண்டியை எந்த திருப்பத்திலும் குலுங்கவிடாமல் வண்டிக்காரருடன் இணைந்து வண்டியை நடத்திப்போனது என்னை ஆச்சர்யப்படுத்தியது. ஆனாலும் குதிரைவண்டிக்கே உரித்தான அந்த அலுங்கலைத் தவிர்க்க முடியவில்லை. பலமுறை “யம்மா . . யோ . .” என சித்ரா வேதனைக் குரல் விடுகிற போதெல்லாம் விருட்டென, அக்காவைப் பார்ப்பதும், குதிரையை அதட்டுவதுமாக வண்டிக்காரனின் வெறுப்பினை சம்பாதித்தான். செந்திலின் அச் செய்கைகள் விசித்திரமாய் இருந்தது எனக்கு.

பேருந்து நிலையத்துக்கு வந்ததும் செந்தில் ஒரு காப்பிக்கடையில் எங்களை நிறுத்திவிட்டு “ஒர் நிம்சம் மாமா” என எங்கோ விரைந்தான். காப்பி வாங்கிக் கொடுத்து குடித்து முடித்த பின்னும் செந்திலைக் காணவில்லை. பேருந்துகள் வந்து போய்க்கொண்டே இருந்தன. எல்லோருக்கும் செந்தில்மீது கோபம் ஏறிக்கொண்டிருந்தது. நான் மெதுவாக சித்ராவிடம், ”டாக்சி வச்சிரலாம்மா. கொஞ்சம் செலவானாலும் பரவால்ல“ என்றேன். “ஏரோப்ளான் கொண்டுவாரதுனா வரேன். அதேன் அலுங்காம வீட்ல எறக்கிவிடும்.” என்றாள்.. நக்கலாக.

எல்லோருடைய வசவுகளுக்கும் மத்தியில் செந்தில் வந்தான். அவனுடைய நண்பனின் டாக்சி இங்கே ஓடுகிறதாம். ஆனால் இப்போ சிறுவேலையாய் ஒர்க்சாப்பில் இருப்பதால் ”லேட்பண்ணி போகலாமா” எனக் கேட்டான்.

சித்ரா, தானாக எழுந்து பேருந்தை நோக்கி நடக்கலானாள்.

அம்மாவும் அவளும் எடுத்த முடிவின்படி தனியார்வண்டி, மற்றும் சாதாரணப் பேருந்து என்றில்லாமல், நகரப்பேருந்தில் ஏற முடிவுசெய்தனர். அதுதான் மெதுவாகப் போகுமாம். நெரிசல் இருந்தாலும் மேடுபள்ளைத்தில் ஏறி இறங்க குலுங்காது. என்றும் மையமான இடத்தில் இருக்கைதேடி உட்கார்ந்தனர், செந்தில் குதிரைவண்டியைப்போல, பேருந்தின் ஓட்டுனர் பக்கம் போய் நின்றுகொண்டான். அவரிடம் ஏதோ பேசி எங்கள் பக்கம் அவரைத் திரும்பிப் பார்க்க வைத்தான். ஆக, பேருந்தையும் செந்தில்தான் ஓட்டினான் எனலாம்.

*

அன்று தொழிற்பேட்டைக்குள் நுழைந்ததும் செந்தில் ஞாபகம் வந்தது. அவன் வேலைபார்க்கும் சேமியா கம்பெனி இதற்குள்தான் இருக்கிறது. இத்தனை தூரம் வந்துவிட்டு அவனை பார்க்காமல் போனால் சங்கடப்படுவான். அதுமட்டுமல்ல நான் வந்துபோனது தெரிந்துவிட்டால் உடனே ஏதாவது காரணம் சொல்லிவிட்டு என்னை சந்திக்க வந்துவிடுவான்.

“பேட்டைக்குள்ளாற வந்தீகளா மாமா “நான் கம்பெனிலதா மாவு பிசஞ்சுகிருந்தே. ஓனர் சொன்னாரு. கைகழுவிட்டு வந்தேன்.”

