நத்தார்ப் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே இருக்கின்றன. பக்கத்து வீட்டுக்கார கிறிஸ்வத குடும்பத்தினர், நத்தார்ப்பண்டிகையைக் கொண்டாட, பலகார வகை செய்யும் ஆரவாரம் குமாரின்; கவனத்தை இழுக்கிறது. பக்கத்து வீட்டாருக்கு அண்டை அயலாரானவர்களைப் பற்றிய பெரிய சிந்தனையற்றுத் தங்கள் வேலைகளில் கவனமாக இருக்கிறார்கள். குமாருக்கும்; பக்கத்து வீட்டாரைப் பற்றிச் சிந்திக்க அதிக நேரமில்லை.
அவனின் அந்தக் கிராமத்துக்குள், சிங்கள இராணுவம் ரோந்து வந்துபோய் ஒரு மணித்தியாலமாயிருக்கலாம்.அதன்பின் ஊர் மக்கள் அவசர அவசரமாகத் தங்களின் அன்றாட வேலைகளைக் கவனிக்கத்தொடங்கி முடிக்கப் போகிறார்கள். ஓன்றிரண்டு நாட்களுக்கு முன், ஊருக்கு ஒன்றிரண்டு மைல்களுக்கப்பால்,தமிழ்ப் போராளிகள் புதைத்து வைத்திருந்த குண்டு வெடித்ததில் இரு இராணுவ வீரர்கள் இறந்து விட்டார்கள்அதைத் தொடர்ந்து, ‘பயங்கரவாதத் தமிழ்ப்புலிகளைத்தேடி’ இலங்கை அரசபடையினரால் ஊரெல்லாம் வேட்டை நடக்கிறது.
சிங்கள இராணுவம் ஊரை நோக்கி வருவதைத் தெரிந்து கொண்ட தமிழ் இளைஞர்கள், அவர்களின் பிடியிலிருந்து தப்புவதற்காகப் போகவேண்டிய இடங்களுக்குப் பாய்ந்தோடிப்போய், பதுங்கிக் விடுவார்கள். சிங்கள இராணுவத்தின் ஒரு படைத்தளம் அவர்களின் ஊரைத் தழுவியோடும் தில்லையாற்றங்கரைக்கப்பாலிருக்கிறது.
அவர்கள்,தங்களின் இராணுவ வண்டிகளில் பெரும் திரளாக,அங்கிருந்து புறப்படுவதை,ஆற்றுக்கப்பாலிருக்கும் ஊர் மக்கள் தெரிந்து கொள்வார்கள். அந்தப் படையினர், தமிழர்கள் வாழும் எந்த ஊர்களில் நுழையப்போகிறார்கள் என்று தெரியாவிட்டாலும், தமிழர்களின் ஒன்றோ இரண்டோ ஊர்களுக்குள் அவர்கள் நுழைந்து துவம்சம் செய்யால் விடப்போவதில்லை என்பது அண்டை அயலிலுள்ள தமிழ் ஊர் மக்களுக்கு நன்றாகத் தெரியும்.
இன்று காலை, வானம் மிகவும் மப்பும் மந்தாரமாகவிருந்தது.போன கிழமை முழுவதும் பெரும் மழையாக இருந்தது.இந்தக் கிழமை முழுதும் வானம் மிகவும் சோகமாகக் காட்சியளிக்கிறது.கணவனிடம் அடிவாங்கிய மனைவியின் முகம்போல் வானம் கறுத்துக் கிடக்கிறது. மனைவியிடம் கோபம் கொண்ட கணவன்போல் இடியும் மின்னலும் வானத்துக்கு அடிபோட்டுக்கொண்டிருக்கிருந்தன.
போனகிழமை பெய்த மழைக்குப் பொங்கி நிரம்பி வழிந்தோடும் தில்iயாற்றில்,எருமை மாடுகள் சோம்பேறித்தனத்துடன் சுருண்டு படுத்திருக்கின்றன. தில்லையாற்றில் உயர்ந்து வளர்ந்து கிடக்கும் நாணற் புற்களை வெள்ளம் மறைத்து விட்டதால்,அதில் ஒளிந்திருந்து மீன் பிடிக்கும் செங்கால் நாரைகள்,பிடிவாதமாகத் தங்கள் கழுத்துக்களை வெட்டிமடித்து நுரையோடும் நீரில் மீன் தேடிக்கொண்டிருந்தன. இந்தத் தில்லையாற்றின் நீரோட்டத்தைத் தெளிவாகக் காணமுடியாது.ஏனெனில் ஆயிரக் கணக்கான செங்கால் நாரைகள்,தங்கள் நீண்ட கால்களால்,நீரை மறைக்குமளவுக்கு பரந்திருப்பார்கள்.சிங்கள இராணுவம் அடுத்த கரையில் இராணுவ முகாம் போட்டபின் நாரைகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டு வருகின்றன.அவர்களின் துப்பாக்கி வெடிச்சத்தங்களுக்குப் பயந்த பறவைகளும்,இராணுவத்துக்குப் பயந்தோடும் தமிழர்கள்போல் அகதிகளாக ஓடிக் கொண்டிருக்கின்றன.
சாதாரண காலமென்றால், தில்லையாற்றில் புதுவெள்ளம் பெருகினால், கிராமத்துச் சிறுவர்கள் தில்லையாற்றில் நீந்தி விளையாடுவார்கள். தமிழர்விடுதலைப் போராட்டத்தால், தமிழ்ப்பகுதிகளுக்குச் சிங்கள்,இராணுவம் வந்தபின், சனங்களின் சாதாரண நடமாட்டம்,வாழ்க்கைமுறை,சமயச் சடங்குகள்,மரணக்கிரியைகள், கல்யாண ஊர்வலங்கள் என்பன இராணுவத்தின் சட்டதிட்டங்கள்படி நடக்கவேண்டியிருக்கின்றன.
குமார், ஓட்டை விழுந்த தனது சைக்கிள் டையர்களைத் திருத்திக் கொண்டிருந்தான்.அவன் சந்தைக்குப் போய் அம்மாவுக்கு மருந்து வாங்கவேண்டும்.அம்மாவுக்குக் கடந்த சில மாதங்களாகச் சரியான சுகமில்லை. அவளுக்கு அடிக்கடி தலையிடி வருகிறது. இருதயம் படபடவென அடிக்கிறது. சிலவேளைகளில் தலைசுற்று வருகிறது என்று படுத்துக் கொள்கிறாள்.
அப்பா இறந்ததிலிருந்து அவள் இடைவிடாமல் அழுதுகொண்டிருந்தாள். நாற்பத்தைந்து வருட திருமண உறவில் ஒன்றாயிருந்த, அவளின் உடல்,பொருள், ஆத்மீகத் தொடர்பு சட்டென்று மறைந்ததும் அவளின் வாழ்வில் பாதிபறிபோன தவிப்பு.தன்னைத் தனிமையிற் கண்டசோகம்,அவளை வெகுவாகப் பாதித்து விட்டது. அப்பா நீண்டகாலமாகச் சுகவீனப்பட்டு, வைத்தியசாலைகளுக்கு அலைந்து கொண்டிருந்தார். அம்மாவும் அவருக்காகத்; தன்னை மறந்து வாழ்ந்து கொண்டிருந்தாள்.
…………………………………………………….
அப்பா போனவருடம்,கிட்டத்தட்ட இதே காலகட்டத்தில்,குளிருக்குக் கம்பளிப் போர்வையாற் போர்த்துக்கொண்டு படுத்திருந்தவர், நெஞ்சைப் பிடித்துக்கொண்டு மூச்செடுக்கக் கஷ்டப்பட்டுத் தவித்தார்.
அவர் காலடியில் எப்போதும் படுத்துக் கிடக்கும் கறுப்பன் நாய், அவர் நிலையைக் கண்டு முனகிக் கொண்டு அவரைப் பரிதாபத்துடன் பார்த்தது. அம்மா அழுது கொண்டு அப்பாவின் நெஞ்சைத் தடவி விட்டாள்.அக்கம் பக்கத்தார் ஒன்று இரண்டுபேர் என்று வரத் தொடங்கி அரைமணித்தியாலத்தில் ஊரின் பெரும்பான்மையான மக்கள் அப்பாவைச் சூழ்ந்து கொண்டார்கள்.அவருக்கு என்ன? ஏது?என்று கேட்க யாருக்கும் அவசியமிருக்கவில்லை. அவர் நீண்ட காலமாகச் சுகமில்லாமலிருந்தவர். இப்போது நிலமை மோசமாகி விட்டது. நல்ல மனிதர்கள் இந்த மண்ணுலகை விட்டு விண்ணுலகம் செல்வதைத் தங்கள் உள்ளுணர்வால் உணர்ந்து கொள்வார்களாம். அப்பா நல்ல மனிதர் என்று ஊர் மனிதர்களால் மதிக்கப் பட்டவர்.
அவரைச்சுற்றி, அம்மா, அவரின் குழந்தைகள், பேரப் பிள்ளைகள்,உற்றார் உறவினர், ஊரிலுள்ள பெரும்பான்மையோர் சூழ்ந்து நின்றார்கள். அப்போது காலை எட்டு மணியிருக்கும்,தூரத்தில் கோயில் மணியடித்துக்கொண்டிருந்தது. மார்கழித் திருவெம்பாவைப் பாடல்கள் லவுட்ஸ்பீக்கரில் ஒலித்துக்கொண்டிருந்தது.அந்த தெய்வீக ஒலி ஊரின் ஒவ்வொரு மூலை முடக்குகளிலும் அலையாகப் பிரவகித்துக்கொண்டிருந்தது.
அப்பாவின் உதடுகள் மெல்ல முனகின.’போகும் நேரம் வந்து விட்டதே’; பனித்திருந்த அவர் கண்கள் தன்னைச் சூழநிற்கும் மனிதர்களைத் தாண்டி பிரபஞ்சத்தை வெறித்தது.அம்மா தனது வாயில் சேலையை அடைத்துக்கொண்டு விம்மினாள்.
‘குமார்..மகனே குமார்…’மடைசி மகனின் பெயரை அவர் மந்திரம்போல் முணுமுணுத்தார். அதுதான் அவரது கடைசி வார்த்தை. அவன் அந்த நேரம் கோயிலில் கடவுளின் கடமை செய்து கொண்டிருந்தான்.
……………………………………………………………………………
”என்ன எங்கேயோ வெளிக்கிடுமாப்போல…’ குமார் தனது சைக்கிள் திருத்தும் வேலையை நிறுத்திவிட்டுக் குரல் வந்த திசையை ஏறிட்டுப்பார்த்தான்.
பக்கத்து வீட்டு கிறிஸ்தவப் பையன்-குமாரின் சினேகிதன் அருள் நின்று கொண்டிருந்தான். அருள் என்று அழைக்கப்படும் அருள்நாதனுக்குக் குமாரின் வயது. இருவரும் நெருங்கிய நண்பர்கள்.அருள் இப்போது பட்டணத்தில் வேலை செய்கிறான். அவனும் குமாரும் அடிக்கடி சந்திப்பது மிகக் குறைவாகி விட்டது. குமார் ஆசிரியர் பயிற்சிக்கலாசாலைக்குத் தெரிவு செய்யப் பட்டிருக்கிறான்.
‘அம்மாவுக்கு மருந்து வாங்க மார்க்கெட்டுக்கு ஒருக்காக் கட்டாயம் போகவேணும்’ குமார் சைக்கிளைத் துடைத்துக்கொண்டு சொன்னான்.
அருள் தயங்கியபடி நின்றான். அவன் ஏதோ சொல்லப் போகிறான் என்று குமாருக்கு விளங்கியது.
கிணற்றடியில் பெரியக்கா துணி துவைத்துக்கொண்டிருந்தாள். பப்பாளி மரத்தடியில் சின்னக்கா கோழிகளுக்குத் தீனி போட்டுக்கொண்டிருந்தாள்.அருள்நாதன் சுற்றும் முற்றும் பார்த்தான். அருள் மெல்லமாக வந்து குமாரின் அருகில் குந்தினான். நிலம் ஈரமாகவிருந்தது. குமார் மௌனமாகவிருந்தான்.அருளின் கைகள் ஈரமண்ணில் கோலம் போட்டுக் கொண்டிருந்தன.
‘ரதி…’அருள் மெல்லமாக, குமாருக்கு மட்டும்கேட்கத் தக்கதாக முணுமுணுத்தான். குமார் இப்போது நிமிர்ந்து,நேரடியாகத் தன் நண்பளைப் பார்த்தான்.
ரதி என்ற அந்தக் கிராமத்து அழகு தேவதை, குமாரின் அன்பக்குரியவள். அவனின் நினைவு தெரிந்த நாளிலிருந்து அவனின் நெஞ்சில் குடியிருப்பவள் அவள். தூரத்துச் சொந்தம். அந்த ஊரில் மிக மிகப்பணக்காரி.