சரிவரக் கை கழுவாத அடையாளம் அவன் உடலெங்கும் தெரியும். தலைமுடியில் துவங்கி புருவமயிர், பூனைரோமமாய் மேல் உதட்டில் முளைத்திருக்கும் செம்பழுப்பு நிற மீசைமயிர், கீழ் நாடி, கெண்டங் கை ரோமக்கால்கள், பாதத்தின் கணுக்கால் மேல்பகுதி இங்கெல்லாம் பவுடர் போட்டதுபோல் மைதாமாவு ஒட்டிக்கிடக்கும், ’ஏன் தன்னைப் பார்க்க வரவில்லை என சண்டைபோடத்தான் வருகிறான்’ என்று நினைத்துக் கொண்டிருக்கும்போதே வழக்கமான சிரிப்புடன் இரண்டு கைவிரல்களிலும் பசைபோல் ஒட்டியிருக்கும் அந்த மாவினை வாய்ப்பேச்சின் போக்கில் விரல்களால் தேய்த்தும் சுரண்டியும் எடுத்துக் கொண்டிருப்பான்.

விசயம் ஒன்றுமிருக்காது. ஆனால் நான் வந்திருக்கிற தகவல் தெரிந்து விட்டதால், என்னைப் பார்க்கவேண்டும் எனும் ஆவல்..அதற்கு ஏதாவது ஒரு சாக்கு.

அதனால் அவனை அலையவைக்காமல் நானே போய்ப் பார்த்து விடுவது வழக்கம். மேலும் அவன் சம்பளத்துக்கு வேலை பார்ப்பவன்.. என்னதான் நல்ல ஓனராக இருந்தாலும் அவனது வேலையைக் கெடுக்காமல் இருக்க வேணுமானால் நானே போய்விடுவதுதான் சாலச் சிறந்தது. பெரும்பாலும் அப்படித்தான் போய்விடுவேன். எனக்கும்கூட ஒருஆவல் உண்டு. அவனைப் பார்ப்பதைவிட, என்னை அவன் எதிர்கொள்ளும் விதம்தான் கவிதையாக இருக்கும். அந்தத் தருணத்தை தரிசிப்பதற்காகவே நான் சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொள்வேன்

இப்போதும் கூட ஒரு நிலுவை பாக்கியை வசூலிக்கவே நானும் பங்குதாரர் ஒருவரும் பேட்டைக்குள் வந்திருந்தோம். வேலையினை முடித்துவிட்டு பங்குதாரரைக் கழட்டிவிட உத்தேசித்திருந்தேன்.

ஆனால் தான் இதுவரை சேமியா தயாரிக்கும் கம்பெனியைக் கண்டதில்லை என பங்குதாரரும் கூடவே வந்துவிட்டார்.

நாங்கள் கம்பெனிக்குள் நுழைந்த சமயம் களத்தில் முறுகலாய்க் காய்ந்து கொண்டிருந்த சேமியாவை தொரட்டிக் கம்பு கொண்டு ஒருபெண் கிளர்த்தி விட்டுக் கொண்டிருந்தார். பாய்லரில் நீர்த் திவலைகள் சொட்டச் சொட்ட மேலே நீராவி வெளிக்கிளம்பி குபுகுபுவென சென்று கொண்டிருக்க அவித்த சேமியாவை ஆவியுடன் நீளமான கழி ஒன்றில் கோர்த்து, அக் கழியினை ஒரு மர ஸ்டாண்டில் தொங்கவிட்டுக் கொண்டிருந்தான் செந்தில். நான்கடி நீளத்தில் அடித்துப்போட்ட பாம்பாய் சேமியா கைத்தறி நூல் பாவினைப்போல ஊசலாடிக் கொண்டிருந்தது. :”இதுதான் ரோஸ்ட்டேடு சேமியா” என்றேன். “அவிச்சிருக்கே ?” திருப்பிக் கேட்டார் பங்குதாரர். “அதான் சிமெண்ட் களத்தில சுருளச்சுருளக் காய விடுறாகள்ல. நாளைக்கு வந்து பாருங்க” விளக்கம் அளித்தேன்.

அப்போது மெசின்கள் பெருத்த ஓசையுடன் இயங்கிக் கொண்டிருந்த ஒரு அறையிலிருந்து செந்தில் வயதொத்த இளைஞன் ஒருவன், மலைப்பாம்பைத் தூக்கிவருவதுபோல தனது இருகைகளிலும் தாங்கமாட்டாத பளுவுடன் சேமியா தறி ஒன்றைச் சுமந்துகொண்டு வந்து பாய்லரில் சேர்க்காமல் கொஞ்சம் தள்ளி வேறொரு ஸ்டாண்டில் தொங்கவிட்டான். உடனே இன்னொருவன் அந்தத் தொங்கலை வாங்கி சரசரவென கழியின் நீளத்துக்குப் பரசிவிட்டான்.