அவளின் தகப்பனின் நூற்றுக்கணக்கான ஏக்கர் காணிகளுக்க ஏகபோக வாரிசு. அவளின் அப்பாவின் செல்ல மகள்.குமாரின் ஆசைக்காதலி.பட்டணத்தில் படித்தவள். குமாரை விட,இன்னுமொரு மொழியை இலகுவாகப் பேசும் திறமையுடையவள். விடுமுறைகாலத்தில் இந்தியாவுக்குப்போய்ப் பட்டுச்சேலைகள் வாங்கும் ஆடம்பரக்காரி.
குமார் என்ற இராஜ்குமாரின் வாழ்க்கையிற் தன்னை ஒன்றாகப் பிணைக்கத் துடிப்பவள்.ஆனால் அவளைக்கண்டோ அல்லது அவளுடன் குமார் பேசியோ இரண்டுமாதங்களாகி விட்டன. காதலர்களுக்குள் சில தகராறு. ஊடலின் உழைச்சல் தாங்காது தவிக்கிறார்கள்.
‘ரதி உன்னைப்பார்க்கவேணுமெண்;டு சொன்னாள்’ பெரியக்கா தொம் தொம் என்று துணியைக் கல்லில் அடித்துக்கொண்டிருந்தபோது அருள் பட்டென்று குமாருக்குச் சொன்னான்.அக்காவுக்கு ரதியின் விஷயம் தெரியாமலிருக்க அருள் மெல்லமாகப் பேசிக் கொண்டிருந்தான்.
சின்னக்காவின் பையன் வளவு மூலையிலிருந்து மலம் போய்க்கொண்டிருந்தான்.
வானம் இடிக்கத் தொடங்கி விட்டது. வீpட்டுப் பெண்கள் அவசரமாகத் தங்கள் வேலைகளை முடித்துக்கொண்டிருந்தார்கள்.தெருவிற் கிடந்த சொறிநாய் ஓலமிட்டது.
மழை எப்போதும் சோவென்று பெய்யலாம்.
ரதியின் பெயர் குமாரின் மனதில் இனித்தது.இரண்டுமாதங்கள் அவளுடன் பேசிக்கொள்ளவில்லை.அது இரு யுகங்களாக இருந்தது.அந்தத் தவிப்பை அவன் என்னவென்று தாங்கிக்கொண்டான் என்று அவனுக்குத் தெரியாது..
சிலவேளைகளில் அவள் வீட்டைத்தாண்டி அவன் தனது பைசிக்கிளில் போகும்போது அவளைக் கண்டிருக்கிறான்.அவள் இவனை முறைத்துப் பார்ப்பாள்.இவனும் பதிலுக்கு அவளை முறைத்துப் பார்ப்பான்.
அவர்களுக்கள் ஊடல் வந்து எத்தனையோ தரம் ஒருத்தருடன் ஒருத்தர் பேசாமலிருந்திருக்கிறார்கள். ஆனால் இரண்டு மாத இடைவெளிக்கு அவர்களின் மௌனம் தொடரவில்லை.அவள் மிகப் பிடிவாதம் பிடித்தவள்.அவள் தனது பிடிவாதத்திலிருந்து இறங்கி வரவேண்டும் என்ற அவன் எதிர்பார்த்தான்.
இப்போது அவள் அவனைப் பார்க்கவெண்டுமாம். குமார் தனக்குள் சந்தோசத்துடன் சிரித்துக்கொள்கிறான்.
‘சரி நீ மார்க்கட்டுக்கு வாறியா’ குமாரின் சினேகிதனைக் கேட்டான்.
‘இப்ப ஏலாது’ அருள்;; தர்மசங்கடத்துடன் சொன்னான்.
‘ஏன்?’
‘ஆச்சி மா வறுக்கவேணுமாம்…விறகு பிழந்து கொடுக்கவேணும், பின்னேரம்…? ;’
ரதி ஆணையிட்டதும் ஓடவேண்டும் என்று என்ன இருக்கிறது? குமார் தயங்கினான்.
‘ரதிக்கு என்ன சொல்ல?’அருள் முணுமுணுத்தான்.
வீட்டு மண்டபத்தில், குமாரின் மருமகள் ஒருத்தி ரேடியோவின் சரியான அலைகளைப் பிடிக்கத் திருப்பித் திருப்பி முயற்சி செய்து கொண்டிருந்தாள்.
குமார் திரும்பிப் பார்த்தான். அம்மா இருமிக் கொண்டே,குசினியில் ஏதோ செய்து கொண்டிருந்தாள். பாவம் அவள்,இரவெல்லாம் சரியான தூக்கமில்லாமல் முனகிக் கொண்டிருந்தாள்.
அருள் தனது சரத்தை மடித்துக் கட்டிக்கொண்டு எழுந்திருந்தான். வானத்தில் சராமாரியாக இடி தொடங்கிவிட்டது.மழைத்துளிகள் பொட்டுப் பொட்டென விழுந்து நிலத்தை முத்தமிட்டுக்கொண்டிருந்தன.
‘ரதிக்கு என்ன சொல்ல?’ அருள் இரண்டாம் தரமாகக்கேட்டான்.
ஓருசில நிமிடங்களின் பின்,’ வழக்கம்போல…’ குமார் சினேகிதனை நிமிர்ந்து பார்த்துக் குறும்புச் சிரிப்புடன் சொன்னான்.
அருளின் கண்கள் தனது சினேகிதனின் கண்களில் படரும் மலர்ச்சியைக் கண்டு சந்தோசப்பட்டன.
குமார் தர்மசங்கடத்துடன் தலையைத் தாழ்த்திக்கொண்டான்.
இரண்டுமாதங்கள் இறுக்கிப் பிடித்துவைத்திருந்த அவன் பிடிவாதம் அவள் சொல்லியனுப்பிய தூதில் தவிடுபொடியாகச் சிதறின.
‘சரி சரி கெதியாக அவளைச் சந்திக்கிறன் என்டு சொல்லு’ குமார் அவசரமாச் சொன்னான்.
தூரத்தில் கிழவி பார்வதி வந்துகொண்டிருந்தாள். இடித்துப்பொடியாக்கிய வெற்றிலை பாக்கு,அவளின் பொக்கைவாயில் அசைபோட்டது. அவளின் தலை நரைமயிரில் மழைத்துளிகள் நாதம் கொட்டின. கொட்டும் மழைக்குத் தலையை மறைக்கத் தன் முந்தானையால் தலையை மூடிக்கொண்டு ஓடிவந்தாள். இந்தக் கிழவியின் அருமைப் பேரனைச் சில வாரங்களுக்கு முன் இலங்கை இராணுவம் கொலை செய்து விட்டது.
அன்றும், இப்படித்தான் ,இராணுவத்தினர் ஊரை ‘ரவுண்ட அப்’ பண்ணினார்கள். இராணுவத்தைக் கண்டதும்,கிழவியின் பேரன் தன் உயிரைக் காப்பாற்ற ஓடத்தொடங்கினான்.இராணுவம் அவனை நாயைச் சுடுமாற்போல் சுட்டுத்தள்ளிக் கொலை செய்தது. ஊரார் பதற, உற்றார் உறவினர் துடிக்க,தாய்கள் கதறியழ,குழந்தைகள் ஓலமிட,அந்த இளம் உயிர் எல்லோர் முன்னிலையிலும் சுருண்டு விழுந்தது.
பார்வதிக் கிழவிக்கு அந்த நிகழ்ச்சியைக்கண்ட அதிர்ச்சியில் மனம் பேதலித்து விட்டது.அவள் இன்னும் தனது பேரனைத் தேடிக்கொண்டிருக்கிறாள். கிழவியின் பேரன் குமாரின் சினேகிதர்களில் ஒருத்தனாகும்.
கிழவி குமாரனைக் கண்டதும் பொக்கைவாயைத் திறந்து சத்தம் போட்டுச் சிரித்தாள்.
‘குமார் எங்க போகப்போறாய்? வெளிக்கிட்டு நிற்கிறாய்.. என்ரபேரன் இப்ப வருவான் அவனையும் சேர்த்துக்கொண்டுபோ’ மழைக்காக மரத்தினடியில் ஒதுங்கிக்கொண்டு கிழவி குமாருக்குச் சொன்னாள்.
குமார் தான் திருத்திய பைசிக்கிளை மரத்திற் சாய்த்து வைத்துவிட்டு நண்பன் அருளைப் பார்த்தான். அவன் போவதற்கு ஆயத்தமானான்.
‘ரதிக்கு…’ அருள் மேலும் ஏதோ குமாருக்குச் சொல்லத் தொடங்கியதை, அக்கா அவர்களை நோக்கி வருவதைக் கண்டதும் இடை நிறுத்தினான்.
திடிரென்று ஒரு இராணுவ ஹெலிஹொப்டர், அவர்கள் இருக்குமிடதின்மேலே மிக மிகத் தாழப் பறந்தது.
அதிலிருக்கும் சிங்கள இராணுவ வீரர்களின் வலிமைவாய்ந்த துப்பாக்கிகள் , கீழேயிருக்கும் ஊர் மக்களைக் குறி வைத்துக்கொண்டு பறந்தன.
‘ஐயைய்யோ ஏதோ நடக்கப் போகிறது…’ அக்கா பதட்டத்துடன் ஓடிவந்தாள்.
‘ இராணுவம் யாரையோ தேடுகிறார்கள்..’ சின்னம்மாவின் குரலில் பயம் இழையோடியது.
குழந்தைகள் பயத்துடன், தங்கள் அகலவிரிந்த கண்களால் தங்களுக்கு மேலாற் பறக்கும் ஹெலிகொப்டரைப் பார்த்துக்கொண்டு தங்கள் வீடுகளுக்குள் ஓடிமறைந்தார்கள்.
கோழிகள் தங்கள் கூடுகளை நாடி ஓடின.நாய் ஓலமிட்ட அங்குமிங்கும் ஓடித்திரிந்தது.தென்னை.வாழை,முருங்கைமரக் கிளைகளும் இலைகளும் ஹெலியின் வேகத்தால் உண்டாகிய பெரும்பாற்றில் சிலிர்த்தாடின. மாமரத்துக் குயில்கள் மௌனம் சாதித்தன.
ஆச்சி அவசரமாக ஒடிவந்து குமாரை கெதியாக வீட்டுக்குள் நுழையும்படி கத்தினாள்.
அம்மா,தனது முந்தானையிற் கைகளைத்துடைத்தக்கொண்டு குமாரைச் சத்தம் போட்டு உள்ளே வரச்சொல்லிக் கத்தினாள்.
‘நாய்கள்..இனவெறிபிடித்த நாய்கள்’ என்று பறந்து சொல்லும் ஹெலியைப்பார்த்துத் திட்டினாள். சிங்கள இராணுவத்தின் ஹெலிகொப்டர், அந்த சிறு தமிழ்க்கிராமத்தைச்சுற்றி, கோழியை இரைக்குவட்டமிடும் பருந்துபோல வட்டமிட்டுக்கொண்டிருந்தது.
பைத்தியம் பிடித்த பார்வதிக் கிழவி பறந்து செல்லும் ஹெலியைப்பார்த்து கிக்கி கிக்கி என்று தனது பல்லற்ற வாயால் சத்தம்போட்டு விடாமல்ச் சிரித்துக்கொண்டிருந்தாள்.
ஓரு கொஞ்சநேரத்தின்பின் ஹெலி மறைந்து விட்டது. நாய் ஓடிப்போய் திண்ணைத் தொங்கலில் ஒதுங்கிக் கொண்டது.
கோழிகள் தங்கள் கழுத்துக்களை வெட்டி வெட்டி ஆகாயத்தைப் பார்த்தன.குழந்தைகள் பீதியுடன் வீட்டுக்குள் இருந்து வெளியே வந்தார்கள்.
இராணுவ ஹெலிகொப்டர் ஊரைவிட்டு நகர்ந்து கொஞ்ச நேரத்தின்பின்,குமார் சரத்தை மாற்றிக்கொண்டு காற்சட்டை போட்டுக்கொண்டான்.அவன் மார்க்கட்டுக்குப்போய் அம்மாவுக்கு மருந்து வாங்கவேண்டும்..
‘நிலமை சரியில்ல..மார்க்கடடுக்குக் கொஞ்சம் பிந்திப் போவன் அய்யா’ மார்புச் சட்டையணியாத ஆச்சி,வாழைமரத்திலிருந்து சட்டென்று கொட்டிய மழைநீரைத் தனது முந்தானையால் துடைத்துக்கொண்டு குமாருக்குச் சொன்னாள்.
அருள் தலையைச் சொறிந்து கொண்டு தன்வீட்டுப்பக்கம் போய்விட்டான்.
சித்தம் சிதறிய பார்வதிக் கிழவி எதோ புலம்பிக்கொண்டு நின்றாள்.
‘ஓம் தம்பி, கொஞ்சம் பிந்திப் போ ராசா.’அக்கா பாசத்துடன் சொன்னாள்.அவன் அக்காவை நிமிர்ந்து பார்த்தான். அவளுக்கு இப்போதுதான் நாற்பது வயதாகிறது. ஆனால்,தங்களைச் சுற்றி நடக்கும் கொடுமைகளைப் பார்த்து யோசித்து யோசித்து அவள் தலைமயிர் நன்றாக நரைத்துவிட்டது. பற்களும் ஒன்றிரண்டு விழுந்து விட்டன. அவளுக்கு இருமகன்கள். பதினெட்டும், பதினாறும் அவர்களைக் கோழி தனது குஞ்சுகளைத் தனது சிறகில் மறைத்துப் பாதுகாப்பதுபோல,இராணுவத்தினரிடமிருந்து கண்ணும் கருத்துமாகக் காவல்காத்துக் கொண்டிருக்கிறாள்.அந்தக் கவலைகள் அக்காவை உருக்குலைத்துக்கொண்டிருக்கிறது.
‘கொஞ்சநேரத்தில் நிலமை எப்படியிருக்குமோ தெரியாது’ குமார் சைக்கிளைத் தள்ளினான்.வீட்டிலிருந்து, ரோட்டில் வந்து ஏறியதும், கடைக்கார சண்முக மாமா இவனைப் பார்த்தார்.
‘மார்க்கட்டில இராணுவம் நிற்கும் கவனமாகப் போ குமார்’ ஆதரவுடன் மாமா சொன்னார்.அவர் சொன்னது அவனுக்குக் கேட்கவில்லை. குமார் சைக்கிளில் பறந்து கொண்டிருந்தான்.
கொஞ்ச தூரம் சென்றதும், அவனின் அன்புக்குரிய ரதியின் வீட்டில் யாரோ பெரிதான சத்தத்தில் பேசிக்கொண்டிருப்பது கேட்டது. அது அவளின் பணக்கார மாமா சிதம்பரமாகவிருக்கலாம்.அவர் அடுத்த நகரில் பெரிய கடை வைத்திருக்கும் வசதியான வியாபாரி. போகும் இடங்களிற் தனது குரலை உயர்த்தித் தன் அந்தஸ்தைக் காட்டுவார்.
குமாரின் கண்கள் வேலிக்கப்பால் அவனின் நினைவிற் குடியிருக்கும் ரதியைத் தேடின.இன்று இரவு அவளை நீண்டநாட்களுக்குப் பின் சந்திக்கிறேன் என்ற இன்ப உணர்வு அவன் உடலை வெப்பத்திற் தள்ளியது.
இரண்டுமாதங்கள் அவளைச் சந்திக்கவில்லை, அவள் குரலைக்கேட்கவில்லை. எப்படி நான் அவள் தொடர்பில்லாமல் இருந்தேன் என்பது அவனுக்கே ஆச்சரியமாகவிருக்கிறது.
இலங்கை இராணுவத்தின் கெடுபிடிகளால், ஊராரின் சாதாரணவாழ்க்கை அசாதாணமாகிக் கொண்டிருக்கும்போது தனிப்பட்ட உணர்வுகள் தூரத்துக்குத் தள்ளுப்பட்டுப்போனதை அவன் உணர்வான்.
குமார் என்ற ராஜ்குமார் ரதியை எவ்வளவுக்குக் காதலிக்கிறான் என்று அவளுக்குத் தெரியும். அவளது முழுப்பெயர் பகீரதி.அவளை ஆசையுடன் பகீரதி என்ற கூப்பிடுவது அவன் ஒருத்தன்;தான். அதேபோல் அவனை,அவன் பெற்றோரும் உற்றாரும் ஊராரும் குமார் என்று கூப்பிடும்போது அவள் மட்டும்,அவனை,’ராஜன்’ என்றுதான் ஆசையாக அழைப்பாள்.
அந்த ராஜ்குமார், வேலிக்கப்பாலிருந்து அவனுக்கு விழியம்புகள்வீசும் பகீரதியை இன்று இரவு சந்திக்கப்போகிறான்.
அம்மாவும் ஆச்சியும், அக்காவும் அவனை வெளியே போகாதே என்று சொன்னது, ரதியை நினைவுகூர்ந்த அடுத்த கணமே மறந்து விட்டது.
சைக்கிளை உந்தி வேலியால் எட்டிப்பார்த்தான். வாழை மரத்தடியில் அவள் நின்றிருந்தாள். வெளிறிய மஞ்சள் பாவாடையும் சிவப்புச் சட்டையும் அவள் அணிந்திருந்தாள். பச்சை மர வாழை மரங்களுக்கிடையே ஒரு அழகிய பச்சைக் கிளியாகத் தெரிந்தாள் பகீரதி.
அவள் மென்னடை இவனின் இனிய மனஉணர்வில் தாளம் தட்டியது. என்ன ஒய்யாரம் அந்த நடையில்? இவன் சைக்கிள் மணியை அடிக்க அவள் நிமிர்ந்து பார்த்தாள். அவள் இதழ்களில் ஒரு குறும்புத்தனமான சிரிப்பு. அவன் சட்டென்று தன் சைக்கிளை வேலியோரத்தில் நிறுத்தினான். அதன் அர்த்தம் என்னவென்ற அவளுக்குத் தெரியும்.
அவன் தனது சைக்கிளில் ஏதோ பழுதுபார்ப்பதுபோற் குனிந்தான். ரோட்டில் பல வாகனங்கள்.மனிதர்கள் என் நெருக்கடியாயிருந்தது.
வேலிக்கப்பால் ஏதோ ஒரு சரசரப்பு. வேலியிடுக்கால் அவளின் மஞ்சள் பாவாடை ஊர்வலம் வந்தது.
‘தனக்கு வேண்டிய ஆக்களப் பார்க்காம இருக்கிறது பெரிய எண்ணம்தானாக்கும்’அவள் குரலில் செல்லம்.
‘இரண்டு வருஷமா கதைக்காமலிந்தேன்..இரண்டு மாதம்தானே’அவன் குரலில் என்னை மன்னித்துக்கொள் என்ற மன்றாட்டம். வேலிக்கப்பால் பாய்ந்தோடிப்போய் அவளை அணைத்துக்கொள்ள வாலிபம் துடித்தது.
‘ஒரு வரி எழுதியிருக்க முடியாதாக்கும்?’ வேலிக்கப்பால் நின்று கொண்டு அவள் அவனைக் கேள்விக் கணைகளைத் தொடுத்துக் கொண்டிருந்தாள்.
‘ உன் காலடியிற் சரணமடைகிறேன் என்கிறேன்,சந்தோசம்தானே?அவன் குறும்பாகக்கேட்டான். ஊர் நாடகக்கொட்டகையில் பல நகைச்சுவை நாடகங்களை அரங்கேற்றியவன் அவன். அவள் களுக் என்று சிரித்தாள். அந்த வீணையொலி அவன் இதயத்தைத் தடவி,உணர்வுகளைத் தூண்டியது..
‘இரண்டுமாதம்…இரண்டுமாதம், என்னைப்பார்க்காமல் என்னட்டுதான் கல்லுப் பிள்ளையார் மாதிரி இருந்தியளோ தெரியாது’ அவள் பெருமூச்சு விட்டாள்.
‘ உன்னுடைய பொல்லாத வாய்தான் என்னை ஓட ஓட விரட்டி அடிக்குதே’ அவன் சிரித்தான்.
‘சரி..ஆரும் பார்க்கமுதல் நான் வீட்டுக்குள்ள போகவேணும்’ அவள் சிணுங்கினாள்.
‘சரி..இரவு.. வழக்கமான இடத்தில..’ அவன் சொல்லிக்கொண்டிருப்பதை அவள் கேட்கமுடியாமல்,ரோட்டில் ஒரு ட்ரக்டர் இரைந்துகொண்டு போனது.
அவன் மார்க்கட்டை நோக்கிப் பறந்தான்.
அவனின் கால்கள் சைக்கிள் சில்லுகளை உருட்ட,மனம் பகீரதியை நினைத்துப் பின்னோடியது. குமார் சந்தோசத்துடன் சிரித்துக்கொண்டான்.
ஹெலிகொப்டர் திரும்பி வரும் சத்தம் கேட்டது. அவன் மார்க்கட்டை அடைந்து விட்டான்.
…………………………………………….
சந்தையில் இப்போதுதான் வியாபாரம் தொடங்கியிருக்கவேண்டும்.காலையில், சிங்கள இராணுவத்தின் நடமாட்டம் இருந்ததினால், அக்கம் பக்கத்துக் கிராமங்களிலிருந்து,காய்கறி, பால், பழங்கள் கொண்டுவருபவர்கள், தாமதித்து வந்திருந்தார்கள்.
மீன் விற்கும், அகமது காக்கா குமாரைத் தாண்டிப் போய்க்கொண்டிருந்தார். கடற்கரையில் வாங்கிய மீன்கள் பெட்டிகளில் அடுக்கப்பட்டுச் சந்தைக்குப் போய்க்கொண்டிருந்தன.
‘என்ன குமார் இன்னோருதரம் ஹெலி வரப்போகுபோல கிடக்கு’ அகமது குமாரிடம் சொல்லிக் கொண்டிருக்கும்போது ஹெலி மிகவும் அண்மையில் பறப்பது தெரிந்தது.
அவன் சந்தைக்கு வர ஆயத்தம் செய்தபோது, கொஞ்ச நேரம் பிந்திப் போ என்று வீ;ட்டில் எல்லோரும் ஒரேயடியாகச் சொன்னது அவனின் மனதில் பளிச்சிட்டது.அவன் மேலதிகமாக யோசிப்பதற்கிடையில், பலதரப்பட்ட கனரக இராணுவண்டிகள் சந்தையை நோக்கி வந்து கொண்டிருந்தன.
இதுவரையும் அவனின் மனதில் நிழலாடிய ரதியைப் பற்றிய அவன் நினைவு எகிறிக்குதித்துப் பறந்து விட்டது.
சந்தையில் ஒரே அமளி. சாக்குகளையும், படங்குகளையும் விரித்துத் தங்கள் பொருட்களை விற்பனைக்குப் பரப்பியவர்கள், இராணுவத்தைக் கண்டதும்,அவசர அவசரமாகத் தங்கள் பொருட்களைச் சேர்த்துக் கட்டினார்கள். ஹெலிகொப்டர் சந்தையைச் சுற்றி மிகத் தாழமாகப் பறந்து கொண்டிருந்தது. என்னவென்று இத்தனை இராணுவத்தினர் வந்து சேர்ந்தார்கள் என்று யோசிக்கமுதல் நூற்றுக்கணக்கான இராணுவத்தினர் சந்தையிற் குவிந்தனர்.
குமார் தன் சைக்கிளுடன் மரத்தடியில் ஒதுங்கினான். துப்பாக்கிகளுடன் தங்களை நெருங்கிவரும் இராணுவத்தினரைப் அவனைப்போல் பல தமிழ் இளைஞர்கள்,;பயத்துடன் பார்த்தபடி அசையாமல் நின்றிருந்தார்கள்.
‘ யாரும் அசையக்கூடாது. அசைந்தால் நாயைச் சுட்டுவிடுவதுபோல் உங்களைச் சுட்டுத் தள்ளுவோம்.’ ஒரு இராணுவ அதிகாரி அதிகாரத்துடன் பயங்கரக் குரலில் முழங்கினான். தலை நிமிர்ந்து அவர்களைப் பார்க்க குமார் பயந்தான். இவ்வளவு காலமும் இனவெறிபிடித்த சிங்கள இராணுவத்தின் பிடியில் அகப்படாமல் உயிர் தப்பிய தமிழ் இளைஞர்களில் குமாரும் ஒருத்தன்.
இன்று?;
அவனின் நிலை அவனுக்குத் தெரியாது.
இராணுவத்தினர் சந்தையைச் சுற்றி ‘ரவுண்ட் அப்’ செய்து கொண்டிருந்தார்கள்.
அங்கு வியாபார ரீதியாக அல்லது வாடிக்கையாளராக வந்திருந்த பொது மக்களில் தமிழர்கள் என்று சந்தேகப் பட்ட அத்தனைபேரும் சந்தையின் நடுமைதானத்தில் கொண்டுவந்து நிறுத்தப் பட்டார்கள்.
ஓரத்தில் ஒதுங்கி நின்ற குமாரையும் அங்கு வரச்சொல்லி இராணுவ அதிகாரி கத்தினான்.
அவனது சைக்கிளை ஒரு இராணுவச் சிப்பாய் எடுத்து பக்கத்திலிருந்த மரத்தில் ஆத்திரத்துடன் அடித்தான், சைக்கிள் சில வினாடிகளில் உடைந்து தெறித்தது.இன்னொருத்தன் குமாரின் முதுகில் உதைத்தான். மற்றொருவன் ஓடிவந்து ‘பறைத்தமிழா’ என்று சொல்லிக்கொண்டு குமாரின் முகத்தில்காறித் துப்பினான்.
முதுகில் விழுந்த உதையா அல்லது முகத்தில் விழுந்த எச்சிலா அவனது ஆண்மையை உலுக்கியது என்ற குமாருக்குத் தெரியாது.
இப்படிக் கேவலமாக மிருகம் மாதிரி அடிபடுவதைவிட,அவர்களிடமிருந்து தப்பி ஓடினால் அவர்கள் சுட்டுத்தள்ளுவார்கள் அதனால் உனனே உயிர்போகும். அப்படிச் செய்யலாமா என்று ஒருகணம் நினைத்தான். சட்டென்று அம்மாவும் அவனின் ரதியும் அவன் மனதில் நிழலாடினார்கள்.