“இதுதான் சாதாரண சேமியா, பச்சமாவ அப்பிடியே தண்ணிவிட்டுப் பெனஞ்சு மிசின்ல குடுத்துப் பிழிஞ்சு இடியாப்பமா காயவிட்டுடுவாங்க. காஞ்ச இடியாப்பந்தே சேமியா”

“இடியாப்பம் அரிசிமாவு, சேமியா, மைதாமாவு” சட்டெனப் புரிந்தவராய்ப் பதில் சொன்னார், பங்குதாரர்.

அதற்குள் செந்திலின் ஓனர் வந்துவிட்டார். அட்டக் கருப்பில்லாமல் அடையாளக் கருப்பும், இளந்தொந்தியும் கைலிவேஷ்டியுமாய் உடம்பில் சட்டையில்லாமல் வேலையாட்களைப்போல கைபனியனுடன் நின்றிருந்தார்.

“செந்திலு . நம்ம தொழில் ரகசியம் பூராத்தியும் ஒம் மாமனுக்கு சொல்லித் தந்திட்ட போல . . எதுக்க ஒரு பட்றயப் போட்றாதடா சாமி” கிண்டலும் சிரிப்புமாய் ஓனர் செந்திலை இழுத்து வைத்துப் பேசினார். அவனும் கிட்டத்தட்ட அவரது கோலத்திலேயே நின்றிருந்தான். இளந்தொந்தியும் ஊளைச்சத்தும் மட்டும் இல்லை. மற்றபடி இருவரையும் மைதா மா பவுடர் உச்சந்தலையிலிருந்து பாதம் வரைக்கும் ஆக்கிரமித்திருந்தது.

“மாமாக்கு மாவு மிக்சிங் தெரியாது ண்ணே”

“ஆமா, அது பெரிய தங்கமலை ரகசியம் பாரு”

“எப்படி தயாரிச்சாலும் மார்க்கெட்டிங்தான முக்கியம் !” என்றேன் நான்.

“அதுமட்டுமில்ல. குவாலிட்டி இருக்குல்ல. ரா மெட்டீரியல்ல கவனம் வேண்டியிருக்கு. அசந்தம்னா மாத்தி விட்டுடுறாங்கெ”

“பேக்கிங்கப் பாத்தே எங்க ஓனர், மாவு தரத்தக் கண்டுபிடிச்சிருவார்” என்று செந்தில் ஒருமுறை சொன்னது ஞாபகத்தில் வந்தது.

“அவகவக அவகவக தொழில ஒழுக்கமாக் கவனிச்சாலே தொழில் நம்மளக் கவனிச்சுக்கும் தம்பி” எனது பங்குதாரர் ஏகாந்தமாய்ப் பேசலானார்.

“நூத்துக்கு நூறு அண்ணாச்சி சொல்றது உண்ம” ஓனர் அவரைக் கட்டி அணைக்காத குறையாய் அருகில் வந்து பாரட்டினார்.

அப்போது ஒருபெண் எவர்சிலவர் தூக்கில் காப்பியும் இடதுகையில் எண்ணை மலிந்த ஒரு காகித பொட்டலமும் கொண்டு வந்தார்.

“செந்தில், ஒம் மாமாக்கு காப்பியக்குடு. காப்பி கம்பெனி சப்ளை. வடைபார்சல் செந்தில், அவெ மாமாக்காக பெசல் சப்ளை” கண்ணடித்துச் சொன்னார்.

“சும்மா சொல்றார் மாமா” வெட்கத்துடன் காப்பித் தூக்கினை அந்தப் பெண்ணிடமிருந்து வாங்கிக்கொண்டான் செந்தில். டம்ளரும் சேர்த்துக் கொடுத்துவிட்டுப் போனார் அந்தப்பெண்.