சந்தை மைதானத்தில், எல்லோரையும் நிறுத்தி விசாரிக்கப்போகிறார்கள்.அதன் பிறகு அவன் எந்த தமிழ் ஆயுதக் குழுவிலும் சேராதவன் என்று தெரிந்ததும் அவர்கள் விட்டுவிடுவார்கள் என்ற நினைத்துத் தன்னைத் தானே சமாதானம் செய்துகொண்டான்.
இவன் நினைப்பதோ,நடக்கவிருப்பதோ எதுவும் அங்கு குவிந்து நிற்கும் சாதாரண மக்களின் கற்பனைக்கும் எட்டாத பயங்கரங்கள் என்பதை அவன் அப்போது அறியவில்லை.அங்கு குவிக்கப்பட்டிருந்த தமிழர்களின் தலைவிதி, சிங்கள இராணுவத்தின் கைகளிலிருந்தது.
அக்கம் பக்கத்திலிருந்து பிடித்துக்கொண்டு வரப் பட்ட நூற்றுக்கணக்கான இளம் தமிழர்கள், ஆடுகள் மாடுகள் மாதிரி, சந்தை மைதானத்தில் கொண்டுவரப்பட்டிருந்தார்கள்.
அவர்களைச் சுற்றி நூற்றுக்கணக்காக இராணுவத்தினர்,இளம் தமிழர்களுக்கு குறிவைத்த துப்பாக்கிகளுடன் படபடப்புடன் நின்றிருந்தனர்.சந்தையைச் சுற்றி ஹெலிகொப்டர் தாழப் பறந்து இரைச்சலையுண்டாக்கிக் கொண்டிருந்தது.
தமிழர்களின் துயர்காணமுடியாத சோகத்தில் வானத்தின் முகம்; கறுத்தது,அவர்களின் துன்பத்தைத் தாங்காத வருண பகவான் எப்போதும் அழுதுகொட்டலாம் என்பது போல் மழைமேகங்கள் திரண்டுகொண்டிருந்தது.
ஆயுதம் தாங்கிய இராணுவத்தினர் எமதூதர்கள்போல் அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்தனர்.அப்போது இராணுவ வாகனத்தில், முகமூடியுடன் கொண்டுவரப்பட்ட ஒருத்தன், இராணுவத்தினருக்குத் தமிழர்களில் யார் பயங்கரவாதிகள் என்று அடையாளம் காட்டிக்கொண்டிருந்தான்.
இந்தமாதிரி முகமூடிமனிதர்களைத்’ காட்டிக்கொடுக்கும் ‘தலையாட்டிகள் என்று தமிழ்ப்பகுதிகளிற் சொல்வார்கள்.
இந்தத் தலையாட்டிகள் ஒருகாலத்தில் ஏதோ ஒரு தமிழ் இயக்கப் போராளியாக இருந்திருக்கலாம் இராணுவத்தினரிடம் பிடிபட்டதும், தனது உயிரைக் காப்பாற்றத் தனக்குத் தெரிந்த பழைய போராளிகளையும் அவர்களுக்கு ஆதரவு கொடுத்தவர்களையும் காட்டிக்கொடுத்துக் கொண்டிருந்தான்.
அந்தத் ‘தலையாட்டி’, தமிழ் இளைஞர்களைக்காட்டிச் சைகை செய்துகொண்டிருந்தான்.பார்வைக்குத் திடகாத்திமாக,ஆரோக்கியமாகத் தெரிந்த தமிழ் இளைஞர்கள்’பயங்கரவாதிகளாக’ இனம் காட்டுப் பட்டுக்கொண்டிருந்தார்கள்.
தலையாட்டியால் இனம்காணப் பட்டவர்கள், குவித்துவைக்கப் பட்டிருந்த கூட்டத்திலிருந்து பிரித்து நிறுத்தப்பட்டார்கள்.
அப்படிப்போகத் தயங்கிய ஒரு இளைஞன் இராணுவத்தின் துப்பாக்கி;யால் அடிக்கப் பட்டு நகர்த்தப் பட்டான்.
இனவெறி பிடித்த இராணுவத்தின் அடிதாங்காமல்,அவன் அலறிய அலறல் அங்கு நிற்போரின் ஆத்மாவைக் குத்திப் பிளந்தது. அடிபட்டவன் தலையிலிருந்து செங்குருதி பிறீட்டு வழிந்து அவன் முகத்தை மூடியது,
அவன் போட்டிருந்த வெள்ளைச் சேர்ட்டில் செங்குருதி கோலம் போட்டது.
அதைப் பார்த்துக்கொண்டு நின்றிருந்த ஒரு தமிழ் இளைஞன் தப்பி ஓட எத்தனித்தான். அவன் இருஅடிகள் எடுத்து வைக்கமுதல்,கண்மூடித்திறப்பதற்கிடையில், அவன் உடலை,இராணுவத் துப்பாக்கி துளைத்தது.
சூடுபட்ட, இளம் தமிழனின் உடல், அவர்களுக்காக அழுதுகொட்டும் மழைத்துளிகள் பூமியில் விழுவதுடன் சேர்ந்து மண்ணில் விழுந்தது.அவனிலிருந்து பீரிட்ட செங்குருதி பக்கத்தில் கைதிகளாக நின்ற தமிழர்களை நனைத்தது.அவனது அசைவு ஒரு கண நேரத்தில் முடிந்தது. ஓடியகால்கள்,ஓலம்போட்டவாய்,ஒரு சில நிமிடங்களில் உயிரிழந்து தரையிற் பிணமானது.
அவனுக்கு இருபது வயதிருக்குமா? இரண்டொரு நிமிடங்களுக்கு முன் மனிதனாக,தமிழன் என்ற அடையாளத்தைக் கொண்டிருந்தவன் மழைத்துளிகளில் நனையும் பிணமாக மண்ணிற் கிடந்தான். அவனின் இளமை, உணர்வுகள்,கனவுகள்,ஒரு இனவாதச் சிங்களச் சிப்பாயால்,ஒருசில வினாடிகளில் நிர்மூலமாக்கப்பட்டுவிட்டது. துப்பாக்கியால் துளைத்தெடுத்த அவனது கடைசி மூச்சு,அவனருகில் நின்ற சிபபாய்களின் அடியுதைகளில் அடங்கியது.
வயலில் ஆடுகளும் மாடுகளும், வானத்தில் பறவைகளும் சுதந்திரமாகத் திரியும் நேரத்தில், தமிழன் என்ற குற்றத்தால் ஒரு இளம் உயிர் பல்லோர் முன்னிலையில் அவசரமாப் பலியெடுக்கப் பட்டுவிட்டது.
குமார் இதுவரையும் இராணுவம் தமிழர்களைச் சிறை பிடித்துச் செய்யும் கொலைகளைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறான்.இரவில் துப்பாக்கிச் சூடுகளையும் மரண ஓலங்களையம் கேட்டிருக்கிறான்.ஆனால் இதுவரையில், அவனது கண்களுக்கு முன்நடக்கும் கொடுமைகளை, கொலைகளை அவன் நேரிற் கண்டில்லை.
குமாருக்கு எதையும் கிரகிக்க முடியவில்லை. தலைசுற்றிக்கொண்டு வந்தது. தன்னைச் சுற்றி நடப்பது ஒரு பயங்கரக் கனவாக இருக்கவேண்டும் என்று அவன் மனம் பிரார்த்தித்தது.
குமாருக்குப் பக்கத்தில்,முன்னிலையில், தூரத்தில் என்று எத்தனையோ தமிழர்கள். சிலர் அவனது உறவினர்கள், சிலர் அவனுடன் படித்தவர்கள். பலர் அவனுக்குத் தெரிந்தவர்கள். ஓன்றிரண்டுபோர் அவனுகுத் தெரியாதவர்கள். எல்லோர் முகத்திலும் மரண பீதி.
‘தலையாட்டியின் சைகையால் ஒன்று இரண்டு என்று தொடங்கிய அடையாளம் காட்டலால் நகர்த்தப்பட்டவர்கள் இப்போத ஒரு பெரிய கூட்டமாகப் பெருகிக் கொண்டிருந்தார்கள்.
நகர்த்ப்பட்வர்களில் பலர் தாக்கப் பட்டார்கள். ஆயுதம் தாங்கிய இராணுவத்தின் மிருகபலம், அனாதைகளாக அகப்பட்டுக்கொண்ட தமிழர்களின், மூக்கில், முதுகில், பிட்டத்தில், வயிற்றில்,தலையிற் கைகால்களில் பயங்கர ஊழித்தாண்டவமாடியது.
குமாருக்குப் பக்கத்தில், அந்த நகரத்துப் பத்திரிகை நிருபர் டேவிட் என்ற கிறிஸ்தவ வாலிபன் நின்றிருந்தான்.அவனைப் பார்த்து,’தலையாட்டி’ சைகை காட்டினான். இராணுவத்தினன் ஒருத்தன் டேவிட்டைத்; தாக்கத் தொடங்கினான்.டேவிட் அலறினான். ஆயுதம் வைத்திருந்த படையினர், ஆயதமற்ற அந்த வாலிபனைச் சித்திவதை செய்தது.டேவிட்டின் கைகளை ஒன்றிரண்டு இராணுவத்தினர் பயங்கரமாகத் தாக்கினர்.
‘இந்தக் கைகள்தானா எங்களைப் பற்றி எழுதியது?’ சிங்களச் சிப்பாய் டேவிட்டின் கைகளைத் துப்பாக்கி முனையால் அடித்தான், இடித்தான். குருதி வழிந்துகொண்டிருந்தது. சில நிமிட நேரத்தில் டேவிட்டின் கைகள் தசைகள் பிரிந்து சிதிலமடையத் தொடங்கின.
பயங்கர மிருகத்தின் வெறியிற் குதறப்பட்ட ஒரு சிறு பிராணியின் தசைகள் நாராக உரிந்ததுபோல் டேவிட்டின் கைத்தசைகள் அவனின் எலும்பை விட்டு விலகித் தொங்கியது.அவனின் நிணநீரும் குருதியும் பீறியடித்தன.
குமாருக்குத் தலைசுற்றிக்கொண்டு வந்தது.
‘இவர்களின் இந்த சித்திரவதை;து அகப்படமல் ஒடினால் உடனே சுடுவார்கள்’இந்தக் கொடுமையைவிட உடனே உயிர் போவது மேலான விடயம்தானே?
குமார் நினைத்ததை அவனுக்குப் பக்கத்திலிருந்த இளைஞன் செயலாக்க முயன்றிருக்கவேண்டும்.
ஆபாயம் வரும்போது எந்த மனிதனுக்கும் அவனின் உயிரில் வரும் அபரிமிதமான ஆசையில் அந்த இளைஞன் ஓடத் தொடங்க பட படவெனப் பல துப்பாக்கிகள் நாலாபக்கமும் வெடித்தன.
எத்தனை தமிழர்கள் அந்த சில கணத்தில் பிணமாகச் சரிந்தார்கள்?
வேட்டையாடுபவர்கள் பறவைகளையும் மிருகங்களையும் இப்படிச் சுட்டுத் தள்ளுவார்களா?
துப்பாக்கிகள் புகை கக்கின. அந்தப் புகையில் சுற்றாடல் இருண்டது.
நரகம் என்ற ஒன்றிருந்தால் அது இப்படியிருக்குமா?
அளவுக்கு மீறிய அதிர்ச்சியால் உடல் பரபரத்து நடுங்கி குமார்; தள்ளாடினான். தலைசுற்றிக் கீழே விழுந்தாலும் தப்பி
ஓட எண்ணியதாகச் சுட்டு வீழ்த்தி விடுவார்கள். அதுவும் ஒரு விதத்தில் நல்லதுதானே?
டேவிட்டுக்கு அவர்கள் இன்னும் அடித்துக் கொண்டிருந்தார்கள். டேவிட் மயங்கி விழுந்தான் அவனின் உடல் குருதியில் நனைந்து தோய்ந்திருந்தது. உடலிலிருந்து அதிக குருதி; போய்விட்டதால்.அவன் முகம் வெளிறியிருந்தது.
தலையாட்டியின் சைகையால் இன்னுமொருத்தன் இழுத்துவரப் பட்டான். அவனிடம் இராணுவ அதிகாரி சிங்கள மொழியில் ஏதோ கேட்டான். இழுத்துவரப்பட்டவன் பதில் சொல்லவில்லை. அவனுக்குச் சிங்களம் தெரியாமலிருக்கலாம், அல்லது நடக்கும் விடயங்களைப் பார்த்த அதிர்ச்சியில் பேச்சு வராமலிருக்கலாம்.
அந்த அதிகாரி பதில் பேசாத அந்த இளைஞனைத் தாக்கினான்.அதிகாரியின்; கையிலிருந்து தடியின் பலத்த அடிக்குத் தமிழனின் தலை பிழந்தது.வாய் பேசாத அந்த இளைஞன் தனக்கு வீழந்து அடியின் கொடுமை தாங்காமல் தரையில் வீழ்ந்தான்.அவன் அழுத விதத்தில் அவன் ஒரு ஊமை என்று தெரிந்தது.
அடுத்ததாக,குமாரை இழுத்துக் கொண்டு அதிகாரிக்கு முன் கொண்டுவந்தார்கள். ‘தலையாட்டி’சைகை செய்தான்.
குமாரும்,’தமிழ்ப் பயங்கரவாதிகள்’ என்று தள்ளப் பட்டிருந்த கும்பலில் நகர்த்தப்; பட்டான். அதே நேரம் தூரத்தில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த தமிழர்கள் அல்லாத பகுதியிலிருந்து யாரோ ஒருத்தன் சிங்கள மொழியில் ஏதோ கத்தினான்.
குமார் அரைகுறையுணர்வுடன் தலைதூக்கிப் பார்த்தான். தூரத்தில் நின்று கத்தியவனைப் பார்த்தான். அவன், ‘இப்போது நீங்கள் பிடித்தவன் தமிழ்ப் பயங்கரவாதியில்லை’ என்று சிங்கள மொழியில் கத்திக் கொண்டிருந்தான். அவன் ஒருகாலத்தில் குமாருடன் படித்தவன். அவன் பெயர் சுமணதாச.
அவன் கத்தியதை யாரும் பொருட்படுத்தவில்லை. குமாருக்குப் பக்கத்தில் நின்றிருந்த சிலர் எந்தக் கேள்வியம் கேட்கப் படாமலயே சுட்டுத் தள்ளப் பட்டார்கள்.வேண்டாத மரங்களை வெட்டித் தள்ளுவதுபோல், தமிழ் உயிர்கள் வெடிபட்டுச் சாய்ந்து கொண்டிருந்தன.
குமாரின் நெஞ்சுக்கு முன் துப்பாக்கி நீட்டப்பட்டது. குழுமியிருந்த கூட்டத்தை விலக்கிக்கொண்டு சுமணதாச ஓடிவந்தான். அவனுக்கு மூச்சு வாங்கியது. குமாருக்கு முன்னால் நின்று கொண்டு,’ இவன் தமிழ்ப் பயங்கரவாதியில்லை’என்று சிங்களத்திலும் ஆங்கிலத்திலும்; சொல்லிக் கொண்டு அதிகாரியின் முன் மண்டியிட்டான்
குமாரின் உயிரைப் பறிக்க உயர்த்தப்பட்ட துப்பாக்கி ஒருகணம் தாமதித்தது. அந்த ஒருகணம் தர்மதேவதை குமாரின் உயிரைக் காப்பாற்ற கண்திறந்த நேரமாகவிருக்கலாம்.உயிர்போவதற்கும் உயிர் பிழைப்பதற்குமிடையிலிருந்து அந்த சில வினாடிகள்,சுமணதாசாவின் கருணையால் குமாரின் வாழ்க்கையைத் திருப்பிவிட்டது.
சுமணதாசாவை நன்றியுடன் பார்த்தான் குமார். சுமணதாச கடவுளாகத் தெரிந்தான்.
சுமணதாசாவின்,; தாய் ஒரு ஏழைத் தமிழ்ப்பெண் குமாரின் ஊரைச் சேர்ந்தவள்.அவனின் தகப்பன் ஒரு சிங்கள மனிதன்.
சுமணதாச,சிறுவயதில் குமாருடன் கிராமத்துப் பள்ளிக்கூடத்தில் ஒன்றாகப் படித்தான்.பின்னர், அவனின் தகப்பனின் ஊருக்குப்போய்ச் சிங்களப்பாடசாலையிற் படித்தான். அவன் தாயின் ஊருக்கு வந்திருக்கும்போது,எப்போதாவது, தெருவில் சந்தையிற் கண்டால், ஒருத்தரை ஒருத்தர் தெரிந்ததாக ஒரு புன்சிரிப்பைத் தவிர இருவருக்குமிடையில் எந்தவிதமான உறவும் கிடையாது.
சிறுவயதில் ஒன்றாகப்படிக்கும்போது,இருவரும் ஒருத்தரை ஒருத்தர் உதைத்துக்கொண்டது ஞாபகம் வந்தது. பின்னேரங்களில், தில்லையாற்றங்கரையில் மீன்பிடித்து விளையாடியது பசுமையான நினைவுகள்.
புத்த விகாரையில் வெசாக் விழாவுக்குப் போயிருந்தபோது, பகீரதியைச் சில சிங்களவாலிபர்கள் ‘சைட’; அடித்தபோது அவர்களிடம் சுமணதாசா பகீரதிக்காகச் சண்டைபோட்டதை ராஜ்குமார் மறக்கவில்லை.
சுமணதாசாவின் தாயின் பெயர் தெய்வயானை. பாய்பின்னிப் பிழைத்தவள்.தகப்பன் சோமபாலா, பேக்கரியில் வேலை செய்துகொண்டிருந்தவன்.
தெய்வயானையும் சுமணதாசவும் கல்யாணம் செய்து வாழ்ந்த கொஞ்சகாலத்தில், பேக்கரியின் முதலாளியின் மகளுடன் சோமபாலாவுக்கு வந்த
காதலால் தெய்வயானையை ஒதுக்கி வைத்துவிட்டான். சோமபால தன் மகன் சுமணதாசவைத் தன் தாயிடம் தனது ஊருக்கு அனுப்பிவிட்டான்.
அந்த வேதனையில் தெய்வயானை, வருத்தம் வந்து இறந்துபோனாள். பல காலங்களுக்குப் பின்,சுமணதாச ஊருக்கு எப்போது வந்தான் என்று குமாருக்குத் தெரியாது.
தங்கள் இளமைக்கால சினேகித்தை நினைவுகூர்ந்தவன், ஒரு தமிழ்த்தாயின் தனயன். பட்டணத்திற் படித்த,சுமணதாசவின் கம்பீரமான தோற்றமும், பயமில்லாமல் அதிகாரிகளிடம் ஓடிவந்ததும், சிங்கள இராணுவத்தைத் திக்கு முக்காடப் பண்ணியிருக்கலாம்.அவன் தன்னைக் காப்பாற்றியதற்குக் குமார் நன்றி கூடச் சொல்லமுடியவில்லை.
மழை ஓ வென்று பெரிய சத்தத்துடனும், பெருங்காற்றுடனும், இறந்து கிடந்த தமிழர் உடல்களைக் கழுவிக்கொண்டிருந்தது.
அவர்களின் உடல்கள் ஒரு இடத்தில் குவியலாக்கப் பட்டன.
சந்தையின் குப்பைத் திடலில் கொலை செய்யப் பட்ட தமிழர்களின் உடல்கள் அங்கு குவிக்கப் பட்டுக் கிடந்த பழைய டையர்களின் மேல் தூக்கியெறியப் பட்டன.
சிங்கள இராணுவத்திற்குக் கைக்கூலிகளாக வேலை செய்யும் தமிழ்த்’ தலையாட்டிகளின் சைகைகாற் பயங்கரவாதிகளாக அடையாளம் காணப் பட்ட,குமார் உட்பட பல தமிழ் இளைஞர்கள், தேங்காய்களை அடைப்பதுபோல் ஒரு லாறியில் மிக மிக நெருக்கமாகத் திணிக்கப் பட்டனர்.
அடைபட்டவர்களில் அரைகுறை சுயஉணர்வுள்ளவர்கள்,குருதி வழிபவர்கள், விம்மியழுபவர்கள்,வெறித்துப் பார்த்துத் திகிலுடன் இருப்போர், இராணுவத்தினரின் தாக்குதல்களால் எப்போது தங்கள் உயிர் பிரியும் என்று இறுதி மூச்சுவிடுவோர் என்ற பல ரகவிதமான தமிழர்களால் நிரம்பியது.
டையர்களில் எறியப்பட்ட பிணங்கள் எரிக்கப் படடு,அந்தக் கரும்புகை வானை மறைத்து,எரியும் உடல்களின் பிணவாடையைச் சுற்றும் பல இடங்களுக்குப் பரப்பிக் கொண்டிருந்தது.
பயங்கரவாதிகளை ஏற்றிய லொறிகள் நகரத் தொடங்கின. அவர்களுக்கு முன்னும் பின்னும் பல இராணுவ வாகனங்கள் காவலாக வந்த கொண்டிருந்தன.
அதற்குள் இருந்தவர்களின் கடைசிக் கதறல்கள், மரணஓலங்கள்,அத்துடன் வெளியிலிருந்து வரும் பிணவாடை என்பன குமாரின் இதயத்தைப் பிழந்தது.
காரைதீவு என்ற இன்னுமொரு தமிழ்க் கிராமத்திலிருந்து கைதான இன்னும் பல தமிழ்க் கைதிகள், காரைதீவுச் சந்தியில் வைத்து அந்த லொறிக்குள் திணிக்கப் பட்டார்கள்.லொறிகள் அம்பாரை என்ற நகரை நோக்கி ஓடிக்கொண்டிருந்தன.
ஓடிக்கொண்டிருந்த லொறிக்குள்,அரைகுறை உயிருடன் போராடிய ஒன்றிரண்டு கைதிகள் இறந்து விட்டார்கள்.
சம்மாந்துறை என்ற ஊரில் இன்னும் பல கைதிகள்,ஒரு வயதுபோனவருடன் சில வாலிபர்கள் கடுமையான காயங்களுடன் லொறிக்குள் திணிக்கப் பட்டனர்.பெரியவருக்கு ஐம்பது வயதிருக்கலாம் வழுக்கை விழுந்த தலை, மூக்குக் கண்ணாடியுடனான முகபாவம், படித்தவர்போலிருந்தது. அவர் கையில் பாடசாலை மாணவர் வரவுப் புத்தகமும்,பாடசாலை மணியும் இருந்தன.’ நான் ஒரு பள்ளிக்கூடத்துத் தலைமை வாத்தியார். நான் என்ன சொல்லியும் கேட்காமல் என்னைப் பயங்கரவாதி என்டு பிடிச்சுப் போட்டான்கள்’. தலைமை ஆசிரியர், அவர் தலையிலிருந்து வழியும் குருதியைத் துடைத்தபடி சொன்னார்.
அவருடன் பிடித்துவரப் பட்ட அவருடைய மாணவர்கள், அங்கு இறந்து கிடக்கும் பிணங்களைப் பார்த்து அலறத் தொடங்கி விட்டனர்.
‘டேய் பையங்களா, பொத்துங்கடா உங்கட வாயை’ தலைமை ஆசிரியர் அலறும் மாணவர்களை அதட்டினார்.
அப்போது, அவர்களின் லொறி சட்டென்று நின்றது. பின்னால் வந்து கொண்டிருந்த இராணுவ வாகனங்களும் நின்றன. சட சடவெனப் பல இராணுவத்தினர் அந்த வாகனத்திலிருந்து இறங்கினர்.
‘என்னடா தமிழ் நாய்களே சத்தம் போட்டுக் கலகம் செய்கிறீர்களா?’ அதிகாரி மாதிரித் தோற்றமளித்தவன் தன் துப்பாக்கி முனையால் உள்ளுக்கிருந்த கைதிகளைக் கண்டபாட்டுக்குத் தாக்கினான்.
தலைமை ஆசிரியர், இறந்து கிடந்த பிணங்களைக் காட்டி, ‘இந்தப் பிணங்களைக் கண்ட சின்னப்பொடியன்கள் பயந்தலறி விட்டார்கள்’ என்று மாணவர்களுக்காக மன்னிப்புக் கேட்டார்.
இராணுவத்தினர்,அந்தப் பிணங்களைத் தூக்கி ரோட்டுக் கரையைத் தாண்டி வீசி எறிந்தனர். குருதியில் நனைந்து, விழிகள் பிதுங்கி, உடல்கள் வீங்கிப் பயங்கரமாகத் தோற்றமளித்த அந்தப் பிணங்கள் இன்னும் சில மணித்தியாலங்களில் அந்தக் காட்டுப் பகுதிகளில் வசிக்கும் நரிகளுக்கு நல்ல தீனியாகவிருக்கலாம்.
இன்று காலையில் திருவெம்பாவை ஒலியில் நித்திரையிலிருந்து எழும்பிய தமிழ் உயிர்கள் கதிரவன் மறையும் நேரத்தில் காட்டுமிருகங்களின் தீனியாகிறதா?
சந்தையில் வைத்து ,இராணுவத்தினரால் பயங்கரமாகத்தாக்கப்பட்ட பத்திரிகை நிருபர் டேவிட்டின் நிலமை பரிதாபமாகவிருந்தது.லொறியைத் திறந்தபோது அடித்த பெரும் மழைச்சாரலில் அவன் நினந்துகொண்டிருந்தான்.இராணுவத்தால் சிதிலமாக்கப்பட்ட அவனது இருகைகளும் படுபயங்கரமாக வீங்கியிருந்தன.
குமார் தனது கண்களை மூடிக்கொணடான். குமாரின் நெற்றியிற் பட்டகாயத்தால் கண் இமைகள் வீங்கியிருந்தன,தலை விண விண் என்று வலித்தது.
அவனின் வயிற்றில் விழுந்த உதைகளின் வாதை இப்போது தெரியத் தொடங்கியது. வாகனத்திற்குள், இரத்தவாடை, வியர்வை நாற்றம், அடிபட்டு உணர்வில்லாவர்களால் உண்டாகும் மல சல நாற்றங்கள் சகலமும் சேர்ந்து வயிற்றைக் குமட்டி வாந்தி வரப் பண்ணியது.
இப்போது என்ன நேரமாகவிருக்கும்?
மழையிருட்டில் ஓடிக்கொண்டிருக்கும் அந்த வாகனம் காட்டுப்பகுதியை ஊரறுத்து ஓடிக்கொண்டிருந்தபோது அந்தச் சூழ்நிலை பயங்கரமாகவிருந்தது. அம்பாரை நகரிலுள்ள இராணுவ முகாமையடைந்தபோது நன்றாக இருட்டிவிட்டது.
கைதிகளாகக்; கொண்டுவரப் பட்டவர்கள் வாகனத்திலிருந்து இறக்கப் பட்டார்கள்.இறங்கிக் கொண்டிருப்பவர்களை,இராணுவத்தினர் தங்கள் கைகளாலும், ஆயுதங்களாலும் தாக்கினர்
அந்தத் தாக்குதல்கள்,தமிழ்க்கைதிகள், தங்களிடமிருந்து தப்பியோடாமலிருப்பதற்கான தாக்குதல்கள் என்பது வெளிப் படையாகத் தெரிந்தது.
மிக மிக உயர்ந்த தோற்றமும், முறுக்கிய மீசையும்,மிடுக்கான நடையுமுடைய ஒரு இராணுவ அதிகாரி தமிழ் கைதிகளிடம் வந்தான்.
‘ எனக்கு,உங்களுடன் நேரத்தைச் செலவழிக்க விருப்பமில்லை. உங்களில் யார் யார் எந்த இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் என்று சொன்னால் நல்லது. அல்லது வீணாகக் கஷ்டப்படவேண்டும்’ தனது மீசை முறுக்கிக்கொண்டு முரட்டுக் குரலில் அந்த அதிகாரி அதிர்ந்தான்.
‘ஐயா,நான் ஒரு தமிழ்வாத்தியார்.அதுக்குச் சாடசியாக நான் பாடசாலை மாணவர்கள் வரவுப் புத்தகத்தையும் பாடசாலை மணியையும்; கொண்டு வந்திருக்கிறேன்.’ பிடித்துக்கொண்டு வந்திருந்த முதிய ஆசிரியர் அழாக்குறையாகச் சொன்னார்.
;’டேய் தெமில கிழவா உன்ர வாயைப் பொத்தடா’ அதிகாரியின் முஷ்டி தமிழ் ஆசிரியரின் முன்பற்களைப் பதம் பார்த்தது.
தாக்குப் பட்ட தமிழ் இளைஞர்கள் வலிமையற்றுத் தள்ளாடி விழுந்தனர். அவர்களைச் சிங்கள இராணுவம் உதைத்துத் துவம்சம் செய்தது.
குமாரின் தலையில் ஒரு குண்டாந்தடி அடிவிழுந்தது. அதன்பின் அவனுக்கு என்ன நடந்தது என்ற தெரியாது.
அவன் எத்தனை மணிக்குக் கண்விழித்தான் என்று தெரியாது. நூற்றுக்கணக்கான தமிழ் இளைஞர்கள், ஒரு பெரிய முகாமில் அடைக்கப் பட்டிருந்தனர்.இது நடுநிசியா அல்லது விடியும் நேரமா? நேரத்தைப் பற்றிப் புரிந்துகொள்ள முடியாது. மின்லைட்டுகள் மழையில் நனைந்து கொண்டிருந்தன.
இராணுவ அதிகாரிகள் பலர், ஒரு மேடையில் உட்கார்ந்திருந்து தமிழ்க் கைதிகளை விசாரித்துக் கொண்டிருந்தது தெரிந்தது.
ராஜ்குமாருக்க முன்னால் டேவிட் தள்ளாடியபடி நின்றிருந்தான்.அவன் உருவம் மாறி மிகவும் வீங்கிப்போய்த் தெரிந்தான். அவனது கைகள் நீலமாக இருப்பதுபோலிருந்தது.ஆனால் மங்கிய வெளிச்சத்தில் ஒன்றும் சரியாகத் தெரியவில்லை.அவன் கண்கள் பைத்தியக்காரனின் பார்வைபோல் பரபரத்துக்கொண்டிருந்தன.
ராஜ்குமாருக்குப் பின்னால் நின்றிருந்தவன் பயத்தில் மலசலம் போய்விட்டான் போலும். நாற்றம் சகிக்க முடியாதிருந்தது.குமார் திரும்பிப் பார்த்தபோது, ஒரு மூலையில் தமிழ்ப் பெண்கைதிகள் நின்றிருந்தார்கள். அவர்களின் உடைகளும் உடம்பின் நிலையும் பார்க்க மிக மிக மோசமாக இருந்தது.
அவர்களிற் பெரும்பாலோர் கல்லூரி மாணவிகளாக இருக்கவேண்டும். யூனிபோர்முடன் காணப்பட்டார்கள்.; பாலியல் வன்முறைகளுக்கு உட்படுத்தப் பட்ட தடயங்கள் அப்பட்டமாகத் தெரிந்தன.அரைகுறை ஆடைகளும்,…..குமார் மேற்கொண்டு பார்க்கமுடியாமல் தலையைத் திருப்பிக் கொண்டான்.
கண்களை இறுக்கி மூடிக்கொண்டான். பகீரதிக்கு என்ன நடந்திருக்கும்?
‘எனது ஊரில் உள்ள பெண்களையும் பிடித்திருப்பார்களா, எனது ரதி, எனது மருமகள்கள்;;..
அவர்களும் இந்தமாதிரியொரு அநியாய நிலைக்கு ஆளாக்கப் பட்டிருப்பார்களா,?’
‘பகீரதி, பகீரதி’ அவன் மனம் அழுதது. கண்கள் கலங்கின. நினைவு தளர்ந்தது.
குமாருக்கு முன்னால் நினறிருந்து டேவிட்டின் பயங்கரச் சிரிப்பு குமாரைச் சுய உணர்வுக்குத் திருப்பின.
டேவிட்டுக்கு பித்தம் பிடித்துவிட்டதா?
டேவிட், உருமாறிய தனது இருகைகளையும் பார்த்துப் பயங்கரமாகச் சத்தம்போட்டுச் சிரித்தான். ஓரு அதிகாரி எழுந்து வந்து டேவிட்டின் கன்னங்களில் பளார் பளார் என்று அறைந்தான். டேவிட் பதிலுக்கு அந்த அதிகாரியைத் தனது கால்களால் உதைத்தான்.
நாலா பக்கங்களிலும் சலசலப்பு.டேவிட்டின் மிருக பலத்தை எதிர்பாராத இராணுவ அதிகாரித் தடுமாறி விழுந்தான். அடுத்த கணம், ஒரு குண்டு டேவிட்டின், மார்பைத் துளைத்து வெளியே வந்து குமாரின் தோளை உரசிக்கொண்டு பறந்தது.
இரண்டு மூன்று சிங்கள அதிகாரிகள் டேவிட்டை மிருகங்கள் மாதிரிப் பாய்ந்து தாக்கினர். டேவிட்டின் உடல் பந்துபோல் உதைபட்டது. ஓரு சில நிமிடங்களின் அவனின் உடம்பு அசைவற்றுக் கிடந்தது.
டேவிட் போனவருடம் குமாரின் ஊர்த்திருவிழாவுக்கு வந்து பத்திரிகைக்கு அனுப்பப் புகைப் படங்கள் எடுத்துக்கொண்டிருந்தான். திருவிழாவைத் தன் கமராமூலம் விபரிக்க வந்தவன்,அங்கு தேவதைகள் மாதிரி ஊர்வலம் வந்த அழகிய சில பெண்களையும் தன் கமராவுக்குள்ச் சிறை பிடிக்கத் தயங்கவில்லை.
பகீரதியின் மான்விழிகள் அவனின் கமராவுக்கள்ச் சிறைப்பட்டு, அடுத்த சில தினங்களில், இலங்கைத் தேசியப் பத்திரிகை ஒன்றில்,@ திருவிழாவிற் பவனி வந்த திருக்கோலம்’ என்ற தலைப்பில் வெளிவந்திருந்தது. அந்தப் பத்திரிகைப் பிரதியொன்றை டேவிட் குமாருக்குக் கொடுத்தான்.
அந்தப் படத்தை வெட்டி, அதைத் தன்னோடு எப்போதும் குமார் வைத்திருந்தான்.
திருவிழாக்களையும் அங்கு பவனி வரும் திருக்கோலங்களையும் தனது கமரா மூலம் நித்தியகலைகளாக்கிய டேவிட் இப்போது அநித்தியமாகத் தரையில் பிணமாய்க் கிடந்தான்.
‘டேய் உன்னைத்தான்..’ராஜ்குமார் என்ற தமிழ் வாலிபன், பகீரதி என்ற அழகியின் அருமைக் காதலன், தனது நாடகங்கள் மூலம் ஊராரை மகிழ்விக்கும் கலைஞன்,அம்மாவின் அருமைச் சின்னமகன், அக்காமாரின்; அன்புத் தம்பி,ஆச்சியின் ஆசைப் பேரன்,இப்போது அப்படியான எந்த அடையாளமுமின்றி, வெறும், ‘டேய்’ என்ற பதத்தில் அழைக்கப்பட்டான்.
‘இவன் உனது சினேகிதனா?’ இராணுவ அதிகாரி ஒருவன்,பிணமாகக் கிடக்கும் டேவிட்டைக் காலாற் தட்டியபடி குமாரைக் கேட்டான்.
அவன் மறுமொழி சொல்லமுதல் அவன் முகத்தில் ஒரு பலத்த அடிவிழுந்தது.
அதர்மம் அரியாசனத்திலிருக்கும்போது,தர்மம் தலைகுனியத்தானே வேண்டும்?
‘எந்த இயக்கத்தில் இருந்தாய்?’
‘…………………………’
‘எந்த விதமான இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தாய்?’
‘……………………………..’
‘எவ்வளவு காலமாக எங்களுக்கு எதிராக வேலைசெய்கிறாய்?’
‘………………………….’
ஒரு மனிதன் இன்னொரு மனிதனை உயிரோடு இப்படி வதைப்பதைக் குமார் இதுவரையம் எந்தக் கதையிலும் படிக்கவில்லை. கற்பனையும் செய்யவில்லை.
இந்தக் கொடுமைகளை விட, சந்தையில் அவர்கள் அவன் நெஞ்சுக்கு முன் துப்பாக்கியை நீட்டியபோது இறந்திருந்தால் நல்லதாயிருந்திருக்கும். ஏன் சுமணதாச வந்து காப்பாற்றினான்?
அந்த இரவு, அடுத்தநாள்..அதற்கடுத்த நாள்.. எத்தனை நாட்கள் அவர்களின் சித்திரவதை தொடர்ந்தது? நரகலோகத்து அசுரர்கள் சிங்கள இராணுவம் என்றபெயரில் இந்த உலகில் நடமாடுகிறார்களா?
‘நான் ஒரு பயங்கரவாதியில்லை, ஆசிரியர்பயிற்சிக்குப்போகக் காத்துக்கொண்டிருந்தவன், ஊரில். நாடகங்கள் எழுதி மேடையேற்றி மக்களை மகிழ்விப்பவன்’ என்றெல்லாம் அவன் அலறிக் கொண்டு சொன்னவை எதுவும் அவர்கள் செவிகளில் ஏறவில்லை.
அவன் தலைகீழாகத் தொங்கவிடப் பட்டான். அவனின் குதிகால்களில் அவனிடமிருந்து,’உண்மைகளை எடுக்குப்’ பயங்கரமாகத் தாக்கினார்கள்.
அவன் உடம்பின் பல பாகங்களில் சிகரெட் நெருப்பால் கோலம் போட்டார்கள்.
அவன் அலறினான் அம்மாவுக்கு மருந்து வாங்கவேண்டும், ஆச்சி சந்தைக்குப் போகாதே என்று சொன்னதைக் கேட்டிருக்கவேண்டும்.அக்காமார் அவனின் பாதுகாப்பில் கண்ணும் கருத்துமாயிருப்பார்களே, அவனுக்கு இப்போது என்னு நடக்கிறது என்று தெரிந்தால் அவர்கள் துடித்துப் போவார்களே!
அவன் உணர்விழந்தான். யாரோ அவன் முகத்தில் நீரை வாரியடிக்கிறார்கள்.
‘டேய். எத்தனை சிங்கள இராணுவத்தைக் கொலை செய்தாய்?’
ஒருத்தன் குமாரின் வயிற்றில் ஏறிக் குதித்தான் வயிற்று உறுப்புக்கள் தாக்குப்பட்டுக் கிழிந்திருக்கவேண்டும்.குமாரின் மூக்காலும் வாயாலும் குருதி வழிந்தது.
‘டேய்”ஆண்பிள்ளையாக இருந்தாற்தானே இனி எங்களோட சண்டைபிடிப்பாய்?’ ஒருத்தன் குருரமாகச் சிரித்தான்.
இலங்கையில் என்ற மண்ணிற் பிறந்து. ஓரே காற்றைச் சுவாசித்து, ஒரே நீரைக்குடித்த, ஒரே நிலத்தில் விளைந்த அரிசியை உண்ணும் சிங்களவனும் தமிழனும் ஒருத்தொருக்கொருத்தர் எதிரிகளாம்! ஓருத்தனின் ஆண்மை இன்னொருத்தனுக்கு அபாயமாம்!;
மனிதர்களால் இப்படி மிருகத்தனமாக நடந்து கொள்ளமுடியுமா?
நிர்வாணமாக்கப்பட்ட தமிழர்கள் ஈவிரக்கமின்றி சித்திரவதை செய்யப் பட்டார்கள்.
இன்னுமொரு முகாமுக்குக் கொண்டுவரப் பட்டார்கள். எத்தனைநாட்கள் நரலோகத்தில் தள்ளப் பட்டிருந்தார்கள்;? குமாருக்கு ஒன்றும் புரியவில்லை.
அவனுக்குத் தன்னைத் தானே அடையாளம் தெரியவில்லை.உடம்பின் அங்கங்கள் சிதைக்கப் பட்டிருந்தன. உள்ளம் மரத்துப்போயிருந்தது.
இவனுடன் ஊரிலிருந்து மிருகங்கள்மாதிரி அடைக்கப்பட்டு வந்தவர்களுக்கு என்ன நடந்திருக்கும்?’
‘தான் ஒரு பயங்கரவாதியல்ல, பள்ளிக்கூடத் தலைமைவாத்தியார்’ என்று கெஞ்சிக் கொண்டுவந்த அந்த வயதுபோன ஆசிரியருக்கு என்ன நடந்திருக்கும்?’
‘ கிழிந்த ஆடைகளுடனும், தொலைந்த கௌரவத்துடனும்,கலங்கிய கண்களுடனும் குவிந்திருந்த அந்த இளம் பெண்களுக்கு என்ன நடந்திருக்கும்?’
‘இரவின் அமைதியைக் கிழித்துக்கொண்டு கேட்கும் பெண்மையின் கதறல்கள் காதைப் பிழக்கின்றனவே,அதெல்லாம் அந்தப் பச்சிளம் குமரிகளின் அவலக் குரல்களா?’
உடைந்த கைகளும், வீங்கிய ஆணுறுப்பும்,குருதிவழியும் உடலும் அவனுக்குச் சொந்தமானதா?
இலங்கையில் தமிழினம் பழிவாங்கப் படுகிறதே, யார் கேட்பார் இத்துயரை? நிiனுவு தொடரமுடியாத பெலவீனமான நிலையில் அவன் சோர்ந்து போகிறான்.
இவையெல்லாம் நிஜமாக நடக்கவில்லை,ஒரு பயங்கராக் கனவு என்று மனதைத் தேற்றிக்கொள்ளலாமா?
அம்மா இப்போது என்ன செய்வாள்? அவளுக்கு மருந்து வாங்கப் போன தனயன் ஒர அரைகுறை மனிதனாகியதைத் தெரிந்துகொண்டிருப்பாளா?
சந்தையின் குப்பைத் திடலில் பிணமாகக் கொழுத்தப்பட்ட தமிழ் இளைஞர்களுடன் தன் மகனும் எரிந்து சாம்பலாகிப் போய்விட்டான் என்று துடித்திருப்பாளா?
‘நான் இப்போது எங்கிருக்கிறேன்?’அவனாற் கண்களைத் திறக்க முடியவில்லை.
எனது உடம்பில் சித்திரவதை படாத எந்தப் பகுதியும் கிடையாதா?
‘ரதி..ரதி…உன்னை இரவில் வந்து சந்திப்பதாகச் சொன்னேனே, உன்னை இனிக் காண்பேனா?’
அவனை ஏதோ ஒரு வண்டியில் வைத்து இழுத்துக்கொண்டுபோகிறார்கள்.இது என்ன ஹொஸ்பிட்டல் ஸ்டெச்சரா?
ஏன் வைத்தியசாலைக்குக் கொண்டுபோகிறார்கள்? சித்திரவதை செய்தவன் இன்னும் உயிரோடிருந்து அவர்களின் பயங்கர விளையாட்டுகளின் பொம்மையாக இருக்கவேண்டும் என்று நினைக்கிறார்களா?
‘இந்த நாயிடம் தெரிந்து கொள்ளவேண்டியது இன்னும் இருக்கிறது’ இராணுவக்காரனின் அகங்காரக் குரல் கனவிற் கேட்பதுபோற் கேட்கிறது.
இவனை உயிருடன் வைத்திருந்து ‘தமிழ்ப் புலிகளைப் பற்றிய விடயங்களை எடுக்கப்போகிறார்களாம்!
இவன் உயிரைப் பிடித்து வைத்திருக்க அவர்கள் மிகவும் கஷ்டப் படுகிறார்கள்!
குளிர் காற்று உடம்பிற் பட்டது.வீங்கிய கண்களின் மங்கிய பார்வையால், தனது சுற்றாடலைப் பார்த்தான்.
நீலவானம் நிர்மலமாகவிருந்தது.பஞ்சுத் துண்டுகளைப் பிய்த்து எறிந்ததுபோல்,மேகத் துன்டுகள் பரந்து பறந்து கொண்டிருந்தன. பக்கத்திலெல்லாம் ஆயுதம் தாங்கிய இராணுவத்தினர் சூழ்ந்து நின்றனர்.
அந்த இராணுவ முகாம் ஒரு பெரிய காட்டின் மத்தியிலிருந்தது. துரத்தில் மலை முகடுகளில் மேகக் கன்னிகள் கோலம் போட்டுக்கொண்டிருந்தனர்.
அவனைக் கொண்டுபோன ஸ்ட்ரெச்சர் ஆம்புலன்ஸ் ஒன்றில் ஏற்றப்பட்டது.
‘ரதியின் குரலை ஒருதரம் கேட்கவேண்டும் நான் இறந்துகொண்டிருக்கறேன் என்பதை எப்படி அவளிடம் சொல்வேன்?’
நினைவு தப்பியது.
ஓவ்வொருதரம் நினைவு தவறும்போதும், அவனுக்கு, தான் ஏதோ ஒரு இருட்குகையில் அகப்பட்டுத் தவிப்பதுபோலவும், யாரோ தன் பெயரைச் சொல்லி அழைப்பதுபோற்கேட்கிறது. யார் என்னை அழைக்கிறார்கள்? ரதியா அல்லது அம்மாவா,
‘என்னைச் சுற்றியிருப்பவர்கள் யார்? எமதூதர்களா?’அவர்கள் தங்கள் கைகளிற் என்னையிழுத்துச் செல்ல பாசக்கயிற்றை வைத்திருக்கிறார்களா?
அவனுக்குப் பார்வை சரியாகத் தெரியவில்லை.மங்கலான வெளிச்சத்தில் அவர்கள் கைகளில் துப்பாக்கிகள் மின்னுகின்றன.
ஏதோ மலைச்சரிவில் அந்த வண்டி போய்க்கொண்டிருக்கிறது. எங்கேயோ ஒரு அருவிகொட்டுவது கேட்கிறது. ஊரிலுள்ள தில்லையாறு பெருக்கெடுக்கும்போது நீச்சலடித்து விளையாடுவது ஞாபகம் வருகிறது.
சின்னமுகத்துவாரம் வெள்ளப் பெருக்கில் உடைந்து, கடலும் தில்லையாறும் ஒன்றோடு ஒன்று கலப்பதைக் கொண்டாட, கடலலைகள் தென்னை மர உயரத்துக்கு உயர்ந்து ஆரவாரிக்கும் காட்சி கனவாக வந்து போகிறது.
இவனின் கண்களின் பார்வை பழையபடி திரும்புமா? கால்கள் நடக்குமா?கைகளால் இனி ரதிக்குக் காதல் கடிதம் எழுத முடியுமா?
வண்டி சட்டென்று நிற்கிறது.’பறத் தெமிளா’ஸ்ட்ரெச்சரைத் தள்ளுபவனும் குமாரைக் கேவலமாகப் பேசுகிறான்.இவன் உடலை ஏதோ ஒரு அழுகிய கிழங்கைத் தூக்கியெறிவதுபோல் கட்டிலிற் தூக்கியெறிகிறார்கள்.
தலைபாரத்துடன் வலித்தது. இவன் போட்டிருந்த சோர்ட்டைக் கழட்டி இவனின் மார்பில் எதையோ குளிர்ந்த பொருளை வைக்கிறார்கள். வைத்தியரின் ஸ்டெஸ்கோப்பா அது?
டொக்டர் ஏதோ சொல்லிக் கொண்டிருக்கிறார். குமார் மட்டக்களப்புக் கல்லுர்ரி ஒன்றிற் படித்தவன். அவனுக்கு ஆங்கிலம் சுமாராகத் தெரியும்.
வயிற்றில் உள்ளுறுப்புக்கள் பாதிக்கப் பட்டிருக்கிறது’ டாக்டர் மெல்லமாச் சொல்வது அவனுக்குக் கேட்கிறது. ‘நிறைய இரத்தம் போயிருக்கிறது’ குமாரின் நாடியைப் பிடித்தபடி அவர் சொல்கிறார்.
மிகுதிச் சம்பாஷணை சிங்கள மொழியிற் தொடர்கிறது.இவனைப் பிழைக்க வைப்பது அவசியம்தானா என்பதுபற்றி விவாதம் நடந்து கொண்டிருந்தது.
குமார் ஒரு தமிழ்ப் பயங்கரவாதியென்றும், இவனைப் பிழைக்க வைத்து நிறைய விடயங்களைத் தெரிந்துகொள்ளவேண்டும் என்றும் ஒரு இராணுவ அதிகாரி உக்கிரமாகப்பேசிக்கொண்டிருந்தான்.
அவர்களின் ஊரையாடல்களை முழுக்கப் புரிந்துகொள்ளாவிட்டாலும்,அவனுக்குத் தெரிந்த அரைகுறைச் சிங்களமொழியைப் பாவிதது,’ நான் ஒரு பயங்கரவாதியில்லை..சாதாரணதமிழன். ஓரு ஆசிரியனாகத் தெரிவு செய்யப் பட்டவன்’ அவன் சொல்ல நினைக்கிறான். அவனால் வாய்திறக்கமுடியவில்லை. சத்தம் வரவில்லை.நெஞ்சு வலித்தது.
அடுத்தகணம் நினைவு தப்பியது.
குமாரும் அருள்நாதனும் இன்னும் சில நண்பர்களும் நீச்சலடித்து விளையாடிய குளமல்லவா இது?அவர்களின் ஊரில் எல்லையில், சுடுகாட்டுப்பக்கத்தில் அந்தத் தாமரைக்குளமிருக்கிறது.
சிவப்பும் வெள்ளையுமாக நூறறுறக்கணக்கான தாமரைப்பூக்கள் நீரைக் கிழித்துக்கொண்டு நிமிர்ந்து நிற்கும் அழகு அற்புதமானது.குழந்தைகள் தாமரைக்குளத்தருகே போகக்கூடாது என்று பெரியவர்கள் உத்தரவு போட்டு வைத்திருக்கிறார்கள். காரணம் அந்தக் குளத்தில் ஏராளமான நீர்ப்பாம்புகள் உள்ளன.அத்துடன் தாமரைக்குளத்தைக் காட்டெருமைகள் தங்கள் படுக்கை இடமாகப் பாவித்துக்கொள்வதும் சிலகாரணங்கள்.
;குழந்தைகள் தாமரைக்குளத்தை நெருங்கக்கூடாது என்பதற்கு இன்னொரு முக்கிய காரணம்,தாமரைக்குளத்தருகே இருக்கும்; அந்த ஊரின் சவக்காலையருகே புத்திதெரியாத இளம் குழந்தைகள் விளையாடும்போது அவர்களைப் பேய் பிசாசு பிடித்துவிடும் என்ற நம்பிக்கை மிக மிக முக்கியமானது.
குமார், அருள்குமார் போன்ற பிடிவாதம் பிடித்த இளம் தலைமுறைக்குப் பெரியவர்களின் உத்தரவுகள் செல்லுபடியாகவில்லை. அவர்களுக்குப் பேய் பிசாசுகளில் நம்பிக்கையில்லை. நேரம் கிடைத்தபோதெல்லாம் தாமரைக்குளத்தில் நீச்சலடித்து விளையாடினார்கள்.
வாய்களை அசைத்தபடி சோம்பேறித்தனமாகப் படுத்திருக்கும் காட்டெருமைகள் இந்த வாலிபர்களை முறைத்துப் பார்க்கும்.
தண்ணீர் படாத தாமரை இலைகளில் பாம்புகள் தாவித் தாவிப் போவது பார்க்கப் பயமாக இருந்தாலும் அது கண்கொள்ளாக் காட்சியாகவிருக்கும்.
சுயநினைவு தவறிய குமார்,தாமரைக்குளத்தில் நீச்சல் போடுகிறான்.பதினைந்து வயது வாலிபனாகத் தனது சினேகிதர்களுடன் உலகை மறந்த குளத்தில் விளையாடுகிறான்.காட்டெருமைகள் முறைத்துப் பார்க்கினறன ஆனால் இவன் ஒரு தமிழன் என்பதற்காக அந்த எருமைகள் இவனைக் கொலை செய்ய எத்தனிக்கவில்லை.
தாமரைத் தண்டுகளைச் சுற்றிக்கிடக்கும் பாம்புகளின் அருகே அவன் மூழ்கி எழுகிறான் அந்தப் பாம்கள் இவன் ஒரு தமிழன் என்பதால் இவனைக் கடித்துக் குதறவில்லை.
ராஜ்குமார் மூச்சுத் திணறுகிறான்.பிராணவாயு எங்கேயிருக்கிறது? அவன் கண்களைத் திறக்கப் பார்த்தான்,ஆனால் அவனால் முடியவில்லை.அவன் முனகினான் உடம்பின் வலியால் முனகினானா அல்லது அவன் உயிர் போகப்போகிறது என்ற கடைசி மூச்சுவிடுகிறானா என்பது அவனுக்குத் தெரியாது.
மிக மிகக் கண்டப்பட்டுச சாடையாகக் கண்களைச் சாடையாகத் திறந்தபோது அவனருகில் டாக்டர் நிற்பது தெரிந்தது. கையில் ஏதோ ஊர்வதுபோலிருந்தது.
தாமரைக்குளத்தில் இன்னும் இருக்கிறேனா? எனது கையில் பாம்பு ஊர்கிறதா?’
அவனை முறைத்தப் பார்ப்பது அவன் நனவில் வந்த முரட்டுக் காட்டு எருமையல்ல. அவன் ஒரு இராணுவ அதிகாரி. அவன் கையில் ஏற்றப்படுவத சேலைன் ட்ரிப் என்று அவன் புரிந்து கொள்ள அதிக நேரம் எடுத்தது.
இவனுக்குப் பக்கத்தில் இருபொலிஸ்காரர்கள் இருப்பது தெரிந்தது.இவன் ‘ஒரு தமிழ்ப் பயங்கரவாதி’ என்றும்,இவன் எந்த நேரத்திலும் தப்பி ஓடலாம் என்றும் முணுமுணுத்துக் கொண்டார்கள்.
கையில் ஏற்றப்பட்டிருக்கும், மருந்தின் மகிமை உடலுக்குக் கொடுத்த தென்பால் மனதில் சாடையான தெளிவு ஏற்பட்டது.
அவன் படுத்திருக்கும் வார்ட்டின் ஜன்னலுக்கு அப்பால்; பெரிய ஆரவாரம். ஆண்கள் பெண்கள்,குழந்தைகள் என்று பலர் கூடியிரு;தார்கள்.
ஓரு நேர்ஸ் அவர்களைக ;கடுமையான தொனியில் கண்டித்தக்கொண்டிருந்தாள்.
என்ன நடக்கிறது? அவனுக்கு ஒன்றும் புரியவில்லை.
அவன் மிகவும் கஷ்டப்பட்டுத் தன்தலையைத் திருப்பிப் பார்த்தான். ஓரு பெரிய கூட்டம் ஜன்னல் வழியாக இவனைப் பார்த்துக்கொண்டு நின்றார்கள். கூண்டில் பிடித்து வைத்திருக்கும் ஒரு பொல்லாத மிருகத்தைப் பார்க்கும் பார்வைகள் அவை.
இராணுவத்தால் பிடிக்கப் பட்டுக்கொண்டு வந்த,’ தமிழப் புலியைப்’ பார்க்கவந்திருக்கிறார்களாம். நேர்ஸ் வேண்டா வெறுப்பாக இவனுக்குச் சொன்னாள்.
அடுத்து மாதம் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைக்குப்போய் ஒரு அருமையான ஆசிரியனாக வரவேண்டிய குமாரை, இன்ற இராணுவத்தாற் பிடித்துக் கொண்டுவந்து கூண்டில் அடைத்து வைத்திருக்கும் ஒரு மிருகமாகச் சிங்கள மக்கள் வேடிக்கை பார்த்தார்கள்.
ஜன்னலுக்கப்பால் பல இளம் பெண்கள்,அவனுக்கு அவனின் ரதியை ஞாபகப் படுத்தினார்கள்.; கிராமத்தின் அப்பாவித்தனுத்துடன் இவனைப் பார்க்கும் தாய்கள் அவனது தாயை ஞாபகப் படுத்தினார்கள். அவர்களில், மார்பில் மேலாடைபோடாத முதிய சிங்களப் பெண்கள்,மேற்சட்டை போடாத இவனது ஆச்சியை ஞாபகப் படுத்தினார்கள்.
குமாரின் வீங்கிய கண்களால் நீர்வழிந்தது.
‘எங்கள் இராணுவ வீரர்களைக் கொன்ற பறத் தெமிளா’ ஒரு கிழவி ஜன்னலுக்கப்பால் நின்று இவனைக் காறித் துப்பினாள்.
இவர்களின் இராணுவ வீரனைக் குமார் கொலை செய்தானா?
ஊரில், தமிழர் விடுதலைப் போராளிகளில் ஒரு குழு வைத்த கண்ணிவெடி வெடித்து இராணுவீரர்கள் இறந்த அன்ற அவன் கோயிற் திருவிழா விடயமாக ஐயருடன் பேசிக்கொண்டிருந்தான்.
‘உனது கண்கள் கெட:டுப்போகட்டும், கை கால்கள் முடமாகட்டும்,மூளைகெட்டுப்போய் உனது புத்தி தடுமாறட்டும். உங்களின் தமிழ் இனம் அழிந்து போகட்டும்.இது எங்கட பூமி’. ஓரு பெண் ஜன்னலை உலுக்கிக்கொண்டு பயங்கரமாகக் கத்தினாள்.
இவனுக்குக் காவலாக இருந்த போலிசார்,இவனைப் பார்த்துக் கேவலமாகச் சிரித்தனர்.
‘உனது ஆண்மையை வெட்டி நாய்க்கு இரையாகப்போடவேணும்’ இன்னொரு கிழவி இவனைப் பார்த்து அலறினாள்.
‘பறத்தமிழா.பறத்தமிழா’ ஜன்னலுக்கப்பால் நின்றிருந்தவர்கள் கோஷம் போடத் தொடங்கினார்கள்.
அவனால் அதைப் பொறுக்கமுடியவில்லை.அவர்கள் ஜன்னலை உடைத்துக்கொண்டு வந்து அவனைக் குதறியெடுத்தாலும் அவனைப் பாதுகாக்கும் போலிசார் தடுக்கப்போவதில்லை.
அவனுக்கு இப்போது நினைவு தவறவேண்டும். தனக்கு நடக்கவிருக்கம் கொடுமையை அவனால் முகம் கொடுக்கமுடியாது.
அவன் ஆழ்ந்த தூக்கம்தரும் உலகத்துக்குப் போகவேண்டும்.
தாமரைக்குளத்தைக் கனவு காணவேண்டும். அந்தத் தாமரைக்குளத்துத் தண்ணீர்ப் பாம்புகளும் காட்டெருமைகளும் அவனை இப்படி வார்த்தைகளாலும் சொற்களாலும் குதறியெடுக்காது.தாமரைக்குளத்தையண்டியிருக்கும் சவக்காலையில் புதைக்கப் பட்டிருக்கும் பிணங்கள் பேய்களாக எழுந்துவந்து அவனைத் துரத்தினாலும் அவன் பயப்படமாட்டான்.
……………………………………………..
இது என்ன கனவா அல்லது நனவா? பெரிய அக்காவின் கணவர் பெரிய மைத்துனர் வந்திருக்கிறாரே?
குமாருக்கு ஏழுவயதாகஇருக்கும்போது அக்கா இவரைத் திருமணம் செய்துகொண்டாள்.இவனுக்குக்,’கற்றுபுள்’ கட்டி விளையாடக் கற்றுக்கொடுத்தவர், இவனின் நிலை கண்டு கண்ணீர் மல்கப் பக்கத்தில் இருந்தார்.
‘மீன் வியாபாரி,அகமது காக்கா வந்து, உன்னை ஆர்மிக்காரன் பிடித்துக்கொண்டுபோனதைச் சொன்னார்,சுமணதாச தனக்குத் தெரிஞ்ச சிங்கள எம்.பிக்குக் காசு கொடுத்து என்னை இஞ்ச வந்து உன்னைப் பார்க்க உதவி செய்தான். இஞ்ச வந்து உன்னைப் பார்க்க மூன்று கிழமை கஷ்டப்படவேண்டியிருந்தது;’ அத்தான் தான் ஒரு ஆண் என்பதையும் மறந்து இவன் நிலை கண்டு தேம்பித் தேம்பி அழுதார்.
அதர்மம் சிரிக்கும் சிங்கள அரசியலில் இப்படி அப்பாவிகள் அழுதுகொண்டேயிருப்பார்களா?
‘அம்மா எப்படியிருக்கா?’
குமாருக்கு, அம்மாவுக்க மருந்துவாங்கவேண்டிய கடமை குத்திக்கொண்டிருந்தது.
‘அம்மா..அம்மா..’ மைத்துனர் மேற்கொண்டு பேசாமல் ஏதோ முணுமுணுத்துக்கொண்டிருந்தாh.
குமாரின் அடிவயிறு நொந்தது. ஆர்மிக்காரன் உதைத்த வேதனையை விட அம்மாவை நினைத்ததுயர் அவனைத் துடிக்கப் பண்ணியது.
‘அம்மாவைப்பற்றி யோசிக்காமல் உன்னைக் கவனமாகப்பார்’ மைத்துனர் குனிந்த ,ஒரு குழந்தையை முத்தமிடுவதுபொல் குமாரை முத்தமிட்டார்.
தூரத்தில் சுமணதாச நின்றிருந்தான்.அவன்தான் மைத்துனரைக் குமாரிடம் கொண்டுவந்தவன் குமாரிடம் வரவில்லை.வரத் தேவையுமில்லை.அவன் ஜன்னலுக்கப்பால் நின்ற கூக்குரல்போடும் சிங்கள இனவாதிகளைப் பார்த்துக் கொண்டுநின்றான்.
‘யண்ட யண்ட'(போ போ) சிங்கள நேர்ஸ் வந்து குமாரின்.மைத்துனரைத் துரத்தினாள்.
‘நாங்க எல்லோரும் உனக்காகப் பிரார்த்திக்கிறம் அத்தான் அவசரமாகச் சொல்லி விட்டு அந்த இடத்தை விட்டு வெளியேறினார்.
குமார் இராணுவத்திடம் பிடிபட்டதைக் கேள்விப் பட்ட அம்மா மாரடைப்பு வந்து இறந்துபோனதை, மைத்துனர் குமாருக்கச் சொல்லவில்லை.
‘ராஜ்குமார் உனது காதலனா?’என்ற ரதியை இராணுவம் பிடித்தக்கொண்டுபோய் அவளைச் சிதிலப்படுத்தியழித்தததையோ அதனால் அவள் தற்காலை செய்து இறந்ததையோ மைத்துனர் குமாருக்குச் சொல்லவில்லை.சிங்கள இராணுவத்தால்,ஊரில் தொடர்ந்து நடக்கும் கொடுமைகளை அவர் குமாருக்குச் சொல்லவில்லை
சுமணதாச வந்து தனது பழைய காலச் சினேகிதனைப் பார்த்தான்.இருவர்கண்களிலும் நீர் முட்டியது. போலிசார் இருவரையும் கவனமாகப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
போலிசாரைப் பொறுத்தவரையில்,அவனிடமிருந்து பயங்கரவாதிகள் பற்றிய பல தகவல்களைத் திரட்டவேண்டும்அவர்கள் எப்படியும் அவனைக் காப்பாற்றவேண்டும்.;.
அவர்கள் ஓநாய்கள், குமார் போன்ற அப்பாவிஆடு, மனிதம் கற்பனைசெய்யமுடியாத துயரில் நனைவது பற்றி அவர்கள் கவலைப் படுகிறார்களாம்!;
(1985ம் ஆண்டு மார்கழிமாதம் கிழக்கிலங்கை,கோளாவில் என்ற கிராமத்தில் தமிழ் வாலிபர்களுக்கு நடந்த உண்மையான பயங்கர சம்பவங்களின் அடிப்படையில் எழுதிய சிறுகதையிது- இக்கதையில் விபரிக்கப்படும் சிங்கள இராணுவத்தின் கொடுமைகளுக்கு ஆளாகிய தமிழ் இளைஞன், இந்திய அமைதிப்படை இலங்கை வந்தபோது விடுவிக்கப் பட்டு இன்று லண்டனில் வாழ்கிறார்)
– கிழக்கிலங்கை – மார்கழி-1985.