பள்ளிப்படிப்பினை ஒன்பதாம் வகுப்போடு முடித்துக்கொண்ட செந்தில் அன்றிலிருந்து இத்தனை காலமும் வேறு எந்த இடத்திற்கும் இடம்பெயராமல் சேமியா கம்பெனியிலேயே நிலைத்துப் போனான். அந்த ஒட்டுதலில் அவனது ஓனரும் அவனிடம் வேலையாளுக்கும் மேலான கூடுதல் அக்கறை வைத்திருந்தார். அது தொழில் ரீதியான சாணக்கியத்தனமாகவும் இருக்கலாம். ஆனால் செந்திலுடனான அவரது நெருக்கம் தொழில் உறவினைத் தாண்டியதொரு அன்னியோன்யத்தைக் காட்டியது.

“ஆ மா, மாமா வந்தா தனிக் கவனிப்பு இருக்கணும்ல.” பங்குதாரர் செந்திலை பரிகாசம் செய்தார்.

“அதெல்லாம், மாமெ மச்சினெ ரெண்டுபேரும் சூப்பர் ண்ணாச்சி. சும்மா சொல்லக் கூடாது. நாங்கூட இப்பிடியேல்லா பாத்தது கெடையாது.” என்ற ஓனர், “நானுமே சொந்த அத்த மகளத்தே கட்டியிருக்கேன். எங்க மச்சினெங் கூட ஒருநாள் ஒருபொழுது சேர்ந்து ஒக்காந்து சாப்பிட்டதில்லை. நா உட்கார்ந்தா அவர் நிப்பார். அவர் உட்கார்ந்தா நா நிப்பேன். அத்தனை ஒரு இது . .!” ஓனர் வார்த்தை கிடைக்காமல் திணறினார்.

“மரியாதை !” பங்குதாரர் எடுத்துக் கொடுத்தார்.

ஓனர் இகழ்ச்சியாய் சிரித்தார். “அது மரியாதையா ? ஒட்டாத ஒரு போக்குதே. இடைவெளி னு வச்சிக்கங்க”

“அதாங்க மரியாதங்கறது. அக்கா புருசங்கற ஒரு கெம்பிரிக்கம் எப்பிடி வரும் ? அப்பிடி கண்ணுல பாத்தாலே காரியம் மடமடன்னு நடக்கணும்”

“அப்படின்னா செந்தில் வீட்ல அவக மாமா வீதில வரும்போதே வீட்ல தீப்பிடிக்கும் போல. அதான் மாமனும் மச்சினனும் இத்தன பிரியமா இருக்காங்க”

“இருக்கலாம் இருக்கலாம். ஒன்னவிட்டு ஒன்னுபிரியாத லவ்பேர்ட்ஸ் மாதரில்ல இருக்காங்க”

சொல்லிவிட்டு ஓனரும் பங்குதாரரும் சிரித்தனர். நானும் செந்திலும் இவர்களுக்கு என்ன பதில் சொல்வதென விளங்காமல் நின்றோம். எப்படி விளங்கவைப்பதெனவும் தெரியவில்லை. எதற்கு விளங்கவைக்கவேண்டும் எனவும்தோன்றியது.

அப்போது எச்சில் தம்ளர்களை எடுக்கவந்த அந்தப்பெண், “ஊர்ல மாமனும் மச்சினனும் ஒத்துமையா இருக்கது யாருக்குமே கிண்டலாத்தே இருக்கும் செந்திலு”

“நாங்க என்னா அடிச்சு மல்லுக்கட்டவா சொல்றோம்”

“ஆனா உம்மையிலயே அவங்களுக்குள்ளாறதா ங்யா பாசமும் பத்தும்(பற்று) கூடுதலா இருக்கும். ஏந் தெரியுமா ரெண்டுவேத்துக்கும் எடையில அக்கா தங்கச்சிங்கற பொம்பள இருக்கா”

“ஆமா, எம் மனைவி மேல என்னைவிடவும் அதிகமா அக்கறையும் பாசமும் வச்சிருக்கற ஒரு மனுசனை நா வேற எப்படி பாக்கமுடியும்.” என்றபோது செந்தில் என் கையிலிருந்த டம்ளரை வாங்கி அந்தப்பெண்ணிடம் தந்தான்.

“நீங்க சொல்றதப் பாத்தா, கட்டுனவளக் கொண்டாடுறவகதான் மத்தவங்களயு மதிப்பாங்கனு சொல்றீங்க”

“இத எழுத்துல எழுதி சொவத்துல ஒட்டுங்கய்யா அப்பத்தே நம்புவாங்க” அந்தப்பெண் சிரித்துக்கொண்டே நகர்ந்தார்.

– டிசம்பர் 2017

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